திங்கள், 22 மே, 2017

பெல்லடோனா



BELLADONNA
(டெட்லி நைட் ஷேடு என்ற படர் கொடி)
MAJOR T.S.RAJU

SONY DSC
Atropa belladonna ~ Belladonna ~ Nightshade

நல்லோர் இணக்கம்
பல ஆண்டுகள் கழிந்து விட்டன என்றாலும் என் ஆசானுடன் அமர்ந்து பணிபுரிந்த நாட்கள் இன்றும் நினைவில் உள்ளன.  என் மருத்துவ வாழ்க்கையில் அது மிகச் சிறந்த பகுதி.

ஹைதராபாத் புற நகர்ப் பகுதியில் உள்ள கெவுனி, குல்மோகர் ரகங்கள் அடர்ந்த நிழலில் ஒரு வெள்ளைக் கட்டிடம்.  வெளியில் ஸ்கூட்டர், கார், சைக்கிள் என்று பலவகை வாகனங்கள்.  உட்புற மருத்துவத் தூய்மை.  அதனுள் காலை ஒன்பது மணிக்கு முன்பே நாங்கள் குறிப்பேடுகளுடன் அமர்ந்துவிடுவோம்.  வெளியில் நீண்ட மரப்பெஞ்சுகளில் ஆண்களும், பெண்களும் அமைதியாக அமர்ந்திருப்பார்கள்.  ஒன்பதடிக்க ஒரு நிமிடம் இருக்கும்போது ஆசான் தமது காரில் வருவார்.  அதை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைவார்.  நாங்கள் அனைவரும் எழுந்து நிற்போம்.  அவர் அமர்ந்த பிறகு உட்காருவோம்.

வரிசை
குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள், ஆண்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.  குறிப்பு ஏடுகளில் தகவல்களைப் பதிந்து பெற்றுக் கொண்டு அன்பர்கள் ஆசானை அணுகுவார்கள்.  அவர் உரக்கப் பேச மாட்டார்.  இனிமையும், மென்மையும் அவரது சிறப்பியல்புகள்.  நாங்கள் குறித்துக் கொடுத்திருக்கும் மருந்துகள் ஏற்புடையனவாக இருந்தால் அதை உறுதிப்படுத்துவார்.  மாறுதலிருந்தால் வேறு பெயர் எழுதித் தருவார்.

இறுக்கம்
படையினரின் வாழ்வு இறுக்கம் நிறைந்தது. (TENSION) காலையில் குழல் ஒலி கேட்டுக் கண் விழிப்பதிலிருந்து இரவு மீண்டும் விளக்கணைப்பு வரை எல்லாமே வரையறைக்குட்பட்டவை.  குளிப்பது குஸல் பரேடு, உணவு அருந்துவது லங்கர் பரேடு, மது அருந்துவது ரம் பரேடு (RUM PARADE).
இந்தத் தேவையற்ற கட்டுப்பாடே பலரை நோய்வாய்ப்படச் செய்யும்.  அதுவும் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்பட வேண்டிய டிசம்பர் மாதவாக்கில் அதிகமாக ஒலிக்கும் பெயர்கள் ஹைபர் டென்ஷன், ஹைபோ டென்ஷன், மையோகார்டியல் இன்பார்க்ஷன்.

அது என்ன?
ஹைபர் டென்ஷனை உதிர அழுத்தம் என்று கூறுவார்கள்.  நெஞ்சுப் பகுதியிலுள்ள இருதயம், தனது  உரோமத்திலும், மெல்லிய நரம்புகள் மூலம் மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் உதிரத்தைச் சேர்ப்பிக்கும்.  பல காரணங்களினால் அது செலுத்தப்படும் வேகம் மாறுபடும்.  அந்த மாற்றத்தைப் படையினரின் மருத்துவ நிபுணர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அந்த அழுத்தம் ஒரு சீரான அளவுக்குள் இருந்தாக வேண்டும்.  அவ்வாறு இல்லாவிடில் அவன் நோயாளியாகக் கருதப்படுவான்.  ஒரு நோயாளிக்குப் பதவி உயர்வு கிடையாது.

தமனிகளைச் சீராக்கும் சமனிகள்
அந்த அழுத்த அளைவச் சீராக்கப் பல சமனிகள் அளிக்கப்படும்.  அவை அந்த அளவையைச் சீராக்கினாலும் பற்பல பக்க விளைவுகளை உண்டாக்கும்.  மண்டையிடி, காது நோவு, மூட்டு வலி, சிரங்குகள் என்ற பல்வகை நோய்கள்.
அந்த நிலையிலுள்ளவர்கள் பலர் எங்கள் மருத்துவமனைக்கு வருவார்கள்.  அப்போதெல்லாம் அவர்கள் பெறுவது பெல்லடோனா, மருத்துவப் பரிட்சையில் அவர்கள் தேறி விடுவார்கள்.  அது போதுமே!

கொடி வகை
இந்த பெல்லடோனா  ஒரு தாவர இன மருந்து.  டெட்லி நைட் ஷேடு என்று பெயர்.  ( DEADLY NIGHTSHADE) ஐரோப்பாவின் தெற்குப் பகுதியில் விளையும் படர் கொடியினம்.  இதன் முழுப் பகுதியும் மருந்தாகப் பயன்படுகிறது.  புதிதாகப் பறித்த கொடியிலிருந்து இந்த மருந்தைத் தயாரிக்கிறார்கள்.
இதன் பணி மூளைப் பகுதியிலேயே துவங்குகிறது.  அங்கே விரைவாக இயங்குகிறது.  அதனாலதான் மன இயக்கங்களை, உணர்வுகளை இது கட்டுபடுத்துகிறது.  தூக்கமின்மை, கற்பனைக் காட்சிகள், காரணமில்லாத பயம் ஆகியவற்றைப் போக்கும் வலிமை இந்த மருந்துக்கு உண்டு.

சமனி
இந்த மருந்து மூளையின் மேற்பரப்பைத் தாக்குகிறது.  காற்றுப் பையையும், குழலையும் சீராக்குகிறது.  தசைப் பகுதியில் பணி புரிகிறது.  சுரப்பிகளின் கசிவை விரைவுபடுத்தும் தன்மை உடையது.  உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அரிப்பையும் எரிச்சலையும் தணிக்கிறது.  காய்ச்சலையும் படிமான நிலைiக்குக் கொண்டு வருகிறது.  மொத்தத்தில் இது பெரிய சமனி.  அதனால்தான் உதிர அழுத்தத்தை இது ஒரு சீரான அளவுக்குள் கொண்டு வருகிறது.

இந்த நிலை நிரந்தரமானதா என்று வினவினால், `இல்லை’ என்பதே மறுமொழி, `நெற்கொண்டு போமளவும் நிற்கும் நெடுஞ்சுவர்’ தான் இது.  அந்த அளவு சீரடைவு மருத்துவப் பரிசோதனைக்குப் போதுமனது.  தொடர்ந்து அவனுக்கு என்ன நேர்ந்தாலும் யாருக்கும் கவலை கிடையாது.

சிறப்பியல்பு
ஒவ்வொரு மருந்துக்கும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பியல்புகளோ இருக்கும்.  சில மருந்துகள் விசித்திரமான உணர்ச்சிகளை உண்டாக்கும்.  சில சூழ்நிலைகளுக்கேற்ப அமையும்.  மற்றது உடற்கூறு.  பின்னும் நோய் அதிகரிக்கும் அல்லது குறையும் முறை.  இவைகளுக்கு மருத்துவ விஞ்ஞான பூர்வமான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.  அதற்காக செலவிடப்படும் காலம் வீண்.  அவற்றை உள்ளவாறு ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடப்பது மருத்துவன், நோயாளி இருவருக்குமே நலம் பயக்கும்.  இவற்றிற்கான காரணங்கள் உலகியல் அறிவுக்கு எட்டாமலே கூடப் போகலாம்.
எடுத்துக்காட்டாக, உடலில் சில பகுதிகளில் திடீரென சூடோ, பொறுக்க இயலாத நோவோ ஏற்படக்கூடும்.  அது வந்த சுவடு தெரியாமல் மறைந்தும் போகலாம்.  இதற்குக் காரணம் காலநிலை ஒவ்வாமையோ, உணவு மாறுதலோ, கவலை தரும் செய்திகளோ ஏதாவது ஒன்றாக இருக்கக் கூடும்.  இந்த விவரம் பெல்லடோனாவுக்குப் பொருத்தமாக இருக்கும்.  அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடுமானால், பெல்லடோனாவில் ஆறு, அல்லது முப்பாவது வீரியத்தில் இரு உருண்டைகளைக் கொடுத்துவிட்டு மற்ற பணிகளைக் கவனிக்கலாம்.  அந்த நிலை அடிக்கடி ஏற்படாவிட்டால் அதைக் குறித்து மறந்தே விடலாம்.

மதலையருக்கு
இது ஒரு நல்ல குழந்தை மருந்து.  இது அவர்களுடைய இயல்புக்கேற்ப வளைந்து கெடுத்துச் சீராக்கிவிடும்.  நான்றாக  விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை  உடலும், முகமும் சூடேறி, சிவந்து, வாயும் உதடும் கோணிக் கொண்டு வலிப்பு வரும் நிலைக்குத் தள்ளப்படுவதைப் பார்த்திருக்கலாம்.  தலை ஒரேயடியாகச் சுடும்,  உடலின் நுனிப் பகுதிகள் சில்லிட்டுப் போகும்  அல்லது இரத்தச் சிவப்பும், சூடும், உடலில் சில பகுதிகளில் மட்டும் தொப்புளில், நெஞ்சில், கட்டை விரலில், தொடைப் பகுதியில் மட்டும் ஏற்படலாம்.  மேலுதடு மட்டும் தடித்து வீங்கிப் போகலாம்.  அத்தகைய நேரங்களில் பெல்லடோனா தப்பாமல் கைகொடுக்கும்.
வீக்கங்களில் மட்டும் அல்ல. திடீரென்று வயிற்றுப் போக்கு, மூத்திரக் குழலில் எரிச்சல், நீர் இறங்காமல் அழற்சி, நினைக்வே முடியாத அளவு உடல் சூடு, கழுத்திலுள்ள உதிர நாளங்களில் புடைப்பு, அனைத்தையும் இரு மாத்திரைகள் குணமாக்கி விடும்.

நோயாளி உணர்விழந்து உடல் குளிர்ந்து சன்னி காணும் நிலைக்கு நிவாரணமாக மூன்று மருந்துகளைக் குறிப்பிடுவார்கள்.  அவை முறையே ஸ்டிரமோனியம், ஹையாஸ்மஸ், பெல்லடோனா ஆகியவை என்பது எல்லா மருத்துவர்களின் ஒருமித்த கருத்து.

தலைவலி
நீர்க் கோப்புத் தலைவலிக்கு இது அற்புதமான மருந்து.  படுத்தால் நோவு அதிகமாகும்.  குறிப்பிட்டுக் கூறப் போனால், நேர்க்கோட்டு நிலையிலிருந்து படுக்கும் நிலைக்கு உடல் மாறும்போது - குனிந்தோ, வளைந்தோ செயல்படும்போது (From Vertical to Horizontal) நோய் மிகுதியானால், அப்போது பெல்லடோனா பயன் தரும் என்பது எனது அனுபவம்.  இது வல்லுநர்களின் கருத்தும் கூட.

நின்று கொண்டே பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நெடுங்கால நோய்கள்கூட அவர்கள் குனியும்போது அதிகரிக்குமானால் அப்போது பெல்லாடானா உதவும் என்று படித்திருக்கிறேன்.  நின்று கொண்டே துருத்தியைச் சுழற்றிப் பணிபுரியும் அன்பர் ஒருவர், பொறுக்க முடியாத  தலைவலியினால் அவதிப்பட்டார்.  அவரை விவரமாகத் தகவல் கேட்டேன்.

ஒரு வேளை நெருப்பின் அருகில் பணிபுரிவதால் இத்தகைய நோவு ஏற்படுகிறதோ என்று ஐயம் கொண்டு அதற்கேற்ற மருந்துகளைக் கொடுத்தேன்.  ஒரு பயனும் விளையவில்லை.  எனக்கே சற்று தலையிறக்கமாக இருந்தது.  இந்தத் தலைநோவு எப்போது அதிகரிக்கிறது என்று அவரைக் கேட்டேன்.

`சுள்ளி பொறுக்கித் தீயிலே போடுவேன் பாருங்க அல்லது பீப்பாயிலிருந்து கரியை அள்ளி அடுப்பிலே தூவுவேன் அல்லவா அப்போது வெட்ற மாதிரி ஒரு நோவுங்க.  இது ஏதோ தெய்வக் குத்தம்னு சொல்றாங்க’.

`இதன் பொருட்டு ஆட்டையோ, கோழியையோ கொல்லாதே’ என்று அவனுக்கு அறிவுறுத்திவிட்டு இரண்டு மாத்திரை பெல்லடோனா (30) கொடுத்தேன்.  அதற்குப் பிறகு அவனுக்குத் தலைவலியே வரவில்லை.  இது எனக்கே வியப்பை அளித்தது.  ஏனெனில் இதன் பணிக்காலம் மிகவும் குறைவு  சில மணி நேரம் அல்லது ஒரு நாள்.

ஆனால் இந்த அன்பரின் தலைவலி நிரந்தரமாகவே நீங்கிவிட்டது.  அவர் தொடர்ந்து தமது வழக்கமான பணியையே தினமும் செய்து வருகிறார்.
பொதுவாக, விரைவாகப் பயன் தரும் மருந்துகள் ஆழமாக வேலை செய்யாது என்றொரு கருத்துண்டு.  இந்த நிகழ்ச்சி அதைப் பொய்யாக்கிவிட்டது.

எச்சரிக்கை
உதிர ஓட்டத்தை தற்காலிகமாகச் சீராக்கும் இயல்பு பெல்லடோனாவுக்கு உள்ளது என்பதை அனுபவ அறிவால் கண்டோம்.  இந்த உதிர அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இராது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் மங்கைக்கு அதிக உதிரம் சினைப் பையில் தேவைப்படும்.  உண்டவுடன் இரைப்பை அதிக உதிரம் கேட்கும்.  ஓடும்போது கால்களுக்கு அதிக உதிரம் தேவை.  உதிரத்தின் தன்மை சீராக இருந்தாலும் அது ஓடும் பாதை பழுதடைந்திருந்தால் அதன் விரைவு தடைப்படும்.  தமனிகளின் சுவர்கள் நைந்திருந்தலோ அல்லது அவை தடித்துப் போனாலோ ஓட்டம் சிறப்பாக அமையாது.

உணவு
நாம் உண்ணும் உணவு இந்தப் பாதையைப் பாதிக்கவே செய்கிறது.  கொழுப்புச் சத்துள்ள உணவு வகை இறைச்சி, முட்டை, வெண்ணெய் ஆகியவைகளின் அபரிதமான உபயோகம் உதிரப் பாதையைச் சேதமாக்கிவிடும்.  மதுப் பழக்கம், புகைப் பிடித்தல் ஆகியவை குழலின் சுவர்களைப் பலவீனமாக்கிவிடும்.

உடற்பயிற்சி இல்லாத பருமனான தேகவாகுள்ள, நீரிழிவுடைய மனிதர்களின் உதிரப் பாதை தடித்தோ, நைந்தோ போகும்.  அடிக்கடி சினைப்படும் மங்கையரின் நிலைமையும் இதுவே.  உணர்ச்சிவசப்படும் நிலையில் உள்ளவர்களின் உதிர பாதையும் பழுதாகும்.  நடிகர்களும், கலைஞர்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

உதிரக் குழலின் சீர்கேட்டை `அதெரோமா’ (Atheroma) என்று குறிப்பிடுவார்கள்.  இந்த நிலை இருதயத்திலோ, மூளைப் பகுதியிலோ ஏற்படுமானால் கிறுகிறுப்பு, கண்ணிருட்டு, இருதயத் துடிப்பில் தடுமாற்றம், அனைத்தும் ஏற்பட வழியுண்டு.  கால் பகுதியில் இந்த நசிவு தோன்றுமானால் ஆறாத புண்கள் கிளைக்கும்.

ஆகவே திறந்த வெளியில் நடத்தல், உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவை ஒரு நோயாளிக்கு அடிப்படைத் தேவைகள் அப்போது ஹோமியோபதி மருந்துகள் உயிர் ஆற்றலை ஒழுங்காகப் பாதுகாத்து உற்ற துணையாக உதவும்.  ஆனால் முழுப் பயனையும் பெற மருந்து மட்டும் போதாது என்பதை மருத்துவனும் நோயாளியும்  நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Image result for belladonna plant
தொன்மை
மிகவும் பழமையான மருந்துகளினால் இந்த பெல்லாடானாவும் ஒன்று. மேதை ஹானிமனால் நிரூபிக்கப்பட்டது.  இந்த மருந்து குறித்து ஹார்ட்மான் தமது நூலில் விவரமாக வரைந்துள்ளார்.  ஹ்யூக்ஸின் பார்மாகோ டைனமிக்ஸிலும் பெல்லடோனா பற்றிய குறிப்புகள் உள.
இதில் அட்ரோபின் (ATROPHINE) உள்ளது.  இந்த அவுடதம் மூளையின் பகுதிகளைத் தாக்கி அதை வீங்க வைக்கும்.  அதன் விளைவாக நரம்பியக்கங்கள் தாறுமாறாகும்.  ஜன்னி ஏற்படுவதற்கும் மாறுபட்ட பயங்கரமான காட்சிகள் தென்படுவதற்கும் இதுவே காரணம்.  விழி நடுவே அமைந்துள்ள பாப்பா என்ற ஒளித் தொளை விரிந்து கொடுக்கும்.  பார்வையில் மங்கல் ஏற்படுவதற்கும் இதுவே காரணம்.  உடலின் சில பகுதிகள் மரத்துப் போகும்.  மற்றவை சிவந்து வீங்கும்.  சூடு ஏற்படும்.  சுட்ட செங்கல்லில் விரலை வைத்தாற்போல் அவ்வளவு சூடு இருக்கும்.  உடலின் வலது பக்கத்தை இது பெரும்பாலும் தாக்குகிறது.  வெப்பம் இதன் முக்கியக் குறியாக இருப்பதால் தாக்கப்பட்ட பகுதியில் பொறுக்க இயலாத எரிச்சல் ஏற்படுகிறது.  சிறுநீர்ப்பை, பித்தப்பை ஆகிய எந்த இடங்கள் இதன் ஆளுகைக்குட்பட்டாலும் அங்கே கடுமையான எரிச்சல் இருக்கும்.  சுருக்கமாகச் சொல்லப் போனால் பெல்லடோனா என்பது வெப்பம், சென்னிறம், எரிச்சல் உடலின் மேற்பரப்பில் எந்தப் பகுதியில் இது தாக்கினாலும் அது வீங்கும்.  கை வைக்க ஒண்ணாதபடி ஒரு துடிப்பு.

செயல் இழப்பு
கழுத்தை ஒட்டிய  உதிர நாளங்களிலும் மற்ற உதிர ஓட்டப் பகுதிகளிலும் இனந்தெரியாத வீக்கம்.  இவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும்.  வெப்பமும், எரிச்சலும் மிகுந்து கண் பார்வையும் மங்குவதனால் சிந்தனையே தடுமாறி செயல் இழந்து போகும்.  அவன் நினைத்தபடி  எல்லாம் பேசுவான்.  நாவு குழறும்.  நோயுற்ற பகுதியைத் தொட அவன் அனுமதிக்க மாட்டான்.  அதே வேளையில் அது மூடப்பட்டும் இருக்க வேண்டும்.  துணியை நீக்கினால் துயரம்.  எத்தகைய அதிர்ச்சியையும் அவனால் தாங்க இயலாது.  அண்மையில் யாராவது உரக்கப் பேசினாலோ, விரைவாக நடந்தாலோ கூட அவனால் தாங்க முடியாது.
இதன் அடுத்த நிலை சுழிப்பு, வலிப்பு, கைவிரல்கள் மடிந்து கொள்ளும்.  அவை தவறான கோணத்தில் இயங்கும்.  நாவு கோணிக் கொள்ளும்.   இனம் விளங்காத ஓர் ஓலக்கூவல்.  அது மனிதக் குரலைப் போல் இராது.  காரணம் அடிப்படை இயக்கங்கள், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளினால் மாறுபடுகின்றன.
Image result for belladonna FRIGHT
திகில்
போர்க்களத்தில் கொடிய  காட்சிகளைக் கண்ட சில படைவீரர்கள் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  அவர்களில் சிலர் தாம் பார்த்தவைகளை வர்ணிப்பார்கள்.  அப்போதே அவைகள் நிகழ்வதாககக் கருதி அவற்றைத் தடுக்கும் பொருட்டு சாளரத்தின் வழியே குதித்து வெளியே ஓட முயற்சிப்பார்கள்.  தலை மட்டும் சூடாக இருக்கும்.  கையும் காலும் பனிக்கட்டியைப் போல் குளிர்ந்திருக்கும்.  எல்லா உதரமும் தலைப் பகுதிக்கு ஏறிவிட்டதனால் இந்த நிலை.  அத்தகையவர்களைத் தோல் வாரினால் கட்டிலில் கட்டிப் போட்டிருப்பார்கள்.  இவர்களுக்கு உங்கள் முறையில் மருந்து ஏதும் உள்ளதா என்று என் நண்பர் கர்னல்அனீஸ் அகமதைக் கேட்டேன். `தூக்க மருந்தைத்தான் கொடுப்போம்’ என்று அவர் பதிலிறுத்தார்.  அவர் என் நெருங்கிய நண்பர்.  அவரிடம் ஒரு சிறிய புட்டி பெல்லடோனாவைக் கொடுத்து, கடுமையான நிலைக்குத் தள்ளப்படும் நோயாளிகளுக்கு இதிலிருந்து இரண்டே மாத்திரை மட்டும் கொடுங்கள்’ என்று கூறினேன்.
ஒரு மாதம் பொறுத்து நான் அவரைச் சந்தித்தபோது அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார்.  `நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள் நண்பரே, பல ஊசி மருந்துகளும், காம்போஸும் செய்த பணியை உங்களுடைய இரண்டு கடுகுருண்டைகள் சாதித்துவிட்டன’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

`பெருமை என்னுடையதன்று, அது மேதை ஹானிமனின் கண்டுபிடிப்பு’ என்று பதிலுறுத்தேன்.  `பெல்லடோனாவை நாங்களும் பயன்படுத்துகிறோம்.  ஆனால் அது இவ்வளவு தீவிரமாகப் பணி புரிவதில்லையே?’ இது அவருடைய கேள்வி.
`நாங்கள் அதன் மருத்துவ ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறோம்.  அப்போது அதன் விளைவு பலர மடங்காகிறது’ இது எனது மறுமொழி.

குணவர்த்தனம்
வீரியப்படுத்தப்பட்ட அட்ரோபின் என்ற நஞ்சு உடலின் வெவ்வேறு பகுதிகளில் எந்த வகையில் பணி புரிகிறது என்று அறிந்து கொள்வது ஒரு வியப்பான செய்தி.  மிகவும் பயனுடையதும் கூட.
பல் ஈறுகள் கொழுத்திருக்கும்  நாவு தடித்து வீங்கிப் பேசவே இயலாமற் போகும்.  காய்ச்சல் வேகத்தில்  குழந்தை பற்களைக் கடிக்கும்.  தொண்டைப் பகுதி ஒரே ரணகளம்.  எச்சிலைக்கூட விழுங்க முடியாமல் உள்நாக்கு வீங்கிப் போகும்.  தொண்டையில் விட்டு விட்டு அடைப்பு ஏற்படும்.  சிறப்பாக வலது புறம்.

பசியே இராது.  பாலும் கூட கசக்கும். இறைச்சி உணவு அருகிலே வரக்கூடாது.  அன்னக் குழலிலே விட்டு விட்டு அடைப்பும், திறப்பும் ஏற்படும்.  குளிர்ந்த தண்ணீரைக் குடிக்க ஆவல்.  வயிற்றுப் பகுதியில் ஒரு துடிப்பு.
அடி வயிற்றைப் பிசைவது போன்ற ஒரு நோவு.  அந்தப் பகுதியில் கை வைக்கவே ஒண்ணாது.  அங்கு தொட்டாலே நோயாளி அலறுவான்.  அருகிலேயே எவராலும் போக முடியாது.

கடுப்போடு மலம் இளகும்  பச்சை நிறம்.  கூடவே உதிரச் சொட்டு.  ஆசனவாயில் ஒரே எரிச்சல்.  கட்டு வாயில் கொட்டு வலி.  மூலம் வேருடன் பிதுங்கும்.  மலம் வெளிப்படுவது தடையுறும்.  மலம் கழிக்க முயற்சிக்கும்போது முதுகுத் தண்டில் கடும் நோவு.
சிறுநீர் வெளிப்படாது.   அந்தப் பாதையிலேயே புழு நெளிவதைப் போன்ற குறுகுறுப்பு.  சொட்டு மூத்திரம்.  கெட்டியாகக் கருநிறமாக அமையும்.  காரணம் ஏதும் சொல்லக் கூடாத நிலையில் சிறுநீரிலும் உதிரம்.  கொட்டு வலி.  விதைகள் வீங்கிக் கெட்டிப்படும்.  தன்னை அறியாமல் மசைத் திரவம் (Prostatic fluid)  வெளிப்படும்.


மாதர் நிலை
பெண்களுக்கு இன்னும் தொந்தரவு அதிகம்.  உட்பகுதி முழுவதும் பிறப்புறுப்பின் வழியாகப் பிதுங்கிக் கொண்டு வரும்.   உறுப்பு காய்ந்து போய்ச் சூடாக இருக்கும்  மிக மிக அதிகமான உதிரப் போக்கு,  நல்ல சென்னிறம்  அடிக்கடி வெளியாகும்.   பேறுகால நோவு, சூலொட்டே வெளி வந்துவிடுமோ என்ற அச்சமிருக்கும்.  மார்புப் பகுதி கனமாகிவிடும்.  காம்புகளிலிருந்து நோவு கிளம்பும்.  இரு மார்பிலும் சிறு கட்டிகள்.  அவை உள்ளேயே மிதக்கலாம்.  முகம் காட்டியும் வெளிப்படும்.  ஊன் நீர் கசியும்.  இந்தத் தொந்தரவுகள் அனைத்துமே படுத்தால் அதிகமாகும்.  சாய்வான நிலையில் சமனம் கிட்டும் என்பது சிறப்புக் குறி.
மூக்குப் பகுதி , மூச்சுக் குழல், காற்றுப் பை அனைத்துமே காய்ந்து போயிருக்கும்.  வரட்டிருமல், இரவிலே அதிகமாகும். தொண்டை கமறும்.  பேசவே முடியாது.  அடுக்கடுக்காக இருமல் வந்து இரத்தமாக வாந்தி எடுக்கும்.  ஒவ்வொரு தடவை மூச்சு விடும்போதும் முனகல் ஏற்படும்.
இதயத் துடிப்பைப் பற்றி முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன்.  அது தாறுமாறாக இயங்கும்.  கட்டுக்கடங்காது.  கணக்கெடுக்கவும் இயலாது.  ஒரே முணுமுணுப்பு.  இருதயமே விரிந்து போனாற்போல் இருக்கும்.  நாடி தளர்ந்து விடும்.  சிலசமயம் துடிப்பையே உணர முடியாது.
கையும், காலும் துவளும் சில்லிட்டுப் போகும்.  நடையிலே சீர்கேடு.  வலி அம்பு போல் நுனிகளுக்குப் பாயும்.  பொறுக்க முடியாத தொந்தரவு கொடுக்கும்.  நோயாளி நம்பிக்கை இழப்பான்.
தாகம்
மிகுந்த வெப்பத்துடன் கூடிய காய்ச்சல் இருந்தாலும் அந்த நேரத்தில் தாகமே இராது.  இதுவும் ஒரு சிறப்புக் குறி.  பொதுவாக வெப்பம் தலைக்கேறி தொண்டை காய்ந்திருக்கும்போது நோயாளி தண்ணீருக்காகப் பறப்பான்.  ஆனால் பெல்லடோனா நோயாளி காய்ச்சல் மிகுதியின்போது தண்ணீரே குடிக்க மறுப்பான்.  மொத்தத்தில் நோயாளி மட்டுமின்றி மருத்துவரையும் நிலைகுலையச் செய்யும் நோய்ப் படம் எதிர்ப்படும்.

மருத்துவர் கிப்சன்
ஹோமியோபதித் துறையில் டி.எம்.கிப்சன் நிபுணத்துவம் வாய்ந்தவர்.  பல நோயாளிகளைக் குணப்படுத்தியிருப்பதுடன் தமது அனுபவங்களைச் சுவைமிக்க கட்டுரைகளாகவும் எழுதியிருக்கிறார்.  பெல்லடோனா பற்றிய அவருடைய அனுபவத் தொகுப்பு ஒரு மிகச் சிறந்த கருவூலம்.
மிகக் கடுமையான வேகத்துடன் ஒரு நோய் உடலில் பரவுமானால், உதாரணமாகத் தலைவலி, தொண்டை அழலை, வீக்கம், நீர்க் கோர்த்தக் கட்டிகள், உடல் நோவு, உதிரப் பெருக்கம், ஜன்னி, இருதயத் துடிப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  அதன் விளைவு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். 

இன்னொரு முக்கியமான குறி மனக் குழப்பம்.  அவனால் எதையும் சீராகச் செய்ய முடியாது.  விழித் தொளைகள் விரிந்து போவதால் அவருடைய பார்வையும் தெளிவாக இராது.  அங்கே அச்சம் அதிகம் இராது.  ஆனால் சினம் அளவுக்கு மீறி இருக்கும்  எல்லாப் புலன்களும் விரைவாக ஆனால் ஒழுங்கின்றி இயங்கும்.  அவன் சீறுவான்,  பற்களைக் கடிப்பான், எதிராளியின் மேல் பாய்வான், ஒலியை மட்டுமின்றி ஒளியையும் அவனால் தாங்கிக் கொள்ள இயலாது.  அவனுடைய படுக்கையே ஊஞ்சலைப் போல் அசையும் மாயத் தோற்றம் இருக்கும்.

காய்ச்சல் மிகுதியாகும் நேரம் காலை எட்டுமணி.  இரவு ஒன்பது மணி, குளிர் காற்றைத் தாங்க இயலாது.  ஆனால் நீர் வேட்கை இருக்கும்.  அதைத் தாகமென்று கூறுவதைவிட எரியும், காந்தும். உட்பகுதிகளை நீரால் சமனம் பெறும் விருப்பம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.  தலையைப் பின்புறம் சாய்த்துக் கொண்டால் வலி குறையும் என்று இவரும் எழுதுகிறார்.
எவ்வளவு விரைவில் நோய்க் குறிகள் படருமோ அதே வகையில் நீங்கும் என்பதும் மருத்துவர்கள் மறக்கக் கூடாது.  கையைத் தலைக்கடியில் வைத்துக் கொண்டு உறங்கும்போது உடலே உதறும்.  தூங்கிய நிலையிலேயே தூக்கி வாரிப் போடும்.

பெருந் தொண்டு
இந்தப் படர் செடி இனம் காஷ்மீரிலும், உத்திரப்பிரதேசத்திலுள்ள ராணி கேத்திலும் பயிர் செய்யப்படுகின்றது.  இது ஒரு புதிய தகவல்.
இந்த அட்ரோபின் நஞ்சைப் பெருமளவு உட்கொண்டு அதன் விளைவுகளை எழுதி வைத்த பெருந்தகையர் எத்தகைய தொண்டு செய்திருக்கிறார் என்பதை வெறும் சொற்களால் விவரித்து விடமுடியாது.  ஒரு மனித உடலில் எல்லாவிதச் சீர்கேடுகளும் ஏற்படச் செய்து உலுக்கும் திறனுடையது அட்ரோபின்.  அதே சமயம் வீரியப்படுத்தப்பட்ட இரு பெல்லடோனா மாத்திரைகள் இவை அனைத்தையும் போக்கிவிடும் என்று உணரும்போது சாதாரண மனிதர் மட்டுமன்றி மருத்துவனே வியப்படைவான்.
இங்கேயும் ஒரு நச்சுத் தாவரம் தான் மருந்தாக மாறுகிறது.  அதை மெய்ப்பிக்கும் சாத்திரம் என்றென்றும் வாழட்டும். !

நினைவில் நிறுத்துக
1. பெயர் - பெல்லடோனா(டெட்லி நைட்ஷேடு என்ற படர் செடி)
2. இனம் - தாவரம்
3. நோய் முதல் - பருவ மாறுதல், உணவில் மாற்றம்
4. நோய் தாக்கும் பருவம் - அனைத்துப் பருவமும்-குளிர் காற்றும்.
5. நோய் தாக்கும் நேரம் - பிற்பகல்
6. நோய் சனமாகும் சூழல் - சாய்ந்த நிலை
7. மருந்து பணிபுரியும் காலம் - 1 முதல் 3  நாட்கள்
8 தொடர் மருந்துகள் - ஸாங்குனேரியா(இதுவும் வலதுபுற நிவாரணி) கல்காரியா
9. எதிர் மருந்துகள் - அஸடிக் அமிலம்
10. பொதுக் குறிகள் - மனம்-உடல்-இயக்கம்-எதிர்பாராத வகையில் கடும் தாக்கம் (VIOLENT)
11. சிறப்புக் குறிகள் - தாகம் இராது
12. வீரியம் - 3, 6, 30, 200
13. குறிப்பு - நோய் வந்த வேகத்தில் மறையும்.  இடம் மாறும்-இதை குறுகிய கால இடைவெளியில் பலமுறை நீரில் கரைத்தும் தரலாம்.


இன்னும் சில மருந்துகள்  நூலில் இருந்து.....

2 கருத்துகள்: