செவ்வாய், 31 ஜனவரி, 2017

வைசூரித் தடுப்பு என்னும் அம்மைவைப்பு Major T S RAJU


**************************************************************
வெள்ளைக்காரர்கள் இரண்டு வகை நோய்க்குப் பெருமளவில் ஆட்பட்டார்கள்.
முதலாவது வைசூரி,
மற்றது வெட்டை நோய். ஒவ்வொரு படை வீட்டிலும் சிறு கூடாரம் தனியாக இருக்கும். அதனுள் ஒரு மேஜை மேல் ஆணுறைகளும் ஒரு கையேடும் இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள் அன்று மாலை அவர்கள் அக்குளில் கொசுவலையை இடுக்கிக் கொண்டு அந்தக் கூடாரத்திலுள்ள ஏட்டில் பெயரை எழுதி விட்டு உறையை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவார்கள். திங்கட்கிழமை அன்று காலை மருத்துவப் பரிசோதனை இருக்கும். மருத்துவர் அவர்களைப் பரிசோதித்துப் பெண் வழித் தொடர்பு நோய்க்கு மருந்து கொடுப்பார். இராணுவச் சட்டப்படி இந்த நோய்க்கு ஆட்படுவது தவறன்று. ஆனால் மறைப்பது குற்றம்.
இன்னொரு அவமானகரமான உண்மையையும் இங்கு கூறியே ஆகவேண்டும். இரண்டாவது உலகப்போரின்போது, (நம் நாட்டில் பெண்கள் உதவிப்படை WOMEN AUXILIARY CORPS) என்று ஒரு பிரிவு உண்டாக்கப்பட்டது. பெயரளவிற்கு அவர்கள் எழுத்தர்கள், மற்றபடிக்கு அவர்கள் வெள்ளைப்படை வீரர்களின் கிழத்தியராகவே பயன்பட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் படையினருக்கு வைசூரித் தடுப்பிற்காக அம்மை ஊசி வைக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின்போது இந்தியர்கள் பெருமளவில், படையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களிடையேயும் இதே மரபு பின்பற்றப்பட்டது. பின்னால் அந்த வழிமுறை தளர்த்தப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அம்மைக்குத்தல் என்ற வழி ஏற்பட்டது.
ஆகவே படையில் சேர்க்கப்பட்டவுடன் ஒருவனுக்கு அம்மைக் குத்தல் ஊசி போடப்படும் அடுத்து ஒவ்வோர் இரண்டாண்டிற்குப் பிறகும் இந்தக் குத்தல் உண்டு. இதே வழிமுறை அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கட்டாயமானதாகும்.
உயிருள்ள அம்மைக்கிருமியை இவ்வகையில் உடலில் ஏற்றுவதனால் பல நோய்கள் விளையக்கூடும். அதற்கு ஆட்பட்டவனுடைய உடற்கூறே கெடும் என்று பல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கம் இன்று வரை மாறவே இல்லை.
இந்த தடுப்பூசியினால் அம்மை நோயை அழித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் இந்த நோய் மாற்றுருவம் கொண்டு புற்றுநோயாக வெளிப்படுகிறது என்று என் ஆசான் மருத்துவர் சேஷாச்சாரி பல மருத்துவ ஏடுகளில் ஆதாரபூர்வமாக எழுதினார்.
எங்கள் மருத்துவமனையும் கெவுனியில் (இராணுவக் கோட்டை வாயில்) தான் இருந்தது. அங்கே வந்தவர்களில் பெரும்பாலோர் படையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர். அவர்களில் பெரும்பாலோருக்குச் சிறுநீர் தொடர்புள்ள, தோல் சம்பந்தமான செரிமானக் கொளாறுகளுடன் கூடிய தொந்தரவு இருக்கும். அதன் பொருட்டு என் ஆசான் ஒரு வழிமுறையை மேற்கொண்டார். உடனடியாக கவனிக்க வேண்டிய நோய்க் குறிகள் இருந்தால் ஒழிய அவர்களுடைய சீட்டில் ‘முறைப்படி’ (Routine) என்று எழுதுவார்.
அவை,
தூஜா 200
சிலீசியா 30
அலுமினா 30

ஆகும்.
இவற்றை ஏழுநாள் இடைவெளியில் தருவது வழக்கம். பெரும்பாலான நோயாளிகள் மறுமுறை வரமாட்டார்கள். படையினரின் உணவு அலுமினியப் பாத்திரங்களில் தான் அட்டிக்கப்படும். அவர்களுடைய உணவுத் தாலங்கள் கூட அலுமினியத்தால் ஆனவை. அலுமினியம் பளுக்குறைவான உலோகம், நெடுந்தூரம் நடந்தும், பதுங்கியும், ஓடவும் வேண்டியிருக்கும் வீரனின் சுமையை அதிகப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த உலோகத்தில் அவனுடைய உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் அலுமினியத்தால் ஏற்படும் நோய்த் தாக்குதல் குறித்து எவரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை.
அம்மைக் குத்துவதினால் ஏற்படும் பின்விளைவுகள் பல… அதற்குப் பிறகு அவன் குணமடைவதே இல்லை. இந்த நோய் நிலைமைக்கு தூஜாவே சிறந்த மருந்து என்று எல்லா நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள், அதில் மட்டும் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை.
…..
நோய் வரலாற்றுக்குறிப்பில் அம்மைக் குத்தலின் பின் விளைவோ, விஷக் கடியோ இருக்குமானால் அப்போது தூஜா உறுதியாகப் பணிபுரியும்.
…..
மனக்குறிகள்- எல்லா நோயாளிக்குமே முக்கியம் என்றாலும் தூஜா நோயாளிகளிடம் இது சற்று விசித்திரமாக அமைந்திருக்கும். இந்த உலகம் தட்டையானது என்று அவர் நம்பினால் அதை நீங்கள் மாற்ற முடியாது. உலகம் உருண்டை என்று இவ்வளவு அறிஞர்கள் கூறியிருக்கிறார்களே என்று அவர்களிடம் நீங்கள் விவாதித்து வென்றுவிட முடியாது.
‘அதனால் என்ன? என்னைப் பொறுத்த வரையில் உலகம் தட்டையானதே’ என்பது தான் அவருடைய முடிவு. 
இவர்களுக்கு தூஜா தான் மருந்து….
ஆகவே
உரையாடலின் மூலம் அவர்களை வெல்ல முயற்சிக்க வேண்டாம்—
கைவல்ய ஞானநீதி

**********************************************************
மூலம்:
'பலமுனை நிவாரணிகள் பன்னிரெண்டு' நூலில் ..
மேஜர் தி.சா.இராஜூ
ஆசிரியர் விவரம்:
மேஜர் தி.சா.இராஜூ சாகித்ய அகாடமி பெற்ற எழுத்தாளர், ஹோமியோபதி மருத்துவர்,இராணுவத்தளபதி திருவையாறை அடுத்த தில்லைஸ்தானம் இவரின் சொந்த ஊர்.
(ஹோமியோபதியை சேஷாச்சாரி அவர்களிடம் கற்றவர், இவர் மருத்துவம் பார்க்கவென சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.)
புத்தகம் வெளிவந்த ஆண்டு 1993

செவ்வாய், 24 ஜனவரி, 2017

சர்வதேச சூழலும் ஹோமியோபதியும் பழ. வெள்ளைச்சாமி




இன்றைய சூழலில் உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.  உலகமயமாக்கலும், சந்தைப் பொருளாதாரமும், உலகத்தை சிக்கலான சூழலில் நிறுத்தியிருக்கிறது.

உலகத்தின் வல்லரசாகத் தன்னைக் கருதிக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்துவந்த அமெரிக்க அரசானது என்றும் இல்லாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.  அதன்   அதிபர் ஒபாமா எவ்வளவுதான் கடும் முயற்சி செய்தாலும், அதனைப் பின்னடைவிலிருந்து தூக்கி நிறுத்த முடியவில்லை.

இதன் விளைவாக அமெரிக்காவில் பல நடுத்தரக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கின்றன.  அமெரிக்க மக்களில் பலரும் மன அழுத்த நோய்களுக்கும், இரத்த அழுத்தம், கான்சர், நீரிழிவு மற்றும் பல மனநோய்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன.  அதனால் மறுபடியும் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களுடைய ‘காபிடல்’ புத்தகத்தைப் புரட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இச்சூழலிலும் இந்தியா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.  இருப்பினும் இந்நாடுகளில் மலேரியா, காசநோய் மற்றும் திடீர் என்று தோன்றக்கூடிய கொள்ளை நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க,

உலகம் புதிய புதிய நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம், புதிய புதிய கொள்ளை நோய்கள் தோன்றுவதும், அதை பூதாகரமாக வர்ணித்து மக்களை பீதிக்குள்ளாக்குவதும், இதைக் காரணமாகக் காட்டி மருந்துக் கம்பெனிகள் பலவிதமான உயிர்க்கொல்லி மருந்துகளைத் தயாரிப்பதும் அதை வளர்ச்சி குன்றி வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளை வியாபாரத் தலங்களாக மாற்றுவதும் காலம் காலமாக நடந்து வருவனவாக இருக்கின்றன.

‘யு’  பாலிசி என்ற நுண்ணுயிரியால் காலரா வந்ததாகவும், கொசுவால் மலேரியா வந்ததாகவும், எலிகளால் பிளேக் நோய் வந்ததாகவும் கோழிகளால் கோழிக் காய்ச்சல் வந்ததாகவும் மற்றும் தற்போது பன்றிகளால் மூளைக்காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் வருவதாகவும் கூறிக்கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்குவதும், அலோபதி மருந்துகளை மக்களின் மீது திணிப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன.  எவ்வளவு விளம்பர யுக்திகளைக் கையாண்டு பயமுறுத்தினாலும், மக்களை மருந்துக் கம்பெனிகளை நம்பியிருக்கச் செய்தாலும்,  அலோபதியர்களால் அந்தக் கொள்ளை நோய்களை வெற்றி கொள்ள முடியவில்லை.

இது தவிர்த்து பூகம்பங்கள் (சைனா, இந்தோனேசியா), சுனாமி (இந்தோனேசியா, இந்தியா), சூறாவளிக் காற்று (அமெரிக்கா மற்றும் கியூபா) போன்ற இயற்கைச் சீற்றங்களால் இப்புவிக்கோளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் இறப்பதும், காயமுறுவதும் மற்றும் கடுமையான தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதற்குத் தீர்வு காணஅலோபதி மருத்துவத்தைத்தான் அரசுகள் நாடுகின்றன.  ஆனால் அது மக்களுக்குப் பூரணமாக நலமளிக்காது என்பதுதான் உண்மை.  இருப்பினும், அரசுகள் இதற்கு மாற்றை யோசிக்காமல் இருக்கின்றன.

எல்லாவற்றையும்விட இன்றைய உலகம் பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அச்சுறுத்தப்படுகின்றது.  இதன் விளைவால் பல இடங்களில் குண்டுகள் வெடிப்பதும், பல்லாயிரம் மக்கள் சிதைந்து அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்றன.  தீவிரவாதிகளும் மற்றும் பயங்கரவாதிகளும் தோன்றுவதற்கு இன்று நிலவி வருகின்ற பொருளாதார, அரசியல் மற்றும் சமூகக் காரணங்கள்தான் காரணம்.  அதாவது வளர்ச்சியடைந்த நாடுகள் வளச்சியற்ற நாடுகளைச் சுரண்டுவதும், மதம், இனம், மொழி மற்றும் நிறப் பாகுபாடுகளால் அரசியல் லாபத்திற்காக மக்களைப் பிரித்து பகையுணச்சியைத் தூண்டுவதும்தான் காரணமாகையால், இன்றைய அரசியல்வாதிகள் அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் அழிப்பதாகக் கூறிக்கொண்டு உரிமைக்காகவும், இனவிடுதலைக்காகவும், போராடும் மக்களை ஒடுக்குவதும், இனப்படுகொலைகள் செய்வதும் நடந்து வருகின்றன.  இதனால் பல கோடி மக்கள் மனப்பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறார்கள்.

அன்டை நாடான இலங்கையில் சமீபத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதும் அவர்களைத் தீவிரவாதம் என்ற பெயரால் ஈழத் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க சிங்கள அரசு செய்யும் பாசிச நடவடிக்கைகளும் உலகத் தமிழர்கள் அனைவரையும் மிகவும் சோகத்திற்குள்ளாக்கி, மன அழுத்த நோயாளிகளாக்கி வருவதுடன், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் தொற்று நோய்களுக்கும் மன நோய்களுக்கும் ஆளாக்கி வருகிறார்கள்.

இன்று உலக அரங்கில் முதலாளித்துளவத்தின் மோசடித் தந்திரங்களால் விவசாயம் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

பாரம்பரிய முறைகள் மாற்றப்படுகின்றன.  பாரம்பரிய வித்துக்கள் அழிக்கப்படுகின்றன.  அதனால் ‘ஹைபிரிட்’ வகைகளாகிய வித்துக்களை நம்பி விவசாயம் தள்ளப்படுகின்றது.  இதற்கு சுரண்டல் அரசுகள் துணை போகின்றன.  இதன் விளைவால் விவசாயம், விவசாயக் கலாச்சாரம் என்ற நிலையிலிருந்து விவசாயத் தொழில் என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது.  அதனால் மக்கள் விவசாயத்திற்கு முதலாளியின் (அல்லது அரசின்) விதைகளையும் இரசாயண உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் நம்பியிருக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு, விவசாயத்திற்கு மிகுந்த முதலீடுகள் செய்தும் அதற்கான பலன் கிடைக்காமல் பெருங் கடனாளிகளாக ஆகி அதை ஈடுகட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைத்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  அதனால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார்கள்.  இதன் விளைவாக விவசாயம் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.  இதனால், உலகரங்கில் உணவுப் பஞ்சம் வரும் அபாயம் உள்ளது.  இவ்வகையான சூழலால் காசம் போன்ற கொடிய நோய்களால் மக்கள் கடுமையாகப்  பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆக நவீன விவசாய முறைகளால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், விவசாயம் நலிவுற்றதாலும் மக்கள் வறுமையில் உழல்வதும் மற்றும் சுகாதாரக் கேட்டாலும் கான்சர் மற்றும் காசம் போன்ற நோய்களாலும், பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதற்குத் தீர்வு காணாமல் நவீன மருத்துவமுறை மக்களை மேலும் பல நாட்பட்ட நோய்களுக்கு ஆளாக்கி துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது.

மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில் வளர்ச்சியாலும் மற்றும் இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் தொழில் வளர்ச்சியாலும், தொழிற்சாலைகளின் இரசாயணக் கழிவுகளும், கார்பன் மோனாக்ஸைடு மற்றும் பல்வேறு விசவாயுக்களாலும், இயற்கை பாழ்படுவதுமட்டுமின்றி சூரியக்கதிர்களின் மறுபிரதிபலிப்பால் புவிக்கோளமும், வளிமண்டலமும் கடுமையாக வெப்பமிகையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.  வளி மண்டலத்தில் வாயுக்களின் படலத்தால் வெப்பம் பிரதிபலித்து ஓசோன் படலத்தைத் தாக்கி அதில் ஓட்டை விழத் தொடங்கிவிட்டது.  அதனால் இதுநாள்வரை வடிகட்டப்பட்டு வந்த அல்ட்ரா வயலட் மற்றும் இன்பிரா ரெட் கதிர்கள் நேரடியாக புவி உயிர்களைத் தாக்குகின்றன.  இதன் விளைவாக மனிதர்கள் புற்றுநோய் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  மேலும் புவி வெப்பம் மிகுவதால், பனிமலைகள் உருகத் தொடங்கி கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.  புவியின் பூகற்பவியலே மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

 இதனால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் மாறுபாடுகள் மனித இனத்தை மட்டுமின்றி அனைத்து உயிர்களின் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் ஏற்புத் திறன்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மனிதனின் சமச்சீர் நிலையையே சீர் குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,

இத்தகைய உலகச் சூழலில் உலக மயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரச் சீர்கேட்டால் ஏற்பட்ட பல்வேறு வாழ்வியல் மாற்றங்களால் ஏற்பட்ட பல்வேறு மனநோய்கள் மற்றும் உடல் நோய்களுக்கும்,

உணவுப் பற்றாக்குறையால் வறுமை மற்றும் சுகாதாரச் சீர் கேட்டால் ஏற்பட்ட காசம், மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவால் ஏற்படும் எய்ட்ஸ் போன்ற பல நோய்களுக்கும்,

இயற்கை பாதிப்பால் மற்றும் இனப் படுகொலை மற்றும் மதக்கலவரங்களால் ஏற்படும் புற்று நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும்,

மேலும் கொள்ளை நோய்களாகிய சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் அனைத்துச் சமுக, பொருளாதார, அரசியல் சூழல்களால் ஏற்படும் பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கும், இன்றைய நவீன மருத்துவம் தீர்வு காண முடியாமல் திணறுகிறது.

எனவே மக்கள் தாங்களாகவே அரசுகளின் அடாவடித்தனமான விளம்பர யுக்திகளையும் மருத்துவ வியாபார அராஜகப் போக்குகளையும் மீறி மாறறு மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள்.

மாற்று மருத்துவ முறைகளில் உலக அரங்கில் அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக அனைத்து நாடுகளிலும் பரவியுள்ள ஒரே மருத்துவ முறை ஹோமியோபதிதான் என்பது உலகறிந்த உண்மை.
மேலும் மேற்கூறிய அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதியில் தீர்வு இருக்கிகறது என்ற உண்மையும் உணரப்பட்டு வருகிறது.

இதன் வளர்ச்சி அலோபதி மருத்துவ முறைக்கும் அதன் மருந்துக் கம்பெனிகளுக்கும் மற்றும் முதலாளித்துவ அரசுகளுக்கும் ஆச்சரியத்தையும் அதே சமயத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  ஆகவே அவர்கள் ஹோமியோபதியை அழித்துவிடுவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

அவர்கள் ஹோமியோபதி மருத்துவ முறையில் அறிவியல் தன்மை இல்லை.  அது அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை.  அது சாதாரண ‘பிளாசிபோ எபெக்ட்’ என்று ஹோமியோபதியை கொச்சைப்படுத்தி மக்களிடையே ஹோமியோபதிக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.  இதைத் தற்போது இணையத்தில் வெளிவருகின்ற கட்டுரைகள் நிரூபிக்கின்றன.  இது ஹானிமன் காலம் தொட்டு இருந்து வருகிற தரம் தாழ்ந்த செயல்பாடானாலும் இது எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது கடுமையாக இருக்கிறது.

இவ்வாறான உலகச் சூழலின் அனைத்து அம்சங்களும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது உண்மைதான்.  ஆனால் அதே சமயம் இந்தியாவின் பிரத்தியோக சூழல் அதற்கேயுண்டான பாதிப்பை மருத்துவ உலகில் ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அரசானது இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இராணுவத்திற்கும் மற்றும் பிற துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடும்போது மருத்துவத்திற்கும் மற்றும் விவசாயத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருக்கிறது.  இதன் விளைவு விவசாயிகள் மிகுந்த ஏழ்மை நிலைக்குப் போவதுடன் வருங்காலத்தில் பலவிதமான உடல் மற்றும் மன நோய்குக்கு ஆட்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் மருத்துவக் கல்வியும் மற்றும் மருத்துவமும் தொழில் மயமாக்கப்பட்டு வருகின்றது.  மருத்துவக் கல்வி வியாபாரமாக ஆக்கப்பாட்டதால் தரம் கெட்ட மருத்துவக் கல்வியும், கீழ்த்தரமான பண்பு கொண்ட மருத்துவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.  அதனால் மருத்துவம் கொடுமையான வன்முறைத் தொழிலாக மாறி மக்களைக் கசக்கிப் பிழிந்து படுகொலை செய்து வருகிறது.
இதன் விளைவால் இந்தியாவில்
* வருடந்தோறும் 40 சதவீதம் நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு ஏழைகளாக்கப்பட்டு வருகிறார்கள்.
* வருடத்திற்கு சுமார் 20 லட்சம் மக்கள் காச நோயால் பாதிகக்பபட்டு வருகிறார்கள்.
* வருடத்திற்கு 60 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க முடியாமல் மரணமடைகிறார்கள்.
* ஊட்டச்சத்துக் குறைவால் நோய்வாய்ப்படும் குழந்தைகைளின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.
இந்தியாவில் இன்று
* 100-இக்கு 20 பேருக்கு கான்சர் நோய் இருக்கிறது.
* 100-இக்கு 70 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
* 100-இக்கு 80 பேருக்கு சைனஸ் இருக்கிறது.

இவ்வாறான சூழலில் அலோபதி மருத்துவத்திற்குப் பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தாலும் இந்திய மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல மேலும் அது மனிதர்களை நோயாளிககளாக்கி வருகிறது.
இந்நிலையில் அதிக அளவான மக்கள் தன்னிச்சையாக ஹோமியோபதியை நாடி வருகிறார்கள்.  இதை இன்றைய பத்திரிகைச் செய்திகள் புள்ளிவிவரங்களோடு வெளியிடுகின்றன.

ஆனால் அரசு இந்திய மருத்துவ முறைகளாகிய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்குக் கொடுத்துவரும் முக்கியத்துவத்தை ஹோமியோபதிக்குக் கொடுப்பதில்லை.   இருந்தாலும்,  ஹோமியோபதியை மக்களே தன்னிச்சையாக வளர்த்து வருகிறார்கள்.
உலகரங்கில் அதிக அளவிலான ஹோமியோபதி மருத்துவர்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.  மேலும் அலோபதிக்கு அடுத்தபடியாக அதிக அளவு மக்கள் மருத்துவம் பார்த்துக் கொளவதும் ஹோமியோபதி மருத்துவ முறையில்தான்.  நிலைமை இவ்வாறு இருந்தாலும், இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 1 சதவீதம் மக்கள்தான் ஹோமியோபதியின்பால் திரும்பியுள்ளார்கள்.

இந்த எண்ணிக்கை 20 சதவீதத்திற்கு உயர்ந்தால் கூட தற்போது உள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையால் கொஞ்சம்கூட தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஹோமியாபதி மருத்துவமானது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.  இதற்கு ‘அப்ரோச்’ போன்ற தன்னார்வ சங்கங்களின் பங்களிப்பு மகத்தானது.
இருப்பினும், அரசு ஹோமியோபதி மருத்துவத்தின்பால் மாற்றாந்தாய் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் உண்மை.  மொத்தம் தமிழகத்தில் 10 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.  அதில் வருடத்திற்கு 500-இக்கு மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று வெளி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் 318, மருத்துவ மையங்கள் (டிஸ்பென்சரி) 215, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1421.  ஆனால் அரசுப் பணியில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையோ 48 தான்.

இதற்குக் காரணம் ஹோமியோபதியைப் பற்றிய புரிதல் அரசுக்கு இல்லாததும், அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலானோர் ஹோமியோபதியை ஒரு நாட்டு வைத்தியம் என்று நினைத்து வருவதும்தான்.  இதைப் போக்குவதற்கு இதுநாள்வரைக்கும் இருந்து வருகின்ற ஹோமியோபதி கவுன்சிலும், ஹோமியோபதியில் பட்டம் பெற்ற ஹோமியோபதி மருத்துவர்களின் சங்கமும் சிரத்தை எடுக்காதது ஏன்?
இன்று தமிழகத்திலுள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையும், மக்களின் தேவையும் ஏணி வைத்தாலும் எட்டாததாக இருக்கிறது  எனவே ஹோமியோபதியில் தன்னிச்சையாகப் படித்து ஹோமியோபதியில் பயிற்சி செய்யும் மருத்துவர்களை அரசு அங்கீகரித்து, அவர்களுக்குப் பதிவு வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  இது எந்த வகையிலும் பட்டம் பெற்ற மருத்துவர்களைப் பாதிக்காது என்பது மட்டுமல்ல, ஹோமியோபதியைப் பப்றறிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மேலும் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.
உலகரங்கில் ஹோமியோபதியின் தேவை அத்தியாவசியமானதாக ஆகிவரும் வேளையில் ஹோமியோபதியர்களின் போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  டாக்டர்.ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியை கிட்டத்தட்ட ஒரு முழுமையான மருத்துவமாக ஆக்கித் தந்துள்ளார்.  ஆனால் தற்போது நிலவி வரும் புதிய போக்குகள் ஹோமியோபதியை ஒரு ‘மெட்டாபிசிகல்’ நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.  அதன் மூலம் இதன் எளிமையையும், எல்லோராலும் கையாள முடியும் என்ற நிலையும் மாறி ஏதோ ஒரு சில அறிவுஜீவிகள் மட்டுமே ஹோமியோபதியைச் செய்ய முடியும் என்ற நிலைக்கு ஹோமியோபதியைத் தள்ளுவது, ஹோமியோபதியை வளர்ப்பதற்குப் பதிலாக அதை அழிக்கவே செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  மேலும் ஹோமியோபதியின் அறிவியல் தன்மை கேள்விக்குறியாக இருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான கருத்தியலான போக்குகள் ஹோமியோபதியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகிவிடும்.  இதைக் கருத்தில் கொண்டு டாக்டர். ஹானிமனின் ஹோமியோபதியை வளர்த்துச் செல்ல வேண்டிய அவசியத்தை ஹோமியோபதியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

அறிவியலானது உலகை ஒரு ஓர்மைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.  ‘நானோ’ தொழில் நுட்பம் மேலும் சாதகமான சூழலை ஹோமியோபதிக்கு ஏற்படுத்தியுள்ளது.  டாக்டர்.ஹானிமன் அவர்களால் 200 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்ட விசயம்தான் இன்று பேசப்படும் ‘நானோ’ என்பது ஏன் ஒத்துக் கொள்ளப்படாமல் இருக்கிறது என்பது தெரியவில்லை?

இவ்வாறான சர்வதேச, இந்தியப் பொருளாதார, சமுக, அரசியல், கலாசார மற்றும் தட்ப வெட்ப சூழலில்தான் நமது ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்பு 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

***
இந்தக் கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன் ஹோமியோ தோழன் இதழில் வெளிவந்தது

சூழல் கருதி மீள்பதிவு.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

விவசாயிகளின் தோழன் ஹோமியோபதி சிலிக்கா



எந்த ஹோமியோ மருந்து பலவீனமான தாவரங்களை பலமாக்குகிறது? பாலைவனத்தை சோலைவனமாக்குகிறது? களைகளை களையும் மருந்தாக.. நீர் தேங்காமல் வறண்டிருக்கிற நிலத்தை ஈரப்பதமான வளமான மண்ணாக்கும் மருந்து எது?????
சிலிக்கா (எ) சிலீஜியா
Silicea!
வேறெந்த மருந்தும் இவ்வளவு குறைவான விலையில் பலவிதமான பயிர்களின் பிரச்சனைகளையோ, பலவிதமான மண் பிரச்சனைகளையோ தீர்க்கமுடியாது.
சிலிக்கா(SILICA) என்பது வெறும் மணல் அது ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தப்பட்டு இலத்தீன் பெயரான சிலீஜியா(SILICEA) என்று அழைக்கப்படுகிறது.
சிலிக்காவின் பயன்களை ஒரு முறை அறிந்த எந்த ஒரு விவசாயியும் தனது தோட்டத்தில் சிலிக்கா இல்லாமல் விவசாயம் செய்யமாட்டார்.
ஏன் என்று பார்ப்போம்.

விவசாயத்தில் சிலிக்காவின் பயணம் எப்படி தொடங்கியது?

ஹோமியோபதியில் சிலிக்கா ரொம்ப காலமாகவே மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் வரக்கூடிய நோய்களைத் தீர்க்க பயன்பட்டு வருகிறது, ஆனால் பயிர்களுக்கும் மண் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இதன் பயன்பாடு அறியப்படாதது மட்டுமல்ல புதியதும் ஆகும்.

மனிதர்களுக்கு (விலங்குகளுக்கும் கூட) எதற்கு பயன்படுகிறது சிலிக்கா?

தன்னம்பிக்கையின்மை,வறண்ட தோல், பலவீனம், சோர்வு, தாமதமான வளர்ச்சி, புண் சீக்கிரம் ஆறாமை,நோய்த்தொற்று மற்றும் சீழ்க்கட்டிகள்,செழிப்பின்மை.
இந்த குறிகள் பயிர்களிலும் நிலத்திலும் ஒத்திருந்ததை கண்ட ஹோமியோபதியர் சிலிக்காவின் பரந்து அகன்ற பயனை உணர்ந்தனர்.
தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் சிலிக்காவினது போன்ற நோய்க்குறிகள் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.இது விவசாயத்தில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு.இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை திருப்ப இது ஓர் அத்தியாவசிய தேவை.

பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் பலத்திற்கு சிலீஜியா:

இயற்கையாக சிலிக்கா மண்ணில் இல்லாமல் தாவரங்களால் நிற்கவோ அல்லது வளரவோ முடியாது. சிலிக்கா ஒவ்வொரு செல்லிலும் திசுவிலும் வேலை செய்து பலத்தையும், உறுதியையும் கொடுக்கிறது.இது செல்களில் நடைபெறும் எல்லா நடைமுறைகளையும் சீராக்குகிறது, மற்றும் உடையக்கூடிய நிலையில் இருந்தாலும் இது ஆரோக்கியமான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. மண்ணில் சிலிக்கா சத்து இல்லாமல் இருந்தாலோ அல்லது தாவரங்களால் சிலிக்காவை கிரகிக்க முடியாமல் போனாலோ ஹோமியோபதி சிலிக்கா இந்த உலகத்தையே மாற்றுகிறது.
பலவீனமான மெலிந்த மற்றும் நீண்டு களைபோல வளரும் தாவரங்கள்,பூஞ்சைத்தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியமுள்ள தாவரங்கள் எல்லாம் சிலிக்கா தெளிக்கப்பட்ட சில நாட்களிலே உறுதியாகவும் தீவிரமான பலத்துடனும் வளர்வதை கண்டு வியப்பில் ஆழ்வீர்கள்.

சிலீஜியா மண்ணுக்கான சத்து மருந்து:

உண்மையில் மண்ணில் அரிதாக சிலிக்கா இல்லாமல் இருந்தால் சிலிக்காவை அப்படியே மண்ணுக்கு ஊட்டச்சத்தாக கொடுப்பதோ, துணை உரமாகக் கொடுப்பதோ கடினமானது- அதே நேரத்தில் ஹோமியோபதியில் வீரியப்படுத்திய சிலிக்கா தெளித்தபின் பயிர்களின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் மண்ணில் உள்ள சிலிகாவை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இதற்கும் மேலாக மண்ணின் அயனியாக்கத்தில் வினை புரிந்து அதை மாற்றி மண்ணானது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

நாற்று நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் பிற அதிர்ச்சிகளை தடுக்கிறது சிலீஜியா:

நாற்று பிடுங்கி ஓர் இடத்தில் இருந்து வேறொரு இட்த்தில் நடுவது, பதியன் இடுவது,கிளைகளை வெட்டி நடுவது,இடம் மாற்றம் செய்யும்போது வேருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது கடுமையான தட்பவெப்ப மாற்றங்கள் இவற்றால் தாவரங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு அதனால் வளர்ச்சி தடைபெறலாம்,அல்லது வெய்யிலில் வாடிப்போகலாம்,இலைகள் உதிர்ந்துபோகலாம்,அல்லது பயிரே காய்ந்து இறந்து போகும் ஆபத்தும் ஏற்படலாம்.
ஒரே ஒரு முறை சிலீஜியாவை நடவுக்கு முன்போ அல்லது பின்னரோ தெளித்தால் அது பயிரை பலமாக்கும் அதிர்ச்சியில் இருந்து விடுவிக்கும், சோர்வைத் தடுக்கும்.

பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எதிராக தாவரங்களை பலப்படுத்துகிறது சிலீஜியா:

ஹோமியோபதி சிலிக்கா தாவரங்களை பூஞ்சைகள்,காளான்கள் ,பூஞ்சைக்காளான்,வேர்க்கரையான் மற்றும் சில அரித்துத் தின்னும் காளான்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் பூச்சிகளிடமிருந்தும்(அசுவினி,மொக்குப்புழு,நாரத்தைப்பூச்சிகள்,பழ வண்டுகள்) பயிர்களை பாதுகாக்கிறது. ஆனால் கவனம் ஒரே முறை மட்டும் தான் தெளிக்க வேண்டும்.
ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்கள் தன்னுடைய புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN இல் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். ஒரு மரக்கன்று ‘நுனியில் தொடங்கி அடி வரை கருகும் நோயில்’ (dieback disease)பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பட்டை கருகிவிட்டது. ஒரு பகுதி பட்டையில் மட்டும் பச்சையம் இருக்கிறது,அதுவும் தளர்ந்து வறண்டு மடியும் தருவாயில் இருந்தது.
சிலீஜியா கொடுத்த ஒரு நாளிலே பட்டைகளில் பச்சையம் துளிர்த்து நடுத்தண்டுடன் ஓட்ட தொடங்கியது, அடுத்த ஒரு வாரத்திலே அதிசயம் நிகழத் தொடங்கியது, மரம் புது இலைகளுடன் துளிர் விட ஆரம்பித்தது.நுனியிலிருந்து கருகுதல் நோயானாது உலகின் பல நாடுகளில் கட்டுப் படுத்த முடியாத நோயாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் அல்லது தீர்க்கும் இந்த முறையானது வரவேற்கக்கூடிய செய்தியாகும்.

விதையின் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா:

விதைகளை விதைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு சிலீஜியா கரைத்த கரைசலில் விதைகளை முக்கி அரை மணி நேரம் வைத்து எடுத்து பின் விதைத்தால் அது பல வருடங்களாக பாதுகாத்த விதையாக இருந்தாலும் அதன் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா. சிலீஜியா கரைசலில் முக்கி எடுக்கப்பட்ட விதையானது, விதைத்த அடுத்த சிலநாட்களிலே உறுதியான வேர்களுடன் தளிர் விடத் தொடங்கும், பயிரும் செழிப்பாக வளரும். அது மட்டுமில்லாமல் நோய்த்தாக்குதலில் இருந்து தடுப்பதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கிறது.

சிலீஜியா அழகான மற்றும் விருத்தியுடைய மலர்களை உற்பத்தி செய்கிறது:

ஒரு முறை மலர்மொட்டுகள் மீது சிலீஜியா தெளித்து விட்டால் அது மலரும் பூக்களின் அளவையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்

சிலீஜியா களையை ஒழித்து நிர்மூலமாக்குகிறது:

வருடாந்திர களைப் பிரச்சனைகளை பாதுகாப்பாக களைகிறது சிலீஜியா. களைச்செடிகள் பூ வைக்கும் தருணத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறையாக இரண்டு தடவை களைச்செடிகளின் பூக்களின் மீது மட்டும் கவனமாக தெளித்து விடுங்கள்.பின் அந்த பூக்கள் முதிராமலே உதிர்ந்து விடும்,அடுத்த வருடத்திற்கான களைச்செடியின் விதையும் இல்லாமல் போய்விடும்.
இது தான் ஹோமியோபதி ..ஒரு முறை தெளித்தால் அது மருந்தாக வேலை செய்யும்.அதே பல தடவை தெளித்தால் அதுவே நோயை உண்டு செய்யும்.இது ஹோமியோபதி தத்துவம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..இந்த பழமொழி ஹோமியோபதிக்கும் பொருந்தும்.

சிலீஜியா காய் நன்கு பிடிக்க செய்கிறது மற்றும் பழங்கள் உதிர்வதை தடுக்கிறது :

பூக்கும் தருவாயில் ஒரே ஒரு முறை சிலீஜியா தெளித்து விட்டால், அது செடியோ, மரமோ அது நன்கு காய் பிடிக்க உதவுகிறது, பிஞ்சு உதிர்தலை தடுக்கிறது. பழங்கள் பிஞ்சிலே உதிர்ந்து விடாமல் உறுதியாக இருக்க உதவுகிறது.
ஆனால் எச்சரிக்கை.! ஒரே தடவை மட்டும் தான் தெளிக்க வேண்டும், நிறைய தடவை தெளித்தால் எல்லாம் தலைகீழாகிவிடும். களைச்செடிகள் அழிவது போல் அறுவடைக்கு முன்பே பயிர்களும் அழிந்துவிடும்.
சிலீஜியா மண்ணை வளமாக்கி நல்ல நீர் தேக்கியாக, சத்தை உறிஞ்சக்கூடிய வகையில் மாற்றுகிறது.
சிலவகையான நிலங்கள் நீரை ஏற்காது புறந்தள்ளிவிடும். சில ஓடைமண், களிமண் நிலங்கள்,சரளைமண் நிலங்கள்,புழுதிமண் வயல்கள் மற்றும் சில கரிம தாதுக்கள் அதிகம் கொண்ட மண் எல்லாம் நீரை உறிஞ்சாமல் ஓடவிட்டுவிடும். நீரை கிரகிக்கும் தன்மை இவ்வகையான நிலங்களுக்கு குறைவு.மழை பெய்தாலும் நீர் பாய்ச்சினாலும் இவ்வகையான நிலங்களில் நீர் தேங்காது ஓடிவிடும், ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்க இந்த வகையான நிலங்களுக்கு திறன் இருக்காது. இதனால் இந்த நிலங்களில் விளையும் பயிர்கள் நீரின்றி வறண்டு கிடக்கும்.
சிலீஜியா இதை மாற்றும். ஒரு முறை சிலீஜியா பாய்ச்சினால் அல்லது தெளித்து விட்டால் போதும் மண்ணின் தன்மையை மாற்றிவிடும்,பின்னர் மந்திரம் செய்தாற்போல் அந்த மண்ணானது நீரை கவர்ந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும், நீர் உறிஞ்சு திறனும் மேம்படும்.

குறிப்பு:

சிலீஜியா மனையாக மாற்றப்பட்ட அல்லது கெட்டிதட்டிப்போன நிலங்களை சீர்படுத்தாது, இவ்வகையான நிலங்களை முதலில் உழுது செம்மைப்படுத்த வேண்டும் பின்னரே சிலீஜியா பாய்ச்ச வேண்டும்.

பாலைவனத்தை சோலைவனமாக்கும் சிலீஜியா:

சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க திறன் என்னவென்றால் குறுகிய காலத்தில் பாலைவனத்தை சோலையாக்குவதுதான்.
ஒரு முறை சிலீஜியா பாய்ச்சப்பட்டால் மழை பெய்யா காலங்களில் கூட
6 வாரம் வரை ஈரப்பதத்தை சேமிக்குமளவுக்கு மண்ணை பக்குவப்படுத்திவிடும்.
சிலீஜியா பாய்ச்சிய பின் மக்கிய குப்பை மற்றும் மாட்டுச்சாணம் போன்ற இயற்கையாக கிடைக்கக்கூடிய உரங்களையும் போட்டால் மண் இன்னும் வளம்பெறும்.
கவிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது 1990களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடிக்கடி குறிப்பிடுவார். மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் கவிராஜூம் அவரது நண்பர்களும் ஒரு பண்ணையில் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நிலமானது கரடுமுரடாக முற்றிலும் வறண்டு முழுதும் மணலாக இருந்தது.
கவிராஜ் அவர்கள் அந்த நிலம் முழுதும் சிலீஜியாவை தெளித்துவிட்டு 6 வாரங்கள் கழித்து மரம் நடலாம் என திரும்பி விட்டார்.
6 வாரங்கள் கழித்து பல நூறு மரக்கன்றுகளுடன் வந்த நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம்! முற்றிலும் வறண்ட மணல் மேடு இப்போது பசுமையாக ஈரப்பதத்துடன் ஆங்காங்கே சில பயிர்கள் துளிர் விட்டிருந்தது. அனைத்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு அடுத்த 6 வாரங்களுக்கு பிறகு வந்து பார்க்கும்போது இந்த மண்ணில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை விட அதிகமாக எல்லா மரக்கன்றுகளும் நன்கு உறுதியாக, செழிப்பாக மளமளவென்று வளர்ந்திருந்தன.இவை அனைத்தும் நடந்தது ஒரு முறை மட்டும் தெளிக்கப்பட்ட சிலீஜியாவால். இதுவரை இப்படி வறண்ட நிலம் பசுமையானதாக மாறி என் வாழ்நாளில் கண்டதில்லை என கவிராஜ் குறிப்பிடுகிறார்.
புல்லே முளைக்காத மேட்டாங்காடுகளையும் பசும் புல்வெளியாக மாற்றும் திறன் சிலீஜியாவுக்கு உண்டு என கவிராஜ் குறிப்பிடுகிறார்
“சிலீஜியா பசுமைப்புரட்சியானது நடைமுறைக்கு வந்தால் மேலும் பல பாலைநிலங்கள் சாகுபடி நிலங்களாக மாறும், அவை கார்பன் டைஆக்சைடு உள்வாங்குதலை மேலும் 30லிருந்து 40% வரை அதிகப்படுத்தி அதன்மூலம் கார்பன் சுழற்சியை ஒழுங்குபடுத்தி உலக வெப்பமயமாதலை கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமல்லாமல் வறட்சியால் பஞ்சம்,பட்டினி வராது,அனைவருக்கும் உணவு நிச்சயம் கிடைக்கும். பட்டினியால் இறப்பு நிகழாவண்ணம் இந்த உலகம் மாறும்.இப்பூமி சொர்க்கமாக மாறும்” 
என கவிராஜ் உறுதியாக கூறுகிறார்.

எச்சரிக்கை:

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அது அமிர்தமே ஆனாலும் நஞ்சு தான் என்பது சிலீஜியா விஷயத்தில் மிகச்சரியானது. ஏனெனில் ஹோமியோபதியை பயன்படுத்தும் விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்கும் ஆசையில் திரும்ப திரும்ப தேவையற்ற வகையில் அளவுக்கதிமாக சிலீஜியாவை கொடுத்து விட்டு மோசமான எதிர்விளைவுகளை கண்டு நம்மிடம் குறை சொல்வார்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் திடகாத்திரமான மரத்திற்கு சிலீஜியாவை திரும்ப திரும்ப கொடுத்தால் மரமானது உருக்குலைந்து பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகி சிலீஜியாவின் எந்த நோய்க்குறிகளை குண்ப்படுத்துமோ அந்த நோய்க்குறிகள் அனைத்தும் அந்த மரத்தை தாக்கும்.
(இந்த நிகழ்வுகள் இதன் தத்துவமான நிரூபண விதி பற்றி விரிவாக ஹோமியோபதி தத்துவத்தை விவரிக்கும் புத்தகமான ‘Organon of Medicine’ இல் Dr Samuel Hahnemann சொல்லியிருக்கிறார்.)
இதுவே தான் விதை மற்றும் காய்கனி விஷயத்திலும் நடக்கிறது.ஒருமுறைக்கு மேல் பூக்கும் பருவத்தில் சிலீஜியா தெளிப்பதால் காய்,விதை உற்பத்தியாவதற்கு பதிலாக நின்றுவிடும். திரும்ப திரும்ப தெளிப்பது களைச்செடிகளை ஒழிப்பதற்கு வேண்டுமென்றால் நன்மை பயக்கும்,ஆனால் வளர்ந்துவரும் காய்கனிகளுக்கு விரும்பத்தக்க விளைவைக் கொடுக்காது.
மேலும் இறுதியாக சிலீஜியா எப்படி பாலையை சோலையாக்குமோ அதுபோல அதிகப்படியாக கொடுத்தால் சோலையையும் பாலையாக்கிவிடும். ஒரு தடவை,ஓரே தடவை அதுவே பசுமையாக்க போதுமானது- அதிக அளவு ஆபத்தானது.எவ்வளவு குறைவான அளவில் மருந்தை தருகிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அப்போது மட்டுமே ஹோமியோபதி நன்றாக வேலை செய்யும்.

எப்படி பயன்படுத்துவது சிலீஜியாவை?

பொதுவான வீட்டுத்தோட்ட உபயோகத்திற்கு சிலீஜியா 6c ஒரு உருண்டையை 200மில்லி நீரில் கலந்து நன்கு பலம் கொண்டவரை குலுக்கவேண்டும்,அதற்கு பிறகு செடியிலோ அல்லது மண்ணிலோ ஈரமாகும் வரை தெளிக்கவேண்டும்.அவ்வளவுதான் எளிது.!
விவசாயிகள் உபயோகத்திற்கு தண்ணிரின் அளவையும் மருந்து உருண்டையின் அளவையையும் தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.ஒன்றே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,ஒருமுறை மட்டுமே தெளிக்க வேண்டும்.
களைச்செடிகளை அழிக்க மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை அதுவும் கவனமாக களைச்செடிகள் மேல் மட்டும் படும்படியாக தெளிப்பது அவசியம்.
விதைகளின் முளைப்புத்திறனை ஊக்குவிக்க 20 நிமிடங்கள் சிலீஜியா கலந்த கரைசலில் ஊறவைத்தலே போதுமானது.

சாராம்சம்:

சுருக்கமாக சொல்வதானால் ஒரு வேளை மட்டும் கொடுக்கப்பட்ட சிலீஜியா மண்ணில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் உற்பத்தித்திறனையும் அதிகரித்து பயிரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனைக் காக்கிறது.
மேலும் சிலீஜியாவால் நிலங்களில் காணப்படும் மாங்கனீசு நச்சுத்தன்மையை முறிக்கிறது,மண்ணின் அயனியாக்கத்தை மாற்றுகிறது;
ஈரப்பதத்தை தக்க வைக்கிறது;
முளைப்புத்திறனை ஊக்குவிக்கிறது;


மழைப்பொழிவு குறைவான இடங்களில் உள்ள தாவரங்களையும் வாழவைக்கிறது;
பலவீனமான தாவரங்களை பலமுள்ளதாக்குகிறது;
மரங்களை உறுதியாக்கி மரத்தண்டை தடிக்கவைக்கிறது அதன்மூலம் நுனிக்கருகல் நோயிலிருந்து காக்கிறது;
பயிரின் நோயெதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தி பூச்சிகளிடமிருந்தும் நோயிடமிருந்தும் காக்கிறது;
பெரிதான மற்றும் அதிகப்படியான மலர்களையும் பழங்களையும் காய்களையும் தருகிறது;
உடையும் தண்டுகள் மற்றும் இலைகளுக்கு பதிலாக உறுதியான தண்டுகளையும் இலைகளையும் தருகிறது;

மரப்புற்றுநோய்,கசப்பு நோய்,காயங்கள்,கத்தரித்துவிடுதலால் ஏற்படும் ஆறாத இரணங்கள்,இடித்தாக்குதல் மற்றும் செயற்கையான சேதங்களில் இருந்து விரைவில் குணமாகி மீண்டுவர தூண்டுகிறது;
ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பிடுங்கி நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவுகிறது;
சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க இந்த அருஞ்சாதனைகள் தாவரங்களுக்கு பொருந்தும் அதேவேளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும் .என்ன சிலீஜியாவின் குறிகளுக்கு ஒத்து இருக்க வேண்டும்.
விவசாயத்தில் வெற்றி பெற ஒரே வழி தாவரத்தின் நோயும் மருந்தின் குணங்குறிகளும் ஒத்துபோகிறதா என்பதை அறிவதே. இதை புரிந்து கொண்டால் நீங்கள் இயற்கையை புரிந்து கொள்கிறீர்கள்.,ஹோமியோபதியை புரிந்துகொள்கிறீர்கள்.
முடிவாக உங்கள் தாவரங்களுக்கு இது போல் பிரச்சனைகள் இருப்பின் சிலீஜியாவை பயன்படுத்திப் பாருங்கள். விளைவு அற்புதமாக இருக்கும்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை எங்களிடம் கேளுங்கள்.
credit to:
*homeopathyplus .com
*ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்களின் புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN 
considera website
#drprema
#drcharuvagan
agrohomoeopathy whatsapp team https://chat.whatsapp.com/Iqe61pQ3BNnFblFEzofjBA
aproch dindigul  #   https://www.facebook.com/AprochSangam/

🙏🌾