ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்களை மருத்துவராக, ஆசிரியராக அறிந்த பலருக்கு அவர் ஓர் சிறந்த எழுத்தாளர் என்பது தெரியாது.
பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவை ஒவ்வொன்றும் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். அவற்றை
பற்றி சிறு அறிமுகம்.
பழ,வெள்ளைச்சாமி நூல்கள்:
- 1. A Brief Introduction to Homoeopathy
- 2. ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?
- 3. ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு
- 4. ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
- 5. ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
- 6. ஹோமியோபதி ஓர் அறிமுகம்
- 7. மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம்
- 8. திருமணமுறை மாற்றப்படவேண்டும்
- 9. ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம்
- 10. ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
- 11. ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள்
- 12. அன்பே கடவுளின் நியதி
- 13. மனிதத்துவம்
நான் முதலில் படித்து வியந்த புத்தகம் மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் என்ற புத்தகம் தான். இந்த புத்தகத்தின் முன்னுரையில் ஐயாவின் வகுப்புகளும் அப்ரோச்சின் பிரச்சாரங்களையும் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் கேரள ஆன்மீக குரு நாராயண குருவின் சேவையோடு ஒப்பிட்டு இருப்பார். அது சத்திய உண்மை.
மேஜர் தி.சா.இராஜூ அடிக்கடி தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய கெண்ட் ரெப்பர்ட்டரியையே பார்த்திராத எனக்கு ஐயாவின் இந்த புத்தகம் எனக்கு மிகவும் உதவியது.
கெண்ட் ரெப்பர்ட்டரி மேல் தீராத ஆர்வம் உண்டாகி அதன் தேவையை நான் நன்றாக உணர மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் எனக்கு பேருதவியாக இருந்தது.
இந்த புத்தகத்தில்
- மருந்துகாண் ஏடு என்றால் என்ன?
- அதன் தத்துவ பின்னணி வரலாறு வளர்ச்சி எப்படி உருவானது?
- மருந்துகாண் ஏட்டின் பயன் என்ன?
- புழக்கத்தில் உள்ள முக்கிய மருந்துகாண் ஏடுகள் பற்றிய விவரங்கள்…(SYNTHETIC முதல் SYNTHESIS வரை கம்ப்ளீட் மர்பி பதக் வரை)
- மருந்துகாண் ஏட்டின் வடிவமைப்பு பற்றிய தெளிவான விளக்கங்கள் (MIND.VERTIGO,HEAD.EYE.VISION.EAR.HEARING….)
- கெண்ட் மருந்துகாண் ஏட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
- குறிகளின் முழுமையை எவ்வாறு கணக்கிடுவது?(TOTALITY)
- நீக்க உதவும் குறியை(ELIMINATING SYMPTOM) எவ்வாறு தேர்வு செய்வது?
- கெண்ட் மருந்துகாண் பேரேட்டில் என்னென்ன குறைகள்??
என எளிதில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்.. சிறந்த ஹோமியோபதி மருத்துவனாக விரும்பும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டியது அவசியம்.
இரண்டாவது புத்தகம்
ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
சின்னஞ்சிறிய இந்த புத்தகம் மனக்குறிகளின் முக்கியத்துவத்தை எனக்கு புரியவைத்தது.
அடிபட்டால் ஆர்னிகா, புண் ஆற காலண்டுலா, வயிற்றுப்போக்குக்கு போடாபைலம் மூட்டுவலின்னா ரஸ்டாக்ஸ், பிரையோனியா
என இப்படி நோய் அடிப்படையில் மருந்துகளை கொடுத்தும் பலன் கிடைக்காதபோது ஹோமியோபதி
சரியான மருத்துவம் இல்லையோ என சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் அடிபட்ட ஒரு பாட்டிக்கு அவரின் மனக்குறியான மத்தவங்களுக்கு நான் பாரமாக போயிடுவேனோன்னு பயமா இருக்குப்பா என கூறியதை வைத்து ரபேனஸ் கொடுத்து உடனேயும் முழுதுமாய் வலி குறைந்தது என விவரித்திருப்பார். அப்போதுதான் ஹோமியோபதியின் முழு பரிமாணமும் எனக்கு புரிந்தது.
மனக்குறிகளின் பங்கு நூலில்
என்னென்ன வகையான மனக்குறிகளை நாம் அடையாளம் காணவேண்டும் என்பதை இந்த சிறு நூலில் அருமையாக விளக்கியிருப்பார்.
1.நோய் ஏற்படுத்திய மனநிலை (pathological mind)
2.நோய் ஏற்பட காரணமான மனநிலை (causative mind)
3. இந்த இரண்டும் சரிவர கிடைக்காதபோது நோயுற்ற மனிதனின் மாறாத தனித்துவமான சுபாவம் (State and disposition)
என மன நிலையை எவ்வாறு அறிவது என துயரர் சரிதையுடன் விளக்கியிருப்பது எவருக்கும் புரியும்.
இதுமட்டுமில்லாமல் மருந்து தேர்வுக்கு துயரரின் மாறுபட்ட மனநிலையை (alterd state of mind and disposition) எடுப்பதா அல்லது இயல்பான சுபாவத்தை எடுப்பதா என்ற சிக்கலுக்கு ஹானிமனின் ஆர்கனானில் இருந்தே மணிமொழி 210லிருந்து 214 வரை விளக்குவார். இந்த மணிமொழிகளையே இன்றைய டாக்டர் சேகலில் இருந்து இராஜன் சங்கரன்,பிரபுல் விஜயகர் வரை அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி புதிய வழிமுறைகளை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்துக்கும் தீர்வு ஆர்கனானிலே இருக்கிறது என்று ஐயா பழ.வெள்ளைச்சாமி உறுதியாக கூறுகிறார்.
இந்த புத்தகத்தில் முத்தாய்ப்பாக மருந்து தேர்வுக்கென ஒரு எளிய வழிமுறை ஒன்றை கூறியிருக்கிறார்.
1.
நோய் ஏற்படுத்திய மனநிலைக்குறி (PATHOLOGICAL MIND)
2.
நோய்க்கு காரணமான மனநிலைக்குறி (CAUSATIVE MIND)
3.
துயரரின் சூழலிய தட்பவெப்ப தகவமைப்பு (THERMAL CONDITIONS)
4.
துயரரின் உணவுப்பழக்கம், விருப்பு வெறுப்பு (DESIRE&aversions)
5.
தனித்துவமான நோயியல் குறிகள் (pathological peculiarity)
ஆக இவற்றை அறிந்து இதன் முழுமைக்கு மருந்து கொடுத்தால் ஹானிமன் கூறிய இயற்கை தத்துவத்தின்படி நலமாக்கல் நடைபெறும் என ஆய்ந்து கொடுத்திருக்கிறார். இதே புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் உலகப்புகழ் பெற்றிருக்கும்.
மூன்றாவது புத்தகம்
50மில்லிசெமல் வீரியம்
டாக்டர் ஹானிமன் தனது ஆர்கனான் 6ஆம் பதிப்பில் கூறியிருப்பதாவது, முந்தைய செண்டிசிமல் வீரியத்தில் உள்ள குறைகள் களையப்பட்டு முழுமையான வீரியப்படுத்தல் முறைய ‘முழு நிறைவு பெற்ற முறை’ என்று அறிமுகப்படுத்தினார். இது நோய் அதிகரித்தல் ஏற்படாதது. மருந்தை அடிக்கடி கொடுக்க முடியும்.
ஆனால் இந்த 50மில்லெசிமல் வீரியத்தை மருத்துவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த வீரிய மருந்துகளை பயன்படுத்தி வெற்றி பெற்ற துயரர் சரிதைகள் நமது முன்னோர்களின் பதிவுகளில் இல்லை. இந்த வீரியப்படுத்தல் பற்றி ஹோமியோபதியருக்கு இருந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஐயா PLV இந்த புத்தகத்தை எளிமையாக தந்திருக்கிறார். அழகிய தமிழில் 50 மில்லெசிமல் வீரியம் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவே ஆகும். 50 மில்லெசிமல் வீரியத்தை பற்றி ஐயங்களை தெளிவிக்கிறது இந்நூல்.
நான்காவது புத்தகம்
ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
தனிமங்களின் அணு
எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்ட ஸ்கால்ட்டன் புத்தகங்களை தமிழகத்துக்கு
முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஐயா PLV. ஸ்கால்ட்டனின்
இரண்டு புத்தகங்களையும் வாசித்து ஸ்கால்ட்டன் முறையை பயன்படுத்தி பல்லாயிரம் பேருக்கு
மருந்து கொடுத்து வெற்றி கண்டவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள்.
தான் அனுபவித்ததை ஹோமியோபதியர் அனைவரும் பயன்பெறவேண்டுமென அந்த புத்தகத்தின்
சாரத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்.
ஸ்கால்ட்டன் தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும்
உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்தவர்.ஹோமியோபதியர்கள் தனிமங்களின்
வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும்
புரிந்து கொண்டால் போதாது. அவன்
குடும்பத்தை, அவன் வாழும்
சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவனுக்கும், அவன்
குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும்
உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின்
அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச்
சிறப்பாகக் கூறியிருப்பார் ஸ்கால்ட்டன்.
அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக, சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும்
சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார். ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை
உணர்ந்துள்ளார். ஒரு மனிதனைப் புரிந்து
கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.
அவனுக்கும்- குடும்பத்திற்கும், அவனுக்கும்-சமுகத்திற்கும், அவனுக்கும்-தொழிலுக்கும், அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும், அவனுக்கும்-ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள
முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக
ஆழமாகப் படிக்க வேண்டும். சிறந்த சமூக
அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை ஸ்கால்ட்டன் மூலமாக
நமக்கு கற்பிக்கிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி
பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த ஐயா பிஎல்வி அதன்
சாரத்தை ஸ்கால்ட்டனின் கனிமங்கள் என்ற சிறுநூலில் தந்துள்ளார்.
ஐந்தாவது புத்தகம்
ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
நாம் தமிழில் நிறைய மெட்டீரியா மெடிக்கா நூல்கள் தான் படித்து இருக்கிறோம். ஹோமியோபதி தத்துவம் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் இல்லை அந்த குறையை தீர்க்க வந்த அற்புத புத்தகம் இதுவாகும்.
இன்றைய ஹோமியோபதியருக்கு உள்ள சிக்கலே தத்துவத்தை அறியாததால் தான். இந்த புத்தகம் அறியாமையை போக்குகிறது. ஹோமியோபதி தத்துவமான ஆர்கனானை பிழிந்து அதன் சாறை தந்திருக்கிறது இந்த புத்தகம். ஹோமியோபதியை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம்
படிக்கவேண்டிய புத்தகம் இது. ஹோமியோபதி என்ற வாழ்கலை விஞ்ஞானத்தை அறிந்துகொள்ள இந்த
ஒரு புத்தகமே போதுமானது.
இந்த புத்தகம்
- · நாம் ஏன் ஹோமியோபதி படிக்கவேண்டும்?
- · இதன் தத்துவம் என்ன? ஹோமியோபதி தத்துவம் இயற்கையுடன் ஒத்துப்போகிறதா?
- · துயரரை எவ்வாறு ஆய்வு செய்வது? என்னென்ன கேள்விகள் கேட்பது?
- · துயரர் ஆய்வு முடிந்தபிறகு எவ்வாறு குறிகளை வகைப்படுத்துவது?
- · அந்த குறிகளில் சிறப்பியல்புக்குறிகள் எவை?
- · எந்த குறிகள் துயரரை தனித்துவப்படுத்துபவை?
- · ஏன் துயரரை தனித்துவப்படுத்தவேண்டும்?
- · ஸ்கால்ட்டன் அவர்கள் கூறியதுபோல ஆர்கனான் தத்துவம் காலாவதியாகிவிட்டதா?
- · பலவிதமான புதிய வழிமுறைகள் மருந்துத்தேர்வுக்கு தற்போது உலா வருகின்றனவே. இவை ஆர்கனானுக்கு அப்பாற்பட்டவையா?
- · மருந்து தேர்வுக்கு மனக்குறிகள் மட்டும் போதுமா?
- · இரண்டாவது முறை மருந்து தரும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன? மருந்தை எப்போது மாற்றுவது?
என நமக்கு ஹோமியோபதி தத்துவத்தில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்த புத்தகம். என்னை பொறுத்தவரையில் புதிதாக ஹோமியோபதி படிக்கவரும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
அடுத்த முக்கிய புத்தகம்
திருமணமுறை மாற்றப்படவேண்டும்
நோயிலிருந்து மனிதனை
விடுவிப்பது மட்டும் ஒரு மருத்துவருடைய பணியல்ல.ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை
ஏற்படுத்துகின்ற காரணிகள் எவை என்பதை அறிவதும், அவற்றை எவ்வாறு ஆரோக்கியமான
மனிதர்களை பாதிக்காவண்ணம் நீக்குவது என்பதை அறிவதும் மருத்துவருடைய கடமையாகும்.
-ஆர்கனானின்
ஆறாம் பதிப்பு மணிமொழி 4
இந்த பணியினை மிகச்சரியாக செய்துவருபவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அதற்கு உதாரணம் தான் இந்த புத்தகம்.
இன்று நிலவி வரும் பல்வேறு நோய்களுக்கு
அடிப்படைக் காரணம் இந்தச் சமூகச்சூழல். வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம், சாதி, மத
வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் மற்றும் பல.இப்படியான சமூகம் மாறாமல் மனிதனை வெறும்
ஹோமியோபதி மருத்துவத்தால் மட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாது.மேலும்
மேற்கூறிய காரணங்கள் நோயைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் காரணிகளாக மட்டும்
இல்லாமல், நோயைத் தடுக்கும் தடைக்கற்களாகவும் இருக்கின்றன. இதிலிருந்து நோயுற்ற
நிலையிலுள்ள மனிதனை நோயற்ற நிலைக்கு மாற்ற வேண்டுமென்றால் இந்தச் சமூகம்
மாறவேண்டும்! இதை யார் மாற்றுவது? மற்ற எவரையும் விட ஹோமியோபதி மருத்துவர்களுடைய
பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
கடந்த 30
ஆண்டுகளாக தன்னிடம் வந்த நோயாளிகளை ஆய்வு செய்ததில் – பெரும்பாலானவர்களின்
நோய்களுக்கான அடிப்படைக் காரணம் தற்போது சமூகத்தில் நிலவி வரும்
திருமணமுறைதான் என்பது, அவரது ஆய்வில் தெரிய வந்த உண்மையாகும். இந்தத்
திருமணமுறை மாற வேண்டும். அவ்வாறு மாறினால் நாம் இந்த சமுதாயத்தை குறிப்பாக பெண்களை பல வகையான
நோய்களிலிருந்து விடுவிக்கலாம். இந்த திருமணமுறையால் என்ன பாதிப்பு,
எப்படி பாதிப்பு? எப்படி இந்த திருமணமுறையை மாற்றுவது?
என இந்நூலில் விரிவாக அலசுகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
இறுதியாக
மனிதத்துவம்
இன்றைக்கு
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், சமூகச்சீர்கேடுகள், ஆன்மீக மோசடிகள், மக்களின் குணக்கேடுகள் மற்றும் ஊழல்,இலஞ்சம்,பொய்புரட்டு,பசிபட்டினி, கொலைகொள்ளை,வன்புணர்வு என மனிதன் சீரழிந்து
கிடக்கிறான். இவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு விடுதலை அடைவது,
மதங்கள் ஏன் அன்பை போதித்தன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
மிருகங்கள் அனைத்தும் தன் குணத்தில் ஒன்றுபோல் இருக்க மனிதன் மட்டும்
ஏன் ஒன்று போல் இல்லை..
மனிதனுக்கு என தனித்துவமான குணம் இருக்கிறதா?
இருந்தால் அது என்ன?
இருந்தால் அது என்ன?
அந்த குணத்தை மனிதன் ஏன் மறந்தான்?
கடவுள் பற்றி,
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
நமது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
நமது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?
கடும்தவம் புரியும் தவசிகள் மட்டுமே ஞானமடைய முடியும் என சொல்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சாதாரண மனிதன் என்னால் ஞானமடைய முடியுமா? அது இருக்கட்டும், முதலில் ஞானம் என்றான் என்ன? அதை ஏன் மனிதன் அடையவேண்டும்,அது அடையக்கூடிய ஒன்றா?
சமூகத்தை ஒதுக்கிவிட்டு தியானம் செய்வது சரியா?
மனிதனுக்குள் ஏன் இந்த பிரிவினை...
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
அறிவியலின் பேரில் ஏன் இத்தனை சுரண்டல்கள்
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
நான் மதங்களை பின்பற்றுவதா?
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே..
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே..
மருத்துவனான
நான் என்ன செய்யவேண்டும் ??/
என்ற எனது எல்லாக்கேள்விகளுக்கும் இந்த சிறுநூல் விடையளித்தது
இந்த நூல் என்னுடைய கேள்விகளுக்கு விடையை மட்டுமல்ல
எனது உள்ளத்தில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.
உங்களுக்குள்ளும் அதேபோல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தகத்தால்
முடியும்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி அவர்களின்
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
ஐயா அவர்களின் புகழை அவரின் புத்தகங்கள் காலாகாலத்துக்கும் சொல்லும். ஐயா அவர்களின் இலட்சியமான வீட்டுக்கு ஒரு ஹோமியோபதி மருத்துவரை உருவாக்கும் நோக்கம் நிறைவேற நாம் துணை நிற்போம். எங்களது ஆசான் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள் ஹோமியோபதிக்கும் இந்த தமிழ்ச்சமூகத்திற்கும் சேவை செய்து மென்மேலும் சாதனை பலபுரிந்து பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம்வல்ல என் இயற்கை அன்னையை வேண்டி வணங்குகிறேன்.
திக்கெட்டும் ஹோமியோபதி பரவட்டும்!!
டாக்டர் ஹானிமன் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.
வாழ்க தமிழ்!!!
வெல்க தமிழ்!!!
***************
ஐயா ெவெௌெள்
பதிலளிநீக்குஇவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என கூறினால் வாங்கி கொள்கிறேன்
பதிலளிநீக்குHow to get book
பதிலளிநீக்கு