சனி, 25 மார்ச், 2017

கிராஃபைட்ஸ் - மேஜர் தி.சா.இராஜூ


 GRAPHITES
`வயது?’

`இருபத்து நாலு’

`பெயர்?’

`மெர்ஸி ஆசீர்வாதம்’

`ஏதாவது வேலையில் அமர்ந்திருக்கிறீர்களா?’

`ஆமாம்.  தட்டச்சு, சுருக்கெழுத்துப் பணியாளர்’

`தட்டச்சு வேலை செய்வதால் விரல்களில் சோர்வு ஏற்படுகிறதா?’

`அப்படி ஏதுமில்லை.  விரல்களில் இடுக்கில் புண் ஏற்படும்.  கசிவும் உண்டு.’

`வேறு எங்காவது இப்படி உள்ளதா?’

`கால்கட்டை விரலுக்கும் இடையில்’ அந்த மங்கை கை விரல்களையும் காட்டினாள்.  நுனியில் கீறல்கள் இருந்தன.  அவர் குனிந்து கால் விரல்களைக் காட்ட முனைந்தபோது பின் தலையை கவனித்தேன்.  கூந்தலில் ஒற்றை ரோஜா, அதனருகில் ஒற்றை முண்டு.

`தலையில் என்ன வீக்கம், மெர்ஸி?’

`அது ஒன்றுமில்லை.  சிறிய கட்டி.  மருத்துவமனையில் காட்டினேன்.  அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடலாமென்று கூறினார்கள்.  அங்கு வலி ஏதுமில்லை’.

`அது எப்போதாவது முகம் விட்டுக் கொண்டு நீ கசியுமா?’

`உண்டு அய்யா’

சரி இப்போது சொல்லுங்கள், நீங்கள் எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள்?

கண்ணில் ஒரு மறைப்பு.  திடீரென்று இருட்டுகிறது.  ஓரிரு நொடிகளுக்குப்பிறகு சீராகி விடுகிறது.  உதிர அழுத்தம், சிறுநீர்ப் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தோம்.  எதிலுமே குறைபாடு இல்லை.
நிறைய செலவு செய்திருக்கிறீர்கள்.

ஆம் அய்யா,  கண் இருட்டுகிறதே என் தாயார் பெரிய மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிகிறார்.  அவர் என்னைச் செனைக்கும், மதுரைக்கும் கண் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றார்.

நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

விரிவான பரிசோதனைகள் செய்தார்கள்.  வெகுவிரைவில் பரிசோதனைகளை செய்து விடுகிறார்கள் என்பது மட்டும்தான் அதன் சிறப்பு.

நானும் கேள்விப்பட்டேன்.  அவர்கள் வருகையாளர்களிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் பாராட்டுகிறார்கள்.
உண்மைதான் அய்யா, ஆனால் எந்தப் பரிசோதனையிலும் என் கண்களில் ஒரு கோளாறும் இல்லை என்பதே முடிவு.
சிறிய மின் விளக்கின் உதவியோடு கண்களை உற்று நோக்கினேன்.  இரண்டு இமைகளின் மீதும் சிறுசிறு பொறிகள் தென்பட்டன.

எனக்கு இன்னும் சில விவரங்கள் தெரிய வேண்டும் மெர்ஸி.

சொல்லுங்கள் அய்யா,

இந்தக் கண் இருட்டடிப்பு எந்த நேரத்தில் ஏற்படுகிறது?

குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.  காலை, பிற்பகல்  இரண்டு நேரத்திலும் வருவதுண்டு.

கடைசியாக எப்போது ஏற்பட்டது?

நான்கு நாட்களுக்கு  முன்பு.

தேதியைக் குறிப்பிட முடியுமா?

மெர்ஸி தெரிவித்தார்.

அதற்கு முன்பு எப்போது ஏற்பட்டது?

சென்ற மாதம் அய்யா.

இன்னொரு விவரம் எனக்குத் தெரிய வேண்டும்.  உங்களுடைய மாதவிலக்கு சீரான இடைவெளியில் உள்ளதா?

சரியாக முப்பது நாள் இடைவெளியில் ஏற்பட்டு விடும்.

அதற்கு முன்பு உடல் தொந்தரவுகள் மிகுதியாகின்றனவா?

இல்லை அய்யா,

சரியாக நினைவுபடுத்திக் கொண்டு சொல்ல வேண்டும்.  ஒவ்வொரு முறையும் மாதவிலக்கின்போது இத்தகைய இருட்டடிப்பு ஏற்படுகிறதா?

மெர்ஸியின் முகத்தில் ஒரு மலர்ச்சி.  ஆமாம் அய்யா,  இந்தக் கோளாறு மாதவிலக்கின்போதுதான் ஏற்படுகிறது.

நான் நிபுணர் கெண்டின் நூலைப் புரட்டுகிறேன்.  என் அனுமானத்தை அவர் உறுதி செய்கிறார் (பக். 555)  மாதவிலக்கு ஏற்படும் வேளையில் இருட்டடிப்பு ஏற்படும் என்று அவர் இந்த மருந்தின் தன்மை பற்றி தெளிவாக எழுதுகிறார்.  கண் பார்வையைப் பற்றி அவருடைய கருத்துக்களை நிபுணர்கள் ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள்.  உள்ளுறுப்புகளின் குறைபாடு கண்களில் வெளிப்படும் என்பது அவருடைய முடிவு.

 சிறிது யோசித்து பிறகு மருத்துவக் குறிப்பில் எழுதுகிறேன்.  கிராஃபைட்ஸ் ஆறு, முப்பது, இருநூறு மூன்ற நாள் இடைவெளியில் ஒரு வாரம் பொறுத்து லூட்டிகம் 200.

......இரண்டு மாதங்கள் பொறுத்து ஞாயிறு காலை வழிபாட்டிற்குப் பிறது தந்தை ( Rev. Father) அருள் நாயகத்திடம்  உரையாடிக்கொண்டிருந்தேன்.

மெர்ஸி ஆசீர்வாதம் அருகில் வந்து வணக்கம் தெரிவித்தார்.

`அய்யா, மிக்க நன்றி, தற்போது எனக்கு ஒரு தொந்தரவுமில்லை’.

நல்லது தோழி, நான் பதிலுறுத்தேன்.

அது மட்டுமில்லை.. .. அவர் தயங்கினார்.  என் தலையில் இருந்த கட்டியும் கரைந்துவிட்டது.  விரலிடுக்குகளிலும் தற்போது ஏதும் புண் இல்லை.  இது என் தாயார் பெரிய மருத்துவமனையில் செவிலியாக இருக்கிறார்.  பெயர் மரியபுஷ்பம் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தோத்திரம் அய்யா,  அவர் வணக்கம் தெரிவித்தார்.

அடுத்து தந்தை அருள்நாயகத்திடம் பேசத் துவங்கினார்.  இவர் மேற்கொண்டிருக்கும் பணி உன்னதமானது அய்யா,  என்னைப்பற்றி அவரிடம் குறிப்பிட்டார்.

தெரியும்.  இறைவன் அருள் புரியட்டும்.  தந்தை கையை உயர்த்தினார்.

.. .. அவர்கள் அகன்ற பிறகு, தந்தை என்னைக் கேட்டார்.

நீங்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது நோய் மிகும் நாள், தேதி, நேரம் ஆகியவற்றைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்கிறீர்களாமே?

`ஆமாம் தந்தையே,  ஹானிமன் வகுத்த சாஸ்த்திரத்தில் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பிறகே மருந்தைப் பற்றி முடிவெடு’  என்று எழுதியிருக்கிறார்.  ஆயுர்வேதமும், சித்தவைத்தியமும் கூட இவைகளை வலியுறுத்துகின்றனவே.

அப்படியா? இது எனக்குப் புதிய தகவல். அவர் என் தலையைத் தொட்டு ஆசி வழங்கினார்.

2.
மேற்காணும் சொல்லை  `காரீயகம்’ என்று கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி.  கரும் காரீயம் என்றும் சில சொல்லகராதிகள் குறிப்பிடுகின்றன.  ப்ளம்பாகோ (Plumbago) என்றுரைக்கிறது ஸ்டெட்ஸ்மான் சொல்லகராதி,  இதற்கும், காரீயத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா என்று ஆராய்ந்தால் இல்லை என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் அது கனிமம்.  இது கரி ( carbon) மலைச்சரிவுகளிலிருந்து செதுக்கி எடுக்கப்படுகிறது கிராஃபைட்ஸ்.

இந்த மருந்தைக் குறித்து எண்ணும்போது இரண்டு நினைவுகள் எதிர்ப்படுகின்றன.  குமுதம் வார ஏட்டில் ஒரு கதை எழுதியிருந்தேன்.  அதன் உள்ளடக்கம் இதுதான்.  சிறு வயதிலிருந்தே பென்சிலை வாயில வைத்துக் கடிக்கும் பழக்கம் உள்ள ஒரு சிறுமி வளர்ந்ததும் பல நோய்களுக்கு ஆட்படுகிறாள்.  அவளுடைய இளமைக்கால இயல்பை அறிந்த குடும்ப நண்பர் ஒருவ அந்த மங்கைக்கு கிராஃபைட்ஸ் தருகிறார்.  அவள் குணமடைந்து விடுகிறாள்.  இந்தக் கதை பலருடைய கவனத்தைக் கவர்ந்தது.  இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கோபிசெட்டிபாளையத்தில் ஒரு மருத்துவ அன்பரைச் சந்தித்தேன்.  என் பெயரைக் கேட்டதும் `ஓ எனக்குத் தெரியுமே, நீங்கள் தானே கிராஃபைட்ஸ் பற்றிக் கதை எழுதியிருந்தீர்கள்?’ என்று நினைவு கூர்ந்தார்.  அது ஒரு சிறந்த மருத்துவ இலக்கியப் படைப்பு என்று பலரும் பாராட்டினார்கள்.

மற்றது என் ஆசானைப் பற்றியது.  அவர் அறையினுள் நுழையும் முன்பே வெளியில் அமர்ந்திருக்கும் அன்பர்களை அவர்கள் அறியாவண்ணம் கவனிப்பார்.  இருக்கையில் அமர்ந்ததும் என்னை விளித்து `அந்த மூன்றாவது நபர் செப்பியா, அடுத்தவர் ஆலோ என்று உறுதிபடக்கூறுவார்.  உள்ளே அமர்ந்திருக்கும்போதும் அன்பர்களைப் பார்வையிடுவார்.  ஒரு தரம் `அதோ அந்த மனிதர் கிராஃபைட்ஸ் என்று கூறினார்.  அப்போது அவரைக் கவனித்தேன்.  அவர் அடிக்கடி உடடில நெட்டி முறித்தார்.  கொட்டாவி விட்டு ஏதோ முணுமுணுத்தார் (இன்ஷா அல்லா).
எவ்வளவோ முயன்றும் இந்தக் கலையை என்னால் முழுமையாகக் கற்க இயலவில்லை.  நினைவுகள் மட்டும் அடிக்கடி எதிர்ப்படும்.
இந்த மருந்தை மேதை ஹானிமன் மெய்ப்பித்திருக்கிறார் என்பது அவருடைய `நாட்பட்ட நோய்களிலிருந்து’ தெரிகிறது.

 அவர் இந்த மருந்தின் மூன்று முக்கியமான தன்மைகளை விவரிக்கிறார்.

1. அந்த மணிதர் துயரத்தில் தோய்ந்திருப்பார்.
2. அவருடைய வெளிப்போக்கு கட்டியாக, திப்பித் திப்பியாக சளியினால் இணைக்கப்பட்டிருக்கும்.
3. அவருடைய உடல் திறப்புகளில் எல்லாம் வெடிப்புகள் தோன்றும்.

 தேனைப்போன்ற நிறமுடைய வெளிப்பாடு.  அது போன்றே பிசுபிசுப்பும் உடையது.  அது பட்ட இடம் எல்லாம் புண்ணாகும்.  இவை இந்த மருந்துக்குரியவரின் சிறப்புக் குறிகள்.

திறப்புக்கள் என்றால், அவற்றில் வாய், மூக்கு, செவி, மலப்புழை, சிறுநீர்த்துளை, புணர்புழை எல்லாமே அடங்கும்.  இந்தக் குறிகள் மெய்ப்பிக்கப்பட்டபோது ஹானிமன் எத்தகைகய உடல் துயரங்களை ஏற்றுக் கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்கிறேன்.  இந்த மருந்துக்குரியவரால் வெப்பத்தைத் தாங்க இயலாது.  காற்று வீச வேண்டும்.  எல்லாக் கரி மருந்துகளுக்குமே இது இயல்பு.  (கார்போ வெஜ்)

அதே போல் அவரால் குளிரையும் தாங்க இயலாது.  நோய் மிகும் நேரம் காலை, மாலை அடுத்து நள்ளிரவிற்கு முன்பு என்பது நிபுணர்களின் கருத்து.  பளுவான பொருட்களைச் சுமந்தாலும் ஏற்படும் விளைவுகளையும் இது போக்கி விடும்.

பிறப்பிடத்திலும், மலப்புழையிலும் வெடிப்புகள் ஏற்பட்டு அதைச் சொல்லவே கூசும் மங்கையர்களுடன் நான் மன்றாடியிருக்கிறேன்.  இதற்காகப் பெரிய பெரிய படங்களைத் தயாரித்து அவற்றில் நோய்ப்பட்ட பகுதிகளைக் காட்டும்படி வேண்டுவேன்.  கிராஃபைட்ஸ் இந்த இடர்பாடுகளை உடனடியாகத் தீர்த்து விடும்.  பொறுக்குத் தட்டிய புண்கள், தழும்பு ஆகியவற்றிலிருந்து உருக்கிய மெழுகைப் போல் திரவம் கசியும்.  அரிப்பும் எரிச்சலும் பொறுக்க இயலாது.  அறுவை சிகிச்சைக்குப்பிறகு இணைய மறுக்கும் தசைப்பகுதிகளைக்கூட இந்த மருந்து சீராக்க உதவும்.
உடல் முழுவதும் பரவும் தன்மையுள்ள சொறி, சிரங்கு திரும்பத் திரும்ப ஏற்படுமானால் அப்போது நினைவுக்கு வர வேண்டியது கிராஃபைட்ஸ்.  கந்தகம், ஸோரினம், ஆந்த்ராக்சினம் ஆகிய மருந்துகளுக்கு அடிபணியாத படைகள் இதற்கு மசியும்.

வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு ஒரு விசித்திரமான சோர்வு ஏற்படும்.  அண்மையில் உள்ளவர்களிடம் சிடுசிடுப்பார்கள்.  நல்ல இசையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலாது.  எவ்வளவு முயன்றாலும் அவர்களால இன்முகத்துடன் பழக இயலாது.  அண்மையில் நிகழ்ந்தது மறந்து விடும்.  பழைய நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து துன்புறுத்தும்.  பெரிய பொறுப்பிலுள்ளவர்கள் சீரான முடிவை எடுக்க முடியாமல் திணறுவார்கள்.  முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவார்கள்.  அந்த நேரங்களில் உதவியாளர்கள் அவரை அணுக அச்சமுறுவார்கள்.

இவ்வளவு உளைச்சலுடன் படுக்கையை நாடினால் உறக்கம் வராமல் தவிப்பார்கள்  பழைய நினைவுகள் துன்புறுத்தும்,  பல கெட்ட கனவுகள், காலையில் கண் விழித்ததுமே ஒரு கிறுகிறுப்பு .  மேலே பார்த்தாலும், கீழே குனிந்தாலும், தடுமாற்றம் ஏற்படும்.  முன்பக்கமாக சாய்ந்து விழுவார்கள்.
தலை முழுவதும் கனக்கும்.  அசைக்க முடியாது.  மறத்துப் போகும்.  இந்த நிலை கீழ் நோக்கி இறங்கும்.  உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படும்.  சுரணையே இல்லாத நிலையும் மாறி மாறி வரும்  புருவங்களின் மேலும், கண் இமைகளின் மீதும் பொறுக்க இயலாத இறுக்கம்.
என்னவென்று விவரிக்க முடியாத குழப்பமான நிலை.  இவை அனைத்தையும் கிராஃபைட்ஸின் இரு மாத்திரை சீராக்கி விடும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.


3.
அந்தச் சிறுவன் மொழுமொழுவென்றிருந்தான்.  சிவந்த உடல்வாகு.  தலையில் அடர்த்தியான முடி வளர்ந்திருந்தது.  கண்களில் குறும்பு கொப்பளித்தது.

`அமருங்கள் நன்பரே’ வந்தவரை வேண்டிக் கொண்டேன்.  அவருக்குப் பக்கத்தில் அந்தப் பையனும் உட்கார்ந்து கொண்டான்.  அருகிலிருந்த சிறு மேஜைமேல் இருந்த திங்கள் ஏடு ஒன்றைப் பார்க்கத் தொடங்கினான்.
உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

இவன் என் ஒரே மகன்.  விஜயன் என்று பெயர்.  இவனைக் குறித்து நான் கவலை கொண்டிருக்கிறேன்.

விஜி இப்படி வா சிறுவனை அருகில்அழைத்தேன்.

`வரமாட்டேன்’ அவன் துடிப்புடன் விடையளித்தான்.

இழுப்பறையிலிருந்து ஒரு மிட்டாய் துண்டைக் காட்டினேன்.

எனக்கு எதுவும் வேண்டாம்.  நீங்க ஊசி போடுவீங்க.

இல்லை விஜி, என்னிடம் ஊசியே கிடையாது.  எல்லாம் இனிப்பு மருந்து.  நான் பெட்டியைத் திறந்து காட்டினேன்.

அப்படியானால எனக்கு மூணு பாட்டில் கொடுங்க.

இப்படித்தான் அய்யா, இவன் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறான்.  எவருக்கும் அடங்குவதில்லை.  பள்ளிக்கூடத்தில் இவனால் சலசலப்பு எழுதவோ, படிக்கவோ மறுக்கிறான்.  சதா விளையாட்டு, ஓட்டம், கண்டித்தால் கீழே விழுந்து அழுகை.

புரிகிறது அய்யா, நாமெல்லாம் சிறு வயதில் எப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவனை அருண் பாஸ்கரிடம் அழைத்துப் போயிருந்தேன்.  அவர் மினவலைiக் கூடையைக் கவிழ்த்துப் பரிசோதனைகள் செய்து பார்த்தார். (இ.சி.ஜி).

அருண் பாஸ்கர் என்பவர் நகரத்தின் சிறந்த நரம்பியல் நிபுணர்.  நல்ல பண்புகள் உடையவர்.

அவருடைய பரிவுரை என்ன?

சோதனைகளினால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்த உண்மையை அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.

நான் ஒலி நாடாவை இயக்கினேன்.  உள்ளத்தைக் கவரும் பாடல் வெளிப்பட்டது.  விஜய் எழுந்து வெளியேற முயற்சி செய்தான்.  அதை நிறுத்திவிட்டு சிறுவனின் அருகே சென்று நாடித் துடிப்பைப் பரிசோதித்தேன்.  நாவு, கண்விழி ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தேன்.  செவிமடலின் பின்புறத்தில் சிறிய புண்கள்.  அவன் தொடர்ந்து பரிசோதனைக்குட்பட மறுத்தான்.  நான் நண்பரிடம் கூறினேன்.  விஜியை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.  மாலை நான்கு மணிக்கு நீங்கள் மட்டும் வந்தால் போதும்.

அவர்கள் எழுந்தனர்.  விஜி வாயைக் கோணி பழிப்புக் காட்டினான்.  நான் இரு விரல்களை உயர்த்தி வழி அனுப்பினேன்.   `டாட்டா’.

`பிர்லா’ அவனும் சிரித்துக் கொண்டே கையை உயர்த்தினான்.
அவர்கள் சென்ற பிறகு நிபுணர் கெண்டின் நூலைப் புரட்டினேன்.  அவர் மருத்துவச் செய்திகளை இலக்கியச் சுவையுடன் அளிப்பார்.  அதனால் கடினமான விவரங்கள் கூடத் தெளிவாக விளங்கும்.  `மனித உள்ளம் குறித்து நாம் ஆராய்வதில்லை.  அது குறித்து நம்முடைய அறிவு மிகவும் குறைவு’ என்று அவர் தெளிவாக எழுதுகிறார்.

`உள்ளத்தைக் கூர்ந்து கொண்டு செய்ய வேண்டிய எந்தப் பணியையும் அவனால் ஏற்க முடியாது.  மனத்தளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.  அவனால் இசையைப் பொறுக்கவே இயலாது’ (பக்.555)

பாட்டின் இசையைப் பாம்பறியும், பச்சைக்குழந்தை அறியும் என்பது முதுமொழி.  தாய்க்குலத்தின் தாலாட்டிற்கு மயங்காத மழலை உண்டா?  ஆனால அதையே இந்த நோயாளி மறுப்பான் என்று இந்த நிபுணர் எழுதுகிறார்.

சிறுவனின் உடலமைப்பு, நிறம், அடங்காத தன்மை, பிடிவாதம் ஆகியவை என்னை கிராஃபைட்ஸ் குறித்து சிந்திக்க வைத்தன.   ஆனால் இவை மட்டும் போதாது என்று எனக்குப்பட்டது.  அன்று மாலை விஜயனின் தந்தை தமது மனைவியுடன் வந்தார்.  அவரிடமிருந்து சிறுவனைப் பற்றி நிறையத் தகவல்களைச் சேகரித்தேன்.

விஜயன் ஒழுங்காக மலம் கழிப்பதில்லை.  அடிக்கடி சொறி சிரங்குகளின் ஆளுகைக்கு உட்படுகிறான்.  மாலை நேரங்களில் காய்ச்சல் வருகிறது.  குளிர்ந்த காற்று ஒத்துக் கொள்ளாது என்றாலும் மின் விசிறி தேவை  இது இல்லாமல் உறங்க முடியாது.  எல்லாக் கரி (கார்பன்) மருந்துகளுக்கும் இந்த இயல்பு உண்டு என்று கெண்ட் எழுதுகிறார்.

விஜயனின் நோய் நிவாரணத்தின் பொருட்டு நிறையத் தொகை செலவு செய்து விட்டோம்.  அவனுடைய உடல் நிலை எங்களை மிகவும பாதிக்கிறது.  அவன் முரண்டு பிடிக்கும்போது என் மனைவி பெரிதும் வருந்துகிறாள்.  அதனால் என் மன அமைதி மிகவும் குலைகிறது.

நண்பர் அருணும், அவரது மனைவியும் திரும்பியபிறகு, நான் மீண்டும் கிராஃபைட்ஸ் பற்றிப் படித்தேன்.  இது ஒரு பல முனை நிவாரணி.  ஸோராவைத்தணிக்கும் ஆழமான மருந்து என்பதைத் தெரிந்து கொண்டேன்.

தோலின் மேல் ஏற்படுமூ தோஷங்களுக்கு (குறைபாடுகள்) முதல் மியாஸம் மட்டும் காரணமன்று.  மற்ற மியாசத்தினாலும் தோல் நோய் ஏற்படக்கூடும்.  ஆனால் கிராஃபைட்ஸ் குறி சற்று மாறுபட்டது.  செவிமடலின் பின்புறத்தில் ஏற்படும் புண்கள் இவற்றை கரப்பான் என்று அழைப்பார்கள்.  தழும்புகள், பொருக்குகளுக்குப் பின்னால் மீண்டும் கிளைப்பவை என்று குறிப்பிடுகிறார் கெண்ட்.  பொதுவாக ஹோமியோபதி மருத்துவர்கள் புற்று நோயை ஏற்றுக் கொள்வதில்லை.  ஆனால இந்த நிபுணர் தழும்புகளுக்குக் கீழே ஏற்படும் புண்கள்.  அவற்றிலிருந்து கசியும் நீர் ஆகியவை புற்று நோய்த் தொடர்புள்ளது என்று எழுதுகிறார்.

. . . . இடையீட்டுக்கு மன்னிக்கவும்.  புற்று நோய் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் இன்று வரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  ரேடியம் சிகிச்சைக் கூட அதைக் கட்டுக்குள் வைக்கிறது என்பதே உண்மை.

பல நிபுணர்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டேன்.  லிப்பே, ஃபாரிங்டன், போயனிங்ஹாசன் .. . .  . . . நான் நாஷையும்  விட்டு வைப்பதில்லை.  அவரது வீச்சு சில சமயங்களில் குறுக்கு வெட்டாகப் பாயும்.  துணிச்சலும் மிகுதி.
எல்லோரும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து கிராஃபைட்ஸ் ஒரு சிறந்த ஸோரா நிவாரணி என்பதாகும்.  இந்தக் காரணங்களினால் சிறுவன் விஜயனுக்கு கிராஃபைட்ஸ் ஆறு.  இரு முறை தொடர்ந்து ஸோரினம் இருநூறு ஆகியவை கொடுத்ததில் அவனுடைய சரும நோய் முற்றிலும் நீங்கி விட்டது.  மன இயல்பும் மாறி விட்டது என்பதைiயும் இங்கு குறிப்பிட வேண்டும்.
நாம் இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.  சிந்திக்க வேண்டும்.  சக மருத்துவர்களிடம் மனம் விட்டுப் பேசி விவாதிக்க வேண்டும் என்பதே என் கருத்து.


*****


வெள்ளி, 24 மார்ச், 2017

கல்கேரியா பாஸ்பரிகம்


CALCAREA-PHOSPHORICUM

மேஜர் தி.சா.இராஜூ
'
வாசலில் மாருதி கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். ஒருவருடைய கையில் சிறிய பெட்டி. மற்றவர் சில காகிதக் கோப்புகளை வைத்திருந்தார்.
'
`ஞான் கோட்டயத்திருன்று வருன்னு. பெயர் ஜான் ப்ரிட்டோ, இவர் மோயன்’.
வந்தவர் மலையாளத்திலேயே பேசினார். அது எனக்குப் புரிந்தது.
'
.. ..ஜான் பிரிட்டோவின் தமையன் குவைத்தில் பணிபுரிகிறார். கடந்த மூன்றாண்டுகளாக அவருக்குச் சளித் தொந்தரவு. இருமுறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
ஜான் பிரிட்டோ தம்முடன் கொண்டு வந்திருந்த ஒலிப்பேழையை இயக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் குரல் கேட்டது. ஜோஸ் என்ற அந்த அன்பர் தமக்கு ஏற்பட்டுள்ள நோய் விவரங்களைத் தெரிவித்தார். அதன் பொருட்டுத் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மருந்து வகைகளையும் விவரித்தார். பேழை பதினைந்து நிமிடம் இயங்கிற்று. உடன் வந்த அன்பர் ஜோஸின் நோய் விவரங்கள் அடங்கிய கோப்புகளை என்னிடம் அளித்தார். பல எக்ஸ்ரே படங்களும் இருந்தன. அவற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
'
`நான் ஒரு முறை உங்கள் தமையனாரைக் காண வேண்டும்’
அவர் இவடே வரான் ஒக்கில்லா
ஞானும் மருந்து தரான் ஒக்கில்லா இது எனது கூற்று.
நான் விவரமாக அவரிடம் பேசினேன்.
'
ஒரு நோயாளியைப் பார்த்துப் பேசி அவர் சொல்லுவதைச் செவியுற்று, நாடித்துடிப்பு, நாவின் நிறம், உடல் வெப்பம் ஆகியவற்றை அறிந்த பின்னரே சிகிச்சை பெறுபவருக்கு மருந்து தர இயலும். நோயாளியின் தன்மையைத் தெரிந்து கொள்ள இந்த விவரங்கள் மிக மிக அவசியம். வந்த அன்பர்கள் நிராசையுடன் திரும்பினார்கள்.
'
இரண்டு மாதங்களுக்குப் பிறகு குவைத்திலிருந் அன்பர் ஜோஸ் நேரில் வந்தார். சற்று சதைப் பிடிப்பான உருவம். மாநிறம், தலைமுடி அடர்த்தியாக இல்லை. தெளிவான ஆங்கிலத்தில் உரையாடினார்.
நீங்கள் என்ன தொழில் புரிகிறீர்கள்? இது என் வினா.
எங்கள் கம்பெனி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடைய வரைபடப் பிரிவுக்கு நான்தான் பொறுப்பாளர். உங்களுக்கு அறிமுகமான ராமகர்த்தா என்னுடன் பணிபுரிகிறார். அவருடைய மகள் வைக்கத்திலிருந்து வந்து உங்களிடம் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.
பெயர் என்னவோ?
'
பாருகுட்டி. இது நடந்தது இரண்டாண்டுகளுக்கு முன்பு. அவர்தான் உங்களுடன் தொடர்பு கொள்ளும்படி பரிவுரை செய்தார். பல்வேறு நிபுணர்களைச் சந்தித்து பலமுறை மருந்துகளையும் உட்கொண்ட பிறகு உங்களிடம் சிகிச்சை பெற்ற பிறகுதான் பாருகுட்டி பூரண குணம் அடைந்தாள். ராகர்த்தா உங்களைத் தினமும் நினைவு கூறுகிறார்.
'
நமது வேதங்களில் ஒன்றான அதர்வன வேதம் போர் முறை. அதில் காயமுற்றவர்களுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. மற்றும் நோய்த் தடுப்பு நிவாரணம் ஆகியவை குறித்துப் பேசும். அந்தப் பகுதியே அதர்வண வேதம் எனப்படும். இந்த வேதம் கேரளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
'
கோட்டக்கல் என்ற ஊரில் மிகப் பெரிய ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றுள்ளது. அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து அவர்களுடைய செயல் முறை பற்றித் தெரிந்து கொண்டேன். அவர்கள் பொறுமையுடன் எனக்கு எல்லா விவரங்களையும் விளக்கினர்.
நவரக்கிழி, பிழிச்சல் ஆகிய சிகிச்சை முறைகள் எனக்கு வியப்பை அளித்தன. அவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவது வேப்பிலை, இளநீர், இறைச்சி ஆகியன. அங்கு தங்கி நிவாரணம் பெறுவதற்காக இந்தியாவில் ஏன் உலகின் பலப் பலப் பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள்.
அந்த மருத்துவமனை அமைதியான சூழ்நிலையில் செயல்படுகிறது. அங்கிருந்து புறப்படும்போது அதன் தலைவரைச் சந்தித்து விடைபெற்றேன். அப்போது நான் தரைப்படையில் ஓர் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவர் என்னைத் தழுவிக் கொண்டு கூறினார் `நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள். எங்களுடன் நீங்கள் பணிபுரிவது சிறப்பாக இருக்கும்’.
நான் நெகிழ்ந்து போனேன்.
'
அதே மாநிலத்தில் கோட்டயம் என்ற ஊரில் ஒரு பெரிய ஹோமியோபதி மருத்துவ நிறுவனம் இயங்குகிறது. மருத்துவமனையும், கல்லூரியும் செயல்படுகின்றன. அதன்தலைவர் மிகச் சிறந்த மருத்துவர். மிகுந்த அனுபவமுள்ளவர். பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார். ஐம்பது மில்லி செம்மல் மருந்துகளை அற்புதமான விளைவுகள் குறித்து நான் தெளிவாக அறிந்து கொண்டது அங்குதான். மேதை ஹானிமன் தமது ஆர்கனானின் ஆறாவது பதிப்பில் இந்த முறை பற்றித் தெளிவாக்கியிருக்கிறார்.
'
இவற்றையெல்லாம் நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் அன்பர் ராமகர்த்தாவின் மகளான பாருகுட்டி கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவுபடுத்தவே.
பாருக்குட்டி பொற்சிலை போல் இருப்பாள். அவளுடைய முதுகிலும், கழுத்திலும் கரு நிறப் படை தோன்றியிருந்தது. பொறுக்க முடியாத அரிப்பு. கேரளத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்ற பிறகு பாருகுட்டியை என்னிடம் அழைத்து வந்தார் ராமகர்த்தா. அவருடைய நம்பிக்கை முழு நிவாரணத்தை அளித்தது.
'
.. .. ஒளி மிகுந்த டார்ச் விளக்கின் உதவியோடு நான் அன்பர் ஜோஸின் அண்ணம், நாவு ஆகியவற்றைப் பரிசோதித்தேன். அடி நாவில் சிறு சிறு மொட்டுகள். என் மூக்கில் இரு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மின்சாரத்தின் உதவி கொண்டு அங்கு முளைத்திருந்த சதைத் திரள்களைத் தீய்த்து விட்டார்கள் என்றாலும் நிரந்தரமான பலன் இல்லையே ஜோஸ் வருத்தத்துடன் கூறினார்.
அவரைப் படுக்க வைத்து மூக்கின் துளைகளைப் பரிசோதித்தேன். முள்ளு முள்ளாகச் சதை தொங்கிற்று. அவருடைய குடும்ப விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
......
நான்பர் ஜோஸ் உடனடியாகப் பதில் சொல்லவில்லையென்றாலும், பரிசோதனையின் பொருட்டு அவர் என் முன் படுத்திருந்தபோது நான் அறிந்து கொண்ட விவரங்கள் எனக்கு வியப்பை ஊட்டின. அவருடைய மூக்கு சில்லிட்டிருந்தது. காது மடல்களில் சிறு சிறு கொப்புளங்கள். மடல்களும் குளிர்ந்திருந்தன. அவர் சிவந்த மேனி உடையவர். எனினும் முகத்தில் பழுப்பு நிறத்தில் சிறிய அழுக்கு வளையங்கள். கன்னத்தை விரலால் தொட்டபோது அங்கு சுழிப்பு ஏற்பட்டது. மேலுதடு அளவில் பெரியதாக இருந்தது. ஒரு முறையாவது நோயாளியை நேரில் பார்க்க வேண்டும் என்று என் ஆசான் வற்புறுத்தியது ஏன் என்று அப்போது எனக்குப் புரிந்தது.
'
எழுந்து உட்கார்ந்த நண்பர் எனக்குப் பதில் அளித்தார்.
`நான் செய்யும் வேலைக்கு இந்த நாட்டில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவார்கள். அங்கு இதைப் போல் பத்துமடங்கு தருகிறார்கள். வீடு, கார், அலுவலகம் எல்லாவற்றிலும் ஏஸி வசதி, தினமும் பம்பாயிலிருந்து விமானம் மூலம் புதிய காய்கறிகள், கொத்துமல்லி, முளைக்கீரை உட்பட எல்லாம் கிடைக்கிறது என்றாலும் உடல் நிலை சீராக இல்லாவிட்டால் இவைகளினால் என்ன பயன்? என்னால் இந்தச் சளித் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை’ அவருடைய குரல் கமறியது.
உங்கள் நாசியிலிருந்து உதிரம் வடிவதுண்டா? இது எனது அடுத்த கேள்வி. இப்போது இல்லை என்றாலும் முன்பு ரத்தம் வருவதுண்டு.
'
`மூக்கடைப்பு எப்போது ஏற்படுகிறது?’
`காரிலிருந்து இறங்கி அறையினுள் நுழையும்போது துவங்குகிறது. முகத்தின் ஏதாவது ஒரு பகுதி மரத்துப் போகிறது. அந்த மரப்பு இடம் மாறும்’.
உங்கள் செவியைப் பற்றிக் கூறு முடியுமா?
குளிர் காற்றினால் பாதிக்கப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அதன் பொருட்டு கம்பளி மஃப்ளர் அணிவதுண்டு.
காதிலே ஏதாவது இறைச்சல் ஏற்படுகிறதா?
'
நண்பர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். இவ்வளவு குறியாகக் கேள்வி கேட்கிறாரே என்று அவர் எண்ணியது முகத் தோற்றத்திலிருந்து வெளிப்பட்டது.
உண்டு இது அவருடைய விடை.
எந்த நேரத்தில் என்று சொல்ல முடியுமா?
அவர் தயங்கினார்.
கூச்சப்படாதீர்கள் நான் ஊக்கினேன்.
மலம் கழித்தபிறகு. அவர் விடையிறுத்தார்.
'
இத்தகைய குறிகள் இருந்தால் அவற்றைச் சார்ந்த சுகவீனத்திற்கு ஒரு பெயர். அதற்கு ஏற்ற ஒரு பேடண்ட் மருந்து என்று எங்கள் முறையில் ஏதும் இல்லை. அன்பர்கள் கூறும் பதில்கள், அப்போது அவர்களிடம் ஏற்படும் பாதிப்பு அனைத்தையும் தொகுத்து ஏற்ற மருந்தை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்.
அவர் புன்னகைத்தார்.
'
`என் நண்பர் ராமகர்த்தா கூறியிருக்கிறார். நான் என் மகளுக்கு தோல் வியாதி என்று தான் அவரிடம் சென்றேன். சாதாரணமாக எங்கள் ஊரில் மருத்துவர்கள் உங்களுக்கு ஏதாவது மருந்து கொடுப்பார்கள். மேலே தடவ ஒரு மெழுகு. ஆனால் இவரோ பிழிந்தெடுத்து விட்டார்’.
'
பெற்றோருடைய விவரம், குடும்பத்தில் பொருளாதார நிலை, பாருகுட்டியின் கல்வித் தகுதி, அமரகோசத்திலிருந்து சில கேள்விகள், நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு. சிறு வயதிலிருந்து அவளுக்கு வந்துள்ள நோய்கள், வியர்வை, தாகம் இன்னும் என்ன? வீட்டு விலக்கு போக்கின் நிறம், தன்மை, எவ்வளவு நாள் போக்கு, இடையில் ஏற்படும் வெள்ளைப்பாடு, படுக்கும் முறை இன்னும் தலையனை உயரமாக வேண்டுமா? என்று ஒரு கேள்வி. நான் அலுத்து. கொண்டேன் என்றாலும் இரண்டு வருடங்களாக இருந்த தீராத நோய் குணமாகிவிட்டதே என்று திருப்திப்பட்டார்.
நான் இடையிட்டேன்.
'
`அன்பரே ஒரு ஹோமியோபதி மருத்துவனுக்கு நிறைய தகவல்கள் வேண்டும். சூழ்நிலையினால் நோயுற்றவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை அவன் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு மனம் இருக்கிறது. அதன் குறிகளையும் அவன் ஆராய வேண்டும். காலநிலை வேறுபாடுகளினால் அவன் எப்படி அலைகழிக்கப்படுகிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நாற்காலியைத் தரையில் இழுத்தால்கூட அந்த ஒலியை ஒருவனால் தாங்கிக் கொள்ள இயலாது. இன்னொருவனுக்குத் தொலை தூரத்து ஒலி தெளிவாகக் கேட்கும். சிலர் பேருந்தில் ஏறிப் பயணம் செய்தால் வாந்தி எடுப்பார்கள்.
'
இப்போது சொல்லுங்கள் அன்பரே, உங்களை அதிகம் பாதிப்பது எது? வெப்பமா? குளிரா?
குளிரை என்னால் தாங்க இயலாது அய்யா, குளிர்ந்த நீரை அருந்தினால்கூட காதில் நோவு உண்டாகும். குளிர்ந்த நீதில் மூழ்குவது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. குழந்தைப் பருவத்தில் என்னைக் குளிர்ந்த நீரில குளிப்பாட்டினால் உடல் விரைத்து விடம் மாறு கண் ஏற்படும் என்று என் தாயார் சொல்லக் கேட்டதுண்டு.
'
கல்கத்தாவைச் சேர்ந்த சுப்ராட்டோகுமார் பானர்ஜி ஒரு மருத்துவப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் மூக்கில் முன் சதைகள் தொங்குவதை மூன்று மியாசங்களின் தொகுப்பு (டிரை மியாஸ்மேடிக்) என்று குறிப்பிடுகிறார்.
 '
இதற்குச் சிறந்த மருந்துகளில் ஒன்றாக அவர் குறிப்பிடுவது கல்காரிய பாஸ்பாரிகா. மூக்கிலிருந்து உதிரமும் வருமானால் அப்போது உறுதியாக இந்த மருந்தைத் தரலாம் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்தத் துறையில் கண்மூடித்தனமாகச் செயல்படுவதைவிட பட்டறிவை முழுமையாகப் பின்பற்றுவதே சிறந்த முறை.
'
நண்பர் ஜோஸ் மருந்து பெற்றுத் திரும்பினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு கடிதம் பெருந் தொகைக்குக் காசோலை. தற்போது சளி தொந்தரவு இல்லை. ஆனால் செரிமானக் கோளாறு உண்டு. இது முன்னரே இருந்ததுதான். அவருக்குத் தொடர் மருந்து அனுப்பினேன். ஆறு மாதங்களில் அவர் முழுமையாகக் குணமடைந்த விவரம் கிடைத்தது.
'
முதலில் நான் அவருக்குக் கொடுத்தது கந்தகம் ஏணி முறையில்.
அடுத்தது கல்காரியா பாஸ்பரிகா. அதுவும் ஏணி முறையில்தான். வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் டியூபர்குலினம் 200. இரண்டே மாத்திரைகள். அவருக்குப் பூரண நோய் நிவாரணம்.

பாஸ்பரஸ் அமிலத்தைச் சுண்ணாம்பில் கலந்து இந்த மருந்தைத் தயாரிக்கிறார்கள். பிறகு இதை வீரியப்படுத்துகிறார்கள். தசம முறையில் வீ.யப்படுத்தப்பட்டால் இது உயிர் வேதியியலில் மருந்தாகிறது (பயோ கெமிகல்) சத முறையிலானால் ஹோமியோபதி இரண்டு வகையிலுமே இது நல்ல மருந்தாகிறது.
'
ஒரு விதையை எடுத்துச் சோதித்தோமானால் அதன் முளைப்பகுதியைச் சுற்றிச் சில சத்துள்ள பொருள்கள் இருப்பதைக் காணலாம். அந்த முளைக்கும் பகுதிக்கும் வலுத் தருவது இந்தப் புரதம் தான். இதை ஆல்புமின் என்று அழைப்பார்கள். இந்தப் பொருள் குறைவுபடுமானால் உடலில் தளர்ச்சி ஏற்படும். இதை இரத்தச் சோகை என்று அழைப்பார்கள். இந்த நிலை ஏற்படுவதற்கு அதிதிமான உதிரப் போக்கோ அல்லது வயிற்றுப் போக்கோகூட காரணமாக அமையக்கூடும். அந்த நிலையில் உடலில் புரதச்சத்து ஏற்ற அளவில் இருக்கும்பொருட்டு பயன்படுத்தப்படும் மருந்து கல்காரிய பாஸ்பாரிகா.
'
எலும்புகள் சீராக வளராவிட்டாலோ அல்லது எலும்பைச் சுற்றிய பகுதிகள் பழுதடைந்தாலோ இந்த மருந்து உடனடி நிவாரணம் தரும். மண்டை ஓடு இணையாமற்போனாலும், அல்லது, பல், நகம், முடி ஆகியவை சீராக வளர்ச்சி அடையாவிட்டாலோ கல்கேரியா பாஸ்பாரிகா ஓர் இணையற்ற நிவாரணி.
 .
சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயதானவர்களுக்கும் இது பயன்படும். வயது ஏற ஏற திசுக்க்ளின் வளர்ச்சி குறையும். அதை ஊக்குவிப்பதற்கும் இந்த மருந்து துணை புரியும்.
.
சிறு குழந்தையின் அறிவு, ஈர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும், ஆசிரியர் கூறுவதைப் புரிந்து கொள்ளவே சிரமப்படும். மனம் ஒருமைப்படாது இந்தச் சிறார்களை மந்த புத்தியுடையவர்கள் என்று ஒதுக்கி விடாமல், அடித்துத் துன்புறுத்தாமல், கல்காரியா பாஸ்பாரிகா கொடுத்தால் மூன்றே மாதங்களில் நல்ல பலன் தெரியும். இதை தசம வீரியத்தில் அனாதை இல்லத்தில் வசித்த குழந்தைகளுக்குக் கொடுத்து சீராக்கியிருக்கிறார் என் ஆசான்.
 .
மனவளர்ச்சி மட்டும் அன்று கண், காது, அண்ணம், தொண்டை ஆகிய பகுதிகளிலும் இந்த மருந்து சிறப்புடன் பணிபுரிவது கண்கூடு.
.
உணவு செரிக்காமல் இருந்தாலோ, அல்லது உண்டவுடன் பசி எடுத்தாலோ, உண்டவுடன் வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ அந்த வேளைகளில் இந்த மருந்து நினைவுக்கு வர வேண்டும். தசம வீரியத்தில் இதைத் தர வேண்டுமா அல்லது சத வீரியமா என்று உளைச்சல்படத் தேவையில்லை. ஆறாவது சத வீரியத்தில் இது எளிதில் கிடைப்பதில்லை என்றாலும் தலைநகரங்களிலிருந்து இதைப் பெற்று நீரில் கலந்து கொடுத்து நல்ல பயன் கண்டிருக்கிறேன். ஒரு நல்ல மருத்துவர் எல்லா முக்கியமான மருந்துகளையும் ஆறாவது வீரியத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
.
என் ஆசான் அகோனைட்டை பன்னிரண்டாவது வீரியத்தில் மட்டுமே கொடுப்பது வழக்கம். என்றுமே அவர் முயற்சி பலிக்காமல் போனதில்லை. அந்த வீரியத்தில் இது பல இதய நோயாளிகளைக் கூட குணப்படுத்தியிருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
மருந்து நோயாளிக்கேற்றதாக இருக்குமானால், அது தாய்த் திரவத்தில் கூட பயன் தர வேண்டும் என்பது அவருடைய முடிவு.
.
கல்காரியா பாஸ்பாரிகாவைப் பற்றி எண்ணும்போது மருத்துவர் ஷூஸ்லரின் நினைவு வருகிறது. அவர் ஒரு ஜெர்மானியர். சிறந்த சிந்தனையாளர். அவர் ஒரு புதிய கொள்கையை வெளிப்படுத்தினார். மனித உடல் பன்னிரண்டு தாது உப்புக்களால் ஆனது. இவற்றில் எந்த உப்புக் குறைந்தாலும், அது ஒரு வகை நோய்க் குறிகளை வெளிப்படுத்தும். அதற்கேற்ற உப்பை உள்ளுக்குக் கொடுத்து இந்தக் குறைகளை நீக்கி விடலாம்.
கொள்கை அளவில் நம்மால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீரியப்படுத்தப்பட்டால்தான் இந்த உப்புக்கள் பயன்தரும் என்ற கருத்துடையவர்கள் நாம். அவர் கண்டுபிடித்து அளித்தவை பன்னிரண்டு. அவற்றை அவர் தசம வீரியத்தில் வீரியப்படுத்தினார். மெய்ப்பித்தார். பல நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
இவற்றை அவர் மாத்திரைகளாகவும் தயாரித்தார். பொடி மருந்தைத் தயாரித்து அதை நீரில் கரைத்து நேநயாளிகளை அருந்தச் செய்தார். இரண்டு மணிக்கு ஒரு முறை அளித்தார். விஞ்ஞான முறையில் இதற்கு விடையளிப்பது கடினம் என்றாலும், பக்க விளைவுகள் ஏதுமின்றி நோயாளி சீராகிறான் என்பது ஓர் நடைமுறை உண்மை. இதை எந்த மருத்துவனும் மறுக்க இயலாது.
 .
`அறிவுடைய ஒருவன் காட்டிலுள்ள மரங்களின் இலைகளைக் கணக்கிட வேண்டாம். அதன் கனிகளை நோயாளிக்குக் கொடுத்துப் பயன் கண்டால் மட்டும் போதும்’.
 .
வீரியப்படுத்தப்பட்ட மருந்துகள் எப்படிப் பணிபுரிகின்றன என்பது குறித்துப் பல கருத்து மோதல்கள் உள்ளன. `அவற்றில் சிக்கி உன் நேரத்தை வீணாக்காதே. அவை நோயாளியைச் சீராக்குகின்றன என்ற உண்மையை மட்டும் சிக்கெனப் பிடித்துக் கொள்’ என்பது மேதை நாஷ் அவர்களின் அறிவுரை. அது எனக்கு உடன்பாடு.
.
சார்லஸ் டார்வினைப் பற்றி நாம் அறிவோம். அவர் ஓர் அறிவியல்வாதி. மெய்ப்பிக்கப்பட்டாலன்றி அவர் எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. `புழு பூச்சிகள் உண்டு வாழும் செடி வகைகள்’ ( insectivorous Plants ) என்றொரு அற்புதமான நூல் ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். மிகக் குறைந்த அளவில் அம்மோனியம் பாஸ்ஃபேட்டின் இருபது கோடியில் ஒரு பகுதியை அவர் ஒரு செடியில் பிரயோகித்தார்.
.
அது அந்தச் செடியின் உணர்ச்சி இழைகளை எப்படிப் பாதிக்கிறது என்று அறிந்தபோது அவர் எல்லையற்ற வியப்பில் ஆழ்ந்து போனார். இதுதான் ஹோமியோபதியின் அடிப்படை (மர்த்தனம் குணவர்த்தனம்).

.
ஒரு பொருளை நீர்ப்பதாலும், கடைவதாலும் அதன் மருத்துவ வீரியம் மிகும் என்பது ஓர் அடிப்படை உண்மை. இதை அறிவியல் மேதையான டார்வினே ஏற்றுக் கொள்கிறார். நமக்கு வேறு ஆதாரம் தேவையில்லை என்பது என் பணிவான கருத்து.
.
தமது கொள்கைகள் ஹோமியோபதி அன்று என ஷூஸ்லரே கூறியிருக்கிறார். உண்மை. அது வேறு ஏதோ ஒரு மார்க்கம். வீரியப்படுத்தலில் உள்ள உண்மையை அவரும் ஏற்றுக் கொள்கிறார். அதன் மூலம் நோயாளிகள் குணமடைவதைப் பார்க்கிறோம். ஆகவே உயிர்வேதியியல் மருந்துகளை ஹோமியோபதி மருத்தவர்கள் பயன்படுத்தலாமா என்ற கேள்வி வீண் விவாதம். நோயாளி பக்க விளைவுகள் ஏதுமின்றி குணமடைவது மட்டுமே நமக்கு முக்கியம்.
ஹானிமன் கோட்பாடும் அதுதானே?
***** 

புதன், 22 மார்ச், 2017

சுண்ணாம்பும் மருந்தாகும்..


கல்கேரியா கார்பானிகம்(CALCAREA CARBONICAM)

மேஜர் தி.சா.இராஜூ
'
கார்பானிகம் என்பது வேதி இயலை ஒட்டிய பெயர். இதைக் கல்கேரியா ஆஸ்டிரியோரம் ன்றும் அழைப்பதுண்டு. ஆஸ்டியர் என்றால் சிப்பி. ஆகவே இது இயற்பெயர்.
சிப்பி அல்லது கிளிஞ்சலை ஒரு துணியில் பொதிந்து வென்னீரில் நனைத்துத் தொங்கவிடுவதுண்டு. ஆறு மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் அதனுள் வெண்ணையைப் போன்ற சுண்ணாம்பு இருக்கும். சுக்காங்கல்லை வேக வைத்துத் தயாரிக்கும் சுண்ணாம்பை விட இது மிருதுவாகவும் இருக்கும். தாம்பூலம் தயாரிப்பவர்கள் விரும்பி உபயோகிக்கும் பொருள் இது. எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இது சுண்ணாம்புதான். மனித உடலின் வளர்ச்சிக்கு இது மிகவும் தேவையான பொருள்.
'
ஒரு சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு இளைஞர் ஒருவர் என்னைக் காண வந்தார். அவர் ஒரு பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்.
குழந்தையின் தலை சற்றுப் பெரிய அளவு. வயிறு பெருத்திருந்தது. மந்தமான பார்வை. பற்கள் முளைக்கவில்லை. கால் கைகள் சூம்பியிருந்தன. நாடித் துடிப்பைப் பரிசோதிக்க முயன்றபோது உடல் குளிர்ந்திருப்பதை உணர முடிந்தது.
`குழந்தையின் உடல்நிலை பற்றிச் சொல்லுங்கள்’ நண்பரை வேண்டினேன்.
அவர் துயரம் கப்பிய குரலில் பேசினார்.
'
"இதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. நடக்கவோ பேசவோ இல்லை. நகரத்தின் சிறந்த குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) அவர் குழந்தையின் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது. ஊசி மூலம் அதை ஏற்ற வேண்டும் என்று அவர் பரிவுரை செய்திருக்கிறார். குழந்தையோ மருத்துவரைக் கண்டாலே பதறுகிறான். என் குடும்ப நண்பர் உங்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்று கூறினார். அதனால தான் உங்க்ளைக் காண வந்தேன்."
'
ஜேம்ஸ் டைலர் கெண்ட் எழுதிய புத்தகத்தின் 317-ஆம் பக்கத்தைப் பிரித்து அவரிடம் கொடுத்தேன். தயவு செய்து இதைப் படியுங்கள்.
ஒரு முறை படித்தார். தலையை ஆட்டிக் கொண்டார். மீண்டும் படித்தார். `விளங்குகிறது’ இந்தஇரண்டு முறைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எனக்குப் புரிகிறது. `சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது. அதனால்தான் குழந்தையின் உடற்கூற்றில் இத்தகைய கோளாறுகள்’ என்று நான் சந்தித்த நிபுணர் கூறினார்.
`உணவிலுள்ள சுண்ணாம்புச் சத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்தக் குழந்தையின் உடற்கூற்றில் இல்லை என்பது உங்கள் வாதம்’
'
`இன்னும் ஆழ்ந்து படியுங்கள். சுண்ணாம்புச் சத்தைச் செரித்துக் கொள்ளும் திறன் இல்லாத குழந்தைக்கு மேலும் மேலும் அந்தச் சத்தை ஊட்டுவதனால் என்ன பயனைக் காணமுடியும் என்று ஆவேசத்துடன் வினவுகிறார் டாக்டர் கெண்ட்.
`கல்கேரியா நோயாளி’ என்ற புதிய இனத்தையே அவர்கள் உருவாக்குகிறார்கள் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார். அடுத்து வீரியப்படுத்தப்பட்ட சுண்ணாம்பை அந்தக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் வெகு விரைவில் நோயாளியை குணப்படுத்திவிட முடியும்
என்றும் அவர் எழுதுகிறார்.
அவ்வாறே நிகழவும் செய்தது. அந்த முறை எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற கருத்தினால் உந்தப்பட்டு இதை இங்கு விவரமாகவே எழுதுகிறேன்.
'
குழந்தையின் பெயர்-செம்மல்
வயது-பதினான்கு மாதம்
குறிகள்- வீங்கிய வயிறு, பெரிய தலை, சூம்பிய வளைந்த கால்கள், தலைப் பகுதியில் அதிகமான வியர்வை. சீரான மலக்கழிப்பு இல்லை. உண்பது மிகக் குறைவு. தலைமுடி ஒரே பிசுபிசுப்பு. மந்தமான பார்வை. நாடித்தடிப்பு சீராக இல்லை.
'
பத்தியம்- காஃபி, தேனீர் அறவே விலக்கல். பால், புழுங்கலரிசிக் கஞ்சி சிறிது கீரை, கஞ்சியுடன் பயற்றம்பருப்பை வேக வைத்துக் கலக்கலாம். பூவன் பழம், தற்போதைக்கு எண்ணெயில் பொறித்த பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
'
மருந்து- சல்பர் 6, 30 மூன்று நாள் இடைவெளியில் ஒரு வாரம் பொறுத்து கல்கேரியா கார்பானிக்கம் 6, 30 இதுவும் மூன்று நாள் இடைவெளியில், மீண்டும் ஒரு வாரம் பொறுத்து கல்காரியா 200 இறுதியில் டியூபர்குலினம் 200 இரண்டு உருண்டைகள்.
'
சில வேளைகளில் மருத்துவனே வியக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன. சிறுவன் செம்மல் சீராக மலம் கழித்தான். உணவைச் சுவைத்து உண்டான். ஆறாவது வாரத்தில் பற்கள் முளைக்கத் தொடங்கின. தலையில் கரு முடி. சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க முயற்சி செய்தான். மூன்று மாதம் பொறுத்துத் தளர் நடை, கண்களில் புதிய தோற்றம். நன்றாக விளையாடவும், முரண்டு பிடித்து அழவும் செய்தான். ஓராண்டில் சொற்களைத் திரும்பக் கூறினான்.
'
நண்பர் ஆரோக்கியம் தற்போது என் நெருங்கிய தோழர்களில் ஒருவர். அவர் பணிபுரியும் ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
மதர் சுப்பீரியர் நேரில் வந்து என்னைப் பாராட்டினார். மருத்துவத் தொண்டைப் போற்றினார். இந்தப் புகழுரை அனைத்தும் மேதை ஹானிமனுக்குச் சேர வேண்டியவை. நான் அடக்கத்துடன் பதில் அளித்தேன்.
'
ஒருவகை உடற்கூற்றிற்கேற்ற அற்புதமான மருந்து இந்த கல்காரியா கார்பானிக்கம் என்று எனக்கு உறுதியாக எடுத்துக் கூறியவர் என் ஆசான். ஒரு நோயாளியை நன்கு பரிசோதித்து பிறகு அவர் கல்கேரியா பிரிவைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்த பின்பு அடுத்து அவருடைய எந்த வகைச் சுகவீனத்திற்கும் கல்காரியா மற்றும் அதன் தொடர் மருந்துகள் மட்டும் போதுமானவை என்பது அவருடைய உறுதியான பரிவுரை. இதற்கு நிகரான உடற்கூற்று மருந்து ( CONSTITUTION REMEDY) எதுவுமே இல்லை என்று வில்லியம் போயரிக் சாய்வு எழுத்துக்களில் வரைகிறார்.
.
ஹோமியோபதி மருத்துவத்துறையில் நிபுணர்களான பெரியோர்கள் இந்த மருந்து குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து அருமையான நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவை படிப்பதற்கும் சுவையாக இருக்கும். கூடவே இந்த வட்டத்திற்குள் வராத மனிதர்களே கிடையாது என்ற எண்ணமும் உண்டாகி விடும்.
...
இந்த மருந்துடன் ஆர்சனிக்கம்(CALC-ARS), காடி(CALC-ACET), ஃப்ளோரிக் ஆசிட்(CALC-FLOUR), ஐயோடின்(CALC-IOD), பாஸ்பரஸ்(CALC-PHOS), சல்பர்(CALC-SULPH) ஆகியவற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தனித்தனி மருந்துகளாகத் தயாரித்து மெய்ப்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு இயல்புகள், மனத்தளவிலும் உடலளவிலும்.
'
கார்பாலிக் அமிலத்துடன் கலக்கப்பட்ட இந்த கல்காரியம், எந்த வகையில் பணிபுரிகிறது என்பதை அறிந்து கொள்வதே ஒரு சிறந்த மருத்துவப் பயிற்சி. சுரப்பிகளின் விளக்கம், அழற்சி, செயல் மரப்பு, உதிரத்தில் நீர்ச் சத்துக் குறைந்து போதல், திசு நார்களின் தளர்ச்சி என்று இதனால் சீர்படும் கோளாறுகள் எண்ணிலடங்கா.
'
மேதை ஹானிமன் காலத்தில் தைராய்டு, பிட்யூட்ரி ஆகிய சுரப்பிகள் குறித்து அதிகமான அளவில் ஆராய்ச்சிகள் நடக்கவில்லையென்றாலும் அந்தச் சுரப்பிகளையும் ஊக்குவிக்கும் திறன் இந்த மருந்துக்குள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். சில மாதருக்குச் சினைப்பையின் இயக்கம் தடைப்பட்டுப் போகும். இதற்கு அடிப்படையான நோய்க்கு முதல் காரணம் தைராய்டு சுரப்பியின் செயலற்ற நிலை என்று, இந்நாளைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மாதாந்திர ஒழுக்கைச் சீர் செய்யும் மருந்து இது என்ற உண்மையை அன்றே ஹானிமன் கண்டுபிடித்திருக்கிறார். மிகக் குறைந்த இடைவெளியிலும், மிக அதிகமான போக்கும் இருந்தால்அப்போது தேவைப்படுவது இந்த மருந்து தான். பொதுவாக ஆண் மருத்துவர்கள் அணுக அஞ்சும் பாதை இது.
'
கட்டியாகவும், கருநிறத்திலும், கூழ் வெள்ளையாகவும் உறுப்பிலிருந்து வெளிப்படு இருக்குமானால் அப்போது என்ன செய்வது என்று பல அனுபவமுள்ள மருத்துவர்களே திணறுவதுண்டு. இதை நான் கண்டிருக்கிறேன். `இது தனித்துறை இதை பெண் இனத்துறை (கைனகாலஜிஸ்ட்) மருத்துவர்கள் மட்டுமே சீராக்க முடியும்’ என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால் என் ஆசான் அத்தகைய நோயாளிகளையும் அணுகி, பரிவுடன் உரையாடி, விவரங்களை அறிந்து கொண்டு ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுப்பார். அதில் கல்காரிய கார்பானிக்கத்தின் பங்கு மிகுதியாக இருக்கும்.
'
இன்று பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய உடற்கூற்று இயல்புக்கு ஒவ்வாத பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் மாதப் போக்கை விரைவுபடுத்தவும், தள்ளிப் போகவும், பல மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கென ஹோமியோபதி மருந்துகள் தேவை என்று வேண்டிப் பலர் எங்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுடைய வேண்டுகோளை என் ஆசன் உறுதியுடன் நிராகரித்து விடுவார்.
'
பெண்கள் கடுமையான உடல் பயிற்சியிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்பது தவறு என்று பலர் ஒரு இயக்கமே நடத்துகிறார்கள். வரவேற்கிறோம். இடுப்பளவு தண்ணீரிலும் சேற்றிலும் நின்று உழைக்கும் மாதர்களையும் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டாமா?
அவர்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படைச் சுகாதார வசதிகள் கூட இல்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் நலம்.
'
பெண்ணின் சிறப்பே தாய்மை. அவர்களுடைய பிறப்புறுப்பின் இயல்பான போக்கைத் தடை செய்வதும், மாற்றிவதும் அவளுடைய பெண்மையைக் குலைப்பதாகும் என்று என் ஆசான் கூறுவது வழக்கம்.
கருத்தடை மருந்துகளுக்காகப் பலர் அவரை அணுகுவார்கள். `நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்கு மட்டுமே இந்த மருத்துவ முறை பயன்படும். அந்த உறுப்பைக் குலைப்பதற்கு இது உதவாது என்றே அவர் கண்டிப்பாகக் கூறி விடுவார். கருக்கலைப்பையே உயிர்க் கொலை என்று வெளிப்படையாகத் துணிந்து கூறியவர் அன்னை தெரேசா மட்டுமே. அவருடைய தொண்டிற்கு நிகர் எது?
'
கல்காரிய கார்பானிகம், பல்சட்டிலா இரண்டையும் மாற்றி மாற்றிக் கொடுத்து பல மாதர்களின் சினையுறுப்புக் கோளாறுகளைக் குணப்படுத்திய பெருமை என் ஆசானுக்குண்டு. (பல்சட்டிலா ஒரு பெண்கள் மருந்து. தாவர இனத்தைச் சேர்ந்தது). இதைத் திரு. டி.எஸ்.ஐயர்(THE BEGINNERS GUIDE OF HOMOEOPATHY BOOK AUTHOR -T.S.IYER) ஏற்றுக் கொள்கிறார். என் ஆசானுக்கு ஐயரிடம் பெரும் ஈடுபாடு.
'
திசுக்களின் ஆழத்தில் முளை விட்டு கிளக்கும் பல மருக்களையும், கட்டிகளையும் இது கருக்கி விடும். அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த இயலாது என்று கைவிட்ட பல நோயாளிகளை இது சீராக்கிருக்கிறது. சிலருக்கு மூக்கினுள்ளும், அண்ணத்திலும் முட்டு முட்டாக உண்ணிகள் கிளைக்கும். அவைகள் அனைத்தையும் இந்த மருந்து உதிரச் செய்துவிடும்.
ஹோமியோபதி மருத்துவத் துறையில் நோய்களுக்குப் பெயர் கிடையாது. ஆனால் நோயாளிகளுக்கு மருத்துவப் பெயர் உண்டு.
'
ஒரு மனிதரின் தோற்றம், நடைமுறை, பருவ மாறுதல்களினால் அவர் பாதிக்கப்படும் முறை, உள இயல்பு ஆகிவற்றைக் கொண்டு இந்தப் பெயர் முடிவு செய்யப்படுகிறது.
'
என் ஆசானின் பார்வை மிகவும் கூர்மையானது. அவர் மருத்துவமனையில் நுழையும் முன்னர், இரு மருங்கிலும் அமர்ந்திருக்கும் அன்பர்களைப் பார்வையிடுவார். உள்ளே தமது இருக்கையில் அமர்ந்ததும் என்னை அருகில் அழைத்து இடது வரிசை மூன்றாவது நபர் செப்பியா(SEPIA), அடுத்தவர் லில்லியம் டிக்ரினம்(LILIUM TIGRINUM) என்று தணிந்த குரலில் தெரிவிப்பார் அடுத்து அந்த நோயாளி உள்ளே நுழையும்போது அவருடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும். இந்த வகையில் தமது சக ஊழியர்களுக்கு அவர் மருத்துவ அறிவை அளிப்பார்.
'
அந்த நோக்கில் ஒரு கல்காரிய நோயாளி எப்படி இருப்பார் என்று பர்hப்போமா?
உடல் எலும்புகளின் வளர்ச்சி முழுமையாக இராது. கோணலாகவும் இருக்க வாய்ப்புண்டு. எதிலும் ஒரு மந்தமான போக்கு, மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டிலும் இதே நிலை. மேனி நிறம் வெளுத்திருக்கும். ஊதிப் போன உடல்வாகு.
'
குளிரைத் தாங்கவே இயலாது. கால்களில் ஈரமேலாடை அணிந்திருப்பதைப் போல உடல் நடுக்கம். அதிகமாகத் தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு இந்த நிலை இருக்கும். எந்தச் செயல் புரியவும் தயக்கம். இதன் விளைவு என்ன ஆகுமோ என்ற மிகுதியான கவலை, தலையில் அக்குளிலும் மிகுதியான வியர்வை. இரவிலும் கூட வியர்வை இருக்கும். உணவு எளிதில் செரிமானமாகாது. எதிர்த்து வரும் புளித்தேப்பம், வாந்தி, வயிற்றுப் போக்கு.
'
உடல் தளர்ச்சி, கடினமாக உழைப்பே மேற்கொள்ள இயலாது. அதிகத் தொலைவு நடக்க இயலாது. மாடி ஏறக்கூடத் தயக்கம். மூச்சிறைக்கும். தள்ளாடும் நிலை. பளுவான பொருளைத் தூக்கினால் உடலில் பிடிப்பு ஏற்பட்டு விடும்.
....................
ஒரு கல்கேரியா வகையினன் பிராணிகளிடம் மிகவும் அன்பாக இருப்பான். அவைகளிடம் பாசம் மிகுந்த பிணைப்பு அவைகளை வளர்ப்பதில தனியானதோர் ஆவல்.
'
இந்த அடித்தளமுள்ள ஒரு மனிதருக்குக் கல்கேரியா கார்பானிகம் மற்றும் அதன் தொடர்புள்ள மருந்துகள் உடனடி நிவாரணம் தரும். எத்தகைய சுகவீனமாக இருந்தாலும் சரி. இது மிகவும் பயனுடையதாக அமையும்.
மருத்துவர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எத்தகைய நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பதை யாவரும் அறிவார்கள். இலக்கியச் சுவையுடன் கூடிய அவடைய பேருரைகள் நமக்குச் சிறந்த மருத்துவ அடிப்படையை அளிக்கும். அவர் அல்லோபதித் துறையில் பேரரறிவு பெற்றவர். பின்னாளில் அந்த முறை எவ்வளவு பயனற்றது என்பதையும் அவர் ஏளனமாகக் குறிப்பிடுகிறார்.
.
..... சில இளம் குழந்தைகளுக்கு உச்சிக்குழி மூடாது. மண்டை ஓட்டு எலும்புகள் சரிவர வளர்ச்சி அடையாததுதான் இதற்குக் காரணம். தலையின் மேல் கை வைத்தால் நெஞ்சின் துடிப்பை உணரலாம் ஆறு மாதமே ஆன அத்தகைய பச்சிளம் குழந்தையை என்னிடம் கொண்டு வந்தார்கள். நான் தயங்கினேன். குழந்தையின் உடல் நிலை என்னைத் தடுமாறச் செய்தது. ஓரளவு மருத்துவ அறிவு பெற்ற எனது நிலையே அவ்வாறு இருக்குமானால் பெற்றோர்கன் மனநிலை பற்றி எப்படி விவரிப்பது? அர்களுடைய கண்களில் நீர் முட்டிற்று.
.
அந்த வேளையில் நான் என் ஆசானை நினைத்துக் கொண்டேன். துணிவை வரவழைத்துக் கொண்டு செயலில் இறங்கினேன். மூன்று மாதங்களில் மண்டை எலும்புகள் கூடிவிட்டன. இது எனக்கு வியப்பை அளித்தது. நான் கொடுத்தவை நான்கே மருந்துகள். கந்தகம் 30, 200 ஒரு வார இடைவெளியில் அடுத்ததாக கல்காரி கார்ப் 30, 200 இதுவும் ஒரு வார இடைவெளியில். இடையே தொடர் மாத்திரைகள். இதன் பயனை மருத்துவர் கெண்ட் உறுதி செய்கிறார். இந்த மாத்திரைகள் மிகவும் மென்மையாக, பக்க விளைவுகள் ஏதுமின்றி நிரந்தரமாகக் குணப்படுத்தும் என்று தமது அனுபவத்தை எழுதுகிறார். (பக்கம் 144).
.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஊசி முனையளவு வீரியப்படுத்தப்பட்டு கந்தகம், தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் அதே அளவு கல்கேரியா கார்பானிகம் கொடுத்து விட்டால் ஸோரா என்ற நஞ்சு, குழந்தையைப் பாதிக்காது என்று டி.எஸ்.ஐயர் எழுதுகிறார். எத்தகைய ஆழ்ந்த பயன் மிக்க பரிவுரை? மருத்துவ உலகமே இவருக்கு கடமைப்பட்டிருக்கிறது.
.
ஒரு கல்கேரியா அன்பரால் கடினமாக உழைக்கவே இயலாது. அவன் தொடாந்து முயற்சி செய்தால் காது மடல்கள் சூடாகி விடும். நெற்றிப் பொட்டுத் தெறிக்கும். தலை சுற்றும், கண் இருட்டும். சூழ்நிலையையே மறந்துவிடுவான். தொடர்ந்து சிந்திக்கவே இயலாத ஒரு குழப்பமான சூழ்நிலை. நினைவாற்றலே இராது. ஒரு செய்கையைத் துவங்குவதற்காகச் சென்றவன் அதற்கேற்ற தலத்தை அடைத்ததும்தான் எதற்காக வந்தோம் என்பதையை மறந்து விடுவான்.
.
இந்த நிலையிலிருந்த அன்பர் ஒருவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். பல கேள்விகளுக்கு அவரால் விடை தரவே இயலவில்லை. உடன் வந்திருந்தவரை என் ஆசான் குடைந்து குடைந்து பல கேள்விகள் கேட்டார். எல்லா வகை மருந்துகளும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. அல்லோபதி, சித்த வைத்தியம், யுனானி, ஆயுர்வதேம் எதுவுமே மீதமில்லை. பல தலங்களுக்கு அவர் சென்று வந்தார். நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் மூழ்கி வந்திருந்தார். பல பெரியோர்களைச் சந்தித்து விட்டு வந்திருந்தார்.
விவரங்களை நான்தான் குறித்துக் கொடுத்தேன். அதை ஊன்றிப் படித்த என் ஆசான் கீழ்காணும் வகையில் பரிவுரை செய்தார்.
.
ஆறு நாட்களுக்கு சாக்லாக் காலையிலும், மாலையிலும், ஏழாவது நாள் கந்தகம் வீரியம் 30 இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு கல்கேரியா கார்ப் 30 அடுத்த வாரம் பாஸிலினம் 200.
`இடையில் சாக்லாக் நிறையக் கொடுங்கள்’ புன்முறுவலுடன் என்னிடம் கூறினார் ஆசான்.
ஒரு மாதத்திற்குப் பின் வந்த அந்த அன்பன் போக்கு மாறியிருந்தது. வந்து வணங்கினார். என் ஆசான் எழுந்து நின்று அவரை அமரும்படி வேண்டினார். அவர் மறுத்து விட்டார்.
 .
`எனக்குப் புதிய உயிரை அளித்து விட்டீர்கள். உங்கள் உதவியை என்னால் மறக்கவே இயலாது என்றென்றும் நான் உங்களை நினைத்துக் கைதொழுவேன். அவருடைய விழிக்கடையில் நீர் சுரந்தது குரல் கம்மி விட்டது.
.
அந்த அன்பருடைய தமையன் மீண்டும் ஒரு முறை எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். இப்படி ஒரு மருத்துவ முறை இருக்கிறது என்றே எனக்குத் தெரியாது நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் என்று கூறித் திரும்பினார்.
.
அவர் கூற்று முழு உண்மை.
.
கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எனினும் இந்த மருந்து குறித்து எல்லாத் தகவல்களையும் இயம்பியிருக்கிறேனா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே மறு மொழி. அத்தனை ஆழமும், பரப்புமுடையது இந்த ஔடதம்.
.
இந்த அறுவை சிகிச்சை முறை வியக்கத்தக்க வகையில் முன்னேறி விட்டது. அது பெரிய சாதனை. மறுக்க இயலாது. தோல் திசு எதையும் கிழிக்காமல் குழலை உட்செலுத்தி ஒளிக்கதிர்களைப் பாய்ச்சும் முறை (எண்டோஸ்கோப்) வந்துள்ளது. உதிரம் பெருகாமல் உறைய வைத்து இந்த சிகிச்சை முறையைக் கையாளுகிறார்கள் (லேசர்).
.
.. ..பெருங்குடல் பாதை, சிறுநீர்க் குழல், இதய நாளங்கள், மூளைப்பகுதியின் உதிரக் குழல்கள் ஆகியவற்றில் மருக்களும், சுவர்களும், திட்டுக்களும் கிளைப்பதுண்டு. இந்த மருத்துவ முறையினால் அந்தத் திசுக்களைத் தீய்த்து ஆவியாக்கி விட முடிகிறது என்றாலும், அவை மீண்டும் கிளைக்காமல் தடுக்க முடிவதில்லை.
.
அந்த வகையில்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் நிகரற்ற தன்மை ஒளி விடுகிறது.
ஒரு வீக்கம் வலமிருந்து இடம் போகிறதா?
அப்போது லைக்கோபோடியம்(LYCOPODIUM)
இடமிருந்து வலமா? லாக்கசிஸ்(LACHESIS)
குறுக்குவெட்டா? அப்போது அகாரிகஸ்(AGARICUS)
இடமும் வலமும் மாறி மாறித் தோன்றுகிறதா? லாக்கானினம்.(LAC-CANINUM)
.
இந்த உண்மையை என் அல்லோபதி நண்பர்கள் ஏற்கவே மறுக்கிறார்கள். இதை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டிய பிறகு அவர்களுடைய வியப்பிற்கு எல்லையே இருப்பதில்லை. எத்தகைய ஆழத்திலுள்ள கட்டிகளையும் இது காணாமல் செய்து விடுகிறது. மீண்டும் கிளைக்க விடுவதில்லை. இந்தத் தகவலைச் சாய்வு எழுத்துக்களில் தருகிறார்கள் நிபுணர்கள். அந்த உண்மை மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே அதற்குப் பொருள்.
.
ஆனால் பொறுமை வேண்டும், கவனி, பொறு என்று எச்சரிக்கிறார் கெண்ட். நமக்குப் பொறுமை இல்லை.
கல்காரியா கார்பானிகாவை அடுத்து பெர்பெரிஸ் வல்காரிஸைக் (BERBERIS VULGARIS)கொடுத்து சிறுநீர்ப் பாதையிலுள்ள தடைகளை நீக்கிக் காட்டியபோது வெளி நாட்டில் உயர் கல்வி பெற்ற மேதாவிகள் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இன்று வரை விரல் அங்கேயே உள்ளது.
இன்னும் தோல் பகுதி? எத்தகைய வியப்புத் தரும் தகவல்கள்? எழுதவே இடமில்லை.
இந்த அரிய உண்மைகளை மெய்ப்பித்தவர் மேதை ஹானிமன் என்று எண்ணும்போது நமது இரு கரங்களும் உயரே எழும்புகின்றன.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து.....

keywords: ஓமியோபதி, மருத்துவம்,obesity, உடல் பருமன்,குண்டு,கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய்,பயம்,கவலை,எலும்பு பலவீனம்,

செவ்வாய், 14 மார்ச், 2017

நைட்ரிக் அமிலம்- மேஜர் தி.சா.இராஜூ


1
நல்ல வெயில் நேரம்.  மரத்தடி நிழலில் பேருந்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன்.  அழகான கார் அருகில் வந்தது.  அதிலிருந்து நடு வயதினர் ஒருவர் இறங்கினார்.
 `அய்யா, என்னுடன் வரலாமே?’
அவரை நான் முன்பின் சந்தித்ததில்லை.  சிறிது தயங்கினேன்.
`எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்.  தயை செய்து வர வேண்டும்’
பின் இருக்கையில் அமர்ந்தேன்.  அதில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி உட்கார்ந்திருந்தாள்.  என்னைக் கண்டதும் ஓர் அறிமுகப் புன்னகை.  விரல்களைக் குவித்து நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவித்தாள்.  கார் வழுக்கிக் கொண்டு நகர்ந்தது.

`உன் பெயர் என்ன குழந்தாய்?’
`மெஹ்தாப்’ அவள் தணிந்த குரலில் விடையிறுத்தாள்.
`எந்த வகுப்பில் படிக்கிறாய்?’
`ஐந்து’ பணிவுடன் பதிலிறுத்தாள்.  அவளை ஏறிட்டு நோக்கினேன்.  நல்ல நிறம்.  கூந்தல் கருமையாக இல்லை.  அகலமான கண்கள்.  எடுப்பான மூக்கு.  காதில் பொன்னகை ஊசலாடிற்று.

`மதர்ஸாவுக்குப் போவதுண்டா?’
மதர்ஸா என்பது அராபி மொழி கற்கும் பாடசாலை ஆகும்.
`ஓ தினமும் போகிறேன்’
`அங்கு எத்தனை பெண்கள் படிக்கிறார்கள்?’
`மொத்தம் இருபது பேர் இருக்கிறோம்’
`ஆண் பிள்ளைகள் உண்டா?’
`அவர்களும் வருகிறார்கள்’ ஆனால் அவர்களுக்குத் தனியறை.  அங்கு நிறைய பேர் படிக்கிறார்கள்.  மௌல்லி பரக்கத் அலி அவர்களுடைய ஆசான்’.
இளநீர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் கார் நின்றது.  நால்வரும் அருந்தினோம்.  இதமான அனுபவம்.

`நான் இங்கே இறங்கி விடுகிறேன் அன்பரே.  இங்கிருந்து எங்கள் ஊருக்கு நிறையப் பேருந்துகள் போகும்’
`நானே உங்களை வீட்டில் கொண்டு போய்விட்டு விடுகிறேன்’.
`அந்த சிரமம் வேண்டாம் ஆனால் உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்?’

`இந்த மாவட்டத்தில் உங்களை அறியாதவர் யார்?  நான் வெகு விரைவில் குழந்தயை உங்களிடம் அழைத்து வரவிருக்கிறேன்’

கார் புறப்பட்டுச் சென்றது.  எனக்கு குருதேவரின் நினைவு வந்தது.
 `முன்பின் தெரியாதவர்களை நண்பாக்கினாய்’
 என்று அவர் எழுதுகிறார்.  அதற்குக் காரணம் சிறிய அளவில் நான் செய்யும் மருத்துவத் தொண்டு.

இரண்டு நாள் பொறுத்து அவர் என் மருத்துவமனைக்கு வந்தார்.  மெஹ்தாப் வணக்கம் தெரிவித்தாள்.  தூய வெள்ளை ஆடை.  தலையில் பச்சை நாடா.  ஒரு குட்டித் தேவதை.
இப்போது அந்தச் சிறுமியை உற்று நோக்கினேன்.  மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தேன்.  நாடி இயக்கம் சீராக இல்லை.  அந்த இடத்தில் சிறிய கரளை.  இது மாதிரி இன்னும் எங்கெல்லாம் இருக்கிறது?’
அவள் புரிந்து கொள்ளத் திணறினாள்  அவருடைய தந்தை அந்தக் கேள்வியைத் திரும்பவும் கேட்டார்.  அவள் தொண்டையைக் காட்டினாள்.  தாடைக்கும் தொண்டைகும் இடையில் இருபுறத்திலும் சிறு கட்டிகள்.  அவர் தொடர்ந்து பேசினார்.
  `குழந்தைக்கு சற்று காது மந்தம்.’
அன்று நான் அவளுடன் பயணம் செய்தபோது என் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடையிறுததை நினைத்துப் பார்த்தேன்.
  `நகரும் ஊர்தியில் செவி தெளிவாகக் கேட்கும்.  மற்ற இடங்களில் மந்தமாகிவிடும்’ என்று ஒரு மருந்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கெண்ட் (பக். 794) அவளுடைய தந்தை தொடர்ந்து பேசினார்.
`........... அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது.  குளிர் காற்று வீசினால் போதும் உடனே தொண்டை கட்டிக் கொள்ளும்.  ஏஸி அறைக்குள் வரவே கூசும்.   அடிக்கடி மூட்டுக்கு மூட்டு வலி என்று சொல்கிறாள்.  உணவு சரியாக செரிப்பதில்லை.  சிறிய காயம்பட்டால்கூட ரத்தம் வந்து விடும்.
`அது என்ன நிறம்?`
`சிவப்பு, கருஞ்சிவப்பு, சிரமப்பட்டு படிக்கிறாள்.  ஆனால் மனதில் நிற்பதில்லை  சரியாகக் காது கேளாததினால் ஆசிரியர்கள் சொல்வது புரிவதில்லை’
ஒன்றும் கவலைப்படாதீர்கள் அன்பரே, தொடர்ந்து ஒரு மாதம் மருந்து சாப்பிடட்டும்.  அதற்குப் பிறகு நீங்களே வியப்படைவீர்கள்.

ஆறாவது வீரியத்தில நான்கு பொட்டலங்கள்.  இறுதியில் இரு மாத்திரைகள் லூட்டிகம்  இரு நூறாவது வீரியம்.
`....... குழந்தை நன்றாச் சாப்பிடுது.  மலம் கழிப்பது சீராக உள்ளது.  மூட்டு வலியும் இப்போது இல்லையாம்.. .. ..’
அதே மருந்தின் முப்பதாவது வீரியம்.  இரண்டு பொட்டலங்கள்.  இரு நாள் இடைவெளியில் வார முடிவில் மெடோரினம் இருநூறு.
`குழந்தை என்னோடுதான் ஏஸி அறையில் உறங்குகிறது.  குரிந்த நீரில் தான் தற்போது குளியல்.  மகிழ்ச்சியுடன் பேசினார் தந்தை.  அந்தச் சிரிப்பு என்னையும் பற்றிக் கொண்டது.
`....... தலைமுடி மிகவும் உதிர்கிறது.  வெளிநாட்டுத் தைலம் ஒன்று என் மைத்துனர் வாங்கி வந்தார்..`
`தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்.  அது தூய்மையானதாக இருக்க வேண்டும்’
’உள்ளுக்கு டானிக் ஏதாவது?.. ..’
`உண்ணும் உணவு சீராக செரிமானமானால் அதுவே போதும்.  நீங்கள் உண்ணும் உணவு சத்துள்ளதாயிற்றே?’
அந்த ஆண்டுத் தேர்வில் மெஹ்தாபுக்குச் சிறப்பிடம்.  காது கேட்பதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.  சளி அறவே இல்லை.
`ரமலான் மாத இறுதியில் ஒரு கூடை பழங்களுடன் வந்தார் அவள் தந்தை.  என் ஆசானை போல ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை மதர்ஸாவுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டேன்.

ஏற்ற மருந்து கொடுத்துவிட்டால் அது எவ்வளவு சிறப்பாகப் பணி புரிகிறது என்பதை எண்ணி மருத்துவனே வியப்படைவான் என்று எழுதுகிறார் ஜார்ஜ் ராயல்.  அது முழு உண்மை.

2.
அன்று நிவாரணம் பெற வந்ததும் ஒரு பெண் குழந்தைதான்.வசதியான குடும்பம்.  ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த குழந்தை.  சத்துமிக்க உணவைப் புசிப்பவர்கள்.

பெயர் - பொற்செல்வி  வயது - ஏழு.
இரண்டாம் வகுப்பில் படிக்கும் சுறுசுறுப்பு மிக்க அழகான குழந்தை.  கண்களே பேசும் இயல்புடையவை.
குறைபாடு - ஆசன வாயில் வெடிப்பு கீறினாற் போன்ற இரணம். எரிச்சல்.  கூர்மையான குச்சிகளும், கற்களும் குத்துவதைப் போன்ற உணர்ச்சி.  குழந்தை கழிப்பிடத்திற்குப் போகவே கூசுகிறது.  அந்த அளவு மிகுதியான நோவு.

சிகிச்சை - இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.  களிம்பு தடவினால் தற்காலிகக் குணம்.

`இதற்கு உங்கள் முறையில் மருந்து ஏதாவது இருக்கிறதா?’ என்று அலட்சியமாகவே வினவினார் அந்தக் குழந்தையின் பாட்டி.  அவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் கேட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை.  சிகிச்சை பெறுபவர்களை நான் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று பார்ப்பதும் கிடையாது.  என்றாலும் நான் அந்தக் குழந்தையின் எழிலில், பேச்சில், காட்டும் அன்பில் ஈர்க்கப்பட்டேன்.  ஏன் கிறங்கினேன் என்று சொல்வது கூடப் பொருத்தமாக இருக்கும்.  மருந்தை அஞ்சல் மூலமாகவே அனுப்பினேன்.   நான்கு சிறு பொட்டலங்கள்.  முதலாவது மருந்து, அடுத்தவை இரண்டும் சீனி உருண்டை.  நான்காவது லூட்டிகம் இருநூறு.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினரை ஒரு கலை நிகழ்ச்சியில் சந்தித்தேன்.  பொற்செல்வி என்னை அடையாளம் கண்டு கொண்டு சுட்டிக் காட்டினாள்.  `அதோ டாக்டர் அங்கிள்’.  நான் கையை உயர்த்தினேன். `ஹாய்’.
குடும்பத் தலைவர் என்னை நோக்கி நடந்து வந்தார்.  கூடவே குழந்தையும் வந்தது.  அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு வினவினேன்.  `நலமாக இருக்கிறாயா தாயே?’
பெரியவர் என்னைக் கேட்டார்.  `நீங்கள் தான் மருந்து அனுப்பினீர்களா?’
`ஆமாம்’
`அது ஓர் அற்புதத்தை விளைவித்து விட்டது.   நீங்கள் எத்தனை நாள் சென்னையில் தங்குகிறீர்கள்?’

நான் பதிலளித்தேன்.
`தயை செய்து நாளை மாலை என் இல்லத்திற்கு வருகை தர இயலுமா?’
மறு நாள் மாலை அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.  வாசலிலிருந்த பொமரேனியன் என் காலை மோந்துவிட்டு உள்ளே ஓடிற்று.  உள்ளேயிருந்து பெரியவரும், பொற்செல்வியும் வந்தார்கள்.  மற்றைய குடும்பத்தினரும் என்னைக் காண வந்தார்கள்.
பொற்செல்வியின் பாட்டனார் ஒரு புகழ் பெற்ற மருத்துவர்.  பிரபலமான மருத்துவமனையின் ஆலோசகராக இருப்பவர்.  பல மருத்துவ மாணவர்களை முன்னுக்கு கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.  என்னிடம் பரிவுடனும், கனிவுடனும் பழகினார்.  அவருடைய பணிவான சொற்களில் நான் நெகிழ்ந்து போனேன்.

`நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.  குழந்தை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.  இன்னொரு முக்கியமான தகவல் உங்களுக்குத் தெரிவது நல்லது.  பொற்செல்வியின் தாயார், பாட்டி எல்லோருக்கும் இந்தத் தொல்லை உண்டு..
அவர் தொடர்ந்து உரை செய்தார்.  `உங்களுடைய மருத்துவ முறை முழுமையானது ஹோலிஸ்டிக் ( HOLISTIC) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.  எனக்கு இதில் நிறைய ஈடுபாடு உண்டு.  ஆனால் பயன்படுத்தத் தயக்கம்.  வாழ்நாள் முழுவதும் நோயை அமுக்குவதிலும் (SUPPRESSION)  நோய்ப் பகுதிகளைக் கீறிக் களைவதிலும் செலவிட்டு விட்டேன்’.
அவருடைய புத்தக அலமாரியைப் பார்வையிட்டேன்.  டன்ஹாம், ஃபாரிங்ட்ன், டி.வி. ஆகியோருடைய நூல்கள்.  இடையே ஐயரும் தலைகாட்டினார்.  (மயிலாடுதுறை சுப்பிரமணிய ஐயர்) அவர் எழுதியது ஒரே புத்தகம்தான் என்றாலும் எவ்வளவு பயனுடைய நூல்.  என் ஆசானுக்கு ஐயரிடம் பெருத்த ஈடுபாடு உண்டு.  ஐயர் சொல்லிவிட்ட பிறகு ஐயமே வேண்டாம் என்று அவர் கூறுவது வழக்கம்.
வெளியில் பேச்சரவம்.  பலர் அவரைக் காணக் காத்திருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.  நான் விடைபெற முற்பட்டேன்.  அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு பேசினார்.  நீங்கள் எப்போது சென்னைக்கு வந்தாலும் எனக்குத் தெரிவியுங்கள்.  ஏன்?  நீங்கள் இங்கேயே தங்கலாம்.  வெளிவாசல் வரை வந்து வழி அனுப்பினார்.  குழந்தையின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன்.  எனக்கு ஏதோ குருதேவரின் காபுலிவாலா நினைவுக்கு வந்தது.

பொற்செல்விக்கு நான் கொடுத்த மருந்து நைட்ரிக் அமிலம் முப்பது இரண்டு மாத்திரைகள்.  இந்த மருந்து குறித்து மேதை ஹானிமன் தமது நாட்பட்ட நோய்களில் எழுதியிருக்கிறார்.  அந்த மேதையிலிருந்து மருத்துவர் கோஷால் வரை இதைக் குறிப்பிடுகிறார்கள்.  பூந்தசைப் பகுதியும், மேற்பரப்பும் இணைந்திருக்கும் இடங்களில் தோன்றும் இரணங்களுக்கு இது இணையற்ற மருந்து.
பூந்தசைப் பகுதியும், தோலின் மேற்பரப்பும் இணைந்த எல்லா இடங்களிலும் இது சிறப்பாகப் பணிபுரிவதை நான் கண்டுள்ளேன்.  வாய்ப்பகுதி, நாசி, ஆசனவாய், ஆண், பெண்  சிறுநீர்ப் பாதை, புணர்புழை எங்கு வெடிப்புகள் ஏற்பட்டாலும், சீழுள்ள புண்கள் தோன்றினாலும் இந்த மருந்து அதை விரைவில் சீராக்கி விடுகிறது.  வெட்டைக் கிரந்தி நோய் என்ற சீழ்ஒழுகும் புண்கள் உடையவர்களையும் இது குணப்படுத்துவதைக் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன்.  தூஜா கிரியோசோட்டம், பெட்ரோஸெலினம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது இடையூடாக நைட்ரிக் அமிலத்த்தயும் தருவது என் நடைமுறை.  சீரடைவை விரைவாக்குவதில் இது நிகரற்ற நிவாரணி.

`எயிட்ஸ்` என்று கூவி இருட்டறையில் உழலும் குருட்டுப் பூனையைப் போல் முறையிடுபவர்களைக் கண்டு நான் உளம் நொந்து வருந்துவேன்.  ஏற்புடைய மருந்துகளுடன் லூட்டிகம், மெடோரினம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுத்து அதன் பின் விளைவுகளைக் கவனியுங்கள் என்பதே என் பரிவுரை. எந்த நோயாளிக்கும் மருந்துண்டு என்று கெண்ட் உறுதி கூறுகிறார்.  அதை நம்பலாம்.

3.
நான் வேதியியல் மாணவன்.  அன்று இந்தப் பாடத்தைப் பயிலும் வேளையில் இதை அக்கினித் திராவகம் என்றே அழைத்தார்கள்.  பொற்கொல்லர்கள் இதை அதிகமாக உபயோகப்படுத்துவார்கள் என்பதை அறிந்திருந்தேன்.  பொன்னை இது மாசு நீக்கச் செய்யும் என்று சொல்லுவார்கள்.  அன்று இதன் குறியீடு HNO2  அதாவது ஹைட்ரஜன் (நீரக வாயு) நைட்ரஜன் (வெடி வாயு) ஆக்சிஜன் (பிராண வாயு) தற்போது சென்னைப் பல்கலைக் கழக அகராதி இதை வெடியக்காடி என்று அறிவிக்கிறது (பக்.688) புழக்கத்தில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தி மாணவர்களைக் குழப்புவது தான் அவர்களுடைய குறிக்கோள்.  என் தாய்மொழியை இவர்களிடமிருந்து எவரும் காப்பாற்றி விட இயலாது.
ஆசிடியம் நைட்ரிகம் என்று எழுதி ஆங்கில மொழி இயல் நிபுணர்கள் பயமுறுத்துவார்கள்.  நான் நைட்ரிக் அமிலம் என்றே குறிப்பிடுகிறேன்.  அதன் வேதி இயல் குறிப்பேட்டில் மாற்றம் ஏதுமில்லை. HNO2

மலம் வெளிப்படும் புழையில் நோவு, உதிரப்போக்கு, இளகிய மலம் ஆகியவை இருக்குமானால் மூன்று நிவாரணிகள் நமது நினைவுக்கு வர வேண்டும்.

ஒன்றுபாதரசம் (MERCURIUS SOLUBULUS) 
அடுத்தது எட்டிக்காய்(NUX VOMICA)  
மூன்றாவது நைட்ரிக் அமிலம்(NITRIC ACID) 
மூன்றுமே மலம் வெளிப்படும்புழையில் உள்ள துயரங்களைத் தீர்க்குமாயினும் இவற்றின் சிறப்புக் குறிகள் வெவ்வேறு.
மலம் கழிக்கும் முன்பு, அல்லது கழிக்கும்போது மற்றும் அதற்குப் பின்பும் ஆசன வாயில் கடுப்பு இருக்குமனால்
அப்போது அதற்கேற்ற நிவாரணி பாதரசம்
மலம் கழித்த பிறகு நோவு குறையுமானால் அப்போது நக்ஸ்வாமிகா   வெளிப்பாட்டிற்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கடுப்பு வலி இருக்குமானால் நாம் நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும்..

 துயரம் குறைய வேண்டும் என்பதற்காக அவன் தொடர்ந்து நடப்பான்.  இன்னொரு முக்கியமான குறி கூரிய குச்சி முனைகள் ஆசன வாயைக் குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும்.  அந்த வேறுபாடுகளைத் தெரிந்து நம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  சகட்டுமேனிக்கு மருந்து என்பது ஹோமியோபதியில் கிடையாதே.  எந்த நிலையிலும் பாதரசத்தைப் பின்தொடர்ந்து நைட்ரிக் அமிலம் தரலாம்.  இந்த உண்மையையும் மறந்துவிடக் கூடாது.

மருந்துகளை மியாசத்தின் அடிப்படையில் பிரிப்பது மரபு.  பொதுவாக முதல் மியாசத்திற்குக் கந்தகத்தையும், இரண்டாவது தூஜாவையும், மூன்றாவதற்குப் பாதரசத்தையும் தேர்ந்தெடுப்பார்கள்.   ஆனால் நைட்ரிக் அமிலம் மூன்று மியாசங்களையும் கண்டிக்கும் என்று கற்றவர்கள் கூறுவார்கள். 
 எனது அனுபவ முடிவும் இதுதான்.
  மூன்று மியாசங்களின் விளைவையும் தணிக்கும் இன்னொரு மருந்து கல்காரியா பாஸ்பரிகா(CALCAREA PHOS) 
 உத்திரப்பிரதேசத்தில்  ஒரு நடுவர் இருந்தார்.  அவரது பெயர் தர்பாரி.  அவரை பகவான் ஸ்வரூப் (கடவுளின் உருவம்) என்றே மக்கள் பாராட்டினர்.  குறிகளுக்கு அதிக முக்கியத்தவம் ஏதுமூ தராமல் அவர் கல்காரிய பாஸ்பாரிகாவைத் துயருற்றவர்களுக்கு கொடுப்பார்.  அது நல்ல நிவாரணம் தந்தது.

வடநாட்டில் பிரயாகை என்றொரு புனிதத்தலம் உள்ளது.  கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் அங்கே ஒன்று கூடுகின்றன.  அதற்குப் பிரயாகை என்று பெயர்.  இலாஹாபாத் (அலகாபாத் என்பது பிழை) என்றும் அதை அழைப்பார்கள்.  அந்த ஆறுகளின் கரையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா என்ற திருவிழா நடக்கும்.  அதன் பொருட்டு இலட்சக்கணக்கான அன்பர்கள் குழுமுவார்கள்.  இவ்வளவு மக்கள் கூடுமிடத்தில் தொற்றுநோய் பரவுவது இயற்கை.  அரசாங்கம் எவ்வளவோ நல்முயற்சிகளை மேற்கொள்ளும். எல்லோருக்கும் தடுப்பூசி போடப் பெறும்.  ஆனால இந்தப் பரோபகாரி அங்கு ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் கல்காயா பாஸ்பரிகாவைக் குறைந்த வீரியத்தில் வழங்குவார்.  எவரையும் வாந்திபேதி தாக்கியதில்லை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்  நான் பல ஆண்டுகள் அங்கு வசித்ததன் காரணத்தால் இவ்வாறு உறுதிப்படுத்த முடிகிறது.  பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு  இங்கு வசித்து வந்தார்.  தமது எவ்வளவோ பணிகளுக்கிடையே அவர் ஒவ்வொரு நாளும் பலருக்கு ஹோமியோபதி மருந்துகள் அளித்து வந்த செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இதை ஜவகர்லால் நேருவே தமது நன்பர் ஹரிவிஷ்ணு காமத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இவற்றை எல்லாம் அறிந்து கொண்ட பிறகுதான் பல பேருக்குக் கல்காரியா பாஸ்பாரிகா சிறப்பாகக் குழந்தைகளின் செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுத்தேன்  சத வீரியத்தைக் காட்டிலும் தசம வீரியம் சிறப்பாகப் பயன் அளித்தது.  அவர்கள் குணமடையும் விரைவைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
 தசம வீரியம் ஹோமியோபதியா இல்லையா என்ற பயனற்ற விவாதத்தில் இறங்க வேண்டாம்.   பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் நோயாளியைச் சிரமப்படுத்தாமல்  வீரியப்படுத்திய மருந்தைத் தருவது முக்கியம்.  அனுபவம் மட்டுமே உறைகல்.

பல விவரங்கள் நமக்குத் தெரியாது.  தெரிந்தாலும் அவை குறித்து நாம் சோதனை செய்த பிறகும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.  பளபளப்பான அலுமினியம் காகிதங்களில் மடித்துத் தரப்படும் விலை உயர்ந்த மருந்துகள்தாம் நோயைக் கட்டுப்பத்தும் என்று எண்ணித் தவறான பாதையில் நடக்கிறோம்.  இரண்டு வகை வீரியங்களிலும் கல்காரியா பாஸ் சீராகப் பணிபுரிவதை நான் கண்டிருக்கிறேன்.

  `பொய் புகலேன், சத்தியம் பகர்கிறேன்’ என்று வள்ளலார் அடித்தக் கூறுகிறார்.  

அவ்வாறே நானும் சொல்ல விழைகிறேன்.  பெரும்பாலான நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் சிறந்த மருந்து கல்காரியா பாஸ்பாரிகா.
வயிற்றுப்போக்கு. உதிரக் கழிச்சல் ஆகியவற்றிற்கு மட்டும் நைட்ரிக் அமிலம் மருந்து என்பது அன்று.
 அது ஒரு பல்முனை நிவாரணி.

ஹோமியோபதி அற்புதங்கள் தொடரும்....

திங்கள், 13 மார்ச், 2017

அம்மோனியா என்ற அருமருந்து


[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]

பல ஆண்டுகளுக்குப் பின் நான் மீண்டும் அனிருத்தனைச் சந்தித்தேன். பங்களாதேஷ் விடுதலைப் போரில் அவன் என் படைப்பகுதியில் பணிபுரிந்தான். பாகிஸ்தானியக்குண்டு ஒன்று வெடித்து அதன் விளைவாக அவன் ஒரு காலை இழந்தான். செயற்கைக் காலுடன் அவன் தொடர்ந்து பணியாற்றினான். ஊனமடைந்த நிலையிலும் அந்தப் போரில் பங்கு பெற்றவர்கள் பணிபுரியலாம் என்று அப்போதைய பாரதப் பிரதமர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அனிருத்தன் ஊனமுற்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவன் போரில் மரணமடைந்து விட்டதாகக் குடும்பத்திற்குச் செய்தி அனுப்பச் செய்தான்.

அதற்குக் காரணமிருந்தது. அவனுக்கும் ஓமனக்குட்டிக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஊனமுற்ற நிலையில் அவள் அவளை மணக்க விரும்பவில்லை. ஓமனக்குட்டியோ திலகவதியைப் போல் அருஞ்செயல் புரிந்தாள். வாழ்க்கையைத் துறந்து கன்னிமாடத்தில் சேர்ந்து சமயத்தொண்டாற்றினாள். இந்த விவரங்கள் எல்லாம் அனிருத்தனே என்னிடம் கூறி தன் மனச்சுமையைக் குறைத்துக் கொண்டான்.
கோப்புகளில் என் கையொப்பம் பெறுவதற்காக சிலர் வரிசையில் நின்றனர். அவர்களில் அனிருத்தனும் இருந்தான். காத்திருந்த பத்து நிமிடங்களில் அவன் பலமுறை கழிப்பிடத்திற்குச் சென்று திரும்பினான். தும்மலும், இருமலும் ஒரே மூக்கடைப்பு அருகில் வந்ததபோது அவருடைய கைக்குட்டையில் பல கருப்புத் திட்டுகள் இருந்ததைக் கண்டேன்.
‘வழி நேரம் ஸாரினைக் காணான் ஒக்குமோ?’ (மாலையில் தங்களைச் சந்திக்கலாமா?) இது அவனுடைய கேள்வி.
‘ஆறு மணிக்கு வா. இந்த நேரத்தில்தான் நான் அன்பர்களை சந்திக்கிறேன்’ நான் பதிலளித்தேன். அற்பசங்கையை முடித்துக்கொண்டு அவன் தன்னறைக்குத் திரும்பினான்.
மாலை அனிருத்தன் என்னைச் சந்தித்து தன் உபாதைகளை விவரித்தான்.
அவற்றைப் பதிவு செய்து கொண்டேன்.
இரண்டு சிறப்புக் குறிகள் தலை தூக்கி நின்றன.
1. காலையிலேயே மூக்கடைப்பு
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.

அனிருத்தனுக்கு நான் கொடுத்த மருந்து அம்மோனியம் ம்யூரியாடிகம். ஆறாவது வீரியம் மூன்று பொட்டலங்கள்.
ஒரு வாரம் பொறுத்து அவனைக் கால்பந்து மைதானத்தில் சந்தித்தேன். ஒரு காலத்தில் அவன் சிறந்த கால்பந்தாட்டக்காரனாக இருந்தான். இப்போதம் அவனைப் பழைய ஆசை விடவில்லை. அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்குச் சென்று நண்பர்களுக்கு ஆலோசனை வழங்கினான். அவர்களை ஊக்குவித்தான். விளையாட்டுத் திடலில் அவனைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு துணுக்குறும்.
எது கிட்டாதோ அதைத் தேடி அலைகிறேன். எதை நான் விரும்பவில்லையோ அது எனக்கு வசப்படுகிறது என்று குருதேவர் தாகூரே கூறி வருந்துகிறார். அனிருத்தனின் வாழ்க்கையில் அந்தச் செய்தி உண்மையானது கண்டு நான் உளம் வெதும்பி நின்றேன்.

"இந்நிலை நான் ஸாரினைக் காணான் வன்னு அத்யேகம் புறத்துப்போயி"
‘நேற்று தங்களைக் காண வந்தேன் நீங்கள் வெளியே போயிருந்தீர்கள்?’ அனிருத்தன் கூறினான்.
அகம், புறம் தூய தமிழ்ச் சொற்கசள் மலையாளத்தில் உள்ளதைக் கண்டு நான் பூரித்துப் போவேன்.

தூய தமிழ் சொற்கள் மற்ற திராவிட மொழிகளில் இருப்பiதை அறிவது இனிய அனுபவம். அவை வடமொழியிலும் உள்ளன.
அனிருத்தன் தன் உடல்நிலைப் பற்றிக் கூறினான். சளித் தொந்தரவு, மூக்கடைப்பு அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விட்டன. இன்னொரு விவரம் தங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என் கால் வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் ஒரு வேதனை இருந்த வண்ணம் இருந்தது. எவ்வளவோ வலிக் குறைப்பு மருந்துகள், ஊசிகள். ஆனால் வேதனை குறையவே இல்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்தத் தொந்தரவும் தற்போது இல்லை. அவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
எனக்கும் இது புதிய தகவல். நான்மருத்துவ மேதை கெண்டின் நூலைப் புரட்டினேன். அவர் இந்த வகையில் ஏதும் குறிப்பிடவில்லை. என் ஆசான் தந்துள்ள விவரங்களைப் புரட்டிப் பார்த்தேன். துண்டிக்கப்பட்டட நரம்புப் பகுதியில் ஏற்படும் வேதனையை இந்த மருந்து போக்கிவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
என் ஆசான் ஒரு மாகடல். லிப்பே, ஃபாரிங்டன், ஃபௌபிஸ்டர் ஆகிய நூலாசிரியர் தெரிவித்துள்ள விவரங்கள் எல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும். அம்மோனியம் ம்யூரியாடிக்கம் குறித்த இந்தத் தகவலை அவர் என்னிடம் தெரி.த்திருந்தார். இதை போயரிக்கும் குறிப்பிட்டிருப்பதை நான் பின்னாளில அறிந்து கொண்டேன். இந்த விவரத்தை மறக்காமல் நான் என்னுடைய இரண்டாவது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்
.........ஆண்டுகள் பல உருண்டு விட்டன. கடந்த மாதம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த அன்பர் அதைச் சென்னையிலிருந்து எழுதியிருந்தார். பெயர் ஜகன்னாதன். ஒரு விபத்தில் சிக்கி அவர் தமது கையை இழந்து விட்டார். காயம் குணமடைந்து விட்டது. ஆனால் வேதனை எப்போதும் தொடர்ந்து இருந்தது.
அவர் எழுதுகிறார். ‘இந்தத் துயரத்தைத் தணிக்க ஹோமியோபதி உட்பட பல மருத்துவ முறைகளை மேற்கொண்டேன். நிவாரணம் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் பரிவுரை செய்ததன் பேரில் உங்கள் புத்தகத்தைப் புரட்டினேன். ‘விபத்து’ என்ற தலைப்பில் நவச்சாரம் குறித்து எழுதியிருந்தீர்கள். ஆறாவது வீரியத்தில் அதைப் பயன்படுத்தினேன். எனக்குக் குணம் கிடைத்தது என்று எழுதியிருந்ததோடு தனது புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.
நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். தொலைதூரத்தில் சுலபமாக உட்ட முடியாத இடங்களில் மருத்துவத் தொண்டு புரியும் அன்பர்களுக்காக நான்இந்த மருத்துவ இலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அது பலன் தருவதைக் கண்டு இறைவனின் அருளை எண்ணி வியக்கிறேன். ‘ஹோமியோபதி ஒரு வாழ்கலை, விஞ்ஞானம் என்ற அனது நூலில் (பக்கம் 360-61) எழுதியுள்ள விவரத்தை இங்கு குறிக்க விரும்புகிறேன்.

நவச்சாரம்

இதினின்று தயாரிக்கப்படுவது அம்மோனியம் ம்யூரியாடிக்கம்.  விரல் நுனிகளில் எல்லாம் புண்பட்டதைப் போன்ற நோவு.  குதிகாலில் இரண வலி.  தசை நார்கள் குறுகிப் போவதால் ஏற்படும் சியாட்டிகா என்ற நரம்பு வலி.  இவற்றிற்கு இந்த மருந்து மிகச் சிறந்த பயனை அளிக்கும்.  வெட்டி எடுக்கப்பட்ட பகுதி மிகுதியில் நரம்பு தொடர்பான வலி ஏற்பட்டாலும், இம்மருந்து செயற்கை உறுப்புகளுடன் நடமாடும் பல படை வீரர்களின் சிரமங்களை இது போக்கிற்று என்பது நான் அறிந்த உண்மை.
இறைவன் பரம கருணை உடையவன்.
அம்மோனியம் உப்பு இனத்தைச் சேர்ந்தது.  காரப் பொருள் (ஆல்கஹால்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பு (சோடியம் குளோரைடு) இரு வகைகளில் கிடைக்கிறது.  ஒன்று கடலுப்பு மற்றது கல்லுப்பு.  தென்னாட்டில் கல்லுப்பை இந்துப்பு என்று அழைப்பார்கள்.  இது மருந்துக் கடைகளில் மட்டும் கிடைக்கும்.  தென்னாடு கடலினால் சூழப்பட்டுள்ளது.  அந்த நீரைக் கரைக்குப் பாய்ச்சி சூரிய வெப்பத்தினால் உலர வைத்து கடலுப்பு தயாராகிறது.  இந்த இடத்தை உப்பளம் என்று அழைப்பார்கள்.  வடஇந்தியாவில் மளிகைக் கடைகளில் கல்லுப்பே கிடைக்கும்.  பெரும் துண்டுகளாக இருக்கும்அவற்றை உடைத்து உபயோகிப்பார்கள்.  பஞ்சாபில் இதற்குப் பெயர் ‘லூன்’ என்பதாகும்.  வங்கத்தில் ‘லொபன்’.  இரண்டுமே லவணம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு.  இமயமலை முழுவதும் ஒரு காலத்தில் கடலடியில் மூழ்கிக் கிடந்தது.  அதன் காரணமாகவே மலைப்பிளவுகளில் உப்புப் பாளங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
உலகத்தின் தொன்மையான நாகரிகம் உள்ள நாடுகளில் எகிப்தும் ஒன்று.  யூத, கிறிஸ்துவ சமயங்கள் தோன்றும் முன்னரே அங்கு ஒரு பழமையான சமுதாயம் வாழ்ந்து வந்தது.  அர்கள் கட்டடக் கலையில் கைதேர்ந்தவர்கள்.  அங்குள்ள பெரிய கற்சிலைகளும் பிரமிடுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.  முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தம்முள், பாதுகாக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த உண்மை அந்தப் பழங்கால எகிப்திய மக்களுக்குத் தெரிந்திருந்தது.  அவர்கள் கல்லினால அமைத்திருக்கும் பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் மனித உடல்கள் கூடப் பல ஆண்டுகள் கெடாமல் இருந்திருக்கின்றன.  ‘ஆமூன்’ என்ற எகிப்திய தேவதையின் பெயரிலிருந்து பிறந்ததே அம்மோனியா என்று மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  ஒட்டகங்களின் சாணக் குவியல்கள் இறுகிப் போய் அம்மோனியப் பாறைகள் ஆயின என்று ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக். 84) குறிப்பிடுகிறது. 
எகிப்து ஒரு பாலைவனப் பிரதேசம்.  அங்கு ஒட்டகங்களின் மந்தை மிகுதி.  ஆகவே இது உண்மையாக இருக்கக்கூடும்.  இந்த அம்மோனியா காரத் தன்மை வாய்ந்தது.  சிறந்த களிம்பு நீக்கி, இன்றும் செம்பு, பித்தளை  ஆகிய  உலோகங்களை இணைப்பதற்கு இந்தக் காரப் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.  கடுமையான சளித் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பவர்கள்இதை மோர்ந்து பார்கும் உப்பாகப் பயன்படுத்துவார்கள்.  இது மூக்கடைப்பை நீக்கிவிடும்.  மூக்கின் வழியாகக் காற்றுப் பாதைக்குள் இறுகியிருக்கும் அடைப்புகளை இது விரைவில் இளக்கிவிடும்.  சிலர் உறிஞ்சிகளைப் [inhalers]  பயன்படுத்துவார்கள்.  இதனுள் அடைக்கப்பட்டிருப்பதும் அம்மோனியாவே.
தூய்மையான அம்மோனியா கிடைப்பது அரியதாகும்.  இது மற்ற உப்புகளுடன் கலந்தே கிடைக்கும்.  கார்பனேட், குளோரைடு, பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் இது சேர்க்கப்படும்.  ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவ இயல்பு உண்டு.  பொதுவாகப் பூந்தசைப் பகுதிகளில் அடைந்திருக்கும் சளியை நீக்குவதில் இது நிகரற்ற ஆற்றல் உடையது.
இந்த மருந்து மேதை ஹானிமன் காலத்து.  அவருடைய நாட்பட்ட நோய்கள் என்ற நூலில் இது குறித்து குறிப்புகள் உள.  இதை மெய்ப்பிக்கும்போது அவர் எத்தனை துயரங்களை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.  உடல் உபாதைகள் மட்டுமின்றி, உளவியல் துறையிலும் இது சிறப்பாகப் பணிபுரிகிறது என்று மேதை கெண்ட் எழுதுகிறார். (பக். 99) அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படும் மங்கையர், சிறப்பாக மாதவிலக்குக் காலத்தில் சிரமப்படும் தன்மையுடையவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்று அவர் கருதுகிறார்.
இதை என் அனுபவமும் உறுதிப்படுத்துகிறது.  நடுவயதைத் தாண்டிய ஒரு தாயார் எப்போதுமே புலம்பிக் கொண்டேயிருப்பார்.  பிறர் தன்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலே பொங்கி எழுவார்.  எவ்வளவோ நய உரைகளைக் கூறினாலும் ஏற்க மறுப்பார்.  இத்தகைய இயல்புள்ளவர்களுக்கு அம்மோனியம் கார்பனேட் சிறந்த மருந்தாக அமைவதை நான் கண்டிருகிறேன்.  மாதவிடாய் ஏற்படும் முன்பும், அந்த நிலையில் இருக்கும் பெண்களும் பல உள.  உடலியல் மாற்றங்கள் நிகழும்.  இது இயற்கை நியதி.  அதுகாரணம் பற்ய அவர்கள் அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வகுத்தார்கள்.  அவர்களுக்கு குளியல் கூடாது என்தற்குக் காரணம் குளிர்ந்த நீர் போக்கைத் தடை செய்யும் என்பதே.
பல குடும்பங்களில் மாதர்கள் பணிபுரிந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.  இது தவிர்க்க முடியாததென்றாலும், அவர்கள் அந்த நாட்களில் கடினமான உடலுழைப்பில் ஈடுபடாமல் இருத்தல் நலம்.
அம்மோனியா மிகுந்த காரத்தன்மை உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம்.  பூந்தசைப் பகுதியிலிருந்து வெளிப்படு எந்த ஒழுக்கும் மூக்கு, கண், வாய், பெண்ணுறுப்பு, சிறுநீர்ப்பாதை ஆகிய எவற்றிலிருந்தும் வெளிப்படும் புண்ணை உண்டாக்கும் அளவிற்கு எரிச்சலுடன் கூடியதாக இருந்தால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வர வேண்டியது அம்மோனியா.  கண்களிலிருந்து வெளிப்படும் ஒழுக்கின் காரத்தன்மைனால் இமை முடிகள் உதிர்ந்து போகும்.  இதையும் கெண்ட் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சிறப்புக்குறி வெளிப்பாட்டின் நிறம்.  அது கருநிறமாக இருக்கும்.  மூக்கிலிருந்து வெளிப்பம் சளி கூட அதே நிறத்தில் இருகும்.  விலக்கின்போ வெளிப்படமூ உதிரமும் அதே நிறமாகவே இருக்கும்.  சிறுநீரும், மலமும் கூட அதே நிறத்தில் அமையு  ஏனைய பல மருந்துகளுக்கும் இத்தகைய தன்மை உண்டு என்றாலும், வெளிப்பாடு காரத்தன்மையுள்ளதாக இருந்தால் அப்போது உறுதியான பயன்தருவது அம்மோனியா.
இதயத்துடிப்பு மிகுதல், படபடப்பு, கிறுகிறுப்பு ஆகிய இடர்களுக்கும் இது சிறந்த நிவாரணி. பழங்காலத்திலிருந்தே மருத்துவர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சித்த, ஆயுர்வேத முறைகளிலும்இதன் பெருமை பேசப்படுகிறது. உடலும், முகமும் வீங்கி வெப்பம் அதிகரித்து உடலின் மேற்பகுதியில் புள்ளிகள் ஏற்பட்டு மயக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கவல்லது. இதை எல்லா முறை மருத்துவர்களுமே ஏற்றுக் கொள்கின்றனர்.
நவச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது கெண்ட் இரண்டு கலவைகளின் விவரம் மட்டும் எழுதுகிறார். ஆனால் டாக்டர் டிவி[dewey] எழுதுவது ஏழு. என்னுடைய நினைவிற்கு வருவது கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூர். பெங்களூர் ஒரு பூங்கா நகரம்.நகரத்தின் எல்லைகளில் காடுகள். வனத் தாவரங்களின் விளைவாக அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.உடலுக்கும், உள்ளத்திற்கும்இதமான தட்பவெட்பம்.அலுவல் நிமித்தம் அங்கு பலமுறை தங்கியிருக்கிறேன். எனக்குப் பிடித்த நகரங்களில் அது ஒன்று. மக்கள் நல்லியல்பு கொண்டவர்கள் அவர்கள் பேசும் மொழியையும் எளிதில் புரிந்து கொண்டு விடலாம். தமிழிலுள்ள ப என்ற எழுத்தை ஹ என்று மாற்றி விட்டால் போதுமானது. (எ.டு. பால், ஹால், புளி, ஹூளி, பொன், ஹொன். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் வழிவழியாக நுரையீரல் கோளாறுடையவர்கள் அங்கு அதிக நாட்கள் தங்க இயலாது. அங்கு சென்றதுமே தொண்டை இறுகிவிடும். பேச இயலாது. வறட்டு இருமல். தொண்டைப் பகுதியில ஒரே எரிச்சல். இந்த நிலையில் ஓர் அன்பர் என்னிடம் வந்தார். அவருக்கு நான் அளிக்கும் மருந்து காஸ்டிகம் (30). இது மேதை ஹானிமன் காலத்து மருந்து. இதன் மூலம் நான் நிகழ்த்திய சாதனைகள் பற்பல. இது ஒரு பலமுனை நிவாரணி. பக்கவாதமும், உறுப்புகள் மரத்துப் போவதும், கடுமையான வலிகளும் இதன் மூலம் குணமாகியுள்ளது. இடுப்புக்கு மேற்பட்ட பகுதிகளில் தோன்றும் மருக்களையும் இது நீக்கி விடும் என்றாலும் பெங்களூரில் இது எனக்கு சீரான பயனை அளிக்கவில்லை. அங்கே ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் திருவிடைமருதூர் ராமமூர்த்தியின் புதல்வர். பெயர் ஜோதி. அவருக்கு பெங்களூரில் இரண்டு மருத்துவ நிறுவனங்கள் சொந்தமாக இருந்தன. அவரே அங்கு பல மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
தமிழ்நாட்டில் ஹோமியோபதி மருத்துவத்தைப் பெருமளவில் பரப்பி, செல்வமும், புகழும் சேர்த்தவர் திரு. ராமமூர்த்தி. அவருடைய மகன் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருவது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். பெங்களூர் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். அவரும் என்னைக் காண வருவார். சில பிரதேசங்களில் தட்ப வெட்பம், காற்று ஆகியவைகள் சிலரைப் பாதிக்கும். கடலூரைத் தாண்டியதுமே சிலர் உடலைச் சொரிவார்கள். அவர்களுக்கு உடனடியாக பாஸ்பரஸ் ஆறாவது வீரியமே போதும். அதைப் போல் கல்கத்தாவில் வசிப்பவர்களுக்கு தொடையிடுக்குகளில் அரிப்பு ஏற்படும். சொறிந்து புண்ணாக்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு பாஸிலினம் (200) மட்டும் போதும்.
இன்றும் பெங்களூர் என்ற பெயரைக் கேட்டதும் என் நினைவுக்கு வருவது அம்மோனியம் காஸ்டிகம். மஇந்த தருந்து தொண்டை, சுவாசக்குழல் கோளாறுகள் மட்டுமின்றி இன்னும் பல குறைபாடுகளையும் நீக்கி விடும். கிறுகிறுப்பு, மயக்கம் மற்றும் விஷ ஜந்துகளினால் தீண்டப்பட்டதன் பின்விளைவுகள் ஆகியவைகளையும் இது நீக்கி விடும். இதை மோர்ந்து பார்த்தால் கூட உயிர்த்துடிப்பு மீளும். மூச்சுத் திணறலுக்கு இது ஓர் அற்புதமான நிவாரணி. உடல் சோர்ந்து தோள்பட்டையைக் கூட அசைக்க முடியாத நிலையிலுள்ளவர்கள் கூடப் புத்துயிர் பெறுவதைக் கண்டிருக்கிறேன். இதை மெய்ப்பித்தவர்கள் எத்தகைய உடல் துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று எண்ணும்போது மெய் சிலிர்க்கிறது. மூட்டு வாதம் என்ற ஒரு நோயைக் குறிப்பிடுவார்கள். அவர்களால் உடலுறுப்புகளை இயக்கவே முடியாது. கட்டையைப் போல் படுத்திருப்பார்கள். விரல் இணைப்புகளில் எல்லாம் வீக்கம் இருக்கும். உணவு உட்கொள்ளுவதில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டிருக்கும் இந்த அன்பர்களின் துயரத்தை விளக்கவே இயலாது. அத்தகைய அன்பர்ககக்கு நான் கொடுப்பது அம்மோனியம் பாஸ்பாரிக்கம். பாஸ்பரசுக்கே இத்தகைய நோய்களைச் சீராக்கும் வலிமை உண்டு. அத்துடன் அம்மோனியமும் சேர்ந்தால் நிவாரணம் விரைவுபடுத்தப்படும். இந்த மருந்து மேதை ஹானிமனுக்குப் பின்னால் வந்தவர்களால் மெய்ப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில இந்த நோயை கௌட் (ழுடிரவ) என்று கூறி அச்சுறுத்துவார்கள். இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு இயக்கம் தடைப்பட்டால் அப்போது எண்ண வேண்டியது அம்மோனியம் பாஸ்பரிகம். குறைந்த வீரியமே போதும். தசம வீரியத்தில் இதைக் கொடுத்தே பலன் கண்டிருக்கிறேன்.
அடிக்கடி ஒருவருக்கு முறைக்காய்ச்சல் வருமானால் அப்போது அம்மோனியம் பிக்ரேட் தரலாம். பிக்ரிக் அமிலம் (பிக்ரிக் ஆசிட்) கடுமையான தலைவலிக்கு மருந்து என்பதை நாம் அறிவோம். நவசாரத்துடன் ஏழு பொருட்களைச் சேர்த்து சிறந்த மருந்தாக மாற்றியிருக்கிறார்கள். இவை கார்பனேட், குளோரைட், ப்ரோமைடு, பென்ஜாய்ன், பாஸ்பரஸ், பிக்ரோடம், காஸ்டிகம் அனைத்தும் தனித் தனிச் சிறப்பியல்புகள் உடையன.
எல்லாமே ஸோரா என்ற தோஷத்தற்கு எதிரிகள்.