திங்கள், 14 மே, 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 6 மேஜர் தி.சா.இராஜூ



நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5

                                                                           -6-

வரலாற்றைப் படிப்பது சுவையானது.  வரலாற்றிலேயே பங்கு பெறுவது இன்னும் சுவையான அனுபவம்.  அந்த வகையில் 1970-71-ஆம் ஆண்டு பாரத வரலாறு  என் வாழ்வில் சுவையான பகுதி.  நம் நாடு விடுதலை பெற்ற பிறகு 1981 வரை எல்லாப் போர் முனைகளிலும் என் பங்கு இருந்திருக்கிறது.  அதைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

தற்போதைய பங்களாதேஷுக்கு அப்போது கிழக்குப் பாகிஸ்தான் என்று பெயர்.  அந்தப் போரின்போது அங்கு நான் கழித்த நாட்களை இப்போது நினைவு கூர்கிறேன்.  அந்தப் பகுதியிலிருந்து ஓடி வந்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது.  அந்த அணியின் உதவியுடன் பாகிஸ்தானியப் படையினரை எதிர்க்கும் பணியில் நமது படைத் தலைமை ஈடுபட்டிருந்தது.  அவர்களுடைய ஆயுதங்களைப் பராமரிக்கும் பொறுப்பு என்னிடம் பல துணை நிலை அலுவலர்கள், படை வீரர்கள் இருந்தனர்.  நாங்கள் அனைவரும் எதிரியின் நாட்டிற்குள் கூடாரம் அமைத்து வசித்தோம்.  முக்தி வாகினிப் படையின் ஆயுதங்களை அங்கிருந்து கொண்டே பராமரித்தோம்.  அவற்றைப் பரிசோதித்து, செப்பனிட்டோம்.

இந்திய அரசு முறையாகப் போர் அறிவிக்கப் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் அங்கே வசிக்கத் தொடங்கி விட்டோம்.  அப்போது எங்கள் முகாம் மேக்னா நதிக்கரையில் இருந்தது.  மிகவும் பசுமையான நிலப்பரப்பு.  சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு விரோதிகளாக இருந்த பொது மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர்.
எனது உதவியாளர்களில் சில தமிழர்களும் இருந்தனர்.   அப்துல் ரஷீத் என்று அவருக்குப் பெயர்.  திறமை மிக்க தொழிலாளி.
எங்களில் எவரும் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவி புரியும் படைப்பகுதி அருகில் இல்லை.  அந்த நேரத்தில் அவர்களுக்கு என்னிடமிருந்த ஹோமியோபதி மருந்துகளே துணை நின்றன.  போர்க்களத்தில் கூட மருந்துப் பெட்டி என் ஜீப்பில் இருக்கும்.  ஒரு நாள் மாலை அப்துல் ரஷீத் என் கூடாரத்திற்கு வந்தார்.  இலேசான காய்ச்சல், முகம் வெளிறிப் போயிருந்தது.  உடலில் சிறு சிறு தடிப்புக்கள், மூச்சிலேயே ஒரு துர்நாற்றம்.
இத்தகைய  தடிப்பு உடலின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறதா?
நண்பர் சற்றுத் தயங்கினார்.  பிறகு தன் கால் சட்டையையும், உள்ளாடைகளையும் நீக்கினார்.  ஆணுறுப்பின் மீது சிறு சிறு புண்கள்.  முன் பகுதி சிவந்து வீங்கியிருந்தது.
இதை எங்கே சம்பாதித்தீர்?  படையினர் வாழ்வில் நோயாளியாவது தவறில்லை, அதை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்.  பால்வினை நோய்களுக்காகச் சிகிச்சை பெறும் நாட்களுக்கு ஊதியமும் நிறுத்தப்படும்.
காலனிக்குப் போயிருந்தேன் அய்யா!
காலனி என்று அன்பர் குறிப்பிட்டது மேக்னா ஆற்றங்கரையிலிருந்த செவ்விளக்குப் பகுதி.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பினேன்.
ஒரு வாரம் பொறுத்து ரஷீத் வந்தார்.  புண்ணெல்லாம் ஆறி விட்டது.  ஆனால் ஒழுக்கு நிற்கவில்லை.
கோவணத்தை இறுக்கிக் கட்டு, நான் தரும் மருந்துகளைத் தவறாமல் சாப்பிடு.  அதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகள், ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

ஓய்வு பெற்று சொந்த ஊருக்குத் திரும்ப வந்தேன்.  இங்கேயும் மருத்துவப் பணியைத் தொடர்ந்தேன்.  இன்று வரை வாழ்க்கையின் மாலைப் பொழுது பயனுள்ளதாகவே அமைந்து விட்டது.
. . . அன்று ஓர் அன்னை தன் மகனுடன் வந்தார்.  பாவா அனுப்பினார்.  பாவா என்று அவர் குறிப்பிட்டது அவர்கள் ஊர் பள்ளிவாசலின் மௌல்வியை, எப்போதும் பிறருக்கு உதவ விரும்புபவர்.  என்னிடம் மெய்யன்பு கொண்டவர்.   என்னுடைய இறைவனுக்குப் பெயரோ உருவமோ கிடையாது என்பதில் அவருக்கு உடன்பாடு.  அவர் யுனானி மருத்துவத்தில் தேர்ந்தவர்.  சில சமயங்களில் அவர் தமது நண்பர்களை என்னிடம் அனுப்பி வைப்பதுண்டு.
விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
சிறுவனின் பெயர்?
முகம்மது ரிஸ்வான்.
வயது? பத்து.
முகவரி.  ஏழு, பள்ளிவாசல் தெரு, ஊரின் பெயரைக் கூறினார்.
பையனின் தந்தை என்ன வேலை பார்க்கிறார்?
அவர் இல்லீங்க.  இவன் பிறந்த உடனேயே அவர் மௌத் ஆகிவிட்டார்.
உங்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறதா?
கிடைக்கிறது அய்யா, நான் சிறுவனின் முகத்தை உற்றுக் கவனித்தேன்.  என்றோ பழகிய நினைவு.  உங்கள் கணவரின்பெயர் அப்துல் ரஷீத் அல்லவா?
அன்னையின் கண்கள் வியப்பினால் மலர்ந்தன.
 உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?
அவர் எனது நெருங்கிய நண்பர்.  நாங்கள் போர்க்களத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள்.  பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பு இல்லை என்றாலும் அவரை நான் மறக்கவே இல்லை.  சரி, குழந்தையின் தொந்தரவு என்னவென்று சொல்லுங்கள் !

சதா சளி, இருமல், சீரான வளர்ச்சியே இல்லை.  படிப்பிலும் அவன் கவனம் செலுத்துவதில்லை.  உடம்பெல்லாம் சொறி, இன்னும் படுக்கையை நனைக்கிறான்.
உங்களுக்கு ஏதாவது சுகவீனம் உள்ளதா?
நிக்காவுக்கு (திருமணம்) முன் வரை நன்றாகத்தான் இருந்தேன்.  அதற்குப் பிறகு என் நிலை சீர் கெட்டு விட்டது.  மாதப் போக்கு சரியாக இல்லை.  ஒரே வெள்ளைப்பாடு.  அந்த மங்கையின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

Image result for kent materia medica

மேதை ஜே.டி.கெண்ட் முதல் பத்தியிலேயே அவர் அந்த மங்கையின் சுகவீனங்களைத் தொகுத்தளித்திருந்தார்.
She was healthy when she married, but now she has ovarian pains, menstrual troubles, she has lost all sexual response, is growing pale and waxy, and becoming violently sensitive and nervous.
 - The husband's history gives the cause, and this remedy will cure. 
                         - Lectures on Homeopathic Materia Medica 
முழுமையாகக் குணமடையாத மேக நோயாளி அதைத் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் பரம்பரைச் சொத்தாக விட்டுச் செல்கிறான் என்பதே சுருக்கம்.

இராணுவ  வாழ்வு ஒருவனைச் சீர் குலைக்கிறது என்று எழுதுகிறார் லியோ டால்ஸ்டாய் (மீட்சி என்ற நூலில்) அவரே ஒரு படை வீரர்.  அது எவ்வளவு உண்மை?
ரிஸ்வானுக்கு நான் கொடுத்த மருந்துகள் தூஜா ஏணி முறையில்.  தொடர்ந்து டியூபர்குலினம் பொவைனம் இரு உருண்டைகள்.  இறுதியாக மெடோரினம் (200).

விளைவு முழு நலம்.  ஹோமியோபதி இயக்கத்திற்கு இன்னொரு வெற்றி.

                                                                      -
நோய்க் குறிகளுக்கும் அதன் மூலமாக துயரடைந்திருக்கும் நபரின் உடற்கூற்றுக்கும் தொடர்பு உண்டு.  அதே போல் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு வரலாறு உண்டு.  நோய்வாய்ப்பட்டவரின் உடற்கூற்றுக்கும், மருந்தின் இயல்புக்கும் தொடர்பு இருக்குமானால் நோயாளி சீரடைவது உறுதி  அப்படி இல்லாவிட்டாலும் நோய்க் குறிகள் பிதுங்கிக் கொண்டு வெளிக்காட்டுமானால் அப்போதும் நோயாளி சீரடைவது நடக்கக் கூடியதே.
எல்லா மருந்துகளின் செய்முறையை விளக்கமாக விவரித்த மருத்துவர் டி.வி. மெடோரினம் குறித்து அவ்வாறு செய்யவில்லை.  மருத்துவர் நாஷ் ஒவ்வொரு மருந்தின் குறிகளையும் வரிசைப்படுத்துவார்.  ஆனால் இந்த மருந்து குறித்து அவர் இவ்வகையில் எழுதவில்லை  வில்லியம் போயரிக், ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் ஆகிய இருவரும் நியாயம் வழங்கியிருக்கிறார்கள்.  அவற்றைப் படிக்கும்பேது இந்த மருந்தும் ஒரு பல்முனை நிவாரணி என்பது புலப்படுகிறது.

பிடிவாதமாக விலக மறுக்கும் (obstinate) நோய் எதுவாக இருந்தாலும் இந்த மருந்தின் துகள் அதை நீக்கி விடும் என்பது என் மருத்துவ அனுபவம்.
கொனேரியா (மேகவெட்டை) எனப்படுவது ஒரு பால்வினை நோய் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் கிடையாது.  இது பாரம்பரியமாகவும் தொடரலாம்.  அல்லது பாலுறவினாலும் ஏற்படலாம்.  இது உடலில் குடி கொண்டால் மூட்டுக்களில் வீக்கம், அழற்சி, நோவு, மீண்டும் நீட்டி மடக்கி சுழற்ற முடியாத நிலை.  இது ஏற்படுமானால் இதை நீக்குவதற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம்.  எந்த வீரியத்தில் உபயோகப்படுத்துவது என்பது அவரவர்களுடைய அனுபவத்தைப் பொறுத்தது.

நோய்க் குறிகள் வெளிப்படும் நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  இதில் இது கருத்துக்கள் கிடையா.  அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது மருத்துவர் கெண்டின் கூற்று.  கொனேரியா எனற பால்வினை நோய் இரண்டாவது தோஷத்தைச் சேர்ந்தது என்று கூறுவார்கள்.  மேதை ஹானிமனின் கருத்தும் அதுவே, இதை வாதம் என்று ஆயுர்வேதம் கூறும்.  சித்த மருத்துவமும் இதை ஏற்றுக் கொள்கிறது.  பாலுறவின் விளைவாக இந்த சுகவீனம் தோன்றியிருந்தால் அதற்கு மருந்து தூஜா.  அப்படி இல்லாமலும் மூட்டுக்களில் நோவும், வீக்கமும், அழற்சியும் ஏற்படக்கூடும்.  அப்போது நம் கவனத்திற்குரியது ரஸ்டாக்ஸ்.  எந்தத் தோஷத்தின் விளைவாக இத்தகைய நிலை தோன்றியிருந்தாலும் அப்போது தொடர் மருந்தாகப் பயன்படுவது மெடோரினம்.  மூன்றாவது தோஷத்தின் விளைவாகவும் மூட்டுக்களில் நோவும், வீக்கமும், வலியும் ஏற்படக் கூடும்.  அந்த நிலையிலும் கூட மெடோரினத்தை மருந்தாகக் கொடுத்துப் பயன் கண்டிருக்கிறேன்.

பொதுவாக நைட்ரிக் அமைலத்தையும், கல்காரிய பாஸ்பரிகத்தையும் மூன்று தோஷத்திற்கும் நிவாரணிகளாகக் கூறுவார்கள்.  அந்த வகையில் இந் நோய்க் கழிவுப் பொருளையும் பயன்படுத்தலாம் என்பதே என் அனுபவம்.
நோயை விரைவாகக் குணப்படுத்தவும், தடுப்பாகவும் பாஸிலினத்தைப் பயன்படுத்தலாம் என்றும் போயரிக் எழுதுகிறார்.  அந்தப் பட்டிலில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இரு நுறாவது வீரியத்தில் இதைக் கொடுத்து விடலாம்.  ஏற்றதாக இருந்தால் நிலையைச் சீராக்கி  விடும்.  இல்லையானால் கழிப்பில் நீங்கிப் போகும் தீங்கு ஏதும் நிகழாது  இதுவும் என் அனுபவம்.
வீரியத்தைப் பற்றிப் பேசும்போது, எனது நிலையை தெளிவாக்க விழைகிறேன்.  பொதுவாக நோய்க் கழிவுப் பொருளை இருநுறாவது வீரிய்த்தில் தரலாம்.  சற்றுப் பொறுத்துப் பார்ப்பது சிறந்தது.   அந்த வீரியத்தில் எதிர்பார்த்த அளவு பயன் விளையாவிட்டால் ஐம்பது மில்லெசிம்மல் வீரியத்தைப்பயன்படுத்துகிறேன். ஏற்றதாக இருப்பின் அந்த வீரியம் நல்ல பயனைத் தருகிறது.  பொறு, கவனி என்பவை மிகச் சிறந்த பரிவுரைகள்.  ஆழமாகப் பணிபுரியும் மருந்துகள் மெதுவாகத்தான் செயல்படும்.  நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.  நோயாளிகளின் மனச்சாந்திக்காக சீனி உருண்டைகள் தரலாம்.  அவைகளும் பயன் தருபவையே என்று கெண்ட் எழுதுகிறார்.
நேற்று முன் தினம் நீங்கள் கொடுத்த மருந்து அற்புதமான முறையில் பயன் தந்தது.  அதையே மீண்டும் கொடுங்கள் என்று சில அன்பர்கள் கூறுவர்.  நான் மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.  அது சீனியுருண்டை என்பது எனக்கு மட்டுமே தொரியும்.
Image result for medorrhinum
இந்த மருந்தின் மனக்குறிகள் சிந்தனைக்குரியவை.  எந்தச் செய்கையிலும் ஒரு பரபரப்பு,  நிராசையைக் காட்டும் முகத் தோற்றம்.  அவரால் எண்ணங்ளை ஒருமுகப்படுத்தவே இயலாது.  எடுத்த செயலில் வெற்றி அடையவே இயலாது என்று ஒரு பிடிவாதமன நம்பிக்கை.  உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் வரும் (நினைவு கூர்க  மேகவெட்டைக் கிராந்திக்கும் இந்த மன இயல் உண்டு) மொத்தத்தில் அவர் ஓர் அழுமூஞ்சி.  இந்த நிலையில் இந்த மருந்து பயன் தருமா? என்ற கேள்விக்கு இடையூடாக கொடுப்பதில் தவறு இல்லை என்று மட்டுமே என்னால் கூற முடியும்.  ஐம்பது சதவீதம் நல் வாய்ப்பும் உண்டு எப்போதுமே இது உண்மை.
பொதுவாக உடலில் பல கழலைகள், வலியில்லாமல் தோன்றும்.  தோல் நீர் சுரந்து முடிச்சாக தொங்கினால் அதைக் கரைக்க கல்காரிய ஃப்ளோராவையும், தொடர்ந்து லூட்டிகத்தையும் தேர்ந்தெடுப்பது வழக்கம்..  ஆனால் இரண்டு மாத்திரை மெடோரினம் மட்டும் அந்த அன்பரைக் குணமாக்கிவிட்டது.  நான் அவரிடம் கண்ட சிறப்புக் குறி அவர் எப்போதும் காலை ஆட்டிக் கொண்டே அமர்ந்திருந்தது.  பலரிடம் இந்தக் குறி இயல்பிலேயே அமைந்திருக்கும்.


மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருமி, இருமி கோழையை வெளிப்படுத்துவதும்,  அவர் அந்த நிலையைச்  சமனமாக்க குப்புறப்படுப்பதையும் பார்த்தேன்.  மெடோரினம் 200 அவருடைய மூச்சுத் திணறலை நிரந்தரமாகக் குணப்படுத்தி விட்டது.

சிறுகுழந்தை ஒன்றின் ஆசன வாய்ப் பகுதி முழுவதும் சிவந்து வெந்து போயிருந்தது.  அது கைவிடாமல் கதறிற்று.  உடலில் சிறு சிறு தடிப்புக்கள், நொந்து போன தாய் என் ஆசானிடம் வந்தார்.  அவருடைய பரிவுரை மெடோரினம் மறுநாளே எல்லாம் மறைந்து போயின.

இவை அனைத்தையும் இங்கு வெளிப்படுத்துவதற்குக் காரணம், இந்த மருந்து மூட்டு வலிக்கு மட்டும் பயன்படும் என்று குறைத்துக் கொள்ளாமல், நமது கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

*******************************************************************
நோய்க்கழிவுகளின் அற்புதங்கள் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக