புதன், 18 ஏப்ரல், 2018

ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி புத்தகங்கள் ஒரு பார்வை



ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்களை மருத்துவராகஆசிரியராக அறிந்த பலருக்கு அவர் ஓர் சிறந்த எழுத்தாளர் என்பது தெரியாது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்அவை ஒவ்வொன்றும் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். அவற்றை பற்றி சிறு அறிமுகம்.



பழ,வெள்ளைச்சாமி நூல்கள்:
  • 1.  A Brief Introduction to Homoeopathy 
  • 2.   ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?
  • 3.   ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு
  • 4.   ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
  • 5.   ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
  • 6.   ஹோமியோபதி ஓர் அறிமுகம்
  • 7.   மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம்
  • 8.   திருமணமுறை மாற்றப்படவேண்டும்
  • 9.  ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம்
  • 10. ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
  • 11.  ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள்
  • 12.  அன்பே கடவுளின் நியதி
  • 13.  மனிதத்துவம்


நான் முதலில் படித்து வியந்த புத்தகம் மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் என்ற புத்தகம் தான். இந்த புத்தகத்தின் முன்னுரையில் ஐயாவின் வகுப்புகளும் அப்ரோச்சின் பிரச்சாரங்களையும் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள்  கேரள ஆன்மீக குரு நாராயண குருவின் சேவையோடு ஒப்பிட்டு இருப்பார். அது சத்திய உண்மை.


மேஜர் தி.சா.இராஜூ அடிக்கடி தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய கெண்ட் ரெப்பர்ட்டரியையே பார்த்திராத எனக்கு ஐயாவின் இந்த புத்தகம் எனக்கு மிகவும் உதவியது.
கெண்ட் ரெப்பர்ட்டரி மேல் தீராத ஆர்வம் உண்டாகி அதன் தேவையை நான் நன்றாக உணர மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் எனக்கு பேருதவியாக இருந்தது.
இந்த புத்தகத்தில்
  •   மருந்துகாண் ஏடு என்றால் என்ன?
  •   அதன் தத்துவ பின்னணி வரலாறு வளர்ச்சி எப்படி உருவானது?
  •   மருந்துகாண் ஏட்டின் பயன் என்ன?
  •   புழக்கத்தில் உள்ள முக்கிய மருந்துகாண் ஏடுகள் பற்றிய விவரங்கள்…(SYNTHETIC முதல் SYNTHESIS வரை கம்ப்ளீட் மர்பி பதக் வரை)
  •   மருந்துகாண் ஏட்டின் வடிவமைப்பு பற்றிய தெளிவான விளக்கங்கள் (MIND.VERTIGO,HEAD.EYE.VISION.EAR.HEARING….)
  •   கெண்ட் மருந்துகாண் ஏட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
  •   குறிகளின் முழுமையை எவ்வாறு கணக்கிடுவது?(TOTALITY)
  •   நீக்க உதவும் குறியை(ELIMINATING SYMPTOM) எவ்வாறு தேர்வு செய்வது?
  •   கெண்ட் மருந்துகாண் பேரேட்டில் என்னென்ன குறைகள்??

என எளிதில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்.. சிறந்த ஹோமியோபதி மருத்துவனாக விரும்பும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டியது அவசியம்.

இரண்டாவது புத்தகம்

ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
சின்னஞ்சிறிய இந்த புத்தகம் மனக்குறிகளின் முக்கியத்துவத்தை எனக்கு புரியவைத்தது.
 அடிபட்டால் ஆர்னிகா, புண் ஆற காலண்டுலா, வயிற்றுப்போக்குக்கு போடாபைலம் மூட்டுவலின்னா ரஸ்டாக்ஸ், பிரையோனியா என இப்படி நோய் அடிப்படையில்  மருந்துகளை கொடுத்தும் பலன் கிடைக்காதபோது ஹோமியோபதி சரியான மருத்துவம் இல்லையோ என சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் அடிபட்ட ஒரு பாட்டிக்கு  அவரின் மனக்குறியான மத்தவங்களுக்கு நான் பாரமாக போயிடுவேனோன்னு பயமா இருக்குப்பா என கூறியதை வைத்து  ரபேனஸ் கொடுத்து உடனேயும் முழுதுமாய் வலி குறைந்தது என விவரித்திருப்பார். அப்போதுதான் ஹோமியோபதியின் முழு பரிமாணமும் எனக்கு புரிந்தது.
மனக்குறிகளின் பங்கு நூலில்
என்னென்ன வகையான மனக்குறிகளை நாம் அடையாளம் காணவேண்டும் என்பதை இந்த சிறு நூலில் அருமையாக விளக்கியிருப்பார்.
1.நோய் ஏற்படுத்திய மனநிலை (pathological mind)
2.நோய் ஏற்பட காரணமான மனநிலை (causative mind)
3. இந்த இரண்டும் சரிவர கிடைக்காதபோது நோயுற்ற மனிதனின் மாறாத தனித்துவமான சுபாவம் (State and disposition)
என மன நிலையை எவ்வாறு அறிவது என துயரர் சரிதையுடன் விளக்கியிருப்பது எவருக்கும் புரியும்.
இதுமட்டுமில்லாமல் மருந்து தேர்வுக்கு துயரரின் மாறுபட்ட மனநிலையை (alterd state of mind and disposition) எடுப்பதா அல்லது இயல்பான சுபாவத்தை எடுப்பதா என்ற சிக்கலுக்கு ஹானிமனின் ஆர்கனானில் இருந்தே மணிமொழி 210லிருந்து 214 வரை விளக்குவார். இந்த மணிமொழிகளையே இன்றைய டாக்டர் சேகலில் இருந்து இராஜன் சங்கரன்,பிரபுல் விஜயகர் வரை அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி புதிய வழிமுறைகளை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்துக்கும் தீர்வு ஆர்கனானிலே இருக்கிறது என்று ஐயா பழ.வெள்ளைச்சாமி உறுதியாக கூறுகிறார்.
இந்த புத்தகத்தில் முத்தாய்ப்பாக மருந்து தேர்வுக்கென ஒரு எளிய வழிமுறை ஒன்றை கூறியிருக்கிறார்.
1.   நோய் ஏற்படுத்திய மனநிலைக்குறி (PATHOLOGICAL MIND)
2.   நோய்க்கு காரணமான மனநிலைக்குறி (CAUSATIVE MIND)
3.   துயரரின் சூழலிய தட்பவெப்ப தகவமைப்பு (THERMAL CONDITIONS)
4.   துயரரின் உணவுப்பழக்கம், விருப்பு வெறுப்பு (DESIRE&aversions)
5.   தனித்துவமான நோயியல் குறிகள் (pathological peculiarity)
ஆக  இவற்றை அறிந்து இதன் முழுமைக்கு மருந்து கொடுத்தால் ஹானிமன் கூறிய இயற்கை தத்துவத்தின்படி நலமாக்கல் நடைபெறும் என ஆய்ந்து கொடுத்திருக்கிறார். இதே புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் உலகப்புகழ் பெற்றிருக்கும்

மூன்றாவது புத்தகம்

50மில்லிசெமல் வீரியம்
டாக்டர் ஹானிமன் தனது ஆர்கனான் 6ஆம் பதிப்பில் கூறியிருப்பதாவது, முந்தைய செண்டிசிமல் வீரியத்தில் உள்ள குறைகள் களையப்பட்டு முழுமையான வீரியப்படுத்தல் முறையமுழு நிறைவு பெற்ற முறைஎன்று அறிமுகப்படுத்தினார்.  இது  நோய் அதிகரித்தல் ஏற்படாதது. மருந்தை அடிக்கடி கொடுக்க முடியும்.

ஆனால் இந்த 50மில்லெசிமல் வீரியத்தை மருத்துவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த வீரிய மருந்துகளை பயன்படுத்தி வெற்றி பெற்ற துயரர் சரிதைகள் நமது முன்னோர்களின் பதிவுகளில் இல்லை. இந்த வீரியப்படுத்தல் பற்றி ஹோமியோபதியருக்கு இருந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஐயா PLV இந்த புத்தகத்தை எளிமையாக தந்திருக்கிறார். அழகிய தமிழில் 50 மில்லெசிமல் வீரியம் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவே ஆகும். 50 மில்லெசிமல் வீரியத்தை பற்றி ஐயங்களை தெளிவிக்கிறது இந்நூல்.

நான்காவது புத்தகம்

ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்ட ஸ்கால்ட்டன் புத்தகங்களை தமிழகத்துக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஐயா PLV. ஸ்கால்ட்டனின் இரண்டு புத்தகங்களையும் வாசித்து ஸ்கால்ட்டன் முறையை பயன்படுத்தி பல்லாயிரம் பேருக்கு மருந்து கொடுத்து வெற்றி கண்டவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள். தான் அனுபவித்ததை ஹோமியோபதியர் அனைவரும் பயன்பெறவேண்டுமென அந்த புத்தகத்தின் சாரத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்.


 ஸ்கால்ட்டன் தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்தவர்.ஹோமியோபதியர்கள் தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை  வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
  ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியிருப்பார் ஸ்கால்ட்டன்.
அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக, சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.  ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.  ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.  அவனுக்கும்- குடும்பத்திற்கும், அவனுக்கும்-சமுகத்திற்கும், அவனுக்கும்-தொழிலுக்கும், அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும், அவனுக்கும்-ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
   ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்.  சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை ஸ்கால்ட்டன் மூலமாக நமக்கு கற்பிக்கிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த ஐயா பிஎல்வி அதன் சாரத்தை ஸ்கால்ட்டனின் கனிமங்கள் என்ற சிறுநூலில் தந்துள்ளார்.

ஐந்தாவது புத்தகம்

ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
நாம் தமிழில் நிறைய மெட்டீரியா மெடிக்கா நூல்கள் தான் படித்து இருக்கிறோம்.  ஹோமியோபதி தத்துவம் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் இல்லை அந்த குறையை தீர்க்க வந்த அற்புத புத்தகம் இதுவாகும்.
Image may contain: text
இன்றைய ஹோமியோபதியருக்கு உள்ள சிக்கலே தத்துவத்தை அறியாததால் தான். இந்த புத்தகம்  அறியாமையை போக்குகிறது. ஹோமியோபதி தத்துவமான ஆர்கனானை பிழிந்து அதன் சாறை தந்திருக்கிறது இந்த புத்தகம். ஹோமியோபதியை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது. ஹோமியோபதி என்ற வாழ்கலை விஞ்ஞானத்தை அறிந்துகொள்ள இந்த ஒரு புத்தகமே போதுமானது.
இந்த புத்தகம்
  • ·  நாம் ஏன் ஹோமியோபதி படிக்கவேண்டும்?
  • ·  இதன் தத்துவம் என்ன? ஹோமியோபதி தத்துவம் இயற்கையுடன் ஒத்துப்போகிறதா?
  • ·  துயரரை எவ்வாறு ஆய்வு செய்வது? என்னென்ன கேள்விகள் கேட்பது?
  • ·  துயரர் ஆய்வு முடிந்தபிறகு எவ்வாறு குறிகளை வகைப்படுத்துவது?
  • ·  அந்த குறிகளில் சிறப்பியல்புக்குறிகள் எவை?
  • ·  எந்த குறிகள் துயரரை தனித்துவப்படுத்துபவை?
  • ·  ஏன் துயரரை தனித்துவப்படுத்தவேண்டும்?
  • ·  ஸ்கால்ட்டன் அவர்கள் கூறியதுபோல ஆர்கனான் தத்துவம் காலாவதியாகிவிட்டதா?
  • ·  பலவிதமான புதிய வழிமுறைகள் மருந்துத்தேர்வுக்கு தற்போது உலா வருகின்றனவே. இவை ஆர்கனானுக்கு அப்பாற்பட்டவையா?
  • ·  மருந்து தேர்வுக்கு மனக்குறிகள் மட்டும் போதுமா?
  • ·  இரண்டாவது முறை மருந்து தரும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன? மருந்தை எப்போது மாற்றுவது?

என நமக்கு ஹோமியோபதி தத்துவத்தில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்த புத்தகம். என்னை பொறுத்தவரையில் புதிதாக ஹோமியோபதி படிக்கவரும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

அடுத்த முக்கிய புத்தகம்

திருமணமுறை மாற்றப்படவேண்டும்
நோயிலிருந்து மனிதனை விடுவிப்பது மட்டும் ஒரு மருத்துவருடைய பணியல்ல.ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்துகின்ற காரணிகள் எவை என்பதை அறிவதும், அவற்றை எவ்வாறு ஆரோக்கியமான மனிதர்களை பாதிக்காவண்ணம் நீக்குவது என்பதை அறிவதும் மருத்துவருடைய கடமையாகும்.
                                                   -ஆர்கனானின் ஆறாம் பதிப்பு மணிமொழி 4

 இந்த பணியினை மிகச்சரியாக செய்துவருபவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அதற்கு உதாரணம் தான் இந்த புத்தகம்.
  இன்று நிலவி வரும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணம் இந்தச் சமூகச்சூழல். வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம், சாதி, மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் மற்றும் பல.இப்படியான சமூகம் மாறாமல் மனிதனை வெறும் ஹோமியோபதி மருத்துவத்தால் மட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாது.மேலும் மேற்கூறிய காரணங்கள் நோயைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் காரணிகளாக மட்டும் இல்லாமல், நோயைத் தடுக்கும் தடைக்கற்களாகவும் இருக்கின்றன. இதிலிருந்து நோயுற்ற நிலையிலுள்ள மனிதனை நோயற்ற நிலைக்கு மாற்ற வேண்டுமென்றால் இந்தச் சமூகம் மாறவேண்டும்! இதை யார் மாற்றுவது? மற்ற எவரையும் விட ஹோமியோபதி மருத்துவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
  கடந்த 30 ஆண்டுகளாக தன்னிடம் வந்த நோயாளிகளை ஆய்வு செய்ததில் – பெரும்பாலானவர்களின் நோய்களுக்கான அடிப்படைக் காரணம் தற்போது சமூகத்தில் நிலவி வரும் திருமணமுறைதான் என்பது,  அவரது  ஆய்வில் தெரிய வந்த உண்மையாகும். இந்தத் திருமணமுறை மாற வேண்டும். அவ்வாறு மாறினால் நாம்  இந்த சமுதாயத்தை குறிப்பாக பெண்களை பல வகையான நோய்களிலிருந்து விடுவிக்கலாம். இந்த திருமணமுறையால் என்ன பாதிப்பு, எப்படி பாதிப்பு? எப்படி இந்த திருமணமுறையை மாற்றுவது? என இந்நூலில் விரிவாக அலசுகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.

இறுதியாக

மனிதத்துவம்
இன்றைக்கு மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், சமூகச்சீர்கேடுகள், ஆன்மீக மோசடிகள், மக்களின் குணக்கேடுகள் மற்றும் ஊழல்,இலஞ்சம்,பொய்புரட்டு,பசிபட்டினி, கொலைகொள்ளை,வன்புணர்வு என மனிதன் சீரழிந்து கிடக்கிறான். இவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு விடுதலை அடைவது, மதங்கள் ஏன் அன்பை போதித்தன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
மிருகங்கள் அனைத்தும் தன் குணத்தில் ஒன்றுபோல் இருக்க மனிதன் மட்டும் ஏன் ஒன்று போல் இல்லை..
மனிதனுக்கு என தனித்துவமான குணம் இருக்கிறதா?
இருந்தால் அது என்ன?
அந்த குணத்தை மனிதன் ஏன் மறந்தான்?
கடவுள் பற்றி,
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
நமது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
  கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?
மனிதத்துவம் க்கான பட முடிவு



கடும்தவம் புரியும் தவசிகள் மட்டுமே ஞானமடைய முடியும் என சொல்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சாதாரண மனிதன் என்னால் ஞானமடைய முடியுமா? அது இருக்கட்டும், முதலில் ஞானம் என்றான் என்ன? அதை ஏன் மனிதன் அடையவேண்டும்,அது அடையக்கூடிய ஒன்றா?
சமூகத்தை ஒதுக்கிவிட்டு தியானம் செய்வது சரியா?
மனிதனுக்குள் ஏன் இந்த பிரிவினை...
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
அறிவியலின் பேரில் ஏன் இத்தனை சுரண்டல்கள்
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
நான் மதங்களை பின்பற்றுவதா?
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே..
மருத்துவனான நான் என்ன செய்யவேண்டும் ??/
என்ற எனது எல்லாக்கேள்விகளுக்கும் இந்த சிறுநூல் விடையளித்தது
 
இந்த நூல் என்னுடைய கேள்விகளுக்கு விடையை மட்டுமல்ல
 
எனது உள்ளத்தில் ஒரு பூகம்பத்தை  ஏற்படுத்திவிட்டது.
உங்களுக்குள்ளும் அதேபோல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தகத்தால் முடியும்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி அவர்களின் 
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
ஐயா அவர்களின் புகழை அவரின்  புத்தகங்கள் காலாகாலத்துக்கும் சொல்லும். ஐயா அவர்களின் இலட்சியமான வீட்டுக்கு ஒரு ஹோமியோபதி மருத்துவரை உருவாக்கும் நோக்கம் நிறைவேற நாம் துணை நிற்போம். எங்களது ஆசான் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள் ஹோமியோபதிக்கும் இந்த தமிழ்ச்சமூகத்திற்கும் சேவை செய்து மென்மேலும் சாதனை பலபுரிந்து  பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம்வல்ல என் இயற்கை அன்னையை வேண்டி வணங்குகிறேன்.
திக்கெட்டும் ஹோமியோபதி பரவட்டும்!!
டாக்டர் ஹானிமன் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.
வாழ்க தமிழ்!!!
வெல்க தமிழ்!!!
***************

புதன், 4 ஏப்ரல், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4 - மேஜர் தி.சா.இராஜூ


நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3

மியாசங்கள் குறித்து என் ஆசான் அளித்த பலக் கருத்துக்களைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.  அவற்றை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதல் தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(PSORA MIASM)
கலை, இலக்கியம்,வாழ்வியல், சமயம் குறித்துச் சிறந்த கற்பனைகள், திட்டங்கள் இவரிடம் இருக்கும்.  ஆனால் அவரால் எதையும் செயல்படுத்த இயலாது.  அந்த அளவுக்கு அவர்களால் இயங்க முடியாது. (Rugged PhilosoPher Kent).
கல்லை வயிரமணி ஆக்கல்-செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்க வேறாக்கல்-வெறும் மண்ணை
வெல்லத்தினிப்பு வரச்செய்தல் . . . . . 

எவ்வளவு அற்புதமான நற்பணிக் கற்பனைகள்?  ஆனால் நடைமுறையில் நிகழ்ந்தது என்ன?  டிராமில் பயணிப்பதற்காக செல்லம்மாள் கொடுத்த ஓரணாவுக்கு ஒரு மல்லிகைப் பூ மாலை வாங்கிக் கழுத்தில் தரித்துக் கொள்ளுவார் (அந்தப் பூக்காரியின் வியாபாரம் பெருக வேண்டும்!) திருவல்லிக்கணியிலிருந்து மௌண்ட்ரோடு அலுவலகம் வரை அந்த மகாகவி நடந்தே செல்லுவார்.  எந்தக் கற்பனையை அவரால் செயலாக்க முடிந்தது?  தமிழ் மக்கள் என்னுடைய கவிதைகளை தீப்பெட்டியைப் போல, மண்ணெண்ணையைப் போல, வாங்க ஓடி வருவார்கள் என்று அவர் நம்பினார்.  அவருடைய பாடல் தொகுதிகளை நான்கணா விலைக்குக் கூட வாங்க எவரும் முன் வரவில்லை. 
பாட்டாளிக்கு விடுதலை, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று பறையறிவித்து அதைச் செயலாக்கிய லெனின், பழமைவாதிகளின் பிடியிலிருந்து சமயத்திற்கு விடுதலை அளித்த முஸ்தபா கமால் பாஷா ஈழவர்களின் தன்மான உணர்ச்சியத் தட்டி எழுப்பி கல்வியிலும், சமயத்துறையிலும் அவர்களை மேம்பாட்டடையச் செய்த நாராயணகுரு, கடலுப்பைக் காய்ச்சி அதன் மூலம் விடுதலை உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டிய காந்தி அண்ணல் ஆகியவர்களிடம் கற்பனை மட்டுமின்றிச் செயல் திறனுமிருந்தது.

ஜெர்மன் நாட்டிலுள்ள மீசன் நகரில் வாழ்ந்த அந்த மேதை சக மருத்துவர்களாலேயே வெளியேற்றப்பட்டார்.  அவர் நம்பிக்கை இழக்கவில்லை.  வேறு நாட்டில் குடிபுகுந்தார்.  மருத்துவ உலகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  இந்த மனித உடலில் ஒரு ஜீவசக்தி உயிர் ஆற்றல் குடி கொண்டுள்ளது.  அது தன்னைத்தானே சீராக்கிக் கொள்ளும் திறனுடையது.  குறைகள் ஏற்படும்போது அவற்றைப் போக்க மிகக் குறைந்த அளவுள்ள மருந்தே போதும் என்று மெய்ப்பித்த மேதை டாக்டர்  ஹானிமன்.  இவரிடம் கற்பனை மட்டுமின்றிச் செயல் திறனும் இருந்தது.  கடின உழைப்பினால் அதை வளர்த்துக் கொண்டார்.  (உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?).

இரண்டாவது தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(SYCOSIS MIASM)
இரண்டாவது தோஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டவன் ஓர் ஆஷாடபூதி வெளிவேஷக்காரன்,  சமுதாய நெறிகளையோ, சமய அனுஷ்டானங்களிலேயோ அவனுக்கு மெய்யான ஈடுபாடு கிடையாது.  அதற்கான அடிப்படை நம்பிக்கை அவனிடம் இராது.  ஆனால் சிகை வளர்ப்பான்.  முகமயிர் நீட்டுவான்.  புறச்சின்னங்களை அணிவான்.  ஆனால் அகத்தூய்மை அவனிடம் இராது.  அவனுடைய வாழ்வே நடிப்பு தன்னலமே அவன் நோக்கம்.  இப்படி எத்தனை மக்களை, சமயவாதிகளை நாம் சந்திக்கிறோம்?  உரக்க அறிவித்தால் உதைக்க வரும் அடியாட்கள் அவனிடம் உண்டு.  எப்படியாவது சமுதாய அரசியல் வாழ்வில் அவன் முதலிடம் பெற வேண்டும்.  இதுவே அவனுடைய குறிக்கோளாக இருக்கும் (யாருக்கும் வெட்கமில்லை).
கடவுளுக்காக காவடி எடுப்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் விட துயருற்றவர்களுக்கு ஆறுதலும், உதவியும் அளிக்கும் அறிவுவாதி எவ்வளவோ மேலானவர்கள்.  அந்த அறிவுவாதியை நான் வணங்குகிறேன்.  (அதனால்தான் வள்ளலாரை வையகமே போற்றுகிறது.  ஆருயிர்கட்கெல்லாம் நாம் அன்பு செயல் வேண்டும்).

மூன்றாவது தோஷத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?(SYPHILIS MIASM)
மூன்றாவது தோஷத்தைச் சேர்ந்தவன் உலகம் பழிக்கும் வினைகளைக் கூசாமல் செய்வான்.  குடித்துவிட்டுச் சாக்கடையில் புரளுவான்.  பல தாரங்களை மணந்து அதை நியாயப்படுத்துவான்,  சமுதாய வழிகாட்டிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களும் இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.
எல்லாவற்றையும் அழித்துவிட வேண்டும்.  தீய்த்து விட வேண்டும் என்ற தீவிரமான கொள்கை.  எவரிடமும் இரக்கம் கிடையாது.  சுயநலமிதான் என்றாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் அஞ்சமாட்டான்.  பிறருடைய  அழிவில் அவனுக்கு ஒரு தீவிரமான வெறி,  ஆசை (அடால்ப் ஹிட்லர் இடி அமீன்).

என் ஆசான் கூறுவார்.  எவரையும் அவருடைய தீய செயல்களுக்காக வெறுக்காதே, பழிக்காதே அவர்கள் சில மியாசங்களினால் ஆட் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.  அவற்றைக் கட்டுப்படுத்த, அல்லது நீக்க என்ன வழிமுறைகள் பயன்படும் என்று எண்ணிப்பார்.  படி, உழை, விவாதி, விளக்கம் கிடைக்கும்.

முதல் மியாசத்தைச் சேர்ந்தவன் அழுக்கிலேயே உழலுவான்.  உடல், ஆடை, சுற்றுப்புறம் எங்கும் அழுக்கே குடி கொண்டிருக்கும் (அவன் உடலிலிருந்தே துர்நாற்றம் வீசும் போயரிக் -சாய்வெழுத்துக்கள்) நோய் வாய்ப்பட்ட சில குழந்தைகளின் உடலிலே புளித்த காடியின் நெடியடிக்கும்.

என் ஆசான் உரைப்பார்.  அவனுடைய உடலும், சுற்றுப்புறமும் மட்டும் அல்லாமல் அவனுடைய உள்ளமும் அழுக்காக இருக்கும்.  கந்தகத்தையும், சிரங்கு பொருக்கையும் கொடுத்து அவன் உடல் உள்ளம் இரண்டையுமே சீராக்க முயற்சி செய்.  தேவையானால் சுண்ணாம்பையும் சேர்த்துக் கொள் (சல்பர், ஸோரினம், சல்காரியா).
Image result for TS IYER BEGINNER GUIDE OF HOMOEOPATHY

மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு. டி.எஸ். ஐயர் (சுப்பிரமணிய ஐயர்) இவ்வாறு எழுதுகிறார்.  பிறந்த குழந்தைக்கு இரு நூறாவது வீரியத்தில் ஊசி முனையளவு கந்தகத்தைக் கொடு.  மூன்றாவது மாதம் அதே அளவு கல்காரியா மட்டும் போதும்.  குழந்தையை எந்த நோயும் அணுகாது.  இரண்டுமே ஸோராவின் வைரிகள்.  இரண்டும் மிகக் குறைந்த அளவு-கூடவே உயர்ந்த வீரியம்.

விஞ்ஞான உலகம் சர்.சி.வி. ராமனை நன்கறியும்,  அவர் விஞ்ஞானத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர்.  அவர் தமது துணைவியார் லோக சுந்தரியுடன், மருத்துவ ஆலோசனை பெறும்பொருட்டு மயிலாடுதுறைக்கு வருவார் என்று அண்மையில் அறிந்து கொண்டேன்.  இருவரும் நெருங்கிய நண்பர்கள் (கற்றாரைக் கற்றாரே காமுறுவர்) உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஹோமியோபதி மருத்துவத்தின் மேன்மை பற்றி உணர்ந்து கொண்டு அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சியும்,  பெருமிதமும் அடைந்தேன்.  உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு.
Image result for rahul sankrityayan
ராகுல் சாங்கிருத்யாயன்

இந்த நாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புரட்சிகரமான எழுத்துக்களைப் படைத்தவர் ராகுல் சாங்கிருத்யாயன், அவர் உத்திரப்பிரதேசத்திலுள்ள மஸுரியைச் சேர்ந்தவர்.
அவருடைய இறுதி நாட்களில்தான் எனக்கு அவரிடம் அறிமுகம் கிடைத்தது.  அவருடைய பரிவுரையின்படி நான் தவத்திரு தலாய்லாமாவைச் சந்தித்தேன்.  அப்போது அவருடைய குடியிருப்பில் மருத்துவம் புரியும் பல லாமக்களின் தோழமை எனக்குக் கிடைத்தது.  அவர்கள் ஆயுர்வேதத்தில் பெரும் நம்பிக்கை உடையவர்கள்.  அவர்களைப் பொறுத்த வரையில் மனித உடலுக்கு மருந்தே தேவையில்லை.  மணி, மந்திர, அவுடதம் என்பதுதான் அவர்களுடைய கோட்பாடு.  அவுடதம் என்பது மூன்றாவது தரத்தது என்பதே அவர்களுடைய கருத்து.
மந்திரம் வலிமையாம் என்ற மகாகவியின் வாக்கிற்கு நான் தலாய் லாமா வசித்த மக்ளாயிடு கஞ்சில் (தரம்சாலா) பொருள் புரிந்து கொண்டேன்.
அது என் வாழ்க்கையின் பிறிதோர் அத்தியாயம்.
 
                                                                    -

நமது இந்தியத் திருநாட்டில் வடமேற்கு எல்லையில் தாக்ஸிலா என்றொரு நகரம் உள்ளது.  (தற்போது பாகிஸ்தான்).  அதன் தொன்மையான பெயர் தக்ஷசீலம்.  அங்கே சென்று அதன் இடிபாடுகளைக் காணும் பேறு எனக்குக் கிட்டியது.  மூவாயிரம் ஆண்களுக்கு முன்பு மிகப் பெரும் பல்கலைக்கழகம் ஒன்று அங்கு செயல்பட்டது.  கணித இயல், வேதியியல், மண்ணூல், வானவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிவை அங்கே பயிற்றுவிக்கப்பட்டன.  உலகின் பல பாகங்களிலிருந்தும் அங்கு மாணவர்கள் தங்கியிருந்து பயின்றனர்.  அவர்களில் ஒருவர் ஜீவகன் (ஜீவகன் குமாரப்பிரியதா) ஏழாண்டுகள் மருத்துவம் பயின்ற பிறகு அவருக்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது.  இந்த வையகத்தில் மருத்துவப் பயனில்லாத பொருள் ஏதாவது உள்ளதா என்பது கேள்வி.  ஆராய்ச்சியை மேற்கொள்ள அவருக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540


ஜீவகன் நாடு முழுவதும் சுற்றி அலைந்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  பல சோதனைகளை மேற்கொண்ட பிறகு உலகில் பயனில்லாதது என்று எப்பொருளுமில்லை என்று தமது முடிவை அறிவித்தார்.  அதற்குப் பிறகே அவருக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த மருத்துவர் புத்த சமயத்தைத் தழுவினார்.  பீஹாரிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் போதித்தார்.  பல மருந்துகளைக் கண்டுபிடித்து பிணியாளர்களைச் சீராக்கினார்.  பல மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கினார்.  ராஜ்கிர் என்ற (ராஜக்கிருகம்) தலத்தில் அருகில் வேணுவனம் என்ற (மூங்கில் காடு) இடத்தில் கௌதம புத்தர் வசித்து வந்தார்.  இந்த மருத்துவருக்கு அந்தப் பேரருளாளரின் அறிமுகம் கிட்டிற்று.  அவருக்கே ஜீவகன் மருத்துவம் புரிந்ததாக ஏடுகள் கூறுகின்றன.  நமது மருத்துவ வரலாறு அத்தகைய தொன்மை வாய்ந்தது.  வெறும் மணல், கரித்துகள் ஆகியவற்றில் அற்புதமான மருத்துவ ஆற்றல் மறைந்திருப்பதை மேதை ஹானிமன் மெய்ப்பித்தார்.  அவருக்குப்பின் வந்த பெருந்தகையர்கள், நோய்க் கழிவுப் பொருட்களிலும் மருந்தாற்றல் உள்ளது என்ற பேரதிசயமான செய்தியை நிரூபித்தனர்.  ஜீவகனின் கூற்று ஒரு பரம சத்தியம். 

இன்று மெடோரினம் என்ற நோய்க் கழிவுப் பொருளைப் பற்றி உரக்கச் சிந்திக்கிறோம்.  இதன் மூலப் பொருள் கொனோ (GONO) என்பதாகும்.  இந்தக் கிரேக்க மொழிச் சொல்லுக்கு விதை என்பது பொருள்.  இந்த விதை அல்லது விந்து ஆண் மகனின் விதைப் பையில் உற்பத்தியாகிறது.  இதைப் பெண்ணின் சினைப் பையில் செலுத்தினால் மனித உயிர் உண்டாகிறது.  இந்த விதை புணச்சியின் போது மட்டுமே வெளிப்பட வேண்டும்.  அப்படியின்றி மற்ற வேளைகளில் கசிந்தால் இதைக் கொனேரியா என்று அழைப்பார்கள்.  ஓரியா என்ற சொல்லுக்குக் கசிவு, ஒழுக்கு என்று பொருள் (லூக்கோரியா, டயோரியா, பயோரியா ஆகியவை எடுத்துக்காட்டுகள்).
18-25 வயதில் காரணம் தெரியாத சோர்வினால் அவதிப்படும் இளைஞர்கள் என்னிடம் சிகிச்சைக்கு வந்தால் அவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது விந்து வெளிப்படுகிறதா? என்பதாகும்.
அப்படி இருப்பது உறுதியானால் அவர்களைத் தனியே அழைத்துச் சென்று மீண்டும் கேட்பேன்.  விந்துவைப் பலவந்தமாக நீக்கும் பழக்கம் இருந்ததா? இருக்கிறதா?
Image result for கொனேரியா நோய்

அறுபது விழுக்காட்டு அன்பர்கள் இதை ஒத்துக் கொள்ளுவார்கள்.

நமது திரைப்படங்களும், புதினங்களும் பாலுணர்வை மிகுதியாக்குகின்றன.  பல ஏடுகளில் குறை ஆடை அணிந்த படங்கள் வெளியிடப்படுகின்றன.  அவைகளைக் காணும் இளைஞர் சமுதாயத்தினருக்கு எண்ணங்கள் திசை மாறி விடுகின்றன.  அதன் தீய விளைவிற்று நமது தூணியில் அற்புதமான மருந்து உள்ளது.  அதன் மூலம் தாவரம், செம்மை மரம் (CHASTE TREE) என்றே அதற்குப் பெயர்.
இப்படி விந்து ஒழுகும் நிலையைச் சித்த மருத்துவம் மேக வெட்டை நோய் என்று குறிப்பிடுகிறது.  ஹோமியோபதியில் எந்த நோய்க்கும் பெயர் கிடையாது.

1879-ஆம் ஆண்டில் ஆல்பர்ட் கீசர் என்ற ஜெர்மானிய மருத்துவர் மேக வெட்டை நோய்க்கு காரணம் கண்டுபிடித்தார்.  அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  ஆனால் அந்த ஒழுக்கிலுள்ள சீழில் அற்புதமான மருந்து ஒளிந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.  இந்தச் சீழை வீரியப்படுத்தி நோயுற்றவருக்குக் கொடுத்தால் எலும்பு மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தையும் நோவையும் குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவம் மெய்ப்பித்திருக்கிறது.  இந்த மருந்தின் பெயர் மெடோரினம் (MEDORRHINUM).

இந்த நோயுள்ள பெற்றோர்களின் வழியாக அவர்களுடைய சந்ததிகளுக்குக் கடுமையான மூட்டு வீக்கமும், நோவும் வரக்கூடும்.  இந்த நோய் பிற காரணங்களினாலும் வரலாம்.  நோய்ப் பாரம்பரியம் இருக்குமானால் அவர்களை இந்த மருந்து குணப்படுத்துவதுடன் இது வராமல் தடுக்கவும்  உதவி செய்யும் என்ற உண்மையை என் ஆசான் நிரூபனம் செய்துள்ளார்.
இந்த மருந்தின் ஆளுகைக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே அவதிப்படுவார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து.  அது தவறான முடிவு என்று எழுதுகிறார் மேதை கெண்ட்  (பக் 728) இந்த நோயுற்றவர்களுக்கு இரவிலும் துயரம் வரலாம்.

பல மருந்துகளின் இயல்புகளை முறைப்படுத்திய மருத்துவர் நாஷ் அந்த முறையை மெடோரினத்திற்குப் பயன்படுத்தவில்லை.  எனினும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.  இந்த நோயைப் பாரம்பரியமாகப் பெறாதவர்களுக்கும் இந்த மருந்து பயன்படுமா? என்பதே அந்த வினா,  தெரிந்தவர்கள் பதில் கூறட்டுமே என்பது அவருடைய கூற்று.
முப்பதாண்டுகள் மருத்துவ அனுபவத்திற்குப் பிறகு நான் உறுதி அளிக்கிறேன்.  நோய்ப் பாரம்பரியம் இல்லாதவர்களின் மூட்டு வலியையும் இது குணப்படுத்தும்.  

கை, கால்களையே அசைக்க முடியாத நிலையில் இருந்த ஒரு நடுவயது மாதின் நிலையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  தூஜாவின் (200) அடித்தளத்துடன் இதை இரு நூறாவது வீரியத்தில் கொடுத்தேன்.  ஒரே மாதத்தில் அவர் நடக்கத் துவங்கி விட்டார்.

பொதுவாக இதை மிக உயர்ந்த வீரியத்தில் தான் தர வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.  தேவையில்லை.  மாதத்திற்கு ஒருமுறை இரு நூறாவது வீரியத்தில் கொடுத்தாலே போதுமானது.

ஜீவகனின் மருத்துவக் கருத்துகளுக்கு நன்றி கூறுவோமாக!.
********************************************************************

செவ்வாய், 27 மார்ச், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3 - மேஜர் தி.சா.இராஜூ

                               நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம் 1
                              நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம்-2                                   
                             
                                                                         3.
நோய்க்கழிவுப் பொருட்களைப் பற்றிச் சிந்திக்கும் போது மியாஸங்களைப் பற்றி நமக்கு ஓர் அடிப்படையான கருத்து இருக்க வேண்டியது அவசியம்.  அப்போதுதான் ஒரு மருத்துவன் நோயின் வேரைக்  கிள்ளி எறிய முடியும்  `வேரும் வேரடி மண்ணும் வெந்து போக’ என்ற சொல்லோவியத்தைப் பயன்படுத்துகிறார் மகாகவி.  அதைச் சாதிக்க இந்த நோய்க்கழிவினால் மட்டுமே முடியும்.

உயிரினம் தோன்றிய போதே நோயும் உடன் தோன்றிவிட்டது என்பதுதான் உண்மை.  உயிரினம் ஆண் பெண் சேர்க்கையினால் உண்டாகிறது.  தாய் என்பவள் விளை நிலம்.  தந்தை விதையளிப்பவன் (கர்ப்பா தானம் என்று வேதங்கள் கூறும்) நிலத்தின் தன்மை பயிர்க்குண்டாகும்.  அதேபோல் விதையின் குணங்களையும் குழந்தை பெறும் இது அடிப்படைச் சத்தியம்.
பாரத நாடு பழம் பெரும் நாடு.  அதன் குரல் வேதங்கள்.  நான்காவது வேதமான அதர்வண வேதத்தின் ஒரு பகுதி  ஆயுர்வேதம்.  இந்த ஆயுர்வேதம் உயிர்கள் மூன்று தோஷங்களினால் பாதிக்கப்படுகின்றன என்று பகர்கிறது.  பித்தம், வாதம், கபம் (வெப்பம், காற்று, தண்மை) ஆகியவை அவை.  இவை மூன்றும் சீரான அளவில் இருக்க வேண்டும்.  அப்போதுதான் உயிர்களை நோய் வட்டத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று அது அடித்துக் கூறுகிறது.
தெய்வ வள்ளுவர் வேத காலத்திற்குப் பிற்பட்டவர்.  அவர் மருந்து என்ற தனி அதிகாரமே வகுத்திருக்கிறார்.  அந்தப் பத்துக் குறட்களில் மருத்துவ சாத்திரத்தையே பிழிந்து கொடுத்து விட்டார்.
அதில் முதற் குறளே,

மிகினும் குறையினும் நோய் செய்யும்
மேலோர் வளி முதலா எண்ணிய மூன்று

என்பதாகும்.  அவரும் இந்த மூன்று தோஷங்களைப் பற்றியே குறிப்பிடுகிறார். 

தமிழ் மருத்துவத்தின் மூலவர்களான போகர், தேரையர், புலிப்பாணி ஆகியோரும்  இதே தத்துவத்தைத்தான் எடுத்தியம்புகிறார்கள்.  அவர்களுடைய ஆழ்ந்த மொழியறிவின் காரணமாக அவர்கள் பயன்படுத்திய பரிபாஷைச் சொற்கள் நமக்கு விளங்கவில்லை.  தமிழ் அறியாதவர்கள் சித்த மருத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட அணுக முடியாது.




மேதை ஹானிமன் காலத்தால் பிற்பட்டவர்.  பன்மொழிப் புலவர்.  சமஸ்கிருதம் அவருக்குத் தெரியாது.  ஆனால அவர் பிறந்த மண்ணில் வடமொழிக் கருத்துக்கள் பரவலாக விரவியுள்ளன.  ஜெர்மனியில் ஒரு சாதாரண மாணவன் கூட இரகுவம்சம், காதம்பரி ஆகியவை குறித்து அறிந்திருப்பான்.  தமிழ் நாட்டில் அந்த மொழி அறிவை அடியோடு அழித்து விட்டோம்.  (வெல்க அறிவியக்கம்).  மேதை ஹானிமன் `நாட்பட்ட நோய்கள்’என்ற அற்புதமான நூலை நமக்கு அளித்திருக்கிறார்.  அவர் இந்த தோஷங்களை மியாஸம் என்று குறிப்பிடுகிறார். மியாஸம் என்பது கிரேக்க மொழிச் சொல்.  அதன் பொருள் தோஷம், குறைபாடு என்பதாகும் (MIASM) ஆதாரம்- ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக்-997).
இந்த மூன்று தோஷங்களை ஹானிமன், சோரா, சைக்கோஸிஸ், சிபிலிஸ் என்ற பெயரால் அழைக்கிறார்.  கூர்ந்து ஆராயும்போது ஆயுர்வேதக் கருத்துக்களைத்தான் அவர் தெரிவிக்கிறார் என்பது தெளிவாகும் என்றாலும், பெரும்பாலான நோயாளிகள் முதல் மியாசத்திற்கே ஆட்பட்டிருப்பதை அவர் அருளுகிறார்.
அன்பர்கள் பல வினாக்களை எழுப்பியிருக்கிறார்கள்.  ஒரு மனிதர் அல்லது மங்கை எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?  அப்போதுதானே அவருக்கேற்ற நோய்க்கழிவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.
Image result for பூங்காவனம் ஹானிமன் 
இதற்கு விடை தருவது சற்றுக் கடினமான செயல்தான் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.  மியாஸங்களைப் பற்றி ஆழ்ந்து படிக்க வேண்டும்.  அவற்றின் அடிப்படை இயல்புகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.   அறிந்தவர்களிடம் அமர்ந்து ஒப்புநோக்கி ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம்.  பிறகு தனது சுய அனுபவத்தாலும் இந்தக் கருத்துக்களை உரைத்துப் பார்க்க வேண்டும்.  அதன் பின்பு நமது செயல் முறைகள் வெற்றி அளிக்கும்.  அதில் ஐயப்பாட்டிற்கே இடமில்லை
`மியாசங்களைப்  புரிந்து கொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் மருத்துவர் நவநீதம் அவர்கள் கையடக்கமான நூல் ஒன்று எழுதியிருக்கிறார்.   தமிழர்களுக்கு அது பெரிய தொண்டு என்று நான் கருதுகிறேன்.  ஒரு மேன்மையான கருத்தை எளிய சொற்களால் விளங்கச் செய்வது ஒரு சிறந்த கலை.  அதைத் தமிழில் தருவது மக்களுக்குப் பெரிதும் பயன் தரும்.  அது அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது.  அதை நான் மதிக்கிறேன்.  பாராட்டுகிறேன்.


மற்ற முறைகளில் இல்லாத ஓர் அரிய தன்மை ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு.  ஒன்று-இது மனதை, எண்ணங்களை-உள்ளம் வெளிப்படுத்தும் குறிகளை ஏற்று, அதன் மூலம் ஒரு மருத்துவரை வழி நடத்கிறது.  இவ்வாறு வேறு எந்த முறையும் கூறுவதாகத் தெரியவில்லை.  அடுத்து உடலின் இடது, வலது பக்கங்களுக்கான மருந்துகளை இந்த மருத்துவம் மட்டும்தான் பேசுகிறது.  நான் கோட்டக்கல் மருத்துவமனையில் தங்கி அவர்களுடைய செயல்முறைகளைக் கண்டறிந்தேன்.  பல சிறந்த சித்த மருத்துவர்களை அணுகி அவர்களிடம் பாடம் கேட்டேன்.  அந்த மருத்துவ நூல்களையும் படித்தேன்.  அவர்களில் எவரும் உடல் பகுதிகளுக்கு (இடம்-வலம்) ஏற்ற பாகுபாடுகளைக் கூறவில்லை.

அல்லோபதி மருத்துவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது.  அவர்கள் சந்திரனின் கலைகளுக்கும், நோய்க்குறிகளுக்கும் தொடர்பிருப்பதாகவே ஒத்துக் கொள்ளுவதில்லை.   இது குறித்த தனி ஆராய்ச்சி நூல் ஒன்றே ஹோமியோபதியில் உள்ளது.

Image result for CM BOGER MOON PHASE

`கட்டிகள், மருக்கள் ஆகியவை உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைக் கரைக்கத் தேய்பிறையைத் தேர்ந்தெடு, பஞ்சமி மருத்துவத் துவக்கத்திற்கு உகந்த நாள்’ என்று என் ஆசான் கூறினார். 

சிறுநீர்ப் பாதையின் உட்புறத்தில் பூக்கோசு போன்று மரு ஒன்று கிளைத்திருந்ததை அது தீய்த்து விட்டது.  மருந்து கல்கேரியா ப்ளோரா, ஏணி முறையில் மூன்று நாள் இடைவெளியில், தொடர் மருந்து லூட்டிகம்(சிபிலினம்) 200 இரண்டே மாத்திரைகள்.
நோய்வாய்ப்பட்ட இளைஞரைச் சிகிச்சைக்கு முன்னும், பின்னும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த நிபுணர் `அறுவை சிகிச்சை இல்லாமல் இது எப்படி சாத்தியமாயிற்று’என்று வியந்து போனார்.

ஆகவே முடிவு.  மியாஸங்கள் உள்ளன.  தேவையானவை நம்பிக்கை, பொறுமை, உழைப்பு இவை பரம சத்தியங்கள்.

                     ******************************************

வியாழன், 15 மார்ச், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2 - மேஜர் தி.சா.இராஜூ

                                                           

நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம் 1.

                                                                         -2-
கழிவுப் பொருட்களும் சிறந்த மருந்தாகும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று முன்னரே எண்ணியிருந்தேன்.  அன்பர்கள் தரும் ஊக்கம் அந்தச் செயலை மேலும் விரைவுபடுத்தும்.  ஆழ்ந்து ஆராயப்படுத்த வேண்டிய அறிவியல் துறை இது.

உடலின் கழிவுப் பொருளான மலம், சீழ், சிறுநீர், வியர்வை, கண்ணீர், எச்சில் ஆகியவை அனைத்துமே சிறந்த மருந்துகளாகப் பயன்படும். 
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் பாட்ச் (1880-1936) இது குறித்து நிறையவே சிந்தித்திருக்கிறார்.  அவரை முதலில் ஆங்கிலேயர்கள் போற்றினர்.  பின்னாளில் அவரை எள்ளி நகையாடினர்.  மேதை ஹானிமன் தமது பிறந்த மண்ணில் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  அவர் ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகருக்கு வந்து மருத்துவத் தொண்டாற்றினார்.  பெறும் புகழ் ஈட்டினார்.  இங்கிலாந்துக்கும்  ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் எப்போதும் கடும் பகை.  அதன் காரணமாகவே ஆங்கிலேயர்கள் ஹோமியோபதி மருத்துவத்தைக் குறித்துப் பாராட்ட மறுத்தனர்.  பங்காளிக் காய்ச்சல் உலகில் எல்லைப் பகுதிகளிலும் உண்டு.

பாஸிலினம், டியூபர்குலினம், டியூபர்குலினம் பொவைனம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டுப் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் புருவங்களை உயர்த்தினார்) மெடோரினம், லூட்டிகம்(சிபிலினம்) ஆகியன குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சிலர் அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.  ஆனால் மார்பிலினம், மாலண்டரினம், கார்ஸினோஸின், ஹைட்ரோபோபினம், இன்ஃப்ளூன்ஸியம், பெர்ட்டுஸின், பெஸ்டினம், பைரோஜன், பாராடோடினம்  ஆகியவை குறித்து நம்மில் பலர் அறியார்கள்.  நம்முடைய மருந்துப் பெட்டிகளில் இவை இல்லை.

அண்மையில் வலிப்பு நோயால் அவதியுற்ற இளைஞர் ஒருவரை அவருடைய தந்தை அழைத்து வந்தார்.  எவ்வளவோ மருத்துவர்களை நாடிப் பெரும் தொகை செலவு செய்து பயன் காணாமல் என்னிடம் வந்தார்.  அவருடைய உடல் நலக் குறிப்பைத் தொகுத்தபோது அவருடைய ஏழாவது வயதில் தாளம்மை வந்த விவரம் தெரிந்தது.  தற்போது தாடைப் பகுதியில் நோவு இருக்கிறதா? என்று வினவினேன்.  எப்போதாவது வருவது உண்டு என்றும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் காய்ச்சல் வருவதாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

பிறகு என்ன? இரண்டு மாத்திரைகள் பாராடோடினம் 200.  தொடர்ந்து ஆறு நாட்களுக்குச் சீனி உருண்டைகள்.

கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறை கூட அந்த இளைஞருக்கு வலிப்பு நோய் திரும்பவில்லை.  பாரோடோடினம் வலிப்பு நோய்க்கு மருந்தாகுமா என்று என் சக மருத்துவர்கள் கடுமாக விவாதித்தனர்.

நாம் நமது கண்களையும், செவிகளையும் நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?ஒரு சுகவீனம் உடலில் ஆழப் பதிந்திருக்கிறது.  அது மீண்டும் அவ்வப்போது தலை தூக்குகிறது என்றால் அது நோயாளியின் சீரான இயக்கத்திற்குத் தடைக்கல்.  அதை நீக்கி விட்டால் அவன் நலம் பெறுகிறான்.  மற்ற முறையினர் இதை மறுக்கலாம்.  ஆனால் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

தாளம்மை குறித்து கல்கி வார ஏட்டில் சுவையான விவாதமே நிகழ்ந்தது.  அது ஒரு நோய்க்கிருமியினால் ஏற்படுகிறது என்று ஆங்கில மருத்துவர் ஒருவர் எழுதினார்.  நோய்க்கிருமிகளினால் ஏதும் ஏற்படாது.  ஏற்றவர் உடலில் நோய் அமைந்து கொள்ளுகிறது.  அதைத் துப்புரவு செய்ய நுண்ணுயிர்கள் வருகின்றன (கெண்ட் பேருரைகள் பக்.51) என்று நான் திருப்பிக் கொடுத்தேன்.  கல்கி பத்திரிகையினால் இதைச் செரித்துக் கொள்ள இயலவில்லை.  அதன் ஆசிரியரே அல்லோபதி மருத்துவம் பயின்றவர், விவாதத்தை வளர்த்தாமல் முடித்து விட்டார்.

நான் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு கழிவுப் பொருள் குறித்துக் கூற விழைகிறேன்.  அது பாஸிலினம்.  இதைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஜே. காம்ப்டன் பர்னட் காசநோயால் பீடிக்கப்பட்டவரின் எச்சிலிலிருந்து (கோழை) இது தயாரிக்கப்படுகிறது.  அடிக்கடி தடுமன் பிடிக்கிறது என்று தாயார் குறை கூறுவார்.  ``ப்ரைமரி காம்ப்ளெக்ஸ்’’(PRIMARY COMPLEX) என்று கூறி ஊசி போட்டுத் துளைப்பார்கள்.  குழந்தைகள் என்னைக் கண்டால் தாவி ஓடி வரும்.  நான் மீட்டா கோலி அங்கிள் (இனிப்புருண்டை தருபவர்).

சாதாரணத் தடுமன், இருமல், காய்ச்சல் ஆகியவைகளுக்குக் குறிகளை அனுசரித்து மெர்க்யூரியஸ், பாடியாகா, ஆர்ஸனிக்கம் ஆல்பம், பெட்ரோலியம் ஆகியவற்றில் ஒன்றைத் தருவேன். இவை வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவைகள்.  இந்தக் கொத்தில் எதைத் தர வேண்டும் என்று யோசித்தே செயல்படுவேன் என்றாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் இடையூடாக இரண்டு மாத்திரை பாஸிலினம் தரலாம்.  தர வேண்டும் என்பதே எனது பரிவுரை.   ஏனெனில் இது காச நோய்ப் பிரிவைச் சேராதவர்களுக்கும் நிவாரணம் தருகிறது என்று போயரிக் (பக்.101) எழுதுகிறார்.  ஆனால் இதை மறுமுறை தர வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.   இந்த மருந்தை ஒரு வார இடைவெளியில் கொடுத்தேன்.  அவருடைய பரம்பரையில் காச நோய் இருந்தது.  அவர் கடும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றினால் அவதிப்பட்டார்.  அவருடைய சளி வற்றி விட்டது.  இருமல் அறவே இல்லை.  காய்ச்சலும் அருகி விட்டது.  ஆனால் அவருடைய உடல் முழுவதும் வட்ட வட்டமான தடிப்புகள், மோதிர வளையம் போல கண் இமைகள் கூடப் பாதிக்கப்பட்டிருந்தன.  நான் உண்மையிலேயே பயந்து போனேன்.

நோயுற்றவரின் சுற்றத்தார் என்னைக் கடுமையாகச் சாடினார்கள்.  காச நோய் சருமத்தின் மூலமாக வெளிப்படக்கூடும் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

வங்காளத்தில் புகழ் பெற்ற மருத்துவர் கூறக் கேட்டிருக்கிறேன்.  ஒன்று ஆஸ்துமா அல்லது எக்ஸிமா ஏதாவது ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  வேறு வழியில்லை.
தொடக்கக் காலத்தில் நான் இதை நம்பியிருந்தேன்.  பின்னாளில் என் முடிவுகள் வேறு மாதிரியாகி விட்டன.  ஒரு சுகவீனம் அது நீக்கப்படக்கூடியதாக இருந்தால் முறையான ஹோமியோபதி மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும்.  மண்ணீரல், கணையம், ஆகியவைகள் நிரந்தரமாப் பழுதாகிவிட்டால் அப்போது சுவரில் முட்டிக் கொண்டு பயனில்லை.  நாம் நோயாளிக்கு உபசாந்தியாக ஏதாவது மருந்து கொடுத்து அவனுடைய துயரங்களைத் தணிக்கலாம்.  நிரந்தரமாகக் குணப்படுத்த இயலாது.  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மிகுந்த பொறுமை, கவனிப்பு, உழைப்பு ஆகியவை தேவை.  இவை எத்தனை பேரிடம் இருக்கிறது?  நோயாளி நம்பிக்கை இழந்து விடுகின்றானே? 

அவனுடைய சுற்றத்தார்களின் தாக்குதலை மருத்துவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  நாம் நமது எல்லைகளைத் தெரிந்து கொண்டு வரையறுத்து அதற்குள் வட்டாட வேண்டும்.

இந்த நோய்க் கழிவுப் பொருட்கள், நோயைத் தவிர்க்கும், கட்டுப்படுத்தும், சீராக்கும் அவற்றை அளவோடு பொறுமையுடன் கையாண்டோமானால் . . . 

*****
நோயின் கழிவே நோய்க்கு மருந்து தொடரும்.....