செவ்வாய், 27 மார்ச், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3 - மேஜர் தி.சா.இராஜூ

                               நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம் 1
                              நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம்-2                                   
                             
                                                                         3.
நோய்க்கழிவுப் பொருட்களைப் பற்றிச் சிந்திக்கும் போது மியாஸங்களைப் பற்றி நமக்கு ஓர் அடிப்படையான கருத்து இருக்க வேண்டியது அவசியம்.  அப்போதுதான் ஒரு மருத்துவன் நோயின் வேரைக்  கிள்ளி எறிய முடியும்  `வேரும் வேரடி மண்ணும் வெந்து போக’ என்ற சொல்லோவியத்தைப் பயன்படுத்துகிறார் மகாகவி.  அதைச் சாதிக்க இந்த நோய்க்கழிவினால் மட்டுமே முடியும்.

உயிரினம் தோன்றிய போதே நோயும் உடன் தோன்றிவிட்டது என்பதுதான் உண்மை.  உயிரினம் ஆண் பெண் சேர்க்கையினால் உண்டாகிறது.  தாய் என்பவள் விளை நிலம்.  தந்தை விதையளிப்பவன் (கர்ப்பா தானம் என்று வேதங்கள் கூறும்) நிலத்தின் தன்மை பயிர்க்குண்டாகும்.  அதேபோல் விதையின் குணங்களையும் குழந்தை பெறும் இது அடிப்படைச் சத்தியம்.
பாரத நாடு பழம் பெரும் நாடு.  அதன் குரல் வேதங்கள்.  நான்காவது வேதமான அதர்வண வேதத்தின் ஒரு பகுதி  ஆயுர்வேதம்.  இந்த ஆயுர்வேதம் உயிர்கள் மூன்று தோஷங்களினால் பாதிக்கப்படுகின்றன என்று பகர்கிறது.  பித்தம், வாதம், கபம் (வெப்பம், காற்று, தண்மை) ஆகியவை அவை.  இவை மூன்றும் சீரான அளவில் இருக்க வேண்டும்.  அப்போதுதான் உயிர்களை நோய் வட்டத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று அது அடித்துக் கூறுகிறது.
தெய்வ வள்ளுவர் வேத காலத்திற்குப் பிற்பட்டவர்.  அவர் மருந்து என்ற தனி அதிகாரமே வகுத்திருக்கிறார்.  அந்தப் பத்துக் குறட்களில் மருத்துவ சாத்திரத்தையே பிழிந்து கொடுத்து விட்டார்.
அதில் முதற் குறளே,

மிகினும் குறையினும் நோய் செய்யும்
மேலோர் வளி முதலா எண்ணிய மூன்று

என்பதாகும்.  அவரும் இந்த மூன்று தோஷங்களைப் பற்றியே குறிப்பிடுகிறார். 

தமிழ் மருத்துவத்தின் மூலவர்களான போகர், தேரையர், புலிப்பாணி ஆகியோரும்  இதே தத்துவத்தைத்தான் எடுத்தியம்புகிறார்கள்.  அவர்களுடைய ஆழ்ந்த மொழியறிவின் காரணமாக அவர்கள் பயன்படுத்திய பரிபாஷைச் சொற்கள் நமக்கு விளங்கவில்லை.  தமிழ் அறியாதவர்கள் சித்த மருத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட அணுக முடியாது.




மேதை ஹானிமன் காலத்தால் பிற்பட்டவர்.  பன்மொழிப் புலவர்.  சமஸ்கிருதம் அவருக்குத் தெரியாது.  ஆனால அவர் பிறந்த மண்ணில் வடமொழிக் கருத்துக்கள் பரவலாக விரவியுள்ளன.  ஜெர்மனியில் ஒரு சாதாரண மாணவன் கூட இரகுவம்சம், காதம்பரி ஆகியவை குறித்து அறிந்திருப்பான்.  தமிழ் நாட்டில் அந்த மொழி அறிவை அடியோடு அழித்து விட்டோம்.  (வெல்க அறிவியக்கம்).  மேதை ஹானிமன் `நாட்பட்ட நோய்கள்’என்ற அற்புதமான நூலை நமக்கு அளித்திருக்கிறார்.  அவர் இந்த தோஷங்களை மியாஸம் என்று குறிப்பிடுகிறார். மியாஸம் என்பது கிரேக்க மொழிச் சொல்.  அதன் பொருள் தோஷம், குறைபாடு என்பதாகும் (MIASM) ஆதாரம்- ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக்-997).
இந்த மூன்று தோஷங்களை ஹானிமன், சோரா, சைக்கோஸிஸ், சிபிலிஸ் என்ற பெயரால் அழைக்கிறார்.  கூர்ந்து ஆராயும்போது ஆயுர்வேதக் கருத்துக்களைத்தான் அவர் தெரிவிக்கிறார் என்பது தெளிவாகும் என்றாலும், பெரும்பாலான நோயாளிகள் முதல் மியாசத்திற்கே ஆட்பட்டிருப்பதை அவர் அருளுகிறார்.
அன்பர்கள் பல வினாக்களை எழுப்பியிருக்கிறார்கள்.  ஒரு மனிதர் அல்லது மங்கை எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?  அப்போதுதானே அவருக்கேற்ற நோய்க்கழிவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.
Image result for பூங்காவனம் ஹானிமன் 
இதற்கு விடை தருவது சற்றுக் கடினமான செயல்தான் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.  மியாஸங்களைப் பற்றி ஆழ்ந்து படிக்க வேண்டும்.  அவற்றின் அடிப்படை இயல்புகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.   அறிந்தவர்களிடம் அமர்ந்து ஒப்புநோக்கி ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம்.  பிறகு தனது சுய அனுபவத்தாலும் இந்தக் கருத்துக்களை உரைத்துப் பார்க்க வேண்டும்.  அதன் பின்பு நமது செயல் முறைகள் வெற்றி அளிக்கும்.  அதில் ஐயப்பாட்டிற்கே இடமில்லை
`மியாசங்களைப்  புரிந்து கொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் மருத்துவர் நவநீதம் அவர்கள் கையடக்கமான நூல் ஒன்று எழுதியிருக்கிறார்.   தமிழர்களுக்கு அது பெரிய தொண்டு என்று நான் கருதுகிறேன்.  ஒரு மேன்மையான கருத்தை எளிய சொற்களால் விளங்கச் செய்வது ஒரு சிறந்த கலை.  அதைத் தமிழில் தருவது மக்களுக்குப் பெரிதும் பயன் தரும்.  அது அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது.  அதை நான் மதிக்கிறேன்.  பாராட்டுகிறேன்.


மற்ற முறைகளில் இல்லாத ஓர் அரிய தன்மை ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு.  ஒன்று-இது மனதை, எண்ணங்களை-உள்ளம் வெளிப்படுத்தும் குறிகளை ஏற்று, அதன் மூலம் ஒரு மருத்துவரை வழி நடத்கிறது.  இவ்வாறு வேறு எந்த முறையும் கூறுவதாகத் தெரியவில்லை.  அடுத்து உடலின் இடது, வலது பக்கங்களுக்கான மருந்துகளை இந்த மருத்துவம் மட்டும்தான் பேசுகிறது.  நான் கோட்டக்கல் மருத்துவமனையில் தங்கி அவர்களுடைய செயல்முறைகளைக் கண்டறிந்தேன்.  பல சிறந்த சித்த மருத்துவர்களை அணுகி அவர்களிடம் பாடம் கேட்டேன்.  அந்த மருத்துவ நூல்களையும் படித்தேன்.  அவர்களில் எவரும் உடல் பகுதிகளுக்கு (இடம்-வலம்) ஏற்ற பாகுபாடுகளைக் கூறவில்லை.

அல்லோபதி மருத்துவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது.  அவர்கள் சந்திரனின் கலைகளுக்கும், நோய்க்குறிகளுக்கும் தொடர்பிருப்பதாகவே ஒத்துக் கொள்ளுவதில்லை.   இது குறித்த தனி ஆராய்ச்சி நூல் ஒன்றே ஹோமியோபதியில் உள்ளது.

Image result for CM BOGER MOON PHASE

`கட்டிகள், மருக்கள் ஆகியவை உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைக் கரைக்கத் தேய்பிறையைத் தேர்ந்தெடு, பஞ்சமி மருத்துவத் துவக்கத்திற்கு உகந்த நாள்’ என்று என் ஆசான் கூறினார். 

சிறுநீர்ப் பாதையின் உட்புறத்தில் பூக்கோசு போன்று மரு ஒன்று கிளைத்திருந்ததை அது தீய்த்து விட்டது.  மருந்து கல்கேரியா ப்ளோரா, ஏணி முறையில் மூன்று நாள் இடைவெளியில், தொடர் மருந்து லூட்டிகம்(சிபிலினம்) 200 இரண்டே மாத்திரைகள்.
நோய்வாய்ப்பட்ட இளைஞரைச் சிகிச்சைக்கு முன்னும், பின்னும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த நிபுணர் `அறுவை சிகிச்சை இல்லாமல் இது எப்படி சாத்தியமாயிற்று’என்று வியந்து போனார்.

ஆகவே முடிவு.  மியாஸங்கள் உள்ளன.  தேவையானவை நம்பிக்கை, பொறுமை, உழைப்பு இவை பரம சத்தியங்கள்.

                     ******************************************

வியாழன், 15 மார்ச், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2 - மேஜர் தி.சா.இராஜூ

                                                           

நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம் 1.

                                                                         -2-
கழிவுப் பொருட்களும் சிறந்த மருந்தாகும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று முன்னரே எண்ணியிருந்தேன்.  அன்பர்கள் தரும் ஊக்கம் அந்தச் செயலை மேலும் விரைவுபடுத்தும்.  ஆழ்ந்து ஆராயப்படுத்த வேண்டிய அறிவியல் துறை இது.

உடலின் கழிவுப் பொருளான மலம், சீழ், சிறுநீர், வியர்வை, கண்ணீர், எச்சில் ஆகியவை அனைத்துமே சிறந்த மருந்துகளாகப் பயன்படும். 
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் பாட்ச் (1880-1936) இது குறித்து நிறையவே சிந்தித்திருக்கிறார்.  அவரை முதலில் ஆங்கிலேயர்கள் போற்றினர்.  பின்னாளில் அவரை எள்ளி நகையாடினர்.  மேதை ஹானிமன் தமது பிறந்த மண்ணில் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  அவர் ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகருக்கு வந்து மருத்துவத் தொண்டாற்றினார்.  பெறும் புகழ் ஈட்டினார்.  இங்கிலாந்துக்கும்  ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் எப்போதும் கடும் பகை.  அதன் காரணமாகவே ஆங்கிலேயர்கள் ஹோமியோபதி மருத்துவத்தைக் குறித்துப் பாராட்ட மறுத்தனர்.  பங்காளிக் காய்ச்சல் உலகில் எல்லைப் பகுதிகளிலும் உண்டு.

பாஸிலினம், டியூபர்குலினம், டியூபர்குலினம் பொவைனம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டுப் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் புருவங்களை உயர்த்தினார்) மெடோரினம், லூட்டிகம்(சிபிலினம்) ஆகியன குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சிலர் அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.  ஆனால் மார்பிலினம், மாலண்டரினம், கார்ஸினோஸின், ஹைட்ரோபோபினம், இன்ஃப்ளூன்ஸியம், பெர்ட்டுஸின், பெஸ்டினம், பைரோஜன், பாராடோடினம்  ஆகியவை குறித்து நம்மில் பலர் அறியார்கள்.  நம்முடைய மருந்துப் பெட்டிகளில் இவை இல்லை.

அண்மையில் வலிப்பு நோயால் அவதியுற்ற இளைஞர் ஒருவரை அவருடைய தந்தை அழைத்து வந்தார்.  எவ்வளவோ மருத்துவர்களை நாடிப் பெரும் தொகை செலவு செய்து பயன் காணாமல் என்னிடம் வந்தார்.  அவருடைய உடல் நலக் குறிப்பைத் தொகுத்தபோது அவருடைய ஏழாவது வயதில் தாளம்மை வந்த விவரம் தெரிந்தது.  தற்போது தாடைப் பகுதியில் நோவு இருக்கிறதா? என்று வினவினேன்.  எப்போதாவது வருவது உண்டு என்றும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் காய்ச்சல் வருவதாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

பிறகு என்ன? இரண்டு மாத்திரைகள் பாராடோடினம் 200.  தொடர்ந்து ஆறு நாட்களுக்குச் சீனி உருண்டைகள்.

கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறை கூட அந்த இளைஞருக்கு வலிப்பு நோய் திரும்பவில்லை.  பாரோடோடினம் வலிப்பு நோய்க்கு மருந்தாகுமா என்று என் சக மருத்துவர்கள் கடுமாக விவாதித்தனர்.

நாம் நமது கண்களையும், செவிகளையும் நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?ஒரு சுகவீனம் உடலில் ஆழப் பதிந்திருக்கிறது.  அது மீண்டும் அவ்வப்போது தலை தூக்குகிறது என்றால் அது நோயாளியின் சீரான இயக்கத்திற்குத் தடைக்கல்.  அதை நீக்கி விட்டால் அவன் நலம் பெறுகிறான்.  மற்ற முறையினர் இதை மறுக்கலாம்.  ஆனால் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

தாளம்மை குறித்து கல்கி வார ஏட்டில் சுவையான விவாதமே நிகழ்ந்தது.  அது ஒரு நோய்க்கிருமியினால் ஏற்படுகிறது என்று ஆங்கில மருத்துவர் ஒருவர் எழுதினார்.  நோய்க்கிருமிகளினால் ஏதும் ஏற்படாது.  ஏற்றவர் உடலில் நோய் அமைந்து கொள்ளுகிறது.  அதைத் துப்புரவு செய்ய நுண்ணுயிர்கள் வருகின்றன (கெண்ட் பேருரைகள் பக்.51) என்று நான் திருப்பிக் கொடுத்தேன்.  கல்கி பத்திரிகையினால் இதைச் செரித்துக் கொள்ள இயலவில்லை.  அதன் ஆசிரியரே அல்லோபதி மருத்துவம் பயின்றவர், விவாதத்தை வளர்த்தாமல் முடித்து விட்டார்.

நான் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு கழிவுப் பொருள் குறித்துக் கூற விழைகிறேன்.  அது பாஸிலினம்.  இதைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஜே. காம்ப்டன் பர்னட் காசநோயால் பீடிக்கப்பட்டவரின் எச்சிலிலிருந்து (கோழை) இது தயாரிக்கப்படுகிறது.  அடிக்கடி தடுமன் பிடிக்கிறது என்று தாயார் குறை கூறுவார்.  ``ப்ரைமரி காம்ப்ளெக்ஸ்’’(PRIMARY COMPLEX) என்று கூறி ஊசி போட்டுத் துளைப்பார்கள்.  குழந்தைகள் என்னைக் கண்டால் தாவி ஓடி வரும்.  நான் மீட்டா கோலி அங்கிள் (இனிப்புருண்டை தருபவர்).

சாதாரணத் தடுமன், இருமல், காய்ச்சல் ஆகியவைகளுக்குக் குறிகளை அனுசரித்து மெர்க்யூரியஸ், பாடியாகா, ஆர்ஸனிக்கம் ஆல்பம், பெட்ரோலியம் ஆகியவற்றில் ஒன்றைத் தருவேன். இவை வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவைகள்.  இந்தக் கொத்தில் எதைத் தர வேண்டும் என்று யோசித்தே செயல்படுவேன் என்றாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் இடையூடாக இரண்டு மாத்திரை பாஸிலினம் தரலாம்.  தர வேண்டும் என்பதே எனது பரிவுரை.   ஏனெனில் இது காச நோய்ப் பிரிவைச் சேராதவர்களுக்கும் நிவாரணம் தருகிறது என்று போயரிக் (பக்.101) எழுதுகிறார்.  ஆனால் இதை மறுமுறை தர வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.   இந்த மருந்தை ஒரு வார இடைவெளியில் கொடுத்தேன்.  அவருடைய பரம்பரையில் காச நோய் இருந்தது.  அவர் கடும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றினால் அவதிப்பட்டார்.  அவருடைய சளி வற்றி விட்டது.  இருமல் அறவே இல்லை.  காய்ச்சலும் அருகி விட்டது.  ஆனால் அவருடைய உடல் முழுவதும் வட்ட வட்டமான தடிப்புகள், மோதிர வளையம் போல கண் இமைகள் கூடப் பாதிக்கப்பட்டிருந்தன.  நான் உண்மையிலேயே பயந்து போனேன்.

நோயுற்றவரின் சுற்றத்தார் என்னைக் கடுமையாகச் சாடினார்கள்.  காச நோய் சருமத்தின் மூலமாக வெளிப்படக்கூடும் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

வங்காளத்தில் புகழ் பெற்ற மருத்துவர் கூறக் கேட்டிருக்கிறேன்.  ஒன்று ஆஸ்துமா அல்லது எக்ஸிமா ஏதாவது ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  வேறு வழியில்லை.
தொடக்கக் காலத்தில் நான் இதை நம்பியிருந்தேன்.  பின்னாளில் என் முடிவுகள் வேறு மாதிரியாகி விட்டன.  ஒரு சுகவீனம் அது நீக்கப்படக்கூடியதாக இருந்தால் முறையான ஹோமியோபதி மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும்.  மண்ணீரல், கணையம், ஆகியவைகள் நிரந்தரமாப் பழுதாகிவிட்டால் அப்போது சுவரில் முட்டிக் கொண்டு பயனில்லை.  நாம் நோயாளிக்கு உபசாந்தியாக ஏதாவது மருந்து கொடுத்து அவனுடைய துயரங்களைத் தணிக்கலாம்.  நிரந்தரமாகக் குணப்படுத்த இயலாது.  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மிகுந்த பொறுமை, கவனிப்பு, உழைப்பு ஆகியவை தேவை.  இவை எத்தனை பேரிடம் இருக்கிறது?  நோயாளி நம்பிக்கை இழந்து விடுகின்றானே? 

அவனுடைய சுற்றத்தார்களின் தாக்குதலை மருத்துவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  நாம் நமது எல்லைகளைத் தெரிந்து கொண்டு வரையறுத்து அதற்குள் வட்டாட வேண்டும்.

இந்த நோய்க் கழிவுப் பொருட்கள், நோயைத் தவிர்க்கும், கட்டுப்படுத்தும், சீராக்கும் அவற்றை அளவோடு பொறுமையுடன் கையாண்டோமானால் . . . 

*****
நோயின் கழிவே நோய்க்கு மருந்து தொடரும்.....