செவ்வாய், 22 நவம்பர், 2016

மனிதத்துவம் பகுதி -3 பழ.வெள்ளைச்சாமி

          மனிதத்துவம், மனிதனை மனிதனாக்கி கடவுளாக்கும்
                     PART- 3

     இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றின் உருவாக்கம். இந்த உண்மை அறிவியலாளர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஒன்றும் அணுத்துகள், ஆற்றல், பரமாணு, பரம்பொருள், ஒன்று என்று  சொல்ல முடியாத ஒன்று, சூனியம், பிரம்மம், தாவோ, தம்மம், இறைநிலை, மற்றும் கடவுள் என்று எத்தனையோ பெயர்களில் அழைக்கப்படுகிறது.
    
அது ஒரு சக்தி மையம் எங்கும் வியாபித்துள்ள நீக்கமற நிறைந்துள்ள, தனக்கென்று தனிக்குணம் அற்ற ஒன்று. அந்த ஒன்றிலிருந்துதான் அனைத்தும் தோன்றியுள்ளது அல்லது அனைத்துக்கும் ஆதாரம் அதுதான் அதுவே ஆதிமூலம். அந்த ஆதிமூலத்திலிருந்து தோன்றிய ஒன்றுதான், அதற்கென்று தனிக்குணத்தோடு பரிணமித்தது. அந்த ஒன்றின் குணம் மாற அதன் அளவு மாறி பின்பு அதன் குணம் மாற அதன் அளவு மாறி இப்படியாக படிப்படியாக பரிணமித்து, இந்த 460 கோடி ஆண்டுகளில் மனிதன் வரை வந்துள்ளது.
    
இவ்வாறு பரிணமித்த அனைத்துமே அதற்குண்டான தனித்தனிக் குணங்களோடு நிலவி வருகிறது. இவ்வாறான தனித்தனி குணங்களை வைத்தே ஒவ்வொன்றும் அடையாளப்படுத்தப்படுகிறது. அதற்குண்டான குணங்களைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகின்றன.
    
அந்த குணங்கள் இல்லாத போது அந்த ஒன்றும் அழிந்து வருகிறது. அந்த ஒன்று அழிந்தால் அந்தக் குணங்களும் இல்லாமல் போய் விடுகின்றன. ஆதிமூலத்திலிருந்து தோன்றிய ஒன்று குணம் மாறி உருமாறி, உருமாறி, குணம் மாறி இவ்வாறு படிப்படியாக பரிணமித்து மனிதன் வரை வந்துள்ளதுதான் பரிணாம வளர்ச்சி. இப்போது மனிதன் என்னவாவான். இப்போது மனிதன் உள்ள நிலையில் என்னவாவான் என்பதை நாம் சாpயாகக் கணிக்க முடியாது. ஏனெனில் இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் அதற்குண்டான தனித்துவமான குணங்களோடு தான் அடுத்த மேல்நிலைக்கு வந்து உள்ளன. ஆனால்  மனிதனுக்கு மட்டும் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் அவன் அவனுக்குள்ள தனித்துவத்தோடு இல்லை என்பது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுடைய பண்புகளையும், உயிரற்றவைகளுடைய பண்புகளையும் தனதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறான். எனவேதான் ஹோமியோபதியில் மனிதர்களைத் தாவரவகை மனிதர்கள், விலங்குவகை மனிதர்கள், கனிமவகை மனிதர்கள் என்று பிரிக்க முடியும் என்கிறார்கள்.
    
இவ்வாறு மனிதர்கள் மனிதனுக்குண்டான சுயத்தை மறந்து அனைத்தின் சுயங்களைச் சுமந்து திரிவதால்தான் அவனுடைய பரிணாமம் எதை நோக்கிப் போகும் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் இதுகாலமும் தோன்றிய மகான்களும், ரிஷிகளும்,சித்தர்களும் மனிதன் கடவுளை நோக்கிப் போய் கடவுளாக முடியும் என்றும் கூறுகிறார்கள். அதாவது ஆதிமூலத்திலிருந்து வந்தவன் ஆதிமூலத்தை அடைய முடியும் என்று கூறுகிறார்கள்.
    
அவ்வாறு ஆதிமூலத்தை அடைவதையே முக்தி, சூனியம், நிர்வாணம் என்று அழைக்கிறார்கள். அந்த ஆதிமூலம் என்பது குணம் அற்றது. குணமற்றதை அடைய குணமற்றதால் முடியும். ஏனெனில் ஒத்ததோடுதான் ஒத்தது சேரும். ஒரு மனிதன் ஆதிமூலத்தில் இணைய வேண்டுமென்றால் அவன் நிர்குணமானவனாக வேண்டும். எப்படி ஒரு மனிதன் குணமற்றவனாக ஆக முடியும்? அவன் குணம்தான் அவன் அடையாளம். அவன் அடையாளத்தை அழிக்க வேண்டும். எப்படி அழிப்பது? இப்படி எத்தனை பேர் இது வரை அழித்தவர்கள்? ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவன் குணத்தை அழிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது.
    
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் தம் குணங்களை அழித்து சமாதி அடைந்து நிர்வாணம் அடைந்து, ஆதிமூலத்தோடு கலந்து முக்தி அடைந்தவர்கள் மிகச் சிலரே. நமக்குத் தொpந்த அளவில் புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் மற்றும் லாவோஸ்சு மற்றும் சிலரே. கோடான கோடி மனிதர்கள் என்ன ஆனார்கள்? இப்படி ஒரு சிலரே முக்தியடைந்து, மற்றனைவரும் பிறவிச் சூழலில் மறுபடியும், மறுபடியும் சிக்கிச் சிரமப்படுவது ஏன்? இவர்கள் இறந்தாலும் அவர்களுடைய குணங்கள் அழிக்கப்படாததால், அந்தக் குணங்கள் அதற்கான வடிவங்களைத் தேடிக் கொள்கின்றன. அவர்கள் இந்தப் பூமியில் ஏதோ ஒரு வடிவத்தில் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருக்கின்றார்கள்.
     இதை தெய்வப்புலவர் அவர்கள் சிறப்பாகக் கூறுகிறார்.
    
இலர் பலராகிய காரணம் நோற்பர்
      சிலர் பலர் நோலாதவர்”
என்று கூறுகிறார்.
    
அந்த சிலரும் தங்கள் குணங்களை அழிப்பதற்கு பல ஆண்டுகள் கடும் தவம் செய்ய வேண்டியது இருந்தது. ஆம், தவம், யோகம் போன்ற பயிற்சிகள் மூலம்தான் முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பகவான் புத்தர் அவர்கள் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவர் படாதபாடு இல்லை. கடைசியில் அனைத்தையும் விட்ட பிறகு ஞானம் பெற்றார். இதே போல பகவான் மகாவீரர் பல வருடங்கள் நிர்வாணமாகத் தவம் செய்துதான் ஞானம் அடைந்தார்.
    
பல ரிஷிகளும், மகான்களும் பல ஆண்டுகள் கடும் தவம் செய்து முடிவில் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது ஒன்று புரியாததாக இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றின் வடிவாக்கம். ஆகவே அனைத்துக்குள்ளும் உள்ளதும் அனைத்துக்கு வெளியேயும் உள்ளதும் அந்த ஒன்றுதான் என்பது தொpந்து விட்டது. அந்த ஒன்று பரம்பொருள், பரமாணு அல்லது கடவுள் தன்மை அல்லது இறைமை அல்லது வற்றாயிருப்பு என்று என்ன வேண்டுமென்றாலும் அழைக்கலாம்.
    
இதன் மூலம் எந்த ஒன்றும் தனித்து இருக்க முடியாது என்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்ததுதான் என்பதும் தெளிவாகிறது. இப்படியிருக்க இந்தப்பூமியில் இருந்து கொண்டு இறைநிலையை உணர வேண்டியதுதானே‚ ஏன் பூமியில் இருந்து செல்ல வேண்டும்?
    
பகவான் புத்தர் கூறியது போல் பூவுலக வாழ்வு துன்பமானது. இதை மாற்ற முடியாது. ஆகவே உலகில் பிறந்து துன்பத்தில் உழல்வதைவிட பிறக்காமல் இருப்பதே மேலானது என்று பிறவியற்றுப் போவதற்கே இந்த தவ வாழ்வு. இது ஏன்? மனிதன் மனிதனின் சுயத்தில் இல்லாமல் விலங்கின் சுயத்தில் இருப்பதால்தான். அவனுடையை பிரத்தியேகமான குணத்தில் இல்லாமல் அனைத்து விலங்குகளின் பண்புகளையும் தங்களுடைய பண்புகளாக தருவித்துக் கொண்டு வாழ்வதால் தான்.
    
இந்த உலகில் உள்ள துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் மனிதன் மனிதனுடைய சுயத்தில் இல்லாமல் விலங்குகளின் சுயத்தில் இருப்பதால்தான். ஆகவே அவனில் எண்ணிலா எண்ணங்கள், ஆசை, கோபம், பயம், வஞ்சகம், சூது, தந்திரம், ஆவேசம், அழுக்காறு மற்றும் பல எண்ணங்கள் அவனில் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு விலங்குகளின் பண்பில் மனிதன் வாழ்வதால்தான் அவனுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஏன் இயற்கைக்கும் கூட துன்பம் ஏற்படுகிறது.
    
ஆகவே துன்பத்திலிருந்து விடுதலை அடைய பிறவியிலிருந்து விடுபட வேண்டும். பிறவியிலிருந்து விடுதலை அடைய குணங்களை அழித்து வடிவத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவனில் உள்ள ஒன்று அனைத்துக்கமான ஒன்றோடு கலந்து விட வேண்டும். அந்த நிலையே முக்தி‚ இதற்காக கடுந்தவம், தியானம், யாகம் என்று பல சாதனைகள், பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது எத்தனை பேரால் முடியும்? இது ஒரு சிலரைத் தவிர, அதாவது ஏற்கனவே விலங்கினப் பண்புகளில் இருந்து விடுபட்டவர்களால் தான் முடியும். முடிந்தது‚
    
இதிலிருந்து விலங்கினப்பண்பை மனிதன் சுமப்பதுதான் அனைத்துக்கும் காரணம். இப்போது என்ன செய்ய வேண்டும்? மனிதனை ‘நீ மனிதன் உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது” என்ற உண்மையை உணர வைக்க வேண்டும். ஆம் மனிதனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அது அவனுக்கு மட்டும் உரித்தானது. அது அவனை மற்ற எல்லாவற்றிலும் இருந்து வேறுபடுத்தி அவனை ‘நான் மனிதன்” என்று உலகுக்கு உரத்த குரலில் சொல்ல வைத்தது அதுதான், ‘அன்பு” ‘உழைப்பு” ‘பகிர்வு” என்ற குணங்கள், மனிதத்துவம்.
    
ஒவ்வொரு மனிதனும் மனிதத்துவத்தை உணர வேண்டும். உலகில் ஏன ;துன்பம் வருகிறது? உலக வாழ்க்கை ஏன் துறக்க வேண்டும்? இந்த உலகம் இனிமையானது இந்த உலகம் வற்றாத செல்வத்துடன் கூடிய வளமானது. இந்த  உலகில் எத்தனை முறை வாழ்ந்தாலும் திகட்டாது. திரும்ப திரும்ப பிறக்கத்தான்  விருப்பம் வரும். மனிதன் மனிதத்துவத்தில் வாழும் போதே கடவுள் தன்மையை உணரலாம்.
    
அவனின் மனித நிலையிலிருந்து பரிணமித்து அவனை அறியாமல் கடவுள் நிலையை அடையலாம். இல்லை மோட்சம்தான் வேண்டும் முக்திதான் வேண்டும் என்ற அடம் பிடித்தால் அதை அடைவது கூட எளிமையாக இருக்கும் மனிதன் விலங்கினப் பண்போடு இருந்த காலத்தில் செய்த கடும் தவமும் பயிற்சியும் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. இதைக் கொஞ்சம் சரியாக விளங்குவதற்கு பகவான் வள்ளுவரை நாடினால் நலமாக இருக்கும்.
    
தெய்வப்புலவர், தவம் என்றால் என்ன என்று கூறுகிறார் என்று பார்ப்போம்.
     ‘உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
      அற்றே தவத்திற்குரு”
இங்கே தெய்வப்புலவர் இது காறும் மற்றவர்கள் கூறியது போல் தவம், தியானம் என்பதைக் கூறவில்லை. இதற்கு இராஜ யோகமோ, கர்ம யோகமோ அல்லது பக்தி யோகமோ செய்ய வேண்டியது இல்லை. இந்தப் பயிற்சி எல்லாம் மனிதன் விலங்கினப்பண்போடு இருந்த காலத்தில் அவன் குணங்களை அழிப்பதற்குத் தேவைதான். ஆனால் மனிதன் எப்போது மனிதத்துவத்தை உணர்ந்தவனாகிறானோ அப்போது வள்ளுவர் கூறுவதுதான் சாpயாக இருக்கும்.
    
ஒருவன் எப்போது „உற்ற நோயை நோன்றல்… முடியும். எப்போது அவனிடம் ‘நான்” இல்லையோ அப்போதுதான். அப்போது தான் „உற்ற நோய் நோன்றல்… என்ற நிலைக்கு வர முடியும். அந்த ‘நான்” எப்போது இல்லாமல் போகும்? எப்போது மனிதனுடைய சுயமாகிய ‘அன்பு” அவனிடம் வெளிப்படுகிறதோ அப்போது ‘நான்” இல்லாமல் போகும். ‘நான்” இருந்தால் அவன் இருப்பான். அவன் இருந்தால் அவன் துயர் இருக்கும். அவன் துயர் அழிய வேண்டும் என்றால் நான் அழிய வேண்டும். நான் அழிய வேண்டுமென்றால் அவனில் அன்பு மலர வேண்டும். அன்பு மலர்ந்தவன் ஆண்டவனாக இல்லாமல் வேறு என்னவாக இருப்பான்.
    
இதனால் வள்ளுவப் பெருமான்
     ‘தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
      மண் உயிரெல்லாம் தொழும்”
தானறப்பட்ட மனிதன் தான், மண் உயிர் அனைத்தையும் தன்னுயிராய் பார்ப்பான். உயிர்கள் அனைத்தையும் தன்னுயிராகப் பார்த்த மனிதனால் எப்படி உயிர்களுக்கு உறுகண் செய்ய முடியும்? முடியாது. அப்போது அங்கே மனிதன் தெய்வமல்லவா? இந்த நிலையை மனிதன் அடைவதையே வள்ளுவர் தவநிலை என்று கூறுகிறார். இந்த நிலை அடைந்த மனிதனால் என்னதான் அடைய முடியாது? ‘வேண்டியதை வேண்டியபடி அவனால்தான் பெற முடியும்”
    
இது எப்போது? மனிதன் தன் சுயமாகிய  அன்பை உணரும் போது‚ மனிதன் இந்த உண்மையை வள்ளுவர் காலத்தில் உணரவில்லை. அதனால் தான் அவர், இலர், பலராகிய காரணம் - நோற்பார் சிலர் நோலாதவர் பலர்” என்று கூறினார். அவர் கூற்றுப்படி மனிதத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே நோற்றவர்களாக கருதப்பட்டார்கள் அவர்கள்தான் மகான்களும், ரிஷிகளும் மற்றவர்கள் எல்லோரும் விலங்கினப் பண்புகளோடு இருந்திருக்கிறார்கள்.
    
வள்ளுவப் பெருமான் தவம் செய்வதற்கான தகுதியே மனித்துவத்தில் மனிதன் வாழ்வதைத்தான் குறிக்கிறார். அவர்களுக்கு மட்டுமே தவம் கை கூடும் என்பதையும் வலியுறுத்துகிறார். அதனால்தான் அவர்
     ‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
      அ‡திலார் மேற்கொள் வது”
என்று கூறுகிறார்.
    
மேலும் எப்போது உழைப்பு என்பது மனிதனின் இயல்பாக மாறுகிறதோ அப்போது ஒவ்வொருவருடைய உழைப்பும் அனைவருக்குமான தாகிறது. அனைவருக்குமான உழைப்பு பலன் கருதாது செய்யும் கருமமாகிறது. பலன் கருதாத கருமமே, குணமில்லாத மனிதனை உருவாக்குகிறது. குணமில்லாத மனிதனே இருப்பு நிலையை உணர முடியும். அதனோடு கலக்க முடியும். அதனால்தான் வள்ளுவர்
     ‘தவம் செய்வார் தம்கருமம் செய்வார் மற்றெல்லாம்
      அவம் செய்வார் ஆசையுள் பட்டு”
என்று கூறுகிறார்.
    
இவ்வாறு உழைத்து உற்பத்தி செய்த பொருள் எல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்து வாழத்தான் என்பதையும் சுட்டிக் காட்டிக் காட்டுகிறார்.
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
 வேளாண்மை செய்தற் பொருட்டு”
என்று கூறுகிறார்.
    
மனிதர்கள் மனிதத்துவத்தோடு வாழும் போது யாருக்கு வேளாண்மை செய்வது? உழைக்க இயலாதவர்கள், வயோதிகர்கள், குழந்தைகள், உடல்நலம் இல்லாதவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். ஏன் பகிர்ந்து அளிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார். இங்கே கொடுப்பவனும் பெறுபவனும் வேறு வேறல்ல. ஒன்றின் அவதாரங்கள். ஒருவனுக்கு கொடுப்பது என்பது தனக்கே கொடுப்பதாகும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
    
மனிதத்துவத்தோடு வாழும் போது மனிதன் அவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள ஓர்மையை உணர்கிறான். அதை உணராதவன் எவனும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
     ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
      செத்தாருள் வைக்கப் படும்”
    
இவ்வாறு ஓர்மையை உணர்ந்தவன் தான் கடவுள் தன்மையை உணர்ந்தவன், கடவுளானவன். இதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஒரு மனிதன் மனிதத்துவத்தை உணர்ந்து எப்போது இல்வாழ்க்கை வாழ்கின்றானோ அப்போது அவன் வாழ்க்கை அறவழி வாழும் வாழ்க்கையாகும். அந்த அறவழி வாழ்க்கை வாழ்பவரே இறைவழி வாழும் மனிதராவார். அவரே நோற்பாரை விட உயர்ந்தவராவர்.
    
அவர் கடவுள் நிலையை இயல்பு வாழ்க்கையிலேயே, அவரை அறியாமலே அடைந்தவர். இதிலிருந்து விலங்கினப் பண்புகளோடு வாழ்ந்த மனிதனுக்கு தவம், தியானம், யோகம், யாகம் என்ற பயிற்சிகள் எல்லாம் செய்ய வேண்டியது இருந்தது. அப்படி கடுந்தவம் செய்து ஒரு சிலரே உண்மை நிலையை அறிந்து நிர்வாணமாகி முக்தியடைய முடிந்தது.
    
ஆனால் மனிதன் அவனின் இயல்பாகிய மனிதத்துவத்தை உணரும் போது அவனை அறியாமலேயே மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குச் சென்று விடுவான். ஒரு சிலர் மட்டும் அல்ல, அனைவருமே கடவுள் நிலையை அடையலாம். அப்போது இலர் பலராக மாட்டார். இவ்வுலகில் இல்லாமையே இருக்காது. அனைவரும் மனிதத்துவமாகிய அன்பு, உழைப்பு, பகிர்வு என்று பண்புகளை வெளிப்படுத்தி தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அனைவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சொர்க்கமாக மாற்றுவார்கள் இந்த பூமியை‚

     ‘அன்பு என்பது உயர்ந்த பண்பன்று
      அன்பு என்பது அத்தியாவசியமானது
      ஆகாரத்தையும் நீரையும் போல
      ஒளியையும் வளியையும் போல
 மனிதனின் இயல்பாக
 அன்பு மாறும் போது
 அப்போது மனிதர்கள் எல்லாம்
 சுதந்திரமாக அவர்களை
 அறியாமலே காற்றை சுவாசித்து
 காற்றை வெளிவிடுவதுபோல
 அன்பை சுவாசித்து
 அன்பை வெளி விடுவார்கள்”
    
ஏனெனில் அன்பு முழுமையானது. அது முழுமைக்கும் ஆனது. 
அதனால் அந்த அன்பே கடவுளின் நியதி. 
அந்த நியதியே மனிதனைக் கடவுளாக்கும்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக