செவ்வாய், 25 மார்ச், 2014

“நோயின்றி வாழ வழி”-மரு.பழ.வெள்ளைச்சாமி

“நோயின்றி வாழ வழி”
--மரு.பழ.வெள்ளைச்சாமி

திருவள்ளுவர் அவர்கள் மருந்து என்ற அதிகாரத்தில் பத்து குறள்களில் ஒரு மருத்துவம் எப்படி இருக்க வேண்டும்.நோய்க்கு என்ன காரணம்? மற்றும் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 

அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களில் 6 குறள்கள் உணவைப் பற்றியும் அந்த உணவு உட்கொள்வதற்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிடுகிறார். 

கடைசி மூன்று குறள்களில் இரண்டு குறள்களில் மருத்துவர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து

ஆனால் முதற்குறளில் நோய்க்காண காரணத்தைக் கூறுகிறார்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவை கூடுவதற்கும் குறைவதற்கும் காரணம் என்ன? இதைப் பற்றி கூறியிருக்கிறாரா வள்ளுவர்? என்ற கேள்வி எழாமல் இருக்கமுடியாது.

ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.உஷ்ணம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள உஷ்ணம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம்.

இந்தக்குறள் புற அவய முழுமைக் குறிகளின் அவசியத்தைக் கூறுகின்றது. ஆனால் இதை மட்டும் பார்த்தால் போதுமா? இவை மட்டுமே மனிதனின் நோயையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றனவா?

இதற்கு அப்பால் மனம் என்று ஒன்று உள்ளதே.மனிதனின் ஆரோக்கியத்தையும் மற்றும் நோயையும் தீர்மானிப்பதில் அது முக்கியப்பங்கு வகிக்கின்றதே!
ஹோமியோபதியில் மனம் பற்றி பேசப்படுகிறதே.திருவள்ளுவர் மனத்தைப் பற்றிக் கூறியிருக்கிறாரா? மனத்திற்கும் நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. திருவள்ளுவர் நோய்க்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பை பல குறள்களில் கூறியுள்ளார்கள்.

அவர் நோய் என்று கூறுவதை துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் நோய் என்று கூறுவதை நோய் என்று பார்த்தாலும் அது பொருத்தமாகத் தான் இருக்கும்.
அவர் மெய் உணர்தல் என்ற அதிகாரத்தில்,

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

பேராசை,கோபம் மற்றும் பிறழ்வு இவைகள் எந்த அளவுக்கு ஒரு மனிதனிடம் இல்லாமல் போகிறதோ அந்த அளவுக்கு துன்பம் இல்லாமல் போகும் என்று கூறுகிறார். இங்கு நோய் என்று கூறுவது துன்பத்தைக் குறிப்பதாக இருந்தாலும் நோய்க்கும் பொருந்தும். ஆகவே மனம் அது செம்மையானால் நோய் நம்மை அணுகாது.

மேலும் திருவள்ளுவர், ‘இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தில் மேலும் சிறப்பாகக் கூறுகிறார். ஒருவருக்கு நோய் வருவதற்குக் காரணம் அவர் பிறர்க்கு துன்பம் செய்வதுதான் என்று கூறுகிறார்.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவார் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

ஒருவருக்கு வருகின்ற துன்பத்துக்குக்காரணம் அவர் பிறருக்கு துன்பம் செய்ததுதான் ஒருவர் தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பாராயின் அவர் பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது. இதில் திருவள்ளுவர் பிறருக்கு துன்பம் செய்தலே துன்பத்துக்குக்காரணம் என்று கூறுகிறார். இது நோய்க்கும் பொருந்துமே!

மேலும் திருவள்ளுவர் பிறருக்கு தீங்கு செய்ய்யாமையை வலியுறுத்துகிறார்.’தீவினை அச்சம்’ என்ற அதிகாரத்தில்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

பிறர்க்கு தீங்கு செய்யாதே, இல்லாவிட்டால் துன்பம் வந்து சேரும். ஆகவே நோய் வந்து தம்மை சேர வேண்டாம் என்று எண்ணுகிறவன் பிறர்க்கு தீங்கு செய்யாது இருப்பானாக! இதில் துன்பம் என்று கூறப்பட்டாலும், இது நோய்க்கும் பொருந்தும். நிச்சயமாக ஒருவன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு நிம்மதியாக வாழமுடியாது. இந்நிலையில் அவன் நோய்வாய்ப்படுவது இயல்பே!

பிறருக்கு துன்பம் செய்யாது இருத்தலே தமக்கு நோய் வராமல் காத்துக் கொள்ள ஒரே வழி.

இங்கே பிறர் என்று கூறுவது தம் விரோதிக்கு கூட துன்பம் செய்யாது இருத்தலே அறிவினுள் எல்லாம் தலையானது ஆகும் என்று கூறுகிறார்.
நாம் நம் விரோதிக்கு துன்பம் செய்வதை நியாயப்படுத்துவோம். இங்குதான் அறிவு வேலை செய்ய வேண்டும். அவர் நம் விரோதியாக இருந்தாலும் அவருக்கு துன்பம் செய்யும்போது அதுவும் நம்மை வந்து சேரும். ஏனெனில் இது அறிவியல். வினைக்கு எதிர்வினை இருந்தே தீரும். இந்த உண்மையை உணர்ந்து விரோதிக்கும் துன்பம் செய்யாது இருப்பது அறிவினுள் தலையான அறிவாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

மேலும் வள்ளுவர் துன்பம் வந்தாலும் துன்பம் தராமல் இருக்க வழி சொல்கிறார்.

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

இங்கே வள்ளுவர் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது எந்த ஒன்றும் தனித்து வாழ முடியாது. இந்நிலையில் தனக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்ற எண்ணத்தை அழித்து சார்புடைமையை ஏற்றுக் கொண்டு வாழும் போது அங்கே, அப்போது மன மாசுகள் எல்லாம் அழிந்துபோகும். அப்போது துன்பம் தரக்கூடிய நோய் துன்பம் தராது.

இவ்வாறு நோய் வருவதற்கான காரணத்தையும் நோய் வராமல் தவிர்த்தலே அறிவினுள் எல்லாம் தலையானது என்றும் அப்படி நோய் வந்துவிட்டாலும் அந்த நோய் வருத்தாமல் இருப்பதற்கும் திருவள்ளுவர் வழி சொல்கிறார்.

அவர் மருந்து என்ற அதிகாரத்தில் மருத்துவத்தைப் பற்றிக் கூறினாலும், அவருடைய பார்வையில் துன்பம் வருவதற்கான காரணம் பிறர்க்கு தீங்கு செய்வதே என்று கூறுவது, ஹோமியோபதியர்கள் பார்வையில் மியாசத்திற்கு அடிப்படையானது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த மியாசமே நோய்களுக்கு மூல ஊற்று. அந்த மியாசமே பிறர்க்குத் தீங்கு செய்வதில் தொடங்குகிறது.

இவ்வாறாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் நோயின்றி வாழ வழி சொல்கிறார்.அவர் கூறியதை கருத்துள் கொள்வோம். நோயின்றி வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக