வெள்ளி, 28 மார்ச், 2014

பெண்கள் நோயிலிருந்து விடுபட திருமண முறை மாற்றப்படவேண்டும்--pazha.vellaichamy

பெண்கள் நோயிலிருந்து விடுபட திருமண முறை மாற்றப்படவேண்டும்
நோயிலிருந்து மனிதனை விடுவிப்பது மட்டும் ஒரு மருத்துவருடைய பணியல்ல.ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்துகின்ற காரணிகள் எவை என்பதை அறிவதும், அவற்றை எவ்வாறு ஆரோக்கியமான மனிதர்களை பாதிக்காவண்ணம் நீக்குவது என்பதை அறிவதும் மருத்துவருடைய கடமையாகும்.
 இவ்வாறுதான் டாக்டர் ஹானிமன் அவர்கள் அவர்தம் ஆர்கனானின் ஆறாம் பதிப்பு மணிமொழி 4-ல் கூறியிருக்கிறார்.
  இதன் மூலம் டாக்டர் ஹானிமன் அவர்கள் மருத்துவர்களுடைய பணிகளின் இன்னொரு பகுதியைச் சுட்டிக் காட்டுகிறார்.
  ‘வருமுன் காக்கவேண்டும்’ என்பதை உணர்ந்து  ஹானிமன் அவர்கள் கூறியதை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் நோய்க்காரணிகள் யாவை என்பதை உணரமுடியும்.
  இன்று நிலவி வரும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணம் இந்தச் சமூகச்சூழல். வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம், சாதி, மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் மற்றும் பல.இப்படியான சமூகம் மாறாமல் மனிதனை வெறும் ஹோமியோபதி மருத்துவத்தால் மட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாது.மேலும் மேற்கூறிய காரணங்கள் நோயைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் காரணிகளாக மட்டும் இல்லாமல், நோயைத் தடுக்கும் தடைக்கற்களாகவும் இருக்கின்றன. இதிலிருந்து நோயுற்ற நிலையிலுள்ள மனிதனை நோயற்ற நிலைக்கு மாற்ற வேண்டுமென்றால் இந்தச் சமூகம் மாறவேண்டும்! இதை யார் மாற்றுவது? மற்ற எவரையும் விட ஹோமியோபதி மருத்துவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
  கடந்த 15 ஆண்டுகளாக என்னிடம் வந்த நோயாளிகளை ஆய்வு செய்ததில் –அதிலும் குறிப்பாக பெண்களை ஆய்வு செய்ததில்-பெரும்பாலான பெண்களின் நோய்களுக்கான அடிப்படைக் காரணம் தற்போது சமூகத்தில் நிலவி வரும் திருமணமுறைதான் என்பது, பெண்களின் துயரர் ஆய்வில் தெரிய வந்த உண்மையாகும். இந்தத் திருமணமுறை மாற வேண்டும். அவ்வாறு மாறினால் பெண்களை பல வகையான நோய்களிலிருந்து விடுவிக்கலாம்.
  இந்த கட்டுரையின் நோக்கம் தற்போதுள்ள திருமணமுறையில் உள்ள பாதகம் மற்றும் அது எவ்வாறு மாற்றப்படவேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்வதுதான்.
  பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தரின் ஆரோவில் ஆசிரமத்தில் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அது அடிமைத்தனம் என்பதாகக் கருதப் படுகிறது. இந்தக் கூற்று முற்றிலும் சரியானதே.
 தந்தை பெரியார் கூட திருமணத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.
  அவருடைய கூற்றைக் கூர்ந்து ஆராய்ந்தால் எந்த அளவுக்குச் சரியானது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விளங்கும். மனிதர்களின் சுதந்திரத்தைப் பறித்து, குறிப்பாக பெண்களை விலங்கினை விடக் கேவலமாகக் கருதும் இந்தத் திருமணமுறையைக் காட்டுமிராண்டித்தனம் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?.  
  இந்தத் திருமண முறையானது மனித குலம் தோன்றியது தொட்டு இருந்துவரும் வழக்கமல்ல. மனித இனம் தோன்றிப் பல இலட்சம் ஆண்டுகளில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதுதான்.
  மனித இனம் தோன்றி இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான், இனக்குழுச் சமூகம் தோன்றியது. அதில் பெண்தான் தலைமைப் பாத்திரம் வகித்தாள். அவள் வழிகாட்டுதலில் தான் அந்த இனக்குழு இயங்கி வந்தது. அவர்களுடைய தொழில் வேட்டையாடுதல். அவர்களுக்கென்று சொத்து கிடையாது.
  எப்போது இனக்குழு சமூகத்தில் பயிர்த்தொழில் வந்ததோ அப்போது உபரி வருமானமும், அதைத் தொடர்ந்து தனிச் சொத்தும் வந்தது. தனிச்சொத்து வந்தபின் உடைமைச் சமூகம் தோன்றலாயிற்று.
  அப்போது உடைமை உரிமையும் தோன்றியது. அந்த உடைமையைப் பாதுகாக்கவும் உரிமையை வழிவழியாக கையகப்படுத்தவும் வாரிசு தேவைப் பட்டது. தனக்கென்று ஒரு வாரிசை உற்பத்தி செய்ய ஒரு இயந்திரம் தேவைப்பட்டது.
  அந்த இயந்திரம் தான் திருமணம் என்ற சடங்கால் கட்டப்பட்ட பெண். ஆம். அப்போதுதான் பெண் என்பவள் மனுஷி என்ற நிலைப்பாட்டிலிருந்து ஓர் இயந்திரம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள். ஓர் உயிரி என்று கூட கருதவில்லை. வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு திருமணம் என்ற சடங்கால் இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம்! ஏராளம்!!
  இந்த நிலை அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. யுக்திகள் மாறி இருக்கின்றவேயொழிய உணர்வு நிலையில் மாற்றம் கொஞ்சம்கூட ஏற்படவில்லை.
  இதை உணர்ந்த கார்ல்மார்கஸ் அவர்கள் பெண்ணின் விடுதலையை பிரதானமாகப் பேசினார்.1848இல் மார்கஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரால் உலகுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதும் ஐரோப்பா மட்டுமின்றி, உலகம் முழுமையிலும் பயங்கர எழுச்சி தோன்றியது. அது சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியது பெரும்பகுதியோருக்கு இது பலத்தை ஏற்படுத்தியது. பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
  அப்படிச் சந்தேகித்த பத்திரிக்கை நிருபர்கள் கார்ல்மார்க்ஸிடம் ‘நீங்கள் சொல்லுகின்ற கம்யூனிஸ சமூகம் வந்துவிட்டால் பெண்களை எல்லாம் பொதுவுடைமையாக ஆக்கிவிடுவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மார்க்ஸ் அவர்கள் சிரித்துவிட்டு ‘நீங்கள் கேட்கும் கேள்வி உங்களைப் பொருத்தம்ட்டில் நியாயமானதுதான். ஏனெனில் நீங்கள் இதுகாறும் பெண்களை ஒரு உடைமையாகத்தான் பார்த்துள்ளீர்கள். அதனால் நாங்கள் உற்பத்திக்கருவிகள் அனைத்தும் பொது என்று சொன்னதும் பெண்களையும் பொதுவாக ஆக்கிவிடுவோம் என்று நீங்கள் எண்ணியது சரிதான். ஆனால் நாங்கள் அப்படிப்பார்க்கவில்லை. பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகரான மனிதர்கள். அவர்கள் எந்தவிதத்திலும் ஆண்களுக்கு குறைவானவர்கள் அல்ல. அவர்களை பொதுவுடைமையாக்க அவர்கள் உற்பத்திக் கருவியோ உற்பத்திப் பொருளோ அல்ல’ என்று மார்க்ஸ் அவர்கள் கூறினார்கள்.
  இது நடந்தது 1848இல். ஆனால் இன்னும் அந்த நிலைமை மாறவில்லை. அதற்கு இந்த திருமண முறையே சாட்சி.
  தற்போதைய திருமண முறையில் பெண்கள் போகப்பொருளாக உற்பத்திப்பொருளாக உற்பத்திக்கருவியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
  திருமணம் என்ற சடங்கில் பெண்களுக்கு மட்டும் அடையாளம் அணிவிப்பது ஆடுகளுக்கு அடையாளமிடுவதற்குச் சம்மாகும். அநாகரீகமானது.
தன் வீட்டில் 21 வயது வரை வாழ்ந்து வந்த ஒரு பெண் தான் 21வயது வரை கற்றறிந்த பழக்கம், உணவுமுறை வாழ்க்கைச் சூழல் அனைத்திற்கும் முற்றிலும் புறம்பான ஒரு புதிய சூழலில் திருமணம் என்ற சடங்கால் தள்ளப்படுகிறாள்.
  அந்தச் சூழலில் அவள் அறுக்கப்போகும் ஆடுபோல் மிரண்டு பயந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறாள். அங்கே கணவன் வீட்டுக் குடும்பத்தார் அனைவருக்கும் பயந்து பயந்து வாழும் அடிமையாக ஆக்கப்படுகிறாள். ஆனால் அவளுடைய கணவன் மட்டும் அவருடைய குடும்பத்தோடு அதே வாழ்க்கைச் சூழலில் வாழ்வார்.ஆனால் அவள் மட்டும் புதிய சூழலில் வாழ்ந்து ஆகவேண்டும். அங்கே அவள் படுகிற பாடு சொல்லி மாளாது.
---ஆட்டிப்படைக்கும் மாமியார்
---‘அம்மா சொல்றதத்தான் கேட்கணும்’ என்று சொல்லுகிற கணவன்
---அதிகாரம் செய்கிற நாத்தனார்
---எதையும் கண்டும் காணாமல் போகின்ற மாமனார்.
  இதுதான் அவளுடைய வாழ்க்கைச் சூழல். இது எந்த விதத்தில் நியாயம்? இந்த சூழலில் தகவமைப்பதற்குள் பெரும்பாடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு நோய் வராமல் வேறு என்ன வரும்?
  அந்தப் பெண் எவ்வளவு படித்தவளாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. அவள் அடிமையாகத்தான் நடத்தப்படுகிறாள். ஏதோ ஒரு வகையில் படித்த, படிக்காத, ஏழை, பணக்கார, உயர்ந்த, தாழ்ந்த சாதி என்று வேறுபாடுகள் இன்றி பெண்கள் திருமணச் சந்தையில் மாடுகளைவிட கேவலமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அளவு வேறுபாடு தவிர எல்லாமட்டத்திலும் பெண்கள் நிலை இதுதான்.
  என்னிடம் வரும் பெண்களில் எத்தனையோ பேர் சரியான உணவுகூட தரப்படாமல் இருக்கிறார்கள். மாட்டுக்குக்கூட வாங்கிப் போகின்றவன் இரை போடுகிறான். ஆனால் பெண்ணுக்கு மாட்டுக்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்கப்படுவதில்லை.
  அந்தப் பெண் கணவர் வீட்டில் உள்ள பிரச்சினைகளை தாய் தந்தையிடம் கூறக் கூடாது. அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். என்ன கொடுமை நடந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு அங்கே அடங்கிக் கிடக்க வேண்டும். பிறந்தவீட்டுக்கு வந்தால் அதை அவமானம் என்று கருதும் தாய்தந்தை! பிறந்தவீட்டின் பெருமைகளைக் காப்பாற்ற அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று போதிக்கப்படுகிறாள்.
  ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’
  ‘பெண்ணைப் பெத்தவன் பொறுத்துப் போகனும்’
   ‘அடங்கிப் பொகிறவ தான் ஆத்துப்பொண்ணு’
  பெண்களை வாயடைக்க எத்தனையோ பழமொழிகள். கொடுமை! கொடுமை!! ஏன் பெண்கள் அடங்கிப் போக வேண்டும்? இது என்ன தலைவிதி.
எந்தத் தந்தையாவது தன் பெண்களை திருமணம் செய்து கொடுக்கணும் என்று சொல்வதில்லை.
  ‘பொண்ணுகளைக் கரை சேர்க்கணும்’
  ‘நல்ல இடத்தைப் பார்த்துத் தள்ளிவிடனும்’
  ‘புடுச்சுக் கொடுக்கணும்’
   ‘கட்டிக்கொடுக்கணும்’
  பெண்கள் என்ன கொடுக்கவும் வாங்கவும் பொருட்களா? இல்லையே? அவர்களும் மனிதர்கள்தானே. ஏன் அவர்களுக்கு மட்டும் திருமணம் என்ற பெயரிலே இவ்வளவு கொடுமைகள்?
  என்னிடம் ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தாள். அவள் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுகிறாள். கணவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவள் அவளுடைய சம்பளக்கவரை அப்படியே கணவனிடம் கொடுக்கவேண்டுமாம். அவர் அவளுக்கு பஸ் செலவுக்கு மட்டும் 5ரூபாய் கொடுப்பாராம். அவர் சம்பளத்தையும்,தன்னுடைய மனைவியினுடைய சம்பளத்தையும், அவர் அக்கா தங்கை குடும்பத்திற்கு செலவு செய்வாராம். எப்போதாவது இந்தப்பெண் அவள் அப்பா அம்மாவுக்கு உதவலாம் என்று 100.50 கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும் அவளுக்கு.
  இது ஏன் இந்த அநீதி. திருமனம் என்ற பெயரில் இந்தக் கொடுமை ஏன்? படிக்கவைத்து ஆளாக்கிய பெற்றோரை இவள் மறந்துவிட வேண்டும்.ஆனால் அவர் மட்டும் அவர் குடும்பத்தாருக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.
  இது எப்படிச் சரியாகும்? அவளை அவருக்கு திருமணம் செய்து வைத்ததால்  அவருக்குத்தான் இலாபம். இவளுக்கு என்ன பயன்? அடிமைத்தனத்தைத் தவிர!
 எத்தனையோ பெண்கள் அனைத்துக் கொடுமைகளையும் வெளியே சொல்லாமல் மென்று விழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். வரட்டுக் கௌரவம் அவர்களைத் தடுக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன?
    ‘இந்தச் சமூகத்தில் பாதுகாப்பு இல்லை. ஒரு பெண் தனித்து வாழ முடியாது’.
  அவளுடைய பெண்மைக்குப் பாதுகாப்பு இல்லை. பொருளாதாரப் பாதுகாப்பு இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அதனாலேயே பெண்னைப் பெற்றவர்கள், யாரிடமாவது தள்ளிவிட  நினைக்கிறார்கள்.
  இந்தியச் சமூகத்தில் அரசு முழுப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் கிட்ட்த்தட்ட ஒரு பெண் கூட கணவனோடு வாழ விரும்ப மாட்டாள். ‘இவனுக்கிட்ட கோவிச்சுக்கிட்டு எங்க போவது. பொறந்த வீட்டிலும் திட்டுவாங்க. சமூகத்திலும் பாதுகாப்பில்ல. எங்க போவது’ என்று தெரியாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  அடிமை வாழ்க்கையில் சுகம் கண்டு வாழப்பழகிப் போன இந்தியப் பெண்கள் அதையே பாக்கியமாக நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.
  இதை எல்லாம் மீறி வரதட்சணைக் கொடுமை. அந்தக் கொடுமையை எழுதி மாளாது.
  இது போல் திருமணம் என்ற போர்வையில் நடக்கும் கொடுமைகள் பற்றி எவ்வளவோ எழுதிக் கொண்டே போகலாம். இதற்கு என்னதான் தீர்வு? திருமணத்தையே ஒழித்துவிடலாமா? திருமண முறையை ஒழிக்க முடியாது. மாற்றியமைக்கலாம்..
எவ்வாறு மாற்றுவது?
  திருமண முறையை மாற்றுவதற்கு முன் ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை உணரவேண்டும்.
  எந்த மாற்றமும் நிர்பந்தத்தால் நிகழ முடியாது. ஏனெனில் மனிதன் மற்ற உயிரனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். சுதந்திரத்தை விரும்புகிறவன்,. அவன் உள்ளத்தால் உணராத எந்த ஒன்றையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டான். எனவே மனிதர்களை உணரவைக்கவே முயற்சிக்க வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை உணர்ந்தாலே போதும்.
பெற்றோர்களின் கடமை:
  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். முதலில் அதற்கு குழந்தைகளின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். ஏனெனில் முன்பு போல் இல்லை. தற்போது பிள்ளைகள் நன்கு படித்துள்ளார்கள். கல்வியறிவு அவர்களுக்கு உலகத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் அவர்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது.
  எனவே திருமணம் என்ற பெயரால் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ நிர்பந்திக்கக்கூடாது. குறிப்பாக பெண்ணைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும்.
   “பெண்ணைக் கட்டிக் கொடுக்கணும்”
   “பெண்ணை புடுச்சுக்கொடுக்கணும்”
  “பெண்ணைத் தள்ளிவிடனும்”
   “கன்னிகாதானம் செய்யனும்”
  தங்களுடைய பெண் ஆடோ, மாடோ அல்ல. அவளைப் புடுச்சுக் கொடுக்க ,கட்டிக்கொடுக்க,தள்ளி விட, தானம் கொடுக்க. மனுஷி! அவளைப் படிக்க வைத்து, ஆளாக்கி உள்ளீர்கள். ஒரு ஆண்பிள்ளைக்குச் செய்கின்ற அனைத்தையும் செய்கிறீர்கள்.அவளுக்கு அவளுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு இருக்க வேண்டும். அவளை நிர்ப்பந்தம் செய்யாமல் அவளுடைய அறிவுப் பூர்வமான சம்மத்த்தாய்யும் அறிந்து செயல்படுங்கள்.
  அவளுக்கு வரதட்சணை கொடுக்காதீர்கள். வரதட்சணை பெற்று திருமணம் செய்பவன் அவளைக் காசுக்காக விற்கமாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே வரதட்சணை கொடுப்பதிற்கு பதிலாக  ஒரு ஆணுக்கு கொடுப்பது போல் சொத்தில் சமபங்கு கொடுங்கள்.
 ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ள சம்மதம் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து பேசி அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும்.
  ஒரு பெண் ஆண் வீட்டிற்குச் செல்வதோ அல்லது ஒரு ஆண் பெண் வீட்டுக்குச் செல்வதோ தவிர்க்கப் படவேண்டும். அவர்கள் இரு வீட்டையும் தவிர்த்து தனி இல்லத்தில் குடி அமர்த்தப்படவேண்டும்.
  அங்கே ஆண் வீட்டாரும், பெண் வீட்டாரும் சமமான அந்தஸ்தோடு சுதந்திரமாகச் சென்று பிள்ளைகளைப் பார்த்து வரவேண்டும். அப்போதுதான் ஒரு பெண் அடிமையைப் போல் நடத்தப்படுவதையோ அல்லது ஒரு ஆணின் குடும்பத்தாரின் அதிகாரத்திற்குட்பட்டு வாழவேண்டும் என்ற நிலையையோ தவிர்த்து, அவர்கள் சம அந்தஸ்துடன் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக வாழ முடியும். அப்பொதுதான் அவர்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொண்டு சுகமான வாழ்க்கையை நடத்த முடியும்.
ஒரு ஆணின் கடமை
  அறிவியல் பூர்வமாக நாம் சிந்தித்தால் ஓர் ஆணுக்குள் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் ஆணும் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வரும்.
 எனவேதான் ஒரு பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒருபோதும் ஏற்படவேண்டிய அவசியமில்லை.
  ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் ஒப்பீடு செய்வதற்கு அப்பாற்பட்டவர்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கேயுண்டான அரிய குணங்களோடு தனித்துவமாகத் திகழ்கிறார்கள். எனவே, நான் உயர்ந்தவன்-அவள் தாழ்ந்தவள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 இந்நிலையில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் முழுமையான சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதில்தான் அவனுடைய சுதந்திரம் அடங்கி இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
  ஒரு ஆண் எப்படிப் படித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறானோ அப்படித்தான் ஒரு பெண்ணும் சிறந்து விளங்குகிறாள். எனவே, ஒரு ஆணைப் போலவே ஒரு பெண்ணும், வேலைக்கு போக வேண்டும் என்ற அவசியத்தைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்
  இந்நிலையில் குடும்பத்தில் அனைத்துப் பணிகளிலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம பங்குண்டு. இதில் இன்ன பணி இவருக்குத்தான் என்று ஒதுக்கீடு செய்யாமல், எந்தப் பணியையும் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  இல்லற வாழ்க்கை என்பது ஒரு பெண் இல்லாமல் நடத்தமுடியாது என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
   ஒரு பெண் என்பவளை முதலில் தன்னோடு வாழ வந்தவளாகக் கருதாமல், மாறாக இருவரும் மனப்பூர்வமாகச் சம்மதித்து சேர்ந்து வாழ தீர்மானித்து வாழ்கிறவர்களாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
  இருவரும் யாருடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலும் வாழக்கூடாது. அதற்கு மாறாக இருவருடைய பெற்றோகளும் இவர்களுடைய வாழ்க்கையில் சம அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
   ஒரு ஆணுக்கு எப்படி தன் பெற்றோர்களைப் பராமரிக்க உரிமை இருக்கிறதோ அதே போல அந்த பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமை இருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  இதற்கும் மேலாக இருவருக்குமே இருவருடைய பெற்றோர்களையும் பராமரிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து பாகுபாடு இல்லாமல் செயல்படும்போதுதான் அன்பும், அமைதியும் குடும்பத்தில் செழித்து ஓங்கும்.
  பொதுவாக ஒரு ஆண் தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும், தன் வாழ்க்கைத் துணைவியை மட்டமாக நடத்துவதும் வழக்கமாக உள்ளது. ஒரு தாய் என்பவள் ஒரு ஆணைப் பெற்றதால் அவனை வளர்க்கவேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது. ஆனால் மனைவி என்பவள் அவ்வாறின்றி எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து “உன்னோடு” சேர்ந்து வாழ வந்தவள். அவ:ள் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவனுக்காக எப்போதும் இழக்க தயாராக இருப்பவள். ஒரு தாய்க்கு, ஒரு மகன் அவன் பல பிள்ளைகளில் ஒருவன். ஆனால் மனைவியோ இவனுக்காகவே இருப்பவள். இந்நிலையில் ஒரு மனைவி என்பவள் தாயை விட எந்த வகையிலும் குறைந்தவளல்ல. இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேல் என்பதே சரியானதாகும்.
  ஒரு ஆணுக்குத் தாய் என்பவள் தெய்வம் என்றால், மனைவி என்பவள் அவனுடைய ஆன்மா. ஒரு மனைவியை மதிக்கத் தெரியாத ஒருவனால் ஒருபோதும் அவன் தாயை மதிக்க முடியாது. ஒருவன் அவனுடைய ஆன்மாவை அறிவதே, தெய்வத்தை அறிதல் என்பதாகும். எனவே,ஒரு ஆண் என்பவன் தன் தாயையும், தன் மனைவியையும் வெவ்வேறாகப் பார்க்காமால் ஒன்றாகவே பார்க்க வேண்டும்.
பெண்ணின் கடமை:
   ஒரு பெண் என்பவள் உலகத்தின் அறாத் தொடருக்கு அடிப்படையானவள். ஒரு ஆணோடு ஒப்பீடு செய்ய முடியாதவள். தனித்துவமானவள்.
  அவள் ஆற்றலின் வடிவாக இருப்பதால் அவளால்தான் அமைதியான, அன்பான, அழகான உலகத்தைப் படைக்கமுடியும்.
  எனவே, அவள் ஒருபோதும் தன்னுள் தாழ்வுமனப்பான்மையோடு இருக்கவேண்டியதில்லை.
   அவள் குடும்பத்தில் சம அந்தஸ்துடன் இருப்பதால், குடும்பத்தை வழியோநடத்துவதில் ஆணுக்கு நிகரான அனைத்து பணிகளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  ஒரு பெண் ஒருபோதும் பொருளாதார நிலையில் ஓர் ஆணை நம்பியிருக்கக்கூடாது.
  இருவருக்குமிடையில் அன்புப் பரிவர்த்தனையைத் தவிர ஒருபோதும் பணப்பட்டுவாடா உறவாக இருக்கக்கூடாது.
  ஒரு குடும்பம் என்பது அன்பால் பிணைக்கப்பட்ட சம அந்தஸ்துள்ள ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதென்பதாகும்.
   ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும், எப்போது தாங்கள் வாழுகின்ற சமூகத்தை வளமானதாகவும், சமூகத்தில் உள்ள வயோதிகர்கள்,குழந்தைகள் மற்றும் இயற்கையிலேயே உழைத்து இன்பமாக இருக்க முடியாதவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி மகிழ்வோடு வாழ வைப்பதற்கு தங்களால் முடிந்ததைச் செய்ய முடிகின்றதோ அப்போதுதான் அவர்கள் மகிழ்வோடு வாழ்பவர்களாகக் கருத முடியும். இல்லையேல் அவர்கள் மகிழ்வு துன்பத்தில்தான் போய்முடியும்.
  இவ்வாறு தாங்களும் மகிழ்ந்து, தாம் வாழுகின்ற சமூகத்தையும் மகிழ்வாக வைக்கப் பாடுபடுவதே அறவாழ்வு என்பதாகும்.அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை”  என்று கூறினார்.
அரசின் கடமை:
  அரசு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்கள் சுதந்திரமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து வகையிலும் உத்திரவாதம் அளிக்கவேண்டும்.
  ஒரு பெண் என்பவள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்தம் செய்யப்படாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு பெண்ணை கட்டாயத் திருமணம் செய்ய முயற்சிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கவேண்டும்.
  ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு முழு உரிமை உண்டு. அவளுக்கு ஒரு ஆண் துணையில்லாமல் வாழ்வது பாதுகாப்பற்றது என்ற உணர்வை போக்கும் வகையில் சட்ட ரீதியாக அனைத்துப் பாதுகாப்பும் வழங்கவேண்டும். அவளுடைய சுதந்திரத்தில் தலையிடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும்.
    ஒரு பெண்ணுக்கு திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதையும், வாங்குவதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும். பெயரளவிற்கு சட்டம் இருந்தால் போதாது. வரதட்சணை கொடுப்பவரையும், வாங்குபவரையும் கட்டாயம் தண்டிக்கவேண்டும்.
  அதற்கு மாறாக பெற்றோர்கள் ஒரு ஆணுக்கு அவர்கள் சொத்தில் பங்கு கொடுப்பது போல, ஒரு பெண்ணுக்கும் சம பங்கு கொடுக்கவேண்டும். இச்சட்டம் பெயரளவில்தான் இருக்கிறது. இதை கட்டாயச் சட்டமாகக் கொண்டு வரவேண்டும்.
  ஒரு பெண்ணைத் திருமணத்தின்போது, தாரை வார்த்துக்கொடுத்தல், ‘கன்னிகாதானம்’ செய்தல் என்பது போன்ற வாசகங்களை திருமண அழைப்பிதழ்களில் அச்சிடுபவர்களைக் கூட தண்டிக்கவேண்டும்.
  திருமணாம் என்ற பெயரில் ஒரு பெண்ணை மட்டும் ஒரு ஆணின் இல்லத்திற்கு அனுப்பி வைப்பதையோ அல்லது அவ்வாறு செய்வதற்கு நிர்ப்பந்தம் செய்வதையோ குற்றமாகக் கருதவேண்டும். இது விலங்குகளை விலை கொடுத்து வாங்கிச் செல்வதற்கு ஒத்ததாக இருப்பதால் இந்த அருவருப்பான செயலைச் செய்பவர்களை தண்டிக்கவேண்டும்.
  ஒரு பெண் மேலும் ஒரு ஆணின் பெற்றோர்கள் அவர்களுக்கென்று தனியான வாழ்க்கை அமைத்துக்கொடுக்கவேண்டும். அவ்வாறு முடியாத நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தாங்களாக முன்வந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துகொள்ள முழு உரிமை உண்டு. அவர்களுக்கு எல்லாவகையிலும் அரசு உதவ வேண்டும்.
   திருமணமாகாமலிருக்கும் ஒரு பெண்னுக்கு அரசு அவளுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப திருமணத்தின் போது கட்டாயமாக வேலை கொடுக்க வேண்டும். அதற்கான உத்திரவாதத்தை சட்டபூர்வமாக்கவேண்டும்.
  ஒரு பெண்ணும்,ஒரு ஆணும் சேர்ந்து வாழமுடியாத போது அவர்கள் பிரிந்து செல்வதற்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும். அவர்கள் குழந்தைகளை அரசு பொறுப்பெற்று வளர்த்து ஆளாக்கவேண்டும்.
  குழந்தைகள் எப்போதும் பெற்றோர்க்கு சொந்தமானவர்கள் என்பதை விட அரசுக்கு சொந்தமானவர்கள் என்ற வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும்.
சமூகத்தின் கடமை:
   தெய்வப்புலவர் சொன்னதுபோல் அனைத்து உயிரிகளும் சமம். அவைகளில் உயர்வு, தாழ்வு இல்லை என்கிறபோது மனிதருள் சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், மண்ணாலும் வேறு எந்த வகையிலும் வேற்றுமை இருப்பது மனித இனத்திற்கே அவமானம்.
  எனவே ஒரு பேதமற்ற சமூகம் உருவாக வேண்டும். அங்கே தனிச்சொத்து என்பது படிப்படியாக அழிந்து, பின்பு அன்பு அரசோச்சும் அனைத்து வளத்தோடும் கூடிய மகிழ்வான சமூகம் உருவாக்கப்படவேண்டும்.
  அவ்வாறாக சமூகம் மாறவேண்டுமென்றால் பெண்ணின் பெருமை பேணப்படவேண்டும். அவ்வாறு பெண்ணின் பெருமை பேணப்படுவதற்கு ஒட்டுமொத்தச் சமூகமும் முன்வந்து ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் பூமியில் நாம் சொர்க்கத்தைக் காணமுடியும்.
முடிவுரை:
  கீழ்க்கண்ட முடிவுகளுக்கு சுருக்கமாக வரலாம்.
1)      முதலில் திருமணம் என்பதை பெண்களிடம் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது.
2)      திருமணம் என்ற பெயரால் பெண்களை மாடுகள் போல் ஓட்டிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். ‘பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறோம்’ என்ற சொல்லை மாற்றவேண்டும். பெண்ணுக்குமட்டுமான அடையாளத்தை நீக்க வேண்டும்.
3)      திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சம அந்தஸ்தில் செய்து கொள்ளும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாக இருக்க வேண்டும். எந்த விதத்திலும் யாரும் யாருக்காகவும் தங்களுடைய சுதந்திரத்தை இழக்கக்கூடாது.
4)      திருமணம் என்ற பெயரால் பெண் மட்டும் ஆண்கள் வீட்டிற்குச் செல்வது என்பது தடுக்கப்படவேண்டும். வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் அவரவர் குடும்பத்தாரை பிரிந்து தனிக்குடித்தனம் உடனடியாக நடத்தவேண்டும். இருவரும் தனித்து வாழ்ந்து, அவரவர் அவரவர் குடும்பங்களைப் பார்த்துக்கொள்ள உத்திரவாதம் அளிக்கப்படவேண்டும்.
5)      திருமணத்தின்போது படித்ததற்கு ஏற்றார்போல் அந்தப் பெண்ணுக்கு வேலைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவேண்டும்.
6)      கணவர் எப்படி அவர் சம்பளத்தில் தன் குடும்பத்திற்குப் போக அவர் குடும்பத்திற்கு உதவுகிறாரோ அதேபோல் பெண்ணும் அவள் சம்பளத்தில் தன் குடும்பத்திற்குப் போக, அவள் பிறந்தவீட்டிற்கும் உதவ அனுமதிக்கவேண்டும்.
7)      வரதட்சணைக்கொடுமை கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு பிறந்தவீட்டில் ஆண்களுக்கு அளிக்கப்படுவது போல் சொத்துரிமை அளிக்கப்படவேண்டும்(உரிய சட்டம் இருக்கிறது - பெயரளவில்) இதை கட்டாய சட்டமாக்கி இதைச் செய்யாத பெற்றோரைத் தண்டிக்கவேண்டும்.
8)      திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் வேலை பார்க்காதவர்களாக இருந்தால் அவர்களில் முதலில் பெண்ணுக்குத்தான் வேலை கொடுக்கவேண்டும்.
9)      எந்த முடிவையும் யாரும் யார் மீதும் திணிக்கக்கூடாது.
10)   திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாத எந்த பெண்ணுக்கும் வேலை வாய்ப்பில் முதல் உரிமை அளிக்கப்படவேண்டும். ‘வாழ்வதற்கு ஆண் துணை அவசியம்’ என்ற நிர்ப்பந்தத்திலிருந்து பெண்ணை விடுவித்து, அனைத்துப் பாதுகாப்புக்களையும் அரசு கொடுக்கவேண்டும்.
11)   ஒரு வயது வந்த ஆணும், பெண்ணும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கு சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ அல்லது அந்தஸ்தின் பெயராலோ எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அவ்வாறு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.
12)   இவ்வாறு வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ளும்போதே அவர்கள் பிரிந்து செல்வதற்கான உரிமை வழங்கப்படவேண்டும்.
13)   திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தத்தில் அன்புப் பரிவர்த்தனை மட்டும்தான் இருக்கவேண்டுமேயொழிய பணப்பட்டுவாடா முறையாகவோ, பொருளாதார, சமூக பாதுகாப்புக்கான அடைக்கலமாகவோ திருமணம் என்பது இருக்கக்கூடாது.
   திருமணம் என்ற முறையால் பெண்களை மட்டும் அடிமைகளாக்கி, விலங்குகளுக்கும் கேடாய் நடத்துவது ஒழிக்கப்படாத வரையில் பெண்களை நோய்களிலிருந்து மீட்க முடியாது.
  இன்றைக்கு பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தற்போதுள்ள திருமண முறையே. எனவே, ஒரு மருத்துவர் ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதும் அதை எவ்வாறு அகற்ற வேண்டும் என்ற வழியை கூறுவதும் அவருடைய கடமையாகும்.
   இந்த வகையில் பார்த்தால் பெண்களுக்கு உண்டாகும் பல நோய்களுக்கு காரணம் தற்போதுள்ள திருமண முறை என்பதை அறிந்து அதை மாற்றுவதற்கான வழியையும் கூறியிருக்கிறேன்.
   இது முழுமையானதல்ல. குறைபாடானதாக இருக்கலாம். ஆனால் தற்போதுள்ள முறை மாற்றப்படவேண்டும் என்பதும் அதற்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான முறை வேண்டும் என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருக்குமானால் அவரை மனித இனவிரோதி என்று அழைப்பதிலிருந்து தவிர்க்கமுடியாது.
   நல்ல ஆரோக்கியமான சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும். அப்போதுதான் நோயற்ற வாழ்வும், அறிவும், அன்பும் உள்ள சந்ததியும் உருவாகும். அன்பு அரசோச்சும் புதிய சமூகம் உருவாகும்.
  ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தற்போதுள்ள விலங்கினும் கேடாக பெண்களை நடத்தும் இந்த திருமண முறை ஒழிக்கப்படவேண்டும். ஒரு புதிய சுதந்திரமான வாழ்க்கைமுறை ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும்; அல்லது அவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
                   --------------------------------------------------------

ஆசிரியரைப் பற்றி:
 மருத்துவர் பழ..வெள்ளைச்சாமி 25ஆண்டுகளாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவருகிறார். உன்னத மருத்துவமான ஹோமியோபதியைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்   “தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம்” என்ற அமைப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். மக்களுக்கான இலவச மருத்துவமனை, இலவச ஹோமியோபதி விழிப்புணர்வு கல்வி மற்றும் ஹோமியோ தோழன் சிற்றிதழ் ஆகியவற்றை  ஒருங்கிணைத்து நடத்திவருகிறார்.


 
 


செவ்வாய், 25 மார்ச், 2014

அவள்-பழ.வெள்ளைச்சாமி

அவள்

அவள்
சுயத்தோடு
சூதற்று இருப்பவள்
இரண்டு முகம்
இல்லாமல்
இயற்கையாக இருப்பவள்

இவளுடைய இயல்பே
இதயத்தைத் திறந்து
வைப்பது தான்!

இவள்
தென்றலாகத் தொட்டு
மனித மொட்டுக் களை
மலர வைத்துவிட்டு
நன்றிக்குக் காத்திராமல்
நகர்ந்து செல்பவள்

இவள்
இயற்கையாக
இருப்பதாலே
இயற்கையோடு கலந்தவள்!

இவளுக்கு
பயம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாது
பாராட்டு என்ற வார்த்தைக்கும்
பொருள் தெரியாது!

இவள்
பயத்தைக் கடந்த சுயம்
பிறர்
சுகத்தை மட்டும் எண்ணும் தியாகம்!

இவள்
கபடமில்லாமல் சிரிக்கும்
கலங்க மற்ற குழந்தை
அதனாலே
இவள்
செயல் அனைத்துக் கும்
தெய்வமே உடந்தை!

இவள்
காதல் கூட
அதீத மானது
ஆண்டவன் நிலவுவது!

திருமணம்-பழ.வெள்ளைச்சாமி

திருமணம்

காதல் என்பது
உறவாகும் போது
உண்மை மறைந்து போகும்
உண்மை என்பது
மறையும் போது
அது
உடைமையாகும்!

உடைமையான ஒன்று
அடிமையாகும்!

அடிமை வாழ்வு
எப்படி
அன்பைச் சொல்லும்!

திருமணம்
குடும்பத்திற்கு அடித்தளம்!
குடும்பம் பிரிவினைக்கு அடித்தளம்!

திருமணம்
தனிச்சொத்து
தந்த குழந்தை!

திருமணம்
ஒரு மன மானதை உடைத்து
காதலுக்குக்
கல்லறை கட்டியது!

காதலில் கரைந்து போன
'நான்'க்கு உயிர் கொடுத்து
ஆணவத்திற்கும்
அகங்காரத்திற்கும்
ஆசைக்கும்
அடித் தளமானது.
அன்பால் மலர்ந்த
ஆணையும் பெண்ணையும்
அடிமையாக்கியது

ஆணையும் பெண்னையும்
வேறு வேறாக்கி
வேற்றுமைக்கு வித்திட்டது.

திருமணம்
குடும்பம் என்ற எல்லை வகுத்து
உலகில்
எல்லைக் கோடுகள்
தோன்றக் காரணமாகி
எல்லை யற்ற
இன்னல் களுக்கு
வழி வகுத்தது

அனைத்து உயிர்களுக்கும்
அன்பு செலுத்தவேண்டிய
மனிதனைக்
குடும்பச் சொத்தாக்கி
அன்பை அபூர்வ மாக்கியது.

பெண்ணின்
ஏன்
ஆணின்
சுதந்திரத்தைப் பறித்து
சோதனைக்கு உட்படுத்தி
வரைவின் மகளிர்க்கு
வழி வகுத்துக் கொடுத்தது.

திருமணம்
இயற்கைக்கு எதிரானது

அழகுக்கு எதிரானது

அன்புக்கு எதிரானது

ஆனந்தத்திற்கு எதிரானது

ஏன்
ஆண்டவனுக்கே எதிரானது

அது
பற்றுக்கு வித்திட்டு
அன்புக்குக் கல்லறை கட்டியது!

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை-பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை

இதை ஓரளவு படிக்கத்தெரிந்தவர்கள் கூட எளிதாக அவர்கள் அறிந்த மட்டும் கையாலலாம்.

ஏனெனில் அடிப்படையில் நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள்தொடர்பான ஆழமான அறிவு தேவையில்லை.
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
இதைச் செய்வதற்கு ஹோமியோபதியின் அடிப்படைத் தத்துவத்தைத் தெரிந்திருக்க வேண்டும்.இதைப் படிக்க தெரிந்தவர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளலாம்.

எனவே ஹோமியோபதியைச் சாதாரண மக்களும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தமுடியும்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள்.இவர்கள் கிராமப்புறங்களில் வாழ்வதாலே இவர்களுக்கு மருத்துவவசதி புறக்கணிக்கப்படுகிறது அல்லது எளிதில் கிடைப்பதில்லை.இந்நிலையில் சாதாரண நோய்களால் கூட உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.இந்நிலையை தடுப்பதற்கு ஹோமியோபதியால் முடியும்.

மேலும் பெருப்பாலான பெண்கள் திருமணத்திற்குப்பின் வேலைக்குச் செல்வதில்லை. பல குடும்பங்களில் அறிவியல் பட்டங்கள் பெற்ற பெண்கள் கூட வேலைக்குச் செல்லாமல் வீட்டுப்பெண்களாக காலந்தள்ளுகிறார்கள்.இவர்களுக்கு எளிய ஹோமியோமருத்துவம் சென்றடையும்.மேலும் அதை அவர்கள் எளிதில் பயின்று தங்களுக்கும்,தங்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் எளிதில் பயன்படுத்தமுடியும்.

இதனடிப்படையில் சாதாரணப்பெண்கள் அதாவது பள்ளிக்கல்வியை முடித்த பெண்கள் அன்றாட வாழ்வோடு இந்த மருத்துவத்தையும் செய்யும் அளவுக்கு எளிய முறையில் ஹோமியோபதியைப் படிப்பதற்கு தமிழில் புத்தகங்கள் வெளிவரவேண்டும்.ஹோமியோபதியின் அடிப்படைத்தத்துவத்தை விளக்கக்கூடிய புத்தகங்கள்,அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்கள் தொடர்பான மருத்துவம் அளிக்க ஏதுவான எளிய புத்தகங்கள் அவசியம், அதனடிப்படையில் நாம் முழுமூச்சாக செயலாற்ற வேண்டும்.

மெய்ப்பொருள் ......

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிர்தாத் சொல்கிறார்(The book of Mirdad by Mikhail Naimy )
“பிரபஞ்சத்தில் அஃறிணை என அறியப்படும் கல்லுக்கும் மனம் உண்டு அந்த மனத்திற்கும் விருப்பம் உண்டு,கல்லைப்போல மற்ற எல்லாப்பொருட்களுக்கும் மனம் உண்டு என் நான் உங்களுக்கு சொல்கிறேன்.இந்தபொருட்களின் மனதின் பிரக்ஞை மனிதனுக்கு போலன்றி அளவில் மாறுபாட்டிருந்தாலும் சாராம்சத்தில் மாற்றம் இல்லை”

வள்ளுவர் இதைப்பற்றி அறிவதைத்தான் அறிவு என்கிறார்.
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

இதை சர் ஜகதீஸ் சந்திர போஸ் ஓரளவுக்கு அறிய முயற்சி செய்தார்(1.Response in the living and non-living 2.The nervous mechanism of plants)
“தாவரங்களுக்கு மனிதர்களைப்போல விலங்குகளைப்போல உணர்வு உண்டு”

இதை சாமுவேல் ஹானிமன் முழுமையாக நிரூபித்தார்(organon of medicine 6th edition).தன் ஹோமியோபதி மருத்துவ தத்துவத்தின் நிரூபண விதிகளின் மூலம்
“பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப்பொருட்களும் ஆரோக்யமான மனிதனுக்கு கொடுக்கப்படும்போது அதற்கேயுண்டான தனித்துவப்பண்புகளை அவனிடத்தில் வெளிப்படுத்துகின்றன.இதன்மூலம் ஆரோக்யமான மனிதனுக்கு நோயை உண்டாக்கவும் நோயுள்ள மனிதனை குணமாக்கவும் தன்னிடத்தில் ஆற்றல் உள்ளது என இந்த உலகுக்கு உணர்த்துகிறது".

மருத்துவரின் பணி-பழ.வெள்ளைச்சாமி

மருத்துவரின் பணி

ஒரு மருத்துவருடைய தலையாய பணி(MISSION) நோயுற்ற மனிதரை மறுபடியும் நோயற்ற நிலைக்குக் கொண்டு வருவதுதான்.
அதாவது அவரை பூரண நலமுள்ளவராக மாற்றுவது இது தவிர்த்து அவருடைய கற்பனைகள் புனைவுகள் மூலம் புதிய மருத்துவமுறையைக் கண்டுபிடிப்பதாக மக்களைப் பிரமிக்க வைப்பது அல்ல.
மனிதனுக்குள்ளே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அலங்கார வார்த்தைகளால் பிறர்க்குப் புரியாதபடி கூறி துயரர்களை மிரள வைப்பது அல்ல.
மருத்துவம் தொடர்பான புரியாத வார்த்தைகளைக்கூறித் தான் படித்த மேதாவி என்று காட்டிக்கொள்வதல்ல.
துயரர்கள் ஒரு மருத்துவரிடம் தங்கள் துயரங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காகவே வருகிறார்கள் அந்த நிவாரணத்தை அளிப்பதே தலையாய கடமை.அந்த தலையான பணியைச்செய்யப்போகும் மருத்துவர் என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1.ஒவ்வொரு நோயிலும் குணப்படுத்தப்படவேண்டியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
2.அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதை அறிந்திருக்கவேண்டும்.
3.இவ்வாறு நோயில் குணப்படுத்தப்படவேண்டியதையும் மற்றும் மருந்தில் குணப்படுத்துவதையும் எப்படிப் பொருத்தவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
4.தன்னிடம் வந்துள்ள துயரருக்கு உரிய மருந்தைத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்
5.அந்த மருந்தை எப்படித் தயாரிக்கவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
6.அந்த மருந்தை எந்த வீரியத்தில் எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதைத்தெரிந்திருக்க வேண்டும்.
7.அந்த மருந்து துயரரிடம் வேலை செய்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய வேண்டும்.
8.அந்த மருந்தின் செயலாற்றும் திறம் முடிந்துவிட்டதா? அப்படியாயின் அடுத்தவேளை மருந்தை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
9.ஒவ்வொரு முறையும் துயரரை முதன்முறையாக ஆய்வுசெய்வதுபோல் ஆய்வு செய்து அவரின் குறிகளின் தன்மையை அறிந்து ஏற்கெனவே கொடுத்த மருந்துதான் மறுபடியும் தேவைப்படுகிறதா? அப்படியாயின் அந்த மருந்தின் வீரியத்தை மாற்றவேண்டுமா? அல்லது அளவை மாற்ற வேண்டுமா? என்பதை எல்லாம் நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
10.இவ்வாறு தன்னிடம் வரும் துயரருக்கு உரிய மருந்தை தேவைக்கு ஏற்பக் கொடுத்து படிப்படியாக குணப்படுத்தும்போது, அவரைக் குணப்படுத்தவிடாமல் தடுக்கும் தடைகள் என்ன என்பதை அறிந்திருக்கவேண்டும்.
11.தடைகளை அறிந்து அதை நீக்கத்தெரிந்திருக்க வேண்டும்.
12.இவ்வாறு தடைகளை நீக்கி துயரரை பூரணநலமுள்ளவராக ஆக்கவேண்டும்.அப்போதுதான் அவர் பகுத்தறிவுபூர்வமாக மருத்துவம் செய்வதாக கருதப்படுவார்.
இவ்வாறு ஒரு துயரரை நோயுற்ற நிலையிலிருந்து மீட்டி நோயற்ற நிலைக்கு கொண்டு வருவதோடு மட்டும் ஒரு மருத்துவருடைய பணி முடிந்துவிடுவதில்லை.
அதற்கும் மேலாக ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.அதை எவ்வாறு நீக்குவது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது அவர் நோயிலிருந்து துயரரை மீட்டுவது மட்டுமின்றி ஆரோக்கியமான மனிதர்களின் நலத்தைப் பேணுபவராகவும் செயல்படுகிறார்.
இங்கே ஹோமியோபதி மருத்துவர் மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்துபவராக மட்டும் இல்லாமல் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்து அவற்றை நீக்க வேண்டும் என்றபோது அவர் ஒரு மருத்துவராக மட்டும் இருந்தால் போதாது.
ஏனெனில் நோய்க்கான காரணிகள் வறுமை,வேலை இல்லாத்திண்டாட்டம், சுகாதாரமற்ற வாழ்வு,சாதிமதக்கொடுமைகள்,சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அறியாமை இவைகள் தாம்.
ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவர் என்பவர் டாக்டர் ஹானிமன் அவர்களுடைய கூற்றுப்படி மேற்கூறிய காரணிகளை நீக்கும் பணியில் ஈடுபடவேண்டும். டாக்டர் ஹானிமன் அலோபதி மருத்துவம் பார்த்தபோது அவர்தான் சுகாதாரம் தொடர்பாக முதல் குரலை எழுப்பிய மருத்துவராக இருந்தார்.அவர் மனிதனின் உணவு,வாழும் முறை மற்றும் இருப்பிடம் இவை எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி மருத்துவ வரலாற்றில் அவர் காலத்தில் முதலில் எழுதிய மருத்துவராவார்.
இன்று சமூகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.மனித இனம் வறுமையாலும் அறியாமையாலும் படுதுயர் எய்தி நோய்வாய்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து நீக்க முயற்சிக்க வேண்டும்.
அப்போது ஹோமியோ மருத்துவர் மருந்து கொடுப்பவராக மட்டுமில்லாமல் ஒரு சமூகப்போராளியாக மாற வேண்டும் இல்லையேல் மேற்கூறிய காரணிகளை நீக்கமுடியாது.

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி-பழ.வெள்ளைச்சாமி

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி

உலகத்துப்பொருட்கள் எல்லாம் தனிமங்களால் உண்டானவை. தனிமங்கள் அனைத்தையும் பற்றி அறிவது என்பது அனைத்துப்பொருட்களையும் பற்றி அறிவதற்குச் சமமாகும்.ஹோமியோபதியில் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மருந்துகளாகக் கருதப்படுகின்றன.ஆனால் இந்தப் பிரபஞ்சத்திலோ கோடான கோடிப் பொருட்களும் உயிர்களும் இருக்கின்றன்.அவை அனைத்தையும் நாம் நிரூபணம் செய்ய முடியுமா? அல்லது வீரியப்படுத்தத்தான் முடியுமா? ஆனால் இதைவிட எளிமையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற தனிமங்களை நிரூபணம் செய்வதும் அவைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவதும்தான்!

ஹோமியோபதியில் தனிமங்கள்

ஹோமியோபதியில் ஹானிமன் காலந்தொட்டு பல தனிமங்கள் தனியாகவும் கூட்டுப் பொருட்களாகவும் நிரூபணம் செய்யப்பட்டு மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் தனிமங்களின் அணுஎண் பட்டியலின்படி அனைத்துத் தனிமங்களும் பயன்படுத்தப்படவில்லை.

முதன்முதலில் தனிமங்களின் அணுஎண்படியான பட்டியலின்படி மருந்துகளை ஆய்வு செய்யும் பணியை ஜெர்மி ஷெர் மேற்கொண்டார்.அவரைத் தொடர்ந்து இராஜன் சங்கரன் அவர்களும் மற்றும் நெதர்லாந்து நாட்டுக்காரரான ஜான் ஸ்கால்டன் அவர்களும் தனிமங்களை ஆய்வு செய்து ஹோமியோ மருந்துகளாகப் பயன்படுத்தி அவைகளின் மருத்துவப் பண்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர் ஜான் ஸ்கால்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.அவர் தாம் எழுதிய இரண்டு புத்தகங்களிலும்
1.HOMOEOPATHY AND MINERALS
2.HOMOEOPATHY AND THE ELEMENTS
தனிமங்களின் அணுஎண் படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு,மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக்காலம் வரை விவரித்துள்ளார்.ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல. அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத்தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனிதவாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

தனிமங்களுக்கும்,மனிதவாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணுஎண் அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.அதன் சிறப்பை மேலும் அறிந்துகொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.

இவ்விரு புத்தகங்களையும் எழுதுவதற்கு கனிமங்களைப் பற்றியும்,மனிதவாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.அதனால் அவர் ஆய்வுமுறை பலருக்குக் குழப்பத்தையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.

ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல:மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.அதனால்,ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும்,அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்றுவரை தூய ஹோமியோபதியைச் செய்பவர்கள் செய்துவருகிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்திப் பார்க்கப்பட்டன.

ஆனால்,ஸ்கால்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன் தான் என்றாலும், அந்தத் தனித்தன்மை கூட திடீரென்று தோன்றியது இல்லை.அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும்,மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைபொருட்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.

அவர்,அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம்,சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும்,அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும்,அது சமூக உறவுகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.

ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதை புறக்கணிக்கும் வண்ணம்,ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும்,அவனுக்கும்,பொருளியல்,அரசியல் சார்ந்து குடும்ப சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான் என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.

எனவே,ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது,அவன் குடும்பத்தை,அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு,அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

அவர் மருந்துகளை அன்னையாக,தந்தையாக,பிள்ளைகளாக,சகோதர-சகோதரிகளாக,நண்பர்களாக,தொழிலாளியாக,கலைஞனாக,அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினராகவும் பார்க்கிறார்.ஏனெனில்,மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.அவனுக்கும்,குடும்பத்திற்கும் -அவனுக்கும் சமூகத்திற்கும்-அவனுக்கும் தொழிலுக்கும்-அவனுக்கும் கலைப்படைப்பிற்கும்-அவனுக்கும் ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்.

அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.ஓர் அலோபதி மருத்துவர் நோய்க்கூறு இயலையும்,நுண்ணுயிரி இயலையும் எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும்,சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும். சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

இவர், இவ்வாறு மருந்துகளை பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை. பலசமயம் புதிராக இருக்கிறது.இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்படும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.

ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும் குடும்பத்திற்கும்,சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து,அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.அவனை நலப்படுத்துகிறது.

ஜான் ஸ்கால்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

மருந்துகாண் ஏட்டைப்(repertory) பயன்படுத்தத் தேவையில்லை.

ஒட்டுமொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.

ஆக,ஜான் ஸ்கால்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஹோமியொபதித் துறையில் ஒரு புதிய சகாப்தம். அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும் போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை..