வியாழன், 18 மே, 2017

நக்ஸ் வாமிகா


( NUX VOMICA)
(எட்டிக்காய்)
மேஜர் தி.சா.இராஜூ


தலை நாயகம்
மேதை ஹானிமன் தமது கொள்கையை நிரூபித்து மறைந்த பிறகு பல அமெரிக்க நிபுணர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து அதை ஓர் அறநெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.  அவர்களில் ஈ.பி. நாஷ்[E.B.NASH] என்பவர் சிறந்த மருத்துவர்.  நூலாசிரியர்.  ஏழு மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்.  ஒவ்வொன்றும் பல்லாயிரம் படிகள் அச்சாயின.  அவைகளில் `ஹோமியோபதி மருந்துகளின் தலை நாயகம்’ என்ற நூல் சிறப்பு மிக்கது.  ( LEADERS IN HOMOEOPATHIC THERAPEUTICS).
பொதுவாக மருந்துகளைப் பற்றி எழுதுபவர்கள் அகர வரிசையில் துவங்குவது வழக்கம்.  ஆனால் நாஷ் ஒரு புதுமுறையை மேற்கொண்டார்.  எந்த மருந்து தனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததோ அதைக் குறித்தே முதலில் எழுதுவேன் என்று கூறி தமது நூலை நக்ஸ்வாமிகா என்ற மருந்துடன் துவங்குகிறார்.  இந்த மருந்து ஆயுர்வேதம், சித்த மருத்துவம், அலோபதி ஆகிய முறைகளிலும் அதன் இயற்கை உருவில் பயன்படுத்தப்படுகிறது.  ஹோமியோபதியில் அதன் வீரியம் பயன்படுகிறது.
Image result for nux vomica tree
கசப்பே மருந்து
இந்த மருந்தை மேதை ஹாமனிமனே தயாரித்து நிரூபித்திருக்கிறார்.  ஹீயூக்ஸின் நூலிலும் இது பற்றிய குறிப்பைக் காரணலாம்.  எட்டிக் காயின் விதையிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.  இதன் சிறப்பான அம்சம் இந்தக் காயின் கசப்புத் சுவை.  இதன் அறுபதினாயிரம் பிரிவின் பகுதியிலும் கூட இதன் கசப்பு நெடி இருக்கும் என்று டபுள்யூ.ஏ. டிவி எழுதுகிறார்.
சிறு மூளையின் இறுதிப் பகுதியான முகுளம், அதன் தொடர்ச்சியான முதுகுத்தண்டு ஆகியவசற்றை இது தாக்கும்  மூச்சுக் குழலைச் சீராக்கும்.  செரிமானத்தை விரிவுபடுத்தி உணவுப் பாதையின் போக்கை விரைவுபடுத்தும்.  வயிற்றில் ஏற்படும் வேதனை, இசிவு ஆகியவற்றை இது குணப்படுத்தும்.

என்னுடைய மருத்துவப் பணியின் துவக்கக் காலத்தில் நான் பயன்படுத்திய மருந்துகளில் இது தலைமையானது.  நான் நான்கு மருந்துகளின் உதவியுடனேயே பணியைத் துவங்கினேன்.  (மற்ற மருந்துகளைப் பற்றி அதிகம் தெரியாததோடு அவற்றைப் பயன்படுத்தவும் பயம்.  உண்மையைச் சொல்லத் தயக்கமேன்?) என்னை இது எப்போதும் கைவிட்டது கிடையாது என்று உறுதியாகக் கூறுவேன்.

ஒரு நிகழ்ச்சி
ஒரு சுவையான நிகழ்ச்சியுடன் இதைத் துவங்குகிறேன்.
ஆய்வுப் பணியின் பொருட்டு வெலிங்டனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன்.  குன்னூர் படையினர் மருத்துவமனையின் தலைமை அலுவலர் பதவி உயர்வு பெற்று காஷ்மீர் செல்ல இருந்தார்.  குன்னூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வழியனுப்பு உபசாரம் நடைபெற்றது.  அவர் என் பெட்டியிலேயே ஏறிக் கொண்டார்.  அவருடன் கூட இரு மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் அவரை மேட்டுப்பாளையம் நிலையத்தில் வந்து வழி அனுப்பும் பொருட்டு உடன் வந்தார்கள்.  என் அருகில் அமர்ந்திருந்த  லெப்டினன்ட் கர்னலின் உடல் நடுங்கியது.  தமது கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலைவகளைக் கூடக் கழற்ற முடியாமல் திணறினார்.  உடலில் ஒரே வெப்பம்,  கண்கள் சிவந்து காணப்பட்டன.  பற்கள் கிட்டித்தன.  நடுக்கம் அதிகரித்தது.  உடன் வந்த மருத்துவர் ஒரு மாத்திரையை எடுத்து அவரிடம் கொடுத்தார்.  கர்னல் மறுத்துவிட்டார்.  அவரைச் சாய்வு நிலையில் உட்கார வைத்தார்கள்.  அந்தப் பிரிவில் ரயில் பெட்டி மிகவும் சிறியதாக இருக்கும்.  அதிகம் வேகமில்லை என்றாலும் அவருடைய உடல் தூக்கிவாரிப் போட்டது.  கர்னல் இரண்டு இரவு, இரண்டு பகல் தொடர்ந்து பிரயாணம் செய்தாக வேண்டும்.  வழியில் அவரை யார் கவனித்துக் கொள்ளுவார்கள்?
மேட்டுப் பாளையத்திலிருந்து தந்தி கொடுக்கலாமா என்று உடன் வந்த மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்.  ஒரு வழியாக இறங்க வண்டிய இடம் வந்து சேர்ந்தோம்.  அங்கே ரயில் மாற வேண்டும்.  அவரை இறங்கச் செய்வதே பெரும்பாடாக இருந்தது.  நான் என் கைப்பையிலிருந்து மருந்துப் பெட்டியை வெளியில் எடுத்தேன்.  நீங்கள் தடை ஏதும் சொல்லாதிருந்தால் . . .

மருந்து
என்ன இது? என்று ஏளனமாகக் கேட்டார் உடன் வந்த மருத்துவர்.
இரண்டு மாத்திரைகள் போதும் என்று கூறி அவற்றைக் கர்னலின் வாயிலிட்டேன்.  அவர் பயணிகள் தங்கும் அறையில் படுத்துக் கொண்டார்.  அடுத்த பத்து நிமிஷங்களில் நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்பட இருந்ததாக அறிவிப்புக் கேட்டது.  கர்னல் கண் விழித்தார்.  அவர் கையைப் பிடித்து வெளியில் அழைத்து வந்தோம்.  இப்போது எங்களுக்கு இருக்கைகள் வெவ்வேறு பெட்டிகளில் இருந்தன.  கர்னலை அவருடைய இடத்தில் அமர வைத்தோம்.  அவருடைய உடல் நடுக்கம் குறைந்திருந்தது.

மாயம்
நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.  ரயில் கோவையில் நின்றது.  நான் இறங்கி கர்னல் அமர்ந்திருந்த பெட்டிக்குச் சென்றேன்.  அவர் பெர்ரி மேஸனின் புதினம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.
எப்படி இருக்கிறீர்கள் ஐயா?
ஒரு தொந்தரவுமில்லை நண்பரே.  குளிர் குறைந்து விட்டது.  ஒரு முறை வெளிக்குப் போகும்படி இருந்தது.  நான் என் கைப்பெட்டியைத் திறந்து சர்பர் முப்பதின் இரு உருண்டைகளை அவருக்குக் கொடுத்தேன்.  அவன் நன்றியுடன் கூறினார்.  `கடவுள் உம்மை ஆசீர்வதிக்கட்டும்’.
மறுநாள் காலையில் சென்னையில் அவரைச் சந்தித்தேன்.  பழைய மிடுக்கான தோரணை.  அவர் என் கையைக் குலுக்கிக் கட்டித் தழுவிக் கொண்டார்.

பயணத்தின்போது அவருக்கு நான் கொடுத்த முதல் மருந்து நக்ஸ்வாமிகோ-30.


இந்தப் பெயர் ஏன்?
எட்டிக்காயைப் பொதுவாக `ஆண்கள் மருந்து’ என்று குறிப்பிடுவது வழக்கம்.  பெண்களின் நோய்க்கு இது நிவாரணமளிக்காது என்பதன்று.  ஓர் ஆண், சமுதாயத்தில் சில குறிப்பிட்ட வகைப்  பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  அதற்கேற்ற தொல்லைகளும், துயரங்களும், நோவுகளும் பின் விளைவுகளாக அமைகின்றன.  அது காரணம் பற்றியே இதை ஆண்கள் மருந்து என்று அழைக்கிறார்கள்.  மருத்துவர் போயரிக் எழுதியிருப்பதை அறிந்து கொள்ளுவது சுவை மிக்க தகவல்.
`நகஸ் நோயாளி வெடவெடவென்று ஒடிசலாக இருப்பான்.  சுறுசுறுப்பாக இயங்குவான்.  எளிதில் சிடுசிடுப்பான்.  நிறைய எழுத்து வேலை அவனுக்கிருந்தாலும் அவற்றை அலுத்துக் கொள்ளாமல் செய்வான்.  ஒரு பரபரப்பான அலுவலகத்தின் பாதிப்புகள், எதிர்பார்ப்புகள், தொல்லைகள் அனைத்தைiயும் பொறுமையுடன் சமாளிக்கும் திறன் அவனுக்கிருக்கும்.
இவைகளிலிருந்து சிறிது ஆறுதல் பெற அவன் உணர்ச்சிகளைத் தூண்டும் பானங்களையும், கவலைகளை மறக்கடிக்கும் மரப்பு மருந்துகளையும் பயன்படுத்தும்படியான நிலைக்கு அவன் தள்ளப்படுவான்.
சுவை மிக்க உணவில் அவனுக்கு நாட்டம் இருக்கும்.  அதை அமிர்தமாகவே உட்கொள்ளுவான்.  மது, மாது எல்லாம் உடன் தொகை.  அவற்றின் விளைவுகள் மறுநாள் முற்பகல் வரை தொடரும்  இவற்றை எல்லாம் சமாளிக்க அவன் பேதி மருந்துகள், தற்காலிகமாக ஊக்கம் தரும் பொருட்கள், பான வகைகள், ஆகியவற்றைச் சற்றுத் தாராளமாகவே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.  இவைகளினால் அவனுடைய உள்ள நிலையும், உடல் கூறும் பாதிக்கப்படும்.
இத்தகையை நிலைக்கு ஒரு பெண்ணை விட ஆண் அலுவலர் அதிகமாக ஆட்படுவதால் அந்தத் துயரங்களுக்கு எட்டிக்காய் நிவாரணமளிப்பதால்-இதை ஆண்பாலர் மருந்து என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

இயல்பு
இத்தகைய தொடர் பணிகள் ஒருவனது நரம்பு மண்டலத்தை மோதும்.  அதனால் அவன் சிடுசிடுப்புள்ளவனாக மாறிவிடுவான்.  சுருக்கமாகக் கூறப்போனால், செரிமானக் கோளாறுகள், கற்பனையான பல நோய் நிலைகள், வலிப்பு நோய் இப்படி மிக அதிகமான கோளாறுகள், அவனுக்கிருக்கும்.  அவனால் திறந்த வெளியைத் தாங்க இயலாது.  இரைச்சல், பல்வகை மணங்கள், வெளிச்சம் ஆகியவைகளினால் அவன் துன்புறுவான்.  அதனால் எப்போதும் பிறரிடம் குறை காண்பான், எரிந்து விழுவான்.
Image result for எரிச்சல் கோபம்

பித்தத்தின் விளைவான கிறுகிறுப்பு, மயக்கம், தள்ளாட்டம், உச்சந்தலைவலி, கண்ணிமைகள் கனத்து நோவெடுக்கும்.  இறுக்கிக் கட்டுப் போட்டால் சிறிது சமனமாகும்  கள்ளப் பெண் தொடர்பினால் ஏற்படும் அசாதாரணச் சோர்வையும் எட்டிக்காய் குணப்படுத்தும்.
பார்வை மங்கி விடும்.  இந்த நிலை காலை கண் விழிக்கும்போதே ஏற்டும்.  கண் நரம்புகள் மரத்துப் போகும்.  காதுப் பகுதி காய்ந்துமிருக்கும்  திரவமும் ஓடும்.  வெளி ஓசைகள் துயரத்தை அதிகமாக்கும்.

மூக்கு.
மூக்கைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  குளிர் காற்றினால் தாக்கப்பட்டால் உடனடியாக மூக்கடைப்பு  சில தீவிர நெடிகள் மயக்கத்தையே உண்டாக்கும்.  இரவிலே மூச்சு விடவே இயலாது.  இந்த நிலை இரு துளைகளிலும் மாறி மாறி ஏற்படும்.  காலை வேளைகளில் உதிரம் வழியும்.  வெளிப்பாடு எரிச்சலை உண்டாக்கும்.

வாய்
வாய்ப் பகுதியில் விசித்திரமான நிலைமை.  அதன் உட்புறத்தில் குழிப் புண்கள்.  உமிழ் நீரில் உதிரம்.  நாவில் இருபுறமும் செதில்கள்.  புண்கள், முன்பகுதி சுத்தமாக இருக்கும்.  அடி நாக்கில் நிற மாறுதல் இருக்கும்.   ஈறுகளில் வீக்கம், சீழ், பல்வலி, தொண்டையில் கரகரப்பு,  உள்நாக்கு வீங்கி எதையும் விழுங்க இயலாத ஒரு நிலை.  எதையும் விழுங்கும்போது செவிகளில் நோவுண்டாகும்.  கூடவே `க்ரிக்’ என்ற ஒலி.

செரிமானம்
பொதுவாக உண்ட உணவு எளிதில் செரிமானமாகியிராது.   வயிறு கனமாகவே இருக்கும்.  உண்ட சில மணிநேரம் பொறுத்து உடல் நிலை இன்னும் மோசமாகும்.   கீழ்நோக்கிக் காற்று இறங்கும்.  எதிர்த்து மேல் நோக்கியும் வரும்.  பித்த நீர் கசப்பாக ஊறும்.  உமிழ் நீர் சுரந்து வாந்தி எடுக்கும் நிலை.  தீவிரமான பசி உணர்வு இருந்தாலும் உணவை உட்கொள்ள இயலபாது.  வயிற்றுப் பகுதி கல்லைப் போல இறுகிப்போயிருக்கும்.  கொழுப்புச் சத்துள்ள உணவில் நாட்டம் இருக்கும்.  அது செரிமானமும் ஆகும்.  ஏப்பம் வராது.  அதே வேளையில் வாந்தி எடுக்கவும் தோன்றும்.  ஆனால் வெளி வராது.
Image result for மலச்சிக்கல்

வீக்கம்
அடிவயிற்றில் ஏற்படும் கோளாறுகள் மிக அதிகம்.  பெருங்குடலின் பகுதிகளையே கீழே தள்ளி பல இடங்களில் பிதுங்கச் செய்யும்.  விதை இறக்கம் ஏற்படும்.  ஹெர்னியா என்று இதை அழைப்பார்கள்.  அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமலேயே நக்ஸ்வாமிகா இந்த நிலையைச் சீராக்கும்.   இந்த மருந்தின் மிக முக்கியமான குறியூட்டுக்கு இப்போது வருகிறோம்.  அது மலக்கழிப்பைப் பற்றியது.

கழிவு
பெருங்குடலின் பகுதியிலிருந்து கழிவுப் பொருள் கீழே தள்ளப்படும்போது அந்தச் செயலுக்கு நரம்புத் தொகுதிகளின், தசைகளின்,  சுரப்பிகளின் உதவி தேவை.
சுகவீனமில்லாத மனிதனுக்கு இந்த நிகழ்ச்சி சிரமம் ஏதும் தராது.  மலம் கழிக்கும் இச்சை ஏற்பட்டதும் அவன் கழிப்பிடத்தை அடைவான்.  அமர்ந்ததும் சிறு நீர் பிரியும்.  பெருங்குடலின் இறுதிப் பகுதியில் அடைந்து கிடக்கும் கழிவுப் பொருளை வெளித் தள்ள உதவியாகச் சுரப்பிகள் இயங்கும்.  நரம்பு மண்டலம் தசைகளை இயக்கும்.  குதத்தின் உட்பகுதியின் அமைப்பில் குழல் வடிவில் ஆறு அங்குலத்துண்டு பழுப்பான மஞ்சள் நிறத்தில் எத்தகைய அழுத்தம் இல்லாமல் வெளிப்பட வேண்டும்  அதற்குப் பிறகும் ஒரு துண்டு வெளிப்படலாம்.  இந்தக் கழிவு வெளிப்பட்ட பின்பு அவனுக்கு ஒரு நிம்மதி இருக்கும்.  இதுதான் ஆரோக்கிய நிலை.  கழிவுப் பொருள் திசுக்களில் ஒட்டிக் கொண்டு தொந்தரவு கெடுக்கக் கூடாது.
இதற்கு மாறாக மலம் பல வகைகளில் வெளியாகும்.  திப்பியாக, கட்டியாக, சளியுடன், நீரொழுக்காக என்று பற்பல வகைகள்.  ஒருவனுடைய கழிவுப் பொருள் அதன் உட்கிடக்கை, நிறம், ஆகியவற்றின் மூலம் அவனுடைய உடல் நிலையைத் தெள்ளெனக் காட்டிக் கொடுத்து விடும்.

சிக்கல்
மிக எளிதாக எழுதிவிடலாம். ஆனால் பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் சிந்தனா சீலர்கள், போர்த் தளபதிகள் ஆகியோர்களின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுடைய செரிமான நிலை சீர்கெட்டிருப்பதை அறியலாம்.  பெரிய அறிவாளிகளின் சிந்தனைகளில் எல்லாhம் அவர்களுடைய மலச்சிக்கலின் நிழலைக் காண்கிறேன் என்று வினோபா அடிகள் எழுதுகிறார்.  இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய வாழ்முறை.  இயற்iகையுடன் பொருந்தாத வாழ்முறை, அவர்களுடைய சீரான உடல்நிலையைக் கெடுத்துவிடுகிறது.

நோய் முதல்
எங்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளிகள் பெரும்பாலும் படை வீரர்களாக இருந்தனர்.  அவர்களுடைய உணவு அலுமினியம் பாத்திரங்களில் அட்டிக்கப்பட்டது.  அலுமினியம் நரம்பு மண்டலத்தின் தசைப் பகுதியை இயங்காமல் செய்துவிடும்.  தெளிவாகச் சொன்னால் அவை மரத்து, இறுகி,  இறந்துவிடும்.

மலச்சிக்கலுடன் வரும் நோயாளி படைவீரராக இருந்தால் எங்கள் ஆசான் அதிகம் யோசிக்காமல் அலுமினாவை முப்பதாவது வீரியத்தில் கொடுக்கச் செய்வார்.  இந்த அலுமினா ப்ரைiயோனியாவுக்குத் தொடர் மருந்து.  கனிம இனத்தைச் சேர்ந்தது.  குதப் பகுதியில் உள்ள சுரப்பிகளை இது அற்புதமான வகையில் இயங்க வைக்கும்.  அறுபது விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துவிடுவதைக் கண்டிருக்கிறேன்.  இது நோய் முதல் நாடும் தந்திரம்  (PATHOLOGY).

அடிக்கடி மலம் கழிக்க விருப்பம்.  ஆனால் மலம் எளிதில் வெளிப்படாது.  அல்லது சிறு பகுதியே வெளிவரும்.  அது உடனடியாக  ஆறுதல் அளிக்கும் என்றாலும் மீண்டும் கழிப்பிடத்தை நாடும்படி இருக்கும்.
 இந் நிலை இன்னும் சில நிவாரணங்களாலும் குணமாகும்.  ஆனால் இந்த நோய்க்குறி தொடர்ந்து இருந்தால் அதற்கு மருந்து நக்ஸ்வாமிகா மட்டுமே.

சொக்கத் தங்கம் 
இந்தக் குறியீடு ஒரு தங்கக் கட்டி.  இந்த ஒரு குறி மட்டும் சரிவரப் பொருந்துமானால் அவனுடைய எல்லா நோய்களுமே ஒரு சிட்டிகை நக்ஸ்வபாமிகாவினால் குணமாகிவிடும் என்று மருத்துவர் நாஷ் எழுதுகிறார்.  இது நூற்றுக்கு நுறு உண்மை.

வலிப்பு நோய், சர்ம வியாதி, கால் கை விளங்காமற் போவது, பசியின்மை, தூக்கக் குறைவு, பற்பல வகை வலிகள் ஆகிய அனைத்தையும் இந்த ஒரே மருந்து குணப்படுத்தி விடுவதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
ஆகவே சீரான மலப்போக்கு இல்லாத நோயாளிகளை பற்பல கேள்விகள் கேட்டுத் துலைத்தெடுத்து இந்த நிலைக்கு அவர் ஏற்றவரா என்று ஆராய்ந்து பாருங்கள்.  காலம் செலவழிவதைக் கணக்கில் எடுக்க வேண்டாம்.
நக்ஸ்வாமிகா தான் ஏற்ற மருந்து என்ற முடிவை எய்திவிட்டால் அதன் தொடர் மருந்து கந்தகம்.  இதுவும் முப்பதாவது வீரியத்தில் இருந்தால் போதுமானது.  எனது மருத்துவ வாழ்வில் எத்தனையோ நோயாளிகளை இந்த இரு மருந்துகளின் உதவியாளல் மிக எளிதில் முழுமையாகக் குணமடையச் செய்திருக்கிறேன்.

சிறப்பியல்பு
விலங்கினங்களும்கூட அணுக அச்சமுறும் ஒரு தாவரக்கொட்டை இத்தனை அற்புதங்களை விளைவிக்கும் என்று கற்பனை செய்வதே கடினம்.  அழுகிச் சொட்டிய புண்ணை இது ஆறே நாட்களில் குணப்படுத்தியதைக் கண்டிருக்கிறேன்.  ஆனால் அவருக்குக் குதப் பகுதியில் நான் குறிப்பிட்ட குறைபாடு இருந்தது  அதைத் தெளிவாக அறிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட்டது உண்மையே.  அதை நான் பொருட்படுத்தவில்லை.  எவ்வளவோ நண்பர்களும், நிபுணர்களும் முயன்றும் அவனுடைய ஊன் கசியும் புண்ணைக் குணப்படுத்த இயலவில்லை என்பதை மறக்கக் கூடாது.
நக்ஸ்வாமிகா அதைச் செய்துவிட்டது.

பெண்களுக்கும்
இதுவரை குறிப்பிட்ட அவ்வளவு குறைபாடுகளும் பெண்களுக்கும் ஏற்படலாம்.  ஏற்படுவதுண்டு.  அவைகள் அனைத்தையும் நக்ஸ்வாமிகா நீக்கும்.

பெண்களுக்கென்றே சில இயல்பான தொந்தரவுகள் உண்டல்லவா?  அவற்றை மாதாந்தரக் கோளாறுகள் என்று கூறலாம் (CATAMANIA) அவற்றில் சில குறிப்பிட்ட வகைகளுக்கு நக்ஸ் பயன்படும்.

தூண்டல்
பொதுவாக நல்ல ஆரோக்கிய நிலையிலுள்ள மங்கையர் இருபத்து நான்கு நாட்களிலிருந்து இருபத்தெட்டு நாட்களுக்குள் இந்த நிலைமைக்கு ஆட்படுவதுண்டு.  வெளிப்பாட்டிற்கு முன்பு சிறிது சுகவீனம் ஏற்படலாம்.  இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.  பிள்ளைப் பையிலிருந்து உதிரம் வெளிப்படும்.  முதல் நாள் சற்றுக் கூடுதலாக இருக்கும்.  அடுத்த இரண்டு நாட்களில் இது படிப்படியாக குறைந்து பின்பு அறவே நின்றுவிடும்.  ஆரோக்கியமான நிலையில் உதிரம் சிவப்பாக இருக்கும்.  இந்த மூன்று நாட்களிலும் ஓரளவு ஓய்வான நிலையில் இருப்பது நன்மை பயக்கும்.  அதன் பொருட்டே அவர்களுக்கு விடுமுறை கொடுத்து விடுவதுண்டு.  அதைக் காரணமாகக் கொண்டு அவர்களைத் தீண்டாத கொடுமைக்குள்ளாக்குவோருமுண்டு.  இது மதியீனம்.
வீட்டு விலக்கு என்பது ஓர் இயற்கை நிகழ்ச்சி.  மலம், சிறுநீர்க் கழிப்பைப் போல இதையும் கருதி துய்மைப் படுத்திக் கொண்டால் போதும்.
நக்ஸ் தேவைப்படும் பெண் நோயாளியின் நாள் கெடு முந்தும்.  உதிரம் கருநிறமாக இருக்கும் கட்டிகளும் இருப்பதுண்டு.  இதைத் தவிர இது குறிப்பிட்ட நாளில் வெளிவராமல் கெடு தவறும் போக்கு பல நாட்களுக்கு நீடிப்பதும் சாத்தியம்.  பிள்ளைப் பை வெளியே துருத்திக் கொள்ளும்போல இருக்கும்.  அடிக்கடி மலம் கழிக்க இச்சை ஏற்படும்.  சிறுநீர் பிரியும்  புணர் புழை வழியாகத் துர்நாற்றமுள்ள திப்பிகள் பல வெளிப்படும்.

நாணமற
இதைக் குறித்துப் பேச பெண்கள் நாணமுறுவார்கள்.  எல்லா விவரங்களையும் கூறமாட்டார்கள். ஒரு நல்ல மருத்துவன் நோயாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும்.  அவர்களிடமிருந்து குறிகளை இதமாகக் கறக்க வேண்டும்.  விவரங்கள் சரியாக இருந்தால் மட்டும்தான் அதற்கேற்ற மருந்தைiத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது சாத்தியம்.
தொண்டைப் பகுதியிலும் குழலிலும் ஏற்படும் பல வகைத் தொல்லைகளுக்கும் நக்ஸ் நிவாரணம் தரும்.  உணவருந்தும்போதோ அல்லது உணவருந்திய உடனேயோ மூச்சுச்த தடைப்பட்டு இருமல் வந்து, ஆஸ்துமா என்ற நிலை வருமானால் அப்போது நக்ஸ்வாமிகா நிச்சயமாகப் பயனளிக்கும்.  இந்த நிலையில் தொடர்ந்து இருமல் ஏற்பட்டு உதிரம் கூட வெளிப்படுவதுண்டு.

உறக்கம்
முகுத் தண்டில் வலி ஏற்பட்டு நோயாளி புரண்டு படுக்க முடியாமல் எழுந்திருந்து மறுபுறம் படுத்தால் அப்போதும் நக்ஸ் நிவாரணம் தருவது உறுதி.  அதிகாலை மூன்று மணிக்கு மேல் உறக்கமே பிடிக்காது.
கைகால் முதலிய உறுப்புகளில் இது செயல்படும் விதமே அலாதி.  திடீரென்று கையோ, காலோ, விரல்களோ செயலிழந்து போகும்.  கையில் பளுவைச் சுமந்து கொண்டு போகும்போது அது நழுவி விடும்.  அதிகமான உடலுழைப்பிற்குப் பின்போ, மழையில் நனைந்ததனாலோ கை கால்கள் மரத்துப் போகும்.  சில பகுதிகள் மட்டும் மரக்கும்.  அசைக்கவே முடியாது.  வெகுநேரம் அமுக்கி, பிசைந்து உதிர ஓட்டத்தை உண்டு பண்ணிய பிறகுதான் அவை ஓரளவு இயங்கத் துவங்கும்.  முழுங்கால்களில் முறிவது போன்ற ஓர் ஓசை, வலியும் மிகுந்திருக்கும்.  நீட்டவோ, மடக்கவோ முடியாது.  எட்டிக்காய் இந்த வகைச் சுகவீனத்தையும் குணப்படுத்தி விடும்.

குறிகளின் சுருக்கம்
சுருக்கமாகக் கூறப்போனால், நோயாளி விரும்புவான்.  ஆனால் இயலாது தவிப்பான் என்ற வேலிக்குள் இந்த மருந்தின் குணங்களை அடக்கிவிடலாம்.  எடுத்துக்காட்டாக மலம் கழிக்க விருப்பம்.  ஆனால் இயலாது  அப்படிக் கழித்தாலும் மீண்டும் அந்தச் செய்கையில் விருப்பம் ஏற்படும்.
 அதே போல உமட்டும்.  ஆனால் எதுவும் வெளிவராது.  சிறுநீர் கழிக்க இச்சை ஆனால் நெடுநேரம் முயற்சி செய்தாலும் நீர் பிரியாது.  அப்படிப் பிரிந்தாலும் மீண்டும் உந்துதல்.  இருமி, இருமி, சளி வெளிப்படும் நிலை.   ஆனால் அது அண்ணத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்.  மொத்தத்தில் இருக்கவும் விடாமல்,  மரிக்கவும் விடாமல் விடாத தொந்தரவைத் தரும் நோய்களை இந்த எட்டிக்காய் படிப்படியாக முழுமையாகக் குணப்படுத்தி விடும்.  இது எல்லா மருத்துவர்களின் ஒருமுகமான கருத்து.

சற்றுக் குறிகளைத் தொகுத்துப் பார்ப்போம்.
 செரிமானக் கோளாறுகள், 
சுவாசக் குழலின் அடைப்பு, 
சரும நோய், 
வலிப்பு, 
மயக்கம், 
குளிருடன் கூடிய காய்ச்சல், 
சிறு நீர்க் கோளாறுகள், 
இவையனைத்தையும் சிறப்பாகக் குணமாக்கும் இன்னொரு மருந்தைக் காண்பது கடினம்.  ஒரே ஒரு நிபந்தனை.  விருப்பம் இருக்கும்.  ஆனால் இயலாது என்ற வட்டத்துக்குள் இது அடங்க வேண்டும்.  அதனால் தான் மருத்துவர் நாஷ் இதை மருந்துகளின் தலைநாயகமாக அமைத்தார் என்று நான் கருதுகிறேன்.

என்னைத் பொறுத்தவரையில் இது மிகவும் ராசியான மருந்து.

ஒட்டுமொத்தமாக
தொட்டாற்சுருங்கி என்ற வகை மனிதருக்கு, ஆணோ, பெண்ணோ இருபாலருக்கும் இந்த மருந்து பயன்படும்.  மிகச் சிறிய சுழிப்பிலிருந்து, பெரும் வலிப்பு வரை எல்லா வகை கோளாறுகளுக்கும் இது மருந்து.  இன்னொரு முக்கியமான குறி தான் இறந்துவிட்டால் விடுதலை என்று எண்ணுவான்.  ஆனால் சாவைக் கண்டு பயப்படுவான்.  இது ஒரு வலதுபுற நிவாரணி என்றாலும் இடதுபுறமும் வேலை செய்யும்.  வெப்பம் மிக்க காய்ச்சல் நிலையிலும் குளிர், நடுக்கம் இருக்கும்.  இந்தக் குறி மிகவும் முக்கியம்.

பலவகை மருந்துகளை உபயோகித்து அதன் மூலம் பலன் காணாத போது தான் மக்கள் ஹோமியோபதி மருந்துகளிடம் வருவார்கள்.  அவர் முன்பு உட்கொண்டிருக்கும் மருந்துகளின் விளைவுகளை நக்ஸ்வாமிகா போக்கிவிடும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது.  விஞ்ஞானம் முன்னறியிருக்கும் இந்த நாட்களில் எந்த மருந்தை நோயாளி அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறாரோ அதையே வீரியப்படுத்தித் தருகிறார்கள்.
ஆனால் இப்படிக் குருட்டாம்போக்கில் நக்ஸ்வாமிகாவைத் தராதே என்று நாஷ் எச்சரிக்கிறார்.  பல்ஸட்டிலாவை 200-வது வீரியத்தில் கொடுத்துவிட்டு சிகிச்சையைத் துவங்கு என்று பரிவுரை செய்கிறார்.  டி.எஸ்.ஐயர்.  (இவர் உயர் வீரியத்திற்கு எதிரி என்பது நினைவில் இருக்க வேண்டும்).  பல சமயங்களில் இந்த முறை எனக்குக் கைகொடுத்திருக்கிறது.  ஐயரின் வாசகம் பல வகை அனுபவங்களின் தொகுப்பு.  அதை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

ஒரு முதிய மருத்துவர் எனக்கு வழி ஒன்று காட்டினார்.  அவர் ஓர் ஆயுர்வேத மருத்துவர்.  சித்த வைத்தியமும் அவர் அறிவார்.  அவர் பரிந்துரை செய்தது அருகம்புல்.  அவர் கூறினார்.  முழுமுதற் கடவுளாக விநாயகரை இந்த சமுதாயம் வழிபடுகிறது.  பிள்ளையார் சுழி போடாமல் எந்த நல்ல காரியத்தையும் துவங்குவது கிடையாது.  அந்தத் தெய்வத்திற்கு ஏற்றதென்று அருகம்புல்லை விதித்திருக்கிறார்கள்.  நமது முன்னோர்கள் உலக உயிர்களுக்கெல்லாம் நலம் வேண்டுபவர்கள்.  ஆகவே அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என்பதை மறுக்க முடியாது.
அருகம்புல் (cynadon dactylon) ஹோமியோபதி மருத்துவத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  ஆகவே தொடக்கத்தில் இதை முறிவு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்பது எனது பணிவுரை.  எனக்கு இது பயன் அளித்திருக்கிறது.

இந்த அரிய அருகம்புல்லைப் பற்றி ஆராயத் தனி அத்தியாயம் வேண்டும்.





நினைவில் நிறுத்துக (1)


1. பெயர் - நக்ஸ்வாமிகா (எட்டி
2. இனம் - தாவரம்
3. நோய் முதல் - இயற்கைக்குப் பொருந்தாத செய்கை, கண்விழிப்பு
4. நோய் தாக்கும் பருவம் - வெப்பம்,  உணவுக்குப் பின்
5. நோய் தாக்கும் நேரம் - காலை
6. நோய் சனமாகும் சூழல் - ஈரக்காற்று
7. மருந்து பணிபுரியும் காலம் - 1 முதல் 7 நாட்கள்
8 தொடர் மருந்துகள் - கந்தகம், ஸெப்பியா
9. எதிர் மருந்துகள் - நைட்ரிக் அமிலம், ஜிங்க்
10. பொதுக் குறிகள் - குளிர் நடுக்கம், கை, கால்கள் செயலிழந்து போகும்
11. சிறப்புக் குறிகள் - திரும்பத் திரும்ப மலம் இளகும்.  விருப்பம் இருக்கும்.  ஆனால் இயலாது.
12. வீரியம் - 6, 12, 30, 200
13. குறிப்பு - வலது புற நிவாரணி.  மருந்தை மாலையில் தருவது நலம்.


*****

இன்னும் சில மருந்துகள்  நூலில்
மேஜர் தி.சா.இராஜூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக