வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாமிரம் என்றொரு மாமருந்து - மேஜர் தி.சா.இராஜூ


 CUPRUM METALICUM
அந்த ஊரிலேயே பெரிய வீடு வளவனார் இல்லம்.  அதன் தாழ்வாரத்தின் நடுவில் அமர்ந்து நீலமணி அம்மையார் மேஜை விரிப்பில் பூ வேலை செய்து கொண்டிருந்தார்.  அடுத்தக் கூடத்தில் அழகான ஓவியங்கள், மைக்கேல் ஆன்ஜலோ, ரூபன் ஆகிய புகழ் பெற்ற கலைஞர்களின் படங்களை  நகல் செய்த பிரதிகள்.  தெய்வத் தூதர் மோசசுக்கு செங்கடல் பிளந்து வழி விடுவது.  கடைசி இராப்போசனம் ஆகிய காட்சிகளில் உள்ள்த்தை ஈர்த்தன.  ஒரு மூலையைப் பழநி மலைக் குன்றின் படமும் அலங்கரித்தது.  அந்த வீட்டில் வசித்த நல்லவர்களின் சமயப் பற்றையும், பொறையையும் பறை சாற்றின.

கையில் சிறிய பையுடன் வீட்டினுள் நுழைந்தாள் ஜீனத்
"வணக்கம் அம்மா’’
வா மகளே, நலமாக இருக்கிறாயா? கையிலிருந்த விரிப்பைக் கீழே வைத்துவிட்டு வினவினார் நீலமணி.
மரியம் இல்லையா?
உள்ளே இருக்கிறாள்.  கூப்பிடுகிறேன்.  நீ தற்போது எங்கிருந்து வருகிறாய்?
நளினாவின் குழந்தைக்கு இன்று பெயர் வைத்தார்கள்.  வீடு முழுவதும் ஒரே வேப்பிலை.  அங்கிருந்துதான் வருகிறேன்.

வேப்பிலை ஒரு நோய்த் தடுப்பு மருந்து மகளே.  குழந்தை பிறந்த வீட்டின் வாசலிலேயே ஒரு வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்.  சித்த மருத்துவத்தில் அதற்கு மகமாயி என்றே பெயர்.
குழந்தைக்கு செண்பகராமன் என்று விடுதலை வீரரின் பெயரை வைத்திருப்பதாக மரியம் கூறினாள்.
ஆமாம் ஜீனத் அவர்கள் ஒன்றாய்ப் படித்தவர்களாயிற்றே?   நளினாவின் திருமணத்தில்கூட எங்களுக்குத்தான் முதல் மரியாதை.
நானும் அவர்களுடன் படித்தவள்தான் அம்மா. ஓராண்டு ஜூனியர்.
அறையிலிருந்து வெளியே வந்த மரியம் வியப்பு மிகுதியினால் கூவினாள் நீயா ஜீனத்?
ஆமாம். நீ உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாய்?
வில்லியம்ஸ் பால் குடித்தான்.  அத்தை அவன் பால் குடித்தவுடன் கக்கிவிடுகிறான்.  தன் மாமியிடம் கூறினாள்.
இன்றும் கக்கி விட்டானா?
இன்னும் இல்லை

அவனை என்னிடம் கொண்டு வா.  இதன்பின் மரியம் உள்ளே சென்று மதலையை எடுத்துக் கொண்டு வந்தாள்.  நீலமணி குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டார்.  பால் கொடுத்தவுடன் படுக்க வைக்கக் கூடாது.
குழந்தையின் முதுகை நீவி விட்டார்.  சில நொடிகளுக்குப் பிறகு ஏப்பம் வெளி வந்தது.

இதுதான் பிள்ளை வளர்க்கும் தந்திரம்.  பால் உள்ளே போனதும் அங்கிருந்து காற்று மெல்ல வெளி வர வேண்டும்.
ஜீனத் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.  தோழியர் இருவரும் பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.  தங்கள் ஆசிரியர்கள் சக மாணவர், மாணவியர் எல்லோரையும் பற்றி நிறையப் பேசினர்.
உன் கணவர் தற்போது எங்கே இருக்கிறார் ஜீனத்?
மஸ்கட்,  தினமும் அவருடன் பேசுகிறேன்.  எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கிறது.  என்றாலும் . . .

மரியம் புரிந்து கொண்டாள்.  உலகத்தில் ஏதாவது ஒன்றுதான் கிடைக்கும்.  நிறையச் செல்வம் சேர்க்க வேண்டுமானால்  பிரிவைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.  வில்லியம்ஸின் தந்தை நாள் முழுவதும் உழைக்கிறார்.  நானும் மழலைப் பள்ளியில் ஆசிரியை என்றாலும் நாங்கள் சேர்ந்திருக்க முடிகிறதே.
அம்மா குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது எதற்காகக் காப்பு அணிவிக்கிறார்கள்? இது ஜீனத்.
அது நெடுநாளைய வழக்கம் மகளே.  தலை முழுகாமலிருக்கும் பெண்ணுக்கு ஐந்தாம் மாதமே காப்பிடுவார்கள்.  பிறந்த குழந்தைக்குப் பன்னிரண்டாம் நாள் காப்பிடுகிறார்கள்.  காப்பு என்பது பாதுகாவல்.  நோய்த் தடுப்புக்காகச் செய்யப்படுவது.

புரியவில்லையே?

ந்தக் காப்பில் ஐந்து உலோகங்கள் இருக்கும். அவற்றில் தாமிரம் மிகுதி.  அது உடம்பில் படுவதால் பல நோய்கள் நீங்கும்.  நீங்கள் தாவிஸ் (தாயத்து) அணிகிறீர்கள்.  அதிலும் முக்கியமானது தாமிரம்.  எந்த வகையிலாவது தாமிரம் உடலில் இணைந்திருப்பது நன்மை பயக்கும்.
Image result for செம்பு தாயத்து

அதில் ஏதோ மந்திரம் எழுதுகிறார்களே?

அதைப் பற்றி எனக்குத் தெரியாது.  வெள்ளிக்கு அடுத்ததாக தாமிரம் சிறந்த மின்கடத்தி.  அதில் பட்டுச் சிதறும் ஒளிக் கதிர்கள் நல்ல மருந்து.  இதை எல்லாம் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.  அதை வழக்கத்திலும் கொண்டு வந்தார்கள்.

2.
உன் திருமணத்தன்று மாலை இசைச் சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்ததே அது நினைவிருக்கிறதா? நீலமணி வினவினார்.

அதை எப்படியம்மா மறக்க முடியும்?  இரட்சணீய யாத்திரிகத்தின் இறுதிப் பகுதியை அவர் நம்பட உரைத்தார்.  நாங்கள் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

உரை ஆற்றியவரின் பெயர் சவேரிநாதப் பிள்ளை.  அவர் என்னுடன் படித்தவர்.

அந்த விவரம் எனக்குத் தெரியாது அத்தை.
அவர் தமது இடது கையில் ஒரு செப்புக் காப்பு அணிந்து கொண்டிருந்தார்.  அதைக் கவனித்தாயா?
பார்த்தேன் அத்தை.

அதை அவருக்கு இட்டவர் என் வகுப்பாசிரியர் முருகேச முதலியார்.  சவேரிக்கு அப்போது பதினான்கு வயது இருக்கும்.  இன்று வரை அவர்.அதை அணிந்து கொண்டிருக்கிறார்.

உங்கள் ஆசிரியர் மருத்துவரா?

இல்லை.  ஆனால் அவருக்கு மருத்துவ சாஸ்திரம் தெரியும்.  அந்த நாட்களில் ஆசிரியர்- மாணவர் உறவு மிகவுமி நட்புடன் இருக்கும்.  ஒவ்வொரு மாணவனின் குடும்ப வரலாறு, பொருளாதார நிலை, அனைத்தையும் அவருடைய ஆசிரியர் தெரிந்து வைத்திருப்பார்.

ஜீனத்தும், மரியமும் உன்னிப்புடன் செவிமடுத்தார்கள்.
ஒரு நாள் சவேரிநாதன் பள்ளிக்கு வரவில்லை .  அடுத்த நாளும் அவர் வராமல் போகவே வகுப்பாசிரியர் அவருடைய வீட்டிற்கே சென்று விசாரித்திருக்கிறார்.

சவேரிக்கு உடல் நிலை சரியில்லை.  முந்தா நாள் மாலை தடாலென்று கீழே விழுந்துவிட்டான்.  உடல் சில்லிட்டு விட்டது.  பேச்சு மூச்சு இல்லை.
வைத்தியர் வந்ந் பார்த்தாரா?

கை வைத்தியம் தானுங்க மாற்றம் ஏதுமில்லை.

முருகேச முதலியார் அந்த வீட்டின் கொல்லைப்புறம் சென்று சில இலைகளைக் கொண்டு வந்தார்.  அவற்றை இடித்துப் பிழிந்து சாற்றை சவேரியின் வாயில் செலுத்தினார்.  ஒரு மணி நேரத்தில் உணர்வு திரும்பிற்று.  இலேசான உடல் அசைவு.  மறுநாளே சவேரிநாதன் பள்ளிக்கு வந்தார்.  அன்று மாலை எங்கள் ஆசிரியர் அவனுடைய வீட்டிற்குச் சென்று  ஒரு செப்புக் காப்பை அணிவித்தார்.  இன்று வரை அவர் அதை அணிந்திருக்கிறார்.
Image result for செம்பு காப்பு பயன்கள்

செப்பை அணிவதில் இவ்வளவு நற்பயன் இருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி.  ஜீனத் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

தாமிரத்தின் வேதிக் குறியீடு Cu ஆகும். பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் மிகவும் புகழ்பெற்றது சைப்ரஸ்(Cyprus) தீவிலுள்ள சுரங்கமாகும். இதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது. இலத்தீன் மொழியில் செம்பிற்கு குப்ரம்(Cuprum) என்று பெயர்.செம்பு செந்நிறமும், பளபளப்பும், உறுதியும் கொண்ட ஓர் உலோகம். இதை அடித்துத் தகடாகப் பயன்படுத்தவும் கம்பியாக நீட்டி உபயோகிக்கவும் செய்யலாம். தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியாக உயரளவு வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனை செம்பு பெற்றுள்ளது. வறண்ட காற்று செம்பைப் பாதிப்பதில்லை. ஆனால் ஈரமான காற்று வெளியில் அதன் பொலிவு மங்கிப் போகின்றது

மேதை ஹானிமன் இந்த மருந்தின் சிறப்பு குறித்துத் தமது நாட்பட்ட நோய்களில் எழுதுகிறார்.  ஹெர்ரிங்கின் மெட்டீரியா மெடிக்காவிலும் இது இடம் பெற்றுள்ளது.  ஆயுர்வதே, சித்த மருத்துவர்கள் இதைச் சாம்பலாக்கி (பஸ்மம்) மிக அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.  இது ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து என்று புலிப்பாணி உறுதி செய்கிறார். 

 சிறப்பாகக் கால் கெண்டைச் சதை நரம்புகள் சுருட்டிக் கொண்டு தொந்தரவு கொடுத்தால், உடனடியாக அவர்களுக்குச் செம்பு கலந்த மருந்தைத் தரலாம்.

இசிவு (spasm) என்ற ஒரே சொல்லில் இதன்தன்மையை விளக்கி விடலாம் என்பது மேலோர்கள் கருத்து.  உடலின் எல்லா இயக்கங்களையும் சீராக நடத்துவது மூளைப்பகுதி.  அதற்கு இசைவாக இல்லாத நிலை இசிவு.  உடலின் நரம்புகள், உறுப்புகள், திசுக்கல் ஆகியவை தன்னிச்சையாகச் செயல்படும் நிலை இது.  மிகவும் கொடியது.

இதற்குக் காரணம் என்ன என்று இன்று வரை உறுதியாகக் கூற இயலவில்லை.  மருத்துவ சாஸ்திரமே திணரும் ஒரு கொடிய சுகவீனம் இது.  இதில் பாரம்பரியத்திற்குப் பெரும் பங்கு உண்டு.  சமயத் தலைவர்கள், பேராசிரியர்கள், அறிவாளிகள் பலர் இந்தச் சீர்கேட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.  அந்த நோயுடன் வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள் என்றாலும் தாமிரம் இதே நிலையிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்பது ஒரு பேருண்மை.

என் செயல் முறையினால் பலர் நிரந்தரமாகக் குணமடைந்திருக்கிறார்கள்.  சிலர் சீராகவே இல்லை.  ஆனால் எனக்கு உறுதுணையானவை இரு மருந்துகள்.  ஒன்று தாமிரம மற்றது மரிக்கொழுந்து (தவனம்)(ABROTANUM) மரிக்கொழுந்தைச் சீனர்களும் பயன்படுத்திப் பலன் கண்டிருக்கிறார்கள்,
பேறுகாலத்திற்குப் பிறகு கைவிடப்பட்ட பல மங்கையரை இது குணப்படுத்தியிருக்கிறது.  இதன் முதற்குறி உடல் சில்லிட்டுப் போதல்.  அடுத்து உடலுறுப்புகள் தாமாக அசையும், வளையும் அல்லது இயங்க மறுக்கும்  அந்தச் செயலற்ற நிலையிலும் விக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு எல்லாம் இருக்கும்.

அவ்வப்போது நோய் வரும்போது மருந்து கொடுப்பதை விட தடுப்பு முறையாக தாமிரத்தை அணிவது ஒரு நல்ல செயல்முறை.
இது குறித்து இன்னும் விரிவாகச் சிந்திக்க வேண்டும்.

3.
அய்யா, தஸ்லீம்.  குவிந்த விரல்களை நெற்றியில் தொட்டு வணக்கம் தெரிவித்தார்.
வணக்கம் நண்பரே, உட்காருங்கள்.  நாற்காலியைச் சுட்டிக் காட்டினேன்.  அவருடைய உடல் இயக்கத்தில் தேவையற்ற பரபரப்பு காணப்பட்டது.
என் தம்பிக்கு உடல் நலம் சீராக இல்லை.  நீங்கள் உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும்.
அவரை அழைத்து வாருங்கள்.  அவருக்கு என்ன கோளாறு?
முதலில் வயிற்றுப் போக்கில் தொடங்கிற்று.  அடுத்து வாந்தி.  அடுக்கடுக்காக இருமல்.  மூச்சே நின்றுவிடும் நிலை.
அவர் என்ன வேலையில் இருக்கிறார்?

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அலுவலர்.   இரண்டு நாட்களாக விடுப்பில் இருக்கிறார்.   இன்னும் அரை மணி நேரத்தில் அவரை அழைத்து வருகிறேன்.
உள்ளே வந்த அன்பரைக் கட்டிலில் படுக்க வைத்தேன்.  மின் விசிறியை நிறுத்தினேன்.  படுத்த நிலையிலேயே அவர் இருமத் தொடங்கினார்.  மூச்சு முட்டிற்று.  தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தார்.  ஒரு மிடறு அருந்தியதும் மெள்ள எழுந்து உட்கார்ந்தார்.  அந்த ஒரு குறியே எனக்கு மருந்தை இனம் காட்டி விட்டது என்றாலும் அவருடைய நாடியைப் பரிசோதித்தேன்.  கை சில்லிட்டிருந்தது.  நெற்றியின் நிலையும் அதுவே.  உதடுகளில் நீல நிறம்.  மேல் அங்கியை விலக்கிப் பார்த்தேன்.  நெஞ்சில் திட்டுத் திட்டாக நீல வட்டம்.

உங்களுக்கு என்ன சுகவீனம்?  அவரைப் பரிவுடன் வினவினேன்.  நோயுற்றவர்களிடம் தேவைக்கதிகமான பரிவு காட்ட வேண்டியது அவசியம்.

என் அலுவலகத்தில் ஏழு உதவியாளர்கள் இருக்கிறார்கள்.  எல்லோரும் அந்தத் தட்டச்சரிடம் பொறாமை பாராட்டுறார்கள்.  ஏனென்றால் அவர் எடுபிடி ஆளாகச் சேர்ந்து தன் முயற்சியால் முன்னேறி விட்டார்.
அப்படியா? நான் உங்களுடைய சுகவீனத்தைக் கேட்டேன்.  நான் மீண்டும் அவருக்கு நினைவுபடுத்தினேன்.

அமெரிக்காவில் கிளிண்டன் அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தின் செயல்பாடு எந்த வகையில் நியாயம்? அவர் வினவினார்.
நான் அவருடைய தமையனின் முகத்தை நோக்கினேன்.

இப்படித்தான் என் தம்பி தொடர்பில்லாமல் பேசுகிறார்.  முன்பு ஒரு தரம் இப்படி ஆயிற்று.  சென்னைக்கு அழைத்துச் சென்றோம்.  மின் அதிர்வு கொடுத்தார்கள்.  சிறிது குணம் தெரிந்தது.  இப்போது அதே குறைபாடுகள் மீண்டும்  தலை தூக்குகின்றன.  பயங்கரமான அடுக்கு இருமல்.  சாப்பாடே செல்வதில்லை.  பால் கொடுத்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளது.
அன்பரின் நாவைப் பரிசோதித்தேன்.  வெள்ளை மெழுகுப் பூச்சு.  சுவாசம் சீராக இல்லை.  அவருக்கு மருந்து தாமிரம்தான் என்று முடிவு செய்தாயிற்று.  குப்ரம் மெட்டாலிக்கம் ஆறு, இரண்டு உருண்டைகள் சீனித் துகளில் கலந்து உட்செலுத்தினேன்  அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

அமைதியாகப் படுத்திருக்கும்படி வேண்டினேன்.  சிறிது நேரத்திற்குப் பிறகு கண்களை மூடினார்.  பலமான குறட்டை ஒலி.
தாமிரம் மிகவும் ஆழமாக வேலை செய்யும் மருந்து.  ஆகவே செயல்படும் மெதுவாகத்தான் இருக்கும்.  ஜே.டி.கெண்டின் புத்தகத்தைப் புரட்டினேன் (பக்கம் 488).

தாமிரத்திற்கு பல வெளிப்பாடுகள் உள.  அவற்றில் முக்கியமானது பிதற்றல், உளறல், தொடர்பற்ற பேச்சு, மணம் அலைபாயும்,  ஜன்னி கண்ட நிலை,  உடல் உணர்வற்றுப் போகும்.  அந்த நிலையிலும் கை, கால்கள் உதறும், வெட்டும், வலிப்பும் தொடரும்.  நெஞ்சிலிருந்து கேவல் எழும்.  சில சமயங்களில் அது கன்றுக்குட்டியின் குரலைப் போல இருக்கும்.
பல நேரங்களில் அவன் உயிரிழந்தவனைப் பேல் அசையாமல் கிடப்பான்.  உடலின் பல பகுதிகள் சுழித்துக் கொள்ளும்.  அசையும்.  அடுக்கிருமல் வரலாம்  இருமி, இருமி, சோர்ந்து போய் மூச்சே நின்று போகும் நிலை, இருமல் உள்ளபோது சிறிது குளிர்ந்த நீரைக் கொடுத்து விட்டால் சமநிலைக்கு வரும்.  நோயாளியின் குரலே மாறிவிடும், என்ன பேசுகிறாரென்றே தெரியாது.  மீண்டும் பழைய நிலைக்கு வரச் சில மணி நேரமாகலாம்.  கை விரல்களை இறுக மூடிக் கொள்வான்.  திறக்க மறுப்பான்.  விழிகள் உருளும்.  மேல் நோக்கி இடம் மாறும்.  இத்தகைய நிலை ஒரு மருத்துவனையே திணறச் செய்யும்.  விவரமறியாத உறவினர்கள் என்ன செய்வார்கள்?

பலவகைக் கருவிகளுடன் நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் என்ன முடிக்கு வர இயலும்? நாடி தளர்ந்திருக்கும்.  உதிர அழுத்தமே இராது.  ஒவ்வொரு குறிக்கும் தனித்தனி மருந்துகள் கொடுப்பார்.
இவ்வளவு குறைபாடுகள் உள்ள நோயாளியைத் தாமிரச்சத்து ஓரிரு நாளில் சீராக்கி விடமுடியுமென்றால் மனித சமுதாயத்திற்கு இதைவிடப் பெரிய தொண்டு என்ன இருக்க முடியும்?

படுத்திருந்த அன்பர் மெள்ள அசைந்தார்  உட்கார விரும்பினார்.  தண்ணீர் வேண்டுமென்று சைகை செய்தார்.  ஒரு குவளை நீர் அருந்தினார்.  எழுந்து நின்று விறுவிறுவென்று நடந்து வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.  எனக்கு வணக்கம் தெரிவித்தார்.  அவருடைய தமையனாரை உடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

அன்பர் கையை உயர்த்தி அசைத்தார்.  """"குதாஹாஃபிஸ்’’ நான் வழி அனுப்பி வைத்தேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தமையன் தம்பி இருவருமே சைக்கிளில் வந்தனர்.  மிகுந்த நன்றி அய்யா, இப்போது ஒரு தொந்தரவுமில்லை.
அவரை மீண்டும் பரிசோதித்தேன்.  ஒரு சிட்டிகை கல்காரியா கொடுத்தேன் (க்ளார்க் பக்கம் 238) இன்ஷா அல்லாஹு.
இறைவனுக்கு ரெஹ்மான் என்று ஒரு பெயர் உண்டு ரெஹம் என்றால் கருணை என்று பொருள்.
அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.

*****

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஆண்டிமோனியம் க்ரூடம் - மேஜர் தி.சா.இராஜூ



அழைப்பு மணி ஒலித்தது. என் உதவியாளர் வெளியே செல்லுகிறார்.  உரையாடல் தெளிவாகக் கேட்கிறது,. அய்யா இந்த நேரத்தில் எவரையும் சந்திக்க மாட்டார்.

மிகவும் கவலைக்கிடமான நோயாளிங்க.  கொஞ்சம் தயவு செய்யுங்கள்.
நானே வாசலுக்குப் போகிறேன்.  இளைஞர் ஒருவர் என்னிடம் பேச முற்படுகிறார்.  நான் வந்தவர்களை அமர வைக்கிறேன்.  அங்கு வந்த மூவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகின்றனர்.

 யாருக்கு உடம்பு சீராக இல்லை? இது எனது கேள்வி.
அது இவர் தங்கைங்க.  ஊர்லே இருக்காங்க.  ஒரு கட்டுக் காகிதங்களை அவர் என்னிடம் அளிக்கிறார்.

பெயர் - அமலோற்பவம்
வயது - இருபத்தெட்டு.  நோய் விவரம் தரப்பட்டிருந்தது.  நோயாளியின் சிறுநீரகம் இயங்கவில்லை.  உடனடியாக டயாலிஸிஸ் செய்தாக வேண்டும்.  தொடர்ந்து மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தேவை.
உமது தங்கை திருமணமானவரா?
ஆமாம் அய்யா, மூன்று குழந்தைகள் உள்ளன.  பரிதாபமான குரலில் வேண்டுகோள்.
  நான் சிறிது யோசிக்கிறேன்.  சிறுநீர் பிரிகிறதா?
இல்லை.  ஆனால உடலை அசைக்கக் கூட முடியாமல் படுத்திருக்கிறார்.
காய்ச்சல் இருக்கிறதா?
இலலை, உடல் குளிர்ந்துள்ளது.  ஒரு வித மயக்க நிலை.
சரி உனடியாக அழைத்து வாருங்ள்.
நண்பர் கூறுகிறார்.  அய்யா என் தங்கை நகரும் நிலையில் இல்லை.  மிகவும் பலவீனமாக இருக்கிறார்.

நண்பரே, சிகிச்சையின் பொருட்டு நான் வெளியில் எவரையும் காணச் செல்வதில்லை.  அவரை இங்கு அழைத்து வந்தால் என்னால் இயன்றதைச் செய்கிறேன்.
அய்யா, அந்தக் குழந்தைகளுக்காக இந்த உதவியைச் செய்யுங்கள்.  எங்களுக்கு உங்களிடம் முழு நம்பிக்க இருக்கிறது.

நான் மீண்டும் இருக்கையில் அமர்கிறேன்.  யோசனையில் ஆழ்கிறேன்.  அந்தப் புகழ் பெற்ற நிபுணர்களின் குறிப்பை மீண்டும் புரட்டுகிறேன்.  செயற்சை சிறுநீர்ப் பிரிவு,  மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் பணி, நண்பரே, இன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலை இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.  எட்டரை மணிக்கு என்னைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.
காலை ஏழு மணிக்கே கார் வந்து விட்டது.

பயணிக்கும்போது நான் என் ஆசானைப் பற்றி எண்ணுகிறேன்.  அவரிடம் சிறிய கார் இருந்தது.  அதன் மூலம் பல இடங்களுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து மருந்தளிப்பார்.  அபிட்ஸ் சதுக்கத்தில் நிற்கும் போலீஸ்காரர் குதிகால்களை இணைத்து அவருக்கு வணக்கம் தெரிவிப்பார்.  காவல் துறையின் தலைவருடைய குழந்தையை அவர் மருந்தளித்துக் காப்பாற்றியிருக்கிறார்.  நகரத்திலுள்ள போலீஸ்காரர்கள் அனைவரும் என் ஆசானை அறிவார்கள்  அவர்களுடைய குடியிருப்பில் கூட ஒரு மருந்தகம் திறந்திருந்தார் என் ஆசான்.

என்னால் எங்கும் நகர முடியாததொரு நிலை.  பலதரப்பட்ட பணிகள்.  எவ்வள முயன்றாலும் ஆசானின் நிலைக்கு என்னால் உயர முடியவில்லை.

. . . . . முன்னறையில் ஒரு பாயில் படுத்திருந்தார் அந்த மங்கை.  காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன்.  நோயாளியின் கண்களில் ஒளியில்லை.  அரை மயக்க நிலை.  அன்பர் நாற்காலி கொண்டு வந்தார்.  தடுத்து விட்டு நோயாளியின் அருகில் அமர்ந்தேன்.
இடது கை நாடியைப் பரிசோதித்தேன்.  துடிப்பில் வேகமில்லை.  வலது கையையும் சோதித்தேன்.  பெண்களுக்கு இடதுபுறம், ஆண்களுக்கு வலது பக்கம் என்றுரைக்கிறது ஆயுர்வேதம்.  நான் இரண்டையுமே பரிசோதிப்பேன்.
 ஆள்காட்டி விரலுக்குக் கீழே ஒரு தடித்த சதைத் திரள்.  அதேபோல் வலது கை மோதிர விரலுக்குக் கீழே ஒரு தடிப்பு.  நகங்கள் குழலிட்டிருந்தன.
கால்களைக் கவனித்தேன்.  பாதத்திலும் விரல்களுக்குக் கீழே தடிப்புகள்.

 நாவைக் காட்டுங்கள் தாயே.
அவர் சிரமப்பட்டு நாவை நீட்டினார்.  நல்ல வெண்மை நிறம்  இமைகளை விலக்கி விழிகளைப் பார்த்தேன்.  சிவப்புத் தன்மையே இல்லை.

என்ன உணவு தருகிறீர்கள்?
எதையுமே உட்கொள்ளும் நிலையில் அமலோற்பவம் இல்லை.  இது அவருடைய தாயார்.

நான் எழுந்து நிற்கிறேன்.  கை கழுவ நீரும் துவாலையும் கொண்டு வருகிறார் இன்பசாகரன்.  தேவையில்லை நான் மறுக்கிறேன்
வீட்டிகு வந்த ஆறு பொட்டலங்களை மடித்து சாகரனிடம் தருகிறேன்.  ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த மருந்தைத் தர வேண்டும்.  நாளைக் காலையில் உமது தங்கையின் உடல் நிலை குறித்துத் தகவல் வேண்டும்.
மறு நாள் சாகரன் வந்தார்.  அமலோற்பவம் எழுந்து உட்காருகிறாள்.

 இருமுறை சிறுநீர் கழித்தாள்.  ஒரே கலங்கல்.  சிறுநீர்ப் பாதையில் குத்தல் இருக்கிறது.

நாளைக் காலையிலும் வந்து விவரம் கொடுங்கள்.
அமலோற்பவத்திற்கு நான் கொடுத்த மருந்து ஆண்டிமோனியம் க்ரூடம் ஆறாவது வீரியம்.  மூன்று வேளை மருந்திலேயே சிறுநீர் பிரிந்து விட்டது.  இந்த மருந்து சிறுநீர்ப் பாதைலும் பணிபுரியும் என்பது நான் அறியாததொன்று.  தெரியாததை ஒத்துக் கொள்ளுவதற்கும் துணிவு வேண்டும்.  ஆனால் போயரிக் இதை உறுதி செய்கிறார்.  (பக்.56).
நான்பெரிதும் மதிக்கும் மேதைகளில் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் ஒருவர் ஆவார்.  அவர் கூடத் தமது பேருரைகளில் சிறுநீர்ப் பாதை பற்றி ஏனோ குறிப்பிடவில்லை.

மறுநாள் சாகரன் வந்தார்.  சிறுநீர்ப் பாதையில் சிரமம் ஏதுமில்லை.  தற்போது குத்தலும், முதுகு வலியும்  இல்லை.  ஒரு பொட்டலம் ஸைலீஷியா 30 தொடர்ந்து சீனி உருண்டைகள்.  நான்கு நாள் கழித்து பாஸிலினம் 200 இரண்டே மாத்திரைகள்.

2.
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்,  புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்தமான கருத்து என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருந்தது.  அவர்களுடைய மதிப்பீடுகள் பெரும்பாலும் கணிப்பொறியால் தரப்பட்டவை.  அவை கூடவா பொய்த்துப் போகும்?

தற்போது அமலோற்பவம் சாதாரண உணவைச் செரித்துக் கொள்கிறார்.  சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருகிறார்.  வழக்கமான உணவை உட்கொள்கிறார்.  காஃபி, தேநீர் தவிர்க்கப்பட்டுள்ளது.  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாகரன் வந்து தன் தமக்கையின் உடல்நிலை குறித்துத் தெரிவிக்கிறார்.  நானும் என் வழக்கமான மருந்தையே கொடுத்து வந்தேன்

இரண்டு வாரம் பொறுத்து நான் என்விருப்பத்தைத் தெரிவித்தேன்.   ஒருமுறை உன் அக்காவைச் சந்திக்க முடியுமானால் நல்லது சாகரனிடம் தெரிவித்தேன்.  மறுநாள் காலை பத்து மணி இருக்கும்.  ஒரு நங்கை தான் ஓட்டி வந்த சைக்கிளை மூலையில் நிறுத்தினாள்.  சல்வார் கம்மீஸ், இரட்டைப் பின்னல், நெற்றியில் பெரிய திலகம், (கத்தோலிக்கர்கள் பொட்டு வைத்துக் கொள்வார்கள்.  சிலர் தாலியும் அணிவதும் உண்டு) என்னைப் பார்த்துக் கைகூப்பினார்.  முதலில் யார் என்று விளங்கவில்லை.  பிறகு தான் புரிந்தது.
Image result for white coating tongue

அவர் சிலுவைக் குறி இட்டுக் கொண்டார்.  என்னைக் கல்லறையிலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள்.  அவருடைய குரல் கமறியது.
நான் திகைத்து நின்று விட்டேன்.  அவர் அமலோற்பவம்.  கிழிந்த நாரைப் போல துவண்டு கிடந்த அந்த நங்கை, இன்று தானே சைக்கிளை ஓட்டி வருகிறார்.  நான் மேதை ஹானிமனுக்கு நன்றி செலுத்தினேன்.
அமலோற்பவம் (எத்தனை அழகான பெயர்?) என்ற மங்கைக்கு நான் ஆண்டிமோனியம் க்ரூடம் என்ற மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இரண்டு சிறப்புக் குறிகள்.  ஒன்று அதி வெண்மையான நாவு.  இரண்டு உள்ளங்கையிலும், காலிலும் இருந்த கெட்டியான சதைத் திரட்சி.  பொது வழக்கில் இதை ஆணி விழுதல் என்று குறிப்பிடுவார்கள்.  ஆணி என்ற சொல் மிகவும் பழமையானது.  வடமொழி வேதங்களிலும் இந்தச் சொல் `உறுதியானது’ என்ற பொருளில் வரையப்பட்டுள்ளது.  பரதனைச் `செம்மையின் ஆணி’ என்றே கம்பர் பாராட்டுவார்.
ஆணி உள்ள பகுதியைக் கூர்மையான கத்தியால் சீவி விட்டு அதன் மேல் ஆண்டிnமொனியத்தின் தாய்த் திரவத்தைத் தடவலாம்.  உள்ளுக்கும் அதையே தரலாம் என்று டி.எஸ்.ஐயர் எழுதியிருக்கிறார்.  ஆனால `கத்தி வைக்காதே’ என்று என் ஆசான் எச்சரிப்பார்.  அவர் அறுவை சிகிச்சைக்கு எதிரி.  பொதுவாக ஆறாவது வீரியத்தில் இதைக் கொடுத்தால் ஒரு வாரத்தில் தோலுரியும் அல்லது நெகிழ்ந்து தளர்ந்து மிருதுவாகிவிடும்.  இதன் தொடர் மருந்து ஸைலீஷியா பணிபுரியும் காலம் நாற்பது நாட்கள் (கிப்சன் மில்லர் பக்.3).
Image result for antimonium crudum warts

 3.
அந்த அன்பர் வேதாரண்யத்திலிருந்து வந்திருந்தார்.  உடன் அவருடைய மனைவியும் இருந்தார்.  இடுப்பில் இரண்டு வயதுக் குழந்தை.  தொடர்ந்து நான்கு மணி நேரம் பயணம் செய்ததால் களைத்துப் போயிருந்தனர்.  வந்தவர் சிறிது நீர் அருந்திய பிறது பேசத் துவங்கினார்.  இந்தக் குழந்iதையுடன் ஓராண்டாக மன்றாடுகிறேன்.  ஒரே சொறி சிரங்கு.  அரிப்பும் எரிச்சலும் பொறுக்க முடியாமல் கதறுகிறாள்.  நாங்களும் கூடச் சேர்ந்து அழுகிறோம்.

என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?
ஹோமியோபதி மருந்துதான்.  திருச்சி மருத்துவரின் பெயரைச் சொன்னார்.
அவரை எனக்குத் தெரியும்.  அலோபதிப் பட்டம் பெற்றவர். ஆனால்  ஹோமியோபதி மருந்து அளிக்கிறார்.  அவர்களைச் சட்டம் ஒன்றும் செய்யாது.  ஏனெனில் ஹோமியோபதி தீங்கற்ற மருத்துவ முறையாம்.  மாற்று முறைகள் தீங்கு விளைவிப்பவை என்று அவர்கள் மௌனமாக ஒத்துக் கொள்ளுகிறார்களே, அது வரைக்கும் நன்று.
நான் குழந்தையைப் பரிசோதித்தேன்.  தலையில் முண்டு முண்டாகச் சிரங்குகள்.  முடி சடையிட்டிருந்தது.  முகம், நெஞ்சு, வயிறு, ஆண் குறி, தொடை, கால் எல்லாவற்றிலும் மேல் தோல் கெட்டியாகித் தோலுரிகிறது.  சொறிந்ததனால் ரணமாகியிருந்தது.  என்னைக் கண்டதும் குழந்தை வீரிட்டான்.  நான் ஆறுதல் கூறினேன்.
நான் நாவைப் பரிசோதித்தேன்.  வயிற்றுப் பகுதியில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன.  என்ன உணவு தருகிறீர்கள்? மலக்கழிப்பு எப்படி உள்ளது? இவை எனது இரண்டாவது கேள்வி.
எப்போதும் ஆசன வாயில் கை வைக்கிறான்.  அடிக்கடி மலம் ஒழுகுகிறது.  சளி சளியாகப் போகிறான்.  கட்டியாகவும் வெளிப்படுகிறது.  ஒரே கெட்ட வாடை.  எங்களுக்கே வெறுத்துப் போய்விட்டது அய்யா, ஒவ்வொரு சமயம் . . . 
அவர் வாய் விட்டுச் சொல்லவில்லை.  ஆனால் முகத்தோற்றம் அந்த எண்ணத்தைப் பறைசாற்றியது.
நான் குறுக்கிட்டேன்.  பிறப்பும், இறப்பும் நமது கையில் இல்லை.  பெற்றோர்கள் தமது மக்களுக்குப் பாதுகாப்புத் தரக் கடமைப்பட்டவர்கள்.  மருத்துவன் ஏற்ற மருந்துகள் தரலாம்.  மேலே நடக்கவிருப்பது இறைவனுடைய விருப்பம்.  நான் வானத்தை நோக்கி கை காட்டினேன்.
தொடர்ந்து பரிசோதித்த பிறகு ஒரு வாரத்திற்கான மருந்தை மடித்துக் கொடுத்தேன்.  சோப் உபயோகிக்க வேண்டாம்.  தொடர்ந்து கடிதம் எழுதினால் மருந்து அனுப்பி வைக்கிறேன்.

அவர்கள் திரும்பிய பிறகு கெண்டின் நூலைப் புரட்டுகிறேன்.  அவர் எழுதுகிறார்.  `இந்த மருந்தின் எல்லா நோய்க் குறிகளும் வயிற்றுப் பகுதியில் துவங்கும்.  அந்த இடத்திலேயே மையம் கொண்டிருக்கும்.  வயிற்றுப் பகுதியை மையமாகக் கொண்டிருக்கும் எல்லாத் துயரங்களையும் இது சமன் செய்யும்’.

இந்தக் குழந்தையின் நாவு வெண்மையாக இல்லை.  `நாக்கு வெண்மையாக இருப்பது’ இந்த மருந்தின் முக்கியமான குறி என்றாலும் நான் ஆண்டிமோனியம் க்ரூடத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், கோளாறு வயிற்றுப் பகுதியில் துவங்கியது.  கூடவே சளி சளியாக மலப்போக்கு.  ஆசனவாயில் நமைச்சல்.

4.
இரண்டு வாரம் பொறுத்து வேதாரண்யத்திலிருந்து அந்த அன்பர் வந்தார்.  `அய்யா, இப்போது குழந்தைக்கு ஒரு தொந்தரவும் இல்லை.  மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் உங்கள் நிலத்தில் புகையிலை பயிரிடுகிறீர்கள்.  அதன் மூட்டைகளை வீட்டிலிருந்து அகற்றி விடுங்கள்.  அதுவே நீங்கள் உங்கள் குழந்தைக்குச் செய்யும் பெரிய உதவி.

`வினோபாஜி வினவுகிறார்.  தஞ்சை நிலத்தில் புகையிலையைப் பயிர் செய்துவிட்டு, க்யூபா நாட்டிலிருந்து சர்க்கரை வாங்குகிறோம். 

 பிலிப்பைன்ஸுக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்கிறோம்.  மாட்டுச் 
சாணத்தை இறக்குமதி செய்கிறது நமது அரசு.  இது கொடுமை.  நமது பொருளாதார இலக்குகள் ஓட்டுப் பெட்டியைச் சுற்றியே சுழலுகின்றன.  பதவி, அதிகாரம், பணவசதி, சூழ்ச்சி, இறைவா இந்தியனுக்கு எத்தனை வகை இன்னல்கள்?

ஆண்டிமனி என்பது ஒரு கனிமப் பொருள்.  உருக்குத் தயாரிப்பில் இதன் பங்கு பெரிது.  இதை மருந்தாக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் மேதை ஹானிமன்.  இந்தக் கனிமப் பொருளைப் பற்றி தமது `நாட்பட்ட நோய்களில்’ எழுதியிருக்கிறார்.  ஹார்ட்லாப், டிரிங்கிள் ஆகிய பெரியோர்களும் இது குறித்து வரைந்துள்ளார்கள்.  இது ஒரு பலமுனை நிவாரணியும் கூட.  பல்முனை நிவாரணியும் கூட என்பது பொருத்தமானதாக இருக்கும்.  ஈறு கொழுத்துப் பல் ஆடுமானால் உதிரப்போக்கு இருக்குமானால், சிதைந்த பற்களில் வலி இருக்குமானால் இந்த நிவாரண பயன் தரும்.
கண்களில்  ஏற்படும் நோவுகளுக்கும் இது அரு மருந்து  `ப்ளெபெரிடிஸ்’ என்ற விளங்காத பெயரைக் கூறி பயமுறுத்துவார்கள்.  கண் விழிகள் சிவந்து இமைகள் வீங்கி அவற்றினின்று வடியும் நீரினால் மற்ற பகுதிகளில் அரிப்பும், எரிச்சலும் ஏற்பட்டு கறையிடுமானால், அப்போது துணிந்து இந்த மருந்தை ஆறாவது வீரியத்தில் தரலாம்.  பல், கண் ஆகிய பகுதிகளில் துயர் தரும் நோய்களுக்கு இதன் தொடர் மருந்தாக தசம வீரியத்தில் ஸைலீஷியாவைத் தரலாம்.  வியக்கத் தக்க விளைவுகளைக் கண்டிருக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் எனக்கு வியப்பை அளித்தது சின்னம்மை, ஜெர்மன் மீசில்ஸ் என்று கூறுகிறார்களே, அந்த நோய் பெரியம்மைக்குத் தடுப்பாக அம்மைப்பாலைக் கண்டுபிடித்து உடலில் செலுத்துகிறார்கள்.  அது வேறு வகையில் உருவெடுத்து மனித குலத்தை வாட்டுவதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் இந்தச் சின்னம்மைக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆண்டிமோனியம் க்ரூடம் நிவாரணம் தரும் என்று எழுதவில்லை.

ஆனால் என் ஆசான் இந்த நற்செய்தியைப் பரப்பினார்.  மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஹைதராபாத் பிரதேசத்தில் இந்த நோய் பரவி விடும்.  இதைத் தடுக்க ஊர் ஊராக மாரியம்மனுக்கு விழா எடுப்பார்கள்.  படையல் போடுவார்கள்.  ஆனால் என் ஆசான் இதைத் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தினார்.  மடாலயத்திலிருந்து மதர் சுப்பீரியர் வந்து ஒரு புட்டி நிறைய மாத்திரைகளை வாங்கிச் சென்று பள்ளிச் சிறுவர்கள் அனைவருக்கும் கொடுத்து விடுவார்.  எவருக்கும் சின்னம்மை வந்ததில்லை.

குழந்தைகளின் நலனைச் சீர்குலைக்கும் நோய்களில் சின்னம்மை முதலிடம் அளிப்பதாகும்.  சளி, காய்ச்சல், இருமல் எல்லா உபாதைகளும் இருக்கும்.  அப்போது ஆண்டிமோனியத்தைத் தொடர்ந்து சத வீரியத்தில் ஸைலீஷியா தர வேண்டும்.  வாய் ஓரத்தில் துவங்கி முகத்தையே விகாரப்படுத்தும் படர் தாமரை என்ற சர்ம வியாதிக்கும் இது சிறந்த மருந்து.  உதட்டோரத்தில் வெடிப்பு ஏற்பட்ட உடனேயே இதைக் கொடுத்து விடுவது வழக்கம்.  ஆறாவது வீரியமே போதும்.  நான் முப்பதாவது வீரியத்திற்குத் தாவுவது உண்டு.  ஆனால் அவ்வளவு உயர்ந்த வீரியம் தேவையில்லை என்பது என் ஆசானின் கருத்து.  பல மருந்துகளை அவர் 12-வது வீரியத்தில்தான் கொடுப்பார்.  
(இப்போது எங்கே கிடைக்கிறது பன்னிரெண்டு?)

ஆண்டிமோனியம் என்ற உலோகத்தினைப் பற்றி குறிப்பிடும்போது, எல்லா நிபுணர்களுமே அந்த நோயாளி சிடுசிடுக்கும் தன்மை உடையவனாக இருப்பான் என்று வரைகிறார்கள்.  மருத்துவர் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கூட நோய்வாய்ப்பட்ட குழந்தை பொறுக்காது.  இது நிபுணர் போயரிக்கின் கூற்று.

எங்கள் அலுவலகத்தில் ஓர் எழுத்தர் இருந்தார்.  அவர் எதற்கெடுத்தாலும் எதையாவது குறை கூறுவார்.  புத்தகத்தில் அச்சுப் பிழையா, மின்வெட்டா, பென்சில் சீராக எழுதவில்லையா எந்தக் குறைபாடு இருந்தாலும் அவர் சக ஊழியர்களிடம் எரிந்து விழுவார்.  காரணமின்றி பதற்றம் அடைவார்.  அவர் ஒரு வங்காளி, பொதுவாக அந்த மாநிலத்தவர்கள் விவாதம் புரிவதில் விருப்பம் காட்டுவார்கள்.  பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் வல்லவர்கள்  அந்த நண்பருக்கு ஒரு முறை வயிற்றுக் கோளாறு வந்தது.  அவருக்கு இந்த மருந்தை ஆறாவது வீரியத்தில் மூன்று நாளைக்குக் கொடுத்தேன்.  வங்காளத்தில் ஹோமியோபதி மருத்துவர்கள் மிகுதி.  அவரும் நம்பிக்கையுடன் மருந்தை உண்டார். 

ஒரு வாரம் கழித்து அவரைச் சந்தித்தபோது வினவினேன்.  `நிதின் பாபு, கேமொன் ஆச்சே? (எப்படி இருக்கிறீர்கள்?).
`குப் பாலூ-முஷாய்’ (மிகவும் நன்றாக இருக்கிறேன் அன்பரே).

தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  அவருக்கு கலை உலக விவரங்கள் அத்துப்படி.  காஜி நஜ்ருல் இஸ்லாமின் வித்ரோஹி, சரத் சந்திரரின் சரித்ர ஹீன் ஆகியவை பற்றி நிறையவே அறிந்திருந்தார்.  நிறையத் தகவல்கள் கொடுத்தார்.  நண்பர்கள் வியப்புடன் நோக்கினார்கள்.  அவருடைய உள இயல்பே மாறிவிட்டது.  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நண்பர்களுடன் காரசாரமாக விவாதம் செய்வதையே நிறுத்திவிட்டார்.

ஹோமியோபதி மருந்துகளின் மிகச் சிறந்த ஆற்றல் இது.  குறிகள் முழுமையாக ஒத்திருந்து ஒத்த மருந்தைக் கொடுத்துவிட்டால் ஒட்டு மொத்தமாக அது எல்லா நோய்க் குறிகளையும் நீக்கி விடும்.  இந்த விவரம் பலருக்கும் புரிவதில்லை.  புரிந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவர்.  பின்னாளில்தான் நிதின்பாபுவைப் பற்றி பல புதிய விவரங்கள் தெரிந்தன.  அவர் ஆண்மை குன்றியவர்.  உறுப்பே சுருங்கிக் கிடந்ததாம்.  அவருடைய இந்தக் குறைபாட்டின் விளைவாகவே அவருக்குச் சிடுசிடுக்கும் தன்மை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். 

 பாலுறவில் இயலாமை பிறரிடம் கடுகடுப்பை உண்டாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.   பொதுவாக ஆணி விழுந்த நிலைக்கு இதைத்  தருவார்கள்.  தடிப்புள்ள இடத்தில் தாய்த் திரவத்தைத் தடவுவது உண்டு.  புறங்கையில் ஏற்பட்டிருக்கும் மருக்களையும் இது போக்கி விடுகிறது.  இந்த மருந்தின் எல்லை மிக விரிவானது.  தலைக்குக் குளித்தால் வரும் சுகவீனங்களை இது நீக்க வல்லது என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.  இதனுடன் அயோடினைக் கலந்தும் ஒரு மருந்தைத் தயாரிக்கிறார்கள்.  டார்ட்டாரிகத்தைக் கலந்து ஓர் அவுடதம்.  இரண்டுமே நெஞ்சுச் சளியை வெளிக் கொண்டு வரும்.

*****


செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ஆரம் மெட்டாலிக்கம் major ts raju

Image result for gold atom


1
காலை மணி 8.57 அன்பர்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.

அண்ணே நீங்க எந்த ஊரிலிருந்து வாரீக?
வடக்கே உடையார்பாளையம்
மருத்துவரை எதுக்காகப் பார்க் வந்தீங்க?
கொஞ்ச நாளாய்க் கண் உபாதை.
அதுக்குக் கண் வைத்தியரையல்ல பாக்கனும்.  இங்ஙனெ ஏன் வந்தீங்க?
அய்யா எல்லாத்துக்கும் மருந்து கொடுப்பாகளாம்.
அதெப்படி?
எங்க ஊருக்குக் கிழக்காலேஎன் சித்தப்பாரு கடை வைச்சிருக்காரு.  அவருக்கு மூல வியாதி  அதுக்காக இவரைப் பார்க்க வந்தாக.  அவருக்குக் கண் நோயும் இருந்துச்சு.  டாக்டர் அய்யா மருந்து கொடுத்திலே இரண்டுமே சரியாயிடுச்சாம்.

சரிதான், அப்படித்தான் பல பேர் பேசிக்கிறாங்க.   எங்க ஊரிலிருந்து இருமலுக்காக இவரிடம் வந்தாருங்க, அவருக்கு முடக்கு வாதமும் இருந்திச்சு.  இந்த மருந்திலேயே இப்போது நல்லா குணம்.  இருமல், வாதம் இரண்டுமே குணம்.

நான் என் அறைக்குத் திரும்பவும் சென்றேன்.  அவர்களுடைய உரையாடலைத் தடை செய்ய விரும்பாமல்.
ஐந்து நிமிஷம் பொறுத்து நான் அன்பர்க்ளைப் பார்க்கக் கூப்பிடவும், சற்று முன் உரக்கப் பேசிக் கொண்டிருந்த அன்பரே முதலாவதாக அமைந்தார்.
அவருடைய விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.  அவருக்குக் கண் உபாதை.  வலது கண் சிவந்து நீர் வடிந்தது.  வீக்கமும் இருந்தது.  அவர் பேசினார்.  இந்தச் சோத்துக் கண் தாங்க தொந்தரவு கொடுத்தது.
நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.  அவர்களுடைய வழக்கில் வலதுபுறம் அனைத்துமே சோற்றை முதலாவதாகக் கொண்டிருக்கும்.  வட நாட்டிலிருந்து வந்த புதிதில் இந்தச் சொல் வழக்கு எனக்கு புரியத்தான் இல்லை.

உங்கள் ஊரிலே கண் வைத்தியர் இருக்கிறார் அல்லவா?  இருக்கிறாக, அவர் கண்ணுக்குக் கலிக்கம் கொடுத்தாரு.  மருந்து மாத்திரை எல்லாம் நிறையக் கொடுத்தாருங்க.  கன்னத்திலேயே ஊசி போட்டாரு.  அவர் உதட்டைப் பிதுக்கினார்.

டாக்டர் நாஷ் வெகுண்டு பேசுகிறார்.  இந்த அலோபதி மருத்துவர்கள் நச்சுப் பொருள்களை மருந்தாகக் கொடுக்காமல் இருந்தால் நமதுமுறை மருத்துவர்களுக்கே வேலையிராது.  கடுமையான சொற்கள் என்றாலும் உண்மை.

உறுப்புகளுக்கு மருந்து கொடுக்காமல் முழு மனிதனுக்கும் மருந்து தர இவர்கள் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?

நோயாளியின் பெயர் சண்முகம்.  கடந்த ஆறு மாதங்களாக அவருக்குக் கண்ணோய்.  வலது கண் பார்வை குறைந்துள்ளது.  பொருள்கள் பாதியாகத்தான் தெரிகின்றது.

நான் சிறிது யோசித்துப் பார்க்கிறேன்.  என் ஆசான் கொடுத்த குறிப்பில் அரைப்பார்வைக்கு லித்தியம் கார்பானிக்கம், லைக்கோபோடியம், ஆரம் மெட்டாலிக்கம் ஆகியவற்றைப் பரிந்துரை செய்திருந்தனர்.  சண்முகம் கொஞ்சம் நிதானித்துப் பதில் சொல்லுங்கள்.  பீச்சக் கண்ணைக் கையால் மூடிக் கொள்.  இந்தப் படத்தைப் பார்.  எப்படித் தெரிகிகறது.  அது ஒரு மரத்தின் ஓவியம்,  அழகுணர்ச்சிகளால் இன்று குவிந்த பல தாமரை மலர்கள்.
பூ, இலை எல்லாம் நல்லா தெரியுதுங்க.

சரி,  இப்போது கையை எடுத்துவிடு.  என்ன பார்க்கிறாய்?
மரம், கிளை அதன் மேலே பறவைக் கூடு.

சரி.  உன்னிடத்தில் போய் குந்து.  நான் குறிப்பேட்டில் எழுதுகிறேன்.  ஆரம் மெட்டாலிக்கம் ஆறு தொடர்ந்து இரு நாட்களுக்குப் பிறகு முப்பது இறுதியாக லூட்டிகம் 200.

அன்பர் சண்முகத்திற்கு நெடுநாட்களாகச் சளித் தொந்தரவு இருந்தது.  வற்றாத சளி, மூக்கும் நிறையப் பொருக்குத் தட்டும்.

ஒரு மாதம் பொறுத்து வந்து நன்பர் கூறினார்.  எல்லாமே சரியா போச்சுங்க.
இந்த மருந்தை அதிகம் பேர் பயன்படுத்துவபதில்லை.  அறியாமைதான் அதற்குக் காரணம்.  மூக்கிலிருந்து கம்பியைப் போல் சளி ஒழுகும்.  நோயாளிகளுக்கு காலிபைக்போமனேட், காந்தாரிஸ் அனைத்தையும் கொடுத்துப் பார்த்துவிட்டு, இந்த மருந்தை ஆறாவது வீரியத்திலிருந்து ஏணி முறை கொடுத்துக் குணப்படுத்தியிருந்தேன்.

மூன்றாவது மியாஸத்திற்கு ஏற்ற மருந்துகள் என்று மெர்க்யூரியசையும், ஃப்ளோரிக் அமிலத்தையும் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.  ஆனால் நோயாளியின் மியாஸம் உறுதி செய்யப்பட்டுவிட்டால் இது ஆறாவது வீரியத்திலேயே சிறப்பாக உதவுகிறது.

இந்த மியாஸத்தைச் சேர்ந்தவரின் உள இயல்பு எப்படி இருக்கும்?  என் ஆசான் தந்த குறிப்புகளிலிருக்கும் சில தகவல்கள் இங்கு எல்லோருக்கும் பயன் தரும்.

அவன் ஒரு அழுமூஞ்சி, சிடுமூஞ்சி, எல்லா நிகழ்ச்சிகளிலும் குறைபாடுகள் இருட்டான பகுதிகள் தாம் அவனுக்குத் தெரியும்.  எந்தப் பொறுப்பையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  அவற்றிலிருந்து நழுவி விடுவான்.  ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இராது.  மாணவனாக இருந்தால் கணிதப் பாடமே மூளையில் ஏறாது.  வற்புறுத்திக் கற்பித்தால் பள்ளியிலிருந்து ஓடி விடுவான்.  எந்தப் பாடத்தையுமே அவனால் சீராக நினைவில் கொள்ள முடியாது.  புரிந்து கொள்ளவும் சிரமப்படுவான்.

என் ஆசான் கூறுவார்  இத்தகைகய பிள்ளைகளை அடித்துமூ, திட்டியும் துன்புறுத்துவதைவிட அவர்களுக்கேற்ற மூன்றாவது மியாச மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து விட்டால் எவ்வளவோ நல்ல மாணவர்களை உருவாக்கலாமே.

ஹைதராபாதில் ஒரு `யதிம்கானா’ (அனாதை இல்லம்) இருந்தது.  அங்கிருந்த பல குழந்தைகளுக்கு அவர் ஏற்ற மருந்துகள் கொடுத்துச் சீராக்கியதை நான் கண்டிருக்கிறேன்.  அத்தகைய பெருந்தகையார்கள் லட்சத்திற்கு ஒருவர் இருந்தால் கூடப் போதும்.

ஒழுக்கம் குறைந்த பல குழந்தைகளை அவர் குறை கூட மாட்டார்.  அது மூன்றாவது மியாசம், தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் குணப்படுத்தலாம் என்று பரிந்துரைப்பார்.  அவ்வாறே மெய்ப்பித்தும் காட்டினார்.

பல நடுவர்கள், வழக்கறிஞர்கள் தங்கள் மக்களின் குறைபாட்டை நீக்குவதற்காக அவரை நாடுவதைக் கண்டிருக்கிறேன்.

2.
ஆரம் என்ற சொல்லுக்குப் பொன் என்பது பொருளாகும்.  இந்த விலை மதிப்புமிக்க உலோகத்தை உறைத்து மருந்தாக்கலாம் என்று கண்டுபிடித்தவர் மேதை ஹானிமன்.  அவருடைய மெட்டீரியா மெடிகா, நாட்பட்ட நோய்கள் ஆகிய நூல்களில் இது பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.

மனிதன் மூவகை ஆசைகளைத் துறந்தால் மட்டுமே பெருவழி ஏகலாம் என்பது மேலோர் கருத்து.  அவை முறையே மண், பெண், பொன் ஆகியவை.  இவற்றில் பொன் மிகவும் அரியதோர் உலோகம்.  ஒரு மனிதனின் சமுதாய மதிப்பும், ஒரு நாட்டின் ஆதிக்க உயர்வும் இதனால் காட்டப்படும். இந்தப் பொன் சில இடங்களில் மண்ணிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது.  வேதியியல் முறையில் மட்டமான உலோகங்களைப் பொன்னாக்கும் முறையைச் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  மனித மனத்தின் ஆசைக்கு எல்லையே கிடையாது என்ற உண்மையை விளக்கப் புகுந்த தாயுமானவ அடிகள்.

`. . . அனகேசன் நிகராக ஐம்பொன் மிக வைத்த பேரும் நேசித்த இரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் . . .’ என்று வருந்துகிறார்.  உலகத்திலேயே பொன் வளம் மிகுந்த நாடு தென்னாப்பிரிக்கா.  அதனால்தான் வெள்ளையர்கள் அதை நெடுங்காலம் தம் வசம் வைத்திருந்தனர்.

. . . மனிதன் மிகவும் நேசிப்பது தன்னுயிரை.  அதற்கு ஊறு நிகழ்ந்துவிடக் கூடாது என்றே ஒவ்வொருவனும் கருதுகிறான் என்றாலும் இந்த மருந்துக்கேற்றவரின் மனக்குறி என்ன தெரியுமா?  அவன் உளைச்சல் மிகுந்து தன்னுயிரையே போக்கிக் கொள்ள முயற்சிப்பான் என்பதாகும்.
உலகில் மிக விலை உயர்ந்த பொருள், மிகவும் உயர்வாக நேசிக்கும் உயிரையே போக்கிக் கொள்ளும் அளவுக்கு வல்லமை படைத்திருப்பது பெரு விந்தை என்று மருத்துவ மேதைகள் குறிப்பிடுகிறார்கள்.  இன்னொரு விந்தை பெண்ணுறவு நோயினால் துயருறும் பாலுறவு நோய்களுக்கும் இது அருமருந்து என்பதுதான்.

இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்டவை.  பரமசத்தியங்கள்.  பொன்னுடன் குளோரைடு உப்பைக் கலந்தும் ஒரு மருந்து தயாரித்திருக்கிறார் ஹானிமன்.  அது பெண்ணின் பாலுறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கும் மாற்று.  எனவே இது பெண்கள் மருந்து என்று கூடச் சொல்லலாம்.

உடலுக்கு உறுதிப்பாட்டையும், கட்டுமானத்தையும் தருவது எலும்பு.  அந்த எலும்புகளில் ஏற்படும் நசிவை இந்த மருந்து தடுக்கிறது.  தொழு நோயர்களின் மூக்கைக் கவனித்ததுண்டா?  பெரும்பாலும் அது தட்டையாகவே இருக்கும்.  அந்த எலும்பே நைந்து போயிருக்கும்.  பாலுறவு நோய்களுக்கும், தொழு நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று வலியுறுத்துவது சித்த மருத்துவம்.
`முற்றிய வெட்டை குட்டம்’ (வெட்டை-மேக வெட்டை-விந்துக் கசிவு) இதை கொனேரியா என்று அழைப்பார்கள்.

நாவுக் குழிக்கும், தொண்டைக்கும் இடையில் தொங்கு நிலையில் ஓர் எலும்பு உள்ளது.  அதைப் பாலடைன் (ஞயடயவiநே க்ஷடிநே) என்று அழைப்பார்கள்.  அது ஊறுபட்டால் மூச்சுத் திணறும்.  உணவு உட்செல்லாது.  அந்தப் பகுதி முழுவதுமே வீங்கி வாயிலிருந்து துர்நாற்றம் வீசும்.

எந்தப் `பாதுகாப்பு வளையமும்’ அவனை அந்த நிலையிலிருந்து நிவாரணம் தர முடியாது.  வாய் துர்நாற்றம் என்பது பற்களின் இடுக்கில் புதைந்து கிடக்கும் பிசிறுகளினால் மட்டுசூம ஏற்படுவது அன்று.  வீங்கி அழுதிகய எலும்புகளின் விளைவு அது.  இந்த நிலைக்கு மருந்து ஆரம் என்பதை நிரூபித்தார் ஹானிமன்.

சுரப்பிகள் வீக்கத்திற்குக் காரணமே மூன்றாவது மியாசம் என்றொரு அடிப்படைக் கருத்துண்டு.  அது ஆணின் விதையாக இருக்கலாம் அல்லது பெண்ணின் மார்பகமாக இருப்பதும் சாத்தியம்.  கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டுப் பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.  இந்த வீக்கங்களைக் குறைத்து நிவாரணமளிப்பது தங்கம் என்ற உலோகம்.

எலும்புகளின் நசிவுக்கு மட்டுமின்றி அவற்றின் தேவையற்ற வளர்ச்சி பல சமயங்களில் தொடை, இடுப்பு, விலா தோள்பட்டை ஆகிய இடங்களிலுள்ள எலும்புகள் கிளைத்துக் கொள்ளும்.  விலாவிலுள்ள கிளையை அறுத்தெடுத்தால் குதிகாலில் எழும்பும்.  அறுவை சிகிச்சை மூல காரணத்தை அறுத்தெடுக்காததே அதன் வளர்ச்சியைத் தடுத்துத் தீய்க்க ஹோமியோபதி தானே முன் வர வேண்டியிருக்கிறது?

மூன்றாவது மியாசத்திற்கு ஆட்பட்டவர்களின் உடலில் பல உதிரத் திரட்சிகள் ஏற்படும்.  பெருங்கட்டியாகவும் உருவெடுக்கும்.  பொறுக்க முடியாத நோவு ஏற்படும்.  இது எங்கே வேண்டுமானாலும் புறப்படலாம்.  காதுக்குப் பின்னால், தொண்டையில் அக்குளில், தொடையிடுக்கில், சிவந்து வீங்கிப் பொறுக்க இயலாது தொல்லை தரும்.  `ஹைபரேமியோ அக்யூட்’ என்று பெயர் கூறிப் பயமுறுத்துவார்கள்.  தங்கத்தின் ஆறாவது வீரியத்தைப் பயன்படுத்தி இவற்றைக் கரைத்து விடுவார் என் ஆசான்.  அந்தக் கட்டி மலம், சிறுநீர், சளி ஆகியவை மூலம் மெள்ள மெள்ள வெளிப்பட்டுவிடும்.  என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் என்று பாவேந்தரைப் போல வியந்து பாராட்டியிருக்கிறேன்.

இந்த மூன்றாவது மியாசத்தைத் தணிக்கும் ஆற்றலுடையது பாதரசம்.  இதை இரதம் என்று கூறும் சித்த மருத்துவம்.  சாதாரண உலோகங்களைப் பாதரசத்துடன் கலந்து தீயில் புடமிட்டுப் பொன்னாக மாற்றலாம் என்பது அவர்களுடைய கொள்கை.  `வெந்தழலில் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்’ என்பது பாடல் வரி.  இது ரசவாதம் எனப்படும்.  ஆக பாதரசம் பிற உலோகங்களைப் பொன்னாக்கும் என்பது ஓர் உண்மை.  இந்தப் பொன்னை மருந்தாக ஏற்பவர்களின் உடல் கூற்றுக்குப் பாதரசமும் ஒரு சிறந்த மருந்து.

இதை அதிகமாகப் பயன்படுத்துவதனாலும் உடலில் பல தீய விளைவுகள் ஏற்படக்கூடும்   பாதரசத்தின் அபரிமிதமான உபயோகத்தினால் விளையும் தீங்குகளுக்கும் இது ஓர் அருமருந்து என்று போயரிக் (பக்.96),  நாஷ் (பக்.291),  கெண்ட் (பக் 121) ஆகிய பெருந்தகையர்கள் அனைவருமே குறிப்பிடுகிறார்கள்.

 இந்த அளவு பாதரசத்தைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்களே என்று என் ஆசான் மிகவும் வருந்துவார்.  ஆதனால்தான் பல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்த அன்பர்களை அவர் என்னென்ன மருந்துகளை உட்கொண்டார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பரிவுரை செய்வார்.

3.
மூன்றாவது மியாசத்தினால தாக்கப்படுபவர்களின் சில பொதுக் குறிகளை என் ஆசான் உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறார்.  அவர்களுடைய குடும்ப வரலாற்றை ஆராய்ந்தோமானால் பெரும்பாலோர் மலடாய் இருப்பார்கள்.  அடிக்கடி குறைப்பிரசவம், குறைந்த ஆயுள், இதய நோய், மனக்கோளாறு, ஆறாத இரணம், தீராத தடுமன், வெள்ளை, வெட்டை நோய்கள், சுரப்பிகளில் வீக்கம், கட்டிகள் ஆகியவை சில முக்கியமான குறிகள்.

தாம் செய்வதே சரி என்று சாதிக்கும் அரசியல்வாதிகள்,
அராஜகப் போக்குடையவர்கள், அனைவரும் இந்த மியாசத்திற்குட்பட்டவர்களே.
பொதுவாக உலகம் பழிக்கும் செயல்களை வெளிப்படையாகச் செய்யும் இயல்புடையவர்கள் இவர்களே.

சில பெரியக் குடும்பத்துப் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகித் தெருவில் உருளுவார்கள்.  பெண் பித்துப் பிடித்து அலைவர்கள்.  ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வரவுக்கு மேல் செலவு செய்வார்கள்.
இத்தகைய போக்குடையவர்களுக்கேற்ற பல நல்ல மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன.

 அவற்றின் தலை நாயகம், பாதரசம், ஃப்ளோரிக் அமிலம், ஆரம்மெட்டாலிக்கம், காலி பைக்ரோமனேட், காலி ஐயோடைடு, கிரியோசோட், லாச்சஸிஸ், பைட்டோலக்கா, நைட்ரிக் அமிலம், லூட்டிகம் ஆகியவை.  இவைகளில் பெரும்பாலானவை கனிமங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் நலம்.

இந்தப் பொன்னுடன் ஆர்சனிக்கம், ஐயோடம், சோடியம் ஆகியவற்றை முறையான அளவில் கலந்து மருந்தாக்கி அளித்திருக்கிறார்கள்.  அவற்றுள் ஆரம் ம்யூரியாடிகத்தைப் பெண்களின் மருந்து என்றே கூறுவதுண்டு.

ஒரு நோயாளி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று ஆராய்வது ஒரு தனிக்கலை.  அதன் பொருட்டே மருத்துவன் அவர்களைப் பல கேள்விகள் கேட்டு விளக்கம் பெற வேண்டியிருக்கிறது.  அவை எல்லாம் தேவையற்றவை என்றோ, ஏளனத்திற்குரியவை என்றோ எண்ணுவது மதியீனம்.

ஒவ்வொர் ஆண்டும் எங்கள் மருத்துவமனையில் டிசம்பர் திங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  பெரும்பாலோர் படைப்பிரிவின் அலுவலர்களாக இருப்பார்கள்.  அந்த மாதம்தான் அவர்களுக்கு ஆண்டின் மருத்துவப் பரிசோதனை இருக்கும்.

பொதுவாக இந்த மாதம் அவர்களுக்குப் பெரும் சோதனைக் காலம்.  மருத்துவப் பரிசோதனை விரிவானதாக அமைந்திருக்கும்.  உதிரம், சிறுநீர், உமிழ்நீர், மலம் எல்லாமே சோதிக்கப்படும்.  படையினரின் மருத்துவமனையில் பல நுண் கருவிகள் உள.  அவற்றைச் சீரான முறையில் கையாளத் தெரிந்த நிபுணர்களும் அங்குள்ளனர்.  எந்தச் சிறு குறைபாடும் அவர்களுடைய பார்வைக்கு வந்துவிடும்.  தப்பி விட முடியாது.
படையினர்களின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும் உயர் மட்ட அலுவலர்கள் சீரான உடல் நலம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயர் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப் பெறுகிறது.  குறைபாடுள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்காது.  அவர்களுக்குச் சீரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.  மீண்டும் பரிசோதனையில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்கள் பதவி உயர்வுக்குப் பரிவுரை செய்யப்படுவார்கள்.  பொதுவாக அலுவலர்கள்.இவற்றைக் கண்டு பதற்றமுறுவார்கள்.  மிகுந்த உற்சாகத்துடன் நான் இதை வரவேற்பேன்.
இதற்குக் காரணம் அவர்களுடைய அன்றாட நடைமுறை இயல்.

லியோ டால்ஸ்டாய் என்றொரு மாமனிதர் வாழ்ந்தார்.  உருசிய நாட்டின் புரட்சிக்கு வித்தான கருத்துகளை விதைத்தவர் என்றே அவரைக் குறிப்பிடுவதுண்டு.  மிகச் சிறந்த இலக்கியங்களை இவர் படைத்திருக்கிறார்.  அன்னா கரீனா, போரும் அமைதியும், மீட்சி ஆகியவை மிகச் சிறந்த புதினங்கள்.  நெஞ்சை அள்ளும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.  அவர் சில காலம் தரைப்படையில் அலுவலராகப் பணிபுரிந்திருந்கிறார்.

`படையினர் வாழ்வு முறை மனிதனைச் சீரழிக்கிறது’  என்று தமது மீட்சி என்ற புதினத்தில் ஒரு பத்தியைத் துவங்கியிருக்கிறார்.

(Military Life Corrupts) `எந்தச் செய்கைகள் நடைமுறை வாழ்வில் தரக்குறைவானவை என்று சமுதாயத்தில் கருதப்படுகிறதோ அவை அனைத்தும் படையினரிடையே இன்றியமையாதவை’ என்று அவர் ஒளிவு மறைவின்றி எழுதுகிறார்.

இவற்றுள் மதுப்பழக்கம் சிறப்பிடம் பெறுகிறது.  இதை அருந்தாதவர்கள் அங்கு அரிதாகவே காணப்படுவார்கள்.  அது மட்டுமன்று.  அவர்கள் உயர் மட்ட வாழ்வுக்கு ( HIGH SOCIAL LIFE) தகுதியற்றவர்கள் என்றே கருதப்படுவார்கள்.
  மாபெரும் விருந்துக் களியாட்டங்களில் கையில் பழச்சாற்றுடன், விடிய விடியக் கண் விழிப்பது பெரிய சோதனை.(மது,சூது இவை எனக்கு பிடிக்காது இவற்றை வெறுப்பவன் ஆகவே எனக்கு ஸூஃபி சாமியார் என்றே பெயர்)   மதுப்பழக்கம், சீட்டாட்டம், நடனம் ஆகியவை தெரியாதவன், படையில் அலுவலராக இருக்கத் தகுதியில்லாதவன் என்பது பொதுவான கருத்து.

`இந்தியப் படை அலுவலர்களில் மெஸ் பிரிட்டிஷ் அரசின் எல்லைக் கூடாரம்’ என்று வெல்லஸ் ஹாங்கன் எழுதுகிறார்.  இது முற்றிலும் உண்மை.  வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, நடனம், இசை, சிறுவிளையாட்டு, தம்போலா (சூதாட்டம்) அனைத்தும் நாம் விடுதலை பெற்று ஐம்பதாண்டுகளுக்குப் பின்னும் புழக்கத்தில் உள்ளன.  இறுக்கத் தளர்வு ( RELAXING) நல்லதுதான்.  ஆனால் வெள்ளையர் மேற்கொண்ட அதே முறைகள் இன்றும் தேவைதானா? போர் முனையில் ஒரு மிடறு சாராயம் அருந்துவதில் தவறில்லை.  ஆனால் இனிய சூழல் உள்ள வளாகத்தில் பெண்களின் மத்தியில் இந்தக் கேலிக்கூத்து தேவைதானா?

அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல், அதைப் பின்பற்றி சிறுநீரகம், தொடர்ந்து இருதயம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.  அந்தப் பாதிப்பின் அளவு, கடுமை ஆகியவை அந்த ஆண்டின் இறுதியில் மருத்துவப் பரிசோதனையின்போது விளங்கி விடும்.
அதனால்தான் படை அலுவலர்கள் டிசம்பர் மாதத்தைக் கண்டு அஞ்சுவார்கள்.

4.
ஆசானின் முன்பு நாங்கள் மூவர் அமர்ந்திருந்தோம்.  அந்த நேரத்தில் அன்றைய மருத்துவக் குறிப்புகளை ஒவ்வொன்றாகப்  பார்வையிட்டு அவர் தமது கருத்தைக் கூறுவது வழக்கம்.  உயர் அலுவலரின் குறிப்பொன்றைப் படித்துவிட்டு
`இவர் உங்கள் வீட்டிற்கு வந்து மருந்து பெற்றதாகக் கூறினார்’.  என் நண்பர் பரமானந்தத்தை நோக்கியவாறு என் ஆசான் கூறினார்.

"ஆமாம்.  மறுநாள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை என்று தெரிவித்தார்  உதிர அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்ற விபரங்களையும் கூறினார்.  மிகவும் வற்புறுத்தினார், கெஞ்சினார் என்று கூறுவது கூடப் பொருத்தமாக இருக்கும்.  அதனால் அவருக்கு உதவி செய்தேன்’’ கழிவிரக்கத்துடன் பேசினார் என் நண்பர்.

அவர் மருத்துவப் பரிசோதனையில் வெற்றி பெற்றுவிட்டார்.  அவர் தொடர்ந்து கூறினார்.சோதனைக் கருவிகளை அவர் ஏமாற்றலாம்.  ஆனால உயிராற்றலை அவர் புறக்கணிக்க முடியுமா?  ஆசான் கேட்டார் பரமானந்தம் பதில் ஏதும் கூறவில்லை.

நீங்கள் அவருக்குக் கொடுத்த மருந்துகள் அகோனைட், பெல்லடோனா நான் சொல்வது சரிதானா?  என் ஆசான் தொடர்ந்து வினவினார்.
"உண்மைதான்.  அவர் மிகவும் வற்புறுத்தினார்.   அதனால்தான் . ." பரமானந்தம் திணறினார்.

டாக்டர் நாஷ், பக்கம் 87 ஆசான் என் முகத்தைப் பார்த்தார்.  நான் புத்தகத்தைப் பிரித்து அவரிடம் கொடுத்தேன்.   அவர் அந்தப் பகுதியை நண்பர் பரமானந்தத்திடம் காட்டினார்.

என் ஆசானுக்கு மருத்துவர் நாஷிடம் அதிகம் ஈடுபாடு கிடையாது.  அவர் பின்பற்றும் நிபுணர் ஏ. லிப்பே(ADOLPH LIPPE) .  NASH IS RASH  என்று அவர் கூறுவதுண்டு.  எனவே அவரே நாஷை மேற்கோள் காட்டியபோது நான் வியப்படைந்தேன்.

. . . வீக்க நிலைக்கு மாற்றாக மாற்றி மாற்றி அகோனைட்டையும், பெல்லடோனாவையும் தருவதுண்டு.  அது மதியீனம் ( SENSELESS) என்று நாஷ் எழுதுகிறார்.  அடுத்து ஆசான் என் முகத்தைப் பார்த்தார்.  நான் புரிந்து கொண்டேன்.

குறிப்பேட்டைப் பிரித்தேன்.  என் ஆசானின் பரிவுரைகள் அதில் இருந்தன.  ஒரு நோயாளிக்கு அகோனைட் தான் மருந்து என்று முடிவு செய்துவிட்டால் வேறு எதையும் தராதே.  தீவிரமான நோய்களுக்கு இது அருமருந்து.  பன்னிரண்டாவது வீரியத்தில் இதை மூன்று மணிக்கு ஒருமுறை தரலாம். (தற்போது எங்கே இருக்கிறது பன்னிரண்டு?) குறிகளின் வேகம் தணிந்ததும் கந்தகத்தை இதன் தொடர் மருந்தாகத் தரலாம்.  இரண்டும் ஒன்றை ஒன்று பின்பற்றும்.  ஆர்னிகா, ப்ரையோனியா, இப்பிகாக் ஆகியவையும் பயன் தரும்.  ஆனால குறிகள் ஒத்திருக்க வேண்டும்.

என் ஆசான் நண்பர் பரமானந்தத்தின் முகத்தை நோக்கினார்.  அவருக்கு வியர்த்து விட்டிருந்தது.  அவர் செருமினார்.

நீங்கள் மருந்து கொடுத்த அன்பர் குழம்பிய மனநிலையில் இருக்கிறார்.  அவருடைய பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.  தொண்டையிலும், நாசியிலும் வற்றாத சளி.  உடலின் பல பகுதிகளில் சிறு சிறு கட்டிகள்.  நோயின் தாக்கம் இரவில் அதிகமாக உள்ளது.  விரை வீக்கத்திற்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  தற்போது அவருக்கு உதிர அழுத்தமும் உள்ளது.. ..
ஆசான் மருத்துவக் குறிப்பேட்டை எங்களிடம் காட்டினார்.  ஆரம் மெட்டாலிக்கம் 200 தொடர்ந்து லூட்டிகம் 200.
வீரியத்தைக் கண்டு வியப்படையாதீர்கள்.  6, 30-ம் உதிர அழுத்தத்தை குறைக்கச் செய்யாது.   ஆசான் எழுந்து விடைபெற்றார்.

ஆரம் மெட்டாலிக்கத்திற்கேற்ற நோயாளிகளைத் தட்ப வெட்பம் மிகவும் பாதிக்கும்.  அவர் திறந்த வெளியையும், குளிர்ந்த காற்றையும் விரும்புவார்.  குளிர்ச்சியான நீர் அவருடைய கண்களுக்கு இதமளிக்கும் என்றாலும் ஆடைகளை நீக்கினால் அவர் குளிரினால் அவதியுறுவார்.  எனினும் கதவுகளும், ஜன்னல்களும் திறந்திருப்பதையே அவர் பெரிதும் விரும்புவார்.  வெப்பமான காற்று அவருடைய மூச்சுக் குழலைப் பெரிதும் பாதிக்கும்.
இந்த மருந்தை உயர்ந்த வீரியத்தில் அளித்துப் பயன் காணாமல் அதை அதிக அளவில் கொடுத்து ஒரு விதை வீக்கத்தை சீர் செய்த விவரத்தை மேதை கெண்ட் தெரிவிக்கிறார்.  பெருந்தகையர் தமது அனுபவத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும்.  அவர்கள் உண்மைக்கு மாறாக எதுவும் பேசுவதில்லை.  அதிக அளவு என்பது குறைந்த வீரியம்.  இந்த விவரத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தசம வீரியத்தில் மருந்துகள் தயாரிப்பதோ, அளிப்பதோ தவறு என்று வாதிக்கும் அன்பர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் சகட்டுமேனிக்கு மருந்து என்பது ஹோமியோபதியில் கிடையாதே.  ஒரு மருந்து தசம வீரியத்தில் பலன்தந்தது என்று அனுபவம் மிக்கவர் கூறினால் அதை நாமும் பயன்படுத்துவதில் தவறு ஏதுமில்லை.  குறைந்த அளவு வீரியம் நோயாளியின் நலனைப் பாதிக்காது.  அதை நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.

மண்ணிலும், பொன்னிலும் மறைந்து நிற்கும் மருத்துவத் தத்துவங்களை ஆராய்ந்து, மெய்ப்பித்து அளித்த மேதையின் தொண்டை எப்படிப் பாராட்டுவது?  

அவர்கள் நடந்து காட்டிய வழியைப் பின்பற்றுவது மட்டுமே அது.


*****
மேஜர் தி.சா.இராஜூவின்

ஹோமியோபதி கனிமங்கள் 
நூலில் இருந்து

திங்கள், 17 ஏப்ரல், 2017

argentum nitricum

ஹோமியோபதி கனிமங்கள்

மேஜர் தி.சா.இராஜூ


அர்ஜெண்டம் என்பது வெள்ளி என்ற கனிமம்.  நைட்ரிகம் வெடியுப்பு.  இவை இரண்டையும் கலந்து ஒரு மருந்தாக்கி, அதை வையகத்திற்கு அளித்த பெருமை மேதை ஹானிமனையே சேரும்.  இவர் எழுதியுள்ள மெட்டீரியா மெக்காப்யூராவில் இந்த மருந்தின் விவரம் உள்ளது.
நாம் சுவாசிக்கும் காற்றின் பெரும்பகுதி சுமார் எண்பது சதவீத வெடிவாயுவாகும்.  பயிர் பச்சைகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அம்சம் இது.

பழுப்பு நிறமுள்ள கண்ணாடிப் புட்டியில் இதை வைத்திருப்பார் என் அம்மான்.  அதன் மூக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.  கண்ணோய் வந்தால் அதை இரு கண்களிலும் விடுவார்.  தொண்டை கட்டி இருமல் வருமானால் ஒரு ஈர்க்குச்சியில் பஞ்சைச் சுற்றி அதை அந்த திரவத்தில் நனைத்து தொண்டையில் தடவுவார்.  இந்த முறையிலுமே அது நிவாரணம் தருவதை நான் கண்டிருக்கிறேன்.

உடல், உள்ளம், அறிவு இவற்றின் இணைப்பே மனித வாழ்வு.  உயிர் வாழும் எல்லாப் பிராணிகளுக்குமே உடல் உண்டு.  பெரும்பாலானவைகளுக்கு உள்ளமும் உண்டு.  இந்த அறிவுப் பகுதி சம நிலையை இழக்கும்போது வாழ்க்கையில் பெரும் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

ருஷீத் அகமது என்ற என் நண்பர் தன் தாயாரை அழைத்து வந்தார்.  அவருக்கு வயது நாற்பத்தைந்து இருக்கும்.  கட்டமைந்த உடல்வாகு.  கண்ணாடி அணிந்திருந்தார்.

இவர் என் வால்தா சாகிப் - ரஷீத் கூறினார்.

முகத் தோற்றத்திலிருந்தே அது விளங்குகிறது  இவருடைய கோளாறு என்ன?
அது பலவகைப்பட்டதுங்க.  சரியாக உண்பதில்லை.  உறக்கம் கிடையாது.  காரணமற்ற சிடுசிடுப்பு.  மறதி பேசினால் கோபம் மிகுதியாகிறது.

பெயர்?
நஸ்ரத் பேகம்
உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்கிறார்?
அவர் துபாயில் இருக்கிறார்.

என் முன்னால் பதினைந்து நிமிஷங்கள் அமர்ந்திருந்த நஸ்ரத் பேகம் நான்கு முறை ஏப்பம் விட்டார்.  `யோவ் யோவ்’ என்ற ஓசை.

உங்களுடைய குறைபாடுகளைச் சொல்லுங்கள் தாயே.

நானே சொல்லுகிறேன் ரஷீத் பேசத் துவங்கினார்.  எங்கள் வீட்டுக் கொல்லைப்புரத்தில் கேணி   இருக்கிறது.  பக்கத்தில் குளியலறை.  அங்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று நேரான பாதை.  இன்னொன்று இரண்டு கதவுகளைத் திறந்து கொண்டு போக வேண்டும்.  எவ்வளவு முறை சொன்னாலும் அம்மா அந்தச் சுற்று வழியாகத்தான் போவார்கள்.  நீரைச் சேந்தி எடுத்துக் கொண்டு உடலில் தண்ணீரை ஊற்றி, சோப்பைப் குழைத்து தடவிக் கொண்டு அரைமணி நேரம் குளியல்.

வானத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பார். அவசரப்படுத்தினால் சிடுசிடுப்பு.  துவாலையை குளியலறையிலேயே வைத்து விடுவார்.  அதை மறந்து விட்டீர்களே என்று கூறினால் சினங் கொள்ளுவார்.   பிறகு கண்ணாடியின் முன்பு இருபது நிமிஷம்.  ஓதுவதற்கு சென்றால் அங்கே ஒரு மணி நேரம் கழிந்து விடும்.

இப்படி எத்தனை நாளான இருக்கிறது?
ஒரு வருஷமாக.
மாத விலக்கு சீராக இருக்கிறதா?
இல்லிங்க.  அடிக்கடி கெடு தப்பிப் போகும்.  அது பெரிய தொந்தரவு, இடையிலே வெள்ளைப்பாடு வேறு.

இன்னொரு விவரமும் சொல்ல வேண்டும். ரஷீத் குறுக்கிட்டார்.   அந்தச் சமயங்களிலும் அதற்கு முன்பும் மன இயக்கம் பெரிதும் சீர் கெடுகிறது.  சிறுநீர் கழிக்க ஓடுகிறார்.  சில சமயங்களில் உள்ளாடை நனைந்து விடுகிறது.

உங்கள் கிராமத்தில் தர்கா இருக்கிறதா?
இருக்கிறது.  இவர் அடிக்கடி அங்கே போவதுண்டு.
ரிக்ஷாவில் போவாரா?

நடைதான் மிகவும் வேகமாக நடப்பார்.  நடப்பதில் மிகுந்த ஊக்கம் காட்டுகிறார்.  அங்கே ஜிந்தா மியானின் மிட்டாய்க்கடை இருக்கிறது.  நிறைய இனிப்புகள் வாங்குவார்.  குழந்தைகைளுக்கெல்லாம் கொடுப்பார்.  அவரும் நிறையச் சாப்பிடுவார்.  உங்களுக்குக் சர்க்கரை வியாதி வரப் போகிறது என்று நான் கூறினால் என்னைக் கடிந்து கொள்ளுவார்.
ஒரு மருந்தைத் தேர்ந்தெடுக்கும் முன்பு நான் மூன்று நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்வேன்.  பொதுவாக எவரும் மருத்துவர்  ஈ.பி. நாஷைப் பொருட்படுத்த மாட்டார்கள்  (nash is a rash) ஆனால் நான் அவருடையதையும் படிப்பேன்.  சிறப்பாக அவர் மருந்தின் இயல்புகளைப் பட்டியல் போட்டுக் காட்டுவார்.  293-97-வது பக்கங்களில் அவர் விவரமாகவே இந்த மருந்தைக் குறித்து பேசுகிறார்  என்றாலும் முதல் பட்டியலே எனக்குப் போதுமானதாக இருந்தது.  மருந்தின் படமும், நோயாளியின் தன்மையும் அறுபது சதமாவது ஒத்துப் போக வேண்டும் என்பது என் மதிப்பீடு.

அந்த அம்மைமாருக்கு நான் நான்கு பொட்டலங்கள் மடித்துக் கொடுத்தேன்.  இரண்டு நாள் இடைவெளியில் காலை வேளையில் ஒரே ஒரு முறை மட்டும் தாயும் ரஷீத்தும் திரும்பிச் சென்றார்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு வியாழனன்று அவரைத் தர்காவில் சந்தித்தேன்.  அம்மா நல்லா இருக்காங்களா?
அவர் விரல்களைக் குவித்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.
இன்ஷா அல்லா(ஹ்)

ஒரு மருத்துவனுக்கு அது போதுமானது.  அந்த அன்னைக்கு நான் கொடுத்த மருந்து அர்ஜெண்டம் நைட்ரிகம்.  ஆறு, முப்பது,  இரு நூறு இறுதியில் பாஸிலினம் இரு நூறு.  இருபது ஆண்டுகளாக அவர் பட்ட துயரங்கள் விலகின.

2.

மருத்துவர்  கெண்ட் இதை அறிவு மட்டத்தில் சிறப்பாகப் பணிபுரியும் மருந்து என்று குறிப்பிடுகிறார்.   நோயாளி  சில விசித்திரமான முடிவுக்கு வந்து விடுகிறான்.  அதனின்று அவன் விடுபட இயலுவதில்லை.  அவன் தன் போக்கிலேயே செல்லுகிறான்.  தான் செய்வதே சரி என்று நியாயம் கற்பிப்பான்.  அவன் முன்பு பல காட்சிகள் எதிர்ப்படும்.  அவை உண்மை என்றே அடித்துக் கூறுவான்.  அடிக்கடி கிறுகிறுப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படும்.  தனக்கு ஏதோ தீங்கு நிகழப்போகிறது என்று அச்சமுறுவான்.  இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு மரணம் நிச்சயம் என்று உறுதி கூறுவான்.  இவை அவருடைய (கெண்ட்) கணிப்பு.  இந்த வகை மனித பலரை நாம் வேளைகளில் சந்திக்கிறோம்.

இவை மட்டுமல்ல.  இது கடுமையான தலைநோவுக்கும் மருந்து.  தலையைச் சுற்றி இறுக்கமான கட்டுப் போட்டால் வலி சமனமாகும் தன்மை பிக்ரிக் அமிலத்திலும், எட்டிக்காயிலும் உள்ளது.  அதே வரிசையில் அர்ஜெண்டம் நைட்ரிகத்தையும் சேர்க்கலாம்.

என் அண்டை வீட்டில் ஒரு சிறுமி இருந்தாள்.  இயல்பிலேயே இனிமையான குரல்வளம் படைத்தவள்.  சென்னையிலுள்ள இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்றாள்.  சிறு வயதிலிருந்தே அவளுடைய திறமையைக் கண்டு நான் பாராட்டியதுண்டு.  அவள் என்னைக் காண வந்தபோது அவளைப் பாடும்படி வேண்டினேன்.

அவள் பாடினாள்.  நான் கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்தேன்.  சுகானந்தத்தில் முழுகினேன்.  அவள் ஆரபி ராகத்தை ஆலாபனம் செய்தாள்.  மேல்மட்டத்திற்குச் சென்றபோது ஒலி நின்றது.  நான் கண்களைத் திறந்தேன்.  அவள் வாயில் கையை வைத்துக் கொண்டு செருமினாள்.

என்ன குழந்தாய்?
குரல் கம்மி விடுகிறது ஐயா,
அடிக்கடி இப்படி நிகழ்கிறதா?
ஆமாம்.  மேல் ஸ்தாயியை எட்டும்போது அங்கே நிலைத்து நிற்க முடிவதில்லை.

மறுநாள் அவளுக்குக் கொடுத்த மருந்து ஆர்ஜெண்டம் நைட்ரிகம் ஆறு, மூன்று நாட்கள் தொடர்ந்து மருந்துண்டாள்.  மூன்று வாரம் பொறுத்து லூட்டிகம் 200.

நான் வேறு ஏதாவது பத்திய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா?
முன்னாட்களில் நமது இசைக்கலைஞர்கள் வெள்ளியினால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள்.  விலைவாசி ஏற்றத்தினால தற்போது அது சாத்தியமில்லாமற் போய்விட்டது என்றாலும், இரவில் ஒரு வெள்ளிக் குவளையில் நீரை நிரப்பி காலையில் அதை அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு விளம்பரம்.  அந்த மங்கை அன்று மாலை பாடவிருந்தாள்.  எப்போதுமே இசை என்னை ஈர்க்கும்.  இன்பமூட்டும்.  அவள் மேடைக்கு வந்ததும் முன் வரிசையில் என்னைப் பார்த்தாள்.  கீழே இறங்கி அரங்கத்திற்கு வந்து என் காலைத் தொட்டு வணங்கினாள்.

 இப்போதெல்லாம் எனக்கு ஒரு தொந்தரவுமில்லை.  அவள் மேடைக்குத் திரும்பியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த புள்ளிகள் என்னைப் பொறாமையுடன் பார்த்தது இன்னும் என் நினைவில் நிற்கிறது.  நான் மேதை ஹானிமனை உள்ளத்தால் தொட்டு வணங்கினேன்.  அடிக்கடி குரலை அதிகமாக உபயோகப்படுத்தும் அன்பர்களுக்கு இது மிக நல்ல மருந்து என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். (Clergyman’s Sore Throat).

வற்றலான சதைப்பிடிப்பில்லாத தோற்றம், வயதை மீறிய முதுமை.  நோய் கொண்ட பகுதியில் ஒரு நடுக்கம்.  தேவையற்ற பரபரப்பு.  வாழ்க்கையில் பிடிப்பிராது.  வறட்டு வேதாந்தம் மிக்க உரையாடல்.  மறதி, எல்லாச் செயல்களிலுமே ஒரு மறதியான போக்கு.  நடுநிலைமையோடு சிந்திக்கும் திறனையே இழந்து விட்டது போன்ற இயக்கம்.  இவை இந்த மருந்துக்கு ஏற்றவரின் பொதுக்குறிகள்.  நோய் மெல்ல வரும் அதே வகையில் விலகும்.  குணமே ஆகாத ஒரு நோய் தன்னைப் பிடித்திருப்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவரை ஆட்கொண்டிருக்கும்.  தலையில் மட்டும் பல கோளாறுகள்.
 தொந்தரவுகளின் மையப் புள்ளியே அது தானோ என்று எண்ணத் தோன்றும்.  மண்டை ஓடே விலகிக் கொள்ளும் வகையில் நோவு.  அதற்காகவே அவள் தலையைச் சுற்றி துணியைக் கட்டிக் கொள்ளுகிறாள்.  ஒரு கிறுகிறுப்பு,  பார்வையில் ஒரு தடுமாற்றம், வெப்பத்தை அவனால தாங்கவே இயலாது.
தொடர்ந்து கண்களைப் பயன்படுத்த முடியாத தன்மை.  தையல் வேலை செய்ய முயன்றால் கண்களில் நோவெடுக்கும், கைகள் நடுங்கும்.  கண்களில் நீர் கசிந்து புளிச்சை படியும்.  கண் நரம்புகளில் தளர்ச்சி.  வெண் பகுதியில் சிறு சிறு புண்கள்.

ஈறுகள் வீங்கித் தொல்லை கொடுக்கும்.  உதிரம் கசியும்.  நாவில் மொட்டு மொட்டாக புண்கள் கிளைக்கும்.  அண்ணத்திலும் புண்கள் இருக்கும்.  நாவின் நுனி சிவந்து காணப்படும்.  அதை அசைக்கவே முடியாது.  தவிர சுவை உணரும் திறனையும் நாவு இழந்து விடும்.  தொண்டைப் பகுதி இரணமாக இருக்கும்.  வறட்டு இருமல், தொண்டையியில ஏதோ சிக்கிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வு இருக்கும்.  அதை அழுத்திப் பிடித்தது போன்ற நிலை.

வயிற்றின் மேற்புறம் வீங்கியே காணப்படும்.  அடிக்கடி ஓசை மிகுந்த ஏப்பம்.  காற்று கீழ் நோக்கியும் பாயும்.  வயிற்றிலும் ஓர் இறுக்கம்.  எரிச்சலும் இருக்கும்.  உண்ட உணவு செரிமானமாகாது.  ஓக்காளம், வெளிப்பாட்டில் நிறையச் சளி இருக்கும்.  இடதுபுறம் விலா எலும்புக்குக் கீழே ஒரு நோவு.
வயிற்றில் வலி,  கூடவே போக்கும் அதிகமாக இருக்கும்.  திப்பி, திப்பியாகப் பச்சை நிறத் துணுக்குகள் காணப்படும். உண்ட உடனோ நீர் அருந்திய பிறகோ, உடனுக்குடன் வெளிப்போக்கு.  இனிப்புக்களை வயிறு ஏற்காது.  ஆசன வாயில அரிப்பும் இருக்கும்.

தன்னையறியாமல் சிறுநீர் பிரியும்.  இரவு, பகல் எந்த நேரத்திலும் இது நிகழலாம்.  சிறுநீர் சொட்டுச் சொட்டாகக் கருநிறத்தில் வெளிப்படும்.  சிறுநீரை முழுமையாக வெளிப்படுத்திய நிறைவு இராது.  கழித்த பின்பும் சில சொட்டுக்கள் வெளியாகும்.  சிறுநீர் விசிறி அடிக்கும்.  வெள்ளை நோயின் துவக்க நிலை, சிறுநீருடன் கெட்டியான வெண் திரவம் வெளிப்படும்.

3.

இந்த நேரத்தில் பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

1971-ஆம் ஆண்டு வங்கப் போர் முடிந்தபிறகும் அதன் எல்லையில் நாங்கள் தங்கியிருந்தோம்.  அப்போதும் நான் மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருந்தேன்.  படையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகும் முழுமையாகக் குணமடையாமல் பல உயர் அதிகாரிகள் என்னை நாடி வருவார்கள்.  பலரது வருகை வேடிக்கை பார்க்க மட்டும் இருக்கும்.  பிறகு சிலர் நிவாரணம் பெறுவது கண்டு இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டார்கள்.  அப்படி அறிமுகமானவர்தான் அன்பர் லலித்குமார் பூரி.  அவர் பல தொல்லைகளால் அவதியுற்றார்.  ஒரு மூன்று மாத காலத்தில் அவர் முழுமையான தெளிவு கண்டார்.  அதற்குப் பிறகு அவர் பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார்.  அவர்களில் ஒருவர்தான் இம்தியாஸ் அகமது.  லெப்டினன்ட் கர்னலாகப் பதவி வகித்தார்.  அவருடைய மனைவி டெல்லியில் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.  அவருக்கு இரு குழந்தைகள்.
ஒரு முறை நாங்கள் இருவரும் டெல்லிக்குப் பயணம் செல்ல நேரிட்டது.

 விமானத்தில் அடுத்தடுத்து இருக்கைகள்.  நான் தொடர்ந்து ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது.  டெல்லியில் அவர் தம்முடன் தங்கும்படி வேண்டினார்.  நானும் இணங்கினேன்.  அப்போதுதான் நான் அவருடைய மனைவியையும் இரு குழந்தைகளையும் சந்திக்க நேரிட்டது.

அவருடைய குழந்தை நிம்மி வெகு விரைவில் என்னை ஆட்கொண்டு விட்டாள்.  தன் ஆப்பில் கன்னத்தை என் முகத்தோடு ஒட்டி, என்னைக் குதிரை தூக்குமாறு பணித்தாள்.  நான் நெகிழ்ந்தே போய்விட்டேன்  ரத்தின கம்பளம் விரித்த வரவேற்பு அறையில் நிம்மியை முதுகில் சுமந்து தவழ்ந்தேன்.  `மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்’ அனுபவித்து எழுதுகிறார் வள்ளுவர்.  மறுநாள் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றேன்.  `ஷிப்பாகைர்’ என்று கையை ஆட்டி விடை கொடுத்தது நிம்மி.

ஒரு மாதம் பொறுத்து அன்பர் இம்தியாஸ் என்னைச் சந்திக்க வந்தார்.  எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்.
சொல்லுங்கள் ஐயா,
அவர் சிறிது தயங்கினார்.  சுற்றும் முற்றும் பார்த்தார்.
இங்கு யாரும் வர மாட்டார்கள்.  நீங்கள் மனம் விட்டுப் பேசலாம்.
தொழுகை வேளையில் சில நாட்களாக சிறுநீர் பிரிந்து விடுகிறது.  அதை அடக்க முடியவில்லை.  எங்கள் நியதிப்படி தொழுகை நேரத்தில் உடலில் சிறுநீர் படுமானால் நாங்கள் மீண்டும் குளித்த பிறகே ஓதுதல் செய்ய இயலும்.  நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.  அவர்கள் என்னை நன்கு பரிசோதித் பிறகு அறுவை சிகிச்சைக்குட்படும்படி பரிவுரை செய்துள்ளனர்.  அது எனக்கு உடன்பாடு அன்று,  உங்கள் முறையில் என் குறைபாட்டை நீக்க முடியுமா?

முறைப்படி அவரைப் பரிசோதித்தேன்.  அர்ஜெண்டம் நைட்ரிகம் அவருக்கேற்றதாக இருந்தது.  ஆகவே அதைத்தர முடிவு செய்தேன்.
`ஒரே மருந்து, அதுவும் குறைந்த அளவில் என்ற விதியில் எனக்கு முழு நம்பிக்கை.   அதையும் ஏணி முறையில் தான் கொடுப்பேன்.  ஆகவே ஆறு, முப்பது, இருநூறு வீரியத்தில் மருந்தை மூன்று நாள் இடைவெளியில் கொடுத்தேன்.  சிறுநீர் சிதறுவது மட்டுமின்றி அவருக்கிருந்த மற்ற குறைபாடுகளும் நீங்கிப் போயின.  அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவரானார்.

அன்று மாலை உலாவச் சென்றபோது அவர் எதிர்ப்பட்டார்.  பதினைந்து நாள் விடுப்பில் நாளை டெல்லிக்குப் போகிறேன். அவர் புறப்படும் நேரத்தை அறிந்து கொண்டேன்.

விமான நிலைத்தில அவரைச் சந்தித்து ஒரு மூங்கில் சிப்பத்தை அவரிடம் அளித்தேன்.  இம்தியாஸ் வினவினார் என்ன இது?
என் நிம்மிக்கு அதனுள் டார்ஜ்லிங் ஆரஞ்சுப் பழங்கள்.  அதன் சுளைகள் தேனை ஒத்த சுவையுடையவை.
அவர் நெகிழ்ந்து போனார்.  சென்ற கடிதத்தில் கூட பேகம் கேட்டிருந்தார்.  `கோடா அங்கிள்’ (கோடா-குதிரை) எப்போது வருவார் என்று நிம்மி வினவுகிறாள்.

இரண்டு வாரம் பொறுத்து தொலைபேசியில் அவர் என்னுடன் தொடர்பு கொண்டார். ` இம்தியாஸ் பாய் சாகிப்’
எப்போது திரும்பினீர்கள்? நிம்மி நலமா?

மதியம் வந்து விட்டேன்.  உங்களை உடனடியாகச் சந்திக்க வேண்டும்.
வரலாமே, பேகம் அக்தரின் புதிய காஸெட் ஒன்று கிடைத்தது.  அற்புதமான கஜல்.

அடுத்த முப்பது நிமிடங்களில் அன்பர் வந்தார்.  அவரை அமரும்படி வேண்டினேன்.  பரபரத்தார்.  உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்.
நான் கதவைத் தாழிட்டேன்.  இசையை நிறுத்தினேன்.
நாற்காலியில் அமர்ந்து இரு கைகளையும் கோர்த்துக் கொண்டார்.  ஒரு துயர நிகழ்ச்சி.  அவருடைய குரல் கமறியது.

எல்லோரும் நலம்தானே?
ஆம். நான் மட்டும் தான் நோய்வாய்ப்பட்டு விட்டேன்.
சொல்லுங்கள் அன்பரே, இந்த நண்பன் உங்கள் தொண்டன்.
டெல்லி சென்று தங்கிய நாட்களில் என்னிடம் பெரிய  மாறுதல் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன்.  என்னால்.. .. என்னால் .. .. அவர் திணறினார்.
சில மனித்துளிகள் பொறுத்து மீண்டும் பேசத் துவங்கினார்.  `என் இயலாமை பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை.  நூரு என் நடத்தையில சந்தேகம் கொள்கிறாள்.  நூரு அவருடைய மனைவியின் பெயர்.  அவருடைய விழிக்கடைகளில் நீர் துளிர்த்தது.

கவலைப்படாதீர்கள் அன்பரே, எல்லாம் சீராகி விடும்.  அவரை ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தேன்.
அவர் பேசிய மொழிகள் என்னை மிகவும் துயரத்தில்  ஆழ்த்தின.  இது எப்படி நேர்ந்தது என்று எனக்குச் சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன்.  என்னை வழியனுப்ப பேகம் விமான நிலையத்திற்குக்கூட வரவில்லை.
எங்கேயோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று மட்டும் எனக்குத் தெளிவாயிற்று.  ஆனால் எங்கே?  நான் நன்பரின் மருத்துவக் குறிப்பேட்டைப் புரட்டினேன்.

. . . தவறு நிகழ்ந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.  அதற்கு நானே காரணம் என்ற குற்ற உணர்வால் தாக்கப்பட்டேன்.  எப்போதும், போயரிக், க்ளார்க், கிப்சன்மில்லர் ஆகிய பெரியோர்களின் குறிப்புகளைக் கவனமாகப் படிப்பேன்.  இந்தத் தடவை எனக்கே அடி சறுக்கிவிட்டது.

இந்த மருந்iiக் குறித்து எழுதிய நிபுணர்கள் இதைத் தாய்த் திரவத்தில் தர தவண்டும்.  அதிகமாகப் போனால் முப்பதுக்கு மேல் போக வேண்டாம் என்று பரிவுரை செய்திருக்கிறார்கள்.

எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய மருந்துகள் என்ற வரிசையில் என் ஆசான் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார்.  அதில் இந்த மருந்தும் ஒன்றாகும்.  உயர்ந்த வீரியங்களைப் பற்றிப் பேசும்போது """"புலியைக் கூண்டிலிருந்து விடுவித்து விடலாம்.  ஆனால் அதை மீண்டும் அடைக்க இயலாது’’ என்று அவர் கூறுவது வழக்கம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் என் நன்பருக்குக் கொடுத்த முறிவு மருந்து நேட்ரம் ம்யூரியாடிகம் 200. (ஆதாரம் க்ளார்க் பக்கம் 213).
அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு கர்னல் டெல்லி சென்று வந்தார்.  எனக்காகச் சாந்திணி சௌக்கிலிருந்து ரஸமலாய் வாங்கி வர மறக்கவில்லை.  மனைவி, குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வண்ணப் புகைப்படங்கள்.

எல்லாம் சீராகி விட்டதா? மெள்ள வினவினேன்.
அவர் வலதுகைக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.  அதைப் பற்றி நெஞ்சில் அணைத்துக் கொண்டேன்.
`பிஸ்மில்லா(ஹ்) ஹிர்ரஹ்மான் ஹிர்ரஹீம்’
இறைவனுக்கு ரெஹ்மான் என்று பெயர்.  அவனது கருணைக்கு எல்லை ஏது? சகட்டுமேனிக்கு மருந்துகளைத் தர வேண்டாம் என்று என் தோழர்களுக்குக் கூற விரும்புகிறேன்.

""""நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்யாது ஓம்புமின்’’

இது புறநானூற்றுப் பாடம்.
இத்தகைய சிக்கல்களுக்கு செலினியம், காலாடியம் ஆகிய மருந்துகளைத் தர வேண்டும் என்று சொல்லுவார்கள்.  லைகோபோடியத்தை மிக உயர்ந்த வீரியத்தில் கொடு என்று நாஷ் எழுதுகிறார்.  இந்த நண்பரின் நோய் முதல் என்னவென்று எனக்குத் தெரியுமே.

இந்த மருந்து குறித்து மேதை கெண்ட் பல அரிய தகவல்களைத் தருகிறார்.
உடலுறவில் நாட்டமே இராது.  முயற்சி செய்யும்போது உறுப்பு சுருங்கிப் போகும்.  ஆண்மையற்ற ஒரு நிலை.   உறவு கொள்ளும்போது நோவு, உறுப்பிலேயே வெடிப்புகள், புண்கள்.

பெண்களின் இடது சினையுறுப்பில் நோவு.  விலக்கிற்கு முன்பும் அந்த நேரத்திலும் வெள்ளைப்பாடு.  விலக்கிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெரும் உதிரப்போக்கு

நெஞ்சுப் பகுதி புண்ணாக இருக்கும்.  இருமல், மூச்சுத் திணறும் வகையில் இருக்கும்.  இருமும் போது விலா எலும்பில் நோவு.  கண்களில் நீர் முட்டும்.  தலையிலிருந்து தொண்டை வரை அதிர்ச்சி.  குரல் எழும்பாது.  நாடித்துடிப்பும் சீராக இராது.  வலதுபுறம் படுக்கவே முடியாது.  இரவில நெஞ்சு வலி மிகுதியாக இருக்கும்.  எவ்வளவு முறை இருமினாலும் தொண்டையில் ஏதோ சிக்கலிருப்பதாக ஓர் உணர்வு.

முதுகந்தண்டில் வலி, கைகள் வலுவிழந்து போகும்.  நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படும்.  கைகள் மரத்துப் போகும்.  கெண்டைச் சதையில் நோவு, இடுப்பில் வலி.

ஆழ்துயில் இராது.  சிறிய ஒலி கூட உறக்கத்தைக் கலைத்துவிடும்.  பயங்கரமான கனவுகள்.  குழந்தையானால் உறக்கத்தில் அலறியடித்துக் கொண்டு அழும்.  அடிக்கடி கனவில் பாம்புகள் வருமானால் அப்போது இந்த மருந்தைத் தேர்ந்தெடுத்துவிடலாம்.  இது இந்த மருந்தின் சிறப்புக் குறிகளில் ஒன்று.  சாதாரணமாகவே நோயாளி தூக்க நிலையிலேயே இருப்பான்.
காய்ச்சலும் வரும்.  எப்போதும் வாந்தி வரும் போன்ற நிலை.  சிலசமயம் வாந்தி எடுக்கும்.  குளிர் இருக்கும் என்றாலும் போர்த்திக் கொள்ளத் தோன்றாது.

பொதுவாகத் தொல்லைகள் இரவில் மிகுதியாகும்.  வெப்பம் அறவே ஆகாது.  குளிர்ந்த உணவை வயிறு ஏற்க மறுக்கும்.  உண்ட பிறகும் தொல்லைகள் மிகும்.  குளிர் காற்று இதம் தரும்.  நோயாளி காற்றோட்டமான இடத்தில் தங்குவதை விரும்புவான்.  உடலை அழுத்திப் பிடித்துவிட்டாலும் இதமாக இருக்கும்.  இதையும் இடது புற நிவாரணிகளின் பட்டியலில் சேர்க்கலாம் என்றாலும் வலது புறம் படுக்கவே இயலாது என்பதையும் மறக்கக் கூடாது.
இந்த மருந்தை அலோபதி மருத்துவர்கள் இயல்பான நிலையிலேயே பயன்படுத்துகிறார்கள்.  சிறப்பாகக் கண்ணுக்கும், தொண்டைக்கும்.

வெடி வாயு கலந்த வெள்ளியை வீரியப்படுத்தி நிவாரண எல்லைகளைப் பெரிதும் விரிவாக்கிவிட்டார் மேதை ஹானிமன்.  இதன் பொருட்டு மருத்துவ அறிவு உலகமே அவருக்குப் பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
உயர்ந்த வீரியத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஸைலீஷியா - மேஜர் தி.சா.இராஜூ




`ஷிலா’ என்ற வடமொழியில் கல்லுக்குப் பெயர்.  தமிழில் சிலை என்று கூறுகிறோம்.  சிலை என்பது தமிழ் மொழியில் உருவத்துக்கும் பெயர்.  கற்சிலை, பொற்சிலை, செப்புச்சிலை ஆகியவை எடுத்துக்காட்டுகள்.  லத்தீன் மொழியில் `ஸிலிகா’ என்றால் கல்துகள்.  ஆங்கிலத்திலும் அவ்வாறே.

`ஸில்’ என்ற சொல்லிலிருந்து பிறந்தது ஸைலீஷியா.  அல்லோபதி முறை இதை மருந்தாக ஏற்றுக் கொண்டதில்லை.  மலை வெடிப்புகள் உமிழ்ந்த கசிவை `ஷிலாஜித்’ என்ற பெயரில் ஆயுர்வேதம் பயன்படுத்துகிறது.  ஆனால் ஹோமியோபதியில் கல்துகள் ஒரு சிறந்த மருந்து.
வெறும் கல்துணுக்கு மருந்தாகக் கூடும் என்று ஹானிமனைத் தவிர யார் கூறினார்கள்?  ஹோமியோபதியின் உடன்பிறப்பு என்று கூறக்கூடிய தசை மருத்துவத்தில் மட்டும் ஷுல்லர் இதையும் சிறந்த மருந்து என்று ஏற்றுக் கொள்ளுகிறார்.

கல்துகளைத் தண்ணீரிலோ உண் சாராயத்திலோ கரைக்க முடியாது.  இது ஒரு விஞ்ஞான உண்மை.  ஆனால் அதன் சிறு துகள் நீரோடு கலக்கும்.  போகர் என்ற சித்தா ஒரு சிறந்த மருத்துவரும் கூட.  அவர் பல வகைக் கற்பொடிகளை இணைத்து உருவமாக்கி அதன் மேல் தேன், வெல்லம், பழம், நெய், பால் ஆகியவற்றின் கலவையைப் பூசி, அதை வழித்து மக்களுக்கு வழங்கச் செய்தார்.  அதை உண்டவர்களுக்குப் பல நோய்கள் நீங்கின.  இதைப் பஞ்சாமிர்தம் என்று அவர் அழைத்தார்.  ஆலயங்களில் உருவங்களுக்கு பால், தேன், நெய், திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அதன் பொழிவை மக்களுக்கு வழங்குவதிலும் மருத்துவத் தத்துவம் இருக்கும் எனத் தோன்றுகிறது.  இது குறித்து ஆராய்ச்சி  செய்வது நலம்.  அங்கு பயன்படும் துளசி, வில்வம், கற்பூரம் ஆகியவற்றின் மருத்துவச் சிறப்புகள் அனைவரும் அறிந்ததே.

கல்துகளை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து உருகச் செது அதனுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து ஒரு விசேஷமான முறையில் இதன் மூலக்கூற்றைப் படைத்தார் ஹானிமன் என்று சொல்லப்படுகிறது.  நாம் அறிந்து கொள்ள வேண்டியது இந்த மூலக்கூறு தாவர, தானிய வகைகளில் காணப்படுகிறது என்பதே.  (புல்வகை தானியம், பேரீச்சம்பழம்) விலங்கினங்களில் இது அதிகம் இல்லை.

ஸைலீஷியாவின் சிறப்பியல்புகள் குறித்து மேதை ஹானிமன் தமது `நாட்பட்ட நோய்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.  அமாவாசையன்று மிகுதியாகும் வியாதிகளை இது சீராக்குகிறது என்று உறுதிபடக் கூறுகிறார்.  (அமாவாசையன்று வலிப்பு நோய்க்கு ஆட்பட்ட பல அன்பர்களைக் குணப்படுத்த இது மிகவும் பயன்பட்டிருக்கிறது என்பது என் அனுபவம்).  எளிதில் வசப்படாத நோய்களில் இந்த வலிப்பு நோயும் ஒன்று.  எவ்வளவோ மருந்துகளைப் பயன்படுத்திச் சோர்ந்த நிலையில் இருந்த எனக்கு இது சிறந்த நன்பனாக உதவிற்று.  பல மருந்துகளின் பிரயோகம் அன்பரின் வலிப்பு நோயை அமாவாசை என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்தது.  அப்போது தூஜாவின் அடித்தளத்துடன் ஸைலீஷியாவை(30) கொடுத்ததும் நோய் நிரந்தரமாக அந்த அன்பரை விட்டு நீங்கிவிட்டது.  எனக்குச் சில திபேத்திய லாமாக்ளுடன் பழக்கமுண்டு.  அமாவாசையன்று மிகுதியாகக் கூடிய நோய்களின் பட்டியலில் அவர்ள் இந்த வலிப்பு நோய்க்குச் சிறப்பிடம் தருகிறார்கள்.  ஆனால் அவர்கள் இதற்குத் தரும் மருந்து வேறு.  சூரிய ஒளியை முப்படைக் கண்ணாடிகளின் வழியே குவித்து அதை நோயுள்ளவரின் கண்களில் பாய்ச்சுகிறார்கள்.  அவர்கள் ஊரில் ஆதவனின் ஒளி ஓர் அரிய வரப்பிரசாதம்.

ஸைலீஷியாவை ஸோரா என்ற தோஷத்திற்கு எதிரியாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் இது தூஜா என்ற ஸைக்கோஸிஸ் வகை அவுடதத்திற்கும் தொடர் மருந்து ஆண்டிமோனியம் க்ரூடம், ஹேபார் சல்ஃப்யூரிகம், பல்சட்டிலா ஆகிய மருந்துகளையும் அடியொற்றி நல்ல பலனைத் தருகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை (க்ளார்க் பக். 206, 253, 292, 314).

எவ்வளவு சத்து மிக்க உணவை அளித்தாலும் அது உதிரத்தில் கலந்து ஊட்டத்தை அளிக்கத் தவறும்போது நாம் ஸைலீஷியா குறித்து எண்ண வேண்டும்.  எதிலும் ஒரு மந்தமான போக்கு.  இது மனவளர்ச்சிக்கும் பொருந்தும்.  நடக்கவோ, பேசவோ நாளாகும் குழந்தைகைள், தலை அளவு பெரிதாகி வயிறு சட்டியைப் போல் வீங்கியிருக்கும்.  இத்ததைய நிலையிலுள்ளவர்களை இது விரைவில் குணப்படுத்தும்.  மலச்சிக்கலில் இதன் நிலை விசித்திரமானது.  மலம் வெளிப்படும்.  பிறகு உள்ளுக்கு இழுத்துக் கொள்ளும் இது ஒரு சிறப்பான குறி.

மற்றது, எங்கெல்லாம் சீழ் பிடித்துள்ளதோ அல்லது சீழ் பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் இது வெகு விரைவில் பணிபுரிகிறது.  சிறப்பாக உள்நாக்கு வீக்கம், பல் ஈறுகளின் தடிப்பு, மூட்டுகளில் சீழ் கோர்த்த சிரங்குகள் ஆகியவை.  ஹேபர் சல்ஃப்யூரிகம் இதைப் பழுக்க வைக்கும்.  ஸைலீஷியா சீழை வெளிப்போக்கும்.  அல்லது காய வைக்கும்.
என் நன்பரின் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கடுமையான மலச்சிக்கல் இருந்தது.  இன்னும் பல நோய்க்குறிகள் இருந்த போதிலும், குழந்தை நாள்கணக்கில் மலம் கழிக்காமலிருந்தது வெரும் தொல்லையாக இருந்தது.  குடல் பகுதியைப் படம் எடுத்துப் பார்த்தார்கள்.  அன்னக் குழலிலிருந்து மலத் திறப்பு வரையி இது ஒரே நீண்ட குழாய்.  சிறு குடல், பெருங்குடல் என இரு பகுதிகள் உள.  பெருங்குடலிலும் மூன்று வளைவுகள் மலக்குடலும், குடல் வால் பகுதியும் திசுக்களாலும், நரம்புகளாலும், இணைக்கப்பட்டிருக்கும்.  இதனுள் எங்கே கோளாறு இருந்தாலும் அது நாவில் பிரதிபலிக்கும்.  மலக்குடலில் இருந்த ஒரு பகுதி தொய்ந்த பையைப் போல் ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  செயலற்று போய்விட்ட அந்தப் பகுதியைத் துண்டித்து மீதியைத் தைக்க வேண்டும்.  இதற்கு `ஹஸ்பிரிங்’ டிஸீஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்.  இரண்டாயிரம் பேர்களில் ஒருவருக்கு இது ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.  இரண்டு வயதுக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யத் தயங்கினார்கள் பெற்றோர்கள்.



2.
குழந்தைகள் எளிதாக மலம் கழிப்பதற்குப் பயிற்சியளிப்பதில் சிறந்தவர்கள் பஞ்சாபிகள்.  தாயார் சிறு மதலையைத் தமது முழங்காலில் ஏந்திப் படுக்க வைத்திருப்பார்.  இலேசாக முதுகையும், விலாவையும் அமுக்கிக் கொடுப்பார்.  குழந்தை எளிதில் மலத்தை நீக்கிவிடும்.  இது ஓர் ஆரோக்கியமான செயல்முறையும் கூட.

ஒரு முறை அந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.  அங்கு குழந்தையின் தாய் அதை முழங்காலில் ஏந்திக் கொண்டுபடும் துயரத்தைக் கவனித்தேன்.  மலம் கழிக்கும் முயற்சியில் குழந்தையின் தலை வியர்த்துவிட்டது.  நான் அருகில் சென்று கவனித்தேன்.  இருபது நிமிட முயற்சிக்குப் பிறகு மலத்துணுக்கு தலை காட்டிற்று.  ஆனால் உடனே உள்ளுக்கிழுத்துக் கொண்டது.

நண்பர் மனம் நொந்து போயிருந்தார்.  """"நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?’’ பரிதாபகரமான குரலில் வினவினார்.   என் மனதில் தோன்றிய கருத்த உறுதி செய்து கொள்வதற்காக மீண்டும் கெண்டின் நூலைப் புரட்டினேன்.  வேண்டிய விபரம் கிடைத்து விட்டது (பக்.932).
தூஜாவின் அடித்தளத்துடன் இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு ஸைலீஷியா முப்பது, இரு மாத்திரைகள்.  ஒரு வாரம் பொறுத்து  பாஸிலினம் 200 அதுவும் இரு சிற்றுருண்டைகள்.  குழந்தை சிரமமின்றி மலம் கழிக்கத் துவங்கினான்.  தாயின் துயரம் நீங்கிற்று.  பின்னாளில் இத்தகைய குறிகள் இருதால் தூஜா, ஸானிகூலா ஆகிய மருந்துகளும் துணை நிற்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஷுஸ்லரின் கருத்தைத் தெரிவிக்கச முன் வந்த மருத்துவர்கள் டிவியும், போயரிக்கும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.  (பக். 144) அம்மை வைத்ததற்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப் கோளாறுகளுக்கும் அவர்கள் இந்த மருந்தைப் பரிவுரை செய்கிறார்கள்.

ஒரு பச்சை நெல்மணியை எடுத்துப் பார்த்தோமானால் அதன் உமி, நெல்லின் முளைப் பகுதியை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதைக் கவனிக்கலாம்.  அந்த முளை உதிரும் வரை உமிப் பகுதி அதைக் கவ்விப் பிடிக்கிறது.  அந்த உமியின் முனையில் ஸைலீஷியா உள்ளது என்று கெண்ட் எழுதுகிறார்.

பொது மேடையில் உரையாற்றுபவர்கள்.  வழக்கறிஞர்கள் சிலருக்குத் தமது கருத்துக்களை உறுதிப்பாட்டுடன் எடுத்து விளக்க முடியாத மன நிலை ஏற்படும்.  அவர்கள் தலையைப் பிடித்துக் கொண்டு கைகளால்  அதைத் தாங்கியவாறு கேவுவார்கள்.  `எனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்றே விளங்கவில்லையே’ என்று புலம்புவார்கள்.  இந்த நிலை அரசோச்சுபவர்களுக்கும் ஏற்படக் கூடும்.  அப்போது சிறிதளவு ஸைலீஷியா அவர்களிடம் பழைய உறுதிப்பாட்டை மீட்டுத் தரும் என்று கெண்ட் தெரிவிக்கிறார்.  யுதிஷ்டிரரிலிருந்து சேம்பர்லேன் வரை இப்படி எத்தனை அரசுக் காவலர்களை நாம் கண்டிருக்கிறோம்?  அவர்களுடைய இயல்பின் காரணமாக நாட்டு மக்கள் எத்தனை தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?  இடையிலே மனவலிமை தவறிக் கெட்டவர்களுக்கு மடும் இது மருந்தன்று.  இயல்பிலேயே மன வளர்ச்சி குன்றியவர்களையும் இது சீராக்கியிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  பாரிடா கார்பனேட், கல்காரியா கார்பானிகா ஆகிய மருந்துகளுக்கு இது பெரிதும் வலிமை சேர்க்கிறது.  உள் மனதின் அடியாழத்தில் இது புரியும் விந்தைகள் ஆனந்தம்.    இது குறித்து எனது இரண்டாவது புத்தகத்தில் ஒரு தனிக் கட்டுரையே எழுதியிருக்கிறேன்.  (ஸோ(ம்)னாம்புலிசம் என்றால் என்ன?)  எனினும் எந்த வயதிலும் உள்ளவர்கள் தூக்கத்தில் எழுந்து பணிபுரிவார்களானால் அந்த விசித்திரமான நிலையை நீக்க ஸைலீஷியா துணை புரிந்ததை நான் கண்டிருக்கிறேன்.  முப்பதாவது வீரியமே போதும்.  அந்த வகையில் இது ஒரு விசித்திரமான மருந்து.

ஒன்றை மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நீடித்துப் பணிபுரியும் மருந்துகள் எல்லாhம்  பயன் தருவதற்கும் அதிகக் காலம் எடுத்துக் கொள்ளும்.  ஓர் ஆண்டின் பகுதியில், அல்லது ஒரு நிகழ்ச்சியின் பரிணாமமாக இந்த மந்தத் தன்மை ஏற்படலாம்.  `அந்தத் தேர்தலில் தோற்றுப் போன பிறகு மீண்டும் எழவே துணிவு பிறக்கவில்லை’ என்று கூறும் அரசியல்வாதிக்கு இது ஓர் அருமருந்து.

ஸைலீஷியா நோயாளியினால் குளிரைத் தாங்க இயலாது.  தலைக்குக் குளித்த பிறகு பல தொல்லைகள் பின்தொடரும்.  குளிர் காலத்திலும் ஈரப்பசையற்ற சூழ்நிலையில் அவனுக்குக் தொந்தரவிராது.  ஆனால் குளிருடன் சாரலும் சேர்ந்து கொண்டால், அவனால் அதைப் பொறுக்க இயலாது  அந்த வேளையில் ஸைலீஷியா பலன் தரும்.
காயம்பட்டு எளிதில் ஆறாத புண்ணுடையவர்களுக்கு ஹேபார் சல்ஃப்யூரிகத்தைத் தேர்ந்தெடுக்கிறோம்.  ஆனால் அது மட்டுமே முழுமையான மருந்து அன்று.  காயம்பட்ட புண் பொருக்குத் தட்டும் என்றாலும், அதனடியிலும் சீழ் கோர்த்துக் கொள்ளும், வீங்கும், மினுமினுக்கும்.  தொட்டாலே நோயாளி கதறுவான்.  இதை உரித்துப் பார்த்தால் நாரும், சீழும் இருக்கும்.  இந்த  நிலை ஏற்படுவதற்குக் காரணமே உணவின் சாறு சீரான அளவில் உதிரத்துடன் கலந்து நோயாளிக்கு ஊட்டம் அளிக்காமல் இருப்பதுதான் என்பது அறிஞர்களின் கருத்து.  மேலோட்டமாகப் பார்த்தால் இது விளங்காது.  ஆனால் உண்மை அதுவேதான்.

பொருக்குத் தட்டிய ஓட்டிற்குக் கீழே தொந்தரவு இருக்குமானால் அப்போதைய நிலைக்கு ஸைலீஷியாவைத் தசம வீரியத்தில் கொடுத்தப் பலன் கண்டிருக்கிறேன்.  இந்த நிலை உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி.  குழந்தையின் தலையில் கரப்பான் என்ற சீழ் கோர்க்கும் நோய் பரவும்  அதிலிருந்து வடியும் ஊன் நீர் படும் இடமெல்லலாம் சிரங்குகள் கிளைக்கும்.  மருத்துவர் களிம்புகள் கொடுப்பார்.  சிரங்குகள் ஆறி விடும். பொருக்குத் தட்டும்.  ஆனால் மீண்டும் அதனடியில் சீழ் கட்டும்.  அப்போது அதைக் குலைத்து உருமாற்றிப் புண்களை ஆற்றும் பணியை இந்த மருந்து செய்துவிடும்.

தலையில் மட்டுமின்றி நுரையீரலின் பகுதியில் சீழ் பிடித்தாலும் ஸைலீஷியா உதவி புரியும்.  அதன் முழுப் பகுதியிலும் சீழ் பிடித்தால் அதை நியூமோனியா என்று அழைக்கிறார்கள்.  இந்த நிலையில் ஸைலீஷியாவை மிகுந்த கவனத்துடன் தர வேண்டும்.  மீண்டும் மீண்டும் தரவே கூடாது.  இந்த மருந்தின் தாக்கத்தைத் தாங்கும் வலு அந்த உடலில் இல்லை என்பதே இதற்குக் காரணம்.

3.
கல்காரியா சல்ஃப்யூரிகத்தையும் ஸைலீஷியாவுக்கு இணை மருந்தாகக் கூறுவதுண்டு.  இரண்டையும் மாற்றி மாற்றித் தரவும் செய்வார்கள்.  அது சரியான முறையன்று.  ஸைலீஷியா புண்களைப் பழுக்க வைக்கும்.  ஆனால் கல்காரிய சல்ஃப்யூரிகம் புண்களை ஆற்றுவதற்கு உதவி புரியும்.  ஒரு புண்ணைப் பழுக்க வைத்து அதன் உள்ளீடுகளை வெளியேற்றுவதுதான் சீரான முறை.  அழுக்கு சீழாகவும், ஊன் நீராகவும் வெளிப்பட்டபிறகும் புண் ஆறாமல் இருக்குமானால் அப்போது கல்காரியா சல்ஃப்யூரிகத்தைத் தரலாம்.

எலும்பை ஒட்டியோ, அதைச் சுற்றியோ ஏற்படும் இரணங்களுக்கு ஸைலீஷியா மிக நல்ல மருந்து.  எலும்பில் குண்டு பாய்ந்து புதைந்திருக்கும் நிலையில்கூட அந்தப் புண்களைப் பழுக்க வைத்து ஸைலீஷியா வெளியேற்றிவிடுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
உமிழ் நீர்ச் சுரப்பிகளும், ஈறு தடித்து வீங்கிய நிலையிலும் தாடையையே அசைக்க முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு என் ஆசான் தசம வீரியத்தில் ஸைலீஷியாவைத் தருவதை நான் கண்டிருக்கிறேன்.  ஈறுகளில் சீழ் கோர்த்துக் கொண்டிருக்குமானால் அப்போது ஸைலீஷியா உடனடியாகப் பலன் தரும்.  உதிரமும்,  சீழும் நிறைய வெளிப்படும்.  அதைப் பொருட்படுத்தக்கூடாது.

மிக அதிகமாக வியர்வையை வெளிப்படுத்தும் நோயாளிகளை நான் கண்டதுண்டு.  அவர்கள் நடக்கும் இடமெல்லாம் ஈரக்காலடி இருக்கும்.  மேஜோடுகளையும் நனைத்து விடும்  அந்த நிலையை ஸைலீஷியா முப்பது நிரந்தரமாகக் குணப்படுத்திவிடும்.  பொதுவாக உடலின் மேற்பகுதியிலிருந்து வியர்வையை வெளிப்படுத்தும் அன்பர்களை இது விரைவில் குணப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

மூக்கிலும், காதிலும் இது புரியும் அற்புதங்கள் மிக அதிகம்.  உமிழ் நீர்ச் சுரப்பிகள் பாதிக்கப்படுமானால் அப்போது செவியும் பழுதடைவது உறுதி.  காதில் இரைச்சல், சீழ் அல்லது உதிரப்பெருக்கு, செவி மடல்களில் தடிப்பு அனைத்தையும் ஸைலீஷியா குணப்படுத்தி விடும்.  மூக்கின் எலும்பு பாதிக்கப்பட்டு அது சப்பையான நிலையிலும் நுகரும் திறமை குன்றிய போதும் இந்த மருந்து துணை புரியும்.

சிலசமயம் நாக்கு தடித்துப் போகும்.  பிரட்டவே முடியாது.  நாவு, மூக்கு, காது, உமிழ் நீர்ச் சுரப்பிகள் ஆகியவை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டால் அது மூன்றாவது தோஷத்துடன் தொடர்புடையதாகும்.  அந்த வேளைகளில் இடையூடாக இரு நூறாவது வீரியத்தில் இரண்டு மாத்திரை லூட்டிகத்தைக் கொடுத்து விடுவது நல்லது.

சில குழந்தைகைளுக்குப் பால் ஒத்துக் கொள்ளாது.  அதை ஓங்கரித்து வெளித் தள்ளிவிடும்.  பால் தயிராகத் திரிந்து வெளிப்படும்.  மலத்திலும் திரிந்த தயிர்ப் பகுதி இருக்கும்.  அந்த நேரங்களில் ஸைலீஷியா, நேட்ரம் கார்பனேட் ஆகியவை நினைவிற்கு வர வேண்டும்.  சகட்டுமேனிக்கு தூஜாவைக் கொடுத்து குழந்தையை அவதிப்படச் செய்தல தவறு.  தாய்ப்பால் ஒத்துக் கொள்ளாத குழந்தைகளுக்கும் இதுவே நல்ல மருந்து.  செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சூடான உணவை ஒதுக்குபவர்கள், அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள், பாலுணவு செரிக்காதவர்கள் ஆகியோருக்கு ஸைலீஷியா சிறந்த மருந்தாக அமைவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

படை வீரர்களுக்கும் இந்த மருந்து மிகுந்த பயனளிப்பதை நான் கண்டதுண்டு.  முதலாவதாக அம்மைக் குத்தலால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.  பலவகை உணவு நேரந்தவறிய உணவு, பல்வேறு தட்ப வெட்ப நிலைகளின் பாதிப்பு ஆகியவற்றின் விளைவுகளையும் ஸைலீஷியா போக்கி விடும்.  தூஜாவின் அடித்தளத்தோடு தரப்படுமானால் நன்று.  பற்கள், உடற்கூற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பல் என்பதும் எலும்பு வகையைச் சேர்ந்ததே.  அதைக் கல் துகள் கலந்த சுண்ணாம்பு என்றே சொல்லலாம்.  (ஸிலிகேட் ஆஃப் லைம்) இதில் சொத்தை விழுந்து பளபளப்பை இழந்து சொரசொரப்பாக மாறுமானால், அப்போது ஸைலீஷியா நினைவுக்கு வர வேண்டும்.  ஈறுகள் கொழுத்து அதற்குப் பின்னால் உள்ள பகுதியில் இரணம் ஏற்படக்கூடும்.  பல்லின் நிறமே பழுப்பாக மாறிவிடும்.  சூடான பானம் அருந்தினாலோ அல்லது சூட்டு ஒத்தடம்  கொடுத்தாலோ சமனம் கிடைக்கும். ஈறுகளுக்கு அடியிலும் வீக்கம் ஏற்படலாம்.  நோய் இரவு நேரத்தில் மிகுதியாகி, சூடும் அழுத்தமும் நிவாரணம் தருமானால் அப்போது உறுதியாக ஸைலீஷியாவை தசம வீரியத்தில் தரலாம்.  இதை என் ஆசான் மெய்ப்பித்திருக்கிறார்.  பல் என்று குறிப்பிடும்போது நகத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.  அதுவும் எலும்பின் வெளிப்பாடே.  சிலருக்கு நகம் அடிக்கடி சொத்தையாகும்.  குழலிடும், உள் நோக்கி வளரும், பொடித்துப் போகும், நிறம் மாறும், நகக்கணுக்களில் பொறுக்க இயலாத நோவு உண்டாகும்.  அந்த நிலையிலும் ஸைலீஷியா தசம வீரியத்தில் பயன் தருவது உறுதி.  இதையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

உள் மனதின் அடியாழத்தில் இது புரியும் வித்தைகள் அனந்தம்.  எனினும், எந்த வயதில் உள்ளவர்களும் தூக்கத்தில் எழுந்து பணிபுரிவார்களானால் அந்த விசித்திரமான நிலையை சீராக்க ஸைலீஷியா துணை நிற்பதை நான் கண்டிருக்கிறேன்.  முப்பதாவது வீரியமே போதும்.  தூஜாவின் அடித்தளம் துணை புரியும்.  அந்த வகையில் இது ஒரு விந்தையான மருந்து.
சிறிதளவு உடலுழைப்பும், வியர்வையைக் கக்க வைக்கும்.  சிறப்பாh இது முகத்தில் வெளிப்படும்.  அந்த வேளையில் அவன் குளிர்ந்த காற்றில் உலாவினால் அது அவனது தொண்டைப் பகுதியையும், நுரையீரலின் தொடக்கப் பகுதியையும் பாதிக்கும்.  விக்கல் எடுக்கும்.  பொதுவாக இந்தப் பிரிவு நோயாளி குளிர்ந்த பொருட்களையே உண்ண விரும்புவான்.  ஐஸ்கிரீமில் கொள்ளை ஆசை.  தேனீர் கூட அவனுக்குச் சூடாக இருக்கக் கூடாது என்றாலும், உடல் சூடாக இருக்கும் வேளையில் குளிர்க் காற்றின் தாக்கம் ஏற்படுமானால் அவனுக்குப் பல கோளாறுகள் ஏற்படும்.  அப்போது ஸைலீஷியா உடனடி நிவாரணம் தருவது உறுதி.

இது ஒரு பல்முனை நிவாரணி.  நோயாளியின் அடிப்படை இயல்புகளை ஆராய்ந்து இதைக் கொடுத்தால் நிரந்தரமான நிவாரணம் கிடைப்பது உறுதி.

*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து