திங்கள், 8 ஜனவரி, 2024

அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம் AESCULUS HIPPOCASTANUM K.RAJU

 

 அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்   

  AESCULUS HIPPOCASTANUM

HORSE CHESTNUT SAPINDACEAE   

     

நோய் கூடுதல்< :

      காலை விழித்து எழுதல், மலம் கழித்தபின், சிறிது நகர்ந்தால், குளிர்ந்த காற்று, குளிர்க்காலம், படுத்திருத்தல், குனிதல், நடத்தல்.  சிறுநீர்க் கழித்தல், உண்டபின், பிற்பகல், தண்ணீரில் இருந்து கொண்டு, துவைத்தல்.

 

நோய் குறைதல் >:

      குளிர்ச்சியான திறந்த வெளி, குளிர்ந்த நீரில் குளித்தல், மூலத்தில் இரத்தப் போக்கு, முழந்தாளிடுதல்., தொடர்ந்து உழைத்தல், கோடைக்காலம்.

 

மியாசம் :  சோரா 

 

ம.வே.ப. :  மலக்குடல், வயிறு, கல்லீரல் சிரைகள், மூக்கு, தொண்டைச் சளி சவ்வுகள்.

 

பொது – மூலத்திற்கு தரும் மருந்துகளில் இதுவும் ஒன்று.  மூலம்   சம்பந்த உடலமைப்பு உள்ளவர்கள்.  சளி சவ்வுகளில் வீக்கம், வறட்சி.  காலையில் விழித்தெழும் போதும் அசையும் போதும் தசைகளில் புண்ணுள்ள உணர்வு.  உடல் முழுவதும் மின்னல் போல் பறக்கும் நரம்பு வலிகள்.  இருதயம், மலக்குடல், தலை நோய்களில் இரத்தத் தேக்கம்.  நிச்சயமாக மலச்சிக்கல் இல்லாத நிலையில் கீழ்க்குடல்களில், மூலத்தின் சிரைகள் பெருத்து, முதுகு வலியும் இருத்தல்.  சிரைகளில் பொதுவாக இரத்தம் சேர்தல்.  ஊதா நிறமுள்ள பெருத்த சிரைகள்   முதுகு வலி, நோயாளியை வேலை செய்ய அனுமதிக்காது.  அதிக வலி இருந்தாலும், இரத்தம் சிறிதளவே வருதல்.  கால், கை, தண்டுவடத்தில் பாரிசவாயு உணர்வு.  மயக்கம், பலகீனம், களைப்பு உணர்வு.  கொட்டாவி விடுதல், உடலை நெளித்தல், முறுக்குதல், மூலக்கோளாறுடன் நாட்பட்ட வயிற்றுப் போக்கில் இடுப்பு, கீழ் முதுகில் கடுமையான வலி.  கர்பப்பை நழுவுதல்.  இடுப்புப் பகுதி உறுப்புகளில் வீக்கம், மோசமான வகையுள்ள வெள்ளைப்பாடுகளுக்கும் ஏற்றது.

மனம் - எளிதில் கோபப்படுதல், கோபம் மெதுவாகக் குறைதல், சோர்வடைதல், மனமுடைதல், குழப்பமடைதல், எண்ணத்தை ஒருமுகப்படுத்த இயலாமை.  சொற்பேச்சுக் கேளாமை, எதிர்த்தல்.

தலை – உட்கார்ந்துள்ளபோது, நடக்கும்போது, தலைச்சுற்றுதல்.  குழப்பமுள்ள உணர்வால் இருக்கையிலிருந்து எழுந்தால் தலை சுற்றல் அதிகரிக்கும்.  குத்தும் நரம்பு வலியானது வலப்புறத்திலிருந்து, இடப்புறத்திற்கு நெற்றி வழியாக செல்லுதலைத் தொடர்ந்து மேல் வயிற்றில் மின்னல் வலி.  தலையில் பின் பக்கத்திலிருந்து நெற்றியின் பகுதிக்கு வலி வருதலுடன் வீக்கமுள்ள உணர்வு.  நெற்றியில் அழுத்தத்துடன், குமட்டலும், வலது விலா எலும்புக்குக் கீழ்   குத்தும் வலி.  சளியால் வலி இருப்பதுபோல் தலையில் மந்தமான வலி.  குழப்பம்.  எல்லாத் தொல்லைகளும் மூலம், மலக்குடல், கீழ் இடுப்புக் குறிகளுடன் தொடர்புடையவை.  பின்தலை பிழிவது போலிருத்தல்.

கண் - கனமாக, சூடாக, நீர் வடிதல்.  இரத்தக் குழல்கள் பெரிதாகி இருத்தல்.  விழிகள் சிவந்து புண் போலிருத்தல்.  கண் முன் மின்னுதல், இமைகள், தசைகள் சுண்டுதல், கண்பாவைகள் விரிவடைந்து மெதுவாகச் சுருங்குதல்.

காது – எரிச்சல், அழுத்தம், மணியோசைக் கேட்டல்.  விழுங்கும்போது காதுகளில் சூடான, வறண்ட, புண்ணுள்ள குத்தும் வலி.

மூக்கு – குளிர்ந்தக் காற்றை இழுத்தால் மூக்கில் எரிச்சல்.  ளி ஒழுகல், தும்மல், மூக்கின் அடிப்பாகத்தில் அழுத்தம்.  கல்லீரல் கோளாறால் மூக்கடைப்பு.  அடர்த்தியான சளி.  மூக்குத் தொண்டைப் பாதையில்   எரிச்சல், வறட்சி, கொட்டும் வலி.  சளியால் நெற்றியில் வலி.  குளிர்ந்தக் காற்றை இழுத்தால் ஒத்துக் கொள்ளாது.

முகம் - தண்ணீரில் முகத்தைக் கழுவினால் பெரிதாக வீக்கம் ஏற்படுதல்.  தேய்த்தால் சிவந்தப்புள்ளிகள் உண்டாகுதல்.  வெளுத்துக் கவலையுள்ளத் தோற்றம் காணப்படுதல்.  முகத்தின் இடது புறத்தில் சூடும், சிவந்தும் இருத்தல்.

வாய் -  நாக்கில் சுட்ட உணர்வு.  இனிப்பு, கசப்பு, உலோகச் சுவை, வெள்ளை மஞ்சள் படிகம்,  உமிழ் நீருடன் எண்ணெய்ச் சுவை, செம்புச் சுவை.  சரியான வார்த்தையை உச்சரிக்க நாக்கை முறைப்படுத்த இயலாமை.  நாக்கின் நுனி புண்ணானது போலிருத்தல்.  பற்கள் எண்ணெயால் மூடியுள்ள உணர்ச்சி.

தொண்டை – வாயின் பின்னுள்ள கூம்பு வடிவக் குழியில் சிறிய நீர்ப்பையுடன் சவ்வு அழற்சியானது   கல்லீரல் தொடர்புடனிருத்தல்.  இனிப்புச் சுவையுள்ள நார் போன்ற சளியை கனைத்து வெளியேற்றுதல்.  கூம்பு வடிவக் குழி சிரைகள் பெருத்து கோணலாக இருத்தல்.  தொண்டையில் ஏதோ ஒன்று தங்கியுள்ள உணர்வால் அடிக்கடி விழுங்க விரும்புதல்.  அடிக்கடி தொண்டையில் நரம்பு வலிகள்.  டான்சில்கள் கருஞ்சிவப்பாக, வீக்கமாக, மந்தமான வலியோடு, நெருப்புப் போல எரிதல்.  மூலத் தொல்லையுடன் கூடிய நாட்பட்ட தொண்டைப் புண்.

இரைப்பை –  உண்டபின் நிறைந்த உணர்வு.  இரைப்பைச் சுவர்கள் தடித்தது போலிருத்தல்.  உணவு உண்டபின் சுமார் மூன்று மணி நேரம் கழித்து கல் போல் கடினமும், கடிக்கும் வலியும் இருத்தல்.  கசப்பு, புளிப்பு, வழவழப்பான ஏப்பங்கள், குமட்டல், வாந்தி, இரைப்பையில் எரிச்சல், காற்றுள்ள வெறும் ஏப்பங்கள்.

வயிறு – கல்லீரல் பகுதியில் நிறைந்த, கனமுள்ள உணர்வு.  காமாலை, கல்லீரலல் மந்தமான வலி.  தொப்புளில் வலி.  கீழ் வயிற்றிலும் தெறிக்கும் வலி.  மண்ணீரல் பகுதியில் வலி.  குடல்களில் இரைச்சலுடன் தொப்புளில் வெட்டும் வலி.  நாற்றமுள்ளக் காற்று வெளியாதல்.  மலக்குடலில் சிறியக் குச்சிகள் நிறைந்துள்ள உணர்ச்சியும், வறண்டு, சூடாக, சுருங்கி இருத்தல்.  ஆசன வாயில் கத்தி உள்ளது போன்ற வலி.  பச்சைப் புண்ணாக இருத்தல்.  மலம் கழித்த பின் சதைப் பிதுக்கமுடன் முதுகுப் பக்கம் அதிக வலி.  மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் மூலத் தொல்லை அதிகரித்தல்.  ஆசனவாய் சளிச்சவ்வு வீங்கி வழியை அடைத்துக் கொள்ளுதல்.  கீரிப்பூச்சியால் ஏற்படும் உறுத்தலை நீக்குவதோடு அவைகளை வெளியேற்றவும் துணை செய்கிறது.  நீலச் சிவப்பு நிற வெளி மூலம்.  நின்றாலோ, குனிந்தாலோ, நடந்தாலோ வலி அதிகரித்தல்.  ஆசனவாய் எரிச்சலுடன் குளிர் மேலும் கீழும் செல்லுதல்.  நாட்பட்ட மலச்சிக்கல்.  வறண்ட சளிச்சவ்வுகள்.  இருதயம், இரத்தம் மற்றும் நிணநீர்க் குழாய்களின் சவ்வுகளினூடே உப்பு, குளுக்கோஸ், யூரியா  போன்றவைகள் செல்லும்போது ஏற்படும் தொந்தரவுகளை   நீக்கும்.

சிறுநீர் வழி – அடிக்கடி கொஞ்சமாக மண்போல் சூடாக, கரும்பழுப்பாகக் கழித்தல்.  இடது சிறுநீரகத்தில் சிறுநீர்க் குழாயில் வலி, சளி.

ஆண் - மலம்,  சிறுநீர்க் கழிக்கும்போதெல்லாம் சுக்கில நீர் வெளியாகுதல்.  தூக்கத்தில் விந்து வெளியாதல்.

பெண் - கர்ப்பப்பை நழுவுதல். அழற்சியடைதல்.  வெள்ளைப்பாடு திட மஞ்சளாக தடித்து ஒட்டும் தன்மையும், உறுப்பின் உதடுகளை அரித்தும், மாதவிடாய்க்குப் பின்னும்  நடந்தாலும் அதிகரித்தல்.  கீழ் இடுப்பிலும், முழங்காலிலும் வலி.  ஆண், பெண் உறுப்பு முக்கோணப் பகுதிக்குப் பின்னால் தொடர்ந்து தெறிக்கும் வலி.  கர்ப்பமுள்ளப் பெண்ணிற்கு இடுப்பு எலும்புகளில் வலி.  இடுப்பு எலும்பு மூட்டு இணைப்பில் முடமான உணர்வு.

மூச்சுப் பகுதி – மார்பில் சூடுள்ள உணர்வு.  கல்லீரல் கோளாறால் இருமல்.  நுரையீரல்கள் பெருத்து கனமுள்ளதாகத் தெரிதல்.  இடதுபுறத்திலிருந்து வலது புறத்திற்கு குத்தும் வலி செல்லுதல்.  வலது நுரையீரல் வலியுடன் வேகமாக, மூச்சு  வாங்குதல்.  வறண்ட சிற்றிருமல்.  இருமும்போது, ஆழ்ந்து மூச்சிழுக்கும்போது அதிகமாதல்.

இருதயம் - இருதயத் துடிப்பை உடல் முழுவதும் உணருதல்.  இருதயத்தின் மேல்பகுதியில் சுண்டுதல்.  மூலத் தொல்லையுடன் இருதயத் தொல்லையில் சுற்றிலும் வலி.  இருதயத்தின் செயல் நிறைந்து கனமாக இருத்தல்.  படபடப்பு.

கழுத்து, முதுகு – கர்ப்பமாய் உள்ளபோது இடுப்பு வலி, நோயாளியை நகரவிடாமல் உட்காரச் செய்யும்.  இரண்டு தோள்பட்டைகளுக்கிடையே வலி.  கழுத்து முடமானத் தன்மையும், தண்டுவடப் பகுதியில் பலவீனம்.  தொடர்ந்துள்ள முதுகுவலியானது குனிந்தால், நடந்தால் அதிகரித்தல்.  வலது தோள்பட்டை, மார்புகளில் வலி.  மூச்சிழுத்தால் அதிகரித்தல்.  கால்களும், முதுகும் விட்டுப் போகுதல்.

கை, கால்கள் – விரல் நுனிகள் மரத்துப் போதல்.  நடக்கும்போது பாதங்கள் உள்பக்கமாக மடங்குதல்.  கை, கால்களில் பாரிசவாயு உணர்வு.  இடது கை மிக வெப்பமாகவும், கனம் மற்றும் வீங்கிய உணர்வு.  வலதுகை பாரிச வாயு உணர்வால் மேலே தூக்க இயலாமை.  கைகளைக் கழுவினால் சிவந்து வீங்கி விடுதல்.  நகங்கள் நீலநிறமாகுதல்.

தோல் – மணிக்கட்டில் தினவு.  தலை, மூக்கு, தொண்டையில் ஊருதல்.

தூக்கம் - நெளித்தல், கொட்டாவி விடுதல், இரைப்பையில் எரிச்சல் வலி, தூக்கத்தலிருந்து விழித்துக் கொள்ளுதல்.  விழிக்கும்போது தான் எங்கே இருக்கின்றோம் என்பது தனக்கேத் தெரியாமை.

காய்ச்சல் – சரியாக மாலை 4.00 மணிக்குக் குளிர் வருதல்.  மாலைக் காய்ச்சல்.  இரவு 7.00 மணி முதல் 12.00 மணிவரை காய்ச்சலின்போது தாகமிருக்காது.  வெடிக்கும் தலைவலி, கண் கூசுதல், ஏராளமான சூடான வியர்வை.  இருதயம் கடுமையாகத் துடித்தல்.  பாதங்கள், உள்ளங்காலகளில் எரிச்சல்.  முதுகில் சில்லிப்பு மேலும், கீழும் செல்லுதல்.

அளவு – தாய்க் கரைசல் க்யூ. முதல் 30 சி.

முக்கியக் குறிப்பு – அஸ்குலசில் மலக்குடலில் சிறு குச்சிகள் உள்ள உணர்வு.   ரடானியாவில் மலக்குடலில் உடைந்தக் கண்ணாடித் துண்டுகள் உள்ள உணர்வு.  அஸ்குலசில் தொண்டையில் வறட்சி, எரிச்சல், வீக்கமின்மை, நாருள்ள சளி இருக்காது.  காலி பைக்ரோமில் பிசினும் நாருள்ள சளி இருத்தல்.

ஒ.கு.ம. – ஆலோ, காலின்சோ, மெர்க்குரி, நக்ஸ்வாமிகா, போடோ, சல்பர்.

பூ – கார்போ வெஜ், லாக்கசிஸ், மூரி.ஆசிட்.

உ – ஆலோ, காலின்சோ, பல்ஸ்சடில்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக