வெள்ளி, 21 ஜூலை, 2017

பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

வேளாண் ஹோமியோபதி

துணைப்பயிர் வளர்ப்பு விவசாயம்



பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

மூன்று பயிர்களை பயிரிடும் முறையானது மூன்றடுக்குகளாக தோட்டத்தை நிரப்புவதாகும்.
நேராக நிமிர்ந்து வளரக்கூடிய முதல் அடுக்குப்பயிரானது மக்காச்சோளமாக வழிவழியாக இருந்திருக்கிறது, பின்னர் மக்காச்சோளத்திற்கு பதிலாக சூரியகாந்தியும் தானிய சோளமும் பின்னர் வெற்றிகரமான மாற்றுப்பயிராக உருவாகியிருக்கிறது.
இரண்டாவது அடுக்குப்பயிராக மொச்சைப்பயிறு அல்லது கொத்தவரை போன்ற படரும் ஏறுகொடி தாவரங்களை பயிரிட வேண்டும்.மொச்சைப்பயிறின் வளர்ச்சியை சோளத்தின் நிழலானது முதலில் தாமதப்படுத்தும்,பின்னர் சோளம் கதிர் அறுத்தவுடன் காயத்தொடங்கும் தருவாயில் மொச்சை புதிய வளர்ச்சியுடன் வெடித்துத் தயாராகிவிடும்.
பூசணிப்பயிர்களுக்கு (பூசணி,பரங்கி,தர்பூசணி) அதிகப்படியான வெளிச்சம் தேவை,நிழல் அவைகளுக்கு நன்மை செய்யாது, நிழல் பூசணியின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். பூசணியை சோளம் மற்றும் மொச்சைக்கு வெளியே பயிரிடவேண்டும் ஏனெனில் நிலத்தை மூடுமளவுக்கு அடர்த்தியாக பரவும் அதற்கு அந்த அளவுக்கு பரந்த நிலம் தேவை.

எப்படி பயிரிடுவது?

பயிரிட தயார் செய்யப்பட்ட விவசாய நிலத்தில் தகுந்த பருவத்தில் பட்டம் பார்த்து பயிரிடவேண்டும்.
எனக்கு தெரிந்து மேற்கு தமிழகத்தில் மானாவாரியாக தானிய சோளமும் கூடவே நரிப்பயிர், பச்சைப்பயிறு அல்லது பாசிப்பயிறு ஊடு பயிராக பயிரிடுவார்கள். இதுவும் துணைப்பயிர் விவசாயமே.இருந்தாலும் பூசணியில்லாமல் இது பாதுகாப்பாக இருக்காது.ஏனெனில் பூச்சிகள் மற்றும் ஆடுமாடுகளிடமிருந்து இதற்கு பாதுகாப்பு கிடைக்காது.ஆதலால் பூசணியில்லாமல் இது நிறைவான முறை கிடையாது. மூன்றடுக்கு பயிர் முறையில் எப்படி பயிரிடுவது என பார்ப்போம்.

செயல்முறை-1

நிலத்தை தயார் செய்தவுடன் விதைக்கும் பரப்பை 12’க்கு 12’ சதுர அடியாக பிரித்து அதன் மையப்பகுதியில் வட்டம் அமைத்து சோள விதைகளை வட்ட வடிவில் 8 விதைகளை சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்தபிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.

செயல்முறை-2

இரண்டு வாரங்களுக்கு பிறகு சோளம் முளைத்து 5லிருந்து 10 அங்குலம் வளர்ந்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு சோளச்செடியை சுற்றிலும் 4 மொச்சைப்பயிறு விதைகளை சமமான இடைவெளியில் ஒரு அங்குல ஆழத்திற்கு ஊணவேண்டும்.அதன் பிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.மொச்சை விதை முளைக்கும் வரை நிலம் ஈரப்பதமாக இருக்கவேண்டியது அவசியம்.

செயல்முறை-3

மொச்சை விதை ஊன்றிய ஒரு வாரத்திற்கு பிறகு மொச்சை முளைத்து சோளத்தின் மீது ஏறி படரும் தருவாயில் 6லிருந்து 8 பூசணி விதைகளை வட்டத்திற்கு வெளியில் சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும்.
பூசணி வளர்ந்து படரும்போது கொடிகளின் திசை வட்டத்தை நோக்கி அதன் மையப்பகுதி நோக்கி படரும் படி திருப்பி விடவேண்டும்.

மூன்றடுக்கு துணைப்பயிர் வளர்ப்பு முறை எப்படி வேலை செய்கிறது?

இந்த பழமையான துணைப்பயிர் வளர்ப்பு முறையில் மூன்று பயிர்களும் தன்னையையும் வளர்த்து தனது துணைப்பயிரையையும் வளர்த்து ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
மூத்த சகோதரியான சோளம் மொச்சைக்கு பற்றுக்கோலாக ஆதரவை வழங்குகிறது. மொச்சைப்பயிறானது சோளத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகிறது.மொச்சையானது காற்றிலிருந்து நைட்ரஜனை மண்ணில் சேமித்து வைத்து தனக்கும் தன் துணைக்கும் அளிக்கிறது.
பூசணி பாதுகாப்பை வழங்குகிறது. அதன் கொடிகள் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. மேலும் அது உயிருள்ள தழைக்கூளமாக மூடக்காக மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதன் சொரசொரப்பான மெல்லிய முள் போன்ற அமைப்பை கொண்ட அதன் கொடிகள் சோளத்தையையும் மொச்சையையும் தாக்கும் பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கிறது.ஒரு கூட்டுக்குடும்ப அமைப்பு போல இருந்துகொண்டு இந்த மூன்று பயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒரு வலிமையான பாதுகாப்பு தடைவேலியை உருவாக்கி பூச்சிகளையையும் களைகளையும் வீழ்த்துகிறது.
No automatic alt text available.

மூன்று தோழிகள்

சோளம்(மக்காச்சோளம் அல்லது சூரியகாந்தி அல்லது தானியச்சோளம்)
+பீன்ஸ்(மொச்சைப்பயிறு அல்லது பிற ஏறுகொடிப்பயிறு வகைகள்)
+பூசணி(பூசணி அல்லது பரங்கி அல்லது தர்ப்பூசணி)
இந்த மூன்றடுக்கு பயிர் முறை எளிமையான பழமையான விவசாய முறையாகும். இதனுடன் சாமந்திப்பூச்செடியையும் ஒரக்கால்களில் பயிர் செய்தால் இன்னும் பாதுகாப்பு.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத இயற்கை விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.

AGRO HOMOEOPATHY
🍀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக