வெள்ளி, 21 ஜனவரி, 2022

3. மருத்துவ முன்னோடிகள் ஓமியோபதி மருத்துவம் மேஜர் தி.சா.இராஜூ

 


என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க 

உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே!  (பட்டினத்தார்) 


முன்னோடிகள் 

சாமுவேல் கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஹானிமானின் வாழ்க்கை, அவரது மருத்துவச் சாதனைகள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளுமுன்பு, அவருக்கு வழித்துணையாக நின்றவர்கள் யாவர் என்று தெரிந்து கொள்வது பயனுடைய தகவல்களாகும். மருத்துவத்துறையில் இத்தகைய முதல் நிலையை எய்துவதற்கு அவருக்குக் கிடைத்த அடித்தளம் எது? 







ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் தன்வந்திரி, ஸுஸ்ருதர், சரகர், போகர் ஆகியோர் கொண்டாடப்படுவது போல் மேல்நாட்டுச் சிகிச்சை முறையின் ஆதிப்பிதாவாக, கிரீஸ் நாட்டு ஹிப்போக்ரேடஸ் மதிக்கப்படுகிறார். இவர் உலகம் சுற்றிய கிரேக்க மருத்துவரான டிமாக்ராடஸின் மாணாக்கர். கி.மு. 460 - ல் காஸ் என்ற சிறிய தீவில் பிறந்தவர். ஆன்கிளிபியன் ஆலயத்தைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னாளில் அங்கேயே ஆசிரியப் பணியையும் மேற்கொண்டார். தரேஸ், தெஸ்ஸாலே, டெலோஸ், ஏதன்ஸ் ஆகிய கிரேக்க நகரங்கள் இவருடன் தொடர்பு கொண்டவை. தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு லாரிஸ்ஸா நகரில் இயற்கை எய்தினார். 


உணவே - நஞ்சு

'ஒருவனது உணவு மற்றவனுக்கு விஷம்' என்று உறுதியாகக் கூறியவர் இந்தப் பெருமகன். நோயாளியின் உடல்நிலை, அவனுடைய அன்றாட வாழ்முறை, தொழில்வகை, குடும்பப்பின்னணி ஆகியவற்றைப் பற்றி எல்லாம் தெளிவுறத் தெரிந்து கொள்வது ஒரு மருத்துவனுக்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எண்பத்து ஏழு நூல்கள் எழுதினார். எலும்பு முறிவுகளும், எலும்புப் பிசகுகளும் என்ற அவருடைய சிறந்த மருத்துவநூல், அந்தத் துறையில் ஆதாரக் கிரந்தம். மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு அவருடைய நூல்களே பாட புத்தகங்களாக இருந்தன. இவைகள் அனைத்தும் 'ஹிப்போக்ரேடஸ் தொகுப்பு' என்று பெயர் பெறும். 


கிரேக்க அறிஞர்களான அரிஸ்டாடில், ப்ளாட்டோ ஆகியோர் இவருடைய பெயரை மரியாதையுடன் குறிப்பிடுகின்றனர். அலக்சாண்ட்ரியா மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இவர்களது குறிப்புக்களைத் தொகுத்தனர்  இவருடைய ஆதாரபூர்வமான வரலாற்றை கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஸோரன்ஸஸ் எழுதினார். டபிள்யூ.ஹெச்.எஸ்.ஜோன்ஸ் (1923) டபிள்யூ.என், மான் (1950) ஆகியோர், ஹிப்போக்ரேடஸ் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த மேதையின் அடிப்படைக் கருத்துக்களை ஹானிமான் தமது ஆராய்ச்சிக்குத் துணை கொண்டார்.


 






ஸெல்ஸஸ்

 அடுத்ததாக ஸெல்ஸஸ் ஒளலஸ் கார்னீலயஸ் என்ற மருத்துவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். லத்தீன் மொழியில் டெ- மெடிஸினா, ப்ரூக்மியம் ஆகிய நூல்கள் எழுதியிருக்கிறார். இந்த மேதையின் அடிப்படைக் கருத்துக்களையும் ஹானிமான் தமது ஆராய்ச்சிக்குத் துணைகொண்டார்.  இவை மருத்துவ நெறியின் வேதங்கள்.


உணவிலும் தினசரி நடவடிக்கையிலும், சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்பது நோயாளிக்கு நல்லது. மருத்துவனுக்கும் துணைநிற்கும் என்ற கருத்தை முதன்முதலாக வலியுறுத்தியவர் இவர்தான். இருதயம், மூளை, ஆகியவைகள் பாதிக்கப்பட்டால், இந்தக் கட்டுப்பாடுகள் பெரிதும் துணைநிற்கும் என்றும் இவர் போதித்தார். சத்திர சிகிச்சையில் இவர் ஆயுர்வேத நிபுணரான சரகரை ஒத்தவர். உடலில் தோன்றும் கட்டிகளை மெல்லிய நூலை இறுக்கி அகற்றும் லிகேசர் முறை, மொட்டுக்கள் உருவத்தில் எழும்பும் சதைத் திரட்சியை வெட்டிப் பிதுக்கும் லித்தோமிமுறை, ஹெர்னியா சத்திரசிகிச்சை ஆகியவை குறித்துத் தெளிவான வழிமுறைகளை வகுத்தார். கிரேக்க மருத்துவ முறை இவருடைய ஆராய்ச்சிக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.



