திங்கள், 8 மே, 2017

காரீயம் -மேஜர் தி.சா.இராஜூ


ஒரு திரைப்படத்தின் மதியக் காட்சியைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது அவரைச் சந்தித்தேன்.  இளைஞர் நல்ல உயரம்.  ஆனால் அதற்கேற்ற சதைப்பிடிப்பு இல்லை.  தமது புதிய ஸ்கூட்டரைத் திரையரங்கத்திற்கு வெளியே தள்ளிக் கொண்டு சென்றார்.  அது கேரளத்தில் பதிவு செய்யப் பெற்றது தெரிந்தது.  அவர் என்னைக் கடந்தபோது அவருடைய முகத்தை உற்று நோக்கினேன்.

அய்யா, உங்கள் பெயர்? என வினவினேன்.
அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.  அனிருத்தன்.
உங்கள் ஊர் கொட்டாரக்கரையா?
அதே, அதே, அது தங்களுக்கு எப்படித் தெரியும்?  அவர் தமது ஸ்கூட்டரை வெளிச்சுவருக்கு அருகில் நிறுத்தினார்.
இன்னம் சொல்லட்டுமா? உங்கள் தந்தையின் பெயர் அரவிந்தன் அல்லவா?  காப்டன் அரவிந்தன்.
அனித்தன் என் முகத்தை உற்று நோக்கினார்.  அத்யேகத்திண்ட பெயர்? (தங்களுடைய பெயர்)

நான் தெரிவித்தேன்.  அவர் என் கையைப் பற்றிக் குலுக்கினார்.

 உங்களுடைய படம் எங்கள் வீட்டில் உள்ளது.  பாரா முல்லாவில் எண்டே அச்சனோடே பணியெடுத்துண்டு அல்லே? (பாராமுல்லாவில் என் தந்தையுடன் பணிபுரிந்திருக்கிறீர்கள் அல்லவா?)
உங்கள் தகப்பனார் நலமாக இருக்கிறாரா?
தற்போது கொட்டாரக்கரையிலாணு, ஒரு கொல்லமாயி (ஓர் ஆண்டாக அவர் கொட்டாரக்கரையில் இருக்கிறார்).

கொடும் பனிக்கடியினால் நாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டோம்.  நான் தப்பி விட்டேன்.

ஸார் வைத்தியரல்லே?  அந்த மலைப்பிரதேசத்தில் நீங்கள் எல்லோருக்கும் மருந்து கொடுத்து குணப்படுத்திய விவரத்தை என் அச்சன் பரஞ்சுட்டுண்டு.  ஸார் எவடெயாணு தாமசிக்குன்னு?(நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்) ஞான் தங்களை அவடெ சேர்ப்பிக்கும் (நான் தங்களை அங்கு கொண்டு போய் விடுகிறேன்).
நன்றி, நான் நடந்தே போய்விடுவேன்.
ஆனால் அவர் என்னை வற்புறுத்தி ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டார்.  நிறைய மரங்கள் சூழ்ந்த ஒரு விடுதியின் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தினார்.  என்னை உள்ளே வரும்படி அழைத்தார்.

அவர் அறையைத் திறந்ததும் புதிய வர்ணத்தின் நெடி வீசிற்று.   வாசற் கதவு சாளரம், சுவர்கள் எல்லாவற்றிலும் புது வர்ணம்.  கண்ணுக்கு இதமாகவே இருந்தது.  ஆனால வர்ணத்தின் நெடியை என்னால தாங்க இயலவில்லை.
நீங்கள் இங்கு எத்தனை நாட்களாகத் தங்கியிருக்கிறீர்கள்?

ஆறு மாதமாயிற்று.  முன்னால் சூர்யாவிலிருந்தேன்.  அங்கு எப்போதும் சமையலறையின் புகை வீசும்.  அதற்குப் பயந்தே இங்கு வந்தேன்.  ஆனால் இங்கு வந்தது முதல் என் உடல் நலம் சீராக இல்லை.  இங்கேயும் ஆர்ய வைத்தியசாலையின் பிரிவு இருக்கிறது.  விஸ்வாம்பரன் நல்ல மருத்துவரே.

 நிறைய ஆசவம், கிழாயம் (கஷாயம்) எல்லாம் தருகிறார்.  என்றாலும் . . .
உங்களுக்கு நான் மேற்கெண்டிருக்கும் மருத்துவமுறையில் நம்பிக்கையிருந்தால் என் இல்லத்திற்கு வரலாம்.  என் பெயரட்டையை அவரிடம் கொடுக்கிறேன்.

மறுநாள் அனிருத்தன் என் இருப்பிடத்திற்கு வந்தார்.
செரிமானம் சீராக இல்லை.  சரியாக மலம் கழிவதும் இல்லை.  எவ்வளவு முயற்சி செய்தாலும் அடிப்பகுதியில் தங்கி விடுகிறது.  உங்களுக்குத்தான் தெரியுமே.  வெளிப்போக்கு சரியாக இல்லாவிட்டால் அதன் நஞ்சு பல தீய விளைவுகளை உண்டாக்கும்.  தலைவலி, வயிற்றில் இனம் புரியாத உளைச்சல்.  சில சமயம் வயிற்றுப் பகுதி முதுகில் சென்று ஒட்டிக் கொள்கிறது.  இவ்வளவுக்கும் நான் உணவில் கீரை, பழங்கள், மோர் எல்லாம் சேர்த்துக் கொள்ளுகிறேன்.

நான் அவருடைய நாவைப் பரிசோதித்தேன்.  இலேசான வெள்ளை மெழுகு படிந்திருந்தது.  நாடித்துடிப்பில் கோளாறு இல்லை.

இன்னொரு முக்கியமான தகவல்.  கை விரல்கள் மரத்து விடுகிறது.

 முகத்திலும் சில சமயம் இவ்வாறு ஏற்படுகிறது.
நான் வயலின் வாசிப்பது உண்டு.  திடீரென்று விரல்கள் இயங்க மறுக்கின்றன.  ஒரு பொருளைக் கையிலெடுத்தால் அது கீழே நழுவி விடுகிறது.

அனிருத்தனின் முகத் தோற்றம் பரிதாபகரமாக இருந்தது.
இந்தக் கோளாறுகள் எல்லாம் எத்தனை நாட்களாக உள்ளது?
ஆறு மாதத்திற்கும் அதிகம்.  இன்னும் சொல்லப் போனால் நான் இடம் மாறியதிலிருந்தே இவை எல்லாம் என்னைப் பாதிக்கின்றன.
என் ஐயப்பாடு உறுதி ஆயிற்று.  தயவு செய்து நீங்கள் இருப்பிடத்தை மாற்றுங்கள்.  அதற்குப் பிறகு என்னிடம் வர வேண்டும்.
அடுத்து அவர் வந்தபோது உற்சாகத்தடன் காணப்பட்டார்.  தற்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள்?
ராமநாதன் அப்பார்ட்மெண்ட்ஸ்.  அதிக சந்தடியில்லை.  காற்றோட்டமாகவும் உள்ளது.
இங்கேயும் கனமான பெய்ன்ட் அடித்திருக்கிறீர்களா?

அவர் சிரித்தார்.  நீங்கள் உடனடியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.  அந்த டபுள் கோட் வர்ணம்தான் என்னைப் பாதித்திருக்கிறது.  என் பழைய கோளாறுகள் இன்னும் இருக்கின்றன என்றாலும் தீவிரம் குறைந்துள்ளது.
Image result for lead paint

அன்பர் அனிருத்தனின் நாவில் நான் இட்டது இரண்டு காரீய(lead-plumbum mettalicum) மாத்திரைகள்ள்  வீரியம் முப்பது.  அவரிடம் சில சீனிப் பொட்டலங்களைக் கொடுத்தேன்.  அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம் அவருடைய கையைக் குலுக்கினேன்.
அனிருத்தன் விடை பெற்றுக் கொண்டார்.

2.
காரீயம் என்ற இந்தக் கனிமப் பொருள் மண்ணை அகழ்ந்து எடுக்கப்படுகிறது.  மலேசியாவில் பல பகுதிகளில் காணப்படுகிறது. மின் சேகரிப்புக் கலன்கள், வர்ணம் செய்யும் தொழில், அச்சுத் தொழில் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதிலிருந்தே இது மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு எத்தகைய ஊறு விளைவிக்கும் பொருள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தாவரம், கனிமம், விலங்கினம் ஆகியவற்றிலிருந்து ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.  இந்த மருத்துவ முறையின் சிறப்பு, அவை அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்டவை.  விளக்கமாகச் சொல்லப் புகுந்தால், இந்த ஒவ்வொரு மருந்தும்,  ஆரோக்கியமுள்ள மனிதருக்கு (இதில் பெண்களும் அடக்கம்) அளிக்கப்பட்டு அதன் விளைவு ஆராயப்படுகிறது.  பிறகு மனித குலத்தின் நன்மைக்காக இவை பதிவு செய்யப்படுகின்றன.  இந்தக் கலை வளர்ந்து கொண்டே போகிறது.  இதுவரை எந்த மருந்தும் பயனற்றது என்றோ, தீங்கு விளைவிப்பது என்றோ விலக்கப்படவில்லை என்பதே இதன் சிறப்பு.  ஃபிரான்சு நாட்டில் முப்பத்தேழு விழுக்காடு மக்கள் ஹோமியோபதி மருந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.  இரு வகைக் கடைகளும் அடுத்தடுத்து செயல்படுகின்றன.

மேதை ஹானிமன் இருநூறு  மருந்துகளை மெய்ப்பித்து அவற்றின் பலன்களை எழுதி வைத்துள்ளார்.  அவற்றில் காரீயம் ஒன்று.  ஆலனின் மருத்துவ அகராதியிலும், ஹார்ட்லாண்ட், டிரிங்க்ஸ் ஆகியோர் வரைந்த விவரமான நூற்களிலும் அந்த மருந்தின் பயன்கள் விவரிக்கப்படுகின்றன.
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்களை மீண்டும் ஓர்ந்து கொள்ளுவது நலம்.

உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலுமே மருத்துவ ஆற்றல் நிறைந்துள்ளது.
குறிகளை ஒத்து ஏற்கப்பட்ட மருந்துகள் ஓர் உயிருக்கு அதிக அளவில் தரப்பட்டால், அது நோய் வாய்ப்படும். காரீயம் (ப்ளம்பம் மெட்டாலிக்கம்) தசைகளையும் அவற்றின் கட்டுமானப் பொருட்களையும் சுருங்கும்படி செய்யும்.  வயிற்றுப் பகுதியின் தசைகளையும் இறுக்கி விடும்.  விளைவு?  கடுமையான மலச்சிக்கல்.  சிறுகுடலின் தசை நார்களையும் இது குறுக்கி விடும்.  பொறுக்க இயலாத வயிற்று நோவு.  அது எல்லாத் திசைகளிலும் பரவும்  மணிக்கட்டில் உள்ள தசை நார்களையும் இது செயலிழக்கச் செய்து விடும்.

ஹோமியோபதி மருத்துவ விளைவின் மொத்த உருவமாக அனிருத்தன் காணப்பட்டார்.  அவருடைய அறையில் பூசப்பட்டிருந்த வர்ணங்களில் காரீயம் கலந்திருந்தது.  அதன் விளைவாகவே அனிருத்தனின் நோய் அதிகமாயிற்று என்றே என் உள்மனம் கூறியது.  அதனாலேயே அவரை இடம் மாறச் செய்தேன்.  தொடர்ந்து அவருக்குக் காரீயத்தை மருந்தாகக் கொடுத்தேன்.

குறிகளைக் கவனித்து ஏற்ற மருந்துகளைக் கொடுத்தால் நோயுற்றவர் சீரடைந்துதானே ஆக வேண்டும்?

நோயாளியின் உடலில் எண்ணெய் வடியும்.  பளபளப்பாக இருக்கும்.  ஈறுகளின் நிறம் நீலம்.  வாயில் இனிப்புச் சுவை.  நிறைய எச்சில் ஊறும்.  வாயில ஏற்படும் சுவை மாற்றங்கள் இந்த மருத்துவ முறையின் சிறப்புக் குறியாக அமைவது கண்கூடு.  சுவையை மட்டும் கேட்டறிந்து பலருக்கு ஏற்ற மருந்தை அளித்துப் பயன் கண்டிருக்கிறேன்.  எந்தக் குறி பற்றிய தகவலையும் ஒரு மருத்துவன் புறக்கணிக்கக் கூடாது.  மலமே இளகாது.  அதை வெளியேற்ற முக்கும்போது நோயுற்றவரின் கண்களில் நீர் துளிர்க்கும்.  குதத்தின் இறுதிப் பகுதியில் ஒரு கயிறு கொண்டு இழுத்து பெருங்குடலில் இணைப்பது போல ஒரு நோவு.  வெளிப்படும் மலம் சிறு சிறு துண்டுகளாக கரு நிறமாக இருக்கும்.  மலம் கழிக்கும் போதெல்லாம் சதையைப் பிய்த்துக் கொண்டு வரும் வலி
.
பொதுவாக மலத்தை இளக்க கீரை, பழங்கள், சுத்தமான குளிர்ந்த நீர் ஆகியவை துணை புரியும்.  ஆனால் இந்த நோயாளியிடம் இவை எதுவும் பயன் தரா.  காரீய மாத்திரை மட்டுமே அவனுடைய மலச்சிக்கலைப் போக்க உதவும்.

தசை நார்களை இறுக்கும் தன்மையுடைய அலுமினியம், அபினி, படிகாரம் ஆகியவை இதன் தொடர் மருந்துகள்.  இது எனது அனுபவம்.
ஒரு சுவையான நிகழ்ச்சி என்னுடைய நினைவுக்கு வருகிறது.  அவர் வானொலியில் செய்தி வாசிப்பவர்.  ஆகாசவாணி, செய்திகள் . . வாசிப்பவர் . . . என்று தமது பெயரை அறிவிப்பார்.  மற்றவை அனைத்தும் எழுதியிருப்பதைப் படிப்பது மட்டுமே.

ஒருமுறை மிகுந்த கவலையுடன் என்னை அணுகினார்.  வாசிப்பவர் என்ற பெயருக்கு அடுத்ததாக என் பெயரை அறிவிக்க வேண்டும்.  ஆனால் என்னுடைய பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது.  பல அறிமுகமான நண்பர்களின் பெயர்கள் உதடு வரையி வந்து விடுகின்றன.  அடக்கிக் கொள்கிறேன் என்று துயரம் கப்பும் குரலில் கூறினார்.
கவலைப்படாதீர்கள் நண்பரே, சரியாகி விடும் என்று ஆறுதல் கூறினேன்.  தமது பெயரையும் அறிவிப்பில் எழுதி வைத்துக் கொள்ளும்படி பரிவுரை செய்தேன்.  அவர் அவ்வாறே செய்து வந்தார்.

தமது நினைவாற்றல் குன்றி வருகிறதே என்ற கவலை அவரை வாட்டிற்று.  படிப்பதிலே தற்போது சிரத்தையில்லை.  எல்லாம் மறந்து போய்விடுகிறது என்று கூறி வருந்துவார்.

எனக்கும் அது விளங்கத்தான் இல்லை.  ஒரு முறை அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன்.  அவர் என்னைத் தமது தனியறைக்கு அழைத்துச் சென்றார்.  அலமாரி நிறையப் புத்தகங்கள்.  அழகிய ஓவியங்களும் இருந்தன.  மொத்தத்தில் இனிய சூழ்நிலை  திடீரென்று மின்தடை இருட்டு.  அடுத்த நொடியே ஒளி வந்தது.  ஆனால் இது அவசர ஒளி விளக்கின் (EMERGENCY LIGHT) விளைவு என்று அறிந்து கொண்டேன்.  அறையின் எல்லா மூலைகளிலும் அந்த விளக்குகள் இருந்தன.  இந்த ஊர்ப் பகுதியில் இது ஒரு கொடுமை.  அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.  அதைத் தவிர்க்கவே இவைகளை வைத்திருக்கிறேன்.  இவற்றிற்கான மின்கலன் செலவும் அதிகம்.  அவர் கூறினார்.

அவர் வைத்திருந்த மின் விளக்குகளையும் பாட்டரிகளையும் நோக்கினேன்.  இரண்டுமே கந்தக அமிலத்தில் அமுக்கி வைக்கப்பட்ட காரீயத் தகடுகள் ( LEAD ACID CELLS).
Image result for lead battery cell
மறுநாள் அவர் என்னைக் காண வந்தபோது அந்த மினகலன்களை அகற்றும்படி கேட்டுக் கொண்டேன்.
ஆனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதே?
சிறிய மின் வழங்கும் சாதனம் (ஜெனரேட்டர்) வைத்துக் கொள்ளுங்கள்.  அந்த மின்கலப் பெட்டிகள் தாம் உங்கள் நினைவழிவுக்குக் காரணம் என்று கூறினேன்.

 நோய் நாடி அதன் முதல் நாடி என்று கூறிய பெருந்தகை வணக்கத்திற்குரியவர்.

3.
இந்த மருந்தின் முக்கியமான குறி கெட்டிப்படுதல், இறுக்கம், உதிர ஓட்டம், உதிரக்குழல்கள், தசை நார்கள், மலப்போக்கு, சிறுநீர்ப் பாதை எல்லாவற்றிலும் தடை ஏன் எண்ண ஓட்டத்திலேயே இறுக்கம், அதனால்தான் ஒருவனுக்குத் தன் பெயரே மறந்து போகிறது.  உடலின் பகுதிகளை இயக்கவே முடியாத நிலைக்குக் கீல் வாதம், முடக்கு வாதம் என்று பெயர் சொல்வார்கள்.  அதற்கு மருந்து ப்ளம்பம் மெட்டாலிக்கம்.
உடல் சில்லிட்டுப்போய், கை கால்கள் இயங்காமல், விழிகள் குத்திட்ட நிலையில், நாவைக் கூடப் புரட்ட முடியாமல், சில குழந்iகைளுக்கு ஒருநோய் ஏற்படும்.  அத்தகைய மதலையருக்கு வீரியப்படுத்தப்பட்ட இரு காரீய மாத்திரைகள் போதுமானது.  மற்ற மருத்துவ முறையினர் இது எப்படி என்று வியப்படையலாம்.  ஆனால் ஹானிமனின் மருத்துவ முறையினர் இதன் தொடர் மருந்தினைப் பற்றிச் சிந்தனை செய்வார்கள்.  இத்தகைய ஒரு நோய் நிலையினால்தான் சிந்தனை ஓட்டம் தடைப்படுகிறது.  படிப்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள முடிவதில்லை.
இவை அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்ட செயல் முறைகள்.

மருத்துவர் குருன்ஸே இதைக் காமாலை நோய்க்கு நல்ல மருந்து என்கிறார்.  கண்ணின் வெண்விழி, மலம், சிறுநீர் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறிய நிலையில் இந்த மருந்து பேருதவி செய்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  இதற்குச் சில முக்கியமான மெய்ப்பிக்கப்பட்ட குறிகள் உள.  வயிற்றின் பகுதி முதுகுத்தண்டோடு ஒட்டிக் கொள்வது போன்ற உணர்ச்சி.  மேலும் கையில் சுமந்து செல்லும் பொருளைத் தன் வசமின்றி நழுவ விடுவதாகும்.  ஈறுப் பகுதியில் ஒரு நீல நிறம் இருக்கும்.

செயலற்ற நிலை என்பது மட்டுமின்றி, உடலின் சில பகுதிகளில் பொறுக்க இயலாத நோவு, எரிச்சல், குடைச்சல் ஆகியவை உணரப்படும்.  அந்த இடத்தைத் தொடவே இயலாத ஒரு விசித்திர நிலை.  இந்த விவரம் மருத்துவர் ஆலனின் பேரகராதியில் காணக் கிடைக்கிறது.

சிறுகுடலின் இறுதிப் பகுதி பெருங்குடலோடு இணையும் இடத்தில் வீக்கம் ஏற்பட்டு பொறுக்க முடியாத வேதனை தரும் நிலையை டிபிலிடிஸ் (DIBILITIS) என்று குறிப்பிடுவார்கள்.  இந்த நோய் ப்ளம்பம் மெட்டாலிக்கத்திற்குக் கட்டுபடும் என்று மருத்துவர் ராவ் (RAUE) எழுதுகிறார்.

இரண்டு வயதுப் பெண் குழந்தையை கோவில்பட்டியிலிருந்து ஒரு மருத்துவர் என்னிடம் அழைத்து வந்தார்.  இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை அதன் உடல் அதிர்ந்தது.  வசமிழந்து போயிற்று.  இவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது.  மேலும் விவரங்களைக் கேட்டறிந்தபோது அதற்குக் கடுமையான மலச்சிக்கல் இருந்ததும் தெரிய வந்தது.  சிறுநீர் சரியாகப் பிரியவில்லை.
அந்தக் குழந்தைக்கு நான் பரிந்துரை செய்த மருந்துகள் இரண்டு.  முதலாவது ப்ளம்பம் மெட்டாலிக்கம்.  வாரம் ஒரு முறை.  வீரியம் 30.  ஆர்ட்டிமீசியா வல்காரிஸ் (தவனம்) ஆறாவது வீரியத்தில் ஒரு நாளைக்கு இருமுறை.  ஒரே மாதத்தில் குழந்தை சீரடைந்து விட்டது.  காரீயத்திற்கு தவனம் தொடர் மருந்து என்று எந்தப் புத்தகத்திலும் எழுதப்படவில்லை.  (எனக்குத் தெரிந்த வரையில்) ஆனால் குறிகள் ஒத்திருந்ததால் கல்கேரியாவுக்குப் பிறகும் நான் கந்தகத்தைத் தருவேன் என்று மருத்துவர் நாஷ் குறிப்பிடுகிறார்.  அவருடைய துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.

பெண்களுக்கு இது ஓர் அருமருந்து  இருபத்தைந்து வயது மங்கை ஒருத்தி என் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தாள்.  நோயாளிகளைக் கவனித்துக் குறிப்பெடுக்கும்வேளையில் இடையிடையே நான் காத்திருப்பவர்களையும் நோக்குவேன்.  இது என் ஆசானின் அறிவுரை.  அவள் இரண்டு நிமிஷங்களுக்கொருமுறை கொட்டாவி விட்டு விரலைச் சொடுக்கினாள் (இன்ஷா அல்லாஹ்).

அந்தப் பெண்ணின் முறை வந்தது.  குழந்தை பிறந்த பிறகு அவளுடைய மார்பகம் இறுகிக் கட்டியாகிவிட்டது.  வீக்கம், வலி, பெண்ணுறுப்புக்கு அருகில் விவரிக்க இயலாத வேதனை.  அந்த மங்கைக்கு மலச்சிக்கலும் இருந்தது.  காரீய மத்திரைகள் இரண்டு அந்த மங்கையைப் பக்கவிளைவின்றிக் குணப்படுத்திவிட்டது.

ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி.  அன்பர் சேலத்தைச் சேர்ந்தவர்.  அவருடைய வலது கால் கட்டை விரல் வீங்கியிருந்தது.  விரல் முழுவதுமே கல்லைப் போல் கெட்டியாகியிருந்தது.  வலி இல்லை.  உணர்ச்சி இருந்தது.  விரல் நுனியில் நெல் முனை அளவு தொளை.  முதல் தடவை மருந்து பெற்றுக் கொண்டு சென்ற பிறகு தொடர் மருந்துகளை அஞ்சல் மூலம் பெற்றுக் கொண்டிருந்தார்.  மூன்று மாதங்கள் கழிந்த பிறகும் எத்தகைய மாற்றமும் இல்லை.  அவ்வப்போது தொளை மூலம் ஊன் நீர் வெளிப்படும்.
இத்தகைய தோல் தடிப்பை கொலோஸிடீஸ் (COLLOSITIES) என்று கூறுவார்கள்.   ஏற்ற மருந்துகளையும் இடையூடாக லூட்டிகத்தையும் கொடுத்தால் நிலைமை சீராகி விடும்.  இவரிடம் நான் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.   உண்மையைக் கூற வேண்டுமானால் நான் நொந்து போனேன்  என்றாலும் முயற்சியைக் கைவிடவில்லை.   தொடர்ந்து உழைப்பு ஆலன், லிப்பே, ஃபாரிங்டன், பௌபிஸ்டர் எவரையும் விட்டு வைக்கவில்லை.

அன்பருடைய மருத்துவக் குறிப்பைப் புரட்டினேன்.  ஏனோ அதில் அவருடைய தொழில்முறை பற்றி வரைய மறந்து விட்டேன்.  தொழில் முறைக்கேற்ப மருந்தும் மாறுபடும்.  குறிகள் ஒரே மாதிரி இருந்தாலும், சலவைத் தொழிலாளிக்கும், கருமானுக்கும் ஒரே மருந்து பயன் தராது.
அவர் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.  இது புத்தாண்டு தொடக்கம்.  அச்சு வேலை மிகுதி.  அதனால் வேலைப்பளு அதிகம்.(அச்சு மையில் காரீயம் பயன்படுகிறது)
Image result for lead printing press
என் மூளையில் மின்னல் அடித்தது.  கெண்டின் களஞ்சியத்தைப் புரட்டிப் பார்த்தேன்.  பயனில்லை.  அவர் தமது பேரகராதியை விளக்கிப் பல பேரூரைகள் ஆற்றியிருக்கிறார்.  காரீயத்தைப் பற்றியும் எழுதுகிறார்.  (பக். 647) தோலின் திரண்மத்தின் சாவு, கை, கால்களின் உடற்கூறு அழிவு ஆகியவை ஏற்படும்.  கால் விரல்களின் முதல் கணுவில் வீக்கம், சதைத் திரட்சி, அதன் மூலம் தோல் தடிக்கும்.

எனக்கு இவ்வளவு போதும்,  அன்பருக்கு நான் அளித்த மருந்து ப்ளம்பம் மெட்டாலிக்கம் முப்பது.  வாரம் ஒரு முறை.  இரண்டு வாரங்களில் ஊன் கசிவு நின்றது.  அவரால் விரலை வளைக்க முடிந்தது.  மெள்ள மெள்ள உணர்ச்சி திரும்பியது.  அன்பர் உற்சாகத்தடன் எழுதியிருந்தார்.  ப்ளம்பம் மெட்டாலிக்கத்திற்குத் தொடர் மருந்து ஸைலீஷியா ன்று யாரும் குறிப்பிடவில்லை.  ஆனால் அது மூன்று மியாஸங்களையும் கண்டிக்கும் என்பது என் அனுபவ அறிவு.  அவருக்கு இறுதியாகக் கொடுத்த தொடர் மருந்து அந்த மண் துகள்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக