செவ்வாய், 25 மார்ச், 2014

மருத்துவம் பிறப்புரிமை --மரு.பழ.வெள்ளைச்சாமி

மருத்துவம் பிறப்புரிமை
--மரு.பழ.வெள்ளைச்சாமி

இன்று மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது ‘நோயற்ற வாழ்வு’, ஏனெனில் ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர் நோயோடு இருப்பாராயின் அவருடைய அறிவால், பணத்தால் எந்தப் பயனும் அவருக்கு இல்லை.

இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் ஓர் அனுபவப்பூர்வமான பொன்மொழியைக் கூறி இருக்கிறார்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று.
இன்றைக்கு மனிதனுக்கு ஆயிரமாயிரம் தேவைகள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் முக்கியமானது.
*சுவாசிக்கும் காற்று
*அருந்தும் நீர்
*உண்ணும் உணவு
இந்த மூன்றுக்கும் அப்பால் முக்கியமானது ஒன்று இருக்குமானால் அது மனிதனுடைய ஆரோக்கியம்.
பொதுவாக மனிதனுடைய தேவைகளின் அத்தியாவசியத்தன்மைக்கு ஏற்றாற்போல் அவை கிடைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

நமக்கு நாம் சுவாசிக்கும் காற்று மிகமிக முக்கியமான் ஒன்று. அது இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. ஆகவே இது மிகமிக அத்தியாவசியமானது. அதனால் தான் இதை இயற்கை இலவசமாக எந்தவித முயற்சியுமின்றி நமக்குக் கிடைக்கச் செய்கிறது.

அடுத்து முக்கியமானது நீர். இதற்கு நாம் கொஞ்சம் முயற்சிக்கவேண்டும். நாம் நீர் இல்லாமல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதுவும் நமக்கு இயற்கையில் இலவசமாகக் கிடைத்தது. ஆனால் இன்று அதுவும் வியாபாரமாகிவிட்டது.

அடுத்து முக்கியமானது, நாம் உண்ணும் உணவு. நாம் உணவு இல்லாமல் சில மாதங்கள் கூட உயிர் வாழலாம். இதுவும் கூட நமது நாட்டில் இலவசமாக இயற்கையால் வழங்கப்பட்டதுதான். இதற்காக நாம் அதிக முயற்சி செய்ய வேண்டும். இயற்கையோடு வினை புரிய வேண்டும்.

நமது தேவைகளில் நான்காவதாக இருப்பது, சுகாதாரம்- மருத்துவம்.இதுவும் நமது நாட்டில் வெள்ளையர் வருகைக்கு முன் இலவசமாகவும், தொண்டாகவும் செய்யப்பட்டது.இதை யாரும் தொழிலாகச் செய்யவில்லை.

இவ்வாறு மனிதனின் தேவைகளின் அத்தியாவசியத் தன்மைக்கு ஏற்றார் போல் அதைப் பெறுவதற்கான முயற்சியும், செலவும் வேறுபடுகின்றன.அத்தியாவசியத் தன்மை குறையக் குறைய அதற்கான செலவு கூடிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் மருத்துவம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே அது மக்களுக்கு எளிமையாகவும் சரியாகவும் எல்லோருக்கும் பாகுபாடின்றி சமமாகவும் கிடைக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காக தங்களுடைய வருவாயில் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்று மருத்துவம் ஒரு வன்முறைத் தொழிலாக மாறி வருகிறது. வீதிகள் தோறும் அடுக்குமாடி மருத்துவமனைகள். பிணம் தின்னும் கழுகுபோல் காத்துக் கொண்டிருக்கின்றன். மனிதாபிமானமற்ற முறையில் இயங்குகின்றன.
இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்
நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது
இது மிகவும் அத்தியாவசியமான பணி
என்ற வகையில் அனைத்து மக்களுக்கும்
மருத்துவம் பிறப்புரிமையாக மாற்றப்பட
வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி
எளிதில் கிடைக்க வேண்டும். மருத்துவம்
தொழில் என்ற நிலையிருந்து சேவையாக மாறவேண்டும்.

ஒரு மக்களுக்கான அரசு முதற்கட்டமாக மருத்துவம் அனைவருக்குமான பிறப்புரிமை என்று அறிவிக்க வேண்டும்.
மருத்துவத்தையும்,கல்வியையும் அரசே எடுத்து நடத்தவேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமச்சீர் கல்வி மற்றும் சரியான மருத்துவம் கிடைக்கும்.

இன்று மருத்துவம் வன்முறைத் தொழிலாக மாறி ஏழை மக்களைக் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது.
மருத்துவர்களில் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவதர்மமும் இல்லாமல் பணம் பண்ணுவதற்காக கடுமையான மருந்துகளை எழுதுவதும், தேவையற்ற வகையில் துயரர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும்,அதன் மூலம் அவர்கள் வங்கிக்கடன்களை கட்டுவதற்கு முயற்சிப்பதும்,இன்னும் பல வகைகளில் துயரர்களிடமிருந்து ஒரு வழிப்பறி கொள்ளையர் போல் பணத்தைப் பறிப்பதும் இடைவிடாது அன்றாட நடவடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

மருத்துவத்தால் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு ஒரே வழி மருத்துவக் கல்வியையும்,மருத்துவத்தையும் அரசே கைக்கொள்வது. பொதுவாக மருத்துவக் கல்வியை அரசே நடத்த வேண்டும்.

மருத்துவக் கல்வி, ஒப்பீட்டளவில் எளிமையானது.அதை அனைவரும் கற்றுக் கொள்ளலாம். விதிமுறைகளைத் தளர்த்தி இன்னும் அதிகமானோர் மருத்துவக் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இது தனியார் வசம் இருக்கும் போது அந்த நிறுவனங்கள் சீட்டுக்காக பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு தகுதியற்றவரைச் சேர்க்கும் போது இன்னும் பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு படிக்காமலே பட்டம் தரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இவ்வாறு பணத்தைக் கொடுத்தே லைசன்ஸ் வாங்கியவர்கள் மக்கள் உயிரை எப்படி மதிப்பார்கள்.இதனால்தான் சிலர் லைசென்ஸ் வாங்கிய கொலைகாரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

ஆகவே மருத்துவக் கல்வியை அரசு மட்டுமே நடத்தவேண்டும்.அதில் படித்துத் தேறியவர்கள் பயிற்சி முடித்து வரும்போது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அவர்களை பணியமர்வு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு மாதச் சம்பளம் தற்போதையச் சம்பளத்தைவிட இன்னொரு மடங்கு கொடுக்கவேண்டும்.அவர்களுக்கு இலவசமாக மருத்துவமனை வளாகத்திற்குள் வீடு,மற்றும் வாகனவசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கவேண்டும்.

தனியார்கள் மருத்துவமனை நடத்தக்கூடாது.தனியாக மருத்துவர்கள் கிளினிக் வைக்கவும் கூடாது. அவர்கள் 24மணிநேர அரசு மருத்துவர்கள். அவர்கள் அரசின் முழு நேரமருத்துவர்கள்.அவர்கள் வெறுமனே சிகிச்சை அளிப்பவராக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் நலம் காப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மக்களோடு இருப்பவராக இருக்கும்போது அவர்கள் பொதுச் சுகாதாரத்தில் அக்கறையுள்ளவராக இருப்பார்கள்.

மேலும் அரசு அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் மருத்துவமனைகள் தொடங்க வேண்டும். அங்கே மருத்துவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

வட்ட மையம் மற்றும் மாவட்ட மையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.ஒரு மாவட்டத்தில் உள்ள மக்கள் அது மந்திரியாக இருந்தாலும் அவரவர் வாழும் பகுதியிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதை விட பெரிய மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வராதபடி அனைத்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொறியாளர்கள் அடங்கிய ஒரு மருத்துவமனையாக மாவட்ட மையங்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளின் சுகாதாரம் உயர்ந்த தரத்தில் பேணப்படவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண குடிமகனிலிருந்து பெரிய மந்திரிகள் வரை அனைவருக்கும் ஒரே தரமான மருத்துவம் வழங்கப்படவேண்டும்.அனைவருக்கும் ஒரே இடத்தில் மருத்துவம் என்று வரும்போது பாகுபாடு இருக்காது. மந்திரி முதல் அரசு உயரதிகாரி வரை அனைவரும் ஒரே இடத்தில் மருத்துவம் பார்க்கும் நிலை வரும்போது நிச்சயமாக அந்த மருத்துவமனையை பேணுவதற்கு அனைவரும் முயற்சிப்பார்கள்.
இதற்காக அரசு பணம் செலவளிப்பது நல்ல சமூகத்தை உருவாக்க செலவளிப்பதாகும்.

மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்படும்போது மருத்துவத்தில் அக்கறையுள்ள சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியைப் படிக்க வருவார்கள். தகுதியுள்ளவர்கள் மட்டுமே சேர்க்கப்படும்போது அவர்களின் கல்வித்தரம் உயர்ந்து சிறந்த மருத்துவர்களாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மருத்துவ விழிப்புணர்வு கல்வி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். இவ்வாறு மருத்துவ விழிப்புணர்வுக் கல்வி அளிக்கப்படும்போது மக்களிடம் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும். அப்போது அவர்களே நோயின் தோற்றுவாயிலிலேயே சரி செய்து கொள்வார்கள்.

இவ்வாறு ‘மருத்துவ விழிப்புணர்வு கல்வி’ அளிக்க ஹோமியோபதி மருத்துவமானது அதற்கு முற்றிலும் சாத்தியப்பாடான ஒன்றாக இருக்கிறது.

இது ஒரு எளிய இயற்கை விதிப்படி கட்டமைக்கப்பட்ட மருத்துவமுறை. அன்றாட வாழ்க்கையில் அனைத்து மக்களும் ஹோமியோபதியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஹோமியோபதி மருத்துவர்களாக மாற்ற வேண்டும்.

ஹோமியோபதியன் ‘ஒத்தவை விதி’ தினந்தோறும் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குறிகளின் அடிப்படையில் மருந்து ‘ஒத்ததுக்கு ஒத்த மருந்து’ என்ற அடிப்படையிலேயே நோயைக் குணப்படுத்தி விடலாம்.
எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் அடிப்படை ‘உடற்கூறு இயல்’ மற்றும் ‘உடல் இயங்கியல்’ தெரிந்தால் போதும். அவர்களை ஹோமியோபதி பயிற்சியாளராக ஆக்க முடியும்.அவரவர் குடும்பத்திற்கு அவர்களே மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் ஹோமியோபதி மருந்துகள் நிரூபணம் செய்யப்பட்டவை. பக்க விளைவுகள் இல்லாதவை. வீரியப்படுத்தப்பட்டு, விஷத்தன்மை நீக்கப்பட்டவை. எனவே இவற்றைக் கையாள்வது மிகவும் எளிது. எல்லாவற்றையும் விட விலை குறைவு.

இவ்வாறான கல்வியைப் போதிப்பதற்கு நிச்சயமாக கல்விக்கூடங்கள் தேவையில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிந்துள்ள நிலையில் இது மிகவும் சாத்தியமானது.

1976க்கு முன் இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களில் பெரும்பாலானோர் அவர்களாகவே ஹோமியோபதியை கற்றுக்கொண்டவர்கள்தான். அவர்களால் தான் ஹோமியோபதி வளர்ந்தது.இயல்பிலே ஹோமியோபதி மருத்துவமுறையை கல்லூரிகளுக்குச் செல்லாமல் அவர்களாகவே கற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் அரசு நினைத்தால் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒன்றை ஹோமியோபதிக்கென்று உருவாக்கி அப்ரோச் (AProCH) போன்ற அமைப்புகளிடம் ஒப்படைத்தால், எளிதில் வீட்டுக்கு ஒருவரை ஹோமியோபதி மருத்துவராக ஆக்க முடியும்.

இன்றைக்குள்ள நிலையில் மக்களை நோயிலிருந்து விடுவித்து, நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் அரசே மருத்துவத்தைக் கையில் எடுத்து அதை தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற நிலைக்கு மாற்ற வேண்டும்.

‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செல்வதன் மூலம் நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.மேலும் இதனால் மருத்துவத்திற்கான செலவு குறைந்து படிப்படியாக மருத்துவத்தை மக்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த முடியும்.

இதை எல்லாம் நிறைவேற்ற முதற்கட்டமாக ‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக