அன்பர்கள் அனைவரும் திரும்பிய பிறகு பணியாள் தர்மைய்யா, எங்கள் ஆசான் முன்பு நாற்காலிகளை வைத்தார். நாங்கள் நால்வரும் அவர் முன்பு அமர்ந்தோம்.
எங்கள் மருத்துவமனையில் அப்படி ஒரு வழக்கம். நாங்கள் நால்வரும் தனித்தனியே அன்பர்களை சந்திப்போம். நோய்க் குறிப்புகளை எழுதுவோம். அதில் எங்கள் பரிவுரையும் இருக்கும். அந்தக் கோப்புடன் நோயாளி என் ஆசானின் முன்பு செல்லுவார். அவர் அதைப் படித்துத் தேவையான மாற்றங்களைச் செய்வார். அதன்படி மருந்துகள் வழங்கப்படும். அனைவரும் திரும்பிய பிறகு ஆசான் எங்களை அழைத்துப் பரிவுரைகள் குறித்து விவாதிப்பார். அப்போது அறிவுப் பரல்கள் சிதறும். அனைத்தும் பயன்மிக்கவையாக இருக்கும்.
அப்போது என் முறை.
பெயர் - சுகுமாரி
வயது - 26, ஒரு குழந்தைக்குத் தாய்
தொழில் - பள்ளி ஆசிரியை
உடல்நிலை- மாதப் போக்கு சீராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னால் பல தொந்தரவுகள். வாந்தி, வயிற்று நோவு, பசியின்மை, சளி, இருமல், வெள்ளைப்பாடு, உதிரப்போக்கு இரவில் மட்டும்-கருமை நிறம்.
தொல்லைகள் பொதுவாக இடதுபுறம். சில பகுதிகள் மரத்துப் போகும். எளிதில் மலம் வெளிப்படாது. களிமண்ணைப் போல திப்பி திப்பியாக இருக்கும். மலப்புழையில் கடுப்பு வலி. மாதவிலக்கிற்கு முன்பு நோய்க்குறிகள் மிகுமானால் அப்போது லாக்கஸிஸ் குறித்து எண்ணுவேன்.
அவருடைய தொல்லைகள் பெரும்பான்மையாக இடதுபுறத்தவை. ஆகவே சுகுமாரிக்கு நான் பரிவுரை செய்திருந்தது லாக்கஸிஸ் 200. தொடர் மருந்து லூட்டிகம் 200.
ஆசான் அந்த ஏட்டை எடுத்து என்னிடம் காட்டினார். அதில் என் பரிவுரைக்கு மாறாக, மெக்னீஷியம் கார்பனேட் என்று எழுதியிருந்தார். அதன் காரணத்தையும் அவர் விளக்கினார்.
பொதுவாக மருந்தைத் தாவர இனத்திலிருந்தே தேர்ந்தெடுப்பது நல்லது. ஏற்ற மருந்து இல்லாவிட்டால் கனிமத்தை நாட வேண்டும். விலங்கின மருந்து கடைசியாக அமைவது நல்லது.
இந்த மங்கையின் மலக்கழிவு கூழாகக் களி மண்ணைப் போல் உள்ளது. இது சிறப்புக் குறி. மெக்னீஷியாவின் மலம் பச்சையாகவும் இருப்பதுண்டு. இந்த மருந்தும் ஓர் இடதுபுற நிவாரணி.
இது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பு. ஏனோ ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் வலது இடது பக்கங்களின் பாதிப்பைப் பற்றி பேசுவதில்லை. சீன நாட்டு அக்யூபங்சர் மட்டும் இதை ஏற்றுக் கொள்கிறது.
மெக்னீஷியா கார்பனேட் குறித்து முன்னரே படித்திருந்தாலும் அது இடதுபுற நிவாரணி என்பது என் உள்ளத்தில் அமரவில்லை. என் ஆசானின் கூர்ந்த மதியையும், நினைவாற்றலையும் எண்ணி வியந்தேன். அந்த மங்கை மீண்டும் மருத்துவமனைக்கு வரவில்லை. தற்செயலாகக் கடைவீதியில் சந்தித்தபோது நன்றி தெரிவித்தார்.
மெக்னீஷியா என்பது ஒரு கனிமம். வேதியியல் வகுப்பில் அதன் சிதறல்களை பற்ற வைத்து வேடிக்கைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஒளிமிக்க வெண்மையான வெளிச்சம் தென்படும். இத்துடன் கார்பன் அமிலத்தைக் கலந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. ஹானிமன் காலத்திலேயே அவரால் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து இது. அவர் தமது நாட்பட்ட நோய்களில் இந்தக் கலவை குறித்துப் பேசுகிறார். அடுத்து வந்த ஹார்ட் லாம்ப், டிரிங்க்ஸ் ஆகியோர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
மருத்துவர் கெண்ட் இன்னும் அரிய தகவல்கள் தருகிறார். கந்தகத்தைப் போல இது ஆழமாக நீடித்துப் பணிபுரியக்கூடியது. குளிர்ந்த காற்றில் நோய் சமனம். அசைந்து கொண்டிருந்தாலும் இதமாக இருக்கும். 21 நாட்களுக்கு ஒருமுறை நோய் திருப்புமானால் இதுவே உறுதியான மருந்து.
இந்தக் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். 5 வயது சிறுவன் ஒருவனுக்கு இந்தக் கால அளவில் வலிப்பு வந்து கொண்டிருந்து. குழந்தையின் பெற்றோர்களிடம் எப்போதும் இந்த விவரத்தைக் கேட்டறிவேன். வலிப்பு வரும் நேரம், தேதி ஆகியவைகள் குறித்து அறிந்து கொள்வேன். மெக்னீஷியா கார்பானிக்காவின் இரண்டு மாத்திரைகள் அந்தச் சிறுவனை நிரந்தரமாகக் குணமாக்கிவிட்டது. தொடர் மருந்து லூட்டிகம் ஒரே தடவை மட்டும்.
பற்களில் ஏற்படும் நோய்களுக்கு இது நிகரற்ற மருந்து. சிறப்பாக சூலுற்ற நிலையிலும், விலக்கின் போதும், பல் நோவு ஏற்பட்டு அவள் அமைதியின்றி நடப்பாளானால் இது உடனடி நிவாரணம் தரும். ஆடும் நிலையிலிருந்த பற்கள் கூட இந்த மருந்தின் பிரயோகத்திற்குப் பிறகு சீராகிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மருந்து பற்களின் வேரில் மாறுதலை உண்டாக்கும். பற்களைப் பொறுத்த வரையில் மூன்று மருந்துகள் ஆற்றும் பணியை என்னால் மறக்கவே முடியாது. சைனாவும், ஆண்டிமனியும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. சிறப்பாக சூலுற்ற நிலையில் இவை அற்புதமான துணைவர்கள். ஆறாவது வீரியமே போதும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை கூடத் தரலாம்.
எவ்வளவு சாப்பிட்டாலும் சில குழந்தைகள் உடல் தேறாது. இளைத்தே இருக்கும். வெளுத்துப் போகும். பின் தலையில் குழி விழும். இது ஒரு சிறப்புக் குறி. என் ஆசான் ஓர் அனாதைச் சிசறார் இல்லத்தைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் நானும் சென்று குழந்தைகளைப் பார்ப்பேன். பல குழந்தைகளின் பின் மண்டையில் குழியிட்டிருக்கும். இவை தவறான உறவின் விளைவாகப் பிறந்த குழந்தைகள் என்று என் ஆசான் குறிப்பிடுவார்.
இந்த உண்மையை மருத்துவ மேதை கெண்ட் உறுதி செய்கிறார். (பக்கம் 715). பல குழந்தைகள் மெக்னீஷியா கார்பானிக்காவினால் சீரடைந்தார்கள்.
நாம் எல்லோருமே மருத்துவ நூல்களைப் படிக்கிறோம். ஆனால் சிலர்தான் அவற்றைச் செயலாக்குக் காட்டுகிறார்கள். அவர்களுள் என் ஆசான் சிறந்த வழிகாட்டி. அவரை வணங்குகிறேன். போற்றுகிறேன்.
2.
அன்று என்னைச் சந்திக்கும்பொருட்டு நண்பர் சூசைமாணிக்கம் வந்திருந்தார். அவர் அண்மையிலுள்ள நகரக் கல்லூரின் துணைப் பேராசிரியர். தொண்டு செய்வதில் அவருக்கு நாட்டம் இருந்தது. ஆகவே ஹோமியோபதி மருத்துவ நூல்களைப் படிக்கத் துவங்கினார். சில முக்கியான மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து வந்தார். அவ்வப்போது என்னை சந்திக்க வருவார். ஐய்யப்பாடுகளைத் தீர்த்துக் கொண்டு திரும்புவார். அவர் அன்று வந்தபோது அவருடன் கூட இன்னொரு அன்பரையும் அழைத்து வந்திருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர் எனது நண்பர். பெயர் சாமுவேல். இவர் ஒரு முன்னாள் படையினரும்கூட. அவரை வரவேற்று நலம் விசாரித்தேன்.
அன்பர் சாமுவேல் தமது நெற்றியைச் சுற்றி ஒரு மெல்லிய துணியை இறுக்கக் கட்டியிருந்தார். கண்களில் ஒரு கலக்கம்.
கட்டு எதற்காக? நான் வினவினேன்.
நண்பர் தலைவலியினால் அவதிப்படுகிறார். தலையில் இறுக்கமாகக் கட்டு போட்டால் சிறிது நிவாரணம் கிடைக்கிறது. அவர் பதிலளித்தார். நீங்கள் அவருக்கு உதவ முடியுமா? சில வாரங்களாக இவர் தேநீர், காஃபி ஆகியவைகளை நிறுத்திவிட்டார். புகையிலைப் பழக்கம் அறவே கிடையாது.
தயார் நிலையில்தான் அழைத்து வந்திருக்கிறீர்கள். இதுவரை அவருக்கு என்ன மருந்து கொடுத்தருக்கிறீர்கள்?
நக்ஸ்வாமிகா, பிக்ரிக் அமிலம், சைலீஷியா ஆனால் எதையும் உயர்ந்த வீரியத்தில் தரவில்லை.
சாமுவேலின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தேன். நாவைப் பார்த்தேன். ஓரங்கள் பிளந்திருந்தன.
சூசை அவருக்குக் கொடுத்த மூன்று மருந்துகளும் தலைவலியைக் கட்டுப்படுத்துபவையே. ஆனால எவையும் பலன் தரவில்லை.
நண்பர் சாமுவேல் தற்போது என்ன தொழில் செய்கிறார்?
படையிலிருந்து ஓய்வு பெற்றபோது கணிசமான சேமிப்புத் தொகை கிடைத்தது. இவருடைய உறவினர் விசைப் படகு ஓட்டிக் கடல் மீன் பித்து விற்பனை செய்கிறார். இவரும் அந்த அன்பரோடு கூட்டாக தொழில் புரிகிறார்.
நீங்களும் படகில் பயணிப்பதுண்டா? சாமுவேலைக் கேட்டேன்.
வாரத்தில் மூன்று நாள் போகிறேன். தற்போது தலைவலி அதிகமாக இருப்பதால் கடலில் செல்வதை நிறுத்தி விட்டேன்.
அறையினுள் சென்று குறிப்புப் புத்தகத்தைப் புரட்டினேன். திரும்ப வந்து நண்பரைக் கேட்டேன். மலம் வெளிப்படுவது எப்படி இருக்கிறது?
சற்று சிரமம்தான். திப்பி திப்பியாக சிதைந்த நிலையில் வெளி வருகிறது. மலம் வெளிப்பட்ட நிறைவும் இல்லை.
உள்ளே சென்று மூன்று பொட்டலங்கள் மடித்துக் கொண்டு வந்தேன். இதை ஒரு நாள் இடைவெளியில் உண்ணுங்கள். சரியாகி விடும். ஒரு வாரம் பொறுத்துத் தகவல் கொடுங்கள்.
இரண்டு வாரமாகியும் நண்பர் வரவில்லை. சூசை மாணிக்கம் மட்டும் வந்தார்.
நண்பர் சாமுவேல் எப்படி இருக்கிறார்?
சூசை சிலுiக் குறி இட்டுக் கொண்டார். நான் என் வழக்கமான சொற்றொடரைக் கூறினேன். இறைவன் பரம கருணையுடையவன்.
(Muriaticum) ம்யூரியாடிக்கம் என்ற சொல்லுக்கு கடல் உப்புடன் தொடர்புள்ள என்று பொருள். இதைக் குறுக்கி ம்யூர் என்று அழைப்பார்கள். நம்மில் எவருக்கு நாட்ரம் ம்யூர் பற்றித் தெரியாது? இதனுள் 2800 நோய்க்குறிகள் அடங்குமே.
ஆனால் மெக்னீஷியம் ம்யூர் குறித்துப் பல மருத்துவர்கள் அறியார்கள். அவர்கள் இதைப் பயன்படுத்துவதும் இல்லை என்று நிபுணர் கெண்ட் குறிப்பிடுகிறார். இது நரம்புடன் தொடர்புள்ள நேய்களை சீராக்கும். கல்லீரல் நிவாரணி . பெண்களின் தயரங்களுக்கு இது ஈடு இணையற்ற மருந்து.
குளிர் காற்று நிவாரணமளிக்கும் என்றாலும் அவனால் இதைத் தாங்க இயலாது. உறங்குவதற்காக இமைகளை மூடியதும் தொந்தரவுகள் தொடங்கும் அவனால் படுத்திருக்கவே இயலாது. எழுந்து நடக்கத் துவங்குவான். அப்படி நடப்பது அவனுக்கு இதமாக இருக்குமென்றும் அவர் தொடர்ந்து எழுதுகிறார்.
மலச்சிக்கல் மட்டுமன்று. சிறுநீரும் ஒழுங்காகப் பிரியாது.
அடிவயிறு உப்பிக் கொள்ளும். அதை மெல்ல அழுத்தினால் மட்டுமே சிறுநீர் வெளிப்படும். மெதுவாக உடலை அழுத்திவிட்டாலே நோயாளி சமனடைவான்.
மெட்ரோர்ஹேகியா ( METRORRHAGIA) என்று ஒரு பெயரைச் சொல்லி அச்சுறுத்துவார்கள். சாதாரண தடுமனையே `ஸர்க்கமோநேஸல்’ என்று கூறுகிறார்களே.
எப்படி மலம், சிறுநீர் ஆகியவை வெளிப்படுவதில் தயக்கம் ஏற்படுகிறதோ அதே வகையில் சூல் பையிலிருந்து உதிரத்தின் போக்கும் தாமதமாகும். அடிவயிற்றை அழுத்தினால் மட்டுமே வெளியாகும். இந்த நிலையில் மெக்னீஷியா ம்யூரியாட்டிகம் உடனடியாக உதவும். முப்பதாவது வீரியம் ஒரே ஒரு தடவை மட்டும் போதும்.
இது முக்கியமானதொரு குறி.
தொடர்ந்து குதிகால், கைவிரல்களின் நுனி ஆகியவை மரத்துப் போனாலோ அவற்றில் எரிச்சல் கண்டாலோ மெக்னீஷியா ம்யூரியாடிகம் மிக நல்ல மந்து.
ஒட்டு மொத்தமாக இதை நரம்புக் கோளாறுள்ள பெண்களுக்கு நல்ல மருந்து என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். என்னுடைய அனுபவமும் அதுவேதான். அன்பர் சாமுவேலுக்கு நான் கொடுத்த மருந்துகள் மெக்னீஷியா ம்யூரியாடிகம் 6, 30, 200 இவ்வாறு அளிப்பதை ஏணி முறை என்று கூறுவார்கள்.
`நோய் நாடு, நோய் முதல் நாடு’ என்று கூறுவது உலகப் பொது மறை.
3.
மெக்னீஷியத்துடன் பாஸ்பரஸைக் கலந்த இந்த மருந்து மேதை ஹானிமனால் நிரூபிக்கப்படவில்லை. பின்னாளில் மருத்துவர் போயரிக் செய்திருக்கிறார். ஷுஸ்லரின் உயிர்வேதி மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குறித்துச் சிந்திப்பது முறையாக இருக்கும். இது ஹோமியோபதி மருத்துவ முறையால் மெய்ப்பிக்கப்படவில்லையென்றாலும், இந்த மருந்துகள் ஹோமியோபதி முறையிலேயே வீரியப்படுத்தப்படுகின்றன. இந்தக் காரணத்திற்காக மட்டுமே இதை ஹோமியோபதி மருதுவர்களும் பயன்படுத்தலாம். இது குறித்து வாதிடுவது தேவையற்ற செயல்.
பின்னாளில் இது ஹோமியோபதி முறையில் மெய்ப்பிக்கப்பட்டபோது சில அடிப்படை உண்மைகள் தெரிய வந்தன. இது குணப்படுத்தும் நோய் - பனிச்சூழல், குளிர்ந்த காற்று ஆகியவற்றினால் நிவாரணம் கிடைக்கிறது. நரம்பு வலியோ, எத்தகைய நோவாக இருந்தாலும் இந்த மருந்து நிவாரணம் தருகிறது.
குழந்தைகள் பல் முறைக்கும் பருவத்தில் வீறிட்டுக் கதறும். அப்போது நீரில் கலந்த மெக்னீஷியம் பாஸ்பரஸ் உடனடி நிவாரணம் தருவதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். உடலுறுப்புகளில் சிலவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் நோவு ஏற்படும். தட்டச்சுப் பொறியாளரின் விரல்கள், வீணை வாசிப்பவர்களின் விரல் நோவு, அவை மரத்துப் போதல் ஆகியவற்றை இது உடனடியாக மாற்றி விடும். சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு கால் சுளுக்கு ஏற்படும். விதை வீக்கம் ஆகியவற்றை இது குணப்படுத்தியுள்ளது.
இதன் இன்னொரு சிறப்பு இது வலது புற நிவாரணி என்பதாகும். இடதுபுற நோய்களை இது குணப்படுத்தாது என்பதல்ல என்றாலும் வலது புற நோய்களை இது விரைவில் குணப்படுத்துவது உறுதி. அடுத்தடுத்ததாக இதன் நோவுகள் ஒரே இடத்தில் குவியும். தாடையை அசைக்கும்போது சிலருக்கு வாய் மூட மறுக்கும் (LOCKJAW). அப்போது அந்த இடத்தைத் தடவிக் கொடுத்து இந்த மருந்தைத் தர வேண்டும். சூடான ஒத்தடமும் தரலாம். படையினரின் நடைமுறைகளில் நெடுந்தூரம் நடக்கும் பயிற்சியும் ஒன்று. இரவு பத்து மணிக்குத் துவங்கி அதிகாலை வரை அவர்கள் நடப்பார்கள். சிலருக்குக் கால் நரம்பு சுருட்டிக் கொண்டுவிடும். விரல்கள் கோணலாக இழுத்துக் கொள்ளும். தொடர்ந்து நடக்கவே முடியாத வலி. கணுக்காலுக்கு மேலே முழங்காலுக்கு மேல் கட்டையாக உணர்ச்சியற்றுப் போகும். காலை அசைத்தால் கடுமையான வலியும் ஏற்படும்.
அந்த வேளைகளில் காலை மெல்லப் பிடித்துவிட்டு அசைத்து உதிர ஓட்டம் ஏற்பட வகை செய்து மெக்னீஷியா பாஸ்பரஸ் கொடுத்தால், அந்தப் படைவீரன் அரை மணி ரேத்திற்குள் மீண்டும் நெடும் பயணத்திற்குத் தயாராகி விடுவான். இத்தகைய கடும் பயிற்சியின்போது எனக்கு மிகவும் உதவியாக விளங்கியவை ஆர்னிகா, ரஸ்டாக்ஸ், மெக்னீஷியா பாஸ்பரஸ் ஆகியவை. இவற்றில் முதல் இரண்டும் தாவர வகையைச் சேர்ந்தவை. சிலருக்கு நடையிலேயே தடுமாற்றம் ஏற்படும். மது மயக்கத்தினால் தள்ளாடுவதைப் போல் அவனது தோற்றம் இருக்கும். கண்களில் இரக்கத்தைத் தூண்டும் இயல்புள்ள பார்வை இருக்கும். அந்த வேளையில் மெக்னீஷியம் பாஸ்பரஸ் துணை புரியும். இதை சுடு நீரில் கரைத்துத் தருவது நல்ல பயனைத் தரும் என்று மருத்துவர் போயரிக் பரிவுரை செய்கிறார்.
உடலின் எந்தப் பகுதியிலும் இந்த நிலைத் தடுமாற்றம் ஏற்படலாம். கண்ணிமைகள் மூட மறுக்கும். கை, கால், தொடை ஆகிய இடங்களில் தசை முண்டாக எழும்பித் துடிக்கும். அந்த இடம் சூடாகவும் இருக்கும். அப்போது செய்ய வேண்டியது அந்தப் பகுதியில் அழுத்தம் கொடுத்து நீவி விடுதல். தொடர்ந்து மெக்னீஷியம் பாஸ்பரஸ்.
மீண்டும் உறுதியாகச் சொல்ல விழைகிறேன். ஹோமியோபதி மருத்துவர்கள் உயிர் வேதியியல் மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீவிரமான கருத்து ஒன்று நிலவுகிறது. அப்பேர்ப்பட்ட எந்தத் தடைகளையும் நாம் விதித்துக் கொள்ள வேண்டாம். ஒரு மருத்துவரின் முதல் கடமை நிவாரணம் அளிப்பது. பக்க விளைவுகளின்றி, விரைவாக நோயாளி சுய நிலைக்குத் திரும்ப வேண்டும். உயிர் வேதி இயல் முறையில் மருந்தின் அளவு அதிகம். ஹோமியோபதியில் குறைவு. ஆகவே மெக்னீசியம் பாஸ்பரஸை எந்தவித தயக்கமுமின்றி தரலாம். எல்லா ஹோமியோபதி மருத்துவர்களின் பெட்டியிலும் இருக்க வேண்டிய மருந்து இந்த மெக்னீசியம் பாஸ்பரிகம்.
இதன் தொடர் மருந்துகள், கல்கரியா பாஸ்பரசும், ஸைலீஷியாவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நலம்.
4.
அன்று வீடு திரும்பியபோது காலை ஏழு மணி இருக்கும். என் உதவியாளர் கூறினார்-ஜமால் பாய் வீட்டிலிருந்து தகவல் வந்தது. நீங்கள் ஊரில் இல்லை என்று சொல்லி அனுப்பினேன்.
யாருக்கு உடல் நிலை சரியில்லை?
உங்கள் நண்பருக்குத்தான் என்று சொன்னார்கள்.
முக்கியமான வேலைகளைக் கவனித்துவிட்டு அடுத்தத் தெருவிலிருந்து மஜீதா இல்லத்திற்குச் சென்றேன். வாசலில் சில நண்பர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தனர்.
நடையனைக் கழற்றிவிட்டு முன் கூடத்திற்குச் சென்றேன். உங்களுக்கு ஆள் அனுப்பினோம். வெளியூரிலிருந்து திரும்பவில்லை என்று தெரிந்தது. இடையில் பரமானந்தம் வந்தார். அவர்தான் இப்போது உள்ளே இருக்கிறார்.
பச்சிலை பரமானந்தம் என்று அவரை ஊரார் அழைப்பார்கள். எந்த மருத்துவத் துறையிலும் முறையான கல்வி பயிலாதவர் என்றாலும் கை மருந்தாக ஏதாவது கொடுத்துப் பலரைக் குணப்படுத்தி வருகிறார். மருத்துவ வசதி ஏதுமில்லாத தொலை தூரக் கிராமங்களில் இத்தகைய மருத்துவர்களின் தொண்டு போற்றுதற்குரியது.
. . . சீன நாட்டில் இந்த நடைமுறை இன்றும் புழக்கத்தில் உள்ளது. புதுவகை மருத்துவம்தான் பெரும்பாலான கல்லூரிகளில் போதிக்கப்படுகிறது என்றாலும் அந்த அரசு பழைய முறைகளையும் கைவிடவில்லை. அவர்களுடைய செயல்முறைகளையும் ஆதரிக்கிறது. அவர்களைக் காலணி அணியாத மருத்துவர்கள் (Bare foot doctors) என்று அழைக்கிறார்கள். அக்யூபங்சர் அவர்களுடைய அருந்தனம் நரம்புகளின் இயக்கத்தை மறக்கச் செய்து அறுவை சிகிச்சையைக்கூட மேற்கொள்ளுகிறார்கள். அறுவை முடிந்து தையல் போட்ட பிறகு ஊசிகளை எடுத்து விடுகிறார்கள்.
நண்பர் ஜமாலின் அருகே சென்று கவனித்தேன். அரை மயக்க நிலையில் இருந்தார். இடது வலது மணிக்கட்டுகளைப் பிடித்துப் பார்த்தேன். ஒன்று சில்லிட்டிருந்தது. அவருடைய துணைவியார் தில்ஷத் முகத்திரையை நீக்கி விட்டு பேசத் தொடங்கினார்.
விடியற்காலையிலேயே எழுந்திருந்து முகம் கழுவிக் கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று விடுவார். இன்றைக்கு அஜான் அழைப்பு வந்த பிறகும் அவர் கண்விழிக்கவில்லை. அருகில் சென்று பார்த்தேன். வலது கையால் சைகை காட்டினார். வாய் கோணிக் கொண்டது. இடது கை செயலிழந்து போயிருந்து. உடனே உங்களுக்குத் தகவல் அனுப்பினேன்.
நண்பரின் கண் இமையை உயர்த்திப் பார்த்தேன். பார்வையில் நிழல் அடித்தது.
. . . நண்பர் பரமசிவம் பேசத் தொடங்கினார். ஜமாலின் இடது விதையில் வீக்கம் கண்டுள்ளது.
மருந்து ஏதாவது கொடுத்தீர்களா?
மெக்னீஷியம் சல்பர் இரண்டு மாத்திரைகள் சுடு நீரில் கலந்து கொடுத்தேன். அதையே பொடித்து லங்கோட்டில் வைத்துக் கட்டச் செய்தேன்.
இரவு என்ன உணவு கொடுத்தீர்கள் ஆப்பா ஜான்? அவரது துணைவியாரைக் கேட்டேன்.
இரண்டு பரோட்டா, மீன் குழம்பு.
அவருடைய நாவைப் பரிசோதித்தேன். வெண்மை படிந்திருந்தது.
தற்போதைக்கு எதுவும் தர வேண்டாம். ஒரு மணிநேரம் பொறுத்துத் தகவல் கொடுங்கள் வீடு திரும்பினேன். அதற்குள் நோயாளிகளின் கூட்டம் பெருகி விட்டது.
முற்பகல் 10 மணிக்கு அவருடைய மகன் ரஷீத் வந்தான்.
அப்பா எப்படி இருக்கிறார்?
எழுந்து உட்கார்ந்து விட்டார். நிறைய சிறுநீர் பிரிந்தது என்றாலும் இடது கையை இயக்க முடியவில்லை. கட்டிலில் சாய்ந்திருக்கிறார்.
கவலை வேண்டாம். உண்ண விரும்பினால் பால் மட்டும் கொடுங்கள். குடிப்பதற்கு வெந்நீர் தரலாம். நான் மாலை வந்து பார்க்கிறேன்.
இருள் சூழும் நேரத்தில் ஒரு நண்பரின் துணையுடன் நண்பர் ஜமால் வந்தார். உடல் சோர்வு முகத்தில் பிரதிபலித்தது. தணிந்த குரலில் பேசினார். பக்கவாதமோ என்று பயந்துவிட்டேன்.
முன்னால் எப்போதாவது இப்படி நிகழ்ந்ததுண்டா?
அப்படி ஏதும் நினைவில்லை.
இரண்டு பொட்டலம் சீனி உருண்டைகளை மடித்துக் கொடுத்து ஒன்றை தூங்கும் முன்பு சாப்பிடுங்கள். மற்றது நாளை காலையில்.
இன்ஷா அல்லா(ஹ்) அவர் தெம்புடன் திரும்பினார்.
மெக்னீஷியத்தைக் கந்தகத்துடன் கலந்து வீரியப்படுத்திக் கொடுக்கும் முறை மேதை ஹானிமனால் மெய்ப்பிக்கப்படவில்லை. அவற்றை வீரியப்படுத்தாமல் உண்டால் மலமிளகும். இந்தக் கலவையை செரிக்க இயலாமல் குடல் அவற்றை வெளியே தள்ளுகிறது. கூடவே மற்ற பொருட்களையும் வெளியே கொண்டு வருகிறது என்பது நிபுணர்களின் கூற்று. இதை எப்சம் உப்பு என்று பெயரிட்டு அழைப்பதுண்டு (epsom salt)
வீரியப்படுத்தப்பட்ட இந்த மருந்து சிறுநீர்ப் பாதையில் சிறப்பாகப் பணிபுரிகிறது. இது பெண்களுக்கேற்ற மருந்து என்பதைக் கண்டிருக்கிறேன். குறுகிய இடைவேளையில் விலக்கு ஏற்பட்டால், அல்லது வெள்ளைப்பாடு மிகுதியாக இருந்தால், நடக்கும்போது முதுகிலும், தொடையிலும் வலி அதிகமாக இருந்தால், இதை ஆறாவது வீரியத்தில் கொடுத்தால் போதுமானது. வெளிப்பாடு கருப்பாக கட்டியுடன் இருக்கும். சில சமயங்களில் விசித்திரமான அடையாளம் ஒன்று தோன்றும். இரண்டு தோள்களுக்கும் இடையில் வீக்கம் ஏற்படும். பொறுக்க முடியாத நோவு. இரு மாத்திரைகளைச் சுடுநீரில் கரைத்துக் கொடுத்துவிட்டால் போதும். முண்டு கரைந்து போகும் அதிசயத்தைக் காணலாம். உடல் முழுவதும் கரும் சிவப்புப் புள்ளிகள் எழும், சொறிந்தால் தடித்து விடும். அந்த நிலையிலும் இந்த மருந்து உடனடி நிவாரணம் தரும்.
பொதுவாக ஹோமியோபதி மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துவது கிடையாது. காரணம் அவர்களுக்கு இது குறித்துத் தெரியாது. குறைந்த வீரியத்தில் ஒரு புட்டி மருந்து கைவசம் இருப்பது நன்று. அவசரத் தேவைக்குப் பயன்படும்.
ஹோமியோபதி கனிமங்கள் நூலில் இருந்து....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக