1
காலை மணி 8.57 அன்பர்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.
அண்ணே நீங்க எந்த ஊரிலிருந்து வாரீக?
வடக்கே உடையார்பாளையம்
மருத்துவரை எதுக்காகப் பார்க் வந்தீங்க?
கொஞ்ச நாளாய்க் கண் உபாதை.
அதுக்குக் கண் வைத்தியரையல்ல பாக்கனும். இங்ஙனெ ஏன் வந்தீங்க?
அய்யா எல்லாத்துக்கும் மருந்து கொடுப்பாகளாம்.
அதெப்படி?
எங்க ஊருக்குக் கிழக்காலேஎன் சித்தப்பாரு கடை வைச்சிருக்காரு. அவருக்கு மூல வியாதி அதுக்காக இவரைப் பார்க்க வந்தாக. அவருக்குக் கண் நோயும் இருந்துச்சு. டாக்டர் அய்யா மருந்து கொடுத்திலே இரண்டுமே சரியாயிடுச்சாம்.
சரிதான், அப்படித்தான் பல பேர் பேசிக்கிறாங்க. எங்க ஊரிலிருந்து இருமலுக்காக இவரிடம் வந்தாருங்க, அவருக்கு முடக்கு வாதமும் இருந்திச்சு. இந்த மருந்திலேயே இப்போது நல்லா குணம். இருமல், வாதம் இரண்டுமே குணம்.
நான் என் அறைக்குத் திரும்பவும் சென்றேன். அவர்களுடைய உரையாடலைத் தடை செய்ய விரும்பாமல்.
ஐந்து நிமிஷம் பொறுத்து நான் அன்பர்க்ளைப் பார்க்கக் கூப்பிடவும், சற்று முன் உரக்கப் பேசிக் கொண்டிருந்த அன்பரே முதலாவதாக அமைந்தார்.
அவருடைய விவரங்களைக் குறித்துக் கொண்டேன். அவருக்குக் கண் உபாதை. வலது கண் சிவந்து நீர் வடிந்தது. வீக்கமும் இருந்தது. அவர் பேசினார். இந்தச் சோத்துக் கண் தாங்க தொந்தரவு கொடுத்தது.
நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். அவர்களுடைய வழக்கில் வலதுபுறம் அனைத்துமே சோற்றை முதலாவதாகக் கொண்டிருக்கும். வட நாட்டிலிருந்து வந்த புதிதில் இந்தச் சொல் வழக்கு எனக்கு புரியத்தான் இல்லை.
உங்கள் ஊரிலே கண் வைத்தியர் இருக்கிறார் அல்லவா? இருக்கிறாக, அவர் கண்ணுக்குக் கலிக்கம் கொடுத்தாரு. மருந்து மாத்திரை எல்லாம் நிறையக் கொடுத்தாருங்க. கன்னத்திலேயே ஊசி போட்டாரு. அவர் உதட்டைப் பிதுக்கினார்.
டாக்டர் நாஷ் வெகுண்டு பேசுகிறார். இந்த அலோபதி மருத்துவர்கள் நச்சுப் பொருள்களை மருந்தாகக் கொடுக்காமல் இருந்தால் நமதுமுறை மருத்துவர்களுக்கே வேலையிராது. கடுமையான சொற்கள் என்றாலும் உண்மை.
உறுப்புகளுக்கு மருந்து கொடுக்காமல் முழு மனிதனுக்கும் மருந்து தர இவர்கள் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?
நோயாளியின் பெயர் சண்முகம். கடந்த ஆறு மாதங்களாக அவருக்குக் கண்ணோய். வலது கண் பார்வை குறைந்துள்ளது. பொருள்கள் பாதியாகத்தான் தெரிகின்றது.
நான் சிறிது யோசித்துப் பார்க்கிறேன். என் ஆசான் கொடுத்த குறிப்பில் அரைப்பார்வைக்கு லித்தியம் கார்பானிக்கம், லைக்கோபோடியம், ஆரம் மெட்டாலிக்கம் ஆகியவற்றைப் பரிந்துரை செய்திருந்தனர். சண்முகம் கொஞ்சம் நிதானித்துப் பதில் சொல்லுங்கள். பீச்சக் கண்ணைக் கையால் மூடிக் கொள். இந்தப் படத்தைப் பார். எப்படித் தெரிகிகறது. அது ஒரு மரத்தின் ஓவியம், அழகுணர்ச்சிகளால் இன்று குவிந்த பல தாமரை மலர்கள்.
பூ, இலை எல்லாம் நல்லா தெரியுதுங்க.
சரி, இப்போது கையை எடுத்துவிடு. என்ன பார்க்கிறாய்?
மரம், கிளை அதன் மேலே பறவைக் கூடு.
சரி. உன்னிடத்தில் போய் குந்து. நான் குறிப்பேட்டில் எழுதுகிறேன். ஆரம் மெட்டாலிக்கம் ஆறு தொடர்ந்து இரு நாட்களுக்குப் பிறகு முப்பது இறுதியாக லூட்டிகம் 200.
அன்பர் சண்முகத்திற்கு நெடுநாட்களாகச் சளித் தொந்தரவு இருந்தது. வற்றாத சளி, மூக்கும் நிறையப் பொருக்குத் தட்டும்.
ஒரு மாதம் பொறுத்து வந்து நன்பர் கூறினார். எல்லாமே சரியா போச்சுங்க.
இந்த மருந்தை அதிகம் பேர் பயன்படுத்துவபதில்லை. அறியாமைதான் அதற்குக் காரணம். மூக்கிலிருந்து கம்பியைப் போல் சளி ஒழுகும். நோயாளிகளுக்கு காலிபைக்போமனேட், காந்தாரிஸ் அனைத்தையும் கொடுத்துப் பார்த்துவிட்டு, இந்த மருந்தை ஆறாவது வீரியத்திலிருந்து ஏணி முறை கொடுத்துக் குணப்படுத்தியிருந்தேன்.
மூன்றாவது மியாஸத்திற்கு ஏற்ற மருந்துகள் என்று மெர்க்யூரியசையும், ஃப்ளோரிக் அமிலத்தையும் பல நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நோயாளியின் மியாஸம் உறுதி செய்யப்பட்டுவிட்டால் இது ஆறாவது வீரியத்திலேயே சிறப்பாக உதவுகிறது.
இந்த மியாஸத்தைச் சேர்ந்தவரின் உள இயல்பு எப்படி இருக்கும்? என் ஆசான் தந்த குறிப்புகளிலிருக்கும் சில தகவல்கள் இங்கு எல்லோருக்கும் பயன் தரும்.
அவன் ஒரு அழுமூஞ்சி, சிடுமூஞ்சி, எல்லா நிகழ்ச்சிகளிலும் குறைபாடுகள் இருட்டான பகுதிகள் தாம் அவனுக்குத் தெரியும். எந்தப் பொறுப்பையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவற்றிலிருந்து நழுவி விடுவான். ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இராது. மாணவனாக இருந்தால் கணிதப் பாடமே மூளையில் ஏறாது. வற்புறுத்திக் கற்பித்தால் பள்ளியிலிருந்து ஓடி விடுவான். எந்தப் பாடத்தையுமே அவனால் சீராக நினைவில் கொள்ள முடியாது. புரிந்து கொள்ளவும் சிரமப்படுவான்.
என் ஆசான் கூறுவார் இத்தகைகய பிள்ளைகளை அடித்துமூ, திட்டியும் துன்புறுத்துவதைவிட அவர்களுக்கேற்ற மூன்றாவது மியாச மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து விட்டால் எவ்வளவோ நல்ல மாணவர்களை உருவாக்கலாமே.
ஹைதராபாதில் ஒரு `யதிம்கானா’ (அனாதை இல்லம்) இருந்தது. அங்கிருந்த பல குழந்தைகளுக்கு அவர் ஏற்ற மருந்துகள் கொடுத்துச் சீராக்கியதை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய பெருந்தகையார்கள் லட்சத்திற்கு ஒருவர் இருந்தால் கூடப் போதும்.
ஒழுக்கம் குறைந்த பல குழந்தைகளை அவர் குறை கூட மாட்டார். அது மூன்றாவது மியாசம், தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் குணப்படுத்தலாம் என்று பரிந்துரைப்பார். அவ்வாறே மெய்ப்பித்தும் காட்டினார்.
பல நடுவர்கள், வழக்கறிஞர்கள் தங்கள் மக்களின் குறைபாட்டை நீக்குவதற்காக அவரை நாடுவதைக் கண்டிருக்கிறேன்.
2.
ஆரம் என்ற சொல்லுக்குப் பொன் என்பது பொருளாகும். இந்த விலை மதிப்புமிக்க உலோகத்தை உறைத்து மருந்தாக்கலாம் என்று கண்டுபிடித்தவர் மேதை ஹானிமன். அவருடைய மெட்டீரியா மெடிகா, நாட்பட்ட நோய்கள் ஆகிய நூல்களில் இது பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.
மனிதன் மூவகை ஆசைகளைத் துறந்தால் மட்டுமே பெருவழி ஏகலாம் என்பது மேலோர் கருத்து. அவை முறையே மண், பெண், பொன் ஆகியவை. இவற்றில் பொன் மிகவும் அரியதோர் உலோகம். ஒரு மனிதனின் சமுதாய மதிப்பும், ஒரு நாட்டின் ஆதிக்க உயர்வும் இதனால் காட்டப்படும். இந்தப் பொன் சில இடங்களில் மண்ணிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. வேதியியல் முறையில் மட்டமான உலோகங்களைப் பொன்னாக்கும் முறையைச் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மனித மனத்தின் ஆசைக்கு எல்லையே கிடையாது என்ற உண்மையை விளக்கப் புகுந்த தாயுமானவ அடிகள்.
`. . . அனகேசன் நிகராக ஐம்பொன் மிக வைத்த பேரும் நேசித்த இரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் . . .’ என்று வருந்துகிறார். உலகத்திலேயே பொன் வளம் மிகுந்த நாடு தென்னாப்பிரிக்கா. அதனால்தான் வெள்ளையர்கள் அதை நெடுங்காலம் தம் வசம் வைத்திருந்தனர்.
. . . மனிதன் மிகவும் நேசிப்பது தன்னுயிரை. அதற்கு ஊறு நிகழ்ந்துவிடக் கூடாது என்றே ஒவ்வொருவனும் கருதுகிறான் என்றாலும் இந்த மருந்துக்கேற்றவரின் மனக்குறி என்ன தெரியுமா? அவன் உளைச்சல் மிகுந்து தன்னுயிரையே போக்கிக் கொள்ள முயற்சிப்பான் என்பதாகும்.
உலகில் மிக விலை உயர்ந்த பொருள், மிகவும் உயர்வாக நேசிக்கும் உயிரையே போக்கிக் கொள்ளும் அளவுக்கு வல்லமை படைத்திருப்பது பெரு விந்தை என்று மருத்துவ மேதைகள் குறிப்பிடுகிறார்கள். இன்னொரு விந்தை பெண்ணுறவு நோயினால் துயருறும் பாலுறவு நோய்களுக்கும் இது அருமருந்து என்பதுதான்.
இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்டவை. பரமசத்தியங்கள். பொன்னுடன் குளோரைடு உப்பைக் கலந்தும் ஒரு மருந்து தயாரித்திருக்கிறார் ஹானிமன். அது பெண்ணின் பாலுறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கும் மாற்று. எனவே இது பெண்கள் மருந்து என்று கூடச் சொல்லலாம்.
உடலுக்கு உறுதிப்பாட்டையும், கட்டுமானத்தையும் தருவது எலும்பு. அந்த எலும்புகளில் ஏற்படும் நசிவை இந்த மருந்து தடுக்கிறது. தொழு நோயர்களின் மூக்கைக் கவனித்ததுண்டா? பெரும்பாலும் அது தட்டையாகவே இருக்கும். அந்த எலும்பே நைந்து போயிருக்கும். பாலுறவு நோய்களுக்கும், தொழு நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று வலியுறுத்துவது சித்த மருத்துவம்.
`முற்றிய வெட்டை குட்டம்’ (வெட்டை-மேக வெட்டை-விந்துக் கசிவு) இதை கொனேரியா என்று அழைப்பார்கள்.
நாவுக் குழிக்கும், தொண்டைக்கும் இடையில் தொங்கு நிலையில் ஓர் எலும்பு உள்ளது. அதைப் பாலடைன் (ஞயடயவiநே க்ஷடிநே) என்று அழைப்பார்கள். அது ஊறுபட்டால் மூச்சுத் திணறும். உணவு உட்செல்லாது. அந்தப் பகுதி முழுவதுமே வீங்கி வாயிலிருந்து துர்நாற்றம் வீசும்.
எந்தப் `பாதுகாப்பு வளையமும்’ அவனை அந்த நிலையிலிருந்து நிவாரணம் தர முடியாது. வாய் துர்நாற்றம் என்பது பற்களின் இடுக்கில் புதைந்து கிடக்கும் பிசிறுகளினால் மட்டுசூம ஏற்படுவது அன்று. வீங்கி அழுதிகய எலும்புகளின் விளைவு அது. இந்த நிலைக்கு மருந்து ஆரம் என்பதை நிரூபித்தார் ஹானிமன்.
சுரப்பிகள் வீக்கத்திற்குக் காரணமே மூன்றாவது மியாசம் என்றொரு அடிப்படைக் கருத்துண்டு. அது ஆணின் விதையாக இருக்கலாம் அல்லது பெண்ணின் மார்பகமாக இருப்பதும் சாத்தியம். கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டுப் பல தொல்லைகள் ஏற்படக்கூடும். இந்த வீக்கங்களைக் குறைத்து நிவாரணமளிப்பது தங்கம் என்ற உலோகம்.
எலும்புகளின் நசிவுக்கு மட்டுமின்றி அவற்றின் தேவையற்ற வளர்ச்சி பல சமயங்களில் தொடை, இடுப்பு, விலா தோள்பட்டை ஆகிய இடங்களிலுள்ள எலும்புகள் கிளைத்துக் கொள்ளும். விலாவிலுள்ள கிளையை அறுத்தெடுத்தால் குதிகாலில் எழும்பும். அறுவை சிகிச்சை மூல காரணத்தை அறுத்தெடுக்காததே அதன் வளர்ச்சியைத் தடுத்துத் தீய்க்க ஹோமியோபதி தானே முன் வர வேண்டியிருக்கிறது?
மூன்றாவது மியாசத்திற்கு ஆட்பட்டவர்களின் உடலில் பல உதிரத் திரட்சிகள் ஏற்படும். பெருங்கட்டியாகவும் உருவெடுக்கும். பொறுக்க முடியாத நோவு ஏற்படும். இது எங்கே வேண்டுமானாலும் புறப்படலாம். காதுக்குப் பின்னால், தொண்டையில் அக்குளில், தொடையிடுக்கில், சிவந்து வீங்கிப் பொறுக்க இயலாது தொல்லை தரும். `ஹைபரேமியோ அக்யூட்’ என்று பெயர் கூறிப் பயமுறுத்துவார்கள். தங்கத்தின் ஆறாவது வீரியத்தைப் பயன்படுத்தி இவற்றைக் கரைத்து விடுவார் என் ஆசான். அந்தக் கட்டி மலம், சிறுநீர், சளி ஆகியவை மூலம் மெள்ள மெள்ள வெளிப்பட்டுவிடும். என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் என்று பாவேந்தரைப் போல வியந்து பாராட்டியிருக்கிறேன்.
இந்த மூன்றாவது மியாசத்தைத் தணிக்கும் ஆற்றலுடையது பாதரசம். இதை இரதம் என்று கூறும் சித்த மருத்துவம். சாதாரண உலோகங்களைப் பாதரசத்துடன் கலந்து தீயில் புடமிட்டுப் பொன்னாக மாற்றலாம் என்பது அவர்களுடைய கொள்கை. `வெந்தழலில் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்’ என்பது பாடல் வரி. இது ரசவாதம் எனப்படும். ஆக பாதரசம் பிற உலோகங்களைப் பொன்னாக்கும் என்பது ஓர் உண்மை. இந்தப் பொன்னை மருந்தாக ஏற்பவர்களின் உடல் கூற்றுக்குப் பாதரசமும் ஒரு சிறந்த மருந்து.
இதை அதிகமாகப் பயன்படுத்துவதனாலும் உடலில் பல தீய விளைவுகள் ஏற்படக்கூடும் பாதரசத்தின் அபரிமிதமான உபயோகத்தினால் விளையும் தீங்குகளுக்கும் இது ஓர் அருமருந்து என்று போயரிக் (பக்.96), நாஷ் (பக்.291), கெண்ட் (பக் 121) ஆகிய பெருந்தகையர்கள் அனைவருமே குறிப்பிடுகிறார்கள்.
இந்த அளவு பாதரசத்தைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்களே என்று என் ஆசான் மிகவும் வருந்துவார். ஆதனால்தான் பல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்த அன்பர்களை அவர் என்னென்ன மருந்துகளை உட்கொண்டார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பரிவுரை செய்வார்.
3.
மூன்றாவது மியாசத்தினால தாக்கப்படுபவர்களின் சில பொதுக் குறிகளை என் ஆசான் உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறார். அவர்களுடைய குடும்ப வரலாற்றை ஆராய்ந்தோமானால் பெரும்பாலோர் மலடாய் இருப்பார்கள். அடிக்கடி குறைப்பிரசவம், குறைந்த ஆயுள், இதய நோய், மனக்கோளாறு, ஆறாத இரணம், தீராத தடுமன், வெள்ளை, வெட்டை நோய்கள், சுரப்பிகளில் வீக்கம், கட்டிகள் ஆகியவை சில முக்கியமான குறிகள்.
தாம் செய்வதே சரி என்று சாதிக்கும் அரசியல்வாதிகள்,
அராஜகப் போக்குடையவர்கள், அனைவரும் இந்த மியாசத்திற்குட்பட்டவர்களே.
பொதுவாக உலகம் பழிக்கும் செயல்களை வெளிப்படையாகச் செய்யும் இயல்புடையவர்கள் இவர்களே.
சில பெரியக் குடும்பத்துப் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகித் தெருவில் உருளுவார்கள். பெண் பித்துப் பிடித்து அலைவர்கள். ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வரவுக்கு மேல் செலவு செய்வார்கள்.
இத்தகைய போக்குடையவர்களுக்கேற்ற பல நல்ல மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன.
அவற்றின் தலை நாயகம், பாதரசம், ஃப்ளோரிக் அமிலம், ஆரம்மெட்டாலிக்கம், காலி பைக்ரோமனேட், காலி ஐயோடைடு, கிரியோசோட், லாச்சஸிஸ், பைட்டோலக்கா, நைட்ரிக் அமிலம், லூட்டிகம் ஆகியவை. இவைகளில் பெரும்பாலானவை கனிமங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் நலம்.
இந்தப் பொன்னுடன் ஆர்சனிக்கம், ஐயோடம், சோடியம் ஆகியவற்றை முறையான அளவில் கலந்து மருந்தாக்கி அளித்திருக்கிறார்கள். அவற்றுள் ஆரம் ம்யூரியாடிகத்தைப் பெண்களின் மருந்து என்றே கூறுவதுண்டு.
ஒரு நோயாளி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று ஆராய்வது ஒரு தனிக்கலை. அதன் பொருட்டே மருத்துவன் அவர்களைப் பல கேள்விகள் கேட்டு விளக்கம் பெற வேண்டியிருக்கிறது. அவை எல்லாம் தேவையற்றவை என்றோ, ஏளனத்திற்குரியவை என்றோ எண்ணுவது மதியீனம்.
ஒவ்வொர் ஆண்டும் எங்கள் மருத்துவமனையில் டிசம்பர் திங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பெரும்பாலோர் படைப்பிரிவின் அலுவலர்களாக இருப்பார்கள். அந்த மாதம்தான் அவர்களுக்கு ஆண்டின் மருத்துவப் பரிசோதனை இருக்கும்.
பொதுவாக இந்த மாதம் அவர்களுக்குப் பெரும் சோதனைக் காலம். மருத்துவப் பரிசோதனை விரிவானதாக அமைந்திருக்கும். உதிரம், சிறுநீர், உமிழ்நீர், மலம் எல்லாமே சோதிக்கப்படும். படையினரின் மருத்துவமனையில் பல நுண் கருவிகள் உள. அவற்றைச் சீரான முறையில் கையாளத் தெரிந்த நிபுணர்களும் அங்குள்ளனர். எந்தச் சிறு குறைபாடும் அவர்களுடைய பார்வைக்கு வந்துவிடும். தப்பி விட முடியாது.
படையினர்களின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும் உயர் மட்ட அலுவலர்கள் சீரான உடல் நலம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயர் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப் பெறுகிறது. குறைபாடுள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்காது. அவர்களுக்குச் சீரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும். மீண்டும் பரிசோதனையில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்கள் பதவி உயர்வுக்குப் பரிவுரை செய்யப்படுவார்கள். பொதுவாக அலுவலர்கள்.இவற்றைக் கண்டு பதற்றமுறுவார்கள். மிகுந்த உற்சாகத்துடன் நான் இதை வரவேற்பேன்.
இதற்குக் காரணம் அவர்களுடைய அன்றாட நடைமுறை இயல்.
லியோ டால்ஸ்டாய் என்றொரு மாமனிதர் வாழ்ந்தார். உருசிய நாட்டின் புரட்சிக்கு வித்தான கருத்துகளை விதைத்தவர் என்றே அவரைக் குறிப்பிடுவதுண்டு. மிகச் சிறந்த இலக்கியங்களை இவர் படைத்திருக்கிறார். அன்னா கரீனா, போரும் அமைதியும், மீட்சி ஆகியவை மிகச் சிறந்த புதினங்கள். நெஞ்சை அள்ளும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அவர் சில காலம் தரைப்படையில் அலுவலராகப் பணிபுரிந்திருந்கிறார்.
`படையினர் வாழ்வு முறை மனிதனைச் சீரழிக்கிறது’ என்று தமது மீட்சி என்ற புதினத்தில் ஒரு பத்தியைத் துவங்கியிருக்கிறார்.
(Military Life Corrupts) `எந்தச் செய்கைகள் நடைமுறை வாழ்வில் தரக்குறைவானவை என்று சமுதாயத்தில் கருதப்படுகிறதோ அவை அனைத்தும் படையினரிடையே இன்றியமையாதவை’ என்று அவர் ஒளிவு மறைவின்றி எழுதுகிறார்.
இவற்றுள் மதுப்பழக்கம் சிறப்பிடம் பெறுகிறது. இதை அருந்தாதவர்கள் அங்கு அரிதாகவே காணப்படுவார்கள். அது மட்டுமன்று. அவர்கள் உயர் மட்ட வாழ்வுக்கு ( HIGH SOCIAL LIFE) தகுதியற்றவர்கள் என்றே கருதப்படுவார்கள்.
மாபெரும் விருந்துக் களியாட்டங்களில் கையில் பழச்சாற்றுடன், விடிய விடியக் கண் விழிப்பது பெரிய சோதனை.(மது,சூது இவை எனக்கு பிடிக்காது இவற்றை வெறுப்பவன் ஆகவே எனக்கு ஸூஃபி சாமியார் என்றே பெயர்) மதுப்பழக்கம், சீட்டாட்டம், நடனம் ஆகியவை தெரியாதவன், படையில் அலுவலராக இருக்கத் தகுதியில்லாதவன் என்பது பொதுவான கருத்து.
`இந்தியப் படை அலுவலர்களில் மெஸ் பிரிட்டிஷ் அரசின் எல்லைக் கூடாரம்’ என்று வெல்லஸ் ஹாங்கன் எழுதுகிறார். இது முற்றிலும் உண்மை. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, நடனம், இசை, சிறுவிளையாட்டு, தம்போலா (சூதாட்டம்) அனைத்தும் நாம் விடுதலை பெற்று ஐம்பதாண்டுகளுக்குப் பின்னும் புழக்கத்தில் உள்ளன. இறுக்கத் தளர்வு ( RELAXING) நல்லதுதான். ஆனால் வெள்ளையர் மேற்கொண்ட அதே முறைகள் இன்றும் தேவைதானா? போர் முனையில் ஒரு மிடறு சாராயம் அருந்துவதில் தவறில்லை. ஆனால் இனிய சூழல் உள்ள வளாகத்தில் பெண்களின் மத்தியில் இந்தக் கேலிக்கூத்து தேவைதானா?
அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல், அதைப் பின்பற்றி சிறுநீரகம், தொடர்ந்து இருதயம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. அந்தப் பாதிப்பின் அளவு, கடுமை ஆகியவை அந்த ஆண்டின் இறுதியில் மருத்துவப் பரிசோதனையின்போது விளங்கி விடும்.
அதனால்தான் படை அலுவலர்கள் டிசம்பர் மாதத்தைக் கண்டு அஞ்சுவார்கள்.
4.
ஆசானின் முன்பு நாங்கள் மூவர் அமர்ந்திருந்தோம். அந்த நேரத்தில் அன்றைய மருத்துவக் குறிப்புகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு அவர் தமது கருத்தைக் கூறுவது வழக்கம். உயர் அலுவலரின் குறிப்பொன்றைப் படித்துவிட்டு
`இவர் உங்கள் வீட்டிற்கு வந்து மருந்து பெற்றதாகக் கூறினார்’. என் நண்பர் பரமானந்தத்தை நோக்கியவாறு என் ஆசான் கூறினார்.
"ஆமாம். மறுநாள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை என்று தெரிவித்தார் உதிர அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்ற விபரங்களையும் கூறினார். மிகவும் வற்புறுத்தினார், கெஞ்சினார் என்று கூறுவது கூடப் பொருத்தமாக இருக்கும். அதனால் அவருக்கு உதவி செய்தேன்’’ கழிவிரக்கத்துடன் பேசினார் என் நண்பர்.
அவர் மருத்துவப் பரிசோதனையில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் தொடர்ந்து கூறினார்.சோதனைக் கருவிகளை அவர் ஏமாற்றலாம். ஆனால உயிராற்றலை அவர் புறக்கணிக்க முடியுமா? ஆசான் கேட்டார் பரமானந்தம் பதில் ஏதும் கூறவில்லை.
நீங்கள் அவருக்குக் கொடுத்த மருந்துகள் அகோனைட், பெல்லடோனா நான் சொல்வது சரிதானா? என் ஆசான் தொடர்ந்து வினவினார்.
"உண்மைதான். அவர் மிகவும் வற்புறுத்தினார். அதனால்தான் . ." பரமானந்தம் திணறினார்.
டாக்டர் நாஷ், பக்கம் 87 ஆசான் என் முகத்தைப் பார்த்தார். நான் புத்தகத்தைப் பிரித்து அவரிடம் கொடுத்தேன். அவர் அந்தப் பகுதியை நண்பர் பரமானந்தத்திடம் காட்டினார்.
என் ஆசானுக்கு மருத்துவர் நாஷிடம் அதிகம் ஈடுபாடு கிடையாது. அவர் பின்பற்றும் நிபுணர் ஏ. லிப்பே(ADOLPH LIPPE) . NASH IS RASH என்று அவர் கூறுவதுண்டு. எனவே அவரே நாஷை மேற்கோள் காட்டியபோது நான் வியப்படைந்தேன்.
. . . வீக்க நிலைக்கு மாற்றாக மாற்றி மாற்றி அகோனைட்டையும், பெல்லடோனாவையும் தருவதுண்டு. அது மதியீனம் ( SENSELESS) என்று நாஷ் எழுதுகிறார். அடுத்து ஆசான் என் முகத்தைப் பார்த்தார். நான் புரிந்து கொண்டேன்.
குறிப்பேட்டைப் பிரித்தேன். என் ஆசானின் பரிவுரைகள் அதில் இருந்தன. ஒரு நோயாளிக்கு அகோனைட் தான் மருந்து என்று முடிவு செய்துவிட்டால் வேறு எதையும் தராதே. தீவிரமான நோய்களுக்கு இது அருமருந்து. பன்னிரண்டாவது வீரியத்தில் இதை மூன்று மணிக்கு ஒருமுறை தரலாம். (தற்போது எங்கே இருக்கிறது பன்னிரண்டு?) குறிகளின் வேகம் தணிந்ததும் கந்தகத்தை இதன் தொடர் மருந்தாகத் தரலாம். இரண்டும் ஒன்றை ஒன்று பின்பற்றும். ஆர்னிகா, ப்ரையோனியா, இப்பிகாக் ஆகியவையும் பயன் தரும். ஆனால குறிகள் ஒத்திருக்க வேண்டும்.
என் ஆசான் நண்பர் பரமானந்தத்தின் முகத்தை நோக்கினார். அவருக்கு வியர்த்து விட்டிருந்தது. அவர் செருமினார்.
நீங்கள் மருந்து கொடுத்த அன்பர் குழம்பிய மனநிலையில் இருக்கிறார். அவருடைய பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டையிலும், நாசியிலும் வற்றாத சளி. உடலின் பல பகுதிகளில் சிறு சிறு கட்டிகள். நோயின் தாக்கம் இரவில் அதிகமாக உள்ளது. விரை வீக்கத்திற்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு உதிர அழுத்தமும் உள்ளது.. ..
ஆசான் மருத்துவக் குறிப்பேட்டை எங்களிடம் காட்டினார். ஆரம் மெட்டாலிக்கம் 200 தொடர்ந்து லூட்டிகம் 200.
வீரியத்தைக் கண்டு வியப்படையாதீர்கள். 6, 30-ம் உதிர அழுத்தத்தை குறைக்கச் செய்யாது. ஆசான் எழுந்து விடைபெற்றார்.
ஆரம் மெட்டாலிக்கத்திற்கேற்ற நோயாளிகளைத் தட்ப வெட்பம் மிகவும் பாதிக்கும். அவர் திறந்த வெளியையும், குளிர்ந்த காற்றையும் விரும்புவார். குளிர்ச்சியான நீர் அவருடைய கண்களுக்கு இதமளிக்கும் என்றாலும் ஆடைகளை நீக்கினால் அவர் குளிரினால் அவதியுறுவார். எனினும் கதவுகளும், ஜன்னல்களும் திறந்திருப்பதையே அவர் பெரிதும் விரும்புவார். வெப்பமான காற்று அவருடைய மூச்சுக் குழலைப் பெரிதும் பாதிக்கும்.
இந்த மருந்தை உயர்ந்த வீரியத்தில் அளித்துப் பயன் காணாமல் அதை அதிக அளவில் கொடுத்து ஒரு விதை வீக்கத்தை சீர் செய்த விவரத்தை மேதை கெண்ட் தெரிவிக்கிறார். பெருந்தகையர் தமது அனுபவத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் உண்மைக்கு மாறாக எதுவும் பேசுவதில்லை. அதிக அளவு என்பது குறைந்த வீரியம். இந்த விவரத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தசம வீரியத்தில் மருந்துகள் தயாரிப்பதோ, அளிப்பதோ தவறு என்று வாதிக்கும் அன்பர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் சகட்டுமேனிக்கு மருந்து என்பது ஹோமியோபதியில் கிடையாதே. ஒரு மருந்து தசம வீரியத்தில் பலன்தந்தது என்று அனுபவம் மிக்கவர் கூறினால் அதை நாமும் பயன்படுத்துவதில் தவறு ஏதுமில்லை. குறைந்த அளவு வீரியம் நோயாளியின் நலனைப் பாதிக்காது. அதை நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.
மண்ணிலும், பொன்னிலும் மறைந்து நிற்கும் மருத்துவத் தத்துவங்களை ஆராய்ந்து, மெய்ப்பித்து அளித்த மேதையின் தொண்டை எப்படிப் பாராட்டுவது?
அவர்கள் நடந்து காட்டிய வழியைப் பின்பற்றுவது மட்டுமே அது.
*****
மேஜர் தி.சா.இராஜூவின்
ஹோமியோபதி கனிமங்கள்
நூலில் இருந்து
நூலில் இருந்து
முகவரி:
பதிலளிநீக்குT.S.RAJU Homoeopathy Clinic &
Research Centre
Opp ST courier,
Kumbakonam main road
Ayyampettai, tk,
Papanasam, Tamil Nadu - 614201