 இவருடைய மருத்துவ நூல்கள் அனைத்தையும் மூன்று தொகுதிகளாக டபிள்யூ.ஜி. ஸ்பென்ஸர் மொழிபெயர்த்திருக்கிறார். இவருடைய மருத்துவத் திறமையைப் பெரிதும் பாராட்டி எழுதியிருக்கிறார்.. மருத்துவத்தைத் தவிர, சட்டம், இராணுவ விதிமுறைகள், தத்துவம் ஆகியன குறித்தும் ஸெல்ஸஸ் எழுதினார். இத்தகைய மருத்துவமேதையை இவருடைய சமகாலத்து அறிஞர்கள் அதிகம் பாராட்டவில்லை. 








பாரா ஸெல்ஸஸ் 

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தியோ பாரஸ்டஸ் , பொம்பாஸ்டஸ் வான்ஹோஹன் ஹெய்ம் , சுவிட்ஜர்லாந்து நாட்டவர் . இவர் பேஸல் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் . ஸெல்ஸஸின் வாழ்க்கையும் , மருத்துவ நெறிகளும் இவரைப் பெரிதும் ஈர்த்தன . அவற்றை முறையாக ஆராய்ந்தார். அதன் அருமை பெருமைகளை உலகுக்குக் கூறினார். தம்மையே பாராஸெல்ஸஸ் (ஸெல்ஸலை ஒத்தவர்) என்று அழைத்துக் கொண்டார். வேதி இயலுக்கு மருத்துவத்தில் சிறப்பிடம் தந்தவர் இவர் தான். மருத்துவத் துறையோடு நிற்காமல் தொழிலாளர்களின் பிரச்சனைகளிலும் இவர் கவனம் செலுத்தினார். பூமிக்கடியில், சுரங்கங்களில் அவர்கள் பணிபுரிவதால் ஏற்படும் தனித்தன்மையுடைய நோய்கள் குறித்து அவர் ஆராய்ந்தார். அந்த நோய்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியபோதுதான் அரசியல்வாதிகள் இவரைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக அவர் பேஸல் நகரத்தையே விட்டு நீங்கும்படியான நிலைமை ஏற்பட்டது.



உடல் - கலவை

மனிதஉடல் பேரண்டத்தின் மிக நுணுக்கமான பகுதி. இது உப்பு, கந்தகம், பாதரசம் ஆகிய பொருள்களினால் ஆன மிசிரம் என்று அறிவித்தார். தொடர்ந்து, ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவசக்தி என ஒன்று உறைகிறது. அது வயிற்றுப் பகுதியில் உள்ளது. மனிதன் உண்ணும் பொருள்களில் உள்ள நல்லவற்றை நஞ்சிலிருந்து அது பிரித்தெடுக்கிறது என்றும் உறுதி கூறினார். அது மட்டுமன்றி மருத்துவனுக்கு உடற்கூறு மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அவனுக்குப் பௌதிகம், வேதிஇயல், வானநூல், சமயம் அனைத்திலும் அறிமுகம் தேவை என்றும் வற்புறுத்தினார்.



கோளும், மீனும்

வானத்திலுள்ள கோள்களும், மற்ற இயற்கை ஆற்றலும், மண்ணிலுள்ள எல்லா உயிர்களிலும் தமது ஆளுகையைச் செலுத்துவதைப் போல், மனிதனுடைய உள்ளத்திலும், உடலிலும் மாறுதல்களை உண்டாக்கும். அவனுடைய துயாத்திற்கும், மகிழ்ச்சிக்கும், பேரண்டத்திலுள்ள மீன்களும் கோள்களும் காரணம், என்று துணிந்து கூறினார். மனித உடலுக்குள் ஆத்மா என்ற தத்துவம் உறைகிறது. அதற்கும், எல்லையற்ற பெருஞ் சக்திக்கும், இடையறாத தொடர்பு இருக்கிறது. ஆகவே மருத்துவனுக்கு மெய்ஞான அறிவும் மிகமிக முக்கியம் என்று அழுத்திக் கூறினார்.


இந்தக் கொள்கைகள், அவருடைய சமகால மருத்துவர்களைத் திடுக்கிட வைத்தன. அவர்கள், இவரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். முறையாக மருத்துவக் கல்வி பெறாத இவருக்கு மருத்துவத்தைப் பற்றிப் பேச எத்தகைய அதிகாரமும் கிடையாது என்று ஓலமிட்டு இவரை விரட்டினார்கள்.



புதிய உத்தி

என்றாலும், தமது முப்பத்தி ஆறாவது வயதில் இவர் மீண்டும் பேஸல் நகரத்திற்கு வந்தார். தமது கொள்கையை விளம்பரப்படுத்துவதற்கு இவர் புதியதோர் உத்தியைக் கையாண்டார். அந்த நாளில் மருத்துவ ஆதார நூல்களாகக் கருதப்பட்ட காலன் , ஆவிஸென்னா ஆகியோருடைய பெரிய புத்தகங்களைப் பிரசங்க மேடையில் பலர் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்துவார். குழுமியுள்ள மக்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். தொடர்ந்து அவர் தமது பேருரையை வெகு சிறப்பாக நிகழ்த்துவார். இத்தகையவர்களுடைய வாழ்முறை, மருத்துவக் கொள்கைகள், மக்களிடையே அவை ஏற்படுத்திய பரபரப்பு அனைத்தையும் ஊன்றிக் கவனித்த பின்புதான் ஹானிமான் தமது கருத்தையும் எடுத்துரைக்கத் துணிவு பெற்றார். என்றாலும், எத்தகைய எதிர்ப்புக்கள்? 


தொடரும்........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக