நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
மியாசங்கள் குறித்து என் ஆசான் அளித்த பலக் கருத்துக்களைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். அவற்றை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
முதல் தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(PSORA MIASM)
கலை, இலக்கியம்,வாழ்வியல், சமயம் குறித்துச் சிறந்த கற்பனைகள், திட்டங்கள் இவரிடம் இருக்கும். ஆனால் அவரால் எதையும் செயல்படுத்த இயலாது. அந்த அளவுக்கு அவர்களால் இயங்க முடியாது. (Rugged PhilosoPher – Kent).
கல்லை வயிரமணி ஆக்கல்-செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்க வேறாக்கல்-வெறும் மண்ணை
வெல்லத்தினிப்பு வரச்செய்தல் . . . . .
எவ்வளவு அற்புதமான நற்பணிக் கற்பனைகள்? ஆனால் நடைமுறையில் நிகழ்ந்தது என்ன? டிராமில் பயணிப்பதற்காக செல்லம்மாள் கொடுத்த ஓரணாவுக்கு ஒரு மல்லிகைப் பூ மாலை வாங்கிக் கழுத்தில் தரித்துக் கொள்ளுவார் (அந்தப் பூக்காரியின் வியாபாரம் பெருக வேண்டும்!) திருவல்லிக்கணியிலிருந்து மௌண்ட்ரோடு அலுவலகம் வரை அந்த மகாகவி நடந்தே செல்லுவார். எந்தக் கற்பனையை அவரால் செயலாக்க முடிந்தது? தமிழ் மக்கள் என்னுடைய கவிதைகளை தீப்பெட்டியைப் போல, மண்ணெண்ணையைப் போல, வாங்க ஓடி வருவார்கள் என்று அவர் நம்பினார். அவருடைய பாடல் தொகுதிகளை நான்கணா விலைக்குக் கூட வாங்க எவரும் முன் வரவில்லை.
பாட்டாளிக்கு விடுதலை, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று பறையறிவித்து அதைச் செயலாக்கிய லெனின், பழமைவாதிகளின் பிடியிலிருந்து சமயத்திற்கு விடுதலை அளித்த முஸ்தபா கமால் பாஷா ஈழவர்களின் தன்மான உணர்ச்சியத் தட்டி எழுப்பி கல்வியிலும், சமயத்துறையிலும் அவர்களை மேம்பாட்டடையச் செய்த நாராயணகுரு, கடலுப்பைக் காய்ச்சி அதன் மூலம் விடுதலை உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டிய காந்தி அண்ணல் ஆகியவர்களிடம் கற்பனை மட்டுமின்றிச் செயல் திறனுமிருந்தது.
ஜெர்மன் நாட்டிலுள்ள மீசன் நகரில் வாழ்ந்த அந்த மேதை சக மருத்துவர்களாலேயே வெளியேற்றப்பட்டார். அவர் நம்பிக்கை இழக்கவில்லை. வேறு நாட்டில் குடிபுகுந்தார். மருத்துவ உலகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மனித உடலில் ஒரு ஜீவசக்தி உயிர் ஆற்றல் குடி கொண்டுள்ளது. அது தன்னைத்தானே சீராக்கிக் கொள்ளும் திறனுடையது. குறைகள் ஏற்படும்போது அவற்றைப் போக்க மிகக் குறைந்த அளவுள்ள மருந்தே போதும் என்று மெய்ப்பித்த மேதை டாக்டர் ஹானிமன். இவரிடம் கற்பனை மட்டுமின்றிச் செயல் திறனும் இருந்தது. கடின உழைப்பினால் அதை வளர்த்துக் கொண்டார். (உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?).
இரண்டாவது தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(SYCOSIS MIASM)
இரண்டாவது தோஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டவன் ஓர் ஆஷாடபூதி வெளிவேஷக்காரன், சமுதாய நெறிகளையோ, சமய அனுஷ்டானங்களிலேயோ அவனுக்கு மெய்யான ஈடுபாடு கிடையாது. அதற்கான அடிப்படை நம்பிக்கை அவனிடம் இராது. ஆனால் சிகை வளர்ப்பான். முகமயிர் நீட்டுவான். புறச்சின்னங்களை அணிவான். ஆனால் அகத்தூய்மை அவனிடம் இராது. அவனுடைய வாழ்வே நடிப்பு தன்னலமே அவன் நோக்கம். இப்படி எத்தனை மக்களை, சமயவாதிகளை நாம் சந்திக்கிறோம்? உரக்க அறிவித்தால் உதைக்க வரும் அடியாட்கள் அவனிடம் உண்டு. எப்படியாவது சமுதாய அரசியல் வாழ்வில் அவன் முதலிடம் பெற வேண்டும். இதுவே அவனுடைய குறிக்கோளாக இருக்கும் (யாருக்கும் வெட்கமில்லை).
கடவுளுக்காக காவடி எடுப்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் விட துயருற்றவர்களுக்கு ஆறுதலும், உதவியும் அளிக்கும் அறிவுவாதி எவ்வளவோ மேலானவர்கள். அந்த அறிவுவாதியை நான் வணங்குகிறேன். (அதனால்தான் வள்ளலாரை வையகமே போற்றுகிறது. ஆருயிர்கட்கெல்லாம் நாம் அன்பு செயல் வேண்டும்).
மூன்றாவது தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(SYPHILIS MIASM)
மூன்றாவது தோஷத்தைச் சேர்ந்தவன் உலகம் பழிக்கும் வினைகளைக் கூசாமல் செய்வான். குடித்துவிட்டுச் சாக்கடையில் புரளுவான். பல தாரங்களை மணந்து அதை நியாயப்படுத்துவான், சமுதாய வழிகாட்டிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களும் இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.
எல்லாவற்றையும் அழித்துவிட வேண்டும். தீய்த்து விட வேண்டும் என்ற தீவிரமான கொள்கை. எவரிடமும் இரக்கம் கிடையாது. சுயநலமிதான் என்றாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் அஞ்சமாட்டான். பிறருடைய அழிவில் அவனுக்கு ஒரு தீவிரமான வெறி, ஆசை (அடால்ப் ஹிட்லர் இடி அமீன்).
என் ஆசான் கூறுவார். எவரையும் அவருடைய தீய செயல்களுக்காக வெறுக்காதே, பழிக்காதே அவர்கள் சில மியாசங்களினால் ஆட் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். அவற்றைக் கட்டுப்படுத்த, அல்லது நீக்க என்ன வழிமுறைகள் பயன்படும் என்று எண்ணிப்பார். படி, உழை, விவாதி, விளக்கம் கிடைக்கும்.
முதல் மியாசத்தைச் சேர்ந்தவன் அழுக்கிலேயே உழலுவான். உடல், ஆடை, சுற்றுப்புறம் எங்கும் அழுக்கே குடி கொண்டிருக்கும் (அவன் உடலிலிருந்தே துர்நாற்றம் வீசும் போயரிக் -சாய்வெழுத்துக்கள்) நோய் வாய்ப்பட்ட சில குழந்தைகளின் உடலிலே புளித்த காடியின் நெடியடிக்கும்.
என் ஆசான் உரைப்பார். அவனுடைய உடலும், சுற்றுப்புறமும் மட்டும் அல்லாமல் அவனுடைய உள்ளமும் அழுக்காக இருக்கும். கந்தகத்தையும், சிரங்கு பொருக்கையும் கொடுத்து அவன் உடல் உள்ளம் இரண்டையுமே சீராக்க முயற்சி செய். தேவையானால் சுண்ணாம்பையும் சேர்த்துக் கொள் (சல்பர், ஸோரினம், சல்காரியா).
மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு. டி.எஸ். ஐயர் (சுப்பிரமணிய ஐயர்) இவ்வாறு எழுதுகிறார். பிறந்த குழந்தைக்கு இரு நூறாவது வீரியத்தில் ஊசி முனையளவு கந்தகத்தைக் கொடு. மூன்றாவது மாதம் அதே அளவு கல்காரியா மட்டும் போதும். குழந்தையை எந்த நோயும் அணுகாது. இரண்டுமே ஸோராவின் வைரிகள். இரண்டும் மிகக் குறைந்த அளவு-கூடவே உயர்ந்த வீரியம்.
விஞ்ஞான உலகம் சர்.சி.வி. ராமனை நன்கறியும், அவர் விஞ்ஞானத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர். அவர் தமது துணைவியார் லோக சுந்தரியுடன், மருத்துவ ஆலோசனை பெறும்பொருட்டு மயிலாடுதுறைக்கு வருவார் என்று அண்மையில் அறிந்து கொண்டேன். இருவரும் நெருங்கிய நண்பர்கள் (கற்றாரைக் கற்றாரே காமுறுவர்) உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஹோமியோபதி மருத்துவத்தின் மேன்மை பற்றி உணர்ந்து கொண்டு அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு.
ராகுல் சாங்கிருத்யாயன்
இந்த நாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புரட்சிகரமான எழுத்துக்களைப் படைத்தவர் ராகுல் சாங்கிருத்யாயன், அவர் உத்திரப்பிரதேசத்திலுள்ள மஸுரியைச் சேர்ந்தவர்.
அவருடைய இறுதி நாட்களில்தான் எனக்கு அவரிடம் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பரிவுரையின்படி நான் தவத்திரு தலாய்லாமாவைச் சந்தித்தேன். அப்போது அவருடைய குடியிருப்பில் மருத்துவம் புரியும் பல லாமக்களின் தோழமை எனக்குக் கிடைத்தது. அவர்கள் ஆயுர்வேதத்தில் பெரும் நம்பிக்கை உடையவர்கள். அவர்களைப் பொறுத்த வரையில் மனித உடலுக்கு மருந்தே தேவையில்லை. மணி, மந்திர, அவுடதம் என்பதுதான் அவர்களுடைய கோட்பாடு. அவுடதம் என்பது மூன்றாவது தரத்தது என்பதே அவர்களுடைய கருத்து.
மந்திரம் வலிமையாம் என்ற மகாகவியின் வாக்கிற்கு நான் தலாய் லாமா வசித்த மக்ளாயிடு கஞ்சில் (தரம்சாலா) பொருள் புரிந்து கொண்டேன்.
அது என் வாழ்க்கையின் பிறிதோர் அத்தியாயம்.
-
நமது இந்தியத் திருநாட்டில் வடமேற்கு எல்லையில் தாக்ஸிலா என்றொரு நகரம் உள்ளது. (தற்போது பாகிஸ்தான்). அதன் தொன்மையான பெயர் தக்ஷசீலம். அங்கே சென்று அதன் இடிபாடுகளைக் காணும் பேறு எனக்குக் கிட்டியது. மூவாயிரம் ஆண்களுக்கு முன்பு மிகப் பெரும் பல்கலைக்கழகம் ஒன்று அங்கு செயல்பட்டது. கணித இயல், வேதியியல், மண்ணூல், வானவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிவை அங்கே பயிற்றுவிக்கப்பட்டன. உலகின் பல பாகங்களிலிருந்தும் அங்கு மாணவர்கள் தங்கியிருந்து பயின்றனர். அவர்களில் ஒருவர் ஜீவகன் (ஜீவகன் குமாரப்பிரியதா) ஏழாண்டுகள் மருத்துவம் பயின்ற பிறகு அவருக்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. இந்த வையகத்தில் மருத்துவப் பயனில்லாத பொருள் ஏதாவது உள்ளதா என்பது கேள்வி. ஆராய்ச்சியை மேற்கொள்ள அவருக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540 |
ஜீவகன் நாடு முழுவதும் சுற்றி அலைந்து ஆராய்ச்சியை மேற்கொண்டார். பல சோதனைகளை மேற்கொண்ட பிறகு உலகில் பயனில்லாதது என்று எப்பொருளுமில்லை என்று தமது முடிவை அறிவித்தார். அதற்குப் பிறகே அவருக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவர் புத்த சமயத்தைத் தழுவினார். பீஹாரிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் போதித்தார். பல மருந்துகளைக் கண்டுபிடித்து பிணியாளர்களைச் சீராக்கினார். பல மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கினார். ராஜ்கிர் என்ற (ராஜக்கிருகம்) தலத்தில் அருகில் வேணுவனம் என்ற (மூங்கில் காடு) இடத்தில் கௌதம புத்தர் வசித்து வந்தார். இந்த மருத்துவருக்கு அந்தப் பேரருளாளரின் அறிமுகம் கிட்டிற்று. அவருக்கே ஜீவகன் மருத்துவம் புரிந்ததாக ஏடுகள் கூறுகின்றன. நமது மருத்துவ வரலாறு அத்தகைய தொன்மை வாய்ந்தது. வெறும் மணல், கரித்துகள் ஆகியவற்றில் அற்புதமான மருத்துவ ஆற்றல் மறைந்திருப்பதை மேதை ஹானிமன் மெய்ப்பித்தார். அவருக்குப்பின் வந்த பெருந்தகையர்கள், நோய்க் கழிவுப் பொருட்களிலும் மருந்தாற்றல் உள்ளது என்ற பேரதிசயமான செய்தியை நிரூபித்தனர். ஜீவகனின் கூற்று ஒரு பரம சத்தியம்.
இன்று மெடோரினம் என்ற நோய்க் கழிவுப் பொருளைப் பற்றி உரக்கச் சிந்திக்கிறோம். இதன் மூலப் பொருள் கொனோ (GONO) என்பதாகும். இந்தக் கிரேக்க மொழிச் சொல்லுக்கு விதை என்பது பொருள். இந்த விதை அல்லது விந்து ஆண் மகனின் விதைப் பையில் உற்பத்தியாகிறது. இதைப் பெண்ணின் சினைப் பையில் செலுத்தினால் மனித உயிர் உண்டாகிறது. இந்த விதை புணச்சியின் போது மட்டுமே வெளிப்பட வேண்டும். அப்படியின்றி மற்ற வேளைகளில் கசிந்தால் இதைக் கொனேரியா என்று அழைப்பார்கள். ஓரியா என்ற சொல்லுக்குக் கசிவு, ஒழுக்கு என்று பொருள் (லூக்கோரியா, டயோரியா, பயோரியா ஆகியவை எடுத்துக்காட்டுகள்).
18-25 வயதில் காரணம் தெரியாத சோர்வினால் அவதிப்படும் இளைஞர்கள் என்னிடம் சிகிச்சைக்கு வந்தால் அவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது விந்து வெளிப்படுகிறதா? என்பதாகும்.
அப்படி இருப்பது உறுதியானால் அவர்களைத் தனியே அழைத்துச் சென்று மீண்டும் கேட்பேன். விந்துவைப் பலவந்தமாக நீக்கும் பழக்கம் இருந்ததா? இருக்கிறதா?
அறுபது விழுக்காட்டு அன்பர்கள் இதை ஒத்துக் கொள்ளுவார்கள்.
நமது திரைப்படங்களும், புதினங்களும் பாலுணர்வை மிகுதியாக்குகின்றன. பல ஏடுகளில் குறை ஆடை அணிந்த படங்கள் வெளியிடப்படுகின்றன. அவைகளைக் காணும் இளைஞர் சமுதாயத்தினருக்கு எண்ணங்கள் திசை மாறி விடுகின்றன. அதன் தீய விளைவிற்று நமது தூணியில் அற்புதமான மருந்து உள்ளது. அதன் மூலம் தாவரம், செம்மை மரம் (CHASTE TREE) என்றே அதற்குப் பெயர்.
இப்படி விந்து ஒழுகும் நிலையைச் சித்த மருத்துவம் மேக வெட்டை நோய் என்று குறிப்பிடுகிறது. ஹோமியோபதியில் எந்த நோய்க்கும் பெயர் கிடையாது.
1879-ஆம் ஆண்டில் ஆல்பர்ட் கீசர் என்ற ஜெர்மானிய மருத்துவர் மேக வெட்டை நோய்க்கு காரணம் கண்டுபிடித்தார். அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அந்த ஒழுக்கிலுள்ள சீழில் அற்புதமான மருந்து ஒளிந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இந்தச் சீழை வீரியப்படுத்தி நோயுற்றவருக்குக் கொடுத்தால் எலும்பு மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தையும் நோவையும் குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவம் மெய்ப்பித்திருக்கிறது. இந்த மருந்தின் பெயர் மெடோரினம் (MEDORRHINUM).
இந்த நோயுள்ள பெற்றோர்களின் வழியாக அவர்களுடைய சந்ததிகளுக்குக் கடுமையான மூட்டு வீக்கமும், நோவும் வரக்கூடும். இந்த நோய் பிற காரணங்களினாலும் வரலாம். நோய்ப் பாரம்பரியம் இருக்குமானால் அவர்களை இந்த மருந்து குணப்படுத்துவதுடன் இது வராமல் தடுக்கவும் உதவி செய்யும் என்ற உண்மையை என் ஆசான் நிரூபனம் செய்துள்ளார்.
இந்த மருந்தின் ஆளுகைக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே அவதிப்படுவார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. அது தவறான முடிவு என்று எழுதுகிறார் மேதை கெண்ட் (பக் 728) இந்த நோயுற்றவர்களுக்கு இரவிலும் துயரம் வரலாம்.
பல மருந்துகளின் இயல்புகளை முறைப்படுத்திய மருத்துவர் நாஷ் அந்த முறையை மெடோரினத்திற்குப் பயன்படுத்தவில்லை. எனினும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். இந்த நோயைப் பாரம்பரியமாகப் பெறாதவர்களுக்கும் இந்த மருந்து பயன்படுமா? என்பதே அந்த வினா, தெரிந்தவர்கள் பதில் கூறட்டுமே என்பது அவருடைய கூற்று.
முப்பதாண்டுகள் மருத்துவ அனுபவத்திற்குப் பிறகு நான் உறுதி அளிக்கிறேன். நோய்ப் பாரம்பரியம் இல்லாதவர்களின் மூட்டு வலியையும் இது குணப்படுத்தும்.
கை, கால்களையே அசைக்க முடியாத நிலையில் இருந்த ஒரு நடுவயது மாதின் நிலையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தூஜாவின் (200) அடித்தளத்துடன் இதை இரு நூறாவது வீரியத்தில் கொடுத்தேன். ஒரே மாதத்தில் அவர் நடக்கத் துவங்கி விட்டார்.
பொதுவாக இதை மிக உயர்ந்த வீரியத்தில் தான் தர வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள். தேவையில்லை. மாதத்திற்கு ஒருமுறை இரு நூறாவது வீரியத்தில் கொடுத்தாலே போதுமானது.
ஜீவகனின் மருத்துவக் கருத்துகளுக்கு நன்றி கூறுவோமாக!.
********************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக