நேட்ரம் ம்யூரியாடிகம்
(NATRUM MURIATICUM)
சாதாரணச் சமையல் உப்பு
*****
பலமுனை நிவாரணி
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லா மருந்துகளுமே பல முகங்கள் கொண்டவையே. எனினும் மிக அதிகமான நிவாரண முனைகள் கொண்ட ஒரு மாபெரும் மருந்தை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. இது குறித்து என் முந்தைய நூற்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். என்றாலும், இன்னும் எழுதுவதற்கு அதிகம் விவரங்கள் உள என்பதே உண்மை.
ஒவ்வொரு பொருளிலும் உள்ள மருத்துவ ஆற்றலை வெளிக் கொணர்ந்து படம் பிடித்துக் காட்டியவர் மேதை ஹானிமன். ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில் இத்தனை சக்தி உறைந்திருக்கிறது என்ற உண்மையை விவரித்ததற்காக, மருத்துவ உலகமே, ஏன் மக்கள் சமுதாயமே, அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. இதன் மருத்துவக் குறிகள் மொத்தம் 2900. எண்ண எண்ண வியப்பைத் தூண்டும் நிவாரணி இது.
உப்பு உலகெங்கும் நிறைந்துள்ளது. இந்தப் புவியின் பரப்பில் முக்கால் பங்கு கடல் நீர், உப்புக் கரைசல், உலகில் உலாவும் ஜீவராசிகள் அனைத்திலும் உதிரம் உள்ளது. அது உப்பு நீர்.
வெளிப்பாடு
நமது கழிவு-சிறுநீரும், கண்ணீரும், வியர்வையும் கூட உப்பேதான். இவை கூட மருந்தாக அமைய முடியும் என்பதே ஒரு பெரு வியப்பு. ஒரு வேளை நமது உடலின் கழிவுப் பொருளே உப்பாக இருப்பதனால்தான் இது மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறதோ என்று எண்ணும்படி இருக்கிறது.மியாஸம்
மூன்று வகைத் தோஷங்களைப் பற்றித் தமது முதல் குறளிலேயே குறிப்பிட்ட பெருந்தகை, ‘மிகினும், குறையினும் துயர் செய்யும்’ என்று கூறுகிறார். உப்பைக் குறித்தும் அவ்வாறே சொல்லலாம்.உலகம் முழுவதும் கடல் பரவியுள்ளது. பல வேறு பிரதேசங்களில் உள்ள தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு சூழ்ந்துள்ள நீரிலுள்ள உப்பின் அளவு வேறுபடுகிறது. எந்த இடங்களில் குறைந்த விகிதம் உப்பு உள்ளதோ அங்கு உப்பு அதிகமாக உள்ள நீர் விரைகிறது. இதையே கடலின் இழுப்புச் சக்தி (OCEAN CURRENTS) என்று கூறுகிறார்கள். இது மிகப் பெரும் வலிமை வாய்ந்தது. இதைப் போன்ற உள்ளியக்கம் மனித உடலிலும் ஏற்படுகிறது. உடலிலுள்ள உந்து சக்திக்கும் ஆதாரமே இந்த உப்பின் தடிமத்தைப் பொருத்ததாகும்.
ஷுஸ்லரின் தசை மருந்துகளில் முக்கியானது இந்த உப்பு. தசம வீரியத்திலிருந்து ஆயிரம் பத்தாயிரம் வரை வெகு சிறப்பாகப் பணிபுரியும் மருந்து இது. (என் ஆசான் இரு நூறாவது வீரியத்திற்கு அதிகமாகப் பயன்படுத்த மாட்டார் நானும் அவரையே பின்பற்றுகிறேன்.) மூன்று அல்லது ஆறாவது தசம வீரியங்களிலேயே இந்த மருந்து பல அற்புதங்களைச் செய்வதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நம்ப இயலாத அளவுக்கு இது நிவாரணம் தருகிறது.
`காற்றும் நீரும் எப்படி எல்லா மக்களுக்கும் பொதுவானதோ அதேபோல் கடல் நீரும் அமைய வேண்டும். அதிலிருந்து காய்ச்சும் உப்புக்கு நான் வரி கொடுக்க மாட்டேன்’ என்று சூளுரைத்து வலிமை மிக்க பிரிட்டிஷ் ஆட்சியையே உலுக்கினார் காந்தி அடிகள். உப்பிற்கான அறப் போராட்டம் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அந்தப் பெருமகன் இறுதிவரை உப்பில்லாமலேயே வாழ்ந்தார். அவரது துணைவியாரும் அவ்வாறே.
நா காக்க
உப்பில்லாமல் வாழ்பவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எத்தகைய நோய்க்கும் ஆளாகவில்லை. புலனடக்கத்திற்கு உப்பு உறு துணை. மனித உடலை வாழ்விப்பதும் உப்பு. அதை வீழ்ச்சியின் திசையில் இட்டேகுவதும் உப்புத்தான். எப்படி உப்பின்றி வாழ்வது கடினமோ, அதேபோல் அமித உப்புள்ள உணவையும் உண்பது கடினம். புலவி நுணுக்கத்தில் கூட ஊடலின் அளவு உப்பைப் போல அமைய வேண்டும் என்று வள்ளுவம் பேசும்.உணவுப் பண்டங்கள் கெடாமல் பாதுகாப்பது உப்பு. இறைச்சி, மீன், சில காய்வகைகள் ஆகியவற்றை உப்பு சீர் கெடாமல் வைத்திருக்கும். ஊறுகாயே உப்புக் கரைசல்தானோ? நமது வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் பங்கு பெறுவது உப்பு.
நல்ல பண்புக்கும், ஒழுக்கத்திற்கும் உப்பு ஒரு மறு பெயர். உருது மொழியில் நன்றி கெட்டவனை `நமக் ஹாரம்’ என்று அழைப்பார்கள்.
நன்றி கெட்ட விதுரா - சிறிதும்
நாணமற்ற விதுரா -
தின்ற உப்பினுக்கே நாசம்
தேடுகின்ற விதுரா. . .
என்று ஹஸ்தினாபுரத்து மன்னன் துரியோதனன் தன் சிற்றப்பனைத் திட்டுகிறான்.
சாலரி (SALARY) ஊதியம் என்ற சொல்லே கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் பிறப்பு `ஸால்ட்’ (உப்பு) என்பது தான். ஆதி நாட்களில் உப்பையே ஊதியமாகக் கொடுத்து வந்தனர்.
வடநாட்டில், படைவீரர்கள் வியாசரின் கீதையை ஏந்திப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பதவியேற்பின்போது, தென்னாட்டுப் படை வீரர்கள் (வெல்லிங்டன்) பயன்படுத்துவதோ உப்பு. உப்பின் பெருமையை, வாழ்வில் அதன் இன்றியமையாமையை, விவரமாக விளக்கவே இத்தகையை நீண்ட முன்னுரை. உப்புத்தான் வாழ்க்கை. அது இல்லாவிட்டால் வாழ்வில் சுவை ஏது?
உப்பினும் சிறந்த மருந்தேது?
இந்த மருந்தின் செயல்திறனைப் பட்டியல் போட்டு கொடுத்து விடலாம். அவை மிகவும் எளிமையானதாகத்தான் தோன்றும். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பபடும் ஒரு பொருள். இவ்வளவு நோய்களைக் குணப்படுத்த முடியுமா என்று ஹானிமன் காலத்திலேயே நிபுணர்கள் ஐயமுற்றார்கள். நம்ப மறுத்தார்கள். எள்ளி நகையாடினார்கள். அந்த மேதை தமது கொள்கையை நிரூபித்துக் காட்டியபோது அவர்கள் திகைத்துப் போய் நின்றனர். `நாட்பட்ட நோய்கள்’ (CHRONIC DISEASES) என்ற தமது நூலில் ஹானிமன் இந்த மருந்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.1. உணவில் நாட்டமின்மை என்றாலும் கடுமையான பசி எடுத்து நிறைய சாப்பிட்டாலும், அது உடம்பில் ஒட்டுவதில்லை. மாறாக உடல் இளைத்துக் கொண்டே போகும்.
2. ஒரு வித்தியாசமன தலைவலி. பற்பல சுத்தியலால் உள்ளிருந்து மொத்துவதைப் போன்ற நோவு.
3. உரோமங்கள் முளைக்கும் ஓரங்களில் சிறுசிறு சிரங்குகள், படைநோய்.
4. மிக அதிகமான தண்ணீர்த் தாகம்.
5. முதுகிலே ஒரு கடுமையான வலி. கெட்டியான சம தரையிலோ, பலகையிலோ படுத்தால் இதமாக இருக்கும்.
இது மேலோட்டமான அட்டவணை இதன் உண்மையான இயல்பை அறிய வேண்டுமானால் இந்த மருந்தின் மனக்குறிகளை ஆராய வேண்டும்.
நோய்க் கடுமை பொறுத்தல்
முக்கியமானது தாளாமை. எத்தகைய குறைபாட்டையும் தாளாமல் அலட்டிக் கொள்வது. ஹைபோகொண்ட்ரிகல் (HYPOCHONDRICAL) என்று இதை அழைப்பதுண்டு. ஒரு சமயம் அழுகை மறு வேளை சிரிப்பு. சிரிப்பு என்றால் குறுநகையிலிருந்து பலமாகச் சத்தம் போட்டுக் கூவுவது வரை. அவரே நகைப்புக்கு இடமாகும் வகையில், பிறருடைய கவனத்தைக் கவரும் வகையில் அந்தச் சிரிப்பு அமையும் அவரால் கட்டுப்படுத்தவே இயலாத அளவுக்குச் சிரிப்பு. அதே சமயம் கடுமையான துயரம் ஏதும் அவரைப் பாதிக்காது என்றாலும் முகத்தில் துயரமான பாவனை. மிகச் சிறிய இடர்ப்பாடுகளைக் கூட மலை போலக் கற்பனை செய்து வளர்த்துக் கொள்வது. யாராவது ஆறுதல் கூறப்போனால் அந்த நிலை பன்மடங்கு அதிகரிக்கும். தொடர்ந்து பெரிதாக அரற்றி அழும் ஒரு நிலை.அதிசய மறதி
மூளைப் பிரதேசத்தில் உணர்வுகள் பதிய மறுக்கும். நம்ப முடியாத அளவு மறதி. அடுத்து என்ன பேச வேண்டும் என்பதே மறந்து விடும். மற்றவர் என்ன பேசுகிறார் என்று புரிந்து கொள்ளவே இயலாத ஒரு மன நிலை. இது அவருடன் பழகுகிறவரின் பொறுமையைச் சோதிக்கும் எல்லைக்குப் போய்விடும்.வன்முறை
பெண்களை இது பாதிக்கும்போது அவர்கள் இழிநிலைப் பாதையில் சென்று விடுவதைப் பார்த்திருக்கிறேன். தனது தகுதிக்கு ஏற்பில்லாதவர்களிடம் உடலுறவு கொள்ள விருப்பம். திருமணமாகிக் குழந்தைகள் உள்ள மாதர்களும் கூட பிற ஆடவர்களிடம் புணர்ச்சி கொள்ள விழைவது என்பது இந்த மருந்தின் சிறப்புக் குறிகளில் ஒன்று.இது சமுதாயத்தில் மிகவும் தலையிறக்கம் தரும் ஒரு நிலை. பல பெற்றோர்களும், கணவன்மார்களும் இதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் பற்பல மருத்துவ முறைகளை நாடுகிறார்கள். மந்திரவாதிகள், பூசாரிகள், வேப்பிலை, தீச்சட்டி, நீர்க்குடம், மஞ்சள் நீர் என்று எவ்வளவோ முறைகள் கேரளத்திலுள்ள சோட்டானிக் கரையிலும், காவிரியின் வடகரையில் உள்ள குணசீலம் என்ற ஊரிலும் மனநோயைச் சீராக்கும் ஆலயங்கள் உள. அங்கு வரும் மாதர்களில், பெண்களில் கால் பகுதி இத்தகைய நோய்க்கு ஆட்பட்டவர்களே.
எளிதில் செரித்துக் கொள்ள முடியாத நிலைமை. அத்தகையவர்களை நோயாளிகளாகவே கருதாமல், திமிர் பிடித்தவள் என்று குற்றம் சாட்டி, அடித்தும், உதைத்தும் துன்புறுத்துவதைக் கண்டு நான் பெரிதும் வருந்தியிருக்கிறேன்.
இத்தகைய துரதிருஷ்ட நிலையிலுள்ளவர்களுக்கு நான் கூற விழைவது இதுதான். எந்த மருத்துவ முறையிலும் இதற்கு நிவாரணம் கிடையாது. நம்பகமுள்ள ஹோமியோபதி மருத்துவர்களைத் தவிர.
ஒரு வேண்டுகோள்
சக மருத்துவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்று உண்டு. அற்புதங்கள் விளையலாம். ஆனால் அவை எல்லாச் சமயங்களிலும் உடனடியாக விளைந்து விடுவதில்லை. உடற்கூற்றின் அடிப்படை மருந்துகளைத் தக்க கால இடைவெளியில் கொடுத்துவிட்டு நாட்ரம் ம்யூரியாட்டிக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும்.நேட்ரம் ம்யூருக்கு ஏற்ற நோய்கள் சிறிது சிறிதாக உடலில் படரும். நெடு நாள் நீங்காது. ஆழமாக ஊடுருவும். இந்த மருந்தின் ஆளுகைக்கு நோயாளியைக் கொண்டு வருவதற்கே நாள் பிடிக்கும். நோயாளியின் இயல்பான தன்மை ஆழ்துயிலில் உறைந்து போன நிலையில் தள்ளப்பட்டு விட்டதென்பதை மறந்து விடக்கூடாது. பொறு, கவனி, செயல்படு என்று அறிவுரை கூறுகிறார் மருத்துவர் கெண்ட்.
சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
என்பது அருள் வாக்கு. நோயாளியின் உறவினர்களையும், மருத்துவர்களையும் கடுமையாகச் சோதிக்கும் நிலையில் இந்த உப்பு நோயாளி ஆழ்ந்திருப்பார். மெள்ள மெள்ள நூல் கண்டின் சிக்கலைப் பிரிக்க வேண்டும்.
அத்தகைய வேளைகளில் உறுதியும், தெளிவும் தருவது பிரார்த்தனை. அந்த பரம்பொருளிடம் கையேந்துங்கள். மனமுருகிய வேண்டுகோளுக்கு அவன் செவி சாய்ப்பது உறுதி. இதை என் சுய அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.
உணர்ச்சிப் பிழம்பு
ஒரு நேட்ரம் ம்யூர் நோயாளி எளிதில் உணர்ச்சி வசப்படுவார். அவர் ஓர் உணர்ச்சியின் குவியல். எதைக் கண்டாலும் சிடுசிடுப்பு. எத்தகைய சிறிய ஒலியும் அவரைப் பாதிக்கும். அழைப்பு மணி ஒலித்தாலோ, கதவை அறைந்து சாத்தினாலோ ஏன் நல்ல சங்கீதமும் கூட அவரை நிதானம் இழக்கச் செய்யும்.உடலை ஊசி முனையினால் குத்துவதைப் போன்ற நோவு. மின் தாக்குதலைப் போன்ற அதிர்ச்சி, தூங்க முயற்சிக்கும்போது நரம்பு சுண்டும், இழுக்கும் எல்லா இடத்திலும் வலி தோன்றும், மறையும், இடம் மாறும்.
அறையின் வெப்பத்தை அவரால் தாங்க இயலாது. திறந்த காற்றோட்டமான இடம் இதமளிக்கும் என்றாலும் எளிதில் குளிரால் தாக்கப்படுவார். அதை மறந்துவிடக் கூடாது. திறந்த வெளியில் உலாவுவதையே அவர் பெரிதும் விரும்புவார்.
தோற்றம்
நோயாளியின் உடல் மேற்பரப்பில் எண்ணெய் வடியும். பளபளப்பாக இருக்கும். உடலின் பல பகுதிகளில் சிரங்குத் தொகுதிகள். காது மடல், முதுகு ஆகிய திறப்புகளில் தோலுரியும். ஊன் நீர் கசியும். முத்துக் கோர்த்ததைப் போல் உதடுகளின் ஓரங்களில் நீர்க் குண்டுகள். பிறப்புறுப்பிலும், மலத்துவாரத்திலும் சிறு சிரங்குகள், கட்டிகள், மேற்பரப்பு முழுவதுமே அரிப்பு.வெப்பத்துடன் வதங்கிப் போன உடல் வாகு. சிறு குழந்தைக்குக் கூட வயதான தோற்றம். கழுத்துப் பகுதி இளைத்திருக்கும். நெஞ்சின் மேற்கூட்டில் கூட்டெலும்பு துருத்திக் கொண்டு நிற்கும்.
கசிவுகள்
பூந்தசைப் பகுதிகளிலிருந்து ஏற்படும் கசிவுகள் நீராகவும் இருக்கும். முட்டையின் கருவைப் போன்று வெண்மையாகக் கொழ கொழவென்றும் இருக்கக் கூடும். மூக்கிலிருந்தும் செவிகளிலிருந்தும் இது பெருகக்கூடும். வெள்ளைப்பாடும் இதே வகை. சிறுநீர்க் குழலில் கடுப்பு நீர் கழித்த பின்பு. இது ஒரு முக்கியமான குறி.தலை நோவு
இடுக்கியினுள் வைத்து இறுக்கியதைப் போல் தலை நோவு. கூடவே சுத்தியால் அடிப்பதைப் போன்ற நிலையும் இருக்கும். காலையில் எழுந்து நடக்கும்போது இந்த வலி வரலாம். அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பிற்பகுதியில் இருக்கும். துயில் கொள்ளும் வேளையில் அமைதியின்மை. தூக்கம் எளிதில் வராது. அப்படி வந்தாலும் தலைவலி விழிக்கச் செய்துவிடும். இந்தத் தலைவலி குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்துவிடும். ஒவ்வொரு நாளும் வரலாம். அல்லது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் வரக்கூடும். சில வேளைகளில் தலைவலியுடன் காய்ச்சலும் இருக்கும். காய்ச்சல் துவங்கும்போது கடும் வறட்சி. குளிர்ந்த நீரை பருக ஆவல். வியர்த்துவிடும் வரை தொந்தரவுகள் இருக்கும். வியர்வை வெளிப்பட்டால் பல தொந்தரவுகள் சமனமாகும் தலைவலியைத் தவிர.முதுகு வலி
முதுகந் தண்டில் நோவு, கடுப்பு வலி. வலி தண்டு முழுவதுமே இருக்கும். இருமினால் நோவு மிகும். சில சமயங்களில் நோயாளி கெட்டியான தரையில் படுத்துக் கொண்டு நிவாரணம் பெறுவான். அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு முதுகைச் சுவரில் அழுத்திக் கொள்வான். கை, கால், உடல் பகுதி முழுவதும் தொடர்ந்து நடுக்கம் இருக்கும். அசைவு இருந்தால்தான் அமைதி கிட்டும்.கல்லீரல்
உணவுப் பகுதியும், கல்லீரலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. உண்ட உணவு கட்டியாக இரைப்பையிலேயே இருக்கும். செரிமானமாக நெடுநேரம் பிடிக்கும். உணவு உட்சென்ற உடனே வாந்தி எடுக்கும். குமட்டும். வயிற்றுப் பகுதி முழுவதும் காற்று நிறைந்திருக்கும்.கழிப்பு
மலமும் சிறுநீரும் இயற்கையான வேகத்துடன் இறங்காது. மலம் கட்டியாக உருண்டையாகச் சிரமத்துடன் வெளிப்படும். சிறுநீரின் நிலையும் அதுவேதான். சொட்டும், சிவிறும், சிரமப்பட்டு வெளிக் கொணரும்படி இருக்கும். கழித்த பிறகும் இன்னும் கெஞ்சம் மிச்சம் இருப்பது போன்ற ஓர் உணர்ச்சி. அருகில் யாராவது இருந்தால் சிறுநீர் கழிக்கவே இயலாது. கூடவே அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓர் உந்தல்.அதே வகையில் வயிற்றுப் போக்கையும் இது தடை செய்யும். உப்பின் எல்லா வகைகளுமே இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும்.
மாதக் கெடு
பெண்களின் மாதாந்திரக் கோளாறுகளுக்கும் இது மிகச் சிறந்த நிவாரணி. பெரும்பாடு என்ற அதிகமான போக்கு அல்லது கசிவே இல்லாத ஒரு நிலை. அடுத்தடுத்தும் இது ஏற்படலாம். நெடுநாள் இடைவெளியிலும் இது ஏற்படலாம். மொத்தத்தில் சீர்கேடான ஒரு நிலை.சீர்கேடு
இந்த மருந்து பிறந்தது ஒரு மா கடலில். ஆகவே தன் பிறந்த இடத்தின் இயல்புகளெல்லாம் இந்த மருந்துக்கு ஏற்றவரிடத்திலும் இருக்கும். . . . .சூரியனும், சந்திரனும் கடல் நீரைப் பாதிக்கின்றன. அதே வகையில் முற்பகலும், பௌர்ணமியும் இந்த நோயாளியைப் பாதிக்கும். எத்தனையோ இனிய நீர் ஆறுகள் கடலில் கலக்கும். அவை அனைத்தையும் கடல் நீர் பருகத் தகாததாகச் செய்துவிடும். தனது உரையாடலினாலும், நடையினாலும் தான் புகும் சூழ்நிலையையே ஒரு நேட்ரம் ம்யூர் நோயாளி சீர்கெடச் செய்து விடுவான். ஆழ்கடல் எத்தனையோ இரகசியங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெளித் தோற்றத்திற்கு எதையுமே காட்டாது. இந்த மனிதர் தமது உள்ளத்தில் எல்லாத் துயரங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பார். எப்படிக் கடலின் அலைகள் குறிப்பிட்ட காலக் கெடுவில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறதோ அதே வகையில் இவருடைய நோய்கள் மிகும், குறையும்.கடைசியாக இதன் தொடர் மருந்துகளப் பார்ப்போம். அனைத்தும் கடலைச் சார்ந்தவை. செப்பியா, ஸ்பாஞ்சியா, ஆம்ப்ரா க்ரேஸியா, ஐயோடின் இறுதியாக அகீவா-மரீனா (கடல் நீர்).
குறிகள்
ஒவ்வொரு மருந்துக்கும் பொதுவான குறிகள், சிறப்புக் குறிகள் என உள. சிறப்புக் குறிகள் துருத்திக் கொண்டு காணப்படும்போது அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அனுதாபம்
பிறர் தம்மை அனுதாபத்துடன் அணுக வேண்டும் என்று அந்த மனிதர் எதிர்பார்ப்பார். என்றாலும் அவரிடம் பரிவு காட்டும்போது அவருடைய நோய்க் குறிகள் மிகும். `ஓ’ என்று கதறித் தீர்த்து விடுவார். இத்தகைய அன்பர் ஒருவரின் நெடுநாளைய நோய்நிலையை இரண்டு உப்பு மாத்திரைகள் நிரந்தரமாகச் சீராக்கி விட்டன.பேச்சி ஆயி
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மருந்தாக பாரிடா கார்பனேட்டும், கல்காரியா கார்பனேட்டும் உதவுவதைக் கண்டிருக்கிறேன். இத்தகைய குழந்தைகள் தாமதமாகத் தவழும், நடக்கும், பேசும். இவற்றை `மைல் கற்கள்’ என்று குறிப்பிடுவார்கள். இத்தகைய குழந்தைகள் சீராகத்தவழ்ந்து நடந்தாலும், பேசுவதற்குத் தாமதமாகும்போது, நேட்ரம் ம்யூர் நல்ல மருந்தாக அமையும் என்று அனுபவசாலிகள் எழுதுகிறார்கள்.தும்மல் .. . . . சளி
தும்மலுடன் தொடரும் சளித் தொந்தரவுகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து என்று போயரிக், கெண்ட், கிளார்க் ஆகிய எல்லா நிபுணர்களும் எழுதுகிறார்கள். அடிக்கடி தடுமன் பிடிக்கும் இயல்பையே இந்த மருந்து மாற்றிவிடும் என்று உறுதியாகக் கூறுகிறார் க்ளார்க்.இந்த மருந்தையும் பொட்டாஸியம் பைக்ரோமையும், மாற்றி மாற்றி இரு நூறாவது வீரியத்தில் தருவார் என் ஆசான். விளைவு? காற்றுக் குழல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எண்பது சதவிகிதம் நிவாரணம், என்னைப் பொருத்த வரையில் இது நல்ல பயனைத் தந்திருக்கிறது. என்னைக் கைவிட்டதே கிடையாது. தொடர் மருந்தாக பாஸிலினத்தையும், ட்யூபர்குலினத்தையும் பயன்படுத்துவேன். சில சமயங்களில் லூட்டிகமும் பயன்படுத்தியதுண்டு இறுதியாக லெமினா மைனர்.
சிறப்புக் குறி
இன்னொரு முக்கியமான சிறப்புக் குறி. இந்த மருந்துக்கேற்ற நோயாளி எப்போதும் குப்புறப்படுப்பான். அல்லது குப்புறப்படுப்பதில் நாட்டம் காட்டுவான். இந்த ஒரு குறி மட்டும் எனக்குப் பல வேளைகளில் நூலேணியாக உதவியிருக்கிறது.இந்த மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும். பொதுவாக ஆழ்ந்து பணி புரியும் எந்த மருந்தின் இயல்பும் இதுதான். பல நிபுணர்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
காய்ச்சல்
அந்தக் காரணம் பற்றி, தீவிரமான நோயான காய்ச்சல் போன்றவைகளுக்கு இது பயன்படாது என்று ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது என்றாலும் பற்பல சோதனைகள் மாறான முடிவையே தந்துள்ளன.காய்ச்சல் காலை ஒன்பது மணிக்குத் துவங்குமானால் அப்போது நேட்ரம் ம்யூர் உறுதியாகப் பணிபுரியும். அதில் ஐயப்பாடே வேண்டாம். அதேபோல் குளிர்த் தாக்குதலுடன் காய்ச்சலும் மிகுந்த கடும் தலைவலியும் இருக்குமானால் அப்போது இதுதான் மருந்து. குளிர் குறையும், ஆனால் தலைவலி மட்டும் தொடரும். இன்னுமொரு வேடிக்கை உடல் சூடு மிகும் போது தலைவலி அதிகரிக்கும். ஆனால் காய்ச்சல் இறங்கு முகமாகும். தலைவலி மட்டும் கடுமையாகிக் கொண்டே போகும்.
நடுக்கம், போர்வை
காய்ச்சல் அதிகமாகும்போது நக்ஸ்வாமிகா நோயாளி போர்த்திக் கொள்ளுவான். ஆனால் இந்த மருந்துக்கு ஏற்றவர் போர்வையை விலக்கி விடுவார். மேல் கீழுதடுகள் வெப்ப மிகுதியினால் பிளவுபட்டுப் போகும்.
முன்னரே கூறியதுபோல் இந்த மருந்து குறித்து ஆயிரம் பக்கங்களுக்கும்மேல் எழுதலாம். எழுதியுமிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக வரைவதில் கைதேர்ந்த போயரிக் கூட இதற்கென நான்கு பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்.
எல்லோரும் உப்பைக் கண்டு அச்சமுறுகிறார்கள். நாம் உப்பை வீரியப்படுத்திப் பயனடைகிறோம். ஹானிமானின் ஆராய்ச்சித் திறனுக்கு நிகர் ஏது?
நினைவில் நிறுத்துக (4)
1. பெயர் - நேட்ரம் ம்யூரியாட்டிகம்
2. இனம் - கனிமம்
3. நோய் முதல் - உப்பின் அமித உபயோகம்
4. நோய் தாக்கும் பருவம் - வெப்பம், குளிர்
5. நோய் தாக்கும் நேரம் - காலை 9-10 மணி
6. நோய் சமனமாகும் சூழல் - இறுக்கமான ஆடை, குளியல் - அழுத்தம்
7. மருந்து பணிபுரியும் காலம் - 40-50 நாட்கள்
8 தொடர் மருந்துகள் - ஸெப்பியா, இக்னெஷியா, ஏபிஸ்
9. எதிர் மருந்துகள் - ஆர்சனிக்கம்-பாஸ்பரஸ்
10. பொதுக் குறிகள் - சத்துள்ள உணவும் ஊட்டம் தராது
11. சிறப்புக் குறிகள் - கழுத்துப் பகுதியில் இளைப்பு
12. வீரியம் - 6 முதல் 200 வரை
13. குறிப்பு - பரிவு காட்டுதல் நோயை மிகச் செய்யும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக