திங்கள், 17 ஏப்ரல், 2017

argentum nitricum

ஹோமியோபதி கனிமங்கள்

மேஜர் தி.சா.இராஜூ


அர்ஜெண்டம் என்பது வெள்ளி என்ற கனிமம்.  நைட்ரிகம் வெடியுப்பு.  இவை இரண்டையும் கலந்து ஒரு மருந்தாக்கி, அதை வையகத்திற்கு அளித்த பெருமை மேதை ஹானிமனையே சேரும்.  இவர் எழுதியுள்ள மெட்டீரியா மெக்காப்யூராவில் இந்த மருந்தின் விவரம் உள்ளது.
நாம் சுவாசிக்கும் காற்றின் பெரும்பகுதி சுமார் எண்பது சதவீத வெடிவாயுவாகும்.  பயிர் பச்சைகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அம்சம் இது.

பழுப்பு நிறமுள்ள கண்ணாடிப் புட்டியில் இதை வைத்திருப்பார் என் அம்மான்.  அதன் மூக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.  கண்ணோய் வந்தால் அதை இரு கண்களிலும் விடுவார்.  தொண்டை கட்டி இருமல் வருமானால் ஒரு ஈர்க்குச்சியில் பஞ்சைச் சுற்றி அதை அந்த திரவத்தில் நனைத்து தொண்டையில் தடவுவார்.  இந்த முறையிலுமே அது நிவாரணம் தருவதை நான் கண்டிருக்கிறேன்.

உடல், உள்ளம், அறிவு இவற்றின் இணைப்பே மனித வாழ்வு.  உயிர் வாழும் எல்லாப் பிராணிகளுக்குமே உடல் உண்டு.  பெரும்பாலானவைகளுக்கு உள்ளமும் உண்டு.  இந்த அறிவுப் பகுதி சம நிலையை இழக்கும்போது வாழ்க்கையில் பெரும் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

ருஷீத் அகமது என்ற என் நண்பர் தன் தாயாரை அழைத்து வந்தார்.  அவருக்கு வயது நாற்பத்தைந்து இருக்கும்.  கட்டமைந்த உடல்வாகு.  கண்ணாடி அணிந்திருந்தார்.

இவர் என் வால்தா சாகிப் - ரஷீத் கூறினார்.

முகத் தோற்றத்திலிருந்தே அது விளங்குகிறது  இவருடைய கோளாறு என்ன?
அது பலவகைப்பட்டதுங்க.  சரியாக உண்பதில்லை.  உறக்கம் கிடையாது.  காரணமற்ற சிடுசிடுப்பு.  மறதி பேசினால் கோபம் மிகுதியாகிறது.

பெயர்?
நஸ்ரத் பேகம்
உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்கிறார்?
அவர் துபாயில் இருக்கிறார்.

என் முன்னால் பதினைந்து நிமிஷங்கள் அமர்ந்திருந்த நஸ்ரத் பேகம் நான்கு முறை ஏப்பம் விட்டார்.  `யோவ் யோவ்’ என்ற ஓசை.

உங்களுடைய குறைபாடுகளைச் சொல்லுங்கள் தாயே.

நானே சொல்லுகிறேன் ரஷீத் பேசத் துவங்கினார்.  எங்கள் வீட்டுக் கொல்லைப்புரத்தில் கேணி   இருக்கிறது.  பக்கத்தில் குளியலறை.  அங்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று நேரான பாதை.  இன்னொன்று இரண்டு கதவுகளைத் திறந்து கொண்டு போக வேண்டும்.  எவ்வளவு முறை சொன்னாலும் அம்மா அந்தச் சுற்று வழியாகத்தான் போவார்கள்.  நீரைச் சேந்தி எடுத்துக் கொண்டு உடலில் தண்ணீரை ஊற்றி, சோப்பைப் குழைத்து தடவிக் கொண்டு அரைமணி நேரம் குளியல்.

வானத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பார். அவசரப்படுத்தினால் சிடுசிடுப்பு.  துவாலையை குளியலறையிலேயே வைத்து விடுவார்.  அதை மறந்து விட்டீர்களே என்று கூறினால் சினங் கொள்ளுவார்.   பிறகு கண்ணாடியின் முன்பு இருபது நிமிஷம்.  ஓதுவதற்கு சென்றால் அங்கே ஒரு மணி நேரம் கழிந்து விடும்.

இப்படி எத்தனை நாளான இருக்கிறது?
ஒரு வருஷமாக.
மாத விலக்கு சீராக இருக்கிறதா?
இல்லிங்க.  அடிக்கடி கெடு தப்பிப் போகும்.  அது பெரிய தொந்தரவு, இடையிலே வெள்ளைப்பாடு வேறு.

இன்னொரு விவரமும் சொல்ல வேண்டும். ரஷீத் குறுக்கிட்டார்.   அந்தச் சமயங்களிலும் அதற்கு முன்பும் மன இயக்கம் பெரிதும் சீர் கெடுகிறது.  சிறுநீர் கழிக்க ஓடுகிறார்.  சில சமயங்களில் உள்ளாடை நனைந்து விடுகிறது.

உங்கள் கிராமத்தில் தர்கா இருக்கிறதா?
இருக்கிறது.  இவர் அடிக்கடி அங்கே போவதுண்டு.
ரிக்ஷாவில் போவாரா?

நடைதான் மிகவும் வேகமாக நடப்பார்.  நடப்பதில் மிகுந்த ஊக்கம் காட்டுகிறார்.  அங்கே ஜிந்தா மியானின் மிட்டாய்க்கடை இருக்கிறது.  நிறைய இனிப்புகள் வாங்குவார்.  குழந்தைகைளுக்கெல்லாம் கொடுப்பார்.  அவரும் நிறையச் சாப்பிடுவார்.  உங்களுக்குக் சர்க்கரை வியாதி வரப் போகிறது என்று நான் கூறினால் என்னைக் கடிந்து கொள்ளுவார்.
ஒரு மருந்தைத் தேர்ந்தெடுக்கும் முன்பு நான் மூன்று நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்வேன்.  பொதுவாக எவரும் மருத்துவர்  ஈ.பி. நாஷைப் பொருட்படுத்த மாட்டார்கள்  (nash is a rash) ஆனால் நான் அவருடையதையும் படிப்பேன்.  சிறப்பாக அவர் மருந்தின் இயல்புகளைப் பட்டியல் போட்டுக் காட்டுவார்.  293-97-வது பக்கங்களில் அவர் விவரமாகவே இந்த மருந்தைக் குறித்து பேசுகிறார்  என்றாலும் முதல் பட்டியலே எனக்குப் போதுமானதாக இருந்தது.  மருந்தின் படமும், நோயாளியின் தன்மையும் அறுபது சதமாவது ஒத்துப் போக வேண்டும் என்பது என் மதிப்பீடு.

அந்த அம்மைமாருக்கு நான் நான்கு பொட்டலங்கள் மடித்துக் கொடுத்தேன்.  இரண்டு நாள் இடைவெளியில் காலை வேளையில் ஒரே ஒரு முறை மட்டும் தாயும் ரஷீத்தும் திரும்பிச் சென்றார்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு வியாழனன்று அவரைத் தர்காவில் சந்தித்தேன்.  அம்மா நல்லா இருக்காங்களா?
அவர் விரல்களைக் குவித்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.
இன்ஷா அல்லா(ஹ்)

ஒரு மருத்துவனுக்கு அது போதுமானது.  அந்த அன்னைக்கு நான் கொடுத்த மருந்து அர்ஜெண்டம் நைட்ரிகம்.  ஆறு, முப்பது,  இரு நூறு இறுதியில் பாஸிலினம் இரு நூறு.  இருபது ஆண்டுகளாக அவர் பட்ட துயரங்கள் விலகின.

2.

மருத்துவர்  கெண்ட் இதை அறிவு மட்டத்தில் சிறப்பாகப் பணிபுரியும் மருந்து என்று குறிப்பிடுகிறார்.   நோயாளி  சில விசித்திரமான முடிவுக்கு வந்து விடுகிறான்.  அதனின்று அவன் விடுபட இயலுவதில்லை.  அவன் தன் போக்கிலேயே செல்லுகிறான்.  தான் செய்வதே சரி என்று நியாயம் கற்பிப்பான்.  அவன் முன்பு பல காட்சிகள் எதிர்ப்படும்.  அவை உண்மை என்றே அடித்துக் கூறுவான்.  அடிக்கடி கிறுகிறுப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படும்.  தனக்கு ஏதோ தீங்கு நிகழப்போகிறது என்று அச்சமுறுவான்.  இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு மரணம் நிச்சயம் என்று உறுதி கூறுவான்.  இவை அவருடைய (கெண்ட்) கணிப்பு.  இந்த வகை மனித பலரை நாம் வேளைகளில் சந்திக்கிறோம்.

இவை மட்டுமல்ல.  இது கடுமையான தலைநோவுக்கும் மருந்து.  தலையைச் சுற்றி இறுக்கமான கட்டுப் போட்டால் வலி சமனமாகும் தன்மை பிக்ரிக் அமிலத்திலும், எட்டிக்காயிலும் உள்ளது.  அதே வரிசையில் அர்ஜெண்டம் நைட்ரிகத்தையும் சேர்க்கலாம்.

என் அண்டை வீட்டில் ஒரு சிறுமி இருந்தாள்.  இயல்பிலேயே இனிமையான குரல்வளம் படைத்தவள்.  சென்னையிலுள்ள இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்றாள்.  சிறு வயதிலிருந்தே அவளுடைய திறமையைக் கண்டு நான் பாராட்டியதுண்டு.  அவள் என்னைக் காண வந்தபோது அவளைப் பாடும்படி வேண்டினேன்.

அவள் பாடினாள்.  நான் கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்தேன்.  சுகானந்தத்தில் முழுகினேன்.  அவள் ஆரபி ராகத்தை ஆலாபனம் செய்தாள்.  மேல்மட்டத்திற்குச் சென்றபோது ஒலி நின்றது.  நான் கண்களைத் திறந்தேன்.  அவள் வாயில் கையை வைத்துக் கொண்டு செருமினாள்.

என்ன குழந்தாய்?
குரல் கம்மி விடுகிறது ஐயா,
அடிக்கடி இப்படி நிகழ்கிறதா?
ஆமாம்.  மேல் ஸ்தாயியை எட்டும்போது அங்கே நிலைத்து நிற்க முடிவதில்லை.

மறுநாள் அவளுக்குக் கொடுத்த மருந்து ஆர்ஜெண்டம் நைட்ரிகம் ஆறு, மூன்று நாட்கள் தொடர்ந்து மருந்துண்டாள்.  மூன்று வாரம் பொறுத்து லூட்டிகம் 200.

நான் வேறு ஏதாவது பத்திய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா?
முன்னாட்களில் நமது இசைக்கலைஞர்கள் வெள்ளியினால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள்.  விலைவாசி ஏற்றத்தினால தற்போது அது சாத்தியமில்லாமற் போய்விட்டது என்றாலும், இரவில் ஒரு வெள்ளிக் குவளையில் நீரை நிரப்பி காலையில் அதை அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு விளம்பரம்.  அந்த மங்கை அன்று மாலை பாடவிருந்தாள்.  எப்போதுமே இசை என்னை ஈர்க்கும்.  இன்பமூட்டும்.  அவள் மேடைக்கு வந்ததும் முன் வரிசையில் என்னைப் பார்த்தாள்.  கீழே இறங்கி அரங்கத்திற்கு வந்து என் காலைத் தொட்டு வணங்கினாள்.

 இப்போதெல்லாம் எனக்கு ஒரு தொந்தரவுமில்லை.  அவள் மேடைக்குத் திரும்பியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த புள்ளிகள் என்னைப் பொறாமையுடன் பார்த்தது இன்னும் என் நினைவில் நிற்கிறது.  நான் மேதை ஹானிமனை உள்ளத்தால் தொட்டு வணங்கினேன்.  அடிக்கடி குரலை அதிகமாக உபயோகப்படுத்தும் அன்பர்களுக்கு இது மிக நல்ல மருந்து என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். (Clergyman’s Sore Throat).

வற்றலான சதைப்பிடிப்பில்லாத தோற்றம், வயதை மீறிய முதுமை.  நோய் கொண்ட பகுதியில் ஒரு நடுக்கம்.  தேவையற்ற பரபரப்பு.  வாழ்க்கையில் பிடிப்பிராது.  வறட்டு வேதாந்தம் மிக்க உரையாடல்.  மறதி, எல்லாச் செயல்களிலுமே ஒரு மறதியான போக்கு.  நடுநிலைமையோடு சிந்திக்கும் திறனையே இழந்து விட்டது போன்ற இயக்கம்.  இவை இந்த மருந்துக்கு ஏற்றவரின் பொதுக்குறிகள்.  நோய் மெல்ல வரும் அதே வகையில் விலகும்.  குணமே ஆகாத ஒரு நோய் தன்னைப் பிடித்திருப்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவரை ஆட்கொண்டிருக்கும்.  தலையில் மட்டும் பல கோளாறுகள்.
 தொந்தரவுகளின் மையப் புள்ளியே அது தானோ என்று எண்ணத் தோன்றும்.  மண்டை ஓடே விலகிக் கொள்ளும் வகையில் நோவு.  அதற்காகவே அவள் தலையைச் சுற்றி துணியைக் கட்டிக் கொள்ளுகிறாள்.  ஒரு கிறுகிறுப்பு,  பார்வையில் ஒரு தடுமாற்றம், வெப்பத்தை அவனால தாங்கவே இயலாது.
தொடர்ந்து கண்களைப் பயன்படுத்த முடியாத தன்மை.  தையல் வேலை செய்ய முயன்றால் கண்களில் நோவெடுக்கும், கைகள் நடுங்கும்.  கண்களில் நீர் கசிந்து புளிச்சை படியும்.  கண் நரம்புகளில் தளர்ச்சி.  வெண் பகுதியில் சிறு சிறு புண்கள்.

ஈறுகள் வீங்கித் தொல்லை கொடுக்கும்.  உதிரம் கசியும்.  நாவில் மொட்டு மொட்டாக புண்கள் கிளைக்கும்.  அண்ணத்திலும் புண்கள் இருக்கும்.  நாவின் நுனி சிவந்து காணப்படும்.  அதை அசைக்கவே முடியாது.  தவிர சுவை உணரும் திறனையும் நாவு இழந்து விடும்.  தொண்டைப் பகுதி இரணமாக இருக்கும்.  வறட்டு இருமல், தொண்டையியில ஏதோ சிக்கிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வு இருக்கும்.  அதை அழுத்திப் பிடித்தது போன்ற நிலை.

வயிற்றின் மேற்புறம் வீங்கியே காணப்படும்.  அடிக்கடி ஓசை மிகுந்த ஏப்பம்.  காற்று கீழ் நோக்கியும் பாயும்.  வயிற்றிலும் ஓர் இறுக்கம்.  எரிச்சலும் இருக்கும்.  உண்ட உணவு செரிமானமாகாது.  ஓக்காளம், வெளிப்பாட்டில் நிறையச் சளி இருக்கும்.  இடதுபுறம் விலா எலும்புக்குக் கீழே ஒரு நோவு.
வயிற்றில் வலி,  கூடவே போக்கும் அதிகமாக இருக்கும்.  திப்பி, திப்பியாகப் பச்சை நிறத் துணுக்குகள் காணப்படும். உண்ட உடனோ நீர் அருந்திய பிறகோ, உடனுக்குடன் வெளிப்போக்கு.  இனிப்புக்களை வயிறு ஏற்காது.  ஆசன வாயில அரிப்பும் இருக்கும்.

தன்னையறியாமல் சிறுநீர் பிரியும்.  இரவு, பகல் எந்த நேரத்திலும் இது நிகழலாம்.  சிறுநீர் சொட்டுச் சொட்டாகக் கருநிறத்தில் வெளிப்படும்.  சிறுநீரை முழுமையாக வெளிப்படுத்திய நிறைவு இராது.  கழித்த பின்பும் சில சொட்டுக்கள் வெளியாகும்.  சிறுநீர் விசிறி அடிக்கும்.  வெள்ளை நோயின் துவக்க நிலை, சிறுநீருடன் கெட்டியான வெண் திரவம் வெளிப்படும்.

3.

இந்த நேரத்தில் பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

1971-ஆம் ஆண்டு வங்கப் போர் முடிந்தபிறகும் அதன் எல்லையில் நாங்கள் தங்கியிருந்தோம்.  அப்போதும் நான் மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருந்தேன்.  படையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகும் முழுமையாகக் குணமடையாமல் பல உயர் அதிகாரிகள் என்னை நாடி வருவார்கள்.  பலரது வருகை வேடிக்கை பார்க்க மட்டும் இருக்கும்.  பிறகு சிலர் நிவாரணம் பெறுவது கண்டு இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டார்கள்.  அப்படி அறிமுகமானவர்தான் அன்பர் லலித்குமார் பூரி.  அவர் பல தொல்லைகளால் அவதியுற்றார்.  ஒரு மூன்று மாத காலத்தில் அவர் முழுமையான தெளிவு கண்டார்.  அதற்குப் பிறகு அவர் பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார்.  அவர்களில் ஒருவர்தான் இம்தியாஸ் அகமது.  லெப்டினன்ட் கர்னலாகப் பதவி வகித்தார்.  அவருடைய மனைவி டெல்லியில் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.  அவருக்கு இரு குழந்தைகள்.
ஒரு முறை நாங்கள் இருவரும் டெல்லிக்குப் பயணம் செல்ல நேரிட்டது.

 விமானத்தில் அடுத்தடுத்து இருக்கைகள்.  நான் தொடர்ந்து ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது.  டெல்லியில் அவர் தம்முடன் தங்கும்படி வேண்டினார்.  நானும் இணங்கினேன்.  அப்போதுதான் நான் அவருடைய மனைவியையும் இரு குழந்தைகளையும் சந்திக்க நேரிட்டது.

அவருடைய குழந்தை நிம்மி வெகு விரைவில் என்னை ஆட்கொண்டு விட்டாள்.  தன் ஆப்பில் கன்னத்தை என் முகத்தோடு ஒட்டி, என்னைக் குதிரை தூக்குமாறு பணித்தாள்.  நான் நெகிழ்ந்தே போய்விட்டேன்  ரத்தின கம்பளம் விரித்த வரவேற்பு அறையில் நிம்மியை முதுகில் சுமந்து தவழ்ந்தேன்.  `மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்’ அனுபவித்து எழுதுகிறார் வள்ளுவர்.  மறுநாள் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றேன்.  `ஷிப்பாகைர்’ என்று கையை ஆட்டி விடை கொடுத்தது நிம்மி.

ஒரு மாதம் பொறுத்து அன்பர் இம்தியாஸ் என்னைச் சந்திக்க வந்தார்.  எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்.
சொல்லுங்கள் ஐயா,
அவர் சிறிது தயங்கினார்.  சுற்றும் முற்றும் பார்த்தார்.
இங்கு யாரும் வர மாட்டார்கள்.  நீங்கள் மனம் விட்டுப் பேசலாம்.
தொழுகை வேளையில் சில நாட்களாக சிறுநீர் பிரிந்து விடுகிறது.  அதை அடக்க முடியவில்லை.  எங்கள் நியதிப்படி தொழுகை நேரத்தில் உடலில் சிறுநீர் படுமானால் நாங்கள் மீண்டும் குளித்த பிறகே ஓதுதல் செய்ய இயலும்.  நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.  அவர்கள் என்னை நன்கு பரிசோதித் பிறகு அறுவை சிகிச்சைக்குட்படும்படி பரிவுரை செய்துள்ளனர்.  அது எனக்கு உடன்பாடு அன்று,  உங்கள் முறையில் என் குறைபாட்டை நீக்க முடியுமா?

முறைப்படி அவரைப் பரிசோதித்தேன்.  அர்ஜெண்டம் நைட்ரிகம் அவருக்கேற்றதாக இருந்தது.  ஆகவே அதைத்தர முடிவு செய்தேன்.
`ஒரே மருந்து, அதுவும் குறைந்த அளவில் என்ற விதியில் எனக்கு முழு நம்பிக்கை.   அதையும் ஏணி முறையில் தான் கொடுப்பேன்.  ஆகவே ஆறு, முப்பது, இருநூறு வீரியத்தில் மருந்தை மூன்று நாள் இடைவெளியில் கொடுத்தேன்.  சிறுநீர் சிதறுவது மட்டுமின்றி அவருக்கிருந்த மற்ற குறைபாடுகளும் நீங்கிப் போயின.  அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவரானார்.

அன்று மாலை உலாவச் சென்றபோது அவர் எதிர்ப்பட்டார்.  பதினைந்து நாள் விடுப்பில் நாளை டெல்லிக்குப் போகிறேன். அவர் புறப்படும் நேரத்தை அறிந்து கொண்டேன்.

விமான நிலைத்தில அவரைச் சந்தித்து ஒரு மூங்கில் சிப்பத்தை அவரிடம் அளித்தேன்.  இம்தியாஸ் வினவினார் என்ன இது?
என் நிம்மிக்கு அதனுள் டார்ஜ்லிங் ஆரஞ்சுப் பழங்கள்.  அதன் சுளைகள் தேனை ஒத்த சுவையுடையவை.
அவர் நெகிழ்ந்து போனார்.  சென்ற கடிதத்தில் கூட பேகம் கேட்டிருந்தார்.  `கோடா அங்கிள்’ (கோடா-குதிரை) எப்போது வருவார் என்று நிம்மி வினவுகிறாள்.

இரண்டு வாரம் பொறுத்து தொலைபேசியில் அவர் என்னுடன் தொடர்பு கொண்டார். ` இம்தியாஸ் பாய் சாகிப்’
எப்போது திரும்பினீர்கள்? நிம்மி நலமா?

மதியம் வந்து விட்டேன்.  உங்களை உடனடியாகச் சந்திக்க வேண்டும்.
வரலாமே, பேகம் அக்தரின் புதிய காஸெட் ஒன்று கிடைத்தது.  அற்புதமான கஜல்.

அடுத்த முப்பது நிமிடங்களில் அன்பர் வந்தார்.  அவரை அமரும்படி வேண்டினேன்.  பரபரத்தார்.  உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்.
நான் கதவைத் தாழிட்டேன்.  இசையை நிறுத்தினேன்.
நாற்காலியில் அமர்ந்து இரு கைகளையும் கோர்த்துக் கொண்டார்.  ஒரு துயர நிகழ்ச்சி.  அவருடைய குரல் கமறியது.

எல்லோரும் நலம்தானே?
ஆம். நான் மட்டும் தான் நோய்வாய்ப்பட்டு விட்டேன்.
சொல்லுங்கள் அன்பரே, இந்த நண்பன் உங்கள் தொண்டன்.
டெல்லி சென்று தங்கிய நாட்களில் என்னிடம் பெரிய  மாறுதல் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன்.  என்னால்.. .. என்னால் .. .. அவர் திணறினார்.
சில மனித்துளிகள் பொறுத்து மீண்டும் பேசத் துவங்கினார்.  `என் இயலாமை பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை.  நூரு என் நடத்தையில சந்தேகம் கொள்கிறாள்.  நூரு அவருடைய மனைவியின் பெயர்.  அவருடைய விழிக்கடைகளில் நீர் துளிர்த்தது.

கவலைப்படாதீர்கள் அன்பரே, எல்லாம் சீராகி விடும்.  அவரை ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தேன்.
அவர் பேசிய மொழிகள் என்னை மிகவும் துயரத்தில்  ஆழ்த்தின.  இது எப்படி நேர்ந்தது என்று எனக்குச் சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன்.  என்னை வழியனுப்ப பேகம் விமான நிலையத்திற்குக்கூட வரவில்லை.
எங்கேயோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று மட்டும் எனக்குத் தெளிவாயிற்று.  ஆனால் எங்கே?  நான் நன்பரின் மருத்துவக் குறிப்பேட்டைப் புரட்டினேன்.

. . . தவறு நிகழ்ந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.  அதற்கு நானே காரணம் என்ற குற்ற உணர்வால் தாக்கப்பட்டேன்.  எப்போதும், போயரிக், க்ளார்க், கிப்சன்மில்லர் ஆகிய பெரியோர்களின் குறிப்புகளைக் கவனமாகப் படிப்பேன்.  இந்தத் தடவை எனக்கே அடி சறுக்கிவிட்டது.

இந்த மருந்iiக் குறித்து எழுதிய நிபுணர்கள் இதைத் தாய்த் திரவத்தில் தர தவண்டும்.  அதிகமாகப் போனால் முப்பதுக்கு மேல் போக வேண்டாம் என்று பரிவுரை செய்திருக்கிறார்கள்.

எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய மருந்துகள் என்ற வரிசையில் என் ஆசான் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார்.  அதில் இந்த மருந்தும் ஒன்றாகும்.  உயர்ந்த வீரியங்களைப் பற்றிப் பேசும்போது """"புலியைக் கூண்டிலிருந்து விடுவித்து விடலாம்.  ஆனால் அதை மீண்டும் அடைக்க இயலாது’’ என்று அவர் கூறுவது வழக்கம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் என் நன்பருக்குக் கொடுத்த முறிவு மருந்து நேட்ரம் ம்யூரியாடிகம் 200. (ஆதாரம் க்ளார்க் பக்கம் 213).
அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு கர்னல் டெல்லி சென்று வந்தார்.  எனக்காகச் சாந்திணி சௌக்கிலிருந்து ரஸமலாய் வாங்கி வர மறக்கவில்லை.  மனைவி, குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வண்ணப் புகைப்படங்கள்.

எல்லாம் சீராகி விட்டதா? மெள்ள வினவினேன்.
அவர் வலதுகைக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.  அதைப் பற்றி நெஞ்சில் அணைத்துக் கொண்டேன்.
`பிஸ்மில்லா(ஹ்) ஹிர்ரஹ்மான் ஹிர்ரஹீம்’
இறைவனுக்கு ரெஹ்மான் என்று பெயர்.  அவனது கருணைக்கு எல்லை ஏது? சகட்டுமேனிக்கு மருந்துகளைத் தர வேண்டாம் என்று என் தோழர்களுக்குக் கூற விரும்புகிறேன்.

""""நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்யாது ஓம்புமின்’’

இது புறநானூற்றுப் பாடம்.
இத்தகைய சிக்கல்களுக்கு செலினியம், காலாடியம் ஆகிய மருந்துகளைத் தர வேண்டும் என்று சொல்லுவார்கள்.  லைகோபோடியத்தை மிக உயர்ந்த வீரியத்தில் கொடு என்று நாஷ் எழுதுகிறார்.  இந்த நண்பரின் நோய் முதல் என்னவென்று எனக்குத் தெரியுமே.

இந்த மருந்து குறித்து மேதை கெண்ட் பல அரிய தகவல்களைத் தருகிறார்.
உடலுறவில் நாட்டமே இராது.  முயற்சி செய்யும்போது உறுப்பு சுருங்கிப் போகும்.  ஆண்மையற்ற ஒரு நிலை.   உறவு கொள்ளும்போது நோவு, உறுப்பிலேயே வெடிப்புகள், புண்கள்.

பெண்களின் இடது சினையுறுப்பில் நோவு.  விலக்கிற்கு முன்பும் அந்த நேரத்திலும் வெள்ளைப்பாடு.  விலக்கிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெரும் உதிரப்போக்கு

நெஞ்சுப் பகுதி புண்ணாக இருக்கும்.  இருமல், மூச்சுத் திணறும் வகையில் இருக்கும்.  இருமும் போது விலா எலும்பில் நோவு.  கண்களில் நீர் முட்டும்.  தலையிலிருந்து தொண்டை வரை அதிர்ச்சி.  குரல் எழும்பாது.  நாடித்துடிப்பும் சீராக இராது.  வலதுபுறம் படுக்கவே முடியாது.  இரவில நெஞ்சு வலி மிகுதியாக இருக்கும்.  எவ்வளவு முறை இருமினாலும் தொண்டையில் ஏதோ சிக்கலிருப்பதாக ஓர் உணர்வு.

முதுகந்தண்டில் வலி, கைகள் வலுவிழந்து போகும்.  நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படும்.  கைகள் மரத்துப் போகும்.  கெண்டைச் சதையில் நோவு, இடுப்பில் வலி.

ஆழ்துயில் இராது.  சிறிய ஒலி கூட உறக்கத்தைக் கலைத்துவிடும்.  பயங்கரமான கனவுகள்.  குழந்தையானால் உறக்கத்தில் அலறியடித்துக் கொண்டு அழும்.  அடிக்கடி கனவில் பாம்புகள் வருமானால் அப்போது இந்த மருந்தைத் தேர்ந்தெடுத்துவிடலாம்.  இது இந்த மருந்தின் சிறப்புக் குறிகளில் ஒன்று.  சாதாரணமாகவே நோயாளி தூக்க நிலையிலேயே இருப்பான்.
காய்ச்சலும் வரும்.  எப்போதும் வாந்தி வரும் போன்ற நிலை.  சிலசமயம் வாந்தி எடுக்கும்.  குளிர் இருக்கும் என்றாலும் போர்த்திக் கொள்ளத் தோன்றாது.

பொதுவாகத் தொல்லைகள் இரவில் மிகுதியாகும்.  வெப்பம் அறவே ஆகாது.  குளிர்ந்த உணவை வயிறு ஏற்க மறுக்கும்.  உண்ட பிறகும் தொல்லைகள் மிகும்.  குளிர் காற்று இதம் தரும்.  நோயாளி காற்றோட்டமான இடத்தில் தங்குவதை விரும்புவான்.  உடலை அழுத்திப் பிடித்துவிட்டாலும் இதமாக இருக்கும்.  இதையும் இடது புற நிவாரணிகளின் பட்டியலில் சேர்க்கலாம் என்றாலும் வலது புறம் படுக்கவே இயலாது என்பதையும் மறக்கக் கூடாது.
இந்த மருந்தை அலோபதி மருத்துவர்கள் இயல்பான நிலையிலேயே பயன்படுத்துகிறார்கள்.  சிறப்பாகக் கண்ணுக்கும், தொண்டைக்கும்.

வெடி வாயு கலந்த வெள்ளியை வீரியப்படுத்தி நிவாரண எல்லைகளைப் பெரிதும் விரிவாக்கிவிட்டார் மேதை ஹானிமன்.  இதன் பொருட்டு மருத்துவ அறிவு உலகமே அவருக்குப் பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
உயர்ந்த வீரியத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக