அழைப்பு மணி ஒலித்தது. என் உதவியாளர் வெளியே செல்லுகிறார். உரையாடல் தெளிவாகக் கேட்கிறது,. அய்யா இந்த நேரத்தில் எவரையும் சந்திக்க மாட்டார்.
மிகவும் கவலைக்கிடமான நோயாளிங்க. கொஞ்சம் தயவு செய்யுங்கள்.
நானே வாசலுக்குப் போகிறேன். இளைஞர் ஒருவர் என்னிடம் பேச முற்படுகிறார். நான் வந்தவர்களை அமர வைக்கிறேன். அங்கு வந்த மூவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகின்றனர்.
யாருக்கு உடம்பு சீராக இல்லை? இது எனது கேள்வி.
அது இவர் தங்கைங்க. ஊர்லே இருக்காங்க. ஒரு கட்டுக் காகிதங்களை அவர் என்னிடம் அளிக்கிறார்.
பெயர் - அமலோற்பவம்
வயது - இருபத்தெட்டு. நோய் விவரம் தரப்பட்டிருந்தது. நோயாளியின் சிறுநீரகம் இயங்கவில்லை. உடனடியாக டயாலிஸிஸ் செய்தாக வேண்டும். தொடர்ந்து மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தேவை.
உமது தங்கை திருமணமானவரா?
ஆமாம் அய்யா, மூன்று குழந்தைகள் உள்ளன. பரிதாபமான குரலில் வேண்டுகோள்.
நான் சிறிது யோசிக்கிறேன். சிறுநீர் பிரிகிறதா?
இல்லை. ஆனால உடலை அசைக்கக் கூட முடியாமல் படுத்திருக்கிறார்.
காய்ச்சல் இருக்கிறதா?
இலலை, உடல் குளிர்ந்துள்ளது. ஒரு வித மயக்க நிலை.
சரி உனடியாக அழைத்து வாருங்ள்.
நண்பர் கூறுகிறார். அய்யா என் தங்கை நகரும் நிலையில் இல்லை. மிகவும் பலவீனமாக இருக்கிறார்.
நண்பரே, சிகிச்சையின் பொருட்டு நான் வெளியில் எவரையும் காணச் செல்வதில்லை. அவரை இங்கு அழைத்து வந்தால் என்னால் இயன்றதைச் செய்கிறேன்.
அய்யா, அந்தக் குழந்தைகளுக்காக இந்த உதவியைச் செய்யுங்கள். எங்களுக்கு உங்களிடம் முழு நம்பிக்க இருக்கிறது.
நான் மீண்டும் இருக்கையில் அமர்கிறேன். யோசனையில் ஆழ்கிறேன். அந்தப் புகழ் பெற்ற நிபுணர்களின் குறிப்பை மீண்டும் புரட்டுகிறேன். செயற்சை சிறுநீர்ப் பிரிவு, மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் பணி, நண்பரே, இன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலை இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். எட்டரை மணிக்கு என்னைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.
காலை ஏழு மணிக்கே கார் வந்து விட்டது.
பயணிக்கும்போது நான் என் ஆசானைப் பற்றி எண்ணுகிறேன். அவரிடம் சிறிய கார் இருந்தது. அதன் மூலம் பல இடங்களுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து மருந்தளிப்பார். அபிட்ஸ் சதுக்கத்தில் நிற்கும் போலீஸ்காரர் குதிகால்களை இணைத்து அவருக்கு வணக்கம் தெரிவிப்பார். காவல் துறையின் தலைவருடைய குழந்தையை அவர் மருந்தளித்துக் காப்பாற்றியிருக்கிறார். நகரத்திலுள்ள போலீஸ்காரர்கள் அனைவரும் என் ஆசானை அறிவார்கள் அவர்களுடைய குடியிருப்பில் கூட ஒரு மருந்தகம் திறந்திருந்தார் என் ஆசான்.
என்னால் எங்கும் நகர முடியாததொரு நிலை. பலதரப்பட்ட பணிகள். எவ்வள முயன்றாலும் ஆசானின் நிலைக்கு என்னால் உயர முடியவில்லை.
. . . . . முன்னறையில் ஒரு பாயில் படுத்திருந்தார் அந்த மங்கை. காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன். நோயாளியின் கண்களில் ஒளியில்லை. அரை மயக்க நிலை. அன்பர் நாற்காலி கொண்டு வந்தார். தடுத்து விட்டு நோயாளியின் அருகில் அமர்ந்தேன்.
இடது கை நாடியைப் பரிசோதித்தேன். துடிப்பில் வேகமில்லை. வலது கையையும் சோதித்தேன். பெண்களுக்கு இடதுபுறம், ஆண்களுக்கு வலது பக்கம் என்றுரைக்கிறது ஆயுர்வேதம். நான் இரண்டையுமே பரிசோதிப்பேன்.
ஆள்காட்டி விரலுக்குக் கீழே ஒரு தடித்த சதைத் திரள். அதேபோல் வலது கை மோதிர விரலுக்குக் கீழே ஒரு தடிப்பு. நகங்கள் குழலிட்டிருந்தன.
கால்களைக் கவனித்தேன். பாதத்திலும் விரல்களுக்குக் கீழே தடிப்புகள்.
நாவைக் காட்டுங்கள் தாயே.
அவர் சிரமப்பட்டு நாவை நீட்டினார். நல்ல வெண்மை நிறம் இமைகளை விலக்கி விழிகளைப் பார்த்தேன். சிவப்புத் தன்மையே இல்லை.
என்ன உணவு தருகிறீர்கள்?
எதையுமே உட்கொள்ளும் நிலையில் அமலோற்பவம் இல்லை. இது அவருடைய தாயார்.
நான் எழுந்து நிற்கிறேன். கை கழுவ நீரும் துவாலையும் கொண்டு வருகிறார் இன்பசாகரன். தேவையில்லை நான் மறுக்கிறேன்
வீட்டிகு வந்த ஆறு பொட்டலங்களை மடித்து சாகரனிடம் தருகிறேன். ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த மருந்தைத் தர வேண்டும். நாளைக் காலையில் உமது தங்கையின் உடல் நிலை குறித்துத் தகவல் வேண்டும்.
மறு நாள் சாகரன் வந்தார். அமலோற்பவம் எழுந்து உட்காருகிறாள்.
இருமுறை சிறுநீர் கழித்தாள். ஒரே கலங்கல். சிறுநீர்ப் பாதையில் குத்தல் இருக்கிறது.
நாளைக் காலையிலும் வந்து விவரம் கொடுங்கள்.
அமலோற்பவத்திற்கு நான் கொடுத்த மருந்து ஆண்டிமோனியம் க்ரூடம் ஆறாவது வீரியம். மூன்று வேளை மருந்திலேயே சிறுநீர் பிரிந்து விட்டது. இந்த மருந்து சிறுநீர்ப் பாதைலும் பணிபுரியும் என்பது நான் அறியாததொன்று. தெரியாததை ஒத்துக் கொள்ளுவதற்கும் துணிவு வேண்டும். ஆனால் போயரிக் இதை உறுதி செய்கிறார். (பக்.56).
நான்பெரிதும் மதிக்கும் மேதைகளில் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் ஒருவர் ஆவார். அவர் கூடத் தமது பேருரைகளில் சிறுநீர்ப் பாதை பற்றி ஏனோ குறிப்பிடவில்லை.
மறுநாள் சாகரன் வந்தார். சிறுநீர்ப் பாதையில் சிரமம் ஏதுமில்லை. தற்போது குத்தலும், முதுகு வலியும் இல்லை. ஒரு பொட்டலம் ஸைலீஷியா 30 தொடர்ந்து சீனி உருண்டைகள். நான்கு நாள் கழித்து பாஸிலினம் 200 இரண்டே மாத்திரைகள்.
2.
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லையென்றாலும், புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்தமான கருத்து என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய மதிப்பீடுகள் பெரும்பாலும் கணிப்பொறியால் தரப்பட்டவை. அவை கூடவா பொய்த்துப் போகும்?
தற்போது அமலோற்பவம் சாதாரண உணவைச் செரித்துக் கொள்கிறார். சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருகிறார். வழக்கமான உணவை உட்கொள்கிறார். காஃபி, தேநீர் தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாகரன் வந்து தன் தமக்கையின் உடல்நிலை குறித்துத் தெரிவிக்கிறார். நானும் என் வழக்கமான மருந்தையே கொடுத்து வந்தேன்
இரண்டு வாரம் பொறுத்து நான் என்விருப்பத்தைத் தெரிவித்தேன். ஒருமுறை உன் அக்காவைச் சந்திக்க முடியுமானால் நல்லது சாகரனிடம் தெரிவித்தேன். மறுநாள் காலை பத்து மணி இருக்கும். ஒரு நங்கை தான் ஓட்டி வந்த சைக்கிளை மூலையில் நிறுத்தினாள். சல்வார் கம்மீஸ், இரட்டைப் பின்னல், நெற்றியில் பெரிய திலகம், (கத்தோலிக்கர்கள் பொட்டு வைத்துக் கொள்வார்கள். சிலர் தாலியும் அணிவதும் உண்டு) என்னைப் பார்த்துக் கைகூப்பினார். முதலில் யார் என்று விளங்கவில்லை. பிறகு தான் புரிந்தது.
அவர் சிலுவைக் குறி இட்டுக் கொண்டார். என்னைக் கல்லறையிலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். அவருடைய குரல் கமறியது.
நான் திகைத்து நின்று விட்டேன். அவர் அமலோற்பவம். கிழிந்த நாரைப் போல துவண்டு கிடந்த அந்த நங்கை, இன்று தானே சைக்கிளை ஓட்டி வருகிறார். நான் மேதை ஹானிமனுக்கு நன்றி செலுத்தினேன்.
அமலோற்பவம் (எத்தனை அழகான பெயர்?) என்ற மங்கைக்கு நான் ஆண்டிமோனியம் க்ரூடம் என்ற மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இரண்டு சிறப்புக் குறிகள். ஒன்று அதி வெண்மையான நாவு. இரண்டு உள்ளங்கையிலும், காலிலும் இருந்த கெட்டியான சதைத் திரட்சி. பொது வழக்கில் இதை ஆணி விழுதல் என்று குறிப்பிடுவார்கள். ஆணி என்ற சொல் மிகவும் பழமையானது. வடமொழி வேதங்களிலும் இந்தச் சொல் `உறுதியானது’ என்ற பொருளில் வரையப்பட்டுள்ளது. பரதனைச் `செம்மையின் ஆணி’ என்றே கம்பர் பாராட்டுவார்.
ஆணி உள்ள பகுதியைக் கூர்மையான கத்தியால் சீவி விட்டு அதன் மேல் ஆண்டிnமொனியத்தின் தாய்த் திரவத்தைத் தடவலாம். உள்ளுக்கும் அதையே தரலாம் என்று டி.எஸ்.ஐயர் எழுதியிருக்கிறார். ஆனால `கத்தி வைக்காதே’ என்று என் ஆசான் எச்சரிப்பார். அவர் அறுவை சிகிச்சைக்கு எதிரி. பொதுவாக ஆறாவது வீரியத்தில் இதைக் கொடுத்தால் ஒரு வாரத்தில் தோலுரியும் அல்லது நெகிழ்ந்து தளர்ந்து மிருதுவாகிவிடும். இதன் தொடர் மருந்து ஸைலீஷியா பணிபுரியும் காலம் நாற்பது நாட்கள் (கிப்சன் மில்லர் பக்.3).
3.
அந்த அன்பர் வேதாரண்யத்திலிருந்து வந்திருந்தார். உடன் அவருடைய மனைவியும் இருந்தார். இடுப்பில் இரண்டு வயதுக் குழந்தை. தொடர்ந்து நான்கு மணி நேரம் பயணம் செய்ததால் களைத்துப் போயிருந்தனர். வந்தவர் சிறிது நீர் அருந்திய பிறது பேசத் துவங்கினார். இந்தக் குழந்iதையுடன் ஓராண்டாக மன்றாடுகிறேன். ஒரே சொறி சிரங்கு. அரிப்பும் எரிச்சலும் பொறுக்க முடியாமல் கதறுகிறாள். நாங்களும் கூடச் சேர்ந்து அழுகிறோம்.
என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?
ஹோமியோபதி மருந்துதான். திருச்சி மருத்துவரின் பெயரைச் சொன்னார்.
அவரை எனக்குத் தெரியும். அலோபதிப் பட்டம் பெற்றவர். ஆனால் ஹோமியோபதி மருந்து அளிக்கிறார். அவர்களைச் சட்டம் ஒன்றும் செய்யாது. ஏனெனில் ஹோமியோபதி தீங்கற்ற மருத்துவ முறையாம். மாற்று முறைகள் தீங்கு விளைவிப்பவை என்று அவர்கள் மௌனமாக ஒத்துக் கொள்ளுகிறார்களே, அது வரைக்கும் நன்று.
நான் குழந்தையைப் பரிசோதித்தேன். தலையில் முண்டு முண்டாகச் சிரங்குகள். முடி சடையிட்டிருந்தது. முகம், நெஞ்சு, வயிறு, ஆண் குறி, தொடை, கால் எல்லாவற்றிலும் மேல் தோல் கெட்டியாகித் தோலுரிகிறது. சொறிந்ததனால் ரணமாகியிருந்தது. என்னைக் கண்டதும் குழந்தை வீரிட்டான். நான் ஆறுதல் கூறினேன்.
நான் நாவைப் பரிசோதித்தேன். வயிற்றுப் பகுதியில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. என்ன உணவு தருகிறீர்கள்? மலக்கழிப்பு எப்படி உள்ளது? இவை எனது இரண்டாவது கேள்வி.
எப்போதும் ஆசன வாயில் கை வைக்கிறான். அடிக்கடி மலம் ஒழுகுகிறது. சளி சளியாகப் போகிறான். கட்டியாகவும் வெளிப்படுகிறது. ஒரே கெட்ட வாடை. எங்களுக்கே வெறுத்துப் போய்விட்டது அய்யா, ஒவ்வொரு சமயம் . . .
அவர் வாய் விட்டுச் சொல்லவில்லை. ஆனால் முகத்தோற்றம் அந்த எண்ணத்தைப் பறைசாற்றியது.
நான் குறுக்கிட்டேன். பிறப்பும், இறப்பும் நமது கையில் இல்லை. பெற்றோர்கள் தமது மக்களுக்குப் பாதுகாப்புத் தரக் கடமைப்பட்டவர்கள். மருத்துவன் ஏற்ற மருந்துகள் தரலாம். மேலே நடக்கவிருப்பது இறைவனுடைய விருப்பம். நான் வானத்தை நோக்கி கை காட்டினேன்.
தொடர்ந்து பரிசோதித்த பிறகு ஒரு வாரத்திற்கான மருந்தை மடித்துக் கொடுத்தேன். சோப் உபயோகிக்க வேண்டாம். தொடர்ந்து கடிதம் எழுதினால் மருந்து அனுப்பி வைக்கிறேன்.
அவர்கள் திரும்பிய பிறகு கெண்டின் நூலைப் புரட்டுகிறேன். அவர் எழுதுகிறார். `இந்த மருந்தின் எல்லா நோய்க் குறிகளும் வயிற்றுப் பகுதியில் துவங்கும். அந்த இடத்திலேயே மையம் கொண்டிருக்கும். வயிற்றுப் பகுதியை மையமாகக் கொண்டிருக்கும் எல்லாத் துயரங்களையும் இது சமன் செய்யும்’.
இந்தக் குழந்தையின் நாவு வெண்மையாக இல்லை. `நாக்கு வெண்மையாக இருப்பது’ இந்த மருந்தின் முக்கியமான குறி என்றாலும் நான் ஆண்டிமோனியம் க்ரூடத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், கோளாறு வயிற்றுப் பகுதியில் துவங்கியது. கூடவே சளி சளியாக மலப்போக்கு. ஆசனவாயில் நமைச்சல்.
4.
இரண்டு வாரம் பொறுத்து வேதாரண்யத்திலிருந்து அந்த அன்பர் வந்தார். `அய்யா, இப்போது குழந்தைக்கு ஒரு தொந்தரவும் இல்லை. மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்கள் நிலத்தில் புகையிலை பயிரிடுகிறீர்கள். அதன் மூட்டைகளை வீட்டிலிருந்து அகற்றி விடுங்கள். அதுவே நீங்கள் உங்கள் குழந்தைக்குச் செய்யும் பெரிய உதவி.
`வினோபாஜி வினவுகிறார். தஞ்சை நிலத்தில் புகையிலையைப் பயிர் செய்துவிட்டு, க்யூபா நாட்டிலிருந்து சர்க்கரை வாங்குகிறோம்.
பிலிப்பைன்ஸுக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்கிறோம். மாட்டுச்
சாணத்தை இறக்குமதி செய்கிறது நமது அரசு. இது கொடுமை. நமது பொருளாதார இலக்குகள் ஓட்டுப் பெட்டியைச் சுற்றியே சுழலுகின்றன. பதவி, அதிகாரம், பணவசதி, சூழ்ச்சி, இறைவா இந்தியனுக்கு எத்தனை வகை இன்னல்கள்?
ஆண்டிமனி என்பது ஒரு கனிமப் பொருள். உருக்குத் தயாரிப்பில் இதன் பங்கு பெரிது. இதை மருந்தாக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் மேதை ஹானிமன். இந்தக் கனிமப் பொருளைப் பற்றி தமது `நாட்பட்ட நோய்களில்’ எழுதியிருக்கிறார். ஹார்ட்லாப், டிரிங்கிள் ஆகிய பெரியோர்களும் இது குறித்து வரைந்துள்ளார்கள். இது ஒரு பலமுனை நிவாரணியும் கூட. பல்முனை நிவாரணியும் கூட என்பது பொருத்தமானதாக இருக்கும். ஈறு கொழுத்துப் பல் ஆடுமானால் உதிரப்போக்கு இருக்குமானால், சிதைந்த பற்களில் வலி இருக்குமானால் இந்த நிவாரண பயன் தரும்.
கண்களில் ஏற்படும் நோவுகளுக்கும் இது அரு மருந்து `ப்ளெபெரிடிஸ்’ என்ற விளங்காத பெயரைக் கூறி பயமுறுத்துவார்கள். கண் விழிகள் சிவந்து இமைகள் வீங்கி அவற்றினின்று வடியும் நீரினால் மற்ற பகுதிகளில் அரிப்பும், எரிச்சலும் ஏற்பட்டு கறையிடுமானால், அப்போது துணிந்து இந்த மருந்தை ஆறாவது வீரியத்தில் தரலாம். பல், கண் ஆகிய பகுதிகளில் துயர் தரும் நோய்களுக்கு இதன் தொடர் மருந்தாக தசம வீரியத்தில் ஸைலீஷியாவைத் தரலாம். வியக்கத் தக்க விளைவுகளைக் கண்டிருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் எனக்கு வியப்பை அளித்தது சின்னம்மை, ஜெர்மன் மீசில்ஸ் என்று கூறுகிறார்களே, அந்த நோய் பெரியம்மைக்குத் தடுப்பாக அம்மைப்பாலைக் கண்டுபிடித்து உடலில் செலுத்துகிறார்கள். அது வேறு வகையில் உருவெடுத்து மனித குலத்தை வாட்டுவதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்தச் சின்னம்மைக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆண்டிமோனியம் க்ரூடம் நிவாரணம் தரும் என்று எழுதவில்லை.
ஆனால் என் ஆசான் இந்த நற்செய்தியைப் பரப்பினார். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஹைதராபாத் பிரதேசத்தில் இந்த நோய் பரவி விடும். இதைத் தடுக்க ஊர் ஊராக மாரியம்மனுக்கு விழா எடுப்பார்கள். படையல் போடுவார்கள். ஆனால் என் ஆசான் இதைத் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தினார். மடாலயத்திலிருந்து மதர் சுப்பீரியர் வந்து ஒரு புட்டி நிறைய மாத்திரைகளை வாங்கிச் சென்று பள்ளிச் சிறுவர்கள் அனைவருக்கும் கொடுத்து விடுவார். எவருக்கும் சின்னம்மை வந்ததில்லை.
குழந்தைகளின் நலனைச் சீர்குலைக்கும் நோய்களில் சின்னம்மை முதலிடம் அளிப்பதாகும். சளி, காய்ச்சல், இருமல் எல்லா உபாதைகளும் இருக்கும். அப்போது ஆண்டிமோனியத்தைத் தொடர்ந்து சத வீரியத்தில் ஸைலீஷியா தர வேண்டும். வாய் ஓரத்தில் துவங்கி முகத்தையே விகாரப்படுத்தும் படர் தாமரை என்ற சர்ம வியாதிக்கும் இது சிறந்த மருந்து. உதட்டோரத்தில் வெடிப்பு ஏற்பட்ட உடனேயே இதைக் கொடுத்து விடுவது வழக்கம். ஆறாவது வீரியமே போதும். நான் முப்பதாவது வீரியத்திற்குத் தாவுவது உண்டு. ஆனால் அவ்வளவு உயர்ந்த வீரியம் தேவையில்லை என்பது என் ஆசானின் கருத்து. பல மருந்துகளை அவர் 12-வது வீரியத்தில்தான் கொடுப்பார்.
(இப்போது எங்கே கிடைக்கிறது பன்னிரெண்டு?)
ஆண்டிமோனியம் என்ற உலோகத்தினைப் பற்றி குறிப்பிடும்போது, எல்லா நிபுணர்களுமே அந்த நோயாளி சிடுசிடுக்கும் தன்மை உடையவனாக இருப்பான் என்று வரைகிறார்கள். மருத்துவர் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கூட நோய்வாய்ப்பட்ட குழந்தை பொறுக்காது. இது நிபுணர் போயரிக்கின் கூற்று.
எங்கள் அலுவலகத்தில் ஓர் எழுத்தர் இருந்தார். அவர் எதற்கெடுத்தாலும் எதையாவது குறை கூறுவார். புத்தகத்தில் அச்சுப் பிழையா, மின்வெட்டா, பென்சில் சீராக எழுதவில்லையா எந்தக் குறைபாடு இருந்தாலும் அவர் சக ஊழியர்களிடம் எரிந்து விழுவார். காரணமின்றி பதற்றம் அடைவார். அவர் ஒரு வங்காளி, பொதுவாக அந்த மாநிலத்தவர்கள் விவாதம் புரிவதில் விருப்பம் காட்டுவார்கள். பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் வல்லவர்கள் அந்த நண்பருக்கு ஒரு முறை வயிற்றுக் கோளாறு வந்தது. அவருக்கு இந்த மருந்தை ஆறாவது வீரியத்தில் மூன்று நாளைக்குக் கொடுத்தேன். வங்காளத்தில் ஹோமியோபதி மருத்துவர்கள் மிகுதி. அவரும் நம்பிக்கையுடன் மருந்தை உண்டார்.
ஒரு வாரம் கழித்து அவரைச் சந்தித்தபோது வினவினேன். `நிதின் பாபு, கேமொன் ஆச்சே? (எப்படி இருக்கிறீர்கள்?).
`குப் பாலூ-முஷாய்’ (மிகவும் நன்றாக இருக்கிறேன் அன்பரே).
தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு கலை உலக விவரங்கள் அத்துப்படி. காஜி நஜ்ருல் இஸ்லாமின் வித்ரோஹி, சரத் சந்திரரின் சரித்ர ஹீன் ஆகியவை பற்றி நிறையவே அறிந்திருந்தார். நிறையத் தகவல்கள் கொடுத்தார். நண்பர்கள் வியப்புடன் நோக்கினார்கள். அவருடைய உள இயல்பே மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நண்பர்களுடன் காரசாரமாக விவாதம் செய்வதையே நிறுத்திவிட்டார்.
ஹோமியோபதி மருந்துகளின் மிகச் சிறந்த ஆற்றல் இது. குறிகள் முழுமையாக ஒத்திருந்து ஒத்த மருந்தைக் கொடுத்துவிட்டால் ஒட்டு மொத்தமாக அது எல்லா நோய்க் குறிகளையும் நீக்கி விடும். இந்த விவரம் பலருக்கும் புரிவதில்லை. புரிந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவர். பின்னாளில்தான் நிதின்பாபுவைப் பற்றி பல புதிய விவரங்கள் தெரிந்தன. அவர் ஆண்மை குன்றியவர். உறுப்பே சுருங்கிக் கிடந்ததாம். அவருடைய இந்தக் குறைபாட்டின் விளைவாகவே அவருக்குச் சிடுசிடுக்கும் தன்மை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.
பாலுறவில் இயலாமை பிறரிடம் கடுகடுப்பை உண்டாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். பொதுவாக ஆணி விழுந்த நிலைக்கு இதைத் தருவார்கள். தடிப்புள்ள இடத்தில் தாய்த் திரவத்தைத் தடவுவது உண்டு. புறங்கையில் ஏற்பட்டிருக்கும் மருக்களையும் இது போக்கி விடுகிறது. இந்த மருந்தின் எல்லை மிக விரிவானது. தலைக்குக் குளித்தால் வரும் சுகவீனங்களை இது நீக்க வல்லது என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இதனுடன் அயோடினைக் கலந்தும் ஒரு மருந்தைத் தயாரிக்கிறார்கள். டார்ட்டாரிகத்தைக் கலந்து ஓர் அவுடதம். இரண்டுமே நெஞ்சுச் சளியை வெளிக் கொண்டு வரும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக