செவ்வாய், 25 மார்ச், 2014

திருமணம்-பழ.வெள்ளைச்சாமி

திருமணம்

காதல் என்பது
உறவாகும் போது
உண்மை மறைந்து போகும்
உண்மை என்பது
மறையும் போது
அது
உடைமையாகும்!

உடைமையான ஒன்று
அடிமையாகும்!

அடிமை வாழ்வு
எப்படி
அன்பைச் சொல்லும்!

திருமணம்
குடும்பத்திற்கு அடித்தளம்!
குடும்பம் பிரிவினைக்கு அடித்தளம்!

திருமணம்
தனிச்சொத்து
தந்த குழந்தை!

திருமணம்
ஒரு மன மானதை உடைத்து
காதலுக்குக்
கல்லறை கட்டியது!

காதலில் கரைந்து போன
'நான்'க்கு உயிர் கொடுத்து
ஆணவத்திற்கும்
அகங்காரத்திற்கும்
ஆசைக்கும்
அடித் தளமானது.
அன்பால் மலர்ந்த
ஆணையும் பெண்ணையும்
அடிமையாக்கியது

ஆணையும் பெண்னையும்
வேறு வேறாக்கி
வேற்றுமைக்கு வித்திட்டது.

திருமணம்
குடும்பம் என்ற எல்லை வகுத்து
உலகில்
எல்லைக் கோடுகள்
தோன்றக் காரணமாகி
எல்லை யற்ற
இன்னல் களுக்கு
வழி வகுத்தது

அனைத்து உயிர்களுக்கும்
அன்பு செலுத்தவேண்டிய
மனிதனைக்
குடும்பச் சொத்தாக்கி
அன்பை அபூர்வ மாக்கியது.

பெண்ணின்
ஏன்
ஆணின்
சுதந்திரத்தைப் பறித்து
சோதனைக்கு உட்படுத்தி
வரைவின் மகளிர்க்கு
வழி வகுத்துக் கொடுத்தது.

திருமணம்
இயற்கைக்கு எதிரானது

அழகுக்கு எதிரானது

அன்புக்கு எதிரானது

ஆனந்தத்திற்கு எதிரானது

ஏன்
ஆண்டவனுக்கே எதிரானது

அது
பற்றுக்கு வித்திட்டு
அன்புக்குக் கல்லறை கட்டியது!

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை-பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை

இதை ஓரளவு படிக்கத்தெரிந்தவர்கள் கூட எளிதாக அவர்கள் அறிந்த மட்டும் கையாலலாம்.

ஏனெனில் அடிப்படையில் நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள்தொடர்பான ஆழமான அறிவு தேவையில்லை.
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
இதைச் செய்வதற்கு ஹோமியோபதியின் அடிப்படைத் தத்துவத்தைத் தெரிந்திருக்க வேண்டும்.இதைப் படிக்க தெரிந்தவர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளலாம்.

எனவே ஹோமியோபதியைச் சாதாரண மக்களும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தமுடியும்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள்.இவர்கள் கிராமப்புறங்களில் வாழ்வதாலே இவர்களுக்கு மருத்துவவசதி புறக்கணிக்கப்படுகிறது அல்லது எளிதில் கிடைப்பதில்லை.இந்நிலையில் சாதாரண நோய்களால் கூட உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.இந்நிலையை தடுப்பதற்கு ஹோமியோபதியால் முடியும்.

மேலும் பெருப்பாலான பெண்கள் திருமணத்திற்குப்பின் வேலைக்குச் செல்வதில்லை. பல குடும்பங்களில் அறிவியல் பட்டங்கள் பெற்ற பெண்கள் கூட வேலைக்குச் செல்லாமல் வீட்டுப்பெண்களாக காலந்தள்ளுகிறார்கள்.இவர்களுக்கு எளிய ஹோமியோமருத்துவம் சென்றடையும்.மேலும் அதை அவர்கள் எளிதில் பயின்று தங்களுக்கும்,தங்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் எளிதில் பயன்படுத்தமுடியும்.

இதனடிப்படையில் சாதாரணப்பெண்கள் அதாவது பள்ளிக்கல்வியை முடித்த பெண்கள் அன்றாட வாழ்வோடு இந்த மருத்துவத்தையும் செய்யும் அளவுக்கு எளிய முறையில் ஹோமியோபதியைப் படிப்பதற்கு தமிழில் புத்தகங்கள் வெளிவரவேண்டும்.ஹோமியோபதியின் அடிப்படைத்தத்துவத்தை விளக்கக்கூடிய புத்தகங்கள்,அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்கள் தொடர்பான மருத்துவம் அளிக்க ஏதுவான எளிய புத்தகங்கள் அவசியம், அதனடிப்படையில் நாம் முழுமூச்சாக செயலாற்ற வேண்டும்.

மெய்ப்பொருள் ......

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிர்தாத் சொல்கிறார்(The book of Mirdad by Mikhail Naimy )
“பிரபஞ்சத்தில் அஃறிணை என அறியப்படும் கல்லுக்கும் மனம் உண்டு அந்த மனத்திற்கும் விருப்பம் உண்டு,கல்லைப்போல மற்ற எல்லாப்பொருட்களுக்கும் மனம் உண்டு என் நான் உங்களுக்கு சொல்கிறேன்.இந்தபொருட்களின் மனதின் பிரக்ஞை மனிதனுக்கு போலன்றி அளவில் மாறுபாட்டிருந்தாலும் சாராம்சத்தில் மாற்றம் இல்லை”

வள்ளுவர் இதைப்பற்றி அறிவதைத்தான் அறிவு என்கிறார்.
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

இதை சர் ஜகதீஸ் சந்திர போஸ் ஓரளவுக்கு அறிய முயற்சி செய்தார்(1.Response in the living and non-living 2.The nervous mechanism of plants)
“தாவரங்களுக்கு மனிதர்களைப்போல விலங்குகளைப்போல உணர்வு உண்டு”

இதை சாமுவேல் ஹானிமன் முழுமையாக நிரூபித்தார்(organon of medicine 6th edition).தன் ஹோமியோபதி மருத்துவ தத்துவத்தின் நிரூபண விதிகளின் மூலம்
“பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப்பொருட்களும் ஆரோக்யமான மனிதனுக்கு கொடுக்கப்படும்போது அதற்கேயுண்டான தனித்துவப்பண்புகளை அவனிடத்தில் வெளிப்படுத்துகின்றன.இதன்மூலம் ஆரோக்யமான மனிதனுக்கு நோயை உண்டாக்கவும் நோயுள்ள மனிதனை குணமாக்கவும் தன்னிடத்தில் ஆற்றல் உள்ளது என இந்த உலகுக்கு உணர்த்துகிறது".

மருத்துவரின் பணி-பழ.வெள்ளைச்சாமி

மருத்துவரின் பணி

ஒரு மருத்துவருடைய தலையாய பணி(MISSION) நோயுற்ற மனிதரை மறுபடியும் நோயற்ற நிலைக்குக் கொண்டு வருவதுதான்.
அதாவது அவரை பூரண நலமுள்ளவராக மாற்றுவது இது தவிர்த்து அவருடைய கற்பனைகள் புனைவுகள் மூலம் புதிய மருத்துவமுறையைக் கண்டுபிடிப்பதாக மக்களைப் பிரமிக்க வைப்பது அல்ல.
மனிதனுக்குள்ளே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அலங்கார வார்த்தைகளால் பிறர்க்குப் புரியாதபடி கூறி துயரர்களை மிரள வைப்பது அல்ல.
மருத்துவம் தொடர்பான புரியாத வார்த்தைகளைக்கூறித் தான் படித்த மேதாவி என்று காட்டிக்கொள்வதல்ல.
துயரர்கள் ஒரு மருத்துவரிடம் தங்கள் துயரங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காகவே வருகிறார்கள் அந்த நிவாரணத்தை அளிப்பதே தலையாய கடமை.அந்த தலையான பணியைச்செய்யப்போகும் மருத்துவர் என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1.ஒவ்வொரு நோயிலும் குணப்படுத்தப்படவேண்டியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
2.அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதை அறிந்திருக்கவேண்டும்.
3.இவ்வாறு நோயில் குணப்படுத்தப்படவேண்டியதையும் மற்றும் மருந்தில் குணப்படுத்துவதையும் எப்படிப் பொருத்தவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
4.தன்னிடம் வந்துள்ள துயரருக்கு உரிய மருந்தைத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்
5.அந்த மருந்தை எப்படித் தயாரிக்கவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
6.அந்த மருந்தை எந்த வீரியத்தில் எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதைத்தெரிந்திருக்க வேண்டும்.
7.அந்த மருந்து துயரரிடம் வேலை செய்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய வேண்டும்.
8.அந்த மருந்தின் செயலாற்றும் திறம் முடிந்துவிட்டதா? அப்படியாயின் அடுத்தவேளை மருந்தை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
9.ஒவ்வொரு முறையும் துயரரை முதன்முறையாக ஆய்வுசெய்வதுபோல் ஆய்வு செய்து அவரின் குறிகளின் தன்மையை அறிந்து ஏற்கெனவே கொடுத்த மருந்துதான் மறுபடியும் தேவைப்படுகிறதா? அப்படியாயின் அந்த மருந்தின் வீரியத்தை மாற்றவேண்டுமா? அல்லது அளவை மாற்ற வேண்டுமா? என்பதை எல்லாம் நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
10.இவ்வாறு தன்னிடம் வரும் துயரருக்கு உரிய மருந்தை தேவைக்கு ஏற்பக் கொடுத்து படிப்படியாக குணப்படுத்தும்போது, அவரைக் குணப்படுத்தவிடாமல் தடுக்கும் தடைகள் என்ன என்பதை அறிந்திருக்கவேண்டும்.
11.தடைகளை அறிந்து அதை நீக்கத்தெரிந்திருக்க வேண்டும்.
12.இவ்வாறு தடைகளை நீக்கி துயரரை பூரணநலமுள்ளவராக ஆக்கவேண்டும்.அப்போதுதான் அவர் பகுத்தறிவுபூர்வமாக மருத்துவம் செய்வதாக கருதப்படுவார்.
இவ்வாறு ஒரு துயரரை நோயுற்ற நிலையிலிருந்து மீட்டி நோயற்ற நிலைக்கு கொண்டு வருவதோடு மட்டும் ஒரு மருத்துவருடைய பணி முடிந்துவிடுவதில்லை.
அதற்கும் மேலாக ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.அதை எவ்வாறு நீக்குவது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது அவர் நோயிலிருந்து துயரரை மீட்டுவது மட்டுமின்றி ஆரோக்கியமான மனிதர்களின் நலத்தைப் பேணுபவராகவும் செயல்படுகிறார்.
இங்கே ஹோமியோபதி மருத்துவர் மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்துபவராக மட்டும் இல்லாமல் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்து அவற்றை நீக்க வேண்டும் என்றபோது அவர் ஒரு மருத்துவராக மட்டும் இருந்தால் போதாது.
ஏனெனில் நோய்க்கான காரணிகள் வறுமை,வேலை இல்லாத்திண்டாட்டம், சுகாதாரமற்ற வாழ்வு,சாதிமதக்கொடுமைகள்,சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அறியாமை இவைகள் தாம்.
ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவர் என்பவர் டாக்டர் ஹானிமன் அவர்களுடைய கூற்றுப்படி மேற்கூறிய காரணிகளை நீக்கும் பணியில் ஈடுபடவேண்டும். டாக்டர் ஹானிமன் அலோபதி மருத்துவம் பார்த்தபோது அவர்தான் சுகாதாரம் தொடர்பாக முதல் குரலை எழுப்பிய மருத்துவராக இருந்தார்.அவர் மனிதனின் உணவு,வாழும் முறை மற்றும் இருப்பிடம் இவை எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி மருத்துவ வரலாற்றில் அவர் காலத்தில் முதலில் எழுதிய மருத்துவராவார்.
இன்று சமூகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.மனித இனம் வறுமையாலும் அறியாமையாலும் படுதுயர் எய்தி நோய்வாய்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து நீக்க முயற்சிக்க வேண்டும்.
அப்போது ஹோமியோ மருத்துவர் மருந்து கொடுப்பவராக மட்டுமில்லாமல் ஒரு சமூகப்போராளியாக மாற வேண்டும் இல்லையேல் மேற்கூறிய காரணிகளை நீக்கமுடியாது.

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி-பழ.வெள்ளைச்சாமி

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி

உலகத்துப்பொருட்கள் எல்லாம் தனிமங்களால் உண்டானவை. தனிமங்கள் அனைத்தையும் பற்றி அறிவது என்பது அனைத்துப்பொருட்களையும் பற்றி அறிவதற்குச் சமமாகும்.ஹோமியோபதியில் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மருந்துகளாகக் கருதப்படுகின்றன.ஆனால் இந்தப் பிரபஞ்சத்திலோ கோடான கோடிப் பொருட்களும் உயிர்களும் இருக்கின்றன்.அவை அனைத்தையும் நாம் நிரூபணம் செய்ய முடியுமா? அல்லது வீரியப்படுத்தத்தான் முடியுமா? ஆனால் இதைவிட எளிமையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற தனிமங்களை நிரூபணம் செய்வதும் அவைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவதும்தான்!

ஹோமியோபதியில் தனிமங்கள்

ஹோமியோபதியில் ஹானிமன் காலந்தொட்டு பல தனிமங்கள் தனியாகவும் கூட்டுப் பொருட்களாகவும் நிரூபணம் செய்யப்பட்டு மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் தனிமங்களின் அணுஎண் பட்டியலின்படி அனைத்துத் தனிமங்களும் பயன்படுத்தப்படவில்லை.

முதன்முதலில் தனிமங்களின் அணுஎண்படியான பட்டியலின்படி மருந்துகளை ஆய்வு செய்யும் பணியை ஜெர்மி ஷெர் மேற்கொண்டார்.அவரைத் தொடர்ந்து இராஜன் சங்கரன் அவர்களும் மற்றும் நெதர்லாந்து நாட்டுக்காரரான ஜான் ஸ்கால்டன் அவர்களும் தனிமங்களை ஆய்வு செய்து ஹோமியோ மருந்துகளாகப் பயன்படுத்தி அவைகளின் மருத்துவப் பண்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர் ஜான் ஸ்கால்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.அவர் தாம் எழுதிய இரண்டு புத்தகங்களிலும்
1.HOMOEOPATHY AND MINERALS
2.HOMOEOPATHY AND THE ELEMENTS
தனிமங்களின் அணுஎண் படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு,மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக்காலம் வரை விவரித்துள்ளார்.ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல. அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத்தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனிதவாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

தனிமங்களுக்கும்,மனிதவாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணுஎண் அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.அதன் சிறப்பை மேலும் அறிந்துகொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.

இவ்விரு புத்தகங்களையும் எழுதுவதற்கு கனிமங்களைப் பற்றியும்,மனிதவாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.அதனால் அவர் ஆய்வுமுறை பலருக்குக் குழப்பத்தையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.

ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல:மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.அதனால்,ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும்,அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்றுவரை தூய ஹோமியோபதியைச் செய்பவர்கள் செய்துவருகிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்திப் பார்க்கப்பட்டன.

ஆனால்,ஸ்கால்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன் தான் என்றாலும், அந்தத் தனித்தன்மை கூட திடீரென்று தோன்றியது இல்லை.அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும்,மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைபொருட்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.

அவர்,அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம்,சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும்,அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும்,அது சமூக உறவுகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.

ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதை புறக்கணிக்கும் வண்ணம்,ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும்,அவனுக்கும்,பொருளியல்,அரசியல் சார்ந்து குடும்ப சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான் என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.

எனவே,ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது,அவன் குடும்பத்தை,அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு,அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

அவர் மருந்துகளை அன்னையாக,தந்தையாக,பிள்ளைகளாக,சகோதர-சகோதரிகளாக,நண்பர்களாக,தொழிலாளியாக,கலைஞனாக,அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினராகவும் பார்க்கிறார்.ஏனெனில்,மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.அவனுக்கும்,குடும்பத்திற்கும் -அவனுக்கும் சமூகத்திற்கும்-அவனுக்கும் தொழிலுக்கும்-அவனுக்கும் கலைப்படைப்பிற்கும்-அவனுக்கும் ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்.

அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.ஓர் அலோபதி மருத்துவர் நோய்க்கூறு இயலையும்,நுண்ணுயிரி இயலையும் எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும்,சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும். சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

இவர், இவ்வாறு மருந்துகளை பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை. பலசமயம் புதிராக இருக்கிறது.இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்படும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.

ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும் குடும்பத்திற்கும்,சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து,அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.அவனை நலப்படுத்துகிறது.

ஜான் ஸ்கால்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

மருந்துகாண் ஏட்டைப்(repertory) பயன்படுத்தத் தேவையில்லை.

ஒட்டுமொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.

ஆக,ஜான் ஸ்கால்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஹோமியொபதித் துறையில் ஒரு புதிய சகாப்தம். அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும் போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை..

மருத்துவம் பிறப்புரிமை --மரு.பழ.வெள்ளைச்சாமி

மருத்துவம் பிறப்புரிமை
--மரு.பழ.வெள்ளைச்சாமி

இன்று மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது ‘நோயற்ற வாழ்வு’, ஏனெனில் ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர் நோயோடு இருப்பாராயின் அவருடைய அறிவால், பணத்தால் எந்தப் பயனும் அவருக்கு இல்லை.

இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் ஓர் அனுபவப்பூர்வமான பொன்மொழியைக் கூறி இருக்கிறார்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று.
இன்றைக்கு மனிதனுக்கு ஆயிரமாயிரம் தேவைகள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் முக்கியமானது.
*சுவாசிக்கும் காற்று
*அருந்தும் நீர்
*உண்ணும் உணவு
இந்த மூன்றுக்கும் அப்பால் முக்கியமானது ஒன்று இருக்குமானால் அது மனிதனுடைய ஆரோக்கியம்.
பொதுவாக மனிதனுடைய தேவைகளின் அத்தியாவசியத்தன்மைக்கு ஏற்றாற்போல் அவை கிடைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

நமக்கு நாம் சுவாசிக்கும் காற்று மிகமிக முக்கியமான் ஒன்று. அது இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. ஆகவே இது மிகமிக அத்தியாவசியமானது. அதனால் தான் இதை இயற்கை இலவசமாக எந்தவித முயற்சியுமின்றி நமக்குக் கிடைக்கச் செய்கிறது.

அடுத்து முக்கியமானது நீர். இதற்கு நாம் கொஞ்சம் முயற்சிக்கவேண்டும். நாம் நீர் இல்லாமல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதுவும் நமக்கு இயற்கையில் இலவசமாகக் கிடைத்தது. ஆனால் இன்று அதுவும் வியாபாரமாகிவிட்டது.

அடுத்து முக்கியமானது, நாம் உண்ணும் உணவு. நாம் உணவு இல்லாமல் சில மாதங்கள் கூட உயிர் வாழலாம். இதுவும் கூட நமது நாட்டில் இலவசமாக இயற்கையால் வழங்கப்பட்டதுதான். இதற்காக நாம் அதிக முயற்சி செய்ய வேண்டும். இயற்கையோடு வினை புரிய வேண்டும்.

நமது தேவைகளில் நான்காவதாக இருப்பது, சுகாதாரம்- மருத்துவம்.இதுவும் நமது நாட்டில் வெள்ளையர் வருகைக்கு முன் இலவசமாகவும், தொண்டாகவும் செய்யப்பட்டது.இதை யாரும் தொழிலாகச் செய்யவில்லை.

இவ்வாறு மனிதனின் தேவைகளின் அத்தியாவசியத் தன்மைக்கு ஏற்றார் போல் அதைப் பெறுவதற்கான முயற்சியும், செலவும் வேறுபடுகின்றன.அத்தியாவசியத் தன்மை குறையக் குறைய அதற்கான செலவு கூடிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் மருத்துவம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே அது மக்களுக்கு எளிமையாகவும் சரியாகவும் எல்லோருக்கும் பாகுபாடின்றி சமமாகவும் கிடைக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காக தங்களுடைய வருவாயில் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்று மருத்துவம் ஒரு வன்முறைத் தொழிலாக மாறி வருகிறது. வீதிகள் தோறும் அடுக்குமாடி மருத்துவமனைகள். பிணம் தின்னும் கழுகுபோல் காத்துக் கொண்டிருக்கின்றன். மனிதாபிமானமற்ற முறையில் இயங்குகின்றன.
இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்
நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது
இது மிகவும் அத்தியாவசியமான பணி
என்ற வகையில் அனைத்து மக்களுக்கும்
மருத்துவம் பிறப்புரிமையாக மாற்றப்பட
வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி
எளிதில் கிடைக்க வேண்டும். மருத்துவம்
தொழில் என்ற நிலையிருந்து சேவையாக மாறவேண்டும்.

ஒரு மக்களுக்கான அரசு முதற்கட்டமாக மருத்துவம் அனைவருக்குமான பிறப்புரிமை என்று அறிவிக்க வேண்டும்.
மருத்துவத்தையும்,கல்வியையும் அரசே எடுத்து நடத்தவேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமச்சீர் கல்வி மற்றும் சரியான மருத்துவம் கிடைக்கும்.

இன்று மருத்துவம் வன்முறைத் தொழிலாக மாறி ஏழை மக்களைக் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது.
மருத்துவர்களில் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவதர்மமும் இல்லாமல் பணம் பண்ணுவதற்காக கடுமையான மருந்துகளை எழுதுவதும், தேவையற்ற வகையில் துயரர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும்,அதன் மூலம் அவர்கள் வங்கிக்கடன்களை கட்டுவதற்கு முயற்சிப்பதும்,இன்னும் பல வகைகளில் துயரர்களிடமிருந்து ஒரு வழிப்பறி கொள்ளையர் போல் பணத்தைப் பறிப்பதும் இடைவிடாது அன்றாட நடவடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

மருத்துவத்தால் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு ஒரே வழி மருத்துவக் கல்வியையும்,மருத்துவத்தையும் அரசே கைக்கொள்வது. பொதுவாக மருத்துவக் கல்வியை அரசே நடத்த வேண்டும்.

மருத்துவக் கல்வி, ஒப்பீட்டளவில் எளிமையானது.அதை அனைவரும் கற்றுக் கொள்ளலாம். விதிமுறைகளைத் தளர்த்தி இன்னும் அதிகமானோர் மருத்துவக் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இது தனியார் வசம் இருக்கும் போது அந்த நிறுவனங்கள் சீட்டுக்காக பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு தகுதியற்றவரைச் சேர்க்கும் போது இன்னும் பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு படிக்காமலே பட்டம் தரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இவ்வாறு பணத்தைக் கொடுத்தே லைசன்ஸ் வாங்கியவர்கள் மக்கள் உயிரை எப்படி மதிப்பார்கள்.இதனால்தான் சிலர் லைசென்ஸ் வாங்கிய கொலைகாரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

ஆகவே மருத்துவக் கல்வியை அரசு மட்டுமே நடத்தவேண்டும்.அதில் படித்துத் தேறியவர்கள் பயிற்சி முடித்து வரும்போது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அவர்களை பணியமர்வு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு மாதச் சம்பளம் தற்போதையச் சம்பளத்தைவிட இன்னொரு மடங்கு கொடுக்கவேண்டும்.அவர்களுக்கு இலவசமாக மருத்துவமனை வளாகத்திற்குள் வீடு,மற்றும் வாகனவசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கவேண்டும்.

தனியார்கள் மருத்துவமனை நடத்தக்கூடாது.தனியாக மருத்துவர்கள் கிளினிக் வைக்கவும் கூடாது. அவர்கள் 24மணிநேர அரசு மருத்துவர்கள். அவர்கள் அரசின் முழு நேரமருத்துவர்கள்.அவர்கள் வெறுமனே சிகிச்சை அளிப்பவராக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் நலம் காப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மக்களோடு இருப்பவராக இருக்கும்போது அவர்கள் பொதுச் சுகாதாரத்தில் அக்கறையுள்ளவராக இருப்பார்கள்.

மேலும் அரசு அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் மருத்துவமனைகள் தொடங்க வேண்டும். அங்கே மருத்துவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

வட்ட மையம் மற்றும் மாவட்ட மையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.ஒரு மாவட்டத்தில் உள்ள மக்கள் அது மந்திரியாக இருந்தாலும் அவரவர் வாழும் பகுதியிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதை விட பெரிய மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே வராதபடி அனைத்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொறியாளர்கள் அடங்கிய ஒரு மருத்துவமனையாக மாவட்ட மையங்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளின் சுகாதாரம் உயர்ந்த தரத்தில் பேணப்படவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண குடிமகனிலிருந்து பெரிய மந்திரிகள் வரை அனைவருக்கும் ஒரே தரமான மருத்துவம் வழங்கப்படவேண்டும்.அனைவருக்கும் ஒரே இடத்தில் மருத்துவம் என்று வரும்போது பாகுபாடு இருக்காது. மந்திரி முதல் அரசு உயரதிகாரி வரை அனைவரும் ஒரே இடத்தில் மருத்துவம் பார்க்கும் நிலை வரும்போது நிச்சயமாக அந்த மருத்துவமனையை பேணுவதற்கு அனைவரும் முயற்சிப்பார்கள்.
இதற்காக அரசு பணம் செலவளிப்பது நல்ல சமூகத்தை உருவாக்க செலவளிப்பதாகும்.

மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்படும்போது மருத்துவத்தில் அக்கறையுள்ள சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியைப் படிக்க வருவார்கள். தகுதியுள்ளவர்கள் மட்டுமே சேர்க்கப்படும்போது அவர்களின் கல்வித்தரம் உயர்ந்து சிறந்த மருத்துவர்களாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மருத்துவ விழிப்புணர்வு கல்வி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். இவ்வாறு மருத்துவ விழிப்புணர்வுக் கல்வி அளிக்கப்படும்போது மக்களிடம் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும். அப்போது அவர்களே நோயின் தோற்றுவாயிலிலேயே சரி செய்து கொள்வார்கள்.

இவ்வாறு ‘மருத்துவ விழிப்புணர்வு கல்வி’ அளிக்க ஹோமியோபதி மருத்துவமானது அதற்கு முற்றிலும் சாத்தியப்பாடான ஒன்றாக இருக்கிறது.

இது ஒரு எளிய இயற்கை விதிப்படி கட்டமைக்கப்பட்ட மருத்துவமுறை. அன்றாட வாழ்க்கையில் அனைத்து மக்களும் ஹோமியோபதியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஹோமியோபதி மருத்துவர்களாக மாற்ற வேண்டும்.

ஹோமியோபதியன் ‘ஒத்தவை விதி’ தினந்தோறும் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குறிகளின் அடிப்படையில் மருந்து ‘ஒத்ததுக்கு ஒத்த மருந்து’ என்ற அடிப்படையிலேயே நோயைக் குணப்படுத்தி விடலாம்.
எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் அடிப்படை ‘உடற்கூறு இயல்’ மற்றும் ‘உடல் இயங்கியல்’ தெரிந்தால் போதும். அவர்களை ஹோமியோபதி பயிற்சியாளராக ஆக்க முடியும்.அவரவர் குடும்பத்திற்கு அவர்களே மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் ஹோமியோபதி மருந்துகள் நிரூபணம் செய்யப்பட்டவை. பக்க விளைவுகள் இல்லாதவை. வீரியப்படுத்தப்பட்டு, விஷத்தன்மை நீக்கப்பட்டவை. எனவே இவற்றைக் கையாள்வது மிகவும் எளிது. எல்லாவற்றையும் விட விலை குறைவு.

இவ்வாறான கல்வியைப் போதிப்பதற்கு நிச்சயமாக கல்விக்கூடங்கள் தேவையில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிந்துள்ள நிலையில் இது மிகவும் சாத்தியமானது.

1976க்கு முன் இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களில் பெரும்பாலானோர் அவர்களாகவே ஹோமியோபதியை கற்றுக்கொண்டவர்கள்தான். அவர்களால் தான் ஹோமியோபதி வளர்ந்தது.இயல்பிலே ஹோமியோபதி மருத்துவமுறையை கல்லூரிகளுக்குச் செல்லாமல் அவர்களாகவே கற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் அரசு நினைத்தால் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒன்றை ஹோமியோபதிக்கென்று உருவாக்கி அப்ரோச் (AProCH) போன்ற அமைப்புகளிடம் ஒப்படைத்தால், எளிதில் வீட்டுக்கு ஒருவரை ஹோமியோபதி மருத்துவராக ஆக்க முடியும்.

இன்றைக்குள்ள நிலையில் மக்களை நோயிலிருந்து விடுவித்து, நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் அரசே மருத்துவத்தைக் கையில் எடுத்து அதை தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற நிலைக்கு மாற்ற வேண்டும்.

‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செல்வதன் மூலம் நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.மேலும் இதனால் மருத்துவத்திற்கான செலவு குறைந்து படிப்படியாக மருத்துவத்தை மக்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த முடியும்.

இதை எல்லாம் நிறைவேற்ற முதற்கட்டமாக ‘மருத்துவம் பிறப்புரிமை’ என்ற சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.*

“நோயின்றி வாழ வழி”-மரு.பழ.வெள்ளைச்சாமி

“நோயின்றி வாழ வழி”
--மரு.பழ.வெள்ளைச்சாமி

திருவள்ளுவர் அவர்கள் மருந்து என்ற அதிகாரத்தில் பத்து குறள்களில் ஒரு மருத்துவம் எப்படி இருக்க வேண்டும்.நோய்க்கு என்ன காரணம்? மற்றும் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 

அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களில் 6 குறள்கள் உணவைப் பற்றியும் அந்த உணவு உட்கொள்வதற்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிடுகிறார். 

கடைசி மூன்று குறள்களில் இரண்டு குறள்களில் மருத்துவர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து

ஆனால் முதற்குறளில் நோய்க்காண காரணத்தைக் கூறுகிறார்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவை கூடுவதற்கும் குறைவதற்கும் காரணம் என்ன? இதைப் பற்றி கூறியிருக்கிறாரா வள்ளுவர்? என்ற கேள்வி எழாமல் இருக்கமுடியாது.

ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.உஷ்ணம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள உஷ்ணம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம்.

இந்தக்குறள் புற அவய முழுமைக் குறிகளின் அவசியத்தைக் கூறுகின்றது. ஆனால் இதை மட்டும் பார்த்தால் போதுமா? இவை மட்டுமே மனிதனின் நோயையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றனவா?

இதற்கு அப்பால் மனம் என்று ஒன்று உள்ளதே.மனிதனின் ஆரோக்கியத்தையும் மற்றும் நோயையும் தீர்மானிப்பதில் அது முக்கியப்பங்கு வகிக்கின்றதே!
ஹோமியோபதியில் மனம் பற்றி பேசப்படுகிறதே.திருவள்ளுவர் மனத்தைப் பற்றிக் கூறியிருக்கிறாரா? மனத்திற்கும் நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. திருவள்ளுவர் நோய்க்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பை பல குறள்களில் கூறியுள்ளார்கள்.

அவர் நோய் என்று கூறுவதை துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் நோய் என்று கூறுவதை நோய் என்று பார்த்தாலும் அது பொருத்தமாகத் தான் இருக்கும்.
அவர் மெய் உணர்தல் என்ற அதிகாரத்தில்,

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

பேராசை,கோபம் மற்றும் பிறழ்வு இவைகள் எந்த அளவுக்கு ஒரு மனிதனிடம் இல்லாமல் போகிறதோ அந்த அளவுக்கு துன்பம் இல்லாமல் போகும் என்று கூறுகிறார். இங்கு நோய் என்று கூறுவது துன்பத்தைக் குறிப்பதாக இருந்தாலும் நோய்க்கும் பொருந்தும். ஆகவே மனம் அது செம்மையானால் நோய் நம்மை அணுகாது.

மேலும் திருவள்ளுவர், ‘இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தில் மேலும் சிறப்பாகக் கூறுகிறார். ஒருவருக்கு நோய் வருவதற்குக் காரணம் அவர் பிறர்க்கு துன்பம் செய்வதுதான் என்று கூறுகிறார்.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவார் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

ஒருவருக்கு வருகின்ற துன்பத்துக்குக்காரணம் அவர் பிறருக்கு துன்பம் செய்ததுதான் ஒருவர் தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பாராயின் அவர் பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது. இதில் திருவள்ளுவர் பிறருக்கு துன்பம் செய்தலே துன்பத்துக்குக்காரணம் என்று கூறுகிறார். இது நோய்க்கும் பொருந்துமே!

மேலும் திருவள்ளுவர் பிறருக்கு தீங்கு செய்ய்யாமையை வலியுறுத்துகிறார்.’தீவினை அச்சம்’ என்ற அதிகாரத்தில்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

பிறர்க்கு தீங்கு செய்யாதே, இல்லாவிட்டால் துன்பம் வந்து சேரும். ஆகவே நோய் வந்து தம்மை சேர வேண்டாம் என்று எண்ணுகிறவன் பிறர்க்கு தீங்கு செய்யாது இருப்பானாக! இதில் துன்பம் என்று கூறப்பட்டாலும், இது நோய்க்கும் பொருந்தும். நிச்சயமாக ஒருவன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு நிம்மதியாக வாழமுடியாது. இந்நிலையில் அவன் நோய்வாய்ப்படுவது இயல்பே!

பிறருக்கு துன்பம் செய்யாது இருத்தலே தமக்கு நோய் வராமல் காத்துக் கொள்ள ஒரே வழி.

இங்கே பிறர் என்று கூறுவது தம் விரோதிக்கு கூட துன்பம் செய்யாது இருத்தலே அறிவினுள் எல்லாம் தலையானது ஆகும் என்று கூறுகிறார்.
நாம் நம் விரோதிக்கு துன்பம் செய்வதை நியாயப்படுத்துவோம். இங்குதான் அறிவு வேலை செய்ய வேண்டும். அவர் நம் விரோதியாக இருந்தாலும் அவருக்கு துன்பம் செய்யும்போது அதுவும் நம்மை வந்து சேரும். ஏனெனில் இது அறிவியல். வினைக்கு எதிர்வினை இருந்தே தீரும். இந்த உண்மையை உணர்ந்து விரோதிக்கும் துன்பம் செய்யாது இருப்பது அறிவினுள் தலையான அறிவாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

மேலும் வள்ளுவர் துன்பம் வந்தாலும் துன்பம் தராமல் இருக்க வழி சொல்கிறார்.

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

இங்கே வள்ளுவர் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது எந்த ஒன்றும் தனித்து வாழ முடியாது. இந்நிலையில் தனக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்ற எண்ணத்தை அழித்து சார்புடைமையை ஏற்றுக் கொண்டு வாழும் போது அங்கே, அப்போது மன மாசுகள் எல்லாம் அழிந்துபோகும். அப்போது துன்பம் தரக்கூடிய நோய் துன்பம் தராது.

இவ்வாறு நோய் வருவதற்கான காரணத்தையும் நோய் வராமல் தவிர்த்தலே அறிவினுள் எல்லாம் தலையானது என்றும் அப்படி நோய் வந்துவிட்டாலும் அந்த நோய் வருத்தாமல் இருப்பதற்கும் திருவள்ளுவர் வழி சொல்கிறார்.

அவர் மருந்து என்ற அதிகாரத்தில் மருத்துவத்தைப் பற்றிக் கூறினாலும், அவருடைய பார்வையில் துன்பம் வருவதற்கான காரணம் பிறர்க்கு தீங்கு செய்வதே என்று கூறுவது, ஹோமியோபதியர்கள் பார்வையில் மியாசத்திற்கு அடிப்படையானது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த மியாசமே நோய்களுக்கு மூல ஊற்று. அந்த மியாசமே பிறர்க்குத் தீங்கு செய்வதில் தொடங்குகிறது.

இவ்வாறாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் நோயின்றி வாழ வழி சொல்கிறார்.அவர் கூறியதை கருத்துள் கொள்வோம். நோயின்றி வாழ்வோம்.