செவ்வாய், 22 நவம்பர், 2016

காதல், கம்யூனிசம், கடவுள் ஒன்று பழ.வெள்ளைச்சாமி


 காதல், கம்யூனிசம், கடவுள் ஒன்று

யார் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியும்?
     எவ்வுயிருக்கும் செந்தன்மை பூண்டு ஒழுகுபவன், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புபவன்.
சாதி, மதம், மதம், இனம், மொழி, நாடு இவற்றையெல்லாம் கடந்து மனிதனை மனிதனாக மட்டும் பார்ப்பவன். உழைத்து, உழைத்ததைப் பகிர்ந்து வாழ்பவன். மொத்தத்தில் அன்பால் உலகை அளப்பவன். இதுதான் கம்யூனிஸ்ட் அல்லது இதுவே கம்யூனிஸத்தின் அடையாளம்‚

இது மிகப்பெரிய விசயம்தான். இருப்பினும் இது சாத்தியமே. ஆம் ஒரு மனிதனுக்குச் சாத்தியமே. இதுவே மனிதனுக்கான அடையாளம். இதுவே மனிதனுக்கான அடிப்படைப் பண்பாக இருக்க வேண்டும். இப்போது அதுவே அவனுக்கு அபூர்வமானதாகி விட்டது.

அப்படியென்றால் கம்யூனிஸ்ட் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஏற்கனவே இருக்கின்ற அவனுடைய பழைய மனிதனை அழித்து விட வேண்டும். அது எப்படி?

ஏற்கனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு சாதிக்குச் சொந்தக்காரனாக, ஒரு மதத்திற்கு சொந்தக்காரனாக, ஓர் இனத்திற்கு சொந்தக்காரனாக, ஒரு மொழிக்குச் சொந்தக்காரனாக மற்றும் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறான். இப்படிப்பட்ட மண்ணில்தான் வேரூன்றி இருக்கிறான்.

ஆம், அந்த மண்ணில் இருந்து அவன் பிடுங்கி நடப்பட வேண்டும். இது சாதாரண விசயமல்ல. கடுமையானது மிகமிகக் கடுமையானது. இது மரணத்திற்கு ஒப்பானது. அந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி நடப்படுவது. இப்போது இங்கே பிரசவ வேதனை. இங்கே பழைய இலைகள் கருகி உதிர்ந்து விடும். புதிய மண்ணில் அந்தச் செடி வேர் விட வேண்டும்.

புதிய மண்ணில் வேரூன்றிய செடி புதிய தளிர்களை விட்டு தழைக்கும்.

அங்கே அதற்கென்று ஓர் ஆசை கிடையாது.
அதற்கென்று ஒரு தேவை கிடையாது.
அதற்கென்று ஒரு விருப்பம் கிடையாது.
அதற்கென்று ஒரு மகிழ்ச்சி கிடையாது.

அனைத்து உயிர்களுடைய மகிழ்ச்சியையே தன்னுடைய மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளும். அனைத்து மனிதர்களுடைய நலனுக்காக தன்னுடைய நலனை இழப்பதில் மகிழ்வு கொள்வான். இதுதான் கம்யூனிஸ்ட் அல்லது கம்யூனிஸத்தினுடைய அடிப்படை பண்பு.
வள்ளுவர் சொன்னது போல உற்ற நோய் நோன்றல் மற்றும் உயிர்க்கு உறுகண் செய்யாமை அவர் உயிரோடு கலந்து விடும். அவ்வாறு உயிரோடு கலப்பதற்கு அவர், அவர் நானை உதிர்க்க வேண்டும். அப்போதுதான் அவன் தனக்கென வாழாமல் பிறர்கென வாழ்பவனாகிறான். பிறருக்கு எம்பையும் கொடுக்கும் அன்புடையவனாவான். இப்படிப்பட்ட அவனே கம்யூனிஸ்ட், அவன் கடைபிடிப்பதே கம்யூனிசம்.

காதல் அபூர்வமானது. கோடான கோடி மக்களில் இருவரிடம் நிகழக்கூடியது. ஆம் காதல் ஒரு நிகழ்வு, இதற்குக் காரணம், காரியம் கிடையாது. காதலுக்கு ஒரு காரணம் இருக்குமானால் அது காதலாக இருக்காது.

ஒருமுறை காதல் தோன்றிவிட்டால் அவன் அழிந்து விடுகிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் முழுமையாக சரணாகதி அடைவது. அதேபோல் ஒரு பெண் ஒரு ஆணிடம் சரணாகதி அடைவது. இருவராய் இருந்தவர்கள் ஒருவராக மாறுவது, இருமையிலிருந்து ஓர்மையை அடைவது, ஓர்மையாய் ஆனவர்கள், அனைத்திலும் ஓர்மையைக் காண்பவர்கள். ஆம் அனைத்துயிர்களிலும் தங்களைப் பார்ப்பவர்கள், தங்களுக்குள் அனைத்து உயிரையும் பார்ப்பவர்கள்.

இந்நிலையை அடைவதே காதல், இந்நிலையை அடைந்தவர்களே காதலர்கள். இந்நிலையை அடைய வேண்டுமென்றால் அவர்கள் தானறப் பெற வேண்டும். தானறப் பெற்ற அவர்களால்தான் காதலர்களாக இருக்க முடியும். இவர்கள் காதலர்களாக ஆனவர்கள் அல்ல, இவர்களே காதலாக ஆனவர்கள்.

இது எழுதுவதற்கம் பேசுவதற்கும் அழகாக இருக்கும், இனிமையாக இருக்கும், இலக்கியமாக இருக்கும். ஆனால் நடைமுறையில் மிகவும் கடினமானது, ஏன் பலருக்கு மிகவும் கசப்பானது.

இது சாத்தியமா? சாத்தியம்.

ஒருவன் காதலாக மாற முதலில் பழைய மனிதனை அழிக்க வேண்டும். பழையதிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமானது. பழக்கப்பட்டது, வாழப்பட்டதிலிருந்து முற்றிலும் புதிய ஒன்றுக்கு மாற வேண்டும்.

அவன் வாழ்ந்த சாதி, மதம், இனம், மொழி, நாடு மற்றும் அனைத்துத் தழைகளிலிருந்தும் தன்னை வேரோடு பிடுங்கி நட்டுக் கொள்ள வேண்டும். ஆம், அன்பென்ற உயிர் மண்ணில் நடப்பட வேண்டும். ஆமாம் வேரோடுதான். அது மிகுந்த வேதனையானது, ஆபத்தானது. அப்போது பழைய தளைகளும், இலைகளும் உதிர்ந்து விடும். இங்கே ஆனந்தமான வேதனை இங்கே புதிய மனிதன் பிறந்து விடுகிறான்.

அந்தப் புதிய மனிதனால் மட்டுமே காதலனாக, ஏன் காதலாக இருக்க முடியும்.
அவனே நானை இழந்தவன்
அவனே சரணாகதி அடைந்தவன்
அவனே பேதங்களையும் வேதங்களையும் கடந்தவன்
அவனே அனைத்திலும் தன்னையும், தன்னுள் அனைத்தையும் காண்பவன்
அவனே காதல், அவனே கடவுள்

கடவுள் என்பவர் யார்?
அவர் இருக்கிறாரா? இல்லையா?
என்ற கேள்விக்கு இடமில்லை

ஆனால் அனைத்திலும் இருந்து கொண்டு அனைத்துமாக இருக்கும் ஒன்று உள்ளது.
அதுவே ஆதிமூலம்
அதுவே ஆதி முழுமை
அதுவே கடவுள்

அதற்கென்று ஒரு தனித்துவமில்லை, ஒரு அடையாளம் இல்லை. அதனால் அது காலம், இடம் மற்றும் அனைத்தையும் கடந்து இருப்பது. அதிலிருந்து தோன்றிய ஒன்று தன்னை எப்போது அடையாளப்படுத்திக் கொண்டதோ அப்போதே அது மூலத்திலிருந்து விடுபட்டு இயங்கத் தொடங்கி விட்டது. அந்த இயக்கம் நின்றபாடில்லை. இன்று இருக்கின்ற, இருக்கப் போகின்ற, இருந்த அனைத்துமே அதனின் வடிவங்கள்தான்.

அதனால் இருப்பது அனைத்துமே ஆதிமுழுமையின் அவதாரங்கள் தான். அதனால் அனைத்திலும் ஆதி முழுமை இருக்கிறது. அந்த ஆதி முழுமை கடவுள் என்றால் அனைத்துமே கடவுள்தான். ஆக ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிரும் கடவுள்தான். ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான்.

ஆனால் மனிதன் தான் கடவுள் என்பதை உணராமல் கடவுளைத் தேடி ஓடுகிறான். கண்டதை எல்லாம் வணங்குகிறான். மனிதன் தான் கடவுள் என்பதை உணர்வதற்கே முதலில் சாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து, தன்னை பிடுங்கி அன்பு என்ற உயிர் மண்ணில் நட்டுக் கொள்ள வேண்டும்.

இது சாதாரண விசயமா? இது சாதாரண விசயமில்லை. மேலே கூறிய அடையாளங்களிலிருந்து தன்னை பிடுங்கி நடுவது ஆபத்தானது. அது அன்பு என்ற உயிர் மண்ணில் வேர் விட நானை உதிரவிட வேண்டும். நான் உதிராமல் செடி வேர் விடாது.

அடையாளத்திலிருந்து பிடுங்கப்பட்டு அன்பில் வேர் விடாத போது அது ஆபத்தானதுதான் அழிய நேரலாம். ஆகையால் அனைத்து அடையாளங்களிலிருந்தும் விடுபட்டு அன்பில் தளைக்கும் போது அப்போது தானும் கடவுள் என்பதை உணர்வான். அவ்வாறு உணரப்படும் போது ”நான்… உதிர்ந்து, சுயம் மறைந்து அந்த சூட்சுமான அந்த ஆதிமூலம் வெளிப்படும்.

அப்போது அது எதிலிருந்து வந்ததோ, அதனோடு இணைந்து விடும். அதுவே இயக்க நிலை முடிந்து இருப்பு நிலையில் இணைவது. அந்த நிலையே கடவுள் நிலை.
ஆதலால்
     அடையாளத்தை இழந்தது
     அனைத்திலும் ஒன்றைக் காண்பது
     அனைத்திலும் தன்னைக் காண்பது
     அனைத்தையும் தன்னில் காண்பது
     தனக்கென்று ஓர் ஆசை இல்லாதது
     தனக்கென்று ஒரு தேவை இல்லாதது
     தனக்கென்று ஒரு விருப்பம் இல்லாதது
     தனக்கென்று ஒரு மகிழ்ச்சி இல்லாதது
     அன்பில் தோன்றி அன்பில் மறைவது
எதுவோ
     அதுவே காதல்,
     அதுவே கம்யூனிஸம்
     அதுவே கடவுள்.


----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக