வெள்ளி, 24 மார்ச், 2017

கல்கேரியா பாஸ்பரிகம்


CALCAREA-PHOSPHORICUM

மேஜர் தி.சா.இராஜூ
'
வாசலில் மாருதி கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். ஒருவருடைய கையில் சிறிய பெட்டி. மற்றவர் சில காகிதக் கோப்புகளை வைத்திருந்தார்.
'
`ஞான் கோட்டயத்திருன்று வருன்னு. பெயர் ஜான் ப்ரிட்டோ, இவர் மோயன்’.
வந்தவர் மலையாளத்திலேயே பேசினார். அது எனக்குப் புரிந்தது.
'
.. ..ஜான் பிரிட்டோவின் தமையன் குவைத்தில் பணிபுரிகிறார். கடந்த மூன்றாண்டுகளாக அவருக்குச் சளித் தொந்தரவு. இருமுறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
ஜான் பிரிட்டோ தம்முடன் கொண்டு வந்திருந்த ஒலிப்பேழையை இயக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் குரல் கேட்டது. ஜோஸ் என்ற அந்த அன்பர் தமக்கு ஏற்பட்டுள்ள நோய் விவரங்களைத் தெரிவித்தார். அதன் பொருட்டுத் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மருந்து வகைகளையும் விவரித்தார். பேழை பதினைந்து நிமிடம் இயங்கிற்று. உடன் வந்த அன்பர் ஜோஸின் நோய் விவரங்கள் அடங்கிய கோப்புகளை என்னிடம் அளித்தார். பல எக்ஸ்ரே படங்களும் இருந்தன. அவற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
'
`நான் ஒரு முறை உங்கள் தமையனாரைக் காண வேண்டும்’
அவர் இவடே வரான் ஒக்கில்லா
ஞானும் மருந்து தரான் ஒக்கில்லா இது எனது கூற்று.
நான் விவரமாக அவரிடம் பேசினேன்.
'
ஒரு நோயாளியைப் பார்த்துப் பேசி அவர் சொல்லுவதைச் செவியுற்று, நாடித்துடிப்பு, நாவின் நிறம், உடல் வெப்பம் ஆகியவற்றை அறிந்த பின்னரே சிகிச்சை பெறுபவருக்கு மருந்து தர இயலும். நோயாளியின் தன்மையைத் தெரிந்து கொள்ள இந்த விவரங்கள் மிக மிக அவசியம். வந்த அன்பர்கள் நிராசையுடன் திரும்பினார்கள்.
'
இரண்டு மாதங்களுக்குப் பிறகு குவைத்திலிருந் அன்பர் ஜோஸ் நேரில் வந்தார். சற்று சதைப் பிடிப்பான உருவம். மாநிறம், தலைமுடி அடர்த்தியாக இல்லை. தெளிவான ஆங்கிலத்தில் உரையாடினார்.
நீங்கள் என்ன தொழில் புரிகிறீர்கள்? இது என் வினா.
எங்கள் கம்பெனி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடைய வரைபடப் பிரிவுக்கு நான்தான் பொறுப்பாளர். உங்களுக்கு அறிமுகமான ராமகர்த்தா என்னுடன் பணிபுரிகிறார். அவருடைய மகள் வைக்கத்திலிருந்து வந்து உங்களிடம் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.
பெயர் என்னவோ?
'
பாருகுட்டி. இது நடந்தது இரண்டாண்டுகளுக்கு முன்பு. அவர்தான் உங்களுடன் தொடர்பு கொள்ளும்படி பரிவுரை செய்தார். பல்வேறு நிபுணர்களைச் சந்தித்து பலமுறை மருந்துகளையும் உட்கொண்ட பிறகு உங்களிடம் சிகிச்சை பெற்ற பிறகுதான் பாருகுட்டி பூரண குணம் அடைந்தாள். ராகர்த்தா உங்களைத் தினமும் நினைவு கூறுகிறார்.
'
நமது வேதங்களில் ஒன்றான அதர்வன வேதம் போர் முறை. அதில் காயமுற்றவர்களுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. மற்றும் நோய்த் தடுப்பு நிவாரணம் ஆகியவை குறித்துப் பேசும். அந்தப் பகுதியே அதர்வண வேதம் எனப்படும். இந்த வேதம் கேரளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
'
கோட்டக்கல் என்ற ஊரில் மிகப் பெரிய ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றுள்ளது. அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து அவர்களுடைய செயல் முறை பற்றித் தெரிந்து கொண்டேன். அவர்கள் பொறுமையுடன் எனக்கு எல்லா விவரங்களையும் விளக்கினர்.
நவரக்கிழி, பிழிச்சல் ஆகிய சிகிச்சை முறைகள் எனக்கு வியப்பை அளித்தன. அவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவது வேப்பிலை, இளநீர், இறைச்சி ஆகியன. அங்கு தங்கி நிவாரணம் பெறுவதற்காக இந்தியாவில் ஏன் உலகின் பலப் பலப் பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள்.
அந்த மருத்துவமனை அமைதியான சூழ்நிலையில் செயல்படுகிறது. அங்கிருந்து புறப்படும்போது அதன் தலைவரைச் சந்தித்து விடைபெற்றேன். அப்போது நான் தரைப்படையில் ஓர் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவர் என்னைத் தழுவிக் கொண்டு கூறினார் `நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள். எங்களுடன் நீங்கள் பணிபுரிவது சிறப்பாக இருக்கும்’.
நான் நெகிழ்ந்து போனேன்.
'
அதே மாநிலத்தில் கோட்டயம் என்ற ஊரில் ஒரு பெரிய ஹோமியோபதி மருத்துவ நிறுவனம் இயங்குகிறது. மருத்துவமனையும், கல்லூரியும் செயல்படுகின்றன. அதன்தலைவர் மிகச் சிறந்த மருத்துவர். மிகுந்த அனுபவமுள்ளவர். பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார். ஐம்பது மில்லி செம்மல் மருந்துகளை அற்புதமான விளைவுகள் குறித்து நான் தெளிவாக அறிந்து கொண்டது அங்குதான். மேதை ஹானிமன் தமது ஆர்கனானின் ஆறாவது பதிப்பில் இந்த முறை பற்றித் தெளிவாக்கியிருக்கிறார்.
'
இவற்றையெல்லாம் நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் அன்பர் ராமகர்த்தாவின் மகளான பாருகுட்டி கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவுபடுத்தவே.
பாருக்குட்டி பொற்சிலை போல் இருப்பாள். அவளுடைய முதுகிலும், கழுத்திலும் கரு நிறப் படை தோன்றியிருந்தது. பொறுக்க முடியாத அரிப்பு. கேரளத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்ற பிறகு பாருகுட்டியை என்னிடம் அழைத்து வந்தார் ராமகர்த்தா. அவருடைய நம்பிக்கை முழு நிவாரணத்தை அளித்தது.
'
.. .. ஒளி மிகுந்த டார்ச் விளக்கின் உதவியோடு நான் அன்பர் ஜோஸின் அண்ணம், நாவு ஆகியவற்றைப் பரிசோதித்தேன். அடி நாவில் சிறு சிறு மொட்டுகள். என் மூக்கில் இரு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மின்சாரத்தின் உதவி கொண்டு அங்கு முளைத்திருந்த சதைத் திரள்களைத் தீய்த்து விட்டார்கள் என்றாலும் நிரந்தரமான பலன் இல்லையே ஜோஸ் வருத்தத்துடன் கூறினார்.
அவரைப் படுக்க வைத்து மூக்கின் துளைகளைப் பரிசோதித்தேன். முள்ளு முள்ளாகச் சதை தொங்கிற்று. அவருடைய குடும்ப விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
......
நான்பர் ஜோஸ் உடனடியாகப் பதில் சொல்லவில்லையென்றாலும், பரிசோதனையின் பொருட்டு அவர் என் முன் படுத்திருந்தபோது நான் அறிந்து கொண்ட விவரங்கள் எனக்கு வியப்பை ஊட்டின. அவருடைய மூக்கு சில்லிட்டிருந்தது. காது மடல்களில் சிறு சிறு கொப்புளங்கள். மடல்களும் குளிர்ந்திருந்தன. அவர் சிவந்த மேனி உடையவர். எனினும் முகத்தில் பழுப்பு நிறத்தில் சிறிய அழுக்கு வளையங்கள். கன்னத்தை விரலால் தொட்டபோது அங்கு சுழிப்பு ஏற்பட்டது. மேலுதடு அளவில் பெரியதாக இருந்தது. ஒரு முறையாவது நோயாளியை நேரில் பார்க்க வேண்டும் என்று என் ஆசான் வற்புறுத்தியது ஏன் என்று அப்போது எனக்குப் புரிந்தது.
'
எழுந்து உட்கார்ந்த நண்பர் எனக்குப் பதில் அளித்தார்.
`நான் செய்யும் வேலைக்கு இந்த நாட்டில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவார்கள். அங்கு இதைப் போல் பத்துமடங்கு தருகிறார்கள். வீடு, கார், அலுவலகம் எல்லாவற்றிலும் ஏஸி வசதி, தினமும் பம்பாயிலிருந்து விமானம் மூலம் புதிய காய்கறிகள், கொத்துமல்லி, முளைக்கீரை உட்பட எல்லாம் கிடைக்கிறது என்றாலும் உடல் நிலை சீராக இல்லாவிட்டால் இவைகளினால் என்ன பயன்? என்னால் இந்தச் சளித் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை’ அவருடைய குரல் கமறியது.
உங்கள் நாசியிலிருந்து உதிரம் வடிவதுண்டா? இது எனது அடுத்த கேள்வி. இப்போது இல்லை என்றாலும் முன்பு ரத்தம் வருவதுண்டு.
'
`மூக்கடைப்பு எப்போது ஏற்படுகிறது?’
`காரிலிருந்து இறங்கி அறையினுள் நுழையும்போது துவங்குகிறது. முகத்தின் ஏதாவது ஒரு பகுதி மரத்துப் போகிறது. அந்த மரப்பு இடம் மாறும்’.
உங்கள் செவியைப் பற்றிக் கூறு முடியுமா?
குளிர் காற்றினால் பாதிக்கப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அதன் பொருட்டு கம்பளி மஃப்ளர் அணிவதுண்டு.
காதிலே ஏதாவது இறைச்சல் ஏற்படுகிறதா?
'
நண்பர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். இவ்வளவு குறியாகக் கேள்வி கேட்கிறாரே என்று அவர் எண்ணியது முகத் தோற்றத்திலிருந்து வெளிப்பட்டது.
உண்டு இது அவருடைய விடை.
எந்த நேரத்தில் என்று சொல்ல முடியுமா?
அவர் தயங்கினார்.
கூச்சப்படாதீர்கள் நான் ஊக்கினேன்.
மலம் கழித்தபிறகு. அவர் விடையிறுத்தார்.
'
இத்தகைய குறிகள் இருந்தால் அவற்றைச் சார்ந்த சுகவீனத்திற்கு ஒரு பெயர். அதற்கு ஏற்ற ஒரு பேடண்ட் மருந்து என்று எங்கள் முறையில் ஏதும் இல்லை. அன்பர்கள் கூறும் பதில்கள், அப்போது அவர்களிடம் ஏற்படும் பாதிப்பு அனைத்தையும் தொகுத்து ஏற்ற மருந்தை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்.
அவர் புன்னகைத்தார்.
'
`என் நண்பர் ராமகர்த்தா கூறியிருக்கிறார். நான் என் மகளுக்கு தோல் வியாதி என்று தான் அவரிடம் சென்றேன். சாதாரணமாக எங்கள் ஊரில் மருத்துவர்கள் உங்களுக்கு ஏதாவது மருந்து கொடுப்பார்கள். மேலே தடவ ஒரு மெழுகு. ஆனால் இவரோ பிழிந்தெடுத்து விட்டார்’.
'
பெற்றோருடைய விவரம், குடும்பத்தில் பொருளாதார நிலை, பாருகுட்டியின் கல்வித் தகுதி, அமரகோசத்திலிருந்து சில கேள்விகள், நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு. சிறு வயதிலிருந்து அவளுக்கு வந்துள்ள நோய்கள், வியர்வை, தாகம் இன்னும் என்ன? வீட்டு விலக்கு போக்கின் நிறம், தன்மை, எவ்வளவு நாள் போக்கு, இடையில் ஏற்படும் வெள்ளைப்பாடு, படுக்கும் முறை இன்னும் தலையனை உயரமாக வேண்டுமா? என்று ஒரு கேள்வி. நான் அலுத்து. கொண்டேன் என்றாலும் இரண்டு வருடங்களாக இருந்த தீராத நோய் குணமாகிவிட்டதே என்று திருப்திப்பட்டார்.
நான் இடையிட்டேன்.
'
`அன்பரே ஒரு ஹோமியோபதி மருத்துவனுக்கு நிறைய தகவல்கள் வேண்டும். சூழ்நிலையினால் நோயுற்றவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை அவன் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு மனம் இருக்கிறது. அதன் குறிகளையும் அவன் ஆராய வேண்டும். காலநிலை வேறுபாடுகளினால் அவன் எப்படி அலைகழிக்கப்படுகிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நாற்காலியைத் தரையில் இழுத்தால்கூட அந்த ஒலியை ஒருவனால் தாங்கிக் கொள்ள இயலாது. இன்னொருவனுக்குத் தொலை தூரத்து ஒலி தெளிவாகக் கேட்கும். சிலர் பேருந்தில் ஏறிப் பயணம் செய்தால் வாந்தி எடுப்பார்கள்.
'
இப்போது சொல்லுங்கள் அன்பரே, உங்களை அதிகம் பாதிப்பது எது? வெப்பமா? குளிரா?
குளிரை என்னால் தாங்க இயலாது அய்யா, குளிர்ந்த நீரை அருந்தினால்கூட காதில் நோவு உண்டாகும். குளிர்ந்த நீதில் மூழ்குவது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. குழந்தைப் பருவத்தில் என்னைக் குளிர்ந்த நீரில குளிப்பாட்டினால் உடல் விரைத்து விடம் மாறு கண் ஏற்படும் என்று என் தாயார் சொல்லக் கேட்டதுண்டு.
'
கல்கத்தாவைச் சேர்ந்த சுப்ராட்டோகுமார் பானர்ஜி ஒரு மருத்துவப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் மூக்கில் முன் சதைகள் தொங்குவதை மூன்று மியாசங்களின் தொகுப்பு (டிரை மியாஸ்மேடிக்) என்று குறிப்பிடுகிறார்.
 '
இதற்குச் சிறந்த மருந்துகளில் ஒன்றாக அவர் குறிப்பிடுவது கல்காரிய பாஸ்பாரிகா. மூக்கிலிருந்து உதிரமும் வருமானால் அப்போது உறுதியாக இந்த மருந்தைத் தரலாம் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்தத் துறையில் கண்மூடித்தனமாகச் செயல்படுவதைவிட பட்டறிவை முழுமையாகப் பின்பற்றுவதே சிறந்த முறை.
'
நண்பர் ஜோஸ் மருந்து பெற்றுத் திரும்பினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு கடிதம் பெருந் தொகைக்குக் காசோலை. தற்போது சளி தொந்தரவு இல்லை. ஆனால் செரிமானக் கோளாறு உண்டு. இது முன்னரே இருந்ததுதான். அவருக்குத் தொடர் மருந்து அனுப்பினேன். ஆறு மாதங்களில் அவர் முழுமையாகக் குணமடைந்த விவரம் கிடைத்தது.
'
முதலில் நான் அவருக்குக் கொடுத்தது கந்தகம் ஏணி முறையில்.
அடுத்தது கல்காரியா பாஸ்பரிகா. அதுவும் ஏணி முறையில்தான். வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் டியூபர்குலினம் 200. இரண்டே மாத்திரைகள். அவருக்குப் பூரண நோய் நிவாரணம்.

பாஸ்பரஸ் அமிலத்தைச் சுண்ணாம்பில் கலந்து இந்த மருந்தைத் தயாரிக்கிறார்கள். பிறகு இதை வீரியப்படுத்துகிறார்கள். தசம முறையில் வீ.யப்படுத்தப்பட்டால் இது உயிர் வேதியியலில் மருந்தாகிறது (பயோ கெமிகல்) சத முறையிலானால் ஹோமியோபதி இரண்டு வகையிலுமே இது நல்ல மருந்தாகிறது.
'
ஒரு விதையை எடுத்துச் சோதித்தோமானால் அதன் முளைப்பகுதியைச் சுற்றிச் சில சத்துள்ள பொருள்கள் இருப்பதைக் காணலாம். அந்த முளைக்கும் பகுதிக்கும் வலுத் தருவது இந்தப் புரதம் தான். இதை ஆல்புமின் என்று அழைப்பார்கள். இந்தப் பொருள் குறைவுபடுமானால் உடலில் தளர்ச்சி ஏற்படும். இதை இரத்தச் சோகை என்று அழைப்பார்கள். இந்த நிலை ஏற்படுவதற்கு அதிதிமான உதிரப் போக்கோ அல்லது வயிற்றுப் போக்கோகூட காரணமாக அமையக்கூடும். அந்த நிலையில் உடலில் புரதச்சத்து ஏற்ற அளவில் இருக்கும்பொருட்டு பயன்படுத்தப்படும் மருந்து கல்காரிய பாஸ்பாரிகா.
'
எலும்புகள் சீராக வளராவிட்டாலோ அல்லது எலும்பைச் சுற்றிய பகுதிகள் பழுதடைந்தாலோ இந்த மருந்து உடனடி நிவாரணம் தரும். மண்டை ஓடு இணையாமற்போனாலும், அல்லது, பல், நகம், முடி ஆகியவை சீராக வளர்ச்சி அடையாவிட்டாலோ கல்கேரியா பாஸ்பாரிகா ஓர் இணையற்ற நிவாரணி.
 .
சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயதானவர்களுக்கும் இது பயன்படும். வயது ஏற ஏற திசுக்க்ளின் வளர்ச்சி குறையும். அதை ஊக்குவிப்பதற்கும் இந்த மருந்து துணை புரியும்.
.
சிறு குழந்தையின் அறிவு, ஈர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும், ஆசிரியர் கூறுவதைப் புரிந்து கொள்ளவே சிரமப்படும். மனம் ஒருமைப்படாது இந்தச் சிறார்களை மந்த புத்தியுடையவர்கள் என்று ஒதுக்கி விடாமல், அடித்துத் துன்புறுத்தாமல், கல்காரியா பாஸ்பாரிகா கொடுத்தால் மூன்றே மாதங்களில் நல்ல பலன் தெரியும். இதை தசம வீரியத்தில் அனாதை இல்லத்தில் வசித்த குழந்தைகளுக்குக் கொடுத்து சீராக்கியிருக்கிறார் என் ஆசான்.
 .
மனவளர்ச்சி மட்டும் அன்று கண், காது, அண்ணம், தொண்டை ஆகிய பகுதிகளிலும் இந்த மருந்து சிறப்புடன் பணிபுரிவது கண்கூடு.
.
உணவு செரிக்காமல் இருந்தாலோ, அல்லது உண்டவுடன் பசி எடுத்தாலோ, உண்டவுடன் வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ அந்த வேளைகளில் இந்த மருந்து நினைவுக்கு வர வேண்டும். தசம வீரியத்தில் இதைத் தர வேண்டுமா அல்லது சத வீரியமா என்று உளைச்சல்படத் தேவையில்லை. ஆறாவது சத வீரியத்தில் இது எளிதில் கிடைப்பதில்லை என்றாலும் தலைநகரங்களிலிருந்து இதைப் பெற்று நீரில் கலந்து கொடுத்து நல்ல பயன் கண்டிருக்கிறேன். ஒரு நல்ல மருத்துவர் எல்லா முக்கியமான மருந்துகளையும் ஆறாவது வீரியத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
.
என் ஆசான் அகோனைட்டை பன்னிரண்டாவது வீரியத்தில் மட்டுமே கொடுப்பது வழக்கம். என்றுமே அவர் முயற்சி பலிக்காமல் போனதில்லை. அந்த வீரியத்தில் இது பல இதய நோயாளிகளைக் கூட குணப்படுத்தியிருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
மருந்து நோயாளிக்கேற்றதாக இருக்குமானால், அது தாய்த் திரவத்தில் கூட பயன் தர வேண்டும் என்பது அவருடைய முடிவு.
.
கல்காரியா பாஸ்பாரிகாவைப் பற்றி எண்ணும்போது மருத்துவர் ஷூஸ்லரின் நினைவு வருகிறது. அவர் ஒரு ஜெர்மானியர். சிறந்த சிந்தனையாளர். அவர் ஒரு புதிய கொள்கையை வெளிப்படுத்தினார். மனித உடல் பன்னிரண்டு தாது உப்புக்களால் ஆனது. இவற்றில் எந்த உப்புக் குறைந்தாலும், அது ஒரு வகை நோய்க் குறிகளை வெளிப்படுத்தும். அதற்கேற்ற உப்பை உள்ளுக்குக் கொடுத்து இந்தக் குறைகளை நீக்கி விடலாம்.
கொள்கை அளவில் நம்மால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீரியப்படுத்தப்பட்டால்தான் இந்த உப்புக்கள் பயன்தரும் என்ற கருத்துடையவர்கள் நாம். அவர் கண்டுபிடித்து அளித்தவை பன்னிரண்டு. அவற்றை அவர் தசம வீரியத்தில் வீரியப்படுத்தினார். மெய்ப்பித்தார். பல நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
இவற்றை அவர் மாத்திரைகளாகவும் தயாரித்தார். பொடி மருந்தைத் தயாரித்து அதை நீரில் கரைத்து நேநயாளிகளை அருந்தச் செய்தார். இரண்டு மணிக்கு ஒரு முறை அளித்தார். விஞ்ஞான முறையில் இதற்கு விடையளிப்பது கடினம் என்றாலும், பக்க விளைவுகள் ஏதுமின்றி நோயாளி சீராகிறான் என்பது ஓர் நடைமுறை உண்மை. இதை எந்த மருத்துவனும் மறுக்க இயலாது.
 .
`அறிவுடைய ஒருவன் காட்டிலுள்ள மரங்களின் இலைகளைக் கணக்கிட வேண்டாம். அதன் கனிகளை நோயாளிக்குக் கொடுத்துப் பயன் கண்டால் மட்டும் போதும்’.
 .
வீரியப்படுத்தப்பட்ட மருந்துகள் எப்படிப் பணிபுரிகின்றன என்பது குறித்துப் பல கருத்து மோதல்கள் உள்ளன. `அவற்றில் சிக்கி உன் நேரத்தை வீணாக்காதே. அவை நோயாளியைச் சீராக்குகின்றன என்ற உண்மையை மட்டும் சிக்கெனப் பிடித்துக் கொள்’ என்பது மேதை நாஷ் அவர்களின் அறிவுரை. அது எனக்கு உடன்பாடு.
.
சார்லஸ் டார்வினைப் பற்றி நாம் அறிவோம். அவர் ஓர் அறிவியல்வாதி. மெய்ப்பிக்கப்பட்டாலன்றி அவர் எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. `புழு பூச்சிகள் உண்டு வாழும் செடி வகைகள்’ ( insectivorous Plants ) என்றொரு அற்புதமான நூல் ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். மிகக் குறைந்த அளவில் அம்மோனியம் பாஸ்ஃபேட்டின் இருபது கோடியில் ஒரு பகுதியை அவர் ஒரு செடியில் பிரயோகித்தார்.
.
அது அந்தச் செடியின் உணர்ச்சி இழைகளை எப்படிப் பாதிக்கிறது என்று அறிந்தபோது அவர் எல்லையற்ற வியப்பில் ஆழ்ந்து போனார். இதுதான் ஹோமியோபதியின் அடிப்படை (மர்த்தனம் குணவர்த்தனம்).

.
ஒரு பொருளை நீர்ப்பதாலும், கடைவதாலும் அதன் மருத்துவ வீரியம் மிகும் என்பது ஓர் அடிப்படை உண்மை. இதை அறிவியல் மேதையான டார்வினே ஏற்றுக் கொள்கிறார். நமக்கு வேறு ஆதாரம் தேவையில்லை என்பது என் பணிவான கருத்து.
.
தமது கொள்கைகள் ஹோமியோபதி அன்று என ஷூஸ்லரே கூறியிருக்கிறார். உண்மை. அது வேறு ஏதோ ஒரு மார்க்கம். வீரியப்படுத்தலில் உள்ள உண்மையை அவரும் ஏற்றுக் கொள்கிறார். அதன் மூலம் நோயாளிகள் குணமடைவதைப் பார்க்கிறோம். ஆகவே உயிர்வேதியியல் மருந்துகளை ஹோமியோபதி மருத்தவர்கள் பயன்படுத்தலாமா என்ற கேள்வி வீண் விவாதம். நோயாளி பக்க விளைவுகள் ஏதுமின்றி குணமடைவது மட்டுமே நமக்கு முக்கியம்.
ஹானிமன் கோட்பாடும் அதுதானே?
***** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக