(RHUS TOXICODENDRON)
major t.s.raju
rhus tox |
மும்மூன்று இலைகளுடைய படர் செடி இனம். நடுஇலை சுருண்ட தண்டைப் போல அமைந்திருக்கும். ஈரப்பசையுள்ள மண்ணில் பசுமையாகப் படரும் நஞ்சுக் கொடி. இலைகள் உதிர்வதில்லை. தென்னாப்பிரிக்காவில் மிகுதியாகப் பயிராகும் இனம்.
பக்குவ நிலை
மேகமூட்டம் போட்டிருக்கும் நாட்களில் சூரியன் மறைந்தபிறகு பறிக்கப்படும். மொட்டுக்கள் வருமுன்பு சேகரிக்கப்பட்டு நிழலில் பாதுகாப்பது முறை.
இலைகளைக் கொத்தி இடித்துப் பிழிந்து இரு மடங்கு உண் சாராயத்துடன் கலந்து இறுக மூடிப் புட்டிகளில் அடைத்துக் குளிர்ந்த இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புட்டியைக் குலுக்க வேண்டியது மிக மிக அவசியம். எட்டு நாட்களுக்குப் பின்பு வடிகட்டி உபயோகிக்கலாம். கரும் பழுப்பு நிறம், துவர்ப்புச் சுவை, இந்தத் திரவம் உடலில் பட்ட இடம் புண்ணாகும். நிரூபணம்
மேதை ஹானிமனாலேயே நிரூபிக்கப்பட்ட மருந்து இது. பின்னாளில் அமெரிக்க மருத்துவர்களால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது-படுகிறது.
இதன் பயனைச் சுருக்கமாக நான்கு வரிகளில் எழுதலாம். நாற்பது பக்கங்களிலும் விவரிக்கலாம்.
உடலின் மேற்பரப்பில் ஏற்படும் சரும நோய்களைக் குணப்படுத்தும், பூந்தோல், தசை நார்ப்பகுதியில் இது மிகச் சிறப்பாகப் பணிபுரிகிறது. வெப்பம் குறைந்த காய்ச்சல் வகைகள் கட்டுமானத்திற்குள் அடங்கும். சுளுக்கு, கனமான பொருளைத் தூக்கியதன் விளைவு, மழையில் நனைந்ததால் ஏற்படும் கோளாறுகள் ஆகியவற்றிற்கும் இது மருந்து. ஒரு நோயாளிக்கு ரஸ்டாக்ஸ் கொடுத்துவிட்டால், அன்று அவனைத் `தலை முழுகாதே’ என்று என் ஆசான் எச்சரிப்பார்.
அமைதியில்லாத நிவாரணிகள்
ஒரு மருத்துவன் மிக அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துகளில் இது தலையானது. ரஸ்டாக்ஸ், அகோனைட், ஆர்சனிகம் ஆல்பம் ஆகிய மூன்றையும் `அமைதியில்லாத நிவாரணிகள்’ என்று குறிப்பிடுவார்கள்.
நோயாளி புரண்டு புரண்டு படுத்தால் இந்த மூன்று மருந்துகள் பற்றி எண்ண வேண்டும். புரண்டு படுப்பதனால் நோய் சமனமாவது ரஸ்டாக்ஸின் சிறப்புக் குறி. மற்ற இரு மருந்துகளிலும் இந்தத் தன்மை இராது. நரம்பியக்கக் கோளாறின் விளைவினால் அவன் உடலை அசைக்க முற்படுகிறான். உடலில் எத்தகைய நோயுமில்லாமலே அவன் உருளுவான்.
ஆர்சனிகம் தேவைப்படும் நோயாளி மிகவும் சோர்வடைந்து கிழிந்த நாரைப்போல் கிடப்பான். இடம் மாற, நிலை மாறத் துடிப்பான். படுக்கையில் `கிடை’ கொள்ளாது என்ற நிலை. அகோனைட் நோயாளி மன உளைச்சலினால் அவதியுறுவான். தேவையற்ற பரபரப்பு காணப்படும். இந்த நுண்ணிய வேறுபாடுகளை ஒரு மருத்துவன் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அசைவு
ரஸ் நோயாளியின் வேதனைகள் எல்லாம் அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தால் அதிகரிக்கும். அல்லது அசையத் துவங்கும்போது அதிகரிக்கும். அவன் எழுந்து உடலை இயக்கத் துவங்கிவிட்டால் மிகுந்த நிவாரணம் கிட்டும். நடை மிகுதியினால் ஆயாசம் ஏற்படும்வரை அவன் நடந்துகொண்டே இருக்க ஆசைப்படுவான். நடை மிகுதியினால் ஆயாசம் ஏற்படும்வரை. ஏனெனில் அங்க அசைவு அவனுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த வரிகளை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும்.
டைபாய்டு
`பித்தவாதக் காய்ச்சல் என்று ஒரு வகை சுகவீனத்தைப் பெயரிட்டு அழைக்கிறார்கள். அதற்கு அகோனைட் பயன்படாது. ஆர்ஸனிகம் அல்லது ரஸ்டாக்ஸ் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வேளையில் மேற்காணும் குறிகளைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்னொரு முக்கியமான அடையாளம் நாக்கு. அதன் அடிப்பாகம் பிளந்தும், சிதைந் ஓரங்களுடனும், நிறம் படர்ந்தும் காணப்படும். ஆனால் நுனி முக்கோண வடிவில் கூர்மையாக இருக்கும். இருதய நோயாளி என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு நண்பரை இந்த ஒரே குறியின் துணை கொண்டு சீராக்கிய அனுபவம் எனக்குண்டு.
இருதய நோய்க்கும் ரஸ்டாக்ஸ் மருந்தாகுமா? என்று கேட்டுப் புருவங்களை உயர்த்த வேண்டாம். `குறிகள் ஒத்திருந்தால்’ என்பதுதான் அதற்கேற்ற விடை (when symptoms agree).
மூவகை நோய்
பொதுவாக மூன்று வகை நோயாளிகளை ஒரு மருத்துவர் அணுகப் பயப்படுவார். வெண் தோல் படர் வகை. இருதய நோய் வகை, அடுத்து மன நோயாளி. ஏனெனில் இவற்றில் பலன் காண்பதற்கு மிக அதிகமான உழைப்புத் தேவைப்படுகிறது அதிக நாள் தேவைப்படுகின்றது. பயன் தரும் விழுக்காடு மிகவும் குறைவு. அளவுக்கு அதிகமான சலிப்புத் தரும் வகையில் ஒரு மருத்துவன் காத்திருக்க நேரிடும். அவனுடைய மன உறுதியும் நோயாளியின் ஒத்துழைப்பும்தாம் நல்ல விளைவைக் கொடுக்கும்.
ஹெரிங்கின் விதி
அறுபது வயதான ஒரு மன நோயாளியை என்னிடம் அழைத்து வந்தார்கள். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணம் ஆகுமுன்பு வலிப்பு நோய் இருந்து ஆங்கில மருந்துகளினால் குணமடைந்திருந்தார். உயர்ந்த அரசுப் பணி வகித்து வந்தார். நடைமுறை தாறுமாறாயிற்று. பதவி விலகினார். பல வகை மருத்துவங்கள், உள்ளூர் மாரியம்மன் கோயிலிலிருந்து சோட்டானிக்கரை வரையில் ஆலயங்கள், சாதுக்கள், மருந்தூசி, இறுதியாக என்னையும் பார்த்துவிடுவோமே என்று வந்தார்கள் (எல்லா `பதி’களும் வேங்கடாசல`பதி’ உட்பட எல்லோரையும் அணுகி, அவை பயன்படாதபோது தான் நம்மிடம் வருவார்கள்-ஆசான்).
மிகுந்த சிரத்தையுடன், பொறுமையுடன் அவரை அணுகினேன். அவரது துணைவியார் பெரிதும் ஒத்துழைத்தார். `ஒரு சமயத்தில் ஒரே மருந்து-குறைந்த அளவு’ என்ற என் கொள்கையை மீறவில்லை. அவ்வப்போது குறிகள் மாறும்போது மருந்தை மாற்றினேன். இருநூறாவது வீரியத்திற்கு அதிகமாகப் போகவேயில்லை. ஊடு மருந்தாக நோய்க் கழிவுப் பொருள்களைக் கொடுத்தேன் ( nosode).
ஒரு நாள் அவருடைய மனைவி தலைவிரி கோலமாக வந்து அழுதார். சிகிச்சை துவங்கி இருபத்தோரு மாதங்கள் ஆகியிருந்தன. `அந்தப் பழைய நோய் மீண்டும் வந்து விட்டது’.
``எந்த நோய்?’’
`வலிப்புத்தான்’ படுத்துக் கொண்டிருந்தவர் `ஓ’ என்று ஓலமிட்டுப் பெரிதாக அழுதார். கையும் காலும் கோணக் கோண இழுத்தன. வாய் பேச இயலவில்லை. அந்த நிலையிலேயே சிறுநீர் பிரிந்தது. ஒரே நாற்றம்.
என் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பழைய நோய்க் குறிகள் திரும்புவதற்காக இவ்வளவு காலம் போராடியிருக்கிறேன். அந்த அம்மையாரைச் சமாதானப்படுத்தினேன். குறிக்கேற்ற மருந்துகளைக் கொடுத்தனுப்பினேன்.
`மீண்டும் இந்த வலிப்பு வராதே?’ அவர் கேட்டார்.
`வரக்கூடாது. இப்போது வந்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்’.
திகைப்படைந்த நிலையிலேயே அவர் திரும்பிச் சென்றார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்து `ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ந்திருக்கிறது’ என்று கூறினார்.
`கவலைப்படாதீர்கள்’ என் வழக்கமான வாசகத்தைக் கூறினேன். `இறைவன் பரம கருணையுள்ளவன்’.
இறைவனின் அருளும், மருத்துவ அறிவும் துணை நின்றன. நோயாளி படிப்படியாகச் சீரானார். ஓராண்டில் இருமுறை பழைய அடையாளங்கள், உறுமல், பிடிவாதம் எல்லாம் தலைதூக்கின. என்றாலும் அந்த ஆவேச நிலை, அந்தக் பரிகசிக்கத் தக்க தோற்றம் இல்லை. படிப்பதும், எழுதுவதும், வீட்டு வேலைகளைச் சிறிது சிரத்தையுடன் கவனிப்பதும் துவங்கின.
இப்படி எத்தனை நோயாளிகளைத் தனி மனிதன் கவனிக்க முடியும்? இதன் பொருட்டு அவன் மேற்கொண்டுள்ள உழைப்பு எவ்வளவு பேருக்குத் தெரியும்?
என்றாலும் இறுதி வெற்றி கிடைத்ததே !
இங்கே இதை நான் சற்று விரிவாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் மருத்துவன் `கெண்டை’ நினைவுபடுத்தவே. கவனி, பெறு, தொடர்ந்து பணி புரி (Watch, Wait, Proceed என்று அவர் பரிவுரை செய்கிறார்.
நம்மால் முடிகிறதா? முடிய வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
பொதுவாக இந்த மருந்தைத் `தலையில்லாத நிவாரணி’ என்று கூறுவது வழக்கம். ( headless remedy) அதாவது கழுத்துக்கு மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இது நிவாரணம் தராது என்று ஒரு கருத்து. என் ஆசான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து எனக்குக் கொடுத்திருக்கிறார்.
அமைதியற்ற நிவாரணிகளில் இது ஒன்று. படுக்கையிலேயே கிடக்க முடியாமல் எழுந்து நடப்பான். மிக நெருங்கியவர்களிடமே சந்தேகம் கொள்வான். அவர்களில் எவராவது தன் உயிருக்கு ஊறு விளைவிப்பார்களோ என்ற ஐயப்பாடு. அவனால் தெளிவாகவே சிந்திக்க இயலாது.
உச்சந்தலையில் நோவு. தலைப் பகுதியில் தோல் பரப்புக்கடியில் மசைக்கசிவு ஏற்படுத்தும் சில சுரப்பிகள் உள்ளன. அவை ஒழுங்காகச் செயல்படாமல் போனால் தலைப் பகுதியில் எரிச்சலும், அரிப்பும் விளையும். சிறு சிறு கட்டிகள் தோன்றும். நீர் வடியும். குழந்தைகைள் தூக்கமின்றித் தவிக்கும். அந்த நிலையில் இது மிகச் சிறந்த நிவாரணி (200-வது வீரியம்). தலையின் முன் பகுதியில் நோவு தோன்றும். அடுத்து அது பின் தலைக்கும் பரவும் விசித்திரமான நிலை.
கண் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்து.
கண் சிவந்து காணப்படும். இமைகள் கனக்கும். அவற்றை அசைக்கவே இயலாது. ஓரங்களில் மஞ்சள் நிறமான புளிச்சை இது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். விழிகளைப் பக்கவாட்டில் கொண்டு வரவே இயலாது. விழிகளுக்குப் பின்னால் இருக்கும் நரம்புத் தொகுதி இயங்காது (Retro Bulbar Neuritis) சூடான கண்ணீர்ப் பெருக்கு.
சகட்டுமேனிக்குக் கழுவும் திரவங்களையும், மெழுகுகளையும் உபயோகிக்க வேண்டாம். ஏணி வரிசை முறையில் (6, 30,. 200) ரஸ்டாக்ஸ் கொடுத்தால் போதும்.
செவிகள்
காதினுள் ஏதோ வெளிப் பொருள் இருப்பது போன்ற தோற்றம். காது மடல்கள் தடித்துப் போகும். சென்னிறத்தில் சீழ் கொட்டும். அப்போது இரண்டுருண்டை ரஸ்டாக்ஸ் உதவும்.
மூக்கு
தும்மல் மிகுதியினால் மூக்கு நுனியே சிவந்து போகும். சிறப்பாக மழையில் நனைந்த பின்னால் மூக்கே வீங்கிப் போகும். குனிந்தால் உதிரப் பெருக்கு. அத்தகைய நிலையும் இந்த மருந்து சீராக்கும்.
தாடை
தாவாங்கட்டையின் எலும்புகளில் இது விளைவிக்கும் அற்புதம் வியக்கத்தக்கது. அவை பூட்டிலிருந்தே கழன்று விடும். கீழ்த்தாடை தனியாகத் தொங்கும். முகமே வீங்கிப் போகும். உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கி நோவு தரும். ஈறுகளின் நிலையும் அதுவே. உதடுகள் இணையும் பகுதியில் புண்கள் ஏற்படும்.
எதையும் விழுங்க முடியாத நிலை. சிறப்பாக இடது பகுதியில் நோவு மிகுதியாக இருக்கும்.
இப்போது சொல்லுங்கள், தலைப் பகுதிக்கு இது எவ்வளவு முக்கியமான மருந்து?
தாகம்
தொண்டையில் நோவு. எதையும் விழுங்க இயலாத நிலை. இது கண்கூடு. ஆனால் அதே சமயத்தைல் நாவை வரட்டும் தாகம் ஏற்படும். தொண்டையும், அன்னக் குழலும் காய்ந்து கிடக்கும். குளிர்ந்த நீரில் அதிக விருப்பம் இருக்கும். இந்த நிலை இரவில் மிகும். என்றாலும் சில்லிட்ட நீரைக் குடல் ஏற்றுக் கொள்ளாது. தொடர்ந்து இருமல் ஏற்படும். குடித்த நீர் எல்லாம் வெளியே வந்து கொட்டும்.
பசி
ஒரேயடியாகப் பசிக்கும். ஆனால் உண்பது செரிமானமாகாது. இனிப்பு வகைகள், நண்டு என்று அவனுடைய விருப்பமே விசித்திரமாக இருக்கும். இறைச்சி செரிமானமாகாது. உண்டவுடனேயே வெளிப்பட்டுவிடும். நாவு ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்படும். ஆனால் வயிறு அதை ஏற்றுக் கொள்ளாது. கல்லீரல் பகுதி நொந்து வீங்கியிருக்கும். அதன் விளைவாக வலது பக்கமே படுக்க இயலாது. குடல் வீக்கம், குடல் உறையின் வீக்கம், குடலின் இறுதிப் பகுதியின் வீக்கம் அனைத்தையும் ரஸ்டாக்ஸ் ஒரே போக்கில் குணப்படுத்தி விடும்.
இந்த நிலையை முதிர விட்டுவிட்டால் மலம் தானாக வெளிப்படும். குதப் பகுதியே ஒரேயடியாக வீங்கிப் போகும். உதிரமும் மலத்துடன் வெளியாகும். பொறுக்க இயலாத நோவு. அதிகாலையில் நோயாளியை உசுப்பிவிடும். வெளிப்படும் உதிரம் பல சமயங்களில் கறுப்பாகவும் இருக்கும். மூலக் கட்டிகள் மலம் கழித்த பின்னர் பிதுங்கும் நிலையும் ஏற்படும். இந்த வேளையிலும் ரஸ்டாக்ஸ் மிகச் சிறப்பாக பணிபுரியும்.
சிறுநீர்ப் பாதை
ரஸ்டாக்ஸின் பணி சிறுநீர்ப் பாதையில் மிகவும் பாராட்டுக்குரியது. அடிக்கடி சிறுநீர் கழிக்க விருப்பம் ஏற்படும். ஆனால் அது வெளிப்படாது. முதுகுப் பகுதியில் கிழிப்பது போன்ற நோவு. சொட்டு மூத்திரம். கூடவே உதிரமும் கொட்டும். உறுப்பில் கடுப்பு. நுனிப் பகுதியில் சொல்லொணாத நோவு. நீர்க்காய்கள் மரத்துப் போகும். தன்னைஅறியாமல் சிறுநீர் வெளிப்பட்டுவிடும். குளிர் காலத்தில் இந்தத் தொந்தரவு மிகும்.
எத்தனை கோடி இன்னல்கள்? என்றாலும் இவை அனைத்தையும் ரஸ்டாக்ஸ் குணப்படுத்தி விடுமே?.
பிறப்புறுப்புக்கள்
ஆண், பெண் உறுப்புக்கள் வீங்கித் தடித்தப் போகும். கல்லைப் போல் கெட்டியாகிவிடும். விதையிடுக்கிலும், தொடையிலும், சிறு சிறு கட்டிகள், கொப்புளங்கள், நீர் சுரந்து அரிப்பும் எரிச்சலும் உண்டாகி, நோயாளி துயரத்தின் எல்லைக்கோட்டில் நிற்பான். வெட்கத்தால் குறுகிப் போவான். இரக்கச் சிந்தையுடன் அவனை அணுகி பரிவுடன் நடத்த வேண்டும். கனிவுடன் பேசுதல் மிக அவசியம். மேல்பூச்சு ஏதும் தேவையில்லை. 200-வது வீரியத்தில் இரண்டுருண்டை ரஸ்டாக்ஸ் போதும். பொறுமை மிக அவசியம்.
சில பெண்களின் பிறப்புறுப்புப் பகுதிகள் மிகவும் வலுக்குறைந்திருக்கும். பளுவான சாமான்களைத் தூக்கினாலோ, தொடர்ந்த கடின உழைப்பினாலோ, பிறப்புறுப்பு பிதுங்கி விடும். உதிரம் பெருகும். கருவுற்றிருக்கும் பெண்கள் குறைப்பிரசவத்திற்கு ஆளாவதும் சாத்தியம். குளிர் மிகுதியினால் இந்த நிலை ஏற்படக்கூடும். இரண்டு கால்களும் வீங்கிப் போகும். தொட்டால் குழி விழும். பொறுக்க இயலாத நோவு. இந்த நிலை பேறுகாலத்திற்குப் பிறகும் ஏற்படக் கூடும். (Phleg Masia Alba Dolens) ப்ளக்மேசியா ஆர்பா டோலன்ஸ் என்ற விளங்காத பெயரைக் கூறி பயமுறுத்துவார்.
மார்புப் பகுதி வீங்கி விடும். குழந்தைக்குப் பாலே இராது. மதலையின் துயரம் கண்டு தாயார் கண்ணீர் வடிப்பாள்.
பதறாதே
ஒரு நல்ல மருத்துவன் இத்தகைய வேளைகளில் பதறாமல் செயல்பட வேண்டும். இத்தகைய சுகவீனத்திற்குக்கூட ரஸ்டாக்ஸ் மருந்தாகுமா என்று ஐயமுறுதல் கூடாது. வள்ளுவரை மறக்கவே கூடாது. `நோய் நாடி, நோய் முதல் நாடி, அதன் வாய் வாடி’ என்பது அவருடைய அருள் வாக்கு. நோயாளியின் உடல் நிலை மருத்துவனையும் கலங்கடிக்கும். ஒரு முடிவுக்கும் வர இயலாவிட்டால் இரு சர்க்கரை உருண்டைகளைக் கொடுத்துவிட்டுப் புத்தகத்தைப் புரட்டுங்கள். உழைப்பதற்கு அஞ்ச வேண்டாம். முயற்சி மெய்வருத்தக் கூலி தரும். கூலிதானே என்று குறைபடக் கூடாது. அது இறைவனின் திருவருள் என்று எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டும். நோய் முதல் நாடும் சாத்திரம்தான் பாத்தாலஜி (Pathology ).
பழைய நினைவு
பல ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி. வங்கியில் பணம் பெறுவதற்காக அடையாளத் தகட்டுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரில் கௌண்டரில் ஓர் அலுவலர், தொகை பெறுக் கொண்டு ஏடுகளில் பதிவு செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். செய்வதற்கு வேறு எந்தப் பணியும் இல்லாததால்.
அவர் நிமிடத்திற்கு ஒருமுறை மேலுதட்டையும், தாடையையும் இடது பக்கம் அசைத்தார். மூக்கை உறிஞ்சினார். என் பக்கத்தில் மூன்று வயதுப் பெண் குழந்தை. அதனருகில் அதன் தாயாரும் அமர்ந்திருந்தார். என்னைப் போலவ அந்தக் குழந்தையும் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான கருமுடி. ரோஜாப்பூ கன்னங்கள். சுண்டினால் உதிரம் தெறிக்கும் என்று சொல்வார்களே அத்தகைய உடல்வாகு. ஒரு பூக்குட்டி.
சற்று நேரத்திற்குப் பிறகு தற்செயலாக அந்தக் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தேன் அதுவும் எதிரில் சாளரத்தின் பின்னால் அமர்ந்திருந்த கணக்கரைப் போலவே மேலுதட்டையும் தாடையையும் கோணிக் கொண்டது. பார்ப்பவர்கள் எதிரிலுள்ளவரைப் பழித்துக் காட்டுவதைப் போலவே எண்ணுவார்கள். சிறிது நேரம் கழித்து அந்தத் தாயாரின் முறை வந்தது. அவர் சாளரத்தின் அருகில் போய் நின்றார். கூடவே குழந்தையும் சென்றது.
அந்தத் தாயார் கொடுத்த காகிதத்தில் ஏதோ தவறுகள் இருந்தன. அதன் பொருட்டு அந்த அலுவலர் வினாக்களை எழுப்பினார். தாயார் விடையிறுத்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அவர் அந்தக் குழந்தையை நோக்கினார். அதுவும் தொடர்ந்து முகத்தைக் கோணிக் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது. அலுவலரை நாணம் உந்தியிருக்க வேண்டும். அவர் இடதுகையால் வாய்ப் பக்கத்தை மறைத்துக் கொண்டு தமது பணியைத் தொடர்ந்தார்.
இடையில் தாயார் தன் குழந்தைiயைக் கவனித்துவிட்டு அதைத் தண்டிக்க முயன்றார். கை ஓங்கிற்று. நான் இடையிட்டுத் தடுத்தேன். குழந்தையை அதன் இருக்கைக்கு அழைத்துச் சென்று நல்லதனமாகப் பேசினேன். ``அந்த அங்கிள் மட்டும் ஏன் என்னைப் பழித்துக் காட்டுகிகறார்?’’ என்று கேட்டது. நான் அதற்குப் போக்குக் காட்டிச் செய்கையைத் திசை திருப்பினேன். தாயாரின் பணி முடிந்ததும் இருவரும் வெளியேறினார்கள்.
என்னுடைய முறை வந்தது. வேலையும் விரைவில் முடிந்தது. அலுவலருடன் தனியே பேச விரும்பினேன். அவருக்கும் நான் யார் என்பதும் புரிந்தது.
``இப்படி ஒரு கோளாறு எத்தனை நாளாக இருக்கிறது?’’
`கல்லூரியில் படிக்கும்போதே வந்துவிட்டது’ இது விடை.
`முதன் முதலில் எவ்வாறு துவங்கிற்று?’
`ஒரு தடவை மகிழ்வுப் பயணத்திற்குச் சென்றிருந்தாம். நெடு நேரம் தோட்டத்தில் அலைந்த பிறகு அருகிலிருந்த வாவியில் குளித்தோம். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அந்த வெயிலுக்கு மிகவும் இதமான அனுபவம். கரை ஏறியதுமே தும்மினேன். அன்றிரவு சளி பிடித்துக் கொண்டது. மறு நாளிலிருந்து காய்ச்சல். எளிதில் குறையவே இல்லை. பல நாட்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை நடந்தது.
முகத்தின் தாடைப் பகுயில் ஒரு நமநமப்பு. மரத்துப் போகிறது. உதடுகளை அசைத்தால் சமனம். ஆனால் அது சில கணங்களுக்கு மட்டுமே. நானும் எவ்வளவோ மருத்துவர்களைச் சந்தித்துவிட்டேன். பயன் ஏதுமில்லை.
`நீங்கள் மூன்று நாட்களுக்குக் காபி இல்லாமல் இருக்க முடியுமா?’
`மூன்று நாள் என்ன? மூன்று மாதங்கள் வேண்டுமானாலும் இருக்கிறேன். எப்படியாவது இந்தத் தொல்லையிலிருந்து விடுபட்டால் போதும்’.
என்ன மருந்து தர வேண்டுமென்று தெரியும். என்றாலும் உறுதி செய்து கொள்ளும் பொருட்டுப் புத்தகங்களைப் புரட்டுகிறேன்.
(அ) குளிர்ந்த நீரில் குளித்ததன் பின் விளைவு
(ஆ) முகத்தின் இடதுபுறம் நமநமப்பு. மரத்துப் போதல்.
(இ) தசைகளை அசைத்தால் சமனம்
அன்பர் கொடுத்த ஒளிக்கதிர்ப் படம் நிபுணர்களின் குறிப்புகள் ஆகியவற்றைப் பார்க்கிறேன்.
முகத்தின் நரம்பு மண்டலத்தில் கோளாறு. காரணம் விளங்கவில்லை.
காரணம்தான் நோயாளி கூறுகிறாரே. இது அந்த நிபுணர்களுக்கு விளங்காது. நோய் முதல் நாடுவது அவர்களுக்குப் புதியதானதொன்று.
நான் அவருக்கு இரு நூறாவது வீரியத்தில் ரஸ்டாக்ஸ் இரு மாத்திரைகளைக் கொடுத்தேன். தொடர்ந்து ப்ரையோனியா ஆறு.
ஆதாரம் - க்ளார்க் பக்கம் 296 (Clinical Relationship of Remedies).
ரஸ்டாக்ஸை உயர் வீரியத்திலும் ப்ரையோனியா என்ற தொடர் மருந்தைக் குறைந்த வீரியத்திலும் கொடுத்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்று பரிவுரை செய்தவர் என் ஆசான்.
நோயாளி படிப்படியாகக் குணம் அடைந்தார். இரு வாரங்களுக்குப் பிறகு உதடுகளைக் கோணிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவருக்குத் தோன்றவே இல்லை.
தற்போது அந்த வங்கிக்கு நான் எப்போதுபோனாலும் வி.ஐ.பி.யாக நடத்தப்படுகிறேன்.
உடற்பகுதியில் அசையக்கூடிய எந்த இடத்திலும் மூட்டுக்களில் வீக்கம், நோவு இவை விரைவாகப் பரவும். கழுத்துப் பகுதி, இடுப்பு, தொடை, முழங்கால் இவைகளில் விவரிக்க இயலாத கெட்டிப்பாடு-பிடிப்பு. ஆனால் அசைத்தால் சிறிது நோவு குறையும். நரம்பு வழி இயக்கக் கோளாறுகளில் - ஸியாட்டிகா அதற்கு இது ஈடு இணையற்ற மருந்து. குளிர் காற்றைத் தாங்கவே இயலாது. மேல்பரப்பிலேயே நோவை உண்டாக்கும்.
மழையும், இடியும்.
இந்த மருந்து இனத்திலேயே ரஸ் ரேடிகன்ஸ் என்றொரு நிவாரணி உண்டு. நான் ஹிமாசல் பிரதேசத்தில் நெடுநாள் வசித்திருக்கிறேன். இடி, மின்னலுடன் கூடிய புயல் வீசும் சூழ்நிலை. புயல் வந்ததுமே பலர் நோயுறுவார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு இந்த மருந்து பயன்படுவதைக் கண்டிருக்கிறேன். இந்த சுகவீனம் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருவது இன்னொரு முக்கியமான குறி.
நிபுணர் கிப்சன்
அண்மையக் காலத்து நிபுணர்களில் நான் பெரிதும் போற்றுவது மருத்துவர் கிப்சன் ஆவார். ஐயம், திரிபுக்கு இடமின்றித் தமது கருத்துக்களை அவர் தெளிவாக வெளியிடுவார். ரஸ்டாக்ஸ் என்ற மருந்தைக் குறித்து அவருடைய எண்ணங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
தொடுகை
காஞ்சிரங்காய் இனத்தில் நம்மூரில் ஒரு செடி வகை உண்டு அது உடலின் மேல் பட்ட உடனேயே விளைவிக்கும் அரிப்பையும், எரிச்சலையும் அனுபவித்தவர்கள் மட்டுமே விவரிக்க முடியும். ஆனால் இந்த ரஸ்டாக்ஸின் தாய்ச் செடி அப்படி அன்று. அது உடலில் பட்டு பன்னிரண்டு மணி முதல் இரண்டு நாட்கள் வரை எப்போது வேண்டுமானாலும் பட்ட இடத்தில் அரிப்பையும், எரிச்சலையும், புண்ககைளயும் தோற்றுவிக்கும். என்ன காரணத்தினால் இவை ஏற்பட்டன என்றே அந்த மனிதருக்குத் தெரியாது. அத்தகைய தாமதமான விளைவுடைய நஞ்சு இது (Slow Poison).
உள்ளம்
இந்த நோயாளி மன உளைச்சலால் அவதியுறுவான். எதிர்காலத்தைப் பற்றிய கவலை, சந்தேகம், குழப்பம் என்று மாறி மாறி வரும். உள்ளத்தை ஒருமுகப்படுத்தவே அவனால் இயலாது.
நோய் முதல்
குளிரும் மழையும் தாக்கினால் நோய் துவங்கும். இது ஒரு மழைக்கால மருந்து குறிகள் விரைவாகப் படரும். அதன் விளைவாக அவன் செயலிழந்து விடுவான். கூடவே அமைதியையும் இழப்பான். உடலுறுப்புக்களை அவற்றின் சக்திக்கு மீறிப் பயன்படுத்தினாலும் நோய் ஏற்படலாம். சோம்பல் வெறுக்கத்தக்கது. இது அடிப்படை நியதி என்றாலும் எல்லைக்கு மீறிய தொல்லையை உடலுக்குக் கொடுக்கக் கூடாது. அசையாத நிலையில் நோவிருக்கும். அமர்ந்த நிலையிலிருந்து இயங்கத் துவங்கும்போது தொந்தரவுகள் மிகும். இது ஒரு முக்கியமான நோய்க்குறி. சிறிது நேரம் அசைந்து கொண்டிருந்ததல் நோய் சமனம் ஆகும்.
பசி
எப்போதும் பசிப்பதைப் போன்ற ஒரு வேதனை. இனிப்பான குளிர்ந்த பண்டங்களை நாவு விரும்பும்- இறைச்சி ஒத்துக் கொள்ளாது.
தாகம்
குளிர்ந்த நீரைப் பருக விருப்பம். சிறப்பாக இரவு நேரத்தில் தாகம் மிகுதியாகும்போது நாவு, அண்ணம், தொண்டை எல்லாம் உலர்ந்து போகும்.
வலி நோய் மிகும்நேரம்
குத்துவதைப் போன்ற நோவு, கூடவே உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நிலை, அவை மிகவும் கனமாக இருப்பதைப் போல் தோன்றும். வளைக்கவே முடியாதபடி கையும் காலும் கெட்டித்துப் போகும்.
நோய் மிகுவது முன்னிரவு ஏழு மணி அல்லது நள்ளிரவில் பிற் பகுதி என்று தமது அனுபவத்தை விவரிக்கிறார் நிபுணர் கிப்சன்.
பணிக்காலம்
ரஸ்டாக்ஸ் மிக ஆழமாகப் பணிபுரியும் மருந்து. ஆகவே இதன் பணிக் காலம் அதிகம். முக்கியமாக தொடர் மருந்து பிரையோனியா, சர்ம நோயாக இருந்தால் பொவிஸ்டா. இதுவும் குறைந்த வீரியத்தில் இருந்தால் போதும்.
அனுபவம்
எல்லா வகை நோய்களுக்கும் நான் மிக அதிகமாகப் பயன்படுத்தும் மருந்து இது (குறிகள் ஒத்திருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்). இது ஒருமுறை கூடப் பலிக்காமல் போவதில்லை.
இங்கேயும் ஒரு நஞ்சு மருந்தாகிறது. இதற்குப் பெயரே நஞ்சுப் படர் செடி (poison ivy)
நினைவில் நிறுத்துக
1. பெயர் - ரஸ்டாக்ஸ்
2. இனம் - தாவரம்
3. நோய் முதல் - மழையில் நனைதல், வியர்வை அடங்கும் முன்பு குளியல், பளு சுமப்பு
4. நோய் தாக்கும் பருவம் - மழை, பனிக்காலம்
5. நோய் தாக்கும் நேரம் - முன்னிரவு, பின்னிரவு
6. நோய் சனமாகும் சூழல் - அசையாத நிலை, அசையும் முயற்சிக்கணம்
7. மருந்து பணிபுரியும் காலம் - 7 நாட்கள்
8 தொடர் மருந்துகள் - ப்ரையேனியா, பைட்டோலோக்கா, பொவிஸ்டா
9. எதிர் மருந்துகள் - ஏபிஸ் மெல்
10. பொதுக் குறிகள் - அசைந்து கொண்டே இருக்க விருப்பம்
11. சிறப்புக் குறிகள் - அசையத் துவங்கும் வேளையில் நோவு மிகுதி
12. வீரியம் - 6, 30, 200
13. குறிப்பு - காய்ச்சலுக்குக் குறைந்த வீரியம், சுளுக்கு, முடக்கு நோய்க்கு உயர் வீரியம்.
அருமையான கட்டுரை மிகவும் அருமை
பதிலளிநீக்கு