2. மூன்று வகைத் தோஷங்கள்
மருத்துவம் புரிபவன் ஓரளவு வானநூலும் அறிந்திருப்பது நலம். ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அதற்கென்றே உடல்வாகு, நோய்த்தன்மை ஆகியவற்றை உடன் கொண்டு பிறக்கிறார்கள்
-ஆயுர்வேதம்.
தமிழ் அறம்
'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்று வள்ளுவரின் நூலைப் பாராட்டுகிறார் மதுரைத் தமிழ்நாகனார். இந்தப் பேரறத்தை ஆழ்ந்து படிக்கும்போது நமக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. மனிதகுலம் செம்மையாக வாழ்வதற்கு நோயில்லாத சமுதாயம் தேவை என்று செந்நாப் போதார் கருதினார். அதனால் அவர் மருத்துவத்திற்கு தனி அதிகாரம் வகுத்தார். அதில் முதல் குறள்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
மருத்துவச்சாத்திரத்தின் அடிப்படையை அறிந்திராவிட்டால் இந்தப் பாடலுக்குப் பொருள் காண்பது கடினம். தெய்வப் புலவர் இங்கு ஆயுர்வேத மருத்துவம் குறித்துப் பேசுகிறார் . அந்த விஞ்ஞானம் கூறுகிறது : மனித உடல் மூன்று தத்துவங்களால் ஆனது: இவை சீரான அளவில் இருந்தால் மட்டுமே உடல் சீராக இயங்கும். அந்தத் தத்துவங்களில் ஒன்று குறைந்தாலோ, அல்லது மிகுந்தாலோ உடல் இயக்கம் ஒழுங்காகச் செயல்படாது.
வேறுபாடு ஏன்?
கோடிக்கணக்கான மாந்தர்களையுடையது இந்த மண்ணுலகம், எல்லோருக்கும் உடலுறுப்புக்கள் மேற்பார்வைக்கு ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால் இரண்டு மனிதர்களுடைய முகத்தோற்றம், குண இயல்பு ஆகியவை ஒன்றாக இருப்பதில்லை. இரட்டைக் குழந்தைகளைக் கூட நெருங்கிய உறவினர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. தோற்றமும், குண இயல்பும், நூறு சதவிகிதம் ஒத்திருக்கும் இரண்டு உயிர்களைக் காண்பதே அரிது. இது ஏன்?
மனித உடல் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. அவற்றின் இணைப்பினால் உடல் தோன்றுகிறது. இறுதியில் பூதங்களுடன் கலந்து ஒன்றிவிடுகிறது. ஓர் உயிரின் பிறப்புக்குக் காரணமாக இருக்கும் வேளையில் அமைந்துள்ள இந்தப் பிரகிருதி தத்துவம் மறுகணத்தில் அதே நிலையில் இருப்பதில்லை. மனிதர்களிடையே தோன்றும் உருவ - உள்ள மாறுதலுக்கும் இதுவே காரணம்.
மூன்று அடிப்படை
ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் இவைகளின் பாகுபாட்டை மூன்றாகக் குறுக்கினார்கள். அவைகள், காற்று ( இதில் ஆகாசம் உட்படும் ) வெப்பம், தட்பம் ( இதில் நீரும் நிலமும் அடக்கம் ) ஆகியவை. இந்த மூன்றைத்தான் இந்திய மருத்துவம், வாதம், பித்தம், கபம் என்று பகுத்தது. இந்த மூன்றிற்கும் அதிபதிகளாக வாயு, சூரியன், சந்திரன் ஆகியவர்களை நியமித்தார்கள். ஆக, இந்த மூன்று ஆற்றல்களின் நிலை, அப்போது பிறப்பிக்கப்படும் உயிரின் தன்மையை நிர்ணயிக்கிறது என்பதை உறுதி செய்தார்கள்.
இவர்களுடைய பொதுவான இயல்புகள் எவ்வாறிருக்கும்? வாயுவின் தன்மையை மிகுதியாகப் பெற்றவர் எப்போதுதும் விரைவாகவே நடப்பார். அவரால் சோம்பலாகவே இருக்க முடியாது.
(காந்தியடிகளின் நடைவேகம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. நேரு இரண்டிரண்டு படிகளாகவே ஏறுவார், இறங்குவார். )
வெப்பம் - இதைப் பித்தம், என்று நூலோர் குறிப்பிட்டார்கள். பித்தம் மிகுதியாக உடையவனின் தலையில் முடி முளைகள் கருகிவிடும், அல்லது வெளுத்துவிடும். (வழுக்கைக்கு மருந்து உண்டா?) ஆனால் தட்பம் மிகுந்த உடலில் நிறைய ரோமம் முளைக்கும். எந்தக் குழ்நிலையிலும் நிலத்தைப் போல் அமைதியாக இருப்பவன் அவன். அந்த உடலில் நீரின் தன்மை அதிகமாக இருக்கும். . இத்தகையவர்களைச் சந்திரனின் தன்மை உடையவர்கள் என்றனர் இந்திய மருத்துவர்கள்.
ஜெர்மனி
யுனானி, அலோபதி மருத்துவ முறைகள் இந்த கொள்கையை எந்த அளவுக்கு எற்றுக் கொள்கின்றன என்பது தெரியாது. ஆனால் சித்த வைத்தியம் இந்த அடிப்படைக்கு உடன்பாடு தெரிவிக்கிறது. இந்தியநாட்டின் மருத்துவ வல்லுநர்கள் இந்த நியதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹானிமான் இந்த அடிப்படையை ஒத்துக் கொள்கிறார்.
ஜெர்மனி நாட்டில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு அதிகம். இந்தியத் தத்துவங்களுக்கு அங்கு அதிக மதிப்பு. சாகுந்தலத்தைப் போன்றதோர் கவிதையை உலகில் எந்த மொழியிலும், எந்தக் கவிஞனும் எழுதியது கிடையாது என்று கூறுகிறார் மாமேதை கதே. அவர் இந்த நாடகத்தை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் . ( தெய்வீகச் சாகுந்தலமெனும் நாடகம் செய்த தெவர் கவிதை? - இது பாரதியின் கேள்வி.) இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த நா(ட்)சிக் கட்சி தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டது. ஸ்வஸ்திகாவைத் தமது கட்சியின் அடையாளமாக ஏற்றுக் கொண்டது. ஸ்வஸ்திகம் என்றாலே நல்வாழ்வு என்பதுதான் பொருள். நோய் சொஸ்தமாகிவிட்டதா? என்று நாட்டுப்புறத்தில் வினவுவது வழக்கம்.)
மருத்துவ மேதை ஹானிமான் பல மொழிகள் கற்றவர். ஆனால் சமஸ்கிருதம் படித்ததாகத் தெரியவில்லை. என்றாலும் ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையைப் பல இடங்களில் எழுத்துக்கெழுத்து பின்பற்றியிருக்கிறார்.
அடியொற்றி
'உஷ்ணம், உஷ்ணேன சீதளம்', என்பது ஓர் இந்திய மருத்துவத்தத்துவம். இதன் பொருள், வெப்பத்தை, வெப்பமுள்ள பொருளே தணித்துக் குளுமையை உண்டாக்கும் என்பதாகும். இதை அப்படியே பின்பற்றுகிறார் ஹானிமான். வெப்பமான உடல்வாகுள்ள நோயாளிக்கு, வெப்பமான மருந்துகளையே கொடு, என்று அவர் வரைகிறார். உடலில் வெப்பத்தன்மை உடையவர், குளிர்வாகுடையவர் என்றெல்லாம் மேலைமுறையில் பாகுபாடு கிடையாது. சகட்டு மேனிக்கு, பொடி, வில்லை, ஊசி மருந்துகள். அப்போதைக்கு நோய் அமுங்கினால் சரி. பின் விளைவுகளை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்?
விஷம் விஷஸ்ய சமனம்', என்கிறது ஆயுர்வேதம். உடலிலுள்ள நஞ்சை முறிப்பதற்கும் அதே வகை விஷம்தான் என்பது ஆதாரம். ஹோமியோபதியின் அடிப்படையும் இதுவேதான்.( ஸிமிலியா, ஸிமிலிபஸ், க்யூரெண்டர், என்பது இதற்கேற்ற ஜெர்மானிய மொழி வாசகம்) ஒத்த இயல்புள்ள மருந்து மட்டுமே நோயாளியைக் குணப்படுத் தும் என்பது ஆதார சித்தாந்தம்.
ஒரு மருந்துப் பொருளைக் கடைவதனாலும், நீர்க்கச் செய்வதாலும் மட்டுமே அதன் ஆற்றல் மிகுதியாகிறது என்ற தத்துவத்தின் மூலமே ஹோமியோபதி இயங்குகிறது. அதே கருத்தை வலியுறுத்துகிறது ஆயுர்வேதம், மர்த்தனம் - குணவர்த்தனம். (மர்த்தனம் - கடைவது. குணம் - ஆற்றல். வர்த்தனம் - அதிகமாகிறது.)
குறள் நெறி
நோயாளி, மருத்துவன், மருந்து; அதை அண்மையில் இருந்து தருபவன் என்ற நுண்ணிய நெறியை ஹானிமானின் . ஆர்கனான் - மருத்துவ சாத்திரம் படிப்படியாக, தெளிவாக, நிர்ணயிக்கிறது; போதிக்கிறது. அதை ஆழ்ந்து படிக்கும் போது இந்த மேதை, நமது குறளை எப்படிப் படித்திருக்க முடியும் என்று வியப்பில் மூழ்காமல் இருக்க முடிவதில்லை . ஏனெனில் வள்ளுவர் தமது நெறியின் இறுதிப்பாவாகக் கீழ்க்கண்டவாறு வரைந்துள்ளார்.
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. (நட்பியல்- மருந்து)
'இதன்பால் - இல்லாத எப்பொருளுமில்லையால்', என்று தமிழ்நாகனார் கூறியது எத்தனை பொருத்தமாக அமைந்துவிட்டது?
மருத்துவ சாத்திரம் என்பது வள்ளுவர் அறிந்ததில் மிகச் சிறிய பகுதியே ஆகும். அவர் ஒரு ஞானக் கடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக