சனி, 25 மார்ச், 2017

கிராஃபைட்ஸ் - மேஜர் தி.சா.இராஜூ


 GRAPHITES
`வயது?’

`இருபத்து நாலு’

`பெயர்?’

`மெர்ஸி ஆசீர்வாதம்’

`ஏதாவது வேலையில் அமர்ந்திருக்கிறீர்களா?’

`ஆமாம்.  தட்டச்சு, சுருக்கெழுத்துப் பணியாளர்’

`தட்டச்சு வேலை செய்வதால் விரல்களில் சோர்வு ஏற்படுகிறதா?’

`அப்படி ஏதுமில்லை.  விரல்களில் இடுக்கில் புண் ஏற்படும்.  கசிவும் உண்டு.’

`வேறு எங்காவது இப்படி உள்ளதா?’

`கால்கட்டை விரலுக்கும் இடையில்’ அந்த மங்கை கை விரல்களையும் காட்டினாள்.  நுனியில் கீறல்கள் இருந்தன.  அவர் குனிந்து கால் விரல்களைக் காட்ட முனைந்தபோது பின் தலையை கவனித்தேன்.  கூந்தலில் ஒற்றை ரோஜா, அதனருகில் ஒற்றை முண்டு.

`தலையில் என்ன வீக்கம், மெர்ஸி?’

`அது ஒன்றுமில்லை.  சிறிய கட்டி.  மருத்துவமனையில் காட்டினேன்.  அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடலாமென்று கூறினார்கள்.  அங்கு வலி ஏதுமில்லை’.

`அது எப்போதாவது முகம் விட்டுக் கொண்டு நீ கசியுமா?’

`உண்டு அய்யா’

சரி இப்போது சொல்லுங்கள், நீங்கள் எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள்?

கண்ணில் ஒரு மறைப்பு.  திடீரென்று இருட்டுகிறது.  ஓரிரு நொடிகளுக்குப்பிறகு சீராகி விடுகிறது.  உதிர அழுத்தம், சிறுநீர்ப் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தோம்.  எதிலுமே குறைபாடு இல்லை.
நிறைய செலவு செய்திருக்கிறீர்கள்.

ஆம் அய்யா,  கண் இருட்டுகிறதே என் தாயார் பெரிய மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிகிறார்.  அவர் என்னைச் செனைக்கும், மதுரைக்கும் கண் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றார்.

நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

விரிவான பரிசோதனைகள் செய்தார்கள்.  வெகுவிரைவில் பரிசோதனைகளை செய்து விடுகிறார்கள் என்பது மட்டும்தான் அதன் சிறப்பு.

நானும் கேள்விப்பட்டேன்.  அவர்கள் வருகையாளர்களிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் பாராட்டுகிறார்கள்.
உண்மைதான் அய்யா, ஆனால் எந்தப் பரிசோதனையிலும் என் கண்களில் ஒரு கோளாறும் இல்லை என்பதே முடிவு.
சிறிய மின் விளக்கின் உதவியோடு கண்களை உற்று நோக்கினேன்.  இரண்டு இமைகளின் மீதும் சிறுசிறு பொறிகள் தென்பட்டன.

எனக்கு இன்னும் சில விவரங்கள் தெரிய வேண்டும் மெர்ஸி.

சொல்லுங்கள் அய்யா,

இந்தக் கண் இருட்டடிப்பு எந்த நேரத்தில் ஏற்படுகிறது?

குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.  காலை, பிற்பகல்  இரண்டு நேரத்திலும் வருவதுண்டு.

கடைசியாக எப்போது ஏற்பட்டது?

நான்கு நாட்களுக்கு  முன்பு.

தேதியைக் குறிப்பிட முடியுமா?

மெர்ஸி தெரிவித்தார்.

அதற்கு முன்பு எப்போது ஏற்பட்டது?

சென்ற மாதம் அய்யா.

இன்னொரு விவரம் எனக்குத் தெரிய வேண்டும்.  உங்களுடைய மாதவிலக்கு சீரான இடைவெளியில் உள்ளதா?

சரியாக முப்பது நாள் இடைவெளியில் ஏற்பட்டு விடும்.

அதற்கு முன்பு உடல் தொந்தரவுகள் மிகுதியாகின்றனவா?

இல்லை அய்யா,

சரியாக நினைவுபடுத்திக் கொண்டு சொல்ல வேண்டும்.  ஒவ்வொரு முறையும் மாதவிலக்கின்போது இத்தகைய இருட்டடிப்பு ஏற்படுகிறதா?

மெர்ஸியின் முகத்தில் ஒரு மலர்ச்சி.  ஆமாம் அய்யா,  இந்தக் கோளாறு மாதவிலக்கின்போதுதான் ஏற்படுகிறது.

நான் நிபுணர் கெண்டின் நூலைப் புரட்டுகிறேன்.  என் அனுமானத்தை அவர் உறுதி செய்கிறார் (பக். 555)  மாதவிலக்கு ஏற்படும் வேளையில் இருட்டடிப்பு ஏற்படும் என்று அவர் இந்த மருந்தின் தன்மை பற்றி தெளிவாக எழுதுகிறார்.  கண் பார்வையைப் பற்றி அவருடைய கருத்துக்களை நிபுணர்கள் ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள்.  உள்ளுறுப்புகளின் குறைபாடு கண்களில் வெளிப்படும் என்பது அவருடைய முடிவு.

 சிறிது யோசித்து பிறகு மருத்துவக் குறிப்பில் எழுதுகிறேன்.  கிராஃபைட்ஸ் ஆறு, முப்பது, இருநூறு மூன்ற நாள் இடைவெளியில் ஒரு வாரம் பொறுத்து லூட்டிகம் 200.

......இரண்டு மாதங்கள் பொறுத்து ஞாயிறு காலை வழிபாட்டிற்குப் பிறது தந்தை ( Rev. Father) அருள் நாயகத்திடம்  உரையாடிக்கொண்டிருந்தேன்.

மெர்ஸி ஆசீர்வாதம் அருகில் வந்து வணக்கம் தெரிவித்தார்.

`அய்யா, மிக்க நன்றி, தற்போது எனக்கு ஒரு தொந்தரவுமில்லை’.

நல்லது தோழி, நான் பதிலுறுத்தேன்.

அது மட்டுமில்லை.. .. அவர் தயங்கினார்.  என் தலையில் இருந்த கட்டியும் கரைந்துவிட்டது.  விரலிடுக்குகளிலும் தற்போது ஏதும் புண் இல்லை.  இது என் தாயார் பெரிய மருத்துவமனையில் செவிலியாக இருக்கிறார்.  பெயர் மரியபுஷ்பம் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தோத்திரம் அய்யா,  அவர் வணக்கம் தெரிவித்தார்.

அடுத்து தந்தை அருள்நாயகத்திடம் பேசத் துவங்கினார்.  இவர் மேற்கொண்டிருக்கும் பணி உன்னதமானது அய்யா,  என்னைப்பற்றி அவரிடம் குறிப்பிட்டார்.

தெரியும்.  இறைவன் அருள் புரியட்டும்.  தந்தை கையை உயர்த்தினார்.

.. .. அவர்கள் அகன்ற பிறகு, தந்தை என்னைக் கேட்டார்.

நீங்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது நோய் மிகும் நாள், தேதி, நேரம் ஆகியவற்றைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்கிறீர்களாமே?

`ஆமாம் தந்தையே,  ஹானிமன் வகுத்த சாஸ்த்திரத்தில் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பிறகே மருந்தைப் பற்றி முடிவெடு’  என்று எழுதியிருக்கிறார்.  ஆயுர்வேதமும், சித்தவைத்தியமும் கூட இவைகளை வலியுறுத்துகின்றனவே.

அப்படியா? இது எனக்குப் புதிய தகவல். அவர் என் தலையைத் தொட்டு ஆசி வழங்கினார்.

2.
மேற்காணும் சொல்லை  `காரீயகம்’ என்று கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி.  கரும் காரீயம் என்றும் சில சொல்லகராதிகள் குறிப்பிடுகின்றன.  ப்ளம்பாகோ (Plumbago) என்றுரைக்கிறது ஸ்டெட்ஸ்மான் சொல்லகராதி,  இதற்கும், காரீயத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா என்று ஆராய்ந்தால் இல்லை என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் அது கனிமம்.  இது கரி ( carbon) மலைச்சரிவுகளிலிருந்து செதுக்கி எடுக்கப்படுகிறது கிராஃபைட்ஸ்.

இந்த மருந்தைக் குறித்து எண்ணும்போது இரண்டு நினைவுகள் எதிர்ப்படுகின்றன.  குமுதம் வார ஏட்டில் ஒரு கதை எழுதியிருந்தேன்.  அதன் உள்ளடக்கம் இதுதான்.  சிறு வயதிலிருந்தே பென்சிலை வாயில வைத்துக் கடிக்கும் பழக்கம் உள்ள ஒரு சிறுமி வளர்ந்ததும் பல நோய்களுக்கு ஆட்படுகிறாள்.  அவளுடைய இளமைக்கால இயல்பை அறிந்த குடும்ப நண்பர் ஒருவ அந்த மங்கைக்கு கிராஃபைட்ஸ் தருகிறார்.  அவள் குணமடைந்து விடுகிறாள்.  இந்தக் கதை பலருடைய கவனத்தைக் கவர்ந்தது.  இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கோபிசெட்டிபாளையத்தில் ஒரு மருத்துவ அன்பரைச் சந்தித்தேன்.  என் பெயரைக் கேட்டதும் `ஓ எனக்குத் தெரியுமே, நீங்கள் தானே கிராஃபைட்ஸ் பற்றிக் கதை எழுதியிருந்தீர்கள்?’ என்று நினைவு கூர்ந்தார்.  அது ஒரு சிறந்த மருத்துவ இலக்கியப் படைப்பு என்று பலரும் பாராட்டினார்கள்.

மற்றது என் ஆசானைப் பற்றியது.  அவர் அறையினுள் நுழையும் முன்பே வெளியில் அமர்ந்திருக்கும் அன்பர்களை அவர்கள் அறியாவண்ணம் கவனிப்பார்.  இருக்கையில் அமர்ந்ததும் என்னை விளித்து `அந்த மூன்றாவது நபர் செப்பியா, அடுத்தவர் ஆலோ என்று உறுதிபடக்கூறுவார்.  உள்ளே அமர்ந்திருக்கும்போதும் அன்பர்களைப் பார்வையிடுவார்.  ஒரு தரம் `அதோ அந்த மனிதர் கிராஃபைட்ஸ் என்று கூறினார்.  அப்போது அவரைக் கவனித்தேன்.  அவர் அடிக்கடி உடடில நெட்டி முறித்தார்.  கொட்டாவி விட்டு ஏதோ முணுமுணுத்தார் (இன்ஷா அல்லா).
எவ்வளவோ முயன்றும் இந்தக் கலையை என்னால் முழுமையாகக் கற்க இயலவில்லை.  நினைவுகள் மட்டும் அடிக்கடி எதிர்ப்படும்.
இந்த மருந்தை மேதை ஹானிமன் மெய்ப்பித்திருக்கிறார் என்பது அவருடைய `நாட்பட்ட நோய்களிலிருந்து’ தெரிகிறது.

 அவர் இந்த மருந்தின் மூன்று முக்கியமான தன்மைகளை விவரிக்கிறார்.

1. அந்த மணிதர் துயரத்தில் தோய்ந்திருப்பார்.
2. அவருடைய வெளிப்போக்கு கட்டியாக, திப்பித் திப்பியாக சளியினால் இணைக்கப்பட்டிருக்கும்.
3. அவருடைய உடல் திறப்புகளில் எல்லாம் வெடிப்புகள் தோன்றும்.

 தேனைப்போன்ற நிறமுடைய வெளிப்பாடு.  அது போன்றே பிசுபிசுப்பும் உடையது.  அது பட்ட இடம் எல்லாம் புண்ணாகும்.  இவை இந்த மருந்துக்குரியவரின் சிறப்புக் குறிகள்.

திறப்புக்கள் என்றால், அவற்றில் வாய், மூக்கு, செவி, மலப்புழை, சிறுநீர்த்துளை, புணர்புழை எல்லாமே அடங்கும்.  இந்தக் குறிகள் மெய்ப்பிக்கப்பட்டபோது ஹானிமன் எத்தகைகய உடல் துயரங்களை ஏற்றுக் கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்கிறேன்.  இந்த மருந்துக்குரியவரால் வெப்பத்தைத் தாங்க இயலாது.  காற்று வீச வேண்டும்.  எல்லாக் கரி மருந்துகளுக்குமே இது இயல்பு.  (கார்போ வெஜ்)

அதே போல் அவரால் குளிரையும் தாங்க இயலாது.  நோய் மிகும் நேரம் காலை, மாலை அடுத்து நள்ளிரவிற்கு முன்பு என்பது நிபுணர்களின் கருத்து.  பளுவான பொருட்களைச் சுமந்தாலும் ஏற்படும் விளைவுகளையும் இது போக்கி விடும்.

பிறப்பிடத்திலும், மலப்புழையிலும் வெடிப்புகள் ஏற்பட்டு அதைச் சொல்லவே கூசும் மங்கையர்களுடன் நான் மன்றாடியிருக்கிறேன்.  இதற்காகப் பெரிய பெரிய படங்களைத் தயாரித்து அவற்றில் நோய்ப்பட்ட பகுதிகளைக் காட்டும்படி வேண்டுவேன்.  கிராஃபைட்ஸ் இந்த இடர்பாடுகளை உடனடியாகத் தீர்த்து விடும்.  பொறுக்குத் தட்டிய புண்கள், தழும்பு ஆகியவற்றிலிருந்து உருக்கிய மெழுகைப் போல் திரவம் கசியும்.  அரிப்பும் எரிச்சலும் பொறுக்க இயலாது.  அறுவை சிகிச்சைக்குப்பிறகு இணைய மறுக்கும் தசைப்பகுதிகளைக்கூட இந்த மருந்து சீராக்க உதவும்.
உடல் முழுவதும் பரவும் தன்மையுள்ள சொறி, சிரங்கு திரும்பத் திரும்ப ஏற்படுமானால் அப்போது நினைவுக்கு வர வேண்டியது கிராஃபைட்ஸ்.  கந்தகம், ஸோரினம், ஆந்த்ராக்சினம் ஆகிய மருந்துகளுக்கு அடிபணியாத படைகள் இதற்கு மசியும்.

வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு ஒரு விசித்திரமான சோர்வு ஏற்படும்.  அண்மையில் உள்ளவர்களிடம் சிடுசிடுப்பார்கள்.  நல்ல இசையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலாது.  எவ்வளவு முயன்றாலும் அவர்களால இன்முகத்துடன் பழக இயலாது.  அண்மையில் நிகழ்ந்தது மறந்து விடும்.  பழைய நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து துன்புறுத்தும்.  பெரிய பொறுப்பிலுள்ளவர்கள் சீரான முடிவை எடுக்க முடியாமல் திணறுவார்கள்.  முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவார்கள்.  அந்த நேரங்களில் உதவியாளர்கள் அவரை அணுக அச்சமுறுவார்கள்.

இவ்வளவு உளைச்சலுடன் படுக்கையை நாடினால் உறக்கம் வராமல் தவிப்பார்கள்  பழைய நினைவுகள் துன்புறுத்தும்,  பல கெட்ட கனவுகள், காலையில் கண் விழித்ததுமே ஒரு கிறுகிறுப்பு .  மேலே பார்த்தாலும், கீழே குனிந்தாலும், தடுமாற்றம் ஏற்படும்.  முன்பக்கமாக சாய்ந்து விழுவார்கள்.
தலை முழுவதும் கனக்கும்.  அசைக்க முடியாது.  மறத்துப் போகும்.  இந்த நிலை கீழ் நோக்கி இறங்கும்.  உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படும்.  சுரணையே இல்லாத நிலையும் மாறி மாறி வரும்  புருவங்களின் மேலும், கண் இமைகளின் மீதும் பொறுக்க இயலாத இறுக்கம்.
என்னவென்று விவரிக்க முடியாத குழப்பமான நிலை.  இவை அனைத்தையும் கிராஃபைட்ஸின் இரு மாத்திரை சீராக்கி விடும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.


3.
அந்தச் சிறுவன் மொழுமொழுவென்றிருந்தான்.  சிவந்த உடல்வாகு.  தலையில் அடர்த்தியான முடி வளர்ந்திருந்தது.  கண்களில் குறும்பு கொப்பளித்தது.

`அமருங்கள் நன்பரே’ வந்தவரை வேண்டிக் கொண்டேன்.  அவருக்குப் பக்கத்தில் அந்தப் பையனும் உட்கார்ந்து கொண்டான்.  அருகிலிருந்த சிறு மேஜைமேல் இருந்த திங்கள் ஏடு ஒன்றைப் பார்க்கத் தொடங்கினான்.
உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

இவன் என் ஒரே மகன்.  விஜயன் என்று பெயர்.  இவனைக் குறித்து நான் கவலை கொண்டிருக்கிறேன்.

விஜி இப்படி வா சிறுவனை அருகில்அழைத்தேன்.

`வரமாட்டேன்’ அவன் துடிப்புடன் விடையளித்தான்.

இழுப்பறையிலிருந்து ஒரு மிட்டாய் துண்டைக் காட்டினேன்.

எனக்கு எதுவும் வேண்டாம்.  நீங்க ஊசி போடுவீங்க.

இல்லை விஜி, என்னிடம் ஊசியே கிடையாது.  எல்லாம் இனிப்பு மருந்து.  நான் பெட்டியைத் திறந்து காட்டினேன்.

அப்படியானால எனக்கு மூணு பாட்டில் கொடுங்க.

இப்படித்தான் அய்யா, இவன் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறான்.  எவருக்கும் அடங்குவதில்லை.  பள்ளிக்கூடத்தில் இவனால் சலசலப்பு எழுதவோ, படிக்கவோ மறுக்கிறான்.  சதா விளையாட்டு, ஓட்டம், கண்டித்தால் கீழே விழுந்து அழுகை.

புரிகிறது அய்யா, நாமெல்லாம் சிறு வயதில் எப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவனை அருண் பாஸ்கரிடம் அழைத்துப் போயிருந்தேன்.  அவர் மினவலைiக் கூடையைக் கவிழ்த்துப் பரிசோதனைகள் செய்து பார்த்தார். (இ.சி.ஜி).

அருண் பாஸ்கர் என்பவர் நகரத்தின் சிறந்த நரம்பியல் நிபுணர்.  நல்ல பண்புகள் உடையவர்.

அவருடைய பரிவுரை என்ன?

சோதனைகளினால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்த உண்மையை அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.

நான் ஒலி நாடாவை இயக்கினேன்.  உள்ளத்தைக் கவரும் பாடல் வெளிப்பட்டது.  விஜய் எழுந்து வெளியேற முயற்சி செய்தான்.  அதை நிறுத்திவிட்டு சிறுவனின் அருகே சென்று நாடித் துடிப்பைப் பரிசோதித்தேன்.  நாவு, கண்விழி ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தேன்.  செவிமடலின் பின்புறத்தில் சிறிய புண்கள்.  அவன் தொடர்ந்து பரிசோதனைக்குட்பட மறுத்தான்.  நான் நண்பரிடம் கூறினேன்.  விஜியை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.  மாலை நான்கு மணிக்கு நீங்கள் மட்டும் வந்தால் போதும்.

அவர்கள் எழுந்தனர்.  விஜி வாயைக் கோணி பழிப்புக் காட்டினான்.  நான் இரு விரல்களை உயர்த்தி வழி அனுப்பினேன்.   `டாட்டா’.

`பிர்லா’ அவனும் சிரித்துக் கொண்டே கையை உயர்த்தினான்.
அவர்கள் சென்ற பிறகு நிபுணர் கெண்டின் நூலைப் புரட்டினேன்.  அவர் மருத்துவச் செய்திகளை இலக்கியச் சுவையுடன் அளிப்பார்.  அதனால் கடினமான விவரங்கள் கூடத் தெளிவாக விளங்கும்.  `மனித உள்ளம் குறித்து நாம் ஆராய்வதில்லை.  அது குறித்து நம்முடைய அறிவு மிகவும் குறைவு’ என்று அவர் தெளிவாக எழுதுகிறார்.

`உள்ளத்தைக் கூர்ந்து கொண்டு செய்ய வேண்டிய எந்தப் பணியையும் அவனால் ஏற்க முடியாது.  மனத்தளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.  அவனால் இசையைப் பொறுக்கவே இயலாது’ (பக்.555)

பாட்டின் இசையைப் பாம்பறியும், பச்சைக்குழந்தை அறியும் என்பது முதுமொழி.  தாய்க்குலத்தின் தாலாட்டிற்கு மயங்காத மழலை உண்டா?  ஆனால அதையே இந்த நோயாளி மறுப்பான் என்று இந்த நிபுணர் எழுதுகிறார்.

சிறுவனின் உடலமைப்பு, நிறம், அடங்காத தன்மை, பிடிவாதம் ஆகியவை என்னை கிராஃபைட்ஸ் குறித்து சிந்திக்க வைத்தன.   ஆனால் இவை மட்டும் போதாது என்று எனக்குப்பட்டது.  அன்று மாலை விஜயனின் தந்தை தமது மனைவியுடன் வந்தார்.  அவரிடமிருந்து சிறுவனைப் பற்றி நிறையத் தகவல்களைச் சேகரித்தேன்.

விஜயன் ஒழுங்காக மலம் கழிப்பதில்லை.  அடிக்கடி சொறி சிரங்குகளின் ஆளுகைக்கு உட்படுகிறான்.  மாலை நேரங்களில் காய்ச்சல் வருகிறது.  குளிர்ந்த காற்று ஒத்துக் கொள்ளாது என்றாலும் மின் விசிறி தேவை  இது இல்லாமல் உறங்க முடியாது.  எல்லாக் கரி (கார்பன்) மருந்துகளுக்கும் இந்த இயல்பு உண்டு என்று கெண்ட் எழுதுகிறார்.

விஜயனின் நோய் நிவாரணத்தின் பொருட்டு நிறையத் தொகை செலவு செய்து விட்டோம்.  அவனுடைய உடல் நிலை எங்களை மிகவும பாதிக்கிறது.  அவன் முரண்டு பிடிக்கும்போது என் மனைவி பெரிதும் வருந்துகிறாள்.  அதனால் என் மன அமைதி மிகவும் குலைகிறது.

நண்பர் அருணும், அவரது மனைவியும் திரும்பியபிறகு, நான் மீண்டும் கிராஃபைட்ஸ் பற்றிப் படித்தேன்.  இது ஒரு பல முனை நிவாரணி.  ஸோராவைத்தணிக்கும் ஆழமான மருந்து என்பதைத் தெரிந்து கொண்டேன்.

தோலின் மேல் ஏற்படுமூ தோஷங்களுக்கு (குறைபாடுகள்) முதல் மியாஸம் மட்டும் காரணமன்று.  மற்ற மியாசத்தினாலும் தோல் நோய் ஏற்படக்கூடும்.  ஆனால் கிராஃபைட்ஸ் குறி சற்று மாறுபட்டது.  செவிமடலின் பின்புறத்தில் ஏற்படும் புண்கள் இவற்றை கரப்பான் என்று அழைப்பார்கள்.  தழும்புகள், பொருக்குகளுக்குப் பின்னால் மீண்டும் கிளைப்பவை என்று குறிப்பிடுகிறார் கெண்ட்.  பொதுவாக ஹோமியோபதி மருத்துவர்கள் புற்று நோயை ஏற்றுக் கொள்வதில்லை.  ஆனால இந்த நிபுணர் தழும்புகளுக்குக் கீழே ஏற்படும் புண்கள்.  அவற்றிலிருந்து கசியும் நீர் ஆகியவை புற்று நோய்த் தொடர்புள்ளது என்று எழுதுகிறார்.

. . . . இடையீட்டுக்கு மன்னிக்கவும்.  புற்று நோய் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் இன்று வரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  ரேடியம் சிகிச்சைக் கூட அதைக் கட்டுக்குள் வைக்கிறது என்பதே உண்மை.

பல நிபுணர்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டேன்.  லிப்பே, ஃபாரிங்டன், போயனிங்ஹாசன் .. . .  . . . நான் நாஷையும்  விட்டு வைப்பதில்லை.  அவரது வீச்சு சில சமயங்களில் குறுக்கு வெட்டாகப் பாயும்.  துணிச்சலும் மிகுதி.
எல்லோரும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து கிராஃபைட்ஸ் ஒரு சிறந்த ஸோரா நிவாரணி என்பதாகும்.  இந்தக் காரணங்களினால் சிறுவன் விஜயனுக்கு கிராஃபைட்ஸ் ஆறு.  இரு முறை தொடர்ந்து ஸோரினம் இருநூறு ஆகியவை கொடுத்ததில் அவனுடைய சரும நோய் முற்றிலும் நீங்கி விட்டது.  மன இயல்பும் மாறி விட்டது என்பதைiயும் இங்கு குறிப்பிட வேண்டும்.
நாம் இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.  சிந்திக்க வேண்டும்.  சக மருத்துவர்களிடம் மனம் விட்டுப் பேசி விவாதிக்க வேண்டும் என்பதே என் கருத்து.


*****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக