அடுப்புக்கரி CARBO VEGETABLES
மேஜர் தி.சா.இராஜூ
http://balahomoeopathy.blogspot.in/2017/10/blog-post_30.html |
வேடிக்கையாக
இருக்கிறதல்லவா? கும்மட்டி அடுப்பில் பயன்படுத்தப்படும் கரி கூட
மருந்தாகும் என்று யார் நினைத்தார்கள்? ஹானிமானைத் தவிர? அவர்தான் இதன்
மருந்துத் தன்மையை நிரூபணம்(PROVING) செய்திருக்கிறார். இவ்வுலகில் பயன்படாத பொருள் என்று
எதுவுமே இல்லை. சித்த வைத்தியத்தில்
ஒட்டடையைக் கூட மருந்தாக்குகிறார்கள்.
சிலந்தியின் விஷம்
ஒட்டடை என்பது
சிலந்தியின் உமிழ் நீர்க் கசிவு. அது உலர்ந்து வலையுருவம் பெறுகிறது. சிலந்தியின் நஞ்சை ஹோமியோபதித் துறையிலும் மருந்தாக்குகிறார்கள்.
மரக்கரி
புங்க மரத்தின் கரியை, அதன் கிளையை
எரிப்பதன் மூலம் இதைத் தயாரிக்கிறார்கள்.
அந்தக் கரியைப் பொடியாக்கி நீர்த்து வீரியப்படுத்தி இதற்கு மருந்துருவம் கொடுக்கிறார்கள். இந்தக் கரியில் சில சாம்பலுப்புக்களும்
உள. மற்ற மரங்களிலிந்தும் இதைச் செய்யலாம்
என்றே தோன்றுகிறது.
மாறு பெயர்
இந்த மருந்தை
மரத்துப் போன ஆர்ஸனிகம் என்றே சொல்லுவார்கள்.
ஆர்ஸனிகம் அமைதியின்மையை உண்டாக்கும் மருந்து என்பது தெரியும். அதற்கு நேர் எதிரிடை கார்போ வெஜிடபிலிஸ் நோயாளி
இடித்த புளி மாதிரி உட்கார்ந்து கொட்டாவி விடுவான். ஆனால் காற்று மட்டும் வேண்டும்
ஆர்ஸனிக்கத்திற்குள்ள எரிச்சல் மட்டும் இதற்குமுண்டு.
வாத சரீரம்
இதன் சிறப்பியல்பு
நோயாளி காற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பது.
உண்பது அனைத்தும் காற்றாகவே மாறி அது அன்னக் குழல் வழியாக
வெளிப்படும். வயிற்றினுள் சென்ற உணவு
புளித்துப் போகும். எரிச்சலையும் உண்டாக்கும். முழுங்காலுக்குக் கீழே சில்லிடும். உதிர ஓட்டமே இராது. வெளிப்பாடு அனைத்தும் துர் நாற்றத்துடன்
கூடியதாக இருக்கும். இப்படி நாம் பல
மனிதர்களைச் சந்தித்திருக்கிறோம் அல்லவா?
உண்ட சோறு
செரிக்காது. வயிற்றிலே ஒரு கணம், பசி எடுப்பதைப் போன்ற புறத்தோற்றம், நாலைந்து
கவளங்களுக்கு மேல் உண்ண இயலாது. வயிற்றில்
எரிச்சலும், வலியும்
உண்டாகும். இந்த எரிச்சல் முதுகுப் பக்கமாகவும்
பரவும். இதன் விளைவாக ஏற்படும் வாயுக்
கோளாறு மூச்சுக் குழலையும் பாதிக்கும்.
நிறைய ஏப்பம் வரும் அந்த
வெளிப்பாடு தற்காலிக நிவாரணமும் தரும்.
இத்தகைய உடல் நிலையையே இந்தக் கரித்தூள் மருந்து மாற்றி விடும்.
மரு.பி.சங்கரன் (1922-79) |
மருத்துவர் பி.சங்கரன்
இன்னொரு முக்கியமான
தகவலையும் தருகிறார் மருத்துவர் சங்கரன்.
`முன்பு எனக்கு செரிமானக் கோளாறு வந்ததல்லவா? அப்போது ஆஸ்துமாவும்
சேர்ந்து கொண்டது. மருந்துண்டதில்
குணமாகிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு
உடல்நிலை சீராகவே இல்லை’ என்று ஒரு நோயாளி கூறினான் என்றால் அவனுக்கு உடனடியாகத் தேவைப்படுவது இரண்டு மாத்திரை
கரித்துண்டு மற்ற மருந்துகள் குறித்து மறுநாள் யோசிக்கலாம் என்பது அவருடைய
பரிவுரை.
இடையூடு
ஒரு நாட்பட்ட
நோயாளிக்கு மருந்துகள் கொடுத்துக் கெண்டிருக்கும்போது இடையூடாக இரண்டுருண்டை
கார்போ வெஜி கொடு, அவன் புதிய உற்சாகம்
பெறுவான் என்றும் கூறி நம்மையும் உற்சாகமூட்டுகிறார் டாக்டர் சங்கரன் அவர் பம்பாயில் மிகச் சிறந்த முறையில் தொண்டாற்றியர். பல கொடுமையான நோய்வாய்ப் பட்டவர்களை அவர்
குணப்படுத்தியிருக்கிறார். பல சோதனைகள்
புரிந்து வெற்றி கண்டவர்.
கருத்தரங்குகளில்
கலந்து கொண்டு மருத்துவர்களின் நினைவில் ஆழப் பதியும் வண்ணம் உரையாறுவார் எதிராளியின் வாதங்களை ஆவேசத்துடன்
தாக்குவார். அவர் என் ஆசானின்
நண்பர். பல வேளைகளில் அவர்கள் இருவரும்
ஒத்துப் போவதில்லை என்றாலும் ஒருவரது அறிவையும், அனுபவத்தையும் மற்றவர் மதித்தார்கள்.
ஆசான்
என் ஆசான் அமைதியே
உருவானவர். உரக்கக் கூடப்
பேசமாட்டார். டாக்டர் சங்கரன் கூறுவதனைத்தையும் செவிமடுத்துச் செரித்துக் கொண்டு ஒவ்வொரு விவரத்தையும்
எதிர்த்து வழக்காடுவார். வெற்றி
பெறுவார். அதைக் கேட்பதும் காண்பதும் இனிய
அனுபவம்.
செல்வந்தரின் நோய்
எப்போதும் சத்துமிக்க
உணவையே உட்கொண்டு உடலுழைப்பே ஏதுமின்றி பல பஸ்மங்களையும், சூரணங்களையும்
விழுங்கிய பிறகு தொந்தியைத் தடவியவாறு எங்கள் மருத்துவனைக்குச் சிலர்
வருவார்கள். விரல்களில் மோதிரம்
மின்னும். கழுத்தில பொன் சங்கலி. பஞ்சாங்க விவரங்களை தெரிவிக்கும்
கைக்கடிகாரம் பேசும்போதே ஏப்பம்
விடுவார்கள். என் ஆசான் ஏட்டில்
எழுதுவார் `கரி’ நோயாளி எழுந்த பிறகு சிரித்துக் கொண்டே
கூறுவார் `கறி அதிகமானால் கரி’ அடுத்த முறைவந்தால்
அவருக்கு பூண்டு கொடு அல்லியம் ஸட்டிவா(ALLIUM SATIVA) என்று பரிந்துரை செய்வார்.
காற்று வாதம்
அமித உணவு
உட்கொள்ளுபவர்களுக்கு மட்டுமின்றி வயதானவர்களின் செரிமானக் கோளாறுகளுக்கும் இது
சிறந்ததொரு மருந்து.
`இரைப்பையில் காற்றுத் தங்கித் துயரம் விளைவிக்குமானால், அதற்கு நிவாரணி
லைக்கோபோடியம்.(LYCOPODIUM)
அந்தக் காற்று
கலைந்து மேல்நோக்கி எழும்பி வெளிப்பட்டால் கார்போ வெஜ்,(CARBO VEG)
கீழே போகுமானால்
சைனா’(CHINA)
என்று எங்கள் ஆசான்
மனதில் பதியும்படி உணர்த்தியிருக்கிறார்.
இந்தப் பரிவுரை என்னை
ஒரு போதும் கைவிட்டதில்லை.
சூழல்
சுற்றுப் புறச் சூழல்
குறித்து இன்று தீவிரமாகச் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள். அரசின் மேல்மட்டத்தில் கூட இது குறித்து உணர்வு
பெருகியிருக்கிறது. இன்றைய அரசு அதற்காக
ஓர் அமைச்சரகப் பிரிவையே ஏற்படுத்தியுள்ளது.
நாம் உயிர்க்கும்
காற்று தூய்மையானதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமற் போனால் அது பல சுகவீனங்களுக்குக் காரணமாக அமையும். ஆயுள் முழுவதும் நாம் சுவாசிக்கும் காற்றில் பிராண வாயு முழு அளவில் இருக்க
வேண்டும். அவ்வாறு இருப்பதற்குத் துணை புரிவன தாவரங்கள். அந்த இனங்களை அழித்தல் கூடாது. மாறாக மென்மேலும் புதிதாகப்
பயிர் செய்ய வேண்டும். இதை வலியுறுத்துவதே பிராண வாயுவிற்காகத்தான்.
`காற்றே உன்னை வணங்குகிறேன் நீயே கண்கண்ட தெய்வம்’ என்பது ஒரு மந்திரச் சொல்.
அதை அடிப்படையாக வைத்து மாகவி பாரதி `காற்று’ என்று ஓ அற்புதமான அத்தியாயம் வரைந்திருக்கிறார் காற்றைத் தூய்மையாக வைத்திருக்க ஒரு இயக்கமே நடத்த வேண்டும் என்று அழுத்தமாகக்
கூறியவர் அந்த மகாகவி.
பிராணன் உயிர்
தேவையான பிராண வாயு
மனித உடலுக்குக் கிடைக்காவிடில், அல்லது அதைப் பயன்படுத்தும் ஆற்றல் ஓர் மனித உயிருக்கு இல்லாவிடில்
என்னவெல்லாம் நேரும்?
அவனால் சுறுசுறுப்பாக
இயங்க இயலாது அவனுடைய உடலில் பல நீடித்த நோய்கள் குடியேறும் உதிர ஓட்டம் சீராக இராது. உடலின் நிறமே நீலமாகிவிடும். உடல் குளிர்ந்து போகும், இரத்தம் கட்டினாற் போல பல
திட்டுக்கள் உடல் முழுவதும் படரும். இதன்
விளைவாக பேதகங்கள் எளிதில் உதிரத்தில் குடியேறும். அடுத்துப் பற்பல வகைக் காய்ச்சல்கள் ஏற்படும்.
நோய்க்குடில்
வெளிப்பாடு
உடலிலிருந்து மிகுதியாகத்
திரவம் வெளிப்படுவதாலோ, அடிக்கடி மருந்துண்ணுவதாலோ பல வகைச் சுகவீனங்கள் ஏற்படும். நாடியே சீராகத் துடிக்காது. மூச்சுத் திணறும். நோயாளி காற்றை வேண்டிக் கதறுவான். தலையிலிருந்து உடல் பகுதிகள் அனைத்திலும் பளு
மிகுந்தாற்போல் இருக்கும். ஏன்? கண்ணிமைகள் கூடக் கனத்துவிடும் அந்தப் பகுதிகளிலெல்லாம் எரிச்சல்
ஏற்படும். நோயாளி நிலைகுலைந்து மூர்ச்சை
அடைவான். பரிதாபமான நிலை அல்லவா? இதை இரண்டு மாத்திரை சீராக்கி விடும். நம்ப முடிகிறதா? ஆனால் அது
நிகழும். பலமுறை இந்த நிலையைப் பல
நோயாளிகளிடம் சந்தித்திருக்கிறேன். எனக்கு
அது பெரும்பயனையும் தந்திருக்கிறது.
ஆசான்(டாக்டர் சேஷாச்சாரி)
கார்போ வெஜியைப்
பற்றி விவரிக்கும்போது என் ஆசான் மருத்துவர் குருன்ஸேயை மேற்கோள் காட்டுவார். அவர் மிகச் சிறந்த
நிபுணர் ஒவ்வொரு பொருளின் உள்ளியல்பை, உள் ஓட்டத்தை, எல்லோருக்கும் புரியும் வகையில் உயிர் உள்ள நடையில் அவர் எழுதியிருக்கிறார்.
உயிர் ஊக்கி
ஏற்ற சூழலில்
வசிப்பிடம் அமையாததாலும், தேவைக்கேற்ற ஊட்டமுள்ள உணவை உட்கொள்ளாததாலும், உடைந்த நிலையில் பல நோய்களின் குடியிருப்பாக ஒரு
மனிதன் உயிர் வாழ்கிறான். பாருங்கள், எப்போதோ ஏற்பட்ட ஒரு
தீவிர நோயின் விளைவினாலோ அல்லது விபத்தின் காரணமாகவோ, அவனுடைய நிலை
மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பாது இருக்கும்போது அவனுடைய ஜீவ
சக்தியை உலுக்கி அவனுக்குப் புத்துயிர் கொடுக்கும் மருந்து இந்த மரக்கரி என்று எழுதுகிறார்.
ஏளனம்
அலோபதி மருத்துவ முறையிலும் கரித்தூள்
பயன்படுத்தப்படுகிறது. ஆனால்
வீரியப்படுத்தப்பட்ட கரி இந்த வகையில் பயன் விளைவிக்கும் என்று அவர்களுக்குத்
தெரியாது. அது மட்டுமன்று. அவர்கள் இந்தக் கூற்றை எள்ளி நகையாடுவார்கள்.
பல்லுக்குறுதி
நாட்டுப்புறங்களிலும்
ஆலும், வேலும், வேம்பும் பற்குச்சியாகப்
பயன்படும் கூடவே அவர்கள் வீட்டில்
தயாரிக்கும் பற்பொடிகளில் கணிசமான அளவு கரித்தூள்
இருக்கும். கார்போ வெஜ் மருந்தைப் பற்றிப்
படிக்கும்வரை எனக்கு நமது கிராம வாசிகளின் அனுபவ அறிவைப் பற்றி ஏதும்
தெரியாதிருந்தது.
ஈறு கொழுந்து, சிதைந்து உதிரம்
பெருக்கும். பற்களோ ஆடும், கூசும். அந்த நிலையை இந்த மருந்து சீராக்கும் என்று அறிந்த பின்புதான் பற்பொடியில் நாட்டுப் புறத்தினர் கரித்தூளை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்தது.
சித்த மருத்துவம்
பற்சிதைவுக்கு
ஹோமியோபதித் துறையில் பல நல்ல மருந்துகள் உள.
முக்கியமாகப் பாதரசம். சித்த மருத்துவம் ரசகந்து மெழுகு என்றே ஒரு மருந்தைப் பரிவுரை செய்கிறது. அந்த
மருந்து பூரண நிவாரணம் தராதபோது கூட கார்போ வெஜிடபிளை அடித்தளத்துடன் மீண்டும் பாதரசத்தைக் கொடுத்தபோது அந்த
நோயாளி படிப்படியாகக் குணமடைந்தார். இது
எனக்குப் பெரிய படிப்பினை.
காற்றுக் கலைவு
வயிற்றிலே
சிறைபட்டிருக்கும் காற்று பற்பல கோளாறுகளை உண்டாக்கும். அது மேற்புறமாகவோ, கீழ்ப்புறமாகவே
வெளிப்படாத வரையில நோயாளிக்கு அமைதி கிட்டாது. இந்த
நிலையை ஒரு சிறப்புக் குறி என்றே கூறிவிடலாம்.
வேதனைகள் அனைத்தும் அவன் படுக்கும்போது அதிகரிக்கும். அப்போது கார்போ வெஜ் மருந்தைக் கொடுத்து விட்டு அவன் சீரடைவதைக் கவனி.
மகிழ்ச்சி அடைவது நோயாளி மட்டுமன்று
மருத்துவனும்தான் என்று என் ஆசான் கூறுவார். இது
முழு உண்மை என்பதை என் அனுபவத்தினால்
உணர்ந்திருக்கிறேன்.
எரிச்சல்
உடலின் எல்லாப்
பகுதிகளிலும் எரிச்சல் இருப்பது இதன் சிறப்புக்
குறிகளில் ஒன்றாகும். சிரை என்ற அசுத்த
உதிரக் குழல்-தலைமுடியின் பரிமாணமே உள்ள மெல்லிய குழல்கள், நமது உடலில்
உள்ளன. எரிச்சல் தலையிலும், உடலிலும் அரிப்போடு
கூடியிருக்கும். வீங்கிய பகுதிகள்
அனைத்திலும் எரிச்சல் இருக்கும். உட்பகுதியில் எரிச்சல் மேற்பகுதியில் குளிச்சி
என்பது ஒரு விசித்திரமான நிலை அப்போது இதயமே உதிரத்தைத் தேவையான
அழுத்தத்துடன் உடலின் பல்வேறு பகுதிகளுக்குச் செலுத்தாது. அல்லி தண்டைப் போல் குளிர்ந்த உடல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் உள்ளங்கையும், காலும் குளிர்ந்து
போய்க் காய்ந்த நிலையில் இருக்கும். சில
சமயங்களில் பிசுபிசுப்பும் இருக்கக் கூடும்
வயிற்றுப் பகுதியிலும் ஒரு குளுமை.
அவனே மயங்கி விழும் ஒரு நிலை. உடல்
முழுவதும் வியர்த்திருக்கும். அவர்
வெளிவிடும் சுவாசம் கூட சில சமயம் சில்லிட்டிருக்கும். அவன் மரித்தவனைப் போல் அசையாமல்
கிடப்பான். ஆனால் இவ்வளவு குளிர்ந்த
வேளையிலும் அவனுக்குக் காற்று வேண்டும்.
விசிறினால் இதமாக இருக்கும்.
வெளிப்பாடு
இன்னொரு சிறப்புக்
குறி உதிரப் போக்கு. அகோனைட், பெல்லடோனா ஆகிய
மருந்துகளுக்கும் இந்த இயல்பு உண்டு.
ஆனால் அங்கே இரத்தம் படுவேகமாக வெளிவரும்.
இந்த நோயாளியின் உதிரம் கசியும்.
கூடவே கரு நிறமாகவும் இருக்கும்.
சிரையிலிருந்து (VEIN) வெளிப்படுவதாயிற்றே. காற்றுப் பையிலிருந்தும், உடல்
புண்களிலிருந்தும், சிறு
நீர்ப்பையிலிருந்தும் உதிரம் கசியும் உதிர
வாந்தியும் இருக்கும். ஆனால கருப்பாக
அமையும். அதனால்தான் பெண்களின் மாதப்
போக்கு பல நாட்கள் நீடிக்கும். பேறு
காலத்தின்போது பிறப்புறுப்புக்கள் விரிந்து நிற்கும். அதற்குப்பிறகு அவை சுருங்கிப் பழைய நிலைக்கு
வாரா. மாறாகத் தளர்ந்த நிலையிலேயே
இருக்கும். உடலில் அறுவை சிகிச்சை செய்யப்படுமானால்
சில வேளைகளில் சதைப் பகுதி இணைத்து கொள்ள மறுக்கும். கூடவே உதிரமும் கசிந்து கொட இருக்கும். வெட்டுக் காயத்திலிருந்தும் உதிரம்
வெளிப்படுவது தொடர்ந்து நிகழும். இயங்காத
இருதயமும் உதிரக் கசிவும் இந்த மருந்திற்கேற்றவரின் சிறப்புயல்புகள்.
உதிரத் தேக்கம்
இதனுடன் கூட ஆறாத
புண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
திசுக்கள் செயல்பட்டு இணைந்தால்தானே புண் ஆறும்? இங்கேயும் அவைகளில் ஒரு கடுமையான மெத்தனம். கூடவே கசிவு. கிழிவுகளைக் கிருமிகள்
அணுகாது. தூய்மையாக வைத்திருந்து அவைகள்
இணைந்து கொள்ள எவ்வளவோ துணையிருந்தும் அங்கு எந்த மாற்றமும் காண இயலாது. வாயிலும், தொண்டையிலும் நிரந்தரமாகக் குழிப் புண்கள் ஏற்படும்.
ஆற்றாமை
என்னை நாடி வந்த ஒரு
நோயாளி இத்தகைய நிலையில் நெடுநாள் துயருற்றவர்
`இந்த நிலையை நீங்கள்
ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனுடன் வாழப்
பழகிக் கொள்வது அடிப்படைத் தேவை என்று நான் சந்தித்த நிபுணர்கள் கூறுகிறார்களே என்று அவர் துயரத்துடன்
பிரலாபித்தார். நான் சிறிது கூடத்
தயங்கவில்லை. என்னுடைய நிவாரணப் பட்டியலையே கரித்தூளுடன் துவங்கினேன். வியப்படையும் வகையில் அவர் குணமடைந்தார்.
அவருடைய புண் ஆறாமைக்குக் காரணம் உதிரத் தேக்கம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மாதர் நலம்
கார்போ வெஜியைப்
பெண்களின் நிவாரணி என்று கூறுவதில்லை என்றாலும் இது பெண்களுக்கு ஏற்படும் பல
சுகவீனங்களுக்கு நல்ல மருந்து.
இல் வாழ்க்கையில்
ஈடுபட்ட பெண்கள் சூலுறுவது ஓர் இயற்கையான நிகழ்ச்சி. அந்த இனத்திற்கே பெருமையும், முழுமையும்
தருவது. இனப் பெருக்கத்தைத் தடுக்க வேண்டி
இன்று அந்த நிலையையே கொச்சைப்படுத்திவிட்டார்கள்.
தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வரும் விளம்பரங்களைக் கவனியுங்கள். ஆணுறை, மாலா, லூப் ஆகியவற்iப் பற்றிய
செய்திகளைக் கண்ணுறும் பிஞ்சு உள்ளங்களைப் பற்றி இந்தச் சமுதாய விஞ்ஞானிகள்
எண்ணிப் பார்ப்பதே இல்லை. இது பெரிய கொடுமை.
சூலுற்ற மங்கையை
மிகச் சிறநத முறையில கார்போ வெஜி பாதுகாக்கும். ஒரு பெண் சூலுற்றதிலிருந்தே
அவளுடைய உடலில் பற்பல மாறுதல்கள் நிகழ்கின்றன.
பற்பல சுரப்பிகள் அவளுக்குத் தேவையான திரவத்தைக் கசியச் செய்யும். உமிழ் நீர் அதிகமாகச் சுரந்து உண்ட உணவை வெளிக்
கொர்வது மிகவும் சகஜமான நிகழ்ச்சி.
புளிப்புச் சுவையுள்ள கனி வகைகள், ஊறுகாய்கள் ஆகியவற்றில் நாட்டம் ஏற்படுவது இயலபு. செரிமானப் பகுதியில் காற்று அடைந்து கொள்ளும். பசி எடுக்காது.
கூடவே உண்ட உணவும் செரிக்காது.
அதன் விளைவாக சோர்வு ஏற்படுவது வழக்கம்.
அசுத்த ரத்த நாளங்கள் புடைத்துக் கொள்ளும். இதற்குக் காரணம் சூலுற்ற பெண்ணின் எடை
கூடுவதுதான் என்று சொலலுவார்கள். அது
உண்மை அன்று, உதிரக் குழல்கள்
பலவீனமடைவதுதான் அதற்குக் காரணம்.
பேறுகாலம்-பின்
விளைவு
மகப்பேற்றுக்குப்
பின்னரும் சில ஒழுங்கீனங்கள் ஏற்படக் கூடும்.
பனிக்குடம் என்ற சூலொட்டு வெளிப்படத் தாமதமாகலாம். பிறப்புறுப்புக்கள் முந்தைய நிலைக்குச்
சுருங்காமற் போகலாம். கசிவும் தொடர்ந்து
கொண்டே இருக்கும். இதற்காகப் பற்பல
கருவிகளைப் பயன்படுத்தத் தேவையில்லை.
உயிருள்ள உடலுக்கு ஊக்கமளிக்க சில மருந்துகளே போதுமானது. அவைகளில்இந்தக் கரித்தூள் மிக
முக்கியமானது. நம்பிக்கையும், பொறுமையும்
வேண்டும். கார்போ வெஜியின்
சிலமாத்திரைகள்இந்த உள்ளுறுப்புகளை இயல்பான நிலைக்குத் திருப்பிவிடும் என்பதில்
ஐயமே இல்லை.
தாய்ப்பால்-அமுதம்
பிள்ளைக்குப் பால்
கொடுப்பதனால் உடலில் வலுக்குறைவு ஏற்பபட்டுவிடும் என்றொரு தவறான கருத்து
நிலவுகிறது. இயல்பான நிலையில உள்ள எந்தப்
பெண்ணும் இந்த வகையில் துயருற மாட்டாள்.
மாறாக அவளுக்குத் தன்னம்பிக்கை பெருகும்.
வலுக்குறைவு என்பது ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு மட்டுமே
ஏற்படும். இத்தகைய நிலையை கார்போ வெஜ் மிக விரைவில் சீராக்கிவிடும். அந்த மங்கையை மட்டுமின்றி அவளுடைய பாலை
அருந்தும் மதலையையும் இது நல்ல நிலையில் வைத்திருக்கும். கார்போ வெஜ் கொடுத்து விட்டால் மற்ற மருந்துகள் தேவையில்லையா என்று கேட்பது மதியீனம். குறிகளுக்கேற்ப குறைந்த வீரியத்தில் மற்ற மருந்துகள் கொடுக்க வேண்டும். கார்போ வெஜி ஓர் அற்புதமான இடையீட்டு மருந்து
என்பதை மறக்கக் கூடாது. இது சிறந்த மறு
ஊக்கியுங்கூட.
புது உயிர்
இந்த மருந்தை
உபயோகப்படுத்திய பெண்ணின் குழந்தை எத்தகைய கோளாறுகளும்
இல்லாமல் வளரும். சர்ம நோய், வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், வாந்தி என்று பற்பல
மேலோட்டமான வியாதிகள் எதுவுமே அதைத் தாக்காது.
அத்தகைய எதிர்ப்புச் சக்தி குழந்தைக்குத் தானாகவே
ஏற்பட்டு விடும். கார்போ வெஜ் பெண்களுக்கும், குழந்iகைளுக்கும் மிகச் சிறந்த நண்பன் என்ற உண்மையை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
குரல் நரம்புகளை இது
எப்படி சீராக்குகிறது என்று அறிந்து கொள்வது ஒரு றிந்த அனுபவம். எல்லா வயதிலுள்ளவர்களையும் மகிழ்விப்பது
இசை. கார்போ வெஜியை உண்ட குழந்தை அமையாக உறங்கும்.
முனகிக் கொண்டிருக்கும் முதியவர்களும் அமைதி பெறுவது உறுதி.
வெள்ளி
முன்னாளில் இசைக்
கலைஞர்கள் வெள்ளியை அதிகம் பயன்படுத்துவது வழக்கம் அர்ஜெண்டம் (வெள்ளி) குரலைப்
பாதுகாப்பதில் நிகரற்ற ஆற்றல் உடையது.
அசைவ உணவு உட்கொள்ளுபவர்கள் மயிலின் இறைச்சியை உண்பது வழக்கம்.
வட நாட்டில் இசை பயில்பவர்களில் கணிசமான அளவு
இஸ்லாமியர்கள். புகழ் பெற்ற இசைப்
பள்ளிகள் (கரானா) அவர்களாலேயே நடத்தப் பெறும்.
அவர்கள் மயிலிறைச்சியை அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் விளைவாக அங்கு சமயக் கலவரங்களும்
நிகழ்வதுண்டு.
என் ஆசான் பருகுவதற்கும்
உண்பதற்கும் வெள்ளிப் பாத்தரங்களையே உபயோகிப்பார். மோருடன் சிறிது மிளகுத் தூளையும் கலந்து
கொள்வார். அவர் இசையைப் பெரிதும்
ரசிப்பார். அவரே மிக நன்றாகப் பாடுவார். குரல் வளத்திற்கு வெள்ளிப் பாத்திரம் துணை
செய்யும் என்பது அவர் கூறிய இரகசியம்.
துவக்கம்
இந்த பாதிப்பு
மூக்கில் துவங்கும். தும்மல், அரிப்பு, `ஙொண ஙொண’ என்று
பேசுவது, இப்படித்தான்
துவங்கும். மூக்கின் பின்புறம் தொந்தரவு
கொடுக்கும். பிறகு வாயின் இறுதிப் பகுதி, உள் நாக்கும்
பாதிக்கப்படும். அடுத்து குரல் வளை
நரம்புகளைத் தாக்கும். இறுதியாக நெஞ்சும், சுவாசப் பையும் சுகவீனமுறும்.
குரல் வளமுள்ள ஒரு
பெண் குழந்தை எங்கள் அடுத்த வீட்டிலிருந்தது.
அதற்கு முறையான இசைப் பயிற்சி அளித்தார்கள்.
குரலினிமையுடன் இசை ஞானமும் சேர்ந்து கொண்டது. கேட்பவர்களை வசப்படுத்தும் இசைப் பொழிவு
வெளிப்படும். அடிக்கடி நான் அவளைப் பாடச்
சொல்லிக் கேட்டு மகிழ்வேன். ஒரு நாள் உச்ச
ஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தபோது பாடுவதை நிறுத்தி விட்டாள். தொடர்ந்து கமறல், அடுக்கு இருமல்.
நான் பதறிப்
போனேன். அடிக்கடி இப்படி நிகழ்கிறதா? என்று விவினேன். `ஆமாம் அங்கிள், முக்கியமாக மாலை வேளையில் இவ்வாறு ஆகிறது. சென்னையிலுள்ள சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர்களைக்
கலந்து ஆலோசித்து விட்டேன். குரல்வளை
நரம்புகள் பலவீனமாக இருக்கின்றன என்று கூறிப் பல மருந்துகள் கொடுத்தார்கள். குளிச்சியான பண்டங்கள் எதுவுமே உட்கொள்வதில்லை
என்றாலும் மிகவும் சிரமப்படுகிறேன்’ என்று கூறினாள். அவருடைய விழி ஓரங்களில் நீர் கசிந்தது.
உடனடியாக நான்
அவளுக்குக் கொடுத்த மருந்து அர்ஜெண்டம் நைட்ரிகம் இரண்டு
மாத்திரை (ஆறாவது வீரியம்). மறு நாள்
அவளைப் பரிசோதனைக்கு வரும்படி கூறினேன்.
அவளுடைய தகப்பனாருக்கும், பாட்டிக்கும் ஆஸ்துமா இருந்திருக்கிறது.
அத்தை காசநோயால் இறந்து போயிருக்கிறாள்.
உண்கலன்
எல்லா மருந்துகளையும்
நிறுத்தி விட்டு, உண்பதற்கும், பருகுவதற்கும்
வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டேன். (அவர்கள் செல்வந்தர்கள்).
தொடாந்து அந்தப்
பெண்ணுக்கு நான் கொடுத்தது, கார்போ வெஜ் ஆறு, முப்பது, இருநூறு என்ற
முறையிவ் ஒரு மாதத்திற்குப் பிறகு நோய்க் கழிவுப் பொருள்கள். ஆண்டுகள் மூன்று கழிந்து விட்டன. பல அரங்ககளில் அவள் தற்போது பங்கு
பெறுகிறாள் தென்னாட்டு `ரூனா லைலா’ என்று
பலரும் பாராட்டுகிறார்கள். அவ்வளவு
சன்னமான, எடுப்பான குரல். ஒரு தரம் கூட மேடையில் அவளுடைய குரல் வளம்
குன்றவில்லை. `இசை அரங்கில் அமரும்
முன்பு நான் உங்களை மனமாற வணங்குகிறேன் அங்கிள்’ என்று அவள் கூறியபோது நான்
உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன்.
`நீ நினைவில் கொள்ள
வேண்டியது மேதை ஹானிமானை குழந்தாய்’ என்று நான் அவளுக்குக் கூறினேன்.
மெட்டீரியா மெடிக்கா
ப்யூராவிலும் `நாட்பட்ட நோய்கள்’
என்ற நூலிலும் அவர் இந்த மருந்தின் உயர் தன்மைகளை விவரித்திருக்கிறார்.\
அறுவை சிகிச்சை
இதை ஹோமியோ
மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் இன்றைய அவசர நிலை, யுகத்தில் நோயாளிக்கு
உடனடி நிவாரணம் தர வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. அல்லது நீண்ட நாள்
சிகிச்சைக்குட்பட இயலாத நிலையில் நோயாளி இருக்கலாம். அந்த வேளைகளில் வேண்டா வெறுப்பாக அறுவை
சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இன்றைய நிபுணர்கள் சிலர் பரிவுரை செய்கின்றனர்.
என்றாலும் உடலின்
பகுதியில் கூர் முனை கிழித்ததனால் எவ்வளவோ விவரிக்க இயலாத கோளாறுகள்
ஏற்படும். அதை நீக்க எந்த
மருத்துவத்தாலும் இயலாது. அந்த வேளையில்
ஹோமியோபதி கை கொடுக்கும்.
அறுவை சிகிக்கையின்
துய விளைவுகளைத் தவிர்க்க சில நல்ல மருந்துகள் உள. அவைகளில் கார்போ வெஜ் முக்கியமானது.
அதுவும் வயிற்றுப் பகுதியில் கத்தி வைத்திருந்தார்களானால் அப்போது கார்போ வெஜ் நிவாரணம் தருவது உறுதி.
இந்தக் கருத்தை மருத்துவர் ஃபாரிங்டனும்
ஏற்றுக் கொள்கிறார்.
குடல்வால்
`அப்பெண்டிஸைடிஸ்’ என்று ஒரு நோயின் பெயரைச் சொல்லி அந்தக் குடல் பகுதியை
உடனடியாக நீக்காவிடில் நோயாளி மரணம் எய்துவான் என்று பயமுறுத்திப் பல ஆயிரம்
ரூபாய்கள் கறந்து விடுவார்கள். ஆனால அந்த அறுவைக்குப் பிறகு நோயாளி படும்
துயரம் சொல்லி மாளாது.
அந்த வேளைகளில
எல்லாம் எனக்கு முழு அளவில் உதவி அளித்த மருந்து கார்போ வெஜ் ஒன்று மட்டுமே. இதன் பொருட்டு மருத்துவர் ஃபாரிங்டனுக்கு நான்
பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
துவக்கம்
நெஞ்சிலோ தொண்டையிலோ
கோளாறு துவங்குமானால் அப்போது மருந்து
பாஸ்பரஸ்,
கார்போ வெஜியின்
தாக்கம் மூக்கிலே தொடங்கி குரல்வளையைத் தாக்கும். இந்த
நுண்ணிய வேறுபாட்டை மருத்துவர்கள் கவனித்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இது இருதயத்தைத்
தாக்கும் முறை விசித்திரமானது. இருதய நோயாளிகள் என்று நிர்ணயிக்கப்பட்ட பல
நோயாளிகளை கார்போ வெஜ் சீராக்கியிருக்கிறது.
இப்படி குழந்தைப்
பருவத்திலிருந்து முதியவர்களின் ஆஸ்துமா வரை குணப்படுத்தும் அற்புதமான மருந்து
இந்த அடுப்புக் கரி. இதன் விவரங்களைச்
சுருக்கித் தருவதற்கு நான் பட்டிருக்கும் பாடு கொஞ்சமன்று.
இருக்கும் காலம்
சிறிதேயாம்’ என்கிறான் உமர் கயாம். அவன் புகழ் பெற்ற பாரசீகக் கவி.
`இருக்கும் இடம்
சிறிதேயாம்’ என்று நான் பிரலாபிக்கிறேன்.
நினைவில் நிறுத்துக:
1. பெயர் - கர்போ வெஜிடபிலிஸ் (கரி)
2. இனம் - கனிமம்
3. நோய் முதல் - செரிமானக் குறைவு, வாயுத் தொந்தரவு, கனமான உணவு
4. நோய் தாக்கும் பருவம் - மழைக்காலம்
5. நோய் தாக்கும் நேரம் - மாலை, இரவு
6. நோய் சமனமாகும் சூழல் - விசிறிவிட்டால் நலம்
7. மருந்து பணிபுரியும் காலம் - 60 நாட்கள்
8 தொடர் மருந்துகள் - காலி கார்ப், லைக்கோபோடியம், சைனா.
9. எதிர் மருந்துகள் - ஆர்சனிக்கம், காம்பரா
10. பொதுக் குறிகள் - காற்று வேண்டும் எனினும் திறந்தவெளி எதிரி
11. சிறப்புக் குறிகள் - இடித்த புளி போன்ற தோற்றம்
12. வீரியம் - 6, 30, 200
13. குறிப்பு - ஏப்பம் விடுதல் (முக்கியமான குறி).
*****