மேல் வானம் செம்மை படிந்திருந்தது. புள்ளினங்கள் அந்தத் திசையை நோக்கி விரைந்தன. விமானம் வியூகம் போல அவை அணி வகுத்துச் செல்லும் காட்சி உள்ளத்தை ஈர்த்தது.
வாசலருகே பேச்சரவம் கேட்டது. ஸ்கூட்டரில் மரியதாஸ் வந்து இறங்கினார். பின்னிருக்கையில் அவருடைய மகள் விக்கி. (விக்டோரியா என்ற பெயரின் திரிபு).
வைத்தியருங்க என்ன சொல்லுறாங்க? இது என் பெரிய தாயார்.
மரியதாஸ் சூள் கொட்டினார். எல்லாச் சோதனைகளும் செய்யச் சென்னாங்க. எல்லாவற்றையும் முடித்து எடுத்துக் கொண்டு போனேன்.
மீண்டும் விக்கியைக் கூப்பிட்டு நேர் காணல்.
என்னதான் முடிவு?
விக்கியின் கண்ணிமையை உயர்த்திப் பார்த்தார் என் பெரியம்மா. புள்ளைக்கு என்னதான் செய்யுது?
அதுக்கு வயித்திலே சோறே தங்க மாட்டேங்குது. செரிமானமாகாமலயே வெளிக்குப் போகுது. எப்போதும் வேதனை, ஒண்ணுக்குப் போக அவசரம் பாப்பாவுக்கு இரும்புச் சத்து குறைவாக இருக்குதாம்.
நான் ஒன்னு சொன்னாக் கேப்பியா?
சொல்லுங்க பெரியம்மா
நம்ம கொல்லையிலே கறிவேப்பிலை மரம் இருக்குது. தினமும் ஒரு பிடி கறிவேப்பிலையை எடுத்துத் துவையல் அரைச்சு சுடு சோற்றிலே கலந்து போடு. ஒரு வாரத்திற்கு அப்பால் பாரேன்.
அடுத்த ஏழு நாட்களுக்கு விக்டோரியா கறிவேப்பிலைத் துவையல் சோற்றுடன் உண்டாள். அவருடைய மூச்சுக் காற்றிலேயே கறிவேப்பிலை மணத்தது. இண்டு வாரம் பொறுத்து வந்த மரியதாஸ் கூறினார். இப்போது விக்கிக்குத் தொந்தரவு ஏதும் இல்லை அம்மா. நீங்கள் சொன்னபடி பேரீச்சம்பழமும் கொடுத்தேன். நல்லா படிக்குது, சாப்பிடுது, விளையாடுது. சிறுநீர்ப் பாதையிலும் தொந்தரவு ஏதுமில்லை.
எங்க மாமா வீட்டில் நிறையச் சுவடிகள் பார்த்திருக்கேன். எல்லாம் தேரையர் எழுதியதாம். கறிவேப்பிலையில் நிறைய இரும்புச் சத்து உண்டு என்றுதான் அதில் எழுதியிருந்தது.
அதனால்தான் நம்முடைய உணவில் தவறாமல் கறிவேப்பிலை சேர்க்கிறோம் என்று நினைக்கிறேன்.
அதுமட்டுமில்லை மகனே இரும்புக் கரண்டியில்தான் தாளிதம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லுவாங்க எப்படியாவது புள்ளை நேரானால் சரி.
நீர் காற்றுப்பட்டாலே துருவேறும் இரும்பு சிறந்த மருந்தாகும் என்று கண்டு அதைத் தன் மெட்டீரியா மெடிக்காயூராவில் இந்தச் செய்தியைத்தெரிவித்திருக்கிறார் ஹானிமன்.
மருத்துவர் ஷூஸ்லர் ஹானிமனின் சம காலத்தவர். அவரும் வீரியப்படுத்தும் கொள்கையை ஏற்றுக் கெலண்டார். தண்ணீரில் முக்கி வைத்தாலன்றித் தீப்பற்றிக் கொள்ளும் இயல்புடைய பாஸ்பரஸை இரும்புடன் கலந்து அற்புதமான மருந்தொன்றைத் தயாரித்தார். அவருடைய மருத்துவக் கொள்கை மாறுபட்டதுதான்.
இந்த மனித உடல் பன்னிரண்டு தாது உப்புக்களால் ஆனது. அவற்றில் ஒன்று குறைந்தாலும் உடல் சோர்வுறும். சில குறிப்பிட்ட நோய்க்குறிளை வெளிக்காட்டும். அவைகளுக்கேற்ற திசு மருந்துகளைக் கொடுத்தால் உடல்நிலை சீராகி விடும் என்று அழுந்தக் கூறி தமது மருந்துகளைப் பன்னிரண்டு தாது உப்புகளில் அடக்கி விட்டார். அதை மெய்ப்பித்தும் காட்டினார். அவருடைய சாதனைகளைக் கண்டு மருத்துவ உலகம் வியந்து நின்றது.
அவருடைய வழியிலேயே தந்தை முல்லர் மங்களூரில் நிறுவிய மருந்தகம் ஆயிரக்கணக்கான மக்களைக் குணப்படுத்தியுள்ளது. எந்தவித அறுவை சிகிச்சையுமன்றி அங்குள்ள மருத்துவத் தொண்டர்கள் கட்டிகளையும், பிளவையும் கரைத்துவிட்டதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அதைப் புகழ்ந்துரைக்கச் சொற்களின்றித் தவிக்கிறேன்.
நான் மருத்துவப் பணியைத் துவக்கிய காலத்தில் நான்கு ஹோமியோபதி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தினேன். கூட இரண்டு தாது உப்புக்கள். இன்னும் பல மருந்துகள் என்னிடம் இருந்தாலும், அவற்றை உபயோகிக்கப் பயம். நோயாளிக்கு ஏதாவது தாறுமாறாக நிகழ்ந்து விட்டால் எப்படி நிவாரணம் தருவது? அந்த நிலையை இன்று எண்ணினாலும் சிரிக்கத் தோன்றுகிறது. இந்த ஆறு மருந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு நான் சீராக்கிய நோயாளிகள் பல நூறு பேர்கள். இன்றுவரை ஒருவருக்காவது பழைய நோய் மீண்டும் வந்ததில்லை.
இன்றைய நிபுணர்கள் காய்ச்சல் ஏற்படுவதற்குப் பல காரணங்ள் கூறுகிறார்கள். நுண்ணுயிரிகளைத் தூற்றுகிறார்கள். அவற்றின் மூலமே காய்ச்சல் பரவுகிறது என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு என்னிடம் இருந்த மருந்துகள் இரண்டேதான். அவற்றை மாற்றி மாற்றி கொடுப்பேன். உடலில் சூடு குறைந்து விடும். சளி இருமல் அறவே இராது. வயிற்று நோவும் பறந்து விடும். மலம் தடையின்றி வெளிப்படும். நன்றாக வியர்வை பெருகி நோயாளி சுறுசுறுப்புடன் செயல்படுவான்.
அவைகளில் ஒன்று ஃபெர்ரம் பாஸ்பரிகம் ஆறாவது தசம வீரியம் `அய்யோ, திசு உப்பா’ என்று கூச்சலிட வேண்டாம். பாஸ்பரஸ் கலந்த இரும்பு காய்ச்சலுக்கு நிகரற்ற அவுடதம். இது ஒரு பரம சத்தியம்.
2.
திரைச்சீலை அசைகிறது. மறுபுறம் பேச்சுக் குரல்.
உள்ளே வாருங்கள்
தாயாரும் ஒரு சிறுமியும் உள்ளே நுழைகிறார்கள். அவர்களை அமரும்படி வேண்டுகிறேன். இது என் மகள் ஜமீலா, ஏழு வயதாகிறது. புர்க்காவைச் சீர் செய்தவாறு பேசுகிறார் தாயார்.
சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?
எல்லா மருத்துவர்களிடமும் சென்றுவிட்டு வருகிறேன். குழந்தைக்கு ரத்த சோகை. வெளுத்த சாம்பல் நிறமுடைய அந்தச் சிறுமியை ஏறிட்டுப் பார்க்கிறேன். நோயின் பெயர் ஏதும் எனக்குத் தேவையில்லை. குறைபாடு என்னவென்று மட்டும் சொல்லுங்கள்.
உண்ட உணவு செரிமானமாவதில்லை. காலையில் உண்ட உணவு அதே வகையில் இரவு வெளிப்பட்டு விடுகிறது. அடிக்கடி சோர்ந்து படுக்கிறாள். சுறுசுறுப்பில்லை. மூக்கு, காது எல்லாத் திறப்புக்களிலிருந்தும் உதிரப் போக்கு. சிறுநீரிலும் கூட ஓரிரு சொட்டு ரத்தம். இருமினால் வெளிப்படும் சளியிலும் செந்துளிகள்.
குழந்தையின் நாடித்துடிப்பைக் கவனிக்கிறேன். சீராக இல்லை, விழி இமையை உயர்த்திப் பார்க்கிறேன். செயற்கை வெண்மை. அந்த அம்மையார் கொடுத்த கத்தைக் காகிதங்களைப் பார்க்கிறேன். திரைக்கு வெளியில் பலர் காத்திருப்பதையும் உணர்கிறேன்.
இரண்டு பொட்டலம் சீனி உருண்டைகளை மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு, ஒரு பொட்டலத்தை வீடு சென்றதும் உண்ணச் செய்யுங்கள். மற்றதை இரவில் கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. நாளைக் காலை குழந்தையை அழைத்து வர வேண்டும்.
அவர்கள் வெளிச் சென்ற பிறகு மற்ற அன்பர்களைக் கவனிக்கிறேன். எல்லோரும் சென்றதும் குறிப்புப் புத்தகத்தைப் புரட்டுகிறேன்.
பார்வை இரத்த சோகையில் நிலைக்கிறது. என்னதான் நோயின் பெயர் தேவையில்லையென்றாலும், நிபுணர்களின் கூற்றுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியிருக்கிறதே.
மருத்துவர் ஹ்யூக்ஸ்(HUGHES) என்றொரு நிபுணர். அவர் உறுதியாகக் கூறுகிறார். உணவில் இரும்புச் சத்து குறைவாக இருக்கிறதனால் இரத்தச் சோகை ஏற்படும் என்ற கருத்து தவறு. காப்பர்வைத் என்றொரு புகழ் பெற்ற நிபுணர். இவரும் ஏறக்குறைய இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
உண்ட உணவு செரிமானமாகாமல் வெளிப்படுமானால் அப்போது ஃபெர்ரம் மெட்டாலிக்கம் (இரும்பு) பற்றிப் படிக்க வேண்டும். கூடவே உதிரப்போக்கு, வலியில்லாத வயிற்றுப் போக்கு. இது என் ஆசானின் அறிவுரை.
மறுநாள் ஜமீலா வந்தபோது அவளுடைய தாயாரைக் கேட்டேன். நோய்வாய்ப்படும்போது குழந்தை என்ன செய்கிறாள்?
சோர்ந்து படுத்துவிடுகிறாள். பிறகு எழுந்து சற்று நடக்கிறாள் அது அவளுக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.
பசி எடுப்பதாகச் சொல்லுவதே இல்லையா?
சிலசமயம் பசித்துச் சாப்பிடுகிறாள். பல வேளைகளில் வயிறு நிரம்பியிருப்பதாகக் கூறுகிறாள். உண்ட உணவு எதிர்த்து வருகிறது.
ஜமீலா நேற்று வந்தபோது முகம் வெளுத்திருந்தது. இன்று தளதளவென்று செம்மை படிந்திருந்தது.
கெண்ட், ஜெண்ட்ரி, லிப்பே, போயனிங்ஹாசன் ஆகியோருடைய நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். ஆகவே ஃபெர்ரம் மெட்டாலிக்கம் (ஆறு) மூன்று பொட்டலங்கள் தொடர்ந்து சைனா (ஆறு) மூன்று பொட்டலங்கள் எல்லாம் காலை ஒரு வேளை மட்டும்.
பத்து நாள் பொறுத்து அந்த அம்மையார் வந்தார். கூட இருந்தவரை எனக்கு அடையாளம் புரியவில்லை. ஒரே வாரத்தில் இவ்வளவு வளர்ச்சியா?
என்னுடைய தடுமாற்றத்தைக் கண்டு அந்த அம்மையார் நகைத்தார். இது ஜமீலா இல்லை என் தங்கை குல் பதன்.
நான் பெருமூச்சு விட்டேன். எனக்கு முனிவர் ச்யவனரின் நினைவு வந்தது. மருந்துகளின் உதவி கொண்டு ஒரு மனித உயிரின் வயதைக் கூட்டவும், குறைக்கவும் முடியும் என்று அவர் எழுதுகிறார். ச்யவனப்ராசம் அவருடைய கண்டுபிடிப்பாயிற்றே?
ஜமீலாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நான் வினவினேன்.
குழந்தைக்கு ஒரு தொந்தரவும் இல்லை. வழக்கமான அளவை விட அதிகமாகவே சாப்பிடுகிறாள்.
இரண்டு மாத்திரை லூட்டிகம் (200) இதை குழந்தைக்குக் கொடுங்கள். மீண்டும் தொந்தரவுகள் தலை காட்டாமல் இருக்கும்.
சரி உங்கள் தங்கையைப் பற்றிக் கூறுங்கள்
அவர் வாசல்புறத்தை நோக்கினார். நான் திரையை இழுத்து மூடினேன். இயற்கையான நிகழ்ச்சிதான் என்றாலும் பெண்கள் கூச்சப்படுகிறார்களே.
இப்போதும் அவர் ஒரு கத்தைக் காகிதங்களை என்னிடம் கொடுத்தார். அவற்றை ஆழ்ந்து படிக்க பல மணி நேரம் தேவைப்படும். அவற்றில் நரம்பியல் நிபுணர், குழந்தை மருத்துவர், மகப்பேறு ஆராய்ச்சியாளர் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள்.
இது அவர்களுடைய மருந்துவ அறிவுக் குறைவா அல்லது காசு கறக்கும் வழிமுறையா?
புனிதமான மருத்துவத் தொண்டை இப்படிக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதே என் பணிவான கருத்து.
****
3.
அந்த மங்கையின் பெயர் குல்பதன். குல்பதன் என்பது ஒரு பாரசீக சொல். ரோஜா உடல் என்று அர்த்தம். அவள் ஏறிட்டுப் பார்த்த போது அந்த பெயர் பொருத்தமானதென்றே தோன்றிற்று. கன்னங்கள் இலேசான வெளி ரோஜா. உதடுகள் பட்டுச் சிவப்பு.
நிபுணர்களின் காகிதங்களை ஒரு புறமாக வைத்துவிட்டு அந்தப் பெண்ணின் முகத்தைக் கவனித்தேன். இடது தாடைக்குக் கீழே கழுத்தில் ஒரு புடைப்பு. சிறிய வாழைப்பழத்தின் அளவு. அதில் விரலை வைத்து அழுத்தினேன். குழி விழுந்தது.
இது எவ்வளவு நாட்களாக இருக்கிறது?
இரண்டு வருஷம் டாக்டர்.
என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?
எல்லா விபரமும் அந்தக் கோப்பில் உள்ளது.
இப்போது அந்த அடுக்கைப் பிரித்துப் பார்த்தேன். வீக்கம் இருந்த இடத்தில் இருந்த திசுவை எடுத்து பரிசோதித்திருக்கிறார்கள். பற்பல மருத்துவப் பெயர்கள். மொத்தத்தில் அது தொண்டைக் கழலை.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டம் என்று சொல்கிறார்கள். என் சின்னம்மாவுக்கும் இதே வகைத் தொந்தரவு இருந்தது. அறுவை சிகிச்சைதான் செய்தார்கள்.
இப்போது நன்றாக இருக்கிறார்களா?
அவர் தலையைக் குனிந்து கொண்டார். எனக்குப் புரிந்தது.
கோப்பிலிருந்த விவரங்கள் மீண்டும் படித்தேன். குல்பதனின் மாதப் போக்கு சீராக இல்லை. ஆறு, எட்டு மாதங்கள் வரை தள்ளிப் போகும் இயல்பு. வந்தவன் முகத்தில் கவலைக் கோடுகள்.
அந்தக் குறிப்பில் பச்சை நோய் என்று எழுதியிருந்தார்கள்.
( GREEN SICKNESS) நமது நாட்டில் பிரசவமான பெண்ணின் நிலையைப் பச்சை உடம்பு என்று கூறுவது வழக்கம். மேல் நாட்டில் பூப்படைந்த பெண்ணின் நோயுற்ற நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
பூப்படைந்த அல்லது அடையும் நிலையிலுள்ள மங்கைக்கு சுண்ணாம்பு, ஐயோடின் கலவையை ஆறாவது வீரியத்தில் அளிப்பார் என் ஆசான். அது ஒரு பல முனை நிவாரணியாகப் பணிபுரியும். முதல் மியாசத்தைச் சேர்ந்த எல்லா நோய்களையும் அது நீக்கி விடும். இங்கே குல்பதனின் உடற்கூற்றில் மூன்றாவது மியாசத்தின் வெளிப்பாடும் உள்ளதே.
ஒரு மனித உடலில் ஒரே சமயத்தில் இரண்டு மியாசங்களின் தாக்கம் இருக்குமா? இது ஒரு கேள்வி. விடை இருக்கும்-இருக்கக் கூடும்.
மிகுந்த யோசனைக்குப் பிறகு பெஃரம் மெட்டாலிக்கம் ஆறு ஒரு வாரத்திற்குக் கொடுத்தேன். தொடர் மருந்தாக சைனா, பாசிலினம்.
விளைவு?
பயனுடையதாக இல்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெளிப்படையாகக் கூறவும் துணிவு வேண்டும்.
படிப்பு மீண்டும் படிப்பு லிப்பே(LIPPAE) முதல் ஜென்ட்ரி(GENTRY) வரை.
அந்த மங்கைக்கு தொண்டைக் கழலை உள்ளது. அறுவை சிகிச்சையின்றி கரைத்தாக வேண்டும். அதற்குத் தேவையானாவை உழைப்பு, கடின உழைப்பு, கூடவே இறைவனின் அருள்.
தொண்டைக் கழலை நோய்க்கு எல்லா நிபுணர்களின் பரிவுரையையும் படித்தேன். அவர்கள் ஐயோடினை ஏற்றுக் கொள்கிறார்கள். ஐயோடின் சத்துக் குறைவாக இருப்பதனால்தான் தொண்டைக் கழலை நோய் ஏற்படுகின்றது என்பது மேலே மருத்துவத்தின் கருத்து. கெண்ட் இதை மறுக்கிறார்.
எனினும் நான் துணிந்து, ஐயோடின் 6 வாரம் மூன்று முறை கொடுத்தேன். தொடர்ந்து லூட்டிகம் 200 ஒரே ஒரு முறை.
கட்டியின் அளவு குறையவில்லை. ஆனால் வலி குறைந்திருப்பாகக் குல்பதன் கூறினாள்.
இப்போது உணவை விழுங்க முடிகிறது டாக்டர்.
தொடர்ந்து ஐயோடின் சிகிச்சை கூட நோய்க்கழிவுப் பொருள் (NOSODE) ஏதும் தரவில்லை. இரண்டு வாரங்களில் கழலையின் அளவு பெரிதும் குறைந்து விட்டது. நான் என் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. தொடர்ந்து சீனி உருண்டைகளை மட்டும் கொடுத்து வந்தேன்.
ஒரு முறை அந்த மங்கை கூறினாள். அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது அய்யா.
எந்த மாதிரி வலி?
முன்பெல்லாம் மாதவிலக்கிற்கு முன்பு அப்படி ஏற்படுவதுண்டு.
மாதப் போக்கைச் சீர் செய்வதற்கு டி.எஸ்.ஐயர்(T.S.IYER) ஒரு பரிவுரை தருகிறார். லாச்சஸிஸ் 30 தொடாந்து பல்சட்டிலா 30 மாற்றி மற்றி இது அவருடைய அனுபவ மருத்துவ முறை.
சில ஆண்டுகளாக நான் 50 மில்லிஸிம்மல்(50 MILLESIMAL POTENCY) வீரியத்தை உபயோகித்து வருகிறேன். அது விரைவில் பயனளிப்பதைக் காண்கிறேன். அதிலும் நான் உயர் வீரியத்தைப் பயன்படுத்துவது இல்லை. மூன்றாவதே நல்ல பயனைத் தருகிறது.
பாம்பு விஷத்தையும் (லாக்கசிஸ், பல்சட்டிலாவையும் ஒரே ஒரு முறைதான் கொடுத்தேன். தொடர்ந்து டியூபர்குலினம் பொவைனம் 200 ஒரே முறை.
நஸ்ரத் மீரான் தர்க்காவிற்கு வரும்போதெல்லாம் குல்பதனும் அவருடைய சகோதரியும் என்னைச் சந்தித்து வணக்கம் கூறிச் செல்வார்கள்.
இது ஒரு மருத்துவனுக்கே ஊக்கம் தரும் மருந்து.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக