சனி, 3 ஜூன், 2017

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1 -மேஜர் தி.சா.இராஜூ



   கழிவுப் பொருட்களும் சிறந்த மருந்தாகும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று முன்னரே எண்ணியிருந்தேன்.  அன்பர்கள் தரும் ஊக்கம் அந்தச் செயலை மேலும் விரைவுபடுத்தும்.  ஆழ்ந்து ஆராயப்படுத்த வேண்டிய அறிவியல் துறை இது.

உடலின் கழிவுப் பொருளான மலம், சீழ், சிறுநீர், வியர்வை, கண்ணீர், எச்சில் ஆகியவை அனைத்துமே சிறந்த மருந்துகளாகப் பயன்படும்.

 இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் பாட்ச் (1880-1936) இது குறித்து நிறையவே சிந்தித்திருக்கிறார்.  அவரை முதலில் ஆங்கிலேயர்கள் போற்றினர்.
 பின்னாளில் அவரை எள்ளி நகையாடினர்.  மேதை ஹானிமன் தமது பிறந்த மண்ணில் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  அவர் ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகருக்கு வந்து மருத்துவத் தொண்டாற்றினார்.  பெறும் புகழ் ஈட்டினார்.  இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் எப்போதும் கடும் பகை.  அதன் காரணமாகவே ஆங்கிலேயர்கள் ஹோமியோபதி மருத்துவத்தைக் குறித்துப் பாராட்ட மறுத்தனர்.  பங்காளிக் காய்ச்சல் உலகில் எல்லைப் பகுதிகளிலும் உண்டு.
Image result for tubercle bacilli
காசநோய்க்கோழையில் வெளியேறும்  ட்யூபர்குல் பாஸிலஸ் என்ற கிருமியை ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தி தயாரித்த மருந்து டியூபர்குலினம் 

பாஸிலினம், டியூபர்குலினம், யூபர்குலினம் பொவைனம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டுப் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் புருவங்களை உயர்த்தினார்) மெடோரினம், லூட்டிகம் ஆகியன குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சிலர் அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.  ஆனால் மார்பிலினம், மாலண்டரினம், கார்ஸினோஸின், ஹைட்ரோபோபினம், இன்ஃப்ளூன்ஸியம், பர்ட்டுஸின், பெஸ்டினம், பைரோஜன், பாராடோடினம்  ஆகியவை குறித்து நம்மில் பலர் அறியார்கள்.  நம்முடைய மருந்துப் பெட்டிகளில் இவை இல்லை.

அண்மையில் வலிப்பு நோயால் அவதியுற்ற இளைஞர் ஒருவரை அவருடைய தந்தை அழைத்து வந்தார்.  எவ்வளவோ மருத்துவர்களை நாடிப் பெரும் தொகை செலவு செய்து பயன் காணாமல் என்னிடம் வந்தார்.  அவருடைய உடல் நலக் குறிப்பைத் தொகுத்தபோது அவருடைய ஏழாவது வயதில் தாளம்மை வந்த விவரம் தெரிந்தது.  தற்போது தாடைப் பகுதியில் நோவு இருக்கிறதா? என்று வினவினேன்.  எப்போதாவது வருவது உண்டு என்றும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் காய்ச்சல் வருவதாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.
பிறகு என்ன? இரண்டு மாத்திரைகள் பாராடோடினம் 200.  தொடர்ந்து ஆறு நாட்களுக்குச் சீனி உருண்டைகள்.
கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறை கூட அந்த இளைஞருக்கு வலிப்பு நோய் திரும்பவில்லை.  பாரோடோடினம் வலிப்பு நோய்க்கு மருந்தாகுமா என்று என் சக மருத்துவர்கள் கடுiமாக விவாதித்தனர்.

நாம் நமது கண்களையும், செவிகளையும் நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?ஒரு சுகவீனம் உடலில் ஆழப் பதிந்திருக்கிறது.  அது மீண்டும் அவ்வப்போது தலை தூக்குகிறது என்றால் அது நோயாளியின் சீரான இயக்கத்திற்குத் தடைக்கல்.  அதை நீக்கி விட்டால் அவன் நலம் பெறுகிறான்.  மற்ற முறையினர் இதை மறுக்கலாம்.  ஆனால் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

தாளம்மை குறித்து கல்கி வார ஏட்டில் சுவையான விவாதமே நிகழ்ந்தது.  அது ஒரு நோய்க்கிருமியினால் ஏற்படுகிறது என்று ஆங்கில மருத்துவர் ஒருவர் எழுதினார்.  நோய்க்கிருமிகளினால் ஏதும் நோய் ஏற்படாது.  ஏற்றவர் உடலில் நோய் அமைந்து கொள்ளுகிறது.  அதைத் துப்புரவு செய்ய நுண்ணுயிர்கள் வருகின்றன.  (கெண்ட் பேருரைகள் பக்.51) என்று நான் திருப்பிக் கொடுத்தேன்.  கல்கி பத்திரிகையினால் இதைச் செரித்துக் கொள்ள இயலவில்லை.  அதன் ஆசிரியரே அல்லோபதி மருத்துவம் பயின்றவர்.  விவாதத்தை வளர்த்தாமல் முடித்து விட்டார்.
Image result for BACILLINUM TUBERCULOSIS SPUTUM
காசநோயால் பாதிக்கப்பட்டவரின் கோழையில் இருந்து எடுக்கப்படுவதே பாஸிலினம் என்ற ஹோமியோபதி மருந்து
நான் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு கழிவுப் பொருள் குறித்துக் கூற விழைகிறேன்.  அது பாஸிலினம்.  இதைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஜே. காம்ப்டன் பர்னட். காசநோயால் பீடிக்கப்பட்டவரின் எச்சிலில்லிருந்து (கோழை) இது தயாரிக்கப்படுகிறது.  அடிக்கடி தடுமன் பிடிக்கிறது என்று தாயார் குறை கூறுவார்.  ``ப்ரைமரி காமப்ளெக்ஸ்’’ என்று கூறி ஊசி போட்டுத் துளைப்பார்கள்.  குழந்தைகள் என்னைக் கண்டால் தாவி ஓடி வரும்.  நான் மீட்டா கோலி அங்கிள் (இனிப்புருண்டை தருபவர்).

சாதாரணத் தடுமன், இருமல், காய்ச்சல் ஆகியவைகளுக்குக் குறிகளை அனுசரித்து மெர்க்யூரியஸ், பாடியாகா, ஆர்ஸனிக்கம் ஆல்பம், பெட்ரோலியம் ஆகியவற்றில் ஒன்றைத் தருவேன். இவை வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவைகள்.  இந்தக் கொத்தில் எதைத் தர வேண்டும் என்று யோசித்தே செயல்படுவேன் என்றாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் இடையூடாக இரண்டு மாத்திரை பாஸிலினம் தரலாம்.  தர வேண்டும் என்பதே எனது பரிவுரை.   ஏனெனில் இது காச நோய்ப் பிரிவைச் சேராதவர்களுக்கும் நிவாரணம் தருகிறது என்று போயரிக் (பக்.101) எழுதுகிறார்.  ஆனால் இதை மறுமுறை தர வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.   இந்த மருந்தை ஒரு வார இடைவெளியில் கொடுத்தேன்.  அவருடைய பரம்பரையில் காச நோய் இருந்தது.  அவர் கடும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றினால் அவதிப்பட்டார்.  அவருடைய சளி வற்றி விட்டது.  இருமல் அறவே இல்லை.  காய்ச்சலும் அருகி விட்டது.  ஆனால் அவருடைய உடல் முழுவதும் வட்ட வட்டமான தடிப்புகள், மோதிர வளையம் போல கண் இமைகள் கூடப் பாதிக்கப்பட்டிருந்தன.  நான் உண்மையிலேயே பயந்து போனேன்.

நோயுற்றவரின் சுற்றத்தார் என்னைக் கடுமையாகச் சாடினார்கள்.  காச நோய் சருமத்தின் மூலமாக வெளிப்படக்கூடும் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

வங்காளத்தில் புகழ் பெற்ற மருத்துவர் கூறக் கேட்டிருக்கிறேன்.  ஒன்று ஆஸ்துமா அல்லது எக்ஸிமா ஏதாவது ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  வேறு வழியில்லை.
தொடக்கக் காலத்தில் நான் இதை நம்பியிருந்தேன்.  பின்னாளில் என் முடிவுகள் வேறு மாதிரியாகி விட்டன.  ஒரு சுகவீனம் அது நீக்கப்படக்கூடியதாக இருந்தால் முறையான ஹோமியோபதி மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும்.

மண்ணீரல், கணையம், ஆகியவைகள் நிரந்தரமாப் பழுதாகிவிட்டால் அப்போது சுவரில் முட்டிக் கொண்டு பயனில்லை.  நாம் நோயாளிக்கு உபசாந்தியாக ஏதாவது மருந்து கொடுத்து அவனுடைய துயரங்களைத் தணிக்கலாம்.  நிரந்தரமாகக் குணப்படுத்த இயலாது.  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மிகுந்த பொறுமை, கவனிப்பு, உழைப்பு ஆகியவை தேவை.  இவை எத்தனை பேரிடம் இருக்கிறது?  நோயாளி நம்பிக்கை இழந்து விடுகின்றானே?  அவனுடைய சுற்றத்தார்களின் தாக்குதலை மருத்துவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  நாம் நமது எல்லைகளைத் தெரிந்து கொண்டு வரையறுத்து அதற்குள் வட்டாட வேண்டும்.
இந்த நோய்க் கழிவுப் பொருட்கள், நோயைத் தவிர்க்கும், கட்டுப்படுத்தும், சீராக்கும் அவற்றை அளவோடு பொறுமையுடன் கையாண்டோமானால் . . .
....
...
நோஸோடு[NOSODE] என்றால் என்ன?
[Nosodes are specialized homeopathic remedies that are prepared by taking actual diseased matter from a sick animal such as diseased tissue or nasal discharge.]

என்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் சென்னையில் வசிக்கிறார்.  சிறிய அளவில் தொழில் துவங்கி தமது நேர்மையான உழைப்பால் பெரும்பொருள் ஈட்டினார்.  மொழி அன்பர்.  சிறந்த பண்பாளர்.  அவரிடமிருந்து கடிதம் வந்திருந்தது.
தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கிறேன்.  பல மருத்துவர்களை நாடியும் முழுமையான குணம் பெற இயலவில்லை.  உங்கள் உதவியை நாடி வருகிறேன். . . ஆனந்தன்.
அவரை நன்கு பரிசோதித்த பிறகு கூறினேன்.  நானே உங்களுக்கு மருந்து தருவேன் என்றாலும் உங்கள் வீட்டின் அருகிலேயே புகழ் பெற்ற மருத்துவர் இருக்கிறார்.  பலர்  அவர் மூலம் குணமடைந்திருப்பதாக அறிகிறேன்.  அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.  கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.  ஆனந்தன் ஊர் திரும்பினார்.
நான் குறிப்பிட்ட மருத்துவர் கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழகத் தலைநகரில் மருத்துவம் புரிகிறார்.  அவருடைய மருத்துவமனையில் எப்போதும் கூட்டம் குழுமியிருக்கும்.  ஓய்விலிருக்கும்போது அவரைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்.  நல்ல வருமானம் உடையவர்.  ஒரு ஹோமியோபதி மருத்துவர் நல்ல நிலையில் இருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆறு மாதங்களுக்குப் பின்பு சென்னை சென்ற போது நண்பர் ஆனந்தனைச் சந்தித்தேன்.  அவருடைய உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.  அன்று மாலையிலேயே ஆனந்தனுடன் மருத்துவ நண்பரைக் காணச் சென்றேன்.

ஆனந்தனுக்கு கொடுத்திருந்த மருந்து விவரங்கள் உடைய காகிதத்தை என்னிடம் கொடுத்தார் என் மருத்துவ நண்பர்.  அதைக் கவனமாகப் படித்தேன்.  ஆனந்தனுக்கு நோஸோடு எதுவுமே தரவில்லையா? என்று வினவினேன்.  அவர் நேரடியாகப்  பதிலுறுக்கவில்லை.  மறுநாள் மாலை வரும்படி நண்பர் ஆனந்தனைக் கேட்டுக் கொண்டேன்.  அவர் திரும்பிய பிறகு மருத்துவருடன் உரையாட முயன்றேன்.  அவர் கேட்டார்.  நீங்கள் கேட்டது எனக்குப் புரியவில்லை.  மூக்கில் மருந்தேதும் செலுத்தவில்லையா என்று தானே கேட்டீர்கள்?

நான் திடுக்கிட்டேன்.  நோஸோடு என்பதைப் பற்றி அவர் ஏதும் அறியார் என்பதோடு அது மூக்கில் செலுத்த வேண்டிய மருந்து என்று அவர் எண்ணியிருக்கிறார் என்று உணர்ந்தபோது நான் தளர்ந்து போனேன்.   முறை சாராக்கல்வி கற்றுச் சான்றிதழ் பெற்றுத் தொழில் புரிவதன் விளைவு இது.  பிலடெல்ஃபியாவிலும், அமெரிக்காவிலும் ஹோமியோபதிச் சான்றிதழ் பெற ஒருவர் மருத்துவக் கல்வியில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் ஹோமியோபதி மருத்துவத் தொழில் புரியும் உண்மையான தொண்டர்கள் படித்த மக்களிடையே விழிப்புணர்வை உண்டு பண்ணுகிறார்கள்.  பல சக மருத்துவர்களும் அவர்கள் நடத்தும் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுகிறார்கள்.  இரண்டு வாரங்கள் தொடர்ந்து மாலை வகுப்புகள் நடத்தி அவர்களுடைய மருத்துவ அறிவை வளர்க்கிறார்கள்.  இது மாபெரும் தொண்டு.  மற்ற மாவட்டங்களிலும் இவ்வாறு செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை.  அப்படி நடக்குமானால் அது பெரிதும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.
முறைசாராக் கல்வி பெற்றவர்களின் மூலமாகத்தான் நம் நாட்டில் ஹோமியோபதி இயக்கம் வளர்ந்திருக்கிறது.  பட்டப்படிப்பு பெற்ற மருத்துவர்கள் எளிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று தொழில் புரிய முன் வருவதில்லை.  அவர்கள் விழையும் படடோப வாழ்க்கை முறை அங்கில்லையே !

இன்னுமோர் எடுத்துக்காட்டு-என்னிடம் சிகிச்சைக்கு வந்த அன்பர் ஒரு நீண்ட பட்டியலைக் காட்டினார்.  சென்னையில் வசிக்கும் புகழ் பெற்ற மருத்துவரிடம் கடந்த இரண்டாண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  அந்தப் பட்டியலில் ஒரு நோஸோடு கூட இல்லை.  இதற்குக் காரணம் அறியாமை மட்டும்தானா?

இன்னோர் எதிர்மறை உதாரணம்.  இந்த அன்பர் வசிப்பது மத்திய யூனியன் பிரதேசத்தில்.  அங்கே ஒரு சமய நிறுவனம் செயல்படுகிறது.  அங்கு திறமைமிக்க வங்காளி மருத்துவர்கள் பணிபுரிகிறர்கள்.  அவர்களுடைய மருத்துவமனையில் இந்த அன்பர் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு அளிக்கப்பட்டிருந்த மருத்துவச் சீட்டையும் படித்துப் பார்த்தேன்.  இவருக்கு நோஸோடு கொடுக்கப்பட்டுள்ளது.  எல்லாம் பத்து எம்மில் துவங்கி ஸி.எம்., எம்.எம். வரை.  நான் உண்மையிலேயே கலங்கிப் போனேன்.  அங்கிருந்த மருத்துவர்கள் தொண்டுணர்ச்சிமிக்கவர்கள்.  வங்காளிகள் அவர்களும் நம்மைப் போல் ஹிந்தி பயில மறுப்பவர்கள்.  கேள்விகள் ஆங்கிலத்தில், பதில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்.  நோயாளி என்ன விவரித்தார்.  மருத்துவர் என்ன புரிந்து கொண்டார்.  எவருக்கும் வெளிச்சமில்லை.
நம்மிடம் வரும் நோயாளிகளை அன்புடன் நடத்த வேண்டும்.  அவர்கள் கூறுவது அனைத்தையும் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.  அவர் பேசுவதைத் தடை செய்யக் கூடாது.  மருத்துவர் தான் கூறுவதைச் செவி மடுக்கிறார் என்ற நேய உணர்வே ஓர் அருந்தனம்.  அந்த முதலீடு நம்பிக்கையை வளர்க்கும்.   அது நல்லதொரு பாலம்.  நம்பிக்கை மட்டுமே நோயாளியைக் குணப்படுத்திவிடும்.

. . . ஓரிரண்டு நாட்களிலேயே நோயாளி எந்தத் தோஷத்தினால் (மியாசம்) பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மருத்துவனுக்கு விளங்கி விடும்.  குறிகளை அனுசரித்து மருந்துகளைக் கொடுத்த பிறகு அவர்கள் முழுமையாகக் குணம் பெற ஒரு நோய்க் கழிவுப் பொருளைத் [NOSODE] தேர்ந்தெடு, அதை இரு நூறாவது வீரியத்தில் அதன் இரண்டு மாத்திரைகளைக் கொடுப்பேன்.  அவர் மீண்டும் மருத்துவமனைக்கு நோயுடன் வர மாட்டார்.  இது எனது ஆசானின் பரிவுரை.  இது எனக்கு மிகவும் பயனளித்திருக்கிறது.

அற்புதங்கள் (MIRACLES) என்று கூறுகிறார்களே, அவைகள் எங்கள் மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கின்றன.  அவைகளைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.  வாரு மனுஷரே லேவு, தேவுடு (அவர் மனிதரே அல்லர் தெய்வம்) என்று அன்பர்கள் என் ஆசானைப் புகழ்வார்கள்.  இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தியவைகள் என் ஆசான் அளித்த நோய்க் கழிவுப் பொருட்கள் என்பது அவருடைய உள்வட்டத்தினருக்கு மட்டுமே தெரியும்.
நோஸோடே உனக்கு அஞ்சலிகள்.  நீ நோய்கள் அனைத்தையும் விரட்டி விடுகிறாய்.  துயருற்றவரை நிமிர்ந்து நடக்கச் செய்கிறாய்.
*****

நோய்க்கழிவு மருந்துகளின் அற்புதங்கள் தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக