செவ்வாய், 25 மார்ச், 2014

மருத்துவம் பிறப்புரிமை --மரு.பழ.வெள்ளைச்சாமி

மருத்துவம் பிறப்புரிமை
--மரு.பழ.வெள்ளைச்சாமி

இன்று மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது ‘நோயற்ற வாழ்வு’, ஏனெனில் ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர் நோயோடு இருப்பாராயின் அவருடைய அறிவால், பணத்தால் எந்தப் பயனும் அவருக்கு இல்லை.

இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் ஓர் அனுபவப்பூர்வமான பொன்மொழியைக் கூறி இருக்கிறார்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று.
இன்றைக்கு மனிதனுக்கு ஆயிரமாயிரம் தேவைகள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் முக்கியமானது.
*சுவாசிக்கும் காற்று
*அருந்தும் நீர்
*உண்ணும் உணவு
இந்த மூன்றுக்கும் அப்பால் முக்கியமானது ஒன்று இருக்குமானால் அது மனிதனுடைய ஆரோக்கியம்.
பொதுவாக மனிதனுடைய தேவைகளின் அத்தியாவசியத்தன்மைக்கு ஏற்றாற்போல் அவை கிடைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

நமக்கு நாம் சுவாசிக்கும் காற்று மிகமிக முக்கியமான் ஒன்று. அது இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. ஆகவே இது மிகமிக அத்தியாவசியமானது. அதனால் தான் இதை இயற்கை இலவசமாக எந்தவித முயற்சியுமின்றி நமக்குக் கிடைக்கச் செய்கிறது.

அடுத்து முக்கியமானது நீர். இதற்கு நாம் கொஞ்சம் முயற்சிக்கவேண்டும். நாம் நீர் இல்லாமல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதுவும் நமக்கு இயற்கையில் இலவசமாகக் கிடைத்தது. ஆனால் இன்று அதுவும் வியாபாரமாகிவிட்டது.

அடுத்து முக்கியமானது, நாம் உண்ணும் உணவு. நாம் உணவு இல்லாமல் சில மாதங்கள் கூட உயிர் வாழலாம். இதுவும் கூட நமது நாட்டில் இலவசமாக இயற்கையால் வழங்கப்பட்டதுதான். இதற்காக நாம் அதிக முயற்சி செய்ய வேண்டும். இயற்கையோடு வினை புரிய வேண்டும்.

நமது தேவைகளில் நான்காவதாக இருப்பது, சுகாதாரம்- மருத்துவம்.இதுவும் நமது நாட்டில் வெள்ளையர் வருகைக்கு முன் இலவசமாகவும், தொண்டாகவும் செய்யப்பட்டது.இதை யாரும் தொழிலாகச் செய்யவில்லை.

இவ்வாறு மனிதனின் தேவைகளின் அத்தியாவசியத் தன்மைக்கு ஏற்றார் போல் அதைப் பெறுவதற்கான முயற்சியும், செலவும் வேறுபடுகின்றன.அத்தியாவசியத் தன்மை குறையக் குறைய அதற்கான செலவு கூடிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் மருத்துவம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே அது மக்களுக்கு எளிமையாகவும் சரியாகவும் எல்லோருக்கும் பாகுபாடின்றி சமமாகவும் கிடைக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காக தங்களுடைய வருவாயில் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்று மருத்துவம் ஒரு வன்முறைத் தொழிலாக மாறி வருகிறது. வீதிகள் தோறும் அடுக்குமாடி மருத்துவமனைகள். பிணம் தின்னும் கழுகுபோல் காத்துக் கொண்டிருக்கின்றன். மனிதாபிமானமற்ற முறையில் இயங்குகின்றன.
இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்
நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது
இது மிகவும் அத்தியாவசியமான பணி
என்ற வகையில் அனைத்து மக்களுக்கும்
மருத்துவம் பிறப்புரிமையாக மாற்றப்பட
வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி
எளிதில் கிடைக்க வேண்டும். மருத்துவம்
தொழில் என்ற நிலையிருந்து சேவையாக மாறவேண்டும்.

ஒரு மக்களுக்கான அரசு முதற்கட்டமாக மருத்துவம் அனைவருக்குமான பிறப்புரிமை என்று அறிவிக்க வேண்டும்.
மருத்துவத்தையும்,கல்வியையும் அரசே எடுத்து நடத்தவேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமச்சீர் கல்வி மற்றும் சரியான மருத்துவம் கிடைக்கும்.

இன்று மருத்துவம் வன்முறைத் தொழிலாக மாறி ஏழை மக்களைக் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது.
மருத்துவர்களில் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவதர்மமும் இல்லாமல் பணம் பண்ணுவதற்காக கடுமையான மருந்துகளை எழுதுவதும், தேவையற்ற வகையில் துயரர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும்,அதன் மூலம் அவர்கள் வங்கிக்கடன்களை கட்டுவதற்கு முயற்சிப்பதும்,இன்னும் பல வகைகளில் துயரர்களிடமிருந்து ஒரு வழிப்பறி கொள்ளையர் போல் பணத்தைப் பறிப்பதும் இடைவிடாது அன்றாட நடவடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

மருத்துவத்தால் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு ஒரே வழி மருத்துவக் கல்வியையும்,மருத்துவத்தையும் அரசே கைக்கொள்வது. பொதுவாக மருத்துவக் கல்வியை அரசே நடத்த வேண்டும்.

மருத்துவக் கல்வி, ஒப்பீட்டளவில் எளிமையானது.அதை அனைவரும் கற்றுக் கொள்ளலாம். விதிமுறைகளைத் தளர்த்தி இன்னும் அதிகமானோர் மருத்துவக் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இது தனியார் வசம் இருக்கும் போது அந்த நிறுவனங்கள் சீட்டுக்காக பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு தகுதியற்றவரைச் சேர்க்கும் போது இன்னும் பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு படிக்காமலே பட்டம் தரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இவ்வாறு பணத்தைக் கொடுத்தே லைசன்ஸ் வாங்கியவர்கள் மக்கள் உயிரை எப்படி மதிப்பார்கள்.இதனால்தான் சிலர் லைசென்ஸ் வாங்கிய கொலைகாரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

ஆகவே மருத்துவக் கல்வியை அரசு மட்டுமே நடத்தவேண்டும்.அதில் படித்துத் தேறியவர்கள் பயிற்சி முடித்து வரும்போது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அவர்களை பணியமர்வு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு மாதச் சம்பளம் தற்போதையச் சம்பளத்தைவிட இன்னொரு மடங்கு கொடுக்கவேண்டும்.அவர்களுக்கு இலவசமாக மருத்துவமனை வளாகத்திற்குள் வீடு,மற்றும் வாகனவசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கவேண்டும்.

தனியார்கள் மருத்துவமனை நடத்தக்கூடாது.தனியாக மருத்துவர்கள் கிளினிக் வைக்கவும் கூடாது. அவர்கள் 24மணிநேர அரசு மருத்துவர்கள். அவர்கள் அரசின் முழு நேரமருத்துவர்கள்.அவர்கள் வெறுமனே சிகிச்சை அளிப்பவராக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் நலம் காப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மக்களோடு இருப்பவராக இருக்கும்போது அவர்கள் பொதுச் சுகாதாரத்தில் அக்கறையுள்ளவராக இருப்பார்கள்.

மேலும் அரசு அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் மருத்துவமனைகள் தொடங்க வேண்டும். அங்கே மருத்துவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

வட்ட மையம் மற்றும் மாவட்ட மையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.ஒரு மாவட்டத்தில் உள்ள மக்கள் அது மந்திரியாக இருந்தாலும் அவரவர் வாழும் பகுதியிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதை விட பெரிய மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வராதபடி அனைத்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொறியாளர்கள் அடங்கிய ஒரு மருத்துவமனையாக மாவட்ட மையங்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளின் சுகாதாரம் உயர்ந்த தரத்தில் பேணப்படவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண குடிமகனிலிருந்து பெரிய மந்திரிகள் வரை அனைவருக்கும் ஒரே தரமான மருத்துவம் வழங்கப்படவேண்டும்.அனைவருக்கும் ஒரே இடத்தில் மருத்துவம் என்று வரும்போது பாகுபாடு இருக்காது. மந்திரி முதல் அரசு உயரதிகாரி வரை அனைவரும் ஒரே இடத்தில் மருத்துவம் பார்க்கும் நிலை வரும்போது நிச்சயமாக அந்த மருத்துவமனையை பேணுவதற்கு அனைவரும் முயற்சிப்பார்கள்.
இதற்காக அரசு பணம் செலவளிப்பது நல்ல சமூகத்தை உருவாக்க செலவளிப்பதாகும்.

மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்படும்போது மருத்துவத்தில் அக்கறையுள்ள சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியைப் படிக்க வருவார்கள். தகுதியுள்ளவர்கள் மட்டுமே சேர்க்கப்படும்போது அவர்களின் கல்வித்தரம் உயர்ந்து சிறந்த மருத்துவர்களாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மருத்துவ விழிப்புணர்வு கல்வி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். இவ்வாறு மருத்துவ விழிப்புணர்வுக் கல்வி அளிக்கப்படும்போது மக்களிடம் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும். அப்போது அவர்களே நோயின் தோற்றுவாயிலிலேயே சரி செய்து கொள்வார்கள்.

இவ்வாறு ‘மருத்துவ விழிப்புணர்வு கல்வி’ அளிக்க ஹோமியோபதி மருத்துவமானது அதற்கு முற்றிலும் சாத்தியப்பாடான ஒன்றாக இருக்கிறது.

இது ஒரு எளிய இயற்கை விதிப்படி கட்டமைக்கப்பட்ட மருத்துவமுறை. அன்றாட வாழ்க்கையில் அனைத்து மக்களும் ஹோமியோபதியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஹோமியோபதி மருத்துவர்களாக மாற்ற வேண்டும்.

ஹோமியோபதியன் ‘ஒத்தவை விதி’ தினந்தோறும் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குறிகளின் அடிப்படையில் மருந்து ‘ஒத்ததுக்கு ஒத்த மருந்து’ என்ற அடிப்படையிலேயே நோயைக் குணப்படுத்தி விடலாம்.
எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் அடிப்படை ‘உடற்கூறு இயல்’ மற்றும் ‘உடல் இயங்கியல்’ தெரிந்தால் போதும். அவர்களை ஹோமியோபதி பயிற்சியாளராக ஆக்க முடியும்.அவரவர் குடும்பத்திற்கு அவர்களே மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் ஹோமியோபதி மருந்துகள் நிரூபணம் செய்யப்பட்டவை. பக்க விளைவுகள் இல்லாதவை. வீரியப்படுத்தப்பட்டு, விஷத்தன்மை நீக்கப்பட்டவை. எனவே இவற்றைக் கையாள்வது மிகவும் எளிது. எல்லாவற்றையும் விட விலை குறைவு.

இவ்வாறான கல்வியைப் போதிப்பதற்கு நிச்சயமாக கல்விக்கூடங்கள் தேவையில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிந்துள்ள நிலையில் இது மிகவும் சாத்தியமானது.

1976க்கு முன் இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களில் பெரும்பாலானோர் அவர்களாகவே ஹோமியோபதியை கற்றுக்கொண்டவர்கள்தான். அவர்களால் தான் ஹோமியோபதி வளர்ந்தது.இயல்பிலே ஹோமியோபதி மருத்துவமுறையை கல்லூரிகளுக்குச் செல்லாமல் அவர்களாகவே கற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் அரசு நினைத்தால் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒன்றை ஹோமியோபதிக்கென்று உருவாக்கி அப்ரோச் (AProCH) போன்ற அமைப்புகளிடம் ஒப்படைத்தால், எளிதில் வீட்டுக்கு ஒருவரை ஹோமியோபதி மருத்துவராக ஆக்க முடியும்.

இன்றைக்குள்ள நிலையில் மக்களை நோயிலிருந்து விடுவித்து, நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் அரசே மருத்துவத்தைக் கையில் எடுத்து அதை தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற நிலைக்கு மாற்ற வேண்டும்.

‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செல்வதன் மூலம் நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.மேலும் இதனால் மருத்துவத்திற்கான செலவு குறைந்து படிப்படியாக மருத்துவத்தை மக்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த முடியும்.

இதை எல்லாம் நிறைவேற்ற முதற்கட்டமாக ‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.*

“நோயின்றி வாழ வழி”-மரு.பழ.வெள்ளைச்சாமி

“நோயின்றி வாழ வழி”
--மரு.பழ.வெள்ளைச்சாமி

திருவள்ளுவர் அவர்கள் மருந்து என்ற அதிகாரத்தில் பத்து குறள்களில் ஒரு மருத்துவம் எப்படி இருக்க வேண்டும்.நோய்க்கு என்ன காரணம்? மற்றும் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 

அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களில் 6 குறள்கள் உணவைப் பற்றியும் அந்த உணவு உட்கொள்வதற்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிடுகிறார். 

கடைசி மூன்று குறள்களில் இரண்டு குறள்களில் மருத்துவர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து

ஆனால் முதற்குறளில் நோய்க்காண காரணத்தைக் கூறுகிறார்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவை கூடுவதற்கும் குறைவதற்கும் காரணம் என்ன? இதைப் பற்றி கூறியிருக்கிறாரா வள்ளுவர்? என்ற கேள்வி எழாமல் இருக்கமுடியாது.

ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.உஷ்ணம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள உஷ்ணம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம்.

இந்தக்குறள் புற அவய முழுமைக் குறிகளின் அவசியத்தைக் கூறுகின்றது. ஆனால் இதை மட்டும் பார்த்தால் போதுமா? இவை மட்டுமே மனிதனின் நோயையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றனவா?

இதற்கு அப்பால் மனம் என்று ஒன்று உள்ளதே.மனிதனின் ஆரோக்கியத்தையும் மற்றும் நோயையும் தீர்மானிப்பதில் அது முக்கியப்பங்கு வகிக்கின்றதே!
ஹோமியோபதியில் மனம் பற்றி பேசப்படுகிறதே.திருவள்ளுவர் மனத்தைப் பற்றிக் கூறியிருக்கிறாரா? மனத்திற்கும் நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. திருவள்ளுவர் நோய்க்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பை பல குறள்களில் கூறியுள்ளார்கள்.

அவர் நோய் என்று கூறுவதை துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் நோய் என்று கூறுவதை நோய் என்று பார்த்தாலும் அது பொருத்தமாகத் தான் இருக்கும்.
அவர் மெய் உணர்தல் என்ற அதிகாரத்தில்,

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

பேராசை,கோபம் மற்றும் பிறழ்வு இவைகள் எந்த அளவுக்கு ஒரு மனிதனிடம் இல்லாமல் போகிறதோ அந்த அளவுக்கு துன்பம் இல்லாமல் போகும் என்று கூறுகிறார். இங்கு நோய் என்று கூறுவது துன்பத்தைக் குறிப்பதாக இருந்தாலும் நோய்க்கும் பொருந்தும். ஆகவே மனம் அது செம்மையானால் நோய் நம்மை அணுகாது.

மேலும் திருவள்ளுவர், ‘இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தில் மேலும் சிறப்பாகக் கூறுகிறார். ஒருவருக்கு நோய் வருவதற்குக் காரணம் அவர் பிறர்க்கு துன்பம் செய்வதுதான் என்று கூறுகிறார்.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவார் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

ஒருவருக்கு வருகின்ற துன்பத்துக்குக்காரணம் அவர் பிறருக்கு துன்பம் செய்ததுதான் ஒருவர் தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பாராயின் அவர் பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது. இதில் திருவள்ளுவர் பிறருக்கு துன்பம் செய்தலே துன்பத்துக்குக்காரணம் என்று கூறுகிறார். இது நோய்க்கும் பொருந்துமே!

மேலும் திருவள்ளுவர் பிறருக்கு தீங்கு செய்ய்யாமையை வலியுறுத்துகிறார்.’தீவினை அச்சம்’ என்ற அதிகாரத்தில்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

பிறர்க்கு தீங்கு செய்யாதே, இல்லாவிட்டால் துன்பம் வந்து சேரும். ஆகவே நோய் வந்து தம்மை சேர வேண்டாம் என்று எண்ணுகிறவன் பிறர்க்கு தீங்கு செய்யாது இருப்பானாக! இதில் துன்பம் என்று கூறப்பட்டாலும், இது நோய்க்கும் பொருந்தும். நிச்சயமாக ஒருவன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு நிம்மதியாக வாழமுடியாது. இந்நிலையில் அவன் நோய்வாய்ப்படுவது இயல்பே!

பிறருக்கு துன்பம் செய்யாது இருத்தலே தமக்கு நோய் வராமல் காத்துக் கொள்ள ஒரே வழி.

இங்கே பிறர் என்று கூறுவது தம் விரோதிக்கு கூட துன்பம் செய்யாது இருத்தலே அறிவினுள் எல்லாம் தலையானது ஆகும் என்று கூறுகிறார்.
நாம் நம் விரோதிக்கு துன்பம் செய்வதை நியாயப்படுத்துவோம். இங்குதான் அறிவு வேலை செய்ய வேண்டும். அவர் நம் விரோதியாக இருந்தாலும் அவருக்கு துன்பம் செய்யும்போது அதுவும் நம்மை வந்து சேரும். ஏனெனில் இது அறிவியல். வினைக்கு எதிர்வினை இருந்தே தீரும். இந்த உண்மையை உணர்ந்து விரோதிக்கும் துன்பம் செய்யாது இருப்பது அறிவினுள் தலையான அறிவாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

மேலும் வள்ளுவர் துன்பம் வந்தாலும் துன்பம் தராமல் இருக்க வழி சொல்கிறார்.

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

இங்கே வள்ளுவர் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது எந்த ஒன்றும் தனித்து வாழ முடியாது. இந்நிலையில் தனக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்ற எண்ணத்தை அழித்து சார்புடைமையை ஏற்றுக் கொண்டு வாழும் போது அங்கே, அப்போது மன மாசுகள் எல்லாம் அழிந்துபோகும். அப்போது துன்பம் தரக்கூடிய நோய் துன்பம் தராது.

இவ்வாறு நோய் வருவதற்கான காரணத்தையும் நோய் வராமல் தவிர்த்தலே அறிவினுள் எல்லாம் தலையானது என்றும் அப்படி நோய் வந்துவிட்டாலும் அந்த நோய் வருத்தாமல் இருப்பதற்கும் திருவள்ளுவர் வழி சொல்கிறார்.

அவர் மருந்து என்ற அதிகாரத்தில் மருத்துவத்தைப் பற்றிக் கூறினாலும், அவருடைய பார்வையில் துன்பம் வருவதற்கான காரணம் பிறர்க்கு தீங்கு செய்வதே என்று கூறுவது, ஹோமியோபதியர்கள் பார்வையில் மியாசத்திற்கு அடிப்படையானது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த மியாசமே நோய்களுக்கு மூல ஊற்று. அந்த மியாசமே பிறர்க்குத் தீங்கு செய்வதில் தொடங்குகிறது.

இவ்வாறாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் நோயின்றி வாழ வழி சொல்கிறார்.அவர் கூறியதை கருத்துள் கொள்வோம். நோயின்றி வாழ்வோம்.

திங்கள், 10 மார்ச், 2014

அன்பே கடவுளின் நியதி -பழ.வெள்ளைச்சாமி

                  அன்பே கடவுளின் நியதி



அன்பே கடவுளின் நியதி
நீங்கள்
அன்பு செலுத்த கற்பதற்காகவே
வாழ்கிறீர்கள்
நீங்கள்
வாழக் கற்றுக் கொள்வதற்காகவே
அன்பு செலுத்துகிறீர்கள்.

இந்தப் பாடத்தை விட
மனிதனுக்கு
எந்தப் பாடம் தேவைப் படும்!

அன்பு செலுத்துவதில்
அப்படி என்னதான் இருக்கிறது?
நேசிப்பவரை முழுமையாக
உட்கிரகித்து
எப்போதும்
இருவரும் ஒருவராக
ஆகுவதைத் தவிர!

ஒருவர்
யாரை நேசிப்பது?
எதை நேசிப்பது?

வாழ்வு மரத்தின்
ஒரு இலையை மட்டும்
தேர்ந்தெடுத்து
இதயத்தைத் திறந்து
அதன் மீது
பாசத்தை பொழிய முடியுமா!?
அப்படியானால்
அந்த இலையைத் தாங்கிய
வாது என்னாவது?
அந்த வாதைத் தாங்கிய
மரம் என்னாவது?
அந்த மரத்தைச் சுற்றியுள்ள
பட்டை என்னாவது?
பிறகு
பட்டை,மரம்
வாது இலை
இவைகளுக் கெல்லாம்
உணவளிக்கும்
வேர் என்னாவது?

அந்த வேரைப் பற்றியுள்ள
மண் என்னாவது?
பிறகு
அந்த மண்ணிற்கு
உரம் அளித்த
அந்த கதிரவன்
என்னாவது?
அந்தக் கடவுள்
என்னாவது?
அந்தக் காற்று
என்னாவது?

ஒரு மரத்தின்
ஒரு சின்ன இலை மட்டும் தான்
உன் அன்புக்குத் தகுதி என்றால்
அந்த ஒட்டுமொத்த
மரத்துக்குமான
அன்பு என்னாவது?

எப்போது
அன்பு ஒரு முழுமையிலிருந்து
ஒரு பகுதியை மட்டும்
பார்க்கத் தொடங்கி விட்டதோ
அப்போதே
அது அதன்
துயரக் கல்லறையைக்
கட்டத் தொடங்கி விட்டது.

நீங்கள் சொல்லலாம்
"ஒரு மரத்தில்
எத்தனை எத்தனை இலைகள்
சில ஆரோக்கியமானவை
சில நோயுற்றவை
சில அழகானவை
சில பிரம்மாண்டமானவை
சில குள்ளமானவை
இவ்வாறு
வேறுபாடு நிறைந்த வற்றில்
நாம் தேர்ந்தெடுத்துப் பறிக்காமல்
என்னதான் செய்வது?.

நான்
உங்களுக்குச் சொல்வேன்
நோயுற்று வெளுத்துப் போனதிலிருந்துதானே
புதிய ஆரோக்கியமானது வருகிறது.
மேலும்
நான் சொல்வேன்
அழகு கூட 
இந்த
அசிங்கம் வரைந்த
ஓவியம் தான்!

குள்ளமானது இல்லாவிட்டால்
இந்தப் பிரமாண்டமானது
என்பது ஏது?
பிரமாண்டத்திற்கு
வடிவம் கொடுத்ததே 
இந்தக் குள்ளமானது தானே!

நீங்கள்
ஒரு
வாழ்வு மரம்
அதனால்
உங்களை நீங்களே
துண்டாக்கிக் கொள்வதிலிருந்து
எச்சரிக்கையாக
இருங்கள்.

ஒரு கனிக்கு எதிராக
ஒரு கனியைத் திருப்பிவிடாதீர்கள்.
ஒரு இலைக்கு எதிராக
ஒரு இலையைத் திருப்பிவிடாதீர்கள்
ஒரு கிளைக்கு எதிராக
ஒரு கிளையைத் திருப்பிவிடாதீர்கள்.
மரத்துக்கு எதிராக 
வேரைத்திருப்பிவிடாதீர்கள்.
முடிவில்
அந்தத் தாய்மண்ணுக்கு எதிராக
மரத்தையே திருப்பிவிடாதீர்கள்.

நீங்கள்
எப்போது முழுமையின்
ஒரு பகுதியை மட்டும்
நேசிக்கத் தொடங்கீர்களோ
அப்போது தெளிவாக
இதைத் தானே செய்கிறீர்கள்.

நீங்கள்
ஒரு
வாழ்வு மரம்!
உங்களுடைய
வேர்கள் எங்கும் பரவியுள்ளன
உங்கள்
கிளைகளும் இலைகளும்
எங்கும் இருக்கின்றன
உங்கள்
இனிய பழங்களை
எல்லோரும் சுவைக்கிறார்கள்.

அந்த மரத்தில்
எப்படிப் பட்ட பழங்கள் இருந்தாலும்
அந்த மரத்தின்
கிளைகளும் இலைகளும்
எப்படிப் பட்டவைகளாக
இருந்தாலும்
அந்த மரத்தின் வேர்கள்
எப்படிப் பட்டவையாக இருப்பினும்
அவை உங்களுடைய பழங்கள்
அவை உங்களுடைய கிளைகள் இலைகள்
அவை உங்களுடைய மரம்.
உங்களுடைய மரம்
இனிமையான மணமுள்ள பழத்தைத்
தாங்கி யிருந்தால்
உங்களுடைய மரம்
பசுமையாகவும் பலம் வாய்ந்ததாகவும்
இருக்குமானால்
அதற்கு காரணம்
நீங்கள்
வேர்கள் மூலம்
அந்த மரத்திற்கு ஊட்டிய
சாறுதான் என்பதை
மறந்து விடாதீர்கள்.

அன்பே வாழ்வின் சாரம்
அப்போது
வெறுப்பு என்பது
சாவின் சீழாகி விடும்
அதனால்
இங்கே
அன்பு குருதியைப்போல
நாளங்களில் தங்குதடையற்று
பாய வேண்டும்.

தேங்கிய இரத்தம்
ஆபத்தானது
அதிகத் துன்பம் தருவது.
தேங்கிய
அல்லது
அமுக்கப்பட்ட அன்பே
வெறுப்பு!
அப்போது
அது
கொடுப்பனுக்கும்
எடுப்பவனுக்கும்
வெறுக்கப்பட்டவனுக்கும்
வெறுத்தவனுக்கும்
கொடிய நஞ்சாகிறது.

உங்கள்
வாழ்வு மரத்தின்
மஞ்சள் நிற இலைகள்
பாசம் காட்டப்படாமல் பழுத்தவைகள்!
பாசம் காட்டாமல் விட்டுவிட்டு
பழுப்பி லையைப் பழிப்பானேன்.

வதங்கிய வாதுகள்
பாசப் பட்டினியால் வதங்கியவை
பாசப் பசியைப் போக்காமல்
வதங்கிய வாதுகளைப் பழிப்பானேன்

அழுகிய பழங்கள் அன்புக்குப் பதிலாக
வெறுப்பு ஊட்டப்பட்ட பழங்கள்
வெறுப்பைப் பழங்களுக்கு ஊட்டிவிட்டு
வீணே பழங்களைப் பழிப்பானேன்.

வாழ்வின் சாரத்தை
சிலவற்றிற்கு மட்டும் கொடுத்துவிட்டு
பல வற்றிற்கு மறுத்துவிட்ட
உங்கள்
நாற்ற மெடுத்த குருட்டு
இதயத்தைப் பழியுங்கள்.
அது
அவ்வாறு செய்த தால்
அதற்கு அதுவே
அன்பை
மறுத்துக் கொண்டதே!

நீங்கள்
உங்கள் ஆன்மாவையே
நேசிக்காத போது
உங்களிடம் அன்புக்கு
ஏது சாத்தியம்.

உண்மையான ஆன்மா என்பதே
உள்ளது அனைத்தையும்
தழுவியதுதானே!
அதனால்
அனைத்துமே
கடவுளின் அன்புதானே!
ஏனெனில்
அன்பே கடவுள்.

அன்பு உங்களை
வேதனைப் படுத்துவதாக
உணரும் காலம் வரை
நீங்கள்
உங்கள்
உண்மையான ஆன்மாவைக்
காணப் போவதில்லை.
நீங்கள்
அன்பின் தங்கச் சாவியையும்
காணப் போவதில்லை.

அதனால்
நீங்கள்
நிலையற்ற ஆன்மாவை
நேசிக்கிறீர்கள்
அதனால்
உங்கள்
அன்பும் நிலையற்றதே!

ஆண் பெண் காதல்
அன்பு அல்ல உண்மையில்
அது
அன்புக் கான தூரத்து
அடையாளம்.

பிள்ளையின் மீது
பெற்றோரின் பாசம்
அன்பு என்ற
புனிதக் கோவிலுக்கான
நுழைவாயில்.

எப்போது
எல்லா ஆண்களும்
எல்லாப் பெண்களையும்
நேசிக்கிறார்களோ

எப்போது
எல்லாப் பெண்களும்
எல்லா ஆண்களையும்
நேசிக்கிறார் களோ

எப்போது
ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு பெற்றோரையும்
நேசிக்கிறதோ

எப்போது
ஒவ்வொரு பெற்றோரும்
ஒவ்வொரு குழந்தையையும்
நேசிக்கிறார் களோ
அப்போது தான்
அன்பு முழுமை பெறும்

அது வரைக்கும்
ஆண்களும்,பெண்களும்
அவரவர்
தசை யையும் எலும்பையும் பற்றி
பெருமை பேசுபவர்களே.

அவர்கள்
ஒரு போதும்
புனிதமான அன்பை
பேச மாட்டார்கள்.
இது நிந்தனையானது!

நீங்கள்
எந்த ஒரு மனிதனை
எதிரியாகப் பார்த்தாலும்
நீங்கள்
ஒருபோதும்
யாரோடும்
நட்போடு இருக்க முடியாது!

பகைமை தாங்கிய
இதயத்தில்
பசுமையான நட்புக் கேது
உறைவிடம்

உங்கள்
இதயத்தில் வெறுப்பு
இருக்கும்வரை
உங்களால்
அன்பின் ஆனந்த்த்தை
உணர முடியாது.

நீங்கள்
அன்பின் சாரத்தை
அனைத்துக்கும் ஊட்டிவிட்டு
அதை மிகச் சிறிய புழுவுக்கு மறுத்தாலும்
அது
உங்கள்
வாழ்க்கையையே கசப்பாக்கி விடும்.

நீங்கள்
யாரை நேசித்தாலும்
எதை நேசித்தாலும்
நீங்கள்
உண்மையை நேசிக்கிறீர்கள்
உங்களை நேசிக்கிறீர்கள்
அதுபோல்
நீங்கள்
யாரை வெறுத்தாலும்
எதை வெறுத்தாலும்
உண்மையை வெறுக்கிறீர்கள்
உங்களை வெறுக்கிறீர்கள்

ஏனெனில்
வெறுப்பு என்பது கூட
பிரிக்க முடியாதபடி
அன்போடு
பிணைக்கப் பட்டிருப்பதுதானே!
காசின்
பூவும் தலையும் போல

உண்மையில்
உங்களுக்கு நீங்கள்
நேர்மையுள்ளவராக இருப்பின்
உங்களை
நேசித்ததையும்
நேசிக்க விரும்பிய தையும்
நேசிப்பதற்கு முன்பாக
உங்களை
வெறுத்ததையும்
வெறுக்கப் போவதையும்
நீங்கள் முதலில்
நேசிக்க வேண்டும்.

அன்பு என்பது
உயர்ந்த பண்பன்று
அன்பு என்பது
அத்தியாவசியமானது.
ஆம்
ஆகாரத்தையும் நீரையும் போல
ஒளியையும் வளியையும் போல

யாரும்
அன்பு கொள்வதால்
அடைய வேண்டாம்
இறுமாப்பு

நீங்கள்
சுதந்திரமாக
நீங்கள் அறியாமல்
காற்றைச் சுவாசித்து
காற்றை வெளிவிடுவதுபோல
நீங்கள்
அன்பைச் சுவாசித்து
அன்பை வெளிவிடுங்கள்
அன்புக்குத் தேவையில்லை
புகழ்ச்சி
ஆனால்
அதுவே
தகுதியுள்ள இதயங்களை
உயர்த்தும்.

அன்புக்குத் தேவையில்லை
வெகுமதி
அன்பே
அன்பிற்குப் போதுமான
வெகுமதி.

எப்படி
வெறுப்பே
வெறுப்புக்குப் போதுமான
தண்டனை
அதுபோல!
அன்புக்கு கணக்கேது
அன்பே
அன்புக்கான
கணக்காக இருக்கும்போது

அன்பு
கடன்
கொடுப்பதும் இல்லை
கடன்
பெறுவதும் இல்லை

அன்பு
வாங்குவதும் இல்லை
விற்பதும் இல்லை

அன்பு
கொடுக்கும்போது
அனைத்தையும் கொடுக்கிறது
அன்பு
எடுக்கும்போது
அனைத்தையும் எடுக்கிறது.

அன்பு
கொடுப்பது என்பதே
பெறுவது என்பதாகும்.
அன்பு
பெறுவது என்பதே
கொடுப்பது என்பதாகும்.

அன்பு
இன்றைக்கும் அன்புதான்
நாளைக்கும் அன்புதான்
என்றைக்கும் அன்புதான்.

கடலுக்கு
நீர் அனைத்தையும்
அளித்து விட்டு
தீர்ந்து போன ஆற்றை
கடலே மறுபடியும்
நிரப்புவது போல

நீங்கள்
அன்பு செலுத்தி
தீர்ந்து போனாலும்
மறுபடியும்
அன்பே நிரப்பும்
உங்களை!

கடல்
கொடுத்த வெகுமதியை
கடலுக்கு திருப்பிக் கொடுக்காத
குட்டை
தேங்கிய குட்டை
அதுவே பின்பு
நாறிய குட்டை

அன்பிற்கு அளவேது
அன்பில் அதிகமேது
அன்பில் குறைவேது

அன்பு
தரம் பிரித்து
அளக்கப் படும் போது
அப்போது
அங்கே
அன்பு
நழுவி விடும்
அதன்
கசப்பான ஞாபங்களே
மிஞ்சும்.

அன்புக்குத் தனி இடமேது
இங்கேயும் அன்பு
அங்கேயும் அன்பு
எங்கேயும் அன்பு

அனைத்துக் காலங்களும்
அன்பின் காலங்கள்
அனைத்து இடங்களும்
அன்பின் உறைவிடங்கள்

அன்புக்கு ஏது எல்லை
அன்பிக்கு ஏது தடை

அன்பின் பிரவாகம்
தடைப் படுமானால்
அது
அப்போது
அன்பிற்கான தகுதியோடு
இருக்காது

அன்பு குருடானது
என்று
அடிக்கடி சொல்லக் கேட்போம்
அதற்கு அர்த்தம்
அது
நேசிப்பவர்கள்
குறைகளைக் காணாது
இது குருடல்ல
பார்வையின் உச்சம்

எப்போது
நீங்கள்
எந்த ஒன்றிலும்
குறை காண்பதில்லையோ
அப்போது
உங்கள் அன்பு
நிரந்திரமானது
குருடு இல்லை

அன்பின் கண்கள்
தூய்மை யானவை
ஊடுருவிப் பார்ப்பவை
அதனால்
அது அறியாது
குறைகளை!

அன்பு
உங்கள்
பார்வையைத்
தூய்மை யாக்குகிறது
அப்போது
உங்கள் அன்பு
தகுதியற்றது எதையும் பார்ப்பதில்லை.

அன்பு நீங்கிய
குறை காணும்
கண்கள் மட்டுமே
குறைகளைக் கண்டுகொண்டிருக்கும்
எப்போதும்!

அது
எதில் என்ன குறைகளைக்
கண்டாலும்
அவை அனைத்தும்
அதன் குறைகளே!

அன்பு
ஒருங்கிணைக்கிறது
வெறுப்பு சிதைக்கிறது.

அன்பின் கரங்கள்
அணைத்திருக்கா விட்டால்
இந்தப் பெரும்பாறைகளும்
பிரமாண்டமான பூமியும்
பிளந்து போய்விடாதா!

உடம்பின்
அனைத்துச் செல்களிலும்
அன்பு சமமாகப் பரவியிருக்குமானால்
அழியக் கூடிய
இந்த உடல் கூட
சிதைவை எதிர்த்து
நிற்கு மல்லவா!

வாழ்க்கை என்ற
இனிய இசையில்
அன்பு
அமைதியின் அதிர்வு
வெறுப்பு கொடுமையான
சாவோடு கூடிய
யுத்தத்தின் எதிர்பார்ப்பு!

நீங்கள்
எதை விரும்புகிறீர்கள்
அன்பையும் நிரந்தர
அமைதியையுமா?
அல்லது
வெறுப்பையும்
நிரந்தர யுத்தத்தையுமா?

ஒட்டு மொத்தப் பூமியும்
உன்னோடு இருக்கிறது
ஒட்டு மொத்தச் சொர்க்கமும்
உன்னோடு இருக்கிறது.

நீங்கள் எப்போது
இந்தப் பூமியையும்
இதில் உள்ள
அனைத்து உயிர்களையும்
நேசிக்கிறீர்களோ
அப்போதுதான்
நீங்கள்
உங்களை நேசிக்க முடியும்!

அன்பு மட்டுமே
அற்புதத்தை படைக்கும்
படைப்பாளி
நீங்கள்
பார்ப்பதாக இருந்தால்
முதலில்
அன்பு உங்கள்
விழிகளில் நிரம்பி இருக்கட்டும்.
நீங்கள்
கேட்பதாக இருந்தால்
முதலில்
அன்பு உங்கள்
செவிப் பறையில் நிரம்பி இருக்கட்டும்

வெறுப்பு இல்லை என்பது
அன்பு கொண்டதற்கு
அர்த்தமாகாது.

அன்பு
செயலுக்கான
ஆற்றல்.

அன்பு
உங்களின்
ஒவ்வொரு நகர்வையும்
ஒவ்வொரு அடியையும்
வழி நடத்த வில்லை யானால்
அப்போது
உங்களுக் கான வழியை
அறிய முடியாது
உங்களால்!

அன்பு
உங்களுடைய
ஒவ்வொரு விருப்பத்திலும்
ஒவ்வொரு எண்ணத்திலும்
நிறைந் திருக்கா விட்டால்
உங்கள்
விருப்பங்கள் அனைத்தும்
கனவில் தோன்றும்
முற்செடிகள் போலாகும்
உங்கள் எண்ணங்கள்
இறந்துபோன நாட்களுக்கான
ஒப்பாரியாகி விடும்!

அன்பே
உங்கள்
திசைக் கருவி
பயணியுங்கள்
திசை எட்டும் செல்லுங்கள்
இதயத்
திரவியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்பு
கடும் புயலிலும்
உங்களைக் காக்கும்
அது
கடும் இருட்டிலும்
ஒளி விளக்காகும்
ஏனெனில்
“அன்பே கடவுளின் நியதி”.