மனிதத்துவம்
HUMANISIM
HUMANISIM
இந்தப் பிரபஞ்சம் பிரமாண்டமானது. இதில் உள்ள நமது சூரியக் குடும்பம்
நேர்த்தியானது, ஒழுங்கமைவோடு உள்ளது.
இதில் உள்ள நமது பூமி அழகானது, அனைத்துச் செல்வங்களையும்
கொண்டது. இந்த பூமி நெபுலா
என்ற நெருப்புக் கோளத்திலிருந்து தோன்றி தற்போது சுமார் 460 கோடி ஆண்டுகள்
ஆகின்றன.
இந்தப் பூமியில் ஒரு செல் உயிர்கள்
தோன்றி சுமார் 260 கோடி ஆண்டுகள் ஆகின்றன. பின்பு இது பரிணமித்து
பல்வேறு மாற்றங்களடைந்து, பலமுறை அழிந்து தற்போதுள்ள பாலூட்டி விலங்குகள் தோன்றி 10 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
அவைகளிலிருந்து மனிதன் பரிணமித்து
10 லட்சம் ஆண்டுகள்
ஆகின்றன. இந்த பத்து லட்சம் ஆண்டுகளில் தற்போதுள்ள உடல்வாகோடு உள்ள மனிதன் பரிணமித்து 30 ஆயிரம் ஆண்டுகள்
ஆகின்றன.
இந்த மனிதன் பரிணமித்து 30 ஆயிரம் ஆண்டுகள்
ஆகியும் இந்த மனிதனின் துன்பம் நீங்கியபாடில்லை இது ஏன்? மற்றவைகள் எல்லாம்
அதனதன் போக்கில் மகிழ்ச்சியாக இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் இடைவிடாது
துன்பப்படுவானேன்?
இதற்கு இயற்கையில்
உள்ள கோளாறா? இல்லை பூமி வளமற்றுப் போனதா? அது எல்லாம் இல்லை, பின்பு ஏன்?
ஒரு ஐந்து நட்சத்திர
ஓட்டல் என்றால் அதில் உலகத்தில் உள்ள அனைத்தும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நம் பூமியோ ஐந்து
கோடி நட்சத்திர ஓட்டல் என்றே சொல்லலாம். இதில் என்ன வளம் இல்லை. இதில் நீர் வளம்
இல்லையா? நிலவளம் இல்லையா? கனிமவளம் இல்லையா? எந்த வளம் தான்
இல்லை. இந்தப் பூமியில்‚
இப்படி எல்லாம் இருந்தும் துன்பம் ஏன்?
மனிதன் இந்த பூமியில் வாழ லாயக்கற்றவனா? அவன்
துன்பப்படுவதற்கென்றே பிறந்து உள்ளவனா? அதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஆற்றல் மிக்கவன், அறிவு மிக்கவன். ஒரு
மனிதன் சரியாகச்
சிந்தித்தால் இந்த பிரபஞ்சத்தையே மாற்றி விடலாம். ஒரு மனிதன் தன் அறிவைப்
பயன்படுத்தினால் இந்த பூமியில் துன்பம் இல்லாமல் போய்
விடும். இப்படி இருக்க, பின்பு ஏன் துன்பம் வந்தது?
மற்ற விலங்குகள்
மற்றும் எல்லா உயிர் இனங்களும் அதனதன் மட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு
இருக்கும் போது, மனிதன் மட்டும்
துன்பப்படுவானேன்? இந்த பூமிக்கோளத்தில் மனிதன் மனிதனைக்
கொல்வதும், மனிதன் மனிதனை
இம்சிப்பதும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றா, இரண்டா
கோடிக்கணக்கில் அல்லவா கொன்று அழித்துக் கொண்டிருக்கிறான். இது ஏன்? எந்த விலங்கினமும்
தன் இனத்தையே அழித்துக் கொண்டதாக வரலாற்றில் கண்டதில்லையே. ஒரு இனத்திற்கு மற்ற
இனங்களால் ஆபத்து இருக்கலாம். ஆனால் அதே இனத்தால் ஆபத்து இல்லை. ஆனால் மனிதனுக்கு
மட்டும் மனித இனத்தால் மட்டுமே ஆபத்து இருக்கிறது. ஏன் மனிதன் மட்டும் தன்
இனத்தையே அழித்துக் கொள்கிறான்?
இவன் பகுத்தறிவு
உள்ளவன். ஆறாம் அறிவென்ன? ஏழாம் அறிவே உள்ளவன். இப்படியிருந்தும் இந்த அவலம் ஏன்? இதற்கு ஒரே காரணம்.
மற்ற விலங்குகள் எல்லாம் அவை அவைகளாகவே உள்ளன. ஆனால் மனிதன் மட்டும் மனிதனாக
இல்லை. இந்த அவலங்களுக்கெல்லாம் மூல காரணம் மனிதன் மனிதனாக இல்லாதது தான்.
ஆம், அப்படித்தான்‚
எல்லோரும் நினைக்கலாம் ‘மனிதன் மனிதனாகத் தானே
இருக்கிறான் என்று” இல்லை. அவன் மனித உருவில் இருக்கிறானே ஒழிய மனிதனாக
இல்லை. இது கொஞ்சம் சிக்கலாக இருக்கின்றதா? இதைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போம்.
இதைத் தெளிவாக புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் தனித்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால்தான் முடியும்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் அதற்கேயுண்டான
தனித்துவத்தோடு தான் இருக்கிறது. இவ்வாறு தனித்துவத்தோடு இருப்பதுதான்
பிரபஞ்சத்துக்கும் இந்த உலகத்துக்கும் அழகு. இவ்வாறு தனித்துவத்தோடு ஒவ்வொன்றும்
இருந்தும் கூட அனைத்தும் ஒன்றின் வடிவாக்கம் என்று எண்ணும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போது தனித்துவம்
என்றால் என்ன? தனித்துவம் என்பது
குணம். ஆம் ஒவ்வொன்றுக்கும் உள்ள குணம். இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் அதனதன்
குணத்தால் தான் அடையாளப்படுத்தப் படுகிறது. அந்தக் குணம் இல்லையேல் அந்தப்
பொருளும் இல்லை.
அப்படியென்றால்
அந்தத் தனித்துவக்குணம் என்பது என்ன?
எந்த குணத்தால் எந்த
ஒன்று மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டு இருக்கின்றதோ, எந்த ஒன்று
இல்லாவிட்டால் அந்த பொருள் இல்லையோ, எந்த ஒன்று அந்த ஒன்றின் அகப்புற செயல்பாடுகளையும் தீர்மானித்து, ஒரு சங்கிலித் தொடர்
போல் அதனுடைய அனைத்து அம்சங்களையும் இணைத்துள்ளதோ அந்த ஒன்றே அந்தப் பொருளின்
தனித்தப் பண்பாகும். அப்படி பார்த்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்
அதற்குண்டான தனித்துவத்தோடு இருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு இனமும் அதற்கேயுண்டான
தனித்துவத்தோடு இருக்கிறது.
ஒரு இனம் எந்த இடத்தில்
இருந்தாலும் எந்தச் சூழலில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும், அந்த இனத்துக்கு
உண்டான தனித்துவப் பண்போடுதான் இருக்கின்றது. உதாரணமாக சிங்கத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். குஜராத்தில் உள்ள இந்தியச் சிங்கமும், ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ காடுகளில் உள்ள சிங்கமும், வேறு உலகத்தில் எந்த மூலையில் உள்ள சிங்கமாக
இருந்தாலும் ஏறத்தாழ அந்த இனத்திற்குரிய தனித்துவக் குணத்தோடு இருப்பதைக் காணலாம்.
இதேபோல் பறவைகளும்
அப்படித்தான். இந்தியக் காக்கையும், இங்கிலாந்து காக்கையும், வேறு, உலகத்தில் உள்ள
எந்தக் காக்கையும், ஒன்று போல்
இருப்பதைக் காணலாம். அதேபோல் ஆப்பிளை எடுத்துக் கொள்ளுங்கள். அது காஷ்மீர்
ஆப்பிளாக இருந்தாலும் ஐஸ்லாந்து ஆப்பிளாக இருந்தாலும் அந்த இனத்துக்குரிய பண்போடுதான்
இருப்பதைக் காணலாம்.
அதேபோல் இயற்கையில்
உள்ள தனிமங்கள் எல்லாம் அப்படித்தான். தங்கம் எந்த நாட்டில் வெட்டி எடுத்தாலும்
அதனுடைய தனித்தன்மையோடுதான் இருக்கிறது. ஆக ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருந்தாலும்
எந்த நாட்டில் இருந்தாலும் அதற்குண்டான தனித்தன்மை மாறாமல் இருக்கிறது என்பதுதான்
உண்மை.
இப்போது மனிதன்
என்பவன் யார்? அவனுடைய தனித்துவம்
என்ன? எல்லா மனிதர்களும், எந்த நாட்டவர்களாக
இருந்தாலும், அந்தத்
தனித்துவத்தோடு உள்ளார்களா? என்று யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மனிதர்கள் எந்த நாட்டவர்களாக
இருந்தாலும் ஒன்று போல் உள்ளார்கள். ஆனால் அவர்கள் மனித இனத்தின் தனித்துவத்தோடு
இருக்கிறார்களா? என்பதுதான் நமது
கேள்வி?
அப்படியென்றால் மனித
இனத்தின் தனித்துவம் என்ன? இப்போது எல்லோரும் ஒன்று போல் தான் உள்ளார்கள். அது அவர்களுடைய தனித்துவம்
இல்லையா? இந்த கேள்விகள்
எழுகின்றன. தற்போதைய உலகத்தில் உள்ள மனிதர்களுடைய பண்புகள், மனிதர்களுடைய
பண்புகள் இல்லை.
மனிதர்கள்
பயப்படுகிறார்கள், கோபப்படுகிறார்கள், பொறாமைப்படுகிறார்கள், பலாத்காரம்
பண்ணுகிறார்கள், வஞ்சிக்கிறார்கள், கவலைப்படுகிறார்கள், சந்தர்ப்பவாதிகளாக
இருக்கிறார்கள், சதி பண்ணுகிறார்கள், வன்முறையாளர்களாக
இருக்கிறார்கள், கொடுமைக்காரர்களாக
இருக்கிறார்கள், அபகரிக்கிறார்கள், திருடுகிறார்கள், பொய் சொல்கிறார்கள், பதுக்குகிறார்கள்.
இவ்வாறு எத்தனையோ பண்புகளோடு இருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நாட்டினரும் இந்தப்
பண்புகளில் ஒன்றே போல் உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
இப்போது நாம் பார்த்த
பண்புகள் மனிதர்களின் பண்புகளா? இல்லை.
மனிதனின் பண்பு என்பது
மனிதனுக்கும் மட்டுமே உள்ள, மற்ற எந்த உயிRIனங்களிலும் இல்லாத
பண்புதான் மனிதனின் பண்பு. அப்படி என்றால் மேலே கூறப்பட்ட பண்புகள் அனைத்தும்
மனிதனின் பண்புகள் அல்ல என்பதுதான் உண்மை. இவை அனைத்தும் விலங்குகளின் பண்புகள்.
பயம் ஒட்டு மொத்த விலங்கினத்துக்குமான பண்பு.
கோபம் வன்முறை, பலாத்காரம் முதலியவை
சிங்கம், புலி போன்ற கொடிய
விலங்குகளுக்கான பண்புகள். பொறாமையும் அனைத்து விலங்குகளுக்குமான பண்பு. வஞ்சகம், நRIக்கு உள்ள பண்பு, பாம்புகளுக்கு உள்ள
பண்பு. மறைந்து இருந்து தாக்குதல், பழி வாங்குதல், வஞ்சித்தல் போன்றவை
யானைகளுக்கு உள்ள பண்பு. சூழ்ச்சி செய்தல் செந்நாய்களுக்கு உள்ள பண்பு. சேர்த்தல், பதுக்குதல்
எறும்புகள் மற்றும் தேனீக்களுக்கான பண்பு. காத்து இருத்தல், பாசாங்கு செய்தல்
முதலிய பண்புகள் கொக்கு மற்றும் முதலை போன்ற விலங்குகளின் பண்புகள்.
இவ்வாறு இப்போது
மனிதனில் நிலவுகின்ற எந்தப் பண்பும் மனிதத்துவத்தை வெளிப்படுத்தும், மனிதனுக்கே மட்டும் உரிய பண்புகள் அல்ல.
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பெருமையாக பேசும் தலைமைப்பண்பு கூட மனிதர்களுடைய
பண்புகள் அல்ல. குழுவுக்கு தலைமை தாங்குதல், வழி நடத்துதல் அனைத்தும் விலங்குகளுக்கு உண்டான பண்புதான்.
உதாரணமாக, ஒரு சிங்கக்
கூட்டத்திற்கு ஒரு ஆண் சிங்கம் தலைமை தாங்கும். வேறொரு சிங்கம் அங்கு வந்து
விட்டால் அந்த சிங்கத்தோடு போரிடும் அந்த யுத்தத்தில் அது தோற்று விட்டால் அந்தக் குழுவின் பொறுப்பு வெற்றி
பெற்ற சிங்கத்திற்கு சென்று விடும்.
ஆக நாம் பெருமையாய்
பேசிக் கொள்ளும் ‘தலைமைப் பண்பு” கூட மனித இனத்துக்கானதில்லை. அது முழுக்க முழுக்க
விலங்கினத்தின் பண்பு. அதனால் தான் மனிதர்கள் இடைவிடாது யுத்தம் செய்து கொண்டும்
கொன்றழித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில்
மனிதன் மனித இனத்துக்குரிய பண்போடு இல்லை என்பதும் விலங்குகளுடைய பண்புகளைச் சுமந்து கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை. மனிதர்கள் முழுக்க முழுக்க விலங்குகளின் பண்புகளைச் சுமந்து
கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று நினைக்கும்போது வெட்கமாகவும், வேதனையாகவும்
இருக்கிறது.
இப்போது தெரிகிறதா? மனிதர்களுடைய
துன்பங்களுக்கும், அவலங்களுக்கும்
காரணம் மனிதர்கள் மனிதர்களாக இல்லாததுதான், அவர்கள் விலங்குகளாக இருப்பதுதான்.
மனிதர்கள் மனிதர்களாக
இல்லாமல் விலங்குகளாக இருக்கும் போது எப்படி துன்பம் இல்லாமல், யுத்தம் இல்லாமல், கொடுமையும், வறுமையும் இல்லாமல், வாழ முடியும். ஆக
மனிதன் அனைத்து துன்பங்களிடம் இருந்து விடுபட வேண்டுமென்றால் முதலில் விலங்கு
பண்புகளிலிருந்து விடுபட்டு மனித இனத்திற்குண்டான பண்புகளோடு வாழ வேண்டும்.
கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளில் யாரும் மனிதர்களை வழி நடத்தி துன்பமில்லாத வாழ்க்கைக்கு
வழிகாட்டவில்லையா? என்ற கேள்வி எழாமல்
இல்லை. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகள்
வரலாற்றில் வேத காலம் தொட்டு வேதங்களும், உபநிடதங்களும் இன்னும் பல உன்னத நூல்களும் ரிஷிகளும்,சித்தர்களும் வழிகாட்டி இருக்கிறார்கள்.
2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்த பகவான்
வழிகாட்டியுள்ளார். அவர் மனித வாழ்க்கையே துன்பமானது தான் என்ற முடிவுக்கு வந்து
விட்டார். பசி, மூப்பு, பிணி, சாவு முதலியவற்றை
நீக்க முடியாத துன்பங்களாகக் கருதினார். துன்பங்களுக்கான காரணத்தையும்
கண்டுபிடித்தார்.
அதை நீக்குவதற்கான வழியையும் கண்டுபிடித்தார்.
அந்த வழியை எப்படி பிரயோகப்படுத்துவது என்பதையும் விளக்கினார். அவர் முதலில் என்ன
செய்தாலும் ‘மனித வாழ்க்கை துன்பமானதுதான். பிறந்தவர்கள் அனைவரும் இந்தத்
துன்பங்களை அடைந்தே தீர வேண்டும்” என்று உறுதியாக கூறினார். இதிலிருந்து விடுதலை
அடைவதற்கு ஒரே வழி பிறவியற்று போவதுதான் என்று உறுதியாக நம்பினார்.
மேலும் பிறவி என்பது வினைப்பயனால் ஏற்படுவது, ஆகையால் வினைப்பயனை
அழித்து நான் என்ற தன் மூப்பை எண்ணங்களை அழித்து, மனதை ஒழுங்குபடுத்தி மனதை, நாம் சொல்லுகின்றபடி
நடத்திச் சென்று முடிவில் பிறவியற்று சூன்ய நிலையை அடைவதன் மூலம் மனிதன் பிறவியற்ற
நிலையை அடையலாம். அவ்வாறு பிறவியற்று போவதன் மூலம் மனிதன் துன்பத்திலிருந்து
விடுதலையடையலாம் என்று போதித்தார்.
மொத்தத்தில்
மனிதர்களை ‘நிர்வாணம்” என்ற நிலைக்கு உயர்த்தி கடவுள் தன்மையை அடைவது தான் அவருடைய
இறுதி முடிவாக இருந்தது. அதேபோல் அவர் காலத்தில் வாழ்ந்த மகான் மகாவீரர்.
அகிம்சையை மையப்படுத்தி மனிதர்கள் தெய்வீக நிலையை அடையும் வழியை கூறினார். பின்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு
வந்த கிருஸ்து பகவான் துன்பங்களுக்கான காரணத்தையும், வழிகளைப் பற்றி கூறினாலும் முடிவில் கடவுளுடைய
சாம்ராஜ்ஜியத்தை அடைவதைத்தான் இறுதிக் கோட்பாடாக கூறியுள்ளது.
‘நீங்கள் குழந்தைகளைப் போல ஆகாத வரையில்
கடவுளுடைய சாம்ராஜ்யத்தை அடைய முடியாது” என்றும்
‘ஊசியின் காதுகளில் ஒட்டகம் போனாலும் போகலாம்
ஒழிய, பணக்காரர்கள்
கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியாது”
என்று அவர் கூறிய கூற்றுக்கள் அவருடைய இறுதி
முடிவு. கடவுளின் சாம்ராஜியத்தை (சொர்க்கம்) அடைவதாகத்தான் இருந்தது.
இதே போல் இவருக்குப் பின் வந்த மகான் நபிகள்
அவர்கள் கரடுமுரடான மனிதர்களைக் கூட நல்வழிப்படுத்தினார். வாழ்க்கைக்கு வேண்டிய
அத்தியாவசியமான நெறிகளைப் போதித்து முடிவில் மனிதர்களைச் சொர்க்கத்திற்கு
அழைத்துச் செல்வதையே முடிவாக கருதினார்.
ஆக மொத்தத்தில் இந்த
உலகத்தில் தோன்றிய மகான்கள் அன்பையும், உயர்ந்த நெறிகளையும் போதித்து வந்திருந்தாலும் அவர்களுடைய இறுதி நோக்கம்
மனிதர்களை கடவுள் நிலைக்கு கொண்டு செல்வதும், கடவுளாக்குவதுமாகத்தான் இருந்தது.
அவர்கள் எல்லோரும் மனிதர்களை கடவுள் தன்மை, அதாவது மோட்சம், நிர்வாணம், சூனியம், சமாதி மற்றும் தாவோ
என்ற பல வார்த்தைகளில் சொன்னாலும், மொத்தத்தில் பிறவா நிலை அடைவதை வலியுறுத்தியுள்ளார்கள். அவர்கள் முழுமையாக
மனிதர்களை மனிதத் தன்மைக்கு மட்டுமே கொண்டு வர முயற்சித்திருந்தால் மனிதர்கள்
எல்லோரும் மனிதர்களாக மாறியிருப்பார்கள். அதாவது மனிதத்தின் தனித்துவத்தோடு கூடிய
மனிதத்துக்கு வந்திருப்பார்கள். அவ்வாறு மனிதத்துக்கு வந்தவர்கள் தானாகவே
கடவுளர்களாக ஆகியிருப்பார்கள்.
அப்படி என்றால் மனிதர்களை மனிதர்களாக ஆக்குவது
என்றால் என்ன?
அதாவது மனிதனை
மனித்துவத்துக்கு அதாவது மனிதனுக்கு மட்டுமே உண்டான வேறு விலங்குகள் மற்றும் உயிர்
இனங்களிடம் இல்லாத தனித்துவமான குணங்களோடு இருக்க வைப்பது, அதாவது
மனிதத்துவத்தில் இருக்க வைப்பதுதான்.
இப்போது மனிதனுக்கு
உண்டான தனித்தன்மைதான் என்ன?
மனிதனுக்கு உள்ள
தனித்தன்மை என்பது ‘பகுத்தறிவு” என்று கூறுகிறார்கள். பகுத்தறிவு என்பது கூட
விலங்குகளிடம் உள்ளது தான், நல்லது, கெட்டது எது என்பதை
பகுத்தறியும் பண்பு விலங்குகளுக்கு இருக்கிறது. அவைகளிடம் இருந்துதான் மனிதனுக்கு
வந்துள்ளது. „பேசுதல் மற்றும் சிரித்தல்… என்று கூறுகிறார்கள். இது விலங்குகளிடம் இருக்கிறது. கிளி போன்ற
பறவைகள் பழக்கப்படுத்தினால் பேசுகின்றன. அது தவிர விலங்குகள் உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றன, சிரிக்கின்றன. அவைகளை
உற்றறியும் போது நாம் உணரலாம்.
ஏன் தாவரங்கள் கூட
ஆனந்திப்பதாக புஷ்கின் என்ற இரஷ்ய விஞ்ஞானி கூறியிருக்கிறார். ஆக பேசுதல், சிரித்தல், மகிழ்தல் போன்ற
உணர்வுகள் மனிதனுக்கு மட்டும் உள்ளவைகள் அல்ல. அவை விலங்குகளுக்கும்
தாவரங்களுக்கும் கூட இருக்கின்றன.
„பாசம், பரிவு, நன்றி… போன்ற
உணர்வுகளை மனிதனுக்கான உணர்வுகளாகக் கூறுகிறார்கள். நிச்சயமாக இவைகள் எல்லாம்
மனிதர்களை விட விலங்குகளிடம் மிதமிஞ்சி வெளிப்படுகின்றன. ஆக இவைகளும் மனிதனுடைய
தனித்தன்மை இல்லை.
அப்படியானால்
மனிதனுடைய தனித்தன்மைதான் என்ன? ஏற்கனவே பார்த்தது போல தனித்தன்மை என்பது மனிதர்களுக்கு மட்டும் உள்ளதாக
இருக்க வேண்டும். அது மனித இனத்துக்கே பொதுவானதாக இருக்க வேண்டும். அப்படிப்
பார்த்தால் மனிதர்களுக்கு மட்டுமே இருந்து மனிதனை மற்ற உயிர் இனங்களிடமிருந்து
வேறுபடுத்தும் பண்பு‚
அன்பு, உழைப்பு, பகிர்வு மட்டுமே
இந்த மூன்று
பண்புகளும் வேறு எந்த உயிர் இனத்திடமும் இல்லை. முழுக்க முழுக்க மனித இனத்துக்கு
மட்டும் உரித்தானவை. இப்போது
இவைகளை தனியாக பிரிப்போம்.
நாம் இப்போது மனித
இனத்துக்கு மட்டுமே தனித்துவமான பண்புகள் என்று அன்பு, உழைப்பு, பகிர்வு என்பதைப்
பார்த்தோம். அவற்றைக் கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.
அன்பு
இப்போது பலருக்குச்
சந்தேகம் வந்துள்ளது. ‘அன்பு” மனிதர்களிடம் மட்டும்தான் உள்ளதா? விலங்குகளிடம்
இல்லையா? விலங்குகளிடம்
இருக்குமானால் எப்படி மனிதனுடைய தனித்துவமாகும். ‘அன்பு” என்றால் என்ன? என்று புரிந்து கொண்டால்தான்
இந்தச் சந்தேகம் நீங்கும். விலங்குகளிடம் பாசம், நேசம், பற்று மற்றும் பிரியம் முதலியவை இருக்கின்றன. ஆனால் அன்பு என்பது இல்லை.
பின்பு அன்புக்கும்
மற்றவற்றிற்கும் என்ன வித்தியாசம்? பாசம், நேசம் இவைகளுக்கு
எல்லாம் காரணம் இருக்கிறது, அளவு இருக்கிறது, காலம் இருக்கிறது. இவைகள் மனிதர்களை விட அதிகமாக இருக்கிறது விலங்குகளிடம்.
ஆனால் அன்புக்கு
காரணம் காரியம் இல்லை.
அன்புக்கு அளவு இல்லை, குணமும் இல்லை
அன்புக்கு காலம்
இல்லை, இடமும் இல்லை
அன்பு என்பது காரண காரியம், அளவு, காலம் எதிர்பார்ப்பு
எல்லாவற்றையும் கடந்தது. இவைகளில் ஒன்று இருக்குமானாலும் அது அன்பாக இருக்க
முடியாது. ‘நான் இந்த காரணத்தினால் அன்பு செலுத்துகிறேன், இவ்வளவு அன்பு
செலுத்துகிறேன், நேற்று அன்பு
செலுத்தினேன், நாளைக்கும்
செலுத்துவேன்” என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஏனெனில் அன்பு
முழுமையானது. அந்த அன்பு மனிதனில் மட்டும் வெளிப்பட முடியும். அதுகூட திடீர் என்று
வந்தது இல்லை. பரிணாம
வளர்ச்சியில் வந்ததாகத்தான் இருக்க முடியும். ஆனால் அது மனிதனில்தான்
முழுமையடைகிறது. அது மனிதனால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆகையால் அன்பு
மனிதனுக்கு மட்டுமே தனித்துவமான பண்பு என்றால் மிகையில்லை.
ஆகவே புத்தர், இயேசு, வள்ளுவர் எல்லோரும்
அன்பைப் பற்றி போதிக்கிறார்கள். ஆழமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் கூறுகிறார்கள். ஆனால் அதுதாண்டா உன்னுடைய சொத்து
என்று வலியுறுத்தி மனிதத்துவத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும். மனிதன் செய்ய
வேண்டுவது அன்பை மட்டும் வெளிப்படுத்துவதுதான் என்பதை வலியுறுத்த வேண்டும்.
அன்பு மனிதனிடம் எப்போது
சாத்தியமாகும்? எப்போது எந்த
மனிதனிடம் ‘நான்” இல்லையோ அப்போது அன்பு வெளிப்படும். ‘நான்” இல்லாத அந்தக்
கணத்தில் வெளிப்படுவதுதான் ‘அன்பு”. அந்த அன்புதான் தெய்வீகமானது. ஆகவேதான்
அன்பும் சிவமும் ஒன்று என்று சொல்லப்பட்டது.
இவ்வாறு „நான்… அற்ற
நிலையில் வெளிப்படும் உணர்வுதான் அன்பு, அந்த அன்பு பேதங்கள் அற்றது. அதற்கு எந்த வேதமும் இல்லை. அந்த அன்பை
வெளிப்படுத்தும் சாத்தியத்தோடு உள்ளவன் மனிதன் மட்டுமே. ஆம் இது மனிதனால் மட்டுமே
வெளிப்படுத்தக்கூடிய, மனிதனுக்கு மட்டுமே உரிய, சொத்து என்றால்
மிகையாகாது.
இந்த அன்பைப் பேசாத
மகான் யார்‚ இந்த அன்பைப் பேசாத மனிதன் யார்? இந்த அன்பை பேசாத மதத்துக்காரன் யார்? இந்த அன்பை பேசாத நாட்டுக்காரன் யார்? அது இல்லாத, மொழி, இனம், பரிவு உள்ளவர்கள்
யார்?
ஆம், எல்லோரும் பேசமட்டுமே
செய்கிறார்கள். எல்லோரும் பேச மட்டுமே செய்வதால் தான் எல்லாம் பிரச்சனைகளும்.
எப்போது அன்பாக வாழத்துவங்குகிறார்களோ, அப்போது எங்கே எல்லைக் கோடுகள், அப்போது எங்கே பிரிவினைகள், அப்போது எங்கே
யுத்தங்கள், அனைத்தும் ஒன்றாகி
விடாதா?
அன்பு என்பது மட்டும்
மனிதனின் சொத்து என்று மனித குலம் உணரும் போது உலகம் சொர்க்கமாகாதா? ஆகும், அங்கே அப்போது
ஆனந்தம் தவிர வேறு ஏதும் இல்லை. அதனால் தான் அறிவுக் கடவுள் வள்ளுவர் அவர்கள்,
‘புறத்துறுப் பெல்லாம்
எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பிலவர்க்கு”
இங்கே வள்ளுவர் அன்பை
மனிதனுடைய குணம் என்பதற்கு மேலாக மனிதனுடைய அகத்து உறுப்பாகவே கூறி விட்டார்.
இதிலிருந்து தொpயவில்லையா, அன்பு மட்டும்தான்
மனிதனை மற்ற உயிர் இனங்களிடம் இருந்து வேறுபடுத்தக் கூடிய உயரிய பண்பு என்று.
ஆதலால்தான் மனிதனில்
அன்பையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாதது என்று வள்ளுவர் கூறுகிறார். எப்படி உயிரையும் உடலையும் பிரிக்க
முடியாதோ அதுபோல மனிதனின் வாழ்க்கையையும் அன்பையும் பிரிக்க முடியாது.
‘அன்போடு இயைந்த
வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு”
இங்கே வாழ்க்கை
என்பதே அன்புதான் என்று வலியுறுத்தப்படுகிறது.
‘மனிதன் என்பவன்
மற்றவைக்கு வாழ்பவன்”
‘அன்பு என்பது அவனது
உயிர் மையமாக இல்லாத போது எப்படி மனிதன் மற்றவைக்கு வாழ முடியும்”.
அதனால்தான் வள்ளுவர்
அன்பு இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்று வலியுறுத்திக் கூறுவதுடன், அப்படி ஒரு வாழ்க்கை
இருக்குமானால் அந்த வாழ்க்கை பாலைவனத்தில் உள்ள பட்ட மரத்திற்குச் சமம் என்று
கூறுகிறார்.
‘அன்பகத்து இல்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த் தற்று.
என்று கூறுகிறார்.
இப்படி அன்போடு
இயைந்த, மற்றவர்களுக்கு
வாழும் வாழ்க்கை தான் வையகத்தில் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை. இப்படி அன்புற்று
இன்புற்று வாழும் வாழ்க்கை வாழ்கிறவர்கள், வையகத்தில் தெய்வமாக இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்.
‘வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
என்று கூறுகிறார்.
இப்படி மனிதர்கள்
தன்னுடைய சுயமாகிய அன்பை வெளிப்படுத்த வேண்டுமானால் முதலில் அவர்களிடம் உள்ள
‘தானை” அல்லது ‘நான்” அறுப்படவேண்டும். அப்போதுதான் அன்பு என்ற தெய்வீக உணர்வு
வெளிப்படும். அப்போது அவர்கள் தெய்வமாவார்கள். தெய்வமான அவர்களை எல்லா உயிர்களும்
கை தொழும்.
‘தன்னுயிர் தான்அறப்
பெற்றானை
மண் உயிரெல்லாம் தொழும்”
இப்போது அன்பு என்பது
தான் மனித மையம் என்பதும் இது மனிதனால் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய உணர்வு என்று
எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி தெரியும்.
உழைப்பு
உயிரினப் பரிணாம
வரலாற்றில் மனிதன் என்பவன் எப்போது அன்பை உணர்ந்தானோ, அப்போது பொpய பாய்ச்சல்
ஏற்பட்டது. ஆம் தண்ணீரின் கொதி நிலை 99ழ ஆக இருந்தும் நீர் கொதிக்கவில்லை. அது எப்போது 100ழ ஆக ஆகியதோ அப்போது
நீர் கொதித்து ஆவியாகி விடுகிறது. 99ழ வரை சீராக உயர்ந்த வெப்பநிலை 100ழ யில் ஒரு பாய்ச்சல் நடந்து விடுகிறது.
அதுபோல் உயர் இன பரிணாம
வரலாற்றில் பூமி தோன்றி 260 கோடி ஆண்டுகளுக்கு பிறகு முதல் உயிர் தோன்றி படிப்படியாக மனிதன் வரை பரிணாம
விதிப்படி நடந்த பரிணாம விதிகள் மனிதன் ஆன பிறகு முற்றிலும் மாறிப் போய் விட்டன.
எப்போது மனிதனில் அன்பு என்று மையம் தோன்றியதோ அப்போது விதிகள் நொறுங்கி விட்டன.
‘தகுதியுள்ளது வாழும்”
‘பலமுள்ளது வாழும்” என்ற கோட்பாடுகள் மறைந்து விட்டன. ஆனால் ‘தன்னை” அறியாததால்
இன்னும் அவை மறையாது இருப்பதால் தான் எல்லாத் துன்பங்களும் இந்த பூமியில். ‘அன்பிற்கு அழகு
துன்பத்தில் உதவுதல்” ‘துன்பத்தில் உதவாத அன்பு கவைக்கு உதவாத கம்பு” என்று
கொள்ளலாம்.
பரிணாமத்தில்
ஆயிரக்கணக்கான வருடங்களாக அழித்துக் கொண்டு மிருக வாழ்க்கை வாழ்ந்த மனிதனில்
எப்போது அன்பு துளிர்த்ததோ அப்போது உழைப்பு துளிர்த்தது. வலுத்தவன்
வலுவிலந்தவனையும், தகுதியற்றவனையும்
தகுதியுள்ளவன் வாழ வைக்க வேண்டிய நிலைக்கு
அன்பால் மனிதன் கொண்டு வரப்பட்டான். அன்பின் பிரயோகமே உழைப்பிற்கு அடித்தளம்.
இயற்கையை இது காறும்
எடுத்துக் கொண்டு வாழ்ந்த மனிதனுக்கு இயற்கையில் வினைபுரிய வேண்டிய நிலைக்கு
ஆளாக்கப்பட்டான். அப்போது அன்பு அறிவின் துணையை நாடியது. எப்போது பயத்துக்கு அறிவு
துணை போனதோ, எப்போது
அகம்பாவத்துக்கு அறிவு துணைபோனதோ அப்போது அறிவு அழிவுக்கு இட்டுச் சென்றது. எப்போது அன்புக்கு அறிவு துணை போனதோ அது
ஆக்கத்திற்கும், வாழ்வுக்கும் இட்டுச்
சென்றது.
இங்கே அன்பு
உழைப்பின் அவசியத்தையும் அறிவு உழைப்பை எளிமையானதாகவும், உயர்ந்ததாகவும்
மாற்றியது. இங்கே உழைப்பு மனிதனால் மட்டுமே நிறைவேற்றப்படக்கூடியது. உழைப்பு
என்பது இயற்கை மீது வினைபுரிந்து உற்பத்தி செய்யக் கூடியது. இந்தச் செயலை எந்த
உயிரும் செய்ய முடியாது. இது மனிதனுக்கு மட்டுமே உரிய பண்பு. மனித வரலாற்றில்
இன்னும் சொல்ல போனால் மனிதனை முழுமைப்படுத்தியது அன்புதான் என்றால் அவனைச்
செம்மைப்படுத்தியது உழைப்பு.
ஒவ்வொரு மனிதனும்
தன்னுடைய அடையாளமாகிய ‘உழைப்பை” எப்போது செலுத்த விழைகிறானோ அப்போது அது அவனை
மட்டும் உயர்த்தாது, அவன் வாழுகின்ற உலகத்தையே உயர்த்தும். அப்போது உலகமே சொர்க்கமாகும். எந்த
மதமும் மனிதனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
உழைக்காமல் உண்பதை
மனிதன் அவமானமாக கருதவேண்டும்.
‘பிறர் உழைப்பில்
வாழ்பவன், கழிவை தின்று உடலை
வளர்க்கும் கயவனாவான். அவன் உடலில் ஓடும் குருதி கூடச் சாக்கடையாகும்” என்ற
நினைப்பு உருவாக வேண்டும். அதனால்தான் வள்ளுவர் அவர்கள் உழைப்பினால் வரும் இன்பம்
நிகரற்றது என்று கூறுகிறார்.
‘தெண்ணீர் அடுபுற்கை
ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கு இனியதில்”
தன் உழைப்பில் வந்தது
பழங்கஞ்சியாக இருந்தாலும் அதைவிட இனிமையானது வேறு எதுவும் இல்லை. உழைக்காதவனுக்கு
உதவி செய்யக் கூட அருகதை இல்லை. ஆம், உலகத்தில் ஒருவனைத் தவறு செய்யாதே என்று கூறலாம். ஆனால் ஒருவனை அன்பு செய்யாதே
என்ற கூறினால் எவ்வளவு அவமானம். நிச்சயமாக அது மிகவும் ஒரு மனிதனுக்கு மிகுந்த
அவமானமானது தான்.
அப்படி ஒருவனைச்
சொல்லலாம். உழைக்காத ஒருவனுக்கு அன்பு செலுத்த உரிமை இல்லை. அவனால் பிறருக்கு
துன்பத்தில் உதவ முடியாது.
‘அருளென்னும்
அன்பீனும் குழவி பொருளென்னும்;
செல்வச் செவிலியால் உண்டு”
இங்கே அருள் என்பது
அன்பின் பிரயோகம். அருள் என்பது கடவுள் தருவது அல்ல, அன்பின் பிரயோகத்திற்கு பொருள் வேண்டும்.
பொருளைப் பெறுவதற்கு உழைப்பு வேண்டும். எப்படி உழைக்காதவன் உதவ முடியும். ஆகவே
அவனுக்கு அன்பு செய்ய அருகதை இல்லை. உழைப்பு இல்லாமல் உதவ முடியாததை மேலும்
வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
‘தாளாண்மை இல்லாவன்
வேளாண்மை பேடிகை
வாளாண்மை போல் கெடும்”
உழைக்காதவன் உதவ
நினைப்பதை கோழை கையில் வாள் இருப்பதாகக் கிண்டல் செய்கிறார். ஆகவே ’உழைப்பு” என்ற
மனித அடையாளம் இல்லாமல் மனிதன் இந்த பூமியில் வாழ்வதே பாரமாகும். அதனால் எந்த உயிரினத்தாலும்
செய்ய முடியாத மனிதனுக்கு மட்டுமே உரித்தான உழைப்பு என்பது பூமியில் மனிதனை மாண்பு
உள்ளவனாக பூமியை சொர்க்கமாக்கும் ஆற்றல் உள்ளவனாக மாற்றி பொய், களவு, சூது மற்றும்
அனைத்துக் குற்றங்களிலிருந்தும் மனிதனை விடுவிக்கும் மந்திரச் சொல்லாக உழைப்பு
இருக்கிறது.
பகிர்வு
இயற்கையில் புற, அக நிலை
எதார்த்தங்கள் எப்போது ஒன்று போல் இருப்பதில்லை. அது பிறவியிலும்
வெளிப்படுகின்றது. எல்லா மனிதர்களும் உழைக்கும் திறம் உள்ளவர்களாக இருக்க
முடியாது. சிலர் உழைக்க இயலாதவர்களாக இருப்பார்கள். இயற்கையில் குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள் இவர்கள்
எல்லாம் உழைப்பைச் செலுத்த முடியாது. அப்போது அவர்களும் வாழ வேண்டும். அவர்களையும்
வாழ வைக்க வேண்டும்.
இங்கே இயன்றவர்கள்
இயலாதவர்களுக்கு உழைத்து உற்பத்தி செய்தததைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். இந்தப்
பகிர்வுப் பண்பு இந்த பிரபஞ்சத்தில் எந்த உயிர்களிடத்தும் இல்லை. ஒரு தானியத்தை
வேளாண்மை செய்து அதை விளைவித்து உற்பத்தி செய்து, உற்பத்தியானதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து
மனிதனால் மட்டுமே வாழ முடியும். எந்த குருவியும் தானியத்தை உண்ண முடியுமேயொழிய அதை
உற்பத்தி செய்து பகிர்ந்து கொடுக்க முடியாது.
அதே போல் ஒரு
பழமரத்தை நட்டு பழத்தை உற்பத்தி செய்து அதை அனைவருக்கும் மனிதனால் மட்டுமே
பகிர்ந்தளிக்க முடியும். எந்த கிளியும் பழத்தை சுவைத்து விட்டு, பழம் நிறைய
இருக்கிறது, அவற்றைப் பறித்து
மற்ற கிளிகளுக்கு கொடுக்கலாம் என்று கொண்டு செல்வதில்லை. அதே போல் புல் நிறைந்த
வயல்வெளியில் வயிறு நிறைய புல்லை மேய்ந்து விட்டு கொஞ்சம் புல்லை புடுங்கி கட்டிக்
கொண்டு தன் கன்றுக்குக் கூட பசு கொண்டு வர முடியாது.
இந்த பகிர்வு என்ற
பண்பு இருப்பதால் தான் மனிதம் மிளிர்கிறது. ஆகையால் தான் அறிவுக் கடவுள் வள்ளுவர்
அவர்கள் பகிர்வை உலகில் உள்ள அனைத்திலும் தலையாயது என்று கூறுகிறார்.
‘பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றில் எல்லாம் தலை”
இந்த பகுத்துண்டு
வாழும் பண்பு வேறு எந்த உயிர்களிடத்தில் இருக்கிறது? எதனிடமும் இல்லை. இது மனிதனிடம் உள்ள மனிதனுக்கு
மட்டுமே உரித்தான பண்பு. இந்தப் பகிர்வை வெளிப்படுத்தாது மனிதன் மனிதனாக இருக்க
முடியாது. இன்னும் சொல்லப் போனால் இதுதான் ‘வலுத்தது மட்டும் வாழும்” என்ற பரிணாம
விதியையே மாற்றியது என்று சொல்லலாம்.
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும் போது வலுவுள்ளது வலிவற்றதையும், வாய்ப்பற்றதையும் வாழ வைக்க முடியும். இந்த
பகுத்துண்டு வாழும் பண்பை வாழ்வாக கொண்ட மனிதனின் வாழ்க்கையில் என்ன துன்பம் வந்து
விடும்? ஒரு போதும் வராது.
அவன் அடுத்தவர் துன்பத்தையும் அடியோடு அழித்து விடுவான். இதைத் தான் வள்ளுவர்
பெருமான்
‘பழியஞ்சிப் பாத்தூண்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்”
என்று கூறுகிறார்.
ஆகவே, மனிதன் பகிர்வு
செய்து வாழும் பண்பாளனாக ஆகும் போது இந்தப் பூமியில் பசி ஏது? பட்டினி ஏது? வறுமை ஏது? வாடியவர் ஏது? இதெல்லாம் இல்லாத
உலகம் சொர்க்கமில்லாமல் வேறு என்னவாம்‚ ஆகவே அன்பு, உழைப்பு என்ற மனித மாண்புகள் பகிர்வு என்ற
உயர்ந்த கோட்பாட்டில் முழுமையடைகிறது.
மனிதம் தெய்வீகம்
மனிதன் என்பவன் எப்போது, இப்போதுள்ள மிருகப்
பண்புகளை அழித்து விட்டு அவனுடைய அவனுக்கு மட்டுமே உரித்தான உயாpய பண்புகளாகிய அன்பு, உழைப்பு, பகிர்வு என்ற
பண்புகளை வெளிப்படுத்துகிறானோ, அப்போது இந்த பூமி சொர்க்கமாகும். இந்த பூமி இன்பம் விளையும் விளை நிலமாகும்.
இங்கே பசி, பிணி, மூப்பு, சாவு குறித்து எந்த
அச்சமும் இல்லை. இந்த பூமியை விட்டு முக்தியடைய வேண்டிய அவசியமும் இல்லை. இங்கே
வாழ்வு உத்திரவாதப்படுத்தப்படுகிறது. பசியற்ற வாழ்வும், பிணியற்ற வாழ்வும்
இங்கே நிரந்தரமாக இருக்கும் போது வயோதிகம் கூட துன்பம் ஆகாது. அன்பில், அன்பாக அனைவரும்
இருக்கும் ஒவ்வொருவர் துன்பத்தையும் மற்றவர் தங்களுடைய துன்பம் போல் பாவிப்பார்கள்.
இங்கே இன்னொரு விசயம் சொல்ல வேண்டியுள்ளது.
எப்போது மனிதன் மனிதத்துவத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டானோ. அப்போது மிகவும்
தீவிரமாக மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் தண்ணீர் போல மனிதன் இறைநிலை நோக்கி
நகர்கிறான். இங்கே ஒவ்வொரு மனிதனும் தங்களை அறியாமலேயே பக்தி யோகத்தையும் கர்ம
யோகத்தையும் மற்றும் ஞான யோகத்தையும் செய்யத் துவங்கி கடவுளாகிக்
கொண்டிருப்பார்கள்.
இங்கே உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற பேதத்துக்கே இடமில்லாது போய் விடும். ஒவ்வொருவரும்
மற்றவர்களுக்காக வாழும் மனித வாழ்க்கையை மேற்கொண்டு மனிதன் என்பவன் அவர்களை
அறியாமலேயே மனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்.
அப்போது மனிதம், மனிதத்துவத்தை
வெளிப்படுத்தி தெய்வீகமாகும்.
.....................................................................................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக