பகுதி ஒன்று
தோற்றமும் வளர்ச்சியும்
1.உணவு மருந்து
மதலையின் இதயமும் , நடுவயதினரின் மனத்திடனும் , இளைஞனின் உற்சாகமும் , மூத்தவனுடைய அறிவு முதிர்ச்சியும் , தேவர்களே , என்னுள் எப்போதும் நிலைத் திருக்க அருளும்!
( மகாகவி பாரதி )
மருத்துவ நெறி
மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் , சோர்வின்றி பணிபுரிவதற்கும் நோயில்லாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மக்கள் நோய்வாய்ப்படுவார்களேயானால் அதை நீக்கும் பொருட்டுப் பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன . அவையே பதி ( Pathy ) அல்லது பத்
( Path ) எனப்படும் . பதி என்றால் வழி, நெறி என்று பொருள் . இந்த வழி, அல்லது நெறி பல தரத்தன. அனைத்துமே, மனிதகுலம் சீராக இயங்கும் பொருட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட முறைகள்.
ஆங்கில, அல்லது மேலைநாட்டு முறை அல்லோபதி என்று அழைக்கப்படுகிறது . இதன் ஆதிகர்த்தா ஹிப்பாக்ரேடஸ் . இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் . ( கி.மு .460 ) இன்றும் மருத்துவக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்று , மருந்தை வாழ்நெறியாகக் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அவருடைய பெயரில் ஆணையிட்டு செயல் நெறி உறுதியைக் கைக்கொள்கிறார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை நோக்கிப் படை எடுத்து வந்தபோது அவருடன் வந்த சில மருத்துவர்கள். இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடி அமைந்தார்கள் . அவர்களுடைய முறைக்கு யுனானி என்று பெயர் . கிரீஸ் நாட்டை அவர்கள் யூனான் என்று அழைத்தார்கள்.
நம் நாட்டில் இப்போதும் காணக் கிடைக்கும் மருத்துவ நூல்கள் நமக்கு வியப்பை ஊட்டுகின்றன. அதர்வணவேதம், அதர்வ ஸம்ஹிதை, ஆயுர்கிரந்தம், ஆயுர்வேதம், அக்னிபுராணம், அக்னி வேச ஸம்ஹிதை , பேல ஸம்ஹிதை , ஸுச்ருத ஸம்ஹிதை , காச்யப ஸம்ஹிதை , சித்த வைத்திய நூல்ஆகியன சில.
இவைகளிற் பல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
பாரத நாட்டின் நான்காவது வேதமான அதர்வணத்தில் ஆயுர்வேத மருத்துவ நெறி விளக்கப்படுகிறது . பகைவர்களின் தாக்குதல், காலநிலை , நச்சுப்பிராணிகள் ஆகியவைகளினால் மனித இனத்திற்கு ஏற்படும் தீமைகளுக்கு மாற்று அளிப்பதற்காக ஏற்பட்ட முறை இது .
தமிழ்நாட்டில் பல சித்த புருஷர்கள் வாழ்ந்தார்கள் . பல யோக முறைகளை மேற்கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்த பெரியோர்கள், பல வேர், இலை, மலர், விதை, உலோகம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் பக்குவம் செய்து நோயுற்றவர்களுக்கு அளித்தார்கள். வியக்கத்தகும் வகையில் பயன் விளைவிக்கும் மருத்துவம் இது .
சாமுவேல் ஃப்ரடெரிக் ஹானிமான்
ஜெர்மனி நாட்டில் ஹானிமான் என்றொரு மருத்துவ மேதை வாழ்ந்தார். (1755-1843 ) அவர் கண்டுபிடித்த மருத்துவ முறைக்கு ஹோமியோபதி ( நெறி ) என்று பெயர்.
ஹோமியோ என்றால் ஒரே மாதிரியான, ஒத்த என்பது பொருள் . இவருடைய முறையில் சிறப்புக்கள் இரண்டு .
முதலாவது மனிதனின் தன்மையை, மனநிலையை அறிந்து குணப்படுத்துவது . அடுத்தது இதன் விலை . இதைவிட மலிவான மருத்துவ முறையே உலகில் கிடையாது.
வள்ளுவம் நமது தொன்மையான தமிழ் மறையை இயற்றிய தெய்வப்புலவர் , பொருட்பாலில் - நட்பியலில் - மருந்துக்காகத் தனி அதிகாரமே வகுத்திருக்கிறார் . இந்தப் பத்து குறட்பாக்களையும் தனித்தனியாகவோ , ஒட்டு மொத்தமாகவோ ஊன்றிக் கவனித்தால் ஒரு கருத்தை அவர் , ஆழமாக , தீவிரமாக வலியுறுத்துகிறார் என்பது புரியும் . அதுதான் கட்டுப்பாடான உணவு . ருசிக்காக அன்றி பசிக்காக மட்டுமே உண்ணுதல். அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்த பிறகு மேலோங்கும் எண்ணம் ஒன்றேதான் . வள்ளுவப் பெருமானுக்குச் சமண சமயத்தில் இவ்வளவு ஈடுபாடு ஏற்படக் காரணம் , அவரே அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்பதுதான் அது .
சமண சமயத்தின் மிகத் தீவிரமான கோட்பாடு, 'பசித்திரு' என்பதாகும் . பசித்திருத்தல் விழித்திருத்தலுக்குத் துணை செய்யும் என்பது அந்த சமய அறிஞர்கள் கண்ட முடிவு . உண்ணா நோன்பையே உபவாசம் என்று கூறுவார்கள் . இறைவனுக்கு அண்மையில் வாழ்வது என்பது அதன் பொருள். உள்ளத்தைக் கூர்ந்துகொண்டு செயற்கரிய செயல்களைச் செய்யும் அவதானிகளைக் கவனித்தோமானால் அவர்கள் தங்கள் திறமையையைக் காட்டுவதற்கு முதல்நாள் எதுவுமே உண்ணாமல் இருப்பார்கள் என்பதை அறியலாம்.
உண்ணாமல் இருப்பது என்பது எல்லோராலும் இயலாத செயல் . ஆனால் ஒரு பணியை எல்லோரும் செய்யலாம்
அற்றது அறிந்து கடைப்பிடித்து மா றல்ல
துய்க்க துவரப் பசித்து
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து , மாறுபாடில்லாத உணவு முறைகளைக் கடைப்பிடித்து , அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகுதான் உண்ண வேண்டும்.
அடுத்ததாக அவர் கூறுகிறார் .
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மிதமாக உண்டால் உயிர் உடம்போடு இணைந்து வாழ இயலாமல் இடையூறு செய்யும், நோய் என்பது இல்லாமல் ஒழியும்.
மாறுபாடு இல்லாத உண்டி என்பதை அடிக்கோடிட வேண்டும். உணவு உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு எத்தனை ரசாயனப் பொருள்களை விளை நிலத்தில் கலக்குகிறோம்? தழைக்கும் பயிர்களைக் காக்கும் பொருட்டு எத்தனை பூச்சிக் கொல்லிகளைத் தளிர்களின் மேல் தெளிக்கிறோம் ? இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உண்பவர்களையே மீண்டும் தாக்கக்கூடும் என்பதை நமது சிந்தனைச் செம்மல்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை .
இயற்கை முறை
காந்தியப் பொருளாதாரவாதியான ஜே.ஸி.குமரப்பாவின் கேள்வி இது . நிலத்தை உழவும், பரம்படிக்கவும், அறுவடை செய்யவும் டிராக்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்; ஏற்றுக் கொள்வோம் . ஆனால் டிராக்டர் சாணி போடுமா? என்று வினவினார் . இன்று அமெரிக்கப் பெருநகர்களில் உள்ள டிபார்ட்மெண்டல் பேரங்காடிகளில் தனியே ஓர் உணவுப் பண்டப்பிரிவு அமைந்துள்ளது. ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட பண்டங்களுக்காகத் தனிக்கடைகள். இவைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் நோய்வாய்ப்படுவதில்லை என்று அவர்களுடைய புள்ளி விவரக் கணக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
இறுதியாக இன்னொரு செய்தியையும் நமக்கு அறிவித்துப் புளகிக்க வைக்கிறார் நாயனார்.
இழிவறிந்து உண்பான் கண்இன்பம் போல்நிற்கும்
கழி பேரிரையான் கண்நோய்.
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல் , மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிலைத்து நிற்கும்.
சமண சமயத்தத்துவங்களைக் கரைகண்ட தெய்வப் புலவர் மனித உடலில் நோய் குடிபுகும் காரணத்தை மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்.
தமிழ் முதுமகள் வலியுறுத்தியதும் அதுவே !
மீதூண் விரும்பேல்!