வியாழன், 14 மே, 2020

PLV அப்பா

 Dr Prema Gopalakrishnan MD (Homoeopathy)
Image may contain: 1 person, text
pazha.vellaichamy
ஓமியோபதி இளநிலை முடித்திருந்த நேரம். திண்டுக்கல்லில் மூன்று மருத்துவ நண்பர்கள் ஓமியோபதி தொடர் கற்றலுக்கான முயற்சியில், எங்களது கிளினிக்கில் மதிய இடை வேளைகளில் ஓமியோபதியின் பாடத்திட்டத்திற்குள் வராதவற்றை தேடி படித்துக்கொண்டிருந்தோம்.
இதை அறிந்த பழ.வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் என்னை விட்டுவிட்டு நீங்கள் மூவரும் மட்டும் படிப்பதா என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று தனது இல்லத்தில் படிக்க மூவரையும் அழைத்தார்.
மற்ற இருவரும் அவருக்கு நெருக்கமானவர்கள். எனக்கோ அப்போதுதான் அறிமுகமாகிறார்.
ஒரு தயக்கத்துடன் தான் நண்பர்களுடன் சென்றேன்.
மதியநேர படிப்பு காலைநேரமாக மாறியது.
அதிகாலையில் எழுந்து தனது கடமைகள், நடைபயிற்சி அனைத்தும் முடித்துவிட்டு எங்களது வருகைக்காக காத்திருக்கும் 60 வயது இளைஞரை பார்த்து, இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பும் வேகமும் ஒரு மாணவனைப்போல மேவும் மேலும் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கும் அவர் எனக்கு ஆச்சரயத்தை அளித்தார்.
ஓமியோபதி வெறும் மருத்துவமன்று. அது இவ்வுலகின் சமூகவாழ்வியலின் பரிமாணங்களை(dimensions) சொல்லிக்கொடுக்கும் ஒப்பற்ற கல்வியாகும். ஆதலால் கலந்துரையாடலுக்கு என்றும் எங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
மகளே என்ற சொல்லுக்கு மறுசொல் இல்லாமல் எனை எப்போதும் விழிக்கும் PLV சார்,
ஒரு மழைக்கால காலையில், மழையினால் தாமதாக வந்த எங்களைப்பார்த்து நீ என்ன உப்பு மூட்டையா மழையில் கரைந்துவிட.. அல்லது காளானா முளைத்துவிட.. மழை பெய்தால் என்ன.. படிக்க தாமதாக வரலாமா என அன்போடு கடிந்து கொண்டபோது,
PLV அப்பா ஆனார்.
ஓமியோபதியையும் இயங்கியலையும், வள்ளுவத்தையும் ஒருகோட்டில் இவர் பேச மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருக்கலாம்.
சில மாதங்களாக எனது தனிப்பட்ட விருப்பத்தில், "தமிழகத்தில் ஓமியோபதியும் கம்யூனிஸமும்" என்ற தலைப்பில் சிறிய ஆய்வாக சில மூத்த தோழர்களை சந்தித்துவருகிறேன். இதுவரை சந்தித்த அனைவரும் ஒருசேர அவர்களது ஓமியோபதி பாதையின் திருப்புமுனையாக இருந்தவர் "PLV" என்று மந்திரம் போல சொன்னது, தமிழகத்தில் ஓமியோபதியின் வளர்ச்சியில் இவரது பெயர் நீங்கா இடம் பெற்றிருப்பதை காண்பிக்கிறது. ஒருகாலத்தில் தமிழகமெங்கும் இரவும்பகலும் பயனப்பட்டு ஓமியோபதி கற்றுக்கொடுத்து பல ஓமியோபதி மாணவர்களை, மருத்துவர்களை உருவாக்கியுள்ளார்.
ஐயா நம்மாழ்வார் தொடங்கி தோழர் நல்லகண்ணு ஐயா , தோழர் பாலபாரதி என இவரிடம் ஓமியோபதி மனங்களாக இணைந்த ஆளுமைகள் ஏராளம்.
இவரது அனுபவங்களை, இந்த ஊரடங்கு காவத்தில் நமக்கு கேட்கும் வாய்ப்பளித்த
"குக்கூ உரையாடலுக்கு" நன்றிகள் பல.
~ Dr. கோ. பிரேமா .
🦋
" ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது; அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்கவேண்டியது அவசியம்.”
- ஜான் ஸ்கால்ட்டன்
டச்சு நாட்டைச் சேர்ந்த ஜான் ஸ்கால்ட்டன் என்ற ஹோமியோபதி அறிவியலாளர்தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை தனிமங்களின் அணு எண் அடிப்படையில் முதன்முதலில் ஆய்வுசெய்தவர்; அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்த்தார். ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த வெள்ளைச்சாமி ஐயா அதன் சாரத்தை ‘ஸ்கால்ட்டனின் கனிமங்கள்’ என்ற தன்னுடைய சிறுநூலில் தெளிவுற எழுதியுள்ளார். ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்; சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்கமுடியாது என்பதை தனது முப்பது வருடகால மருத்துவ அனுபவம் வழியாக நமக்குத் தெளிவாக்குகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி (PLV) அவர்கள், காரைக்குடி தாலுகா செம்பனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இளைஞராக இருந்தபோதே மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதில் இவர் ஆர்வமாக இருந்தார். இவர் தனது 17 வயதில் CPI அரசியல் கட்சியில் இணைந்து இன்றுவரை அதில் தொடர்கிறார். தீவிர கம்யூனிஸ்ட்டாக பல்வேறு போராட்டக்களங்களில் ஈடுபட்ட இவர் அதற்காக 1976ல் 7 மாத சிறைவாசம் அனுபவித்தார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் மனிதாபிமான, குணப்படுத்தும் தீர்வுகளைத் தேடியலைந்ததின் பயனாக, இவர் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டடைந்தார்.
இது ஒரு மருத்துவமுறை மட்டுமல்ல, இயற்கையின் நியதி மற்றும் மனிதர்கள் எதிர்கொள்கிற வாழ்க்கைப் போராட்டங்களுக்கான தீர்வு என்றும் அவர் விரைவிலேயே கண்டறிந்தார். 1990ம் ஆண்டில், சில நண்பர்களுடன் சேர்ந்து ஹோமியோபதிக்காக 'APROACH' (தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம்) என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். 30 ஆண்டுகளைக் கடந்து, இந்த அமைப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தின் பல பிராந்தியங்களில் இலவச ஹோமியோபதி சிகிச்சையுடன் அனைத்துவகுப்பு மக்களுக்கும் சமமான சேவையை செய்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நோய் எதிர்ப்பு மருந்துகளை கிராமப் பொதுமக்களுக்கு அண்மையில் இவ்வமைப்பினர் வழங்கினர். ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச்செயலாளராகவும் வெள்ளைச்சாமி ஐயா பொறுப்புவகிக்கிறார்.
அன்பே கடவுளின் நியதி, மனிதத்துவம், A Brief Introduction to Homoeopathy, ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?, ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு, ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு, ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள், ஹோமியோபதி ஓர் அறிமுகம், மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம், ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம், ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம், ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் உள்ளிட்ட ஹோமியோபதி மற்றும் மனிதாபிமான எண்ணங்கள் குறித்த புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெள்ளைச்சாமி ஐயா எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய ஆசான்களாக ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிடும் ஐந்தாறு முக்கிய நபர்களில் வெள்ளைச்சாமி ஐயாவும் ஒருத்தர். நோவுற்றுத் தான் துடிக்கும் வேளைகளில் நம்மாழ்வார் ஐயா, சிகிச்சைக்கென முதல் தேடிச்சென்றது வெள்ளைச்சாமி ஐயாவிடம்தான். மார்க்சியத்தை வெறும் வாய்த்தத்துவமாக நிறுத்திக்கொள்ளாமல், தன்னுடைய வாழ்வை அதற்கென ஒப்படைத்து, ஒரு ஆசான் பொறுப்பிலிருந்து இவர் உருவாக்கும் ஆளுமைகள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் சாட்சி மருத்துவர்களாக மாறிநிற்கிறார்கள். மேலும், இன்று தமிழகத்தின் ஏதோவொரு சிறுகிராமத்தில், யாரோ ஒரு கிராமத்துப் பையனோ அல்லது பொண்ணோ ‘ஹோமியோபதி’ படிக்க முடிவெடுத்தால், வெகு இயல்பாக அவர்கள் சென்றடையும் வழிகாட்டி ஆசான் ‘மருத்துவர் பழ.வெள்ளைச்சாமி’ என்ற ‘PLV அப்பா’ தான்.
குக்கூ நேரலை இணையவழி உரையாடலில், நாளை 15.05.20 மாலை 5.00 மணிக்கு, ஹோமியோபதி ஆசானான வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் பங்கேற்று, தனது வாழ்வுக்கால அனுபவங்கள் மற்றும் துறைசார்ந்த மேலதிக அவதானிப்புகளை நம்முடன் பேசிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இயற்கை மருத்துவத்தை அதன் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் விளக்கி, மனிதத்தன்மையே மருத்துவச் சிகிச்சையின் இறுதியிலக்காக இருக்கவேண்டும் என தற்போதைய அறிவுலகத்தின் முன்பு உரக்கச்சொல்கிற இந்த ஆளுமைமனிதரின் உரையாடல், பல சுயமுடிவுகளை எடுப்பதற்கான தைரியத்தை நமக்கு வழங்கக்கூடும்.

thanks to kukkoo children movement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